சொல்புதிது இதழ் திட்டமிடப்பட்டபோது ஒவ்வொரு
இதழிலும் சிறப்புப் பகுதியொன்றை ‘புத்தகப் பகுதி’ என்ற பெயரில் வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
முதல் இதழில் ‘மொழி’ குறித்தும் இரண்டாம் இதழில் ‘அறிவு’ பற்றியும் மூன்றாம் இதழில்
‘தொல் படிமங்கள்’ பற்றியுமான கட்டுரைகள் வெளியாயின. நான்காம் இதழில் ‘உணர்ச்சிகள்’
குறித்த பகுதியில் நித்ய சைதன்ய யதியின் ‘மானுட உணர்வுகள்’ என்ற அறிமுகத்துடன் பனிரெண்டாம்
நூற்றாண்டில் வங்கத்தில் வாழ்ந்த ஜயதேவரின் புகழ்பெற்ற ‘கீத கோவிந்தத்’தின் சில பாடல்களையும்
பிஹாரியின் ‘சத்ஸயி’ நூலிலிருந்து சில பாடல்களையும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
‘சத்ஸயி’யின் முப்பது பாடல்களை க.மோகனரங்கன் மொழிபெயர்த்திருந்தார். இந்த முப்பது பாடல்களோடு
சேர்த்து, ‘சத்ஸயி’யில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிற பாடல்களையும் மொழிபெயர்க்கவேண்டும்
என்ற எண்ணம் அப்போது இருந்தது. ஆனால் இருபது ஆண்டுகள் கழித்தே அது சாத்தியமாகியிருக்கிறது.
தமிழ் பக்திகாலக் கவிதைகளைப்போலவே ஹிந்தியின்
பக்தி இலக்கியம் மிகவும் பிரசித்திபெற்றது. கபீர்தாஸர், துளசிதாஸர், மீரா ஆகியோரின்
கவிதைகள் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்படுபவை. பாடப்படுபவை. இவற்றுள் கபீரின் கவிதைகள்
கூடுதலான கவித்துவத்தையும் தத்துவ உள்ளடக்கத்தையும் கொண்டிருப்பவை. முன்பே சில மொழியாக்கங்கள்
வெளிவந்திருந்தபோதும் சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கதிர் மொழிபெயர்த்த ‘புன்னகைக்கும்
பிரபஞ்சம்’ என்ற தொகுப்பு கபீரின் கவிதைகளை சிறப்பாக அறிமுகப்படுத்தும் ஒன்று. இந்த
வரிசையில் துளசிதாஸிரின் கவிதைகளோ மீராவின் கவிதைகளோ தமிழில் இன்னும் தகுந்த அளவில்
மொழியாக்கம் செய்யப்படவில்லை.
பிஹாரி லால் சௌபே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த
கவிஞர் ( 1595 – 1664 ). குவாலியரில் பிறந்தவர். முகலாய மன்னர் ஷாஜஹானின் அரசவையில்
இருந்தவர். அப்போது பாரசீகம் உட்பட மேலைநாட்டு மொழிகளையும் இலக்கியத்தையும் கற்றறிந்தார்.
அதன் பிறகு ஆம்பர் பிரதேசத்தின் மன்னர் முதலாம் ஜெய்சிங்கின் அழைப்பின்பேரில் ஜெய்ப்பூருக்கு
சென்று அங்கே வாழ்ந்திருந்தார். அப்போதுதான் புகழ்பெற்ற இந்த கவிதைகளை எழுதினார்.
கவிதையில் சிருங்காரத்துக்கு அதிக முக்கியத்துவம்
தரப்பட்ட ‘ரீதி’ காலகட்டத்தைச் சேர்ந்த கவிதை நூல் இது. இந்த காலகட்டத்தைச் சேர்ந்த
கவிஞர்கள் பெரும்பாலோர் அரசவைக் கவிஞர்களாகவே இருந்தனர். சமஸ்கிருதத்தின் ‘காவிய’ வகையின்
பாதிப்பில் எழுதப்பட்ட இந்த நூல் எழுநூறு கவிதைகளைக்கொண்டது. சரியான எண்ணிக்கை எழுநூற்றி
பதிமூன்று. இந்தியின் பல்வேறு பேச்சுமொழிகளில் ஒன்றான ‘பிரஜ்பாஷா’வில் எழுதப்பட்டது.
