Tuesday, 7 July 2026

தமிழில் முகம் காட்டும் இந்தி அகப்பாடல்கள் - பிஹாரியின் ‘சத்ஸயி’

 

0

சொல்புதிது இதழ் திட்டமிடப்பட்டபோது ஒவ்வொரு இதழிலும் சிறப்புப் பகுதியொன்றை ‘புத்தகப் பகுதி’ என்ற பெயரில் வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. முதல் இதழில் ‘மொழி’ குறித்தும் இரண்டாம் இதழில் ‘அறிவு’ பற்றியும் மூன்றாம் இதழில் ‘தொல் படிமங்கள்’ பற்றியுமான கட்டுரைகள் வெளியாயின. நான்காம் இதழில் ‘உணர்ச்சிகள்’ குறித்த பகுதியில் நித்ய சைதன்ய யதியின் ‘மானுட உணர்வுகள்’ என்ற அறிமுகத்துடன் பனிரெண்டாம் நூற்றாண்டில் வங்கத்தில் வாழ்ந்த ஜயதேவரின் புகழ்பெற்ற ‘கீத கோவிந்தத்’தின் சில பாடல்களையும் பிஹாரியின் ‘சத்ஸயி’ நூலிலிருந்து சில பாடல்களையும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. ‘சத்ஸயி’யின் முப்பது பாடல்களை க.மோகனரங்கன் மொழிபெயர்த்திருந்தார். இந்த முப்பது பாடல்களோடு சேர்த்து, ‘சத்ஸயி’யில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிற பாடல்களையும் மொழிபெயர்க்கவேண்டும் என்ற எண்ணம் அப்போது இருந்தது. ஆனால் இருபது ஆண்டுகள் கழித்தே அது சாத்தியமாகியிருக்கிறது.

தமிழ் பக்திகாலக் கவிதைகளைப்போலவே ஹிந்தியின் பக்தி இலக்கியம் மிகவும் பிரசித்திபெற்றது. கபீர்தாஸர், துளசிதாஸர், மீரா ஆகியோரின் கவிதைகள் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்படுபவை. பாடப்படுபவை. இவற்றுள் கபீரின் கவிதைகள் கூடுதலான கவித்துவத்தையும் தத்துவ உள்ளடக்கத்தையும் கொண்டிருப்பவை. முன்பே சில மொழியாக்கங்கள் வெளிவந்திருந்தபோதும் சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கதிர் மொழிபெயர்த்த ‘புன்னகைக்கும் பிரபஞ்சம்’ என்ற தொகுப்பு கபீரின் கவிதைகளை சிறப்பாக அறிமுகப்படுத்தும் ஒன்று. இந்த வரிசையில் துளசிதாஸிரின் கவிதைகளோ மீராவின் கவிதைகளோ தமிழில் இன்னும் தகுந்த அளவில் மொழியாக்கம் செய்யப்படவில்லை.

பிஹாரி லால் சௌபே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் ( 1595 – 1664 ). குவாலியரில் பிறந்தவர். முகலாய மன்னர் ஷாஜஹானின் அரசவையில் இருந்தவர். அப்போது பாரசீகம் உட்பட மேலைநாட்டு மொழிகளையும் இலக்கியத்தையும் கற்றறிந்தார். அதன் பிறகு ஆம்பர் பிரதேசத்தின் மன்னர் முதலாம் ஜெய்சிங்கின் அழைப்பின்பேரில் ஜெய்ப்பூருக்கு சென்று அங்கே வாழ்ந்திருந்தார். அப்போதுதான் புகழ்பெற்ற இந்த கவிதைகளை எழுதினார்.

கவிதையில் சிருங்காரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்ட ‘ரீதி’ காலகட்டத்தைச் சேர்ந்த கவிதை நூல் இது. இந்த காலகட்டத்தைச் சேர்ந்த கவிஞர்கள் பெரும்பாலோர் அரசவைக் கவிஞர்களாகவே இருந்தனர். சமஸ்கிருதத்தின் ‘காவிய’ வகையின் பாதிப்பில் எழுதப்பட்ட இந்த நூல் எழுநூறு கவிதைகளைக்கொண்டது. சரியான எண்ணிக்கை எழுநூற்றி பதிமூன்று. இந்தியின் பல்வேறு பேச்சுமொழிகளில் ஒன்றான ‘பிரஜ்பாஷா’வில் எழுதப்பட்டது. ‘தோஹா’ எனப்படும் இருவரி கவிதைகளால் எழுதப்பட்டவை.

தமிழ் அகப்பாடல்களை நினைவுறுத்துவதுபோல கவிதைகள் பலவும் தலைவி தோழிக்குச் சொல்வதாகவோ அல்லது தலைவனுக்குச் சொல்வதாகவோ அமைந்துள்ளன. சிருங்காரக் கவிதைகளில் காணப்படும் அங்கங்களின் வர்ணனை, பிரிவாற்றாமை, ஊடல் கூற்று, இயற்கையுடனான ஒப்புமை, விரக்தி பாவம் போன்ற பல்வேறு கூறுகளும் இவற்றில் உள்ளன.

உனது

காதணியின் பொன்னிறம்

கன்னத்தின் மிளிர்வில்

கரைந்துவிட்டது

ஆயினும்

அதில் பதிந்திருக்கும் ரத்தினத்தின்

செந்நிற ஒளி

அவன் ஆசையுடன்

பதித்திட்ட பற்தடங்களோடு

போட்டியிடுகிறது.

                  ( அங்க வர்ணணை )

காதலோடு

அவள் பாதத்தைப் பற்றிக்கொண்டு

அவன் கெஞ்சுகையில்

பேசாமல் சிரித்தவள்

வார்த்தை ஏதுமின்றி

எண்ணெய் விளக்கை

அணைத்தாள்

சம்மதத்தின் அடையாளமாய்             ( சிருங்காரம் )

 

தலைவன்

உடனில்லாதபொழுது

பொழிகிற மழை

தீயின் சுவாலையென

வருத்துகிறது என்னை

பட்டால்தான் சுடும் நெருப்பு

பார்த்தாலே எரிக்கிறது இம்மழை         ( பிரிவுத்துயர் )

 

பொய்யான கோபத்தோடு

புருவங்களை நெளித்தவாறு

அவனிடம் வெறுப்பாகப் பேசியவள்,

தன் கண்களில்

மின்னும் ஒளி

அங்கே அதைக் காட்டிக்கொடுத்துவிடுமோ

என அஞ்சியவளாக

விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள்.                    ( ஊடல் )

 

சன்னமான தூவானச் சிதறலுக்கு

அப்பால் எரியும்

எண்ணெய் விளக்குகளைப்போல

வெண்ணிற மென்துகில் ஊடாக

அவளுடைய உடல்

ஒளிர்கிறது                                     ( இயற்கை ஒப்புமை )

 

தலைவன், தலைவி, தோழி ஆகிய மூவரிடையே ஊடாடும் கவிதைகளின் நயமும் உவமைகளும் பாவங்களும் தமிழ் அகத்துறைக் கவிதைகளோடு ஒப்பிடும்போது குறைந்தளவு கவித்துவம் கொண்டவையாகவும் எளிமையானவையாகவும் தோன்றக்கூடும். இதில் பயின்றுள்ள உவமைகள் பலவும் ஆர்வமூட்டுபவையாக இல்லாதிருக்கலாம். ஆனால் இந்தி மொழியில் பதினேழாம் நூற்றாண்டில் அரசவைக் கவிஞர்கள் எழுதிய சிருங்கார இலக்கிய வகைமையைச் சேர்ந்தவை என்பதைக் கவனத்தில் கொள்ளும்போது இக்கவிதைகளின் போக்கைப் புரிந்துகொள்ள முடியும்.

மேலும், ‘பிஹாரியின் வர்ணனைகளின் சிறப்பு அதன் சுயத்தன்மையிலில்லை. மாறாக அவரது புத்திசாலித்தனமான பிரயோகங்களிலேயே இருக்கிறது எனலாம்’ என்று முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதும் முக்கியமானது.

‘கங்கையின் தெளிந்த நீரில், துள்ளி மறியும் மீன்களின் வெள்ளி மினுக்கம்போல், மெல்லிய துகிலின் முகத்திரைக்கடியில் அவளது துடிப்புமிக்க விழிகள், பளபளக்கின்றன’,

‘கனத்த மேகங்களால் சூழப்பட்ட கார்கால வானம், பகலிலேயே இருள் மூடியிருக்க, இரவென்று எண்ணி, ஏமாந்த செந்தலை வாத்து, தன் இணையைக் கூவியழைக்கிறது’

போன்ற வரிகள் பிஹாரியின் தனித்தன்மையை அடையாளம் காட்டுகின்றன. சில கவிதைகளில் அவர் காட்டும் கோணங்கள் சில அபாரமான காட்சியழகைத் தருவிப்பதாய் அமைந்துள்ளன.

‘தொங்குகிற உறியில், தயிர் கலயத்தை வைப்பதற்காக, உனது கைகளை உயர்த்தும்போது, எவ்வளவு அழகாகயிருக்கிறாய். அதை வைக்கவும் வேண்டாம், எடுக்கவும் வேண்டாம். நிற்கும் நிலையிலேயே நிலைத்திரு அன்பே. மயக்கமூட்டும் உனது எழிலைப் பார்த்துப் பார்த்துத் தீரா வண்ணம்’ என்பது ஒரு காட்சியை சொல்லிய அளவிலேயே கவிதையாகியுள்ளது. அதுபோலவே, ‘தலைவனுக்கு முதுகைக் காட்டியவளாக அலட்சியமாக அமர்ந்திருந்தபோதும் தனது விரல் மோதிரத்தில் பதிந்திருந்த கண்ணாடியில் அவனுடைய அழகிய பிம்பத்தை விழச்செய்து, கண்ணாரக் கண்டவளாக அசையாதிருந்தாள்’ என்ற கவிதையில் நமக்கு அவர்காட்டுவது தலைவி அமர்ந்திருக்கும் ஒரு கோணத்தை மட்டுமே.

க.மோகனரங்கன் இந்தக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றிலுள்ள கவிதைகளில் பெரும்பகுதியும் ‘தோஹா’ என்று சொல்லப்படும் இருவரிக் கவிதைகள். அவற்றை ஆங்கிலத்தில் எழுதும்போது அவ்வாறு இரண்டே வரிகளில் அமைப்பது கடினம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவரும்போது மூலமொழியில் அமைந்திருக்கும் அதே அதே செறிவையும் கச்சிதத்தையும் தவறவிடவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், க.மோகனரங்கனின் மொழிபெயர்ப்பு அவருடைய கவிதைகளைப்போலவே மிகுந்த செறிவுடனும் சொல்நேர்த்தியுடனும் அமைந்துள்ளன. இத்தன்மை பிஹாரியின் கவிதைகளை வாசிப்பதில் நமக்கு மிகுந்த அனுகூலத்தைத் தந்துள்ளன. தமிழுக்கேயுரிய சில அழகான சொல் அமைப்புகள் இக்கவிதைகளை நமக்கு நெருக்கமாக்கியுள்ளன. ‘கங்கையின் தெளிந்த நீரில், துள்ளி மறியும் மீன்களின் வெள்ளி மினுக்கம்’ என்பது தூய தமிழ்க் கவிதையன்றி வேறென்ன?

‘சன்னமான தூவானச் சிதறலுக்கு’, ‘உலகறியாத அச்சிறுமியை, ருதுதேவன் இப்போது ஆட்கொண்டிருக்கிறான்’, ‘நீலமணிக் கிண்ண நீரில் தோன்றும் பிறைநிலா’ போன்ற சொற்கோர்வைகள் கவிதைகளின் மொழிபெயர்ப்புச் சாயல்களை முற்றிலுமாக களைவதாக அமைந்துள்ளன.

முக்கியமாக, பதினேழாம் நூற்றாண்டின் சிருங்காரக் கவிதைகளை இன்று தமிழில் தரும்போது இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டிய தேவை உள்ளது. ஒன்று, மூலக் கவிதையின் அமைப்பையும், உத்தேசத்தையும், சாரத்தையும், கவித்துவத்தையும் பிரதிநிதிப்படுத்தும் கவிதைகளைத் தேர்ந்தெடுப்பது. அடுத்தது, அவற்றை இன்றைய தமிழ் வாசகனுக்கேற்ப மொழிபெயர்ப்பது. இந்த இரண்டையும் திறம்பட கையாண்டிருப்பதன் வழியாக இந்தக் கவிதைத் தொகுப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார் க.மோகனரங்கன்.

0

(‘நீலமணிக் கிண்ண நீரில் தோன்றும் நிலா’ , ரீதிகால இந்தி அகப்பாடல்கள்,  பிஹாரி, தமிழில் – க.மோகனரங்கன். வெளியீடு – தமிழினி )

 

 

Sunday, 5 July 2026

கலையை எழுதுதல் - சுகுமாரன்



0

2004ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் சுகுமாரனின் கட்டுரைகள் வெளியானத் தொடங்கியபோதுதான் கவிஞராக மட்டுமே அறியப்பட்டிருந்த அவரது எழுத்தின் இன்னொரு வலுவான பரிமாணம் வெளிப்படலானது. கூர்மையும் நுட்பமும் நளினமும் மிக்க மொழியும், மிகக் கச்சிதமாகக் கையாளப்பட்ட படிமங்களும் கொண்ட அவரது கவிதைகள் தந்திருந்த அதே ஈர்ப்பையும் சுவையையும் கட்டுரைகளிலும் காணமுடிந்தது. கட்டுரை வடிவம் மந்தமான வாசிப்புத் தன்மைகொண்டது என்றொரு பொதுவான அபிப்ராயம் உண்டு. தமிழில் ஏற்கெனவே எழுதப்பட்ட கட்டுரைகள் பலவும் அந்த அபிப்ராயத்தை உறுதிப்படுத்துவனவாகவே இருந்தன. ஆனால், கட்டுரைகளையும் நேர்த்தியாக, வாசிப்புத்தன்மை கொண்டவையாக எழுத முடியும் என்று நிரூபித்தவர்கள் சுந்தர ராமசாமி, அ.முத்துலிங்கம் ஆகியோர். சுகுமாரனின் கட்டுரைகளும் அந்த வரிசையில் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். ‘ஜி.நாகராஜனும் வி.மாலாவும்’ என்ற தலைப்பில் வெளியான அவரது முதல் கட்டுரையில் தொடங்கி இன்று வரை தொடரும் அவரது கட்டுரைகளின் வரிசை செறிவான மொழி அனுபவத்தையும் அரை நூற்றாண்டு தமிழ் தீவிர இலக்கியத்தின் போக்கையும் ஒருசேர அறியத்தருபவை.  ஏப்ரல் 2005ஆம் இதழில் ‘பொன்னகரம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று.

திசைகளும் தடங்களும் (2003), ‘தனிமையின் வழி’ (2007), இழந்த பின்னும் இருக்கும் உலகம் (2008), வெளிச்சம் தனிமையானது (2008), வேழாம்பல் குறிப்புகள் (2011), வாழிய நிலனே (2011) ஆகிய ஆறு தொகுதிகளாக வெளிவந்திருக்கும் கட்டுரைகள், நமக்கு கவிஞரல்லாத வேறொரு சுகுமாரனை அறிமுகப்படுத்துகின்றன. ஒரு பத்திரிகையாளராகவும், இசை நாட்டிய ரசிகராகவும், திரைப்பட ஆர்வலராகவும் தான் அடைந்த அனுபவங்களை இந்தக் கட்டுரைகளின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். கவிதைகள், புனைகதைகள், மொழியாக்கங்கள் குறித்தும் தமிழ், இந்திய, உலக இலக்கியத்தின் ஆளுமைகள் பற்றியுமான அவரது செறிவான பார்வையையும் மதிப்பீடுகளையும் தொகுத்துத் தந்திருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் தீவிர இலக்கியம் மேலெழுந்து வந்த பயணத்தை இக் கட்டுரைகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும். இலக்கியத்தை, எழுத்தை தன் வாழ்வாகக் கொள்ளத் தீர்மானிக்கும் ஒருவன் அன்றாட வாழ்வில் சந்திக்க வேண்டிய சவால்களையும், சமரசங்களின்றி தன் இலக்கை நோக்கிச் செல்பவன் அடைய நேரும் லௌ கீக பின்னடைவுகளையும் இவை உணர்த்துகின்றன. ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் இன்று இதைத் திரும்பிப் பார்க்கும்போது, நீண்ட இந்தப் பயணம் சவாலானதாகவும் உத்தரவாதமற்றதாகவும் இருந்தபோதிலும் இதன் வழியாக கிட்டிய அனுபவங்கள் பெருமதிமிக்கவையாகவும் எண்ணிப் பார்த்து வியக்கும்படியாகவும் அமைந்திருப்பதே அனைத்துக்குமான பதிலாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது.

சுந்தர ராமசாமியுடனான நட்பைக் குறித்த ‘பின்னும் உயிர் வாழும் கானல்’, ஆர்.சண்முகசுந்தரத்தை சந்தித்தது பற்றிய ‘மாயத்தாகம்’, தற்கொலையைக் குறித்த ‘சாவதும் ஒரு கலை’, மாதவிக்குட்டியின் சமாதியை ஒரு கபரஸ்தானில் தேடிக் கண்டடைந்த அனுபவம், ஞானபீட விருதுகளைக் குறித்த வெளிப்படையான விமர்சனம், திரைப்பட விமர்சனத் துறையில் இந்திய அளவில் கொண்டாடப்படும் மேதையான சதீஷ் பகதூர் பற்றிய கட்டுரை, மதுரை சோமு, மைக்கேல் ஜாக்சன் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள், இந்தி இசையமைப்பாளர் நௌஷத் அலி பற