‘தோஹா’ எனப்படும் இருவரி கவிதைகளால் எழுதப்பட்டவை.
தமிழ் அகப்பாடல்களை நினைவுறுத்துவதுபோல கவிதைகள்
பலவும் தலைவி தோழிக்குச் சொல்வதாகவோ அல்லது தலைவனுக்குச் சொல்வதாகவோ அமைந்துள்ளன. சிருங்காரக்
கவிதைகளில் காணப்படும் அங்கங்களின் வர்ணனை, பிரிவாற்றாமை, ஊடல் கூற்று, இயற்கையுடனான
ஒப்புமை, விரக்தி பாவம் போன்ற பல்வேறு கூறுகளும் இவற்றில் உள்ளன.
உனது
காதணியின் பொன்னிறம்
கன்னத்தின் மிளிர்வில்
கரைந்துவிட்டது
ஆயினும்
அதில் பதிந்திருக்கும் ரத்தினத்தின்
செந்நிற ஒளி
அவன் ஆசையுடன்
பதித்திட்ட பற்தடங்களோடு
போட்டியிடுகிறது.
( அங்க வர்ணணை )
காதலோடு
அவள் பாதத்தைப் பற்றிக்கொண்டு
அவன் கெஞ்சுகையில்
பேசாமல் சிரித்தவள்
வார்த்தை ஏதுமின்றி
எண்ணெய் விளக்கை
அணைத்தாள்
சம்மதத்தின் அடையாளமாய் ( சிருங்காரம் )
தலைவன்
உடனில்லாதபொழுது
பொழிகிற மழை
தீயின் சுவாலையென
வருத்துகிறது என்னை
பட்டால்தான் சுடும் நெருப்பு
பார்த்தாலே எரிக்கிறது இம்மழை ( பிரிவுத்துயர் )
பொய்யான கோபத்தோடு
புருவங்களை நெளித்தவாறு
அவனிடம் வெறுப்பாகப் பேசியவள்,
தன் கண்களில்
மின்னும் ஒளி
அங்கே அதைக் காட்டிக்கொடுத்துவிடுமோ
என அஞ்சியவளாக
விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள். ( ஊடல் )
சன்னமான தூவானச் சிதறலுக்கு
அப்பால் எரியும்
எண்ணெய் விளக்குகளைப்போல
வெண்ணிற மென்துகில் ஊடாக
அவளுடைய உடல்
ஒளிர்கிறது ( இயற்கை ஒப்புமை
)
தலைவன், தலைவி, தோழி ஆகிய மூவரிடையே ஊடாடும்
கவிதைகளின் நயமும் உவமைகளும் பாவங்களும் தமிழ் அகத்துறைக் கவிதைகளோடு ஒப்பிடும்போது
குறைந்தளவு கவித்துவம் கொண்டவையாகவும் எளிமையானவையாகவும் தோன்றக்கூடும். இதில் பயின்றுள்ள
உவமைகள் பலவும் ஆர்வமூட்டுபவையாக இல்லாதிருக்கலாம். ஆனால் இந்தி மொழியில் பதினேழாம்
நூற்றாண்டில் அரசவைக் கவிஞர்கள் எழுதிய சிருங்கார இலக்கிய வகைமையைச் சேர்ந்தவை என்பதைக்
கவனத்தில் கொள்ளும்போது இக்கவிதைகளின் போக்கைப் புரிந்துகொள்ள முடியும்.
மேலும், ‘பிஹாரியின் வர்ணனைகளின் சிறப்பு அதன்
சுயத்தன்மையிலில்லை. மாறாக அவரது புத்திசாலித்தனமான பிரயோகங்களிலேயே இருக்கிறது எனலாம்’
என்று முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதும் முக்கியமானது.
‘கங்கையின் தெளிந்த நீரில், துள்ளி மறியும்
மீன்களின் வெள்ளி மினுக்கம்போல், மெல்லிய துகிலின் முகத்திரைக்கடியில் அவளது துடிப்புமிக்க
விழிகள், பளபளக்கின்றன’,
‘கனத்த மேகங்களால் சூழப்பட்ட கார்கால வானம்,
பகலிலேயே இருள் மூடியிருக்க, இரவென்று எண்ணி, ஏமாந்த செந்தலை வாத்து, தன் இணையைக் கூவியழைக்கிறது’
போன்ற வரிகள் பிஹாரியின் தனித்தன்மையை அடையாளம்
காட்டுகின்றன. சில கவிதைகளில் அவர் காட்டும் கோணங்கள் சில அபாரமான காட்சியழகைத் தருவிப்பதாய்
அமைந்துள்ளன.
‘தொங்குகிற உறியில், தயிர் கலயத்தை வைப்பதற்காக,
உனது கைகளை உயர்த்தும்போது, எவ்வளவு அழகாகயிருக்கிறாய். அதை வைக்கவும் வேண்டாம், எடுக்கவும்
வேண்டாம். நிற்கும் நிலையிலேயே நிலைத்திரு அன்பே. மயக்கமூட்டும் உனது எழிலைப் பார்த்துப்
பார்த்துத் தீரா வண்ணம்’ என்பது ஒரு காட்சியை சொல்லிய அளவிலேயே கவிதையாகியுள்ளது. அதுபோலவே,
‘தலைவனுக்கு முதுகைக் காட்டியவளாக அலட்சியமாக அமர்ந்திருந்தபோதும் தனது விரல் மோதிரத்தில்
பதிந்திருந்த கண்ணாடியில் அவனுடைய அழகிய பிம்பத்தை விழச்செய்து, கண்ணாரக் கண்டவளாக
அசையாதிருந்தாள்’ என்ற கவிதையில் நமக்கு அவர்காட்டுவது தலைவி அமர்ந்திருக்கும் ஒரு
கோணத்தை மட்டுமே.
க.மோகனரங்கன் இந்தக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து
மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றிலுள்ள கவிதைகளில் பெரும்பகுதியும் ‘தோஹா’ என்று சொல்லப்படும்
இருவரிக் கவிதைகள். அவற்றை ஆங்கிலத்தில் எழுதும்போது அவ்வாறு இரண்டே வரிகளில் அமைப்பது
கடினம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவரும்போது மூலமொழியில் அமைந்திருக்கும்
அதே அதே செறிவையும் கச்சிதத்தையும் தவறவிடவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், க.மோகனரங்கனின்
மொழிபெயர்ப்பு அவருடைய கவிதைகளைப்போலவே மிகுந்த செறிவுடனும் சொல்நேர்த்தியுடனும் அமைந்துள்ளன.
இத்தன்மை பிஹாரியின் கவிதைகளை வாசிப்பதில் நமக்கு மிகுந்த அனுகூலத்தைத் தந்துள்ளன.
தமிழுக்கேயுரிய சில அழகான சொல் அமைப்புகள் இக்கவிதைகளை நமக்கு நெருக்கமாக்கியுள்ளன.
‘கங்கையின் தெளிந்த நீரில், துள்ளி மறியும் மீன்களின் வெள்ளி மினுக்கம்’ என்பது தூய
தமிழ்க் கவிதையன்றி வேறென்ன?
‘சன்னமான தூவானச் சிதறலுக்கு’, ‘உலகறியாத அச்சிறுமியை,
ருதுதேவன் இப்போது ஆட்கொண்டிருக்கிறான்’, ‘நீலமணிக் கிண்ண நீரில் தோன்றும் பிறைநிலா’
போன்ற சொற்கோர்வைகள் கவிதைகளின் மொழிபெயர்ப்புச் சாயல்களை முற்றிலுமாக களைவதாக அமைந்துள்ளன.
முக்கியமாக, பதினேழாம் நூற்றாண்டின் சிருங்காரக்
கவிதைகளை இன்று தமிழில் தரும்போது இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டிய தேவை உள்ளது.
ஒன்று, மூலக் கவிதையின் அமைப்பையும், உத்தேசத்தையும், சாரத்தையும், கவித்துவத்தையும்
பிரதிநிதிப்படுத்தும் கவிதைகளைத் தேர்ந்தெடுப்பது. அடுத்தது, அவற்றை இன்றைய தமிழ் வாசகனுக்கேற்ப
மொழிபெயர்ப்பது. இந்த இரண்டையும் திறம்பட கையாண்டிருப்பதன் வழியாக இந்தக் கவிதைத் தொகுப்பின்
முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார் க.மோகனரங்கன்.
0
(‘நீலமணிக் கிண்ண நீரில் தோன்றும் நிலா’ ,
ரீதிகால இந்தி அகப்பாடல்கள், பிஹாரி, தமிழில்
– க.மோகனரங்கன். வெளியீடு – தமிழினி )

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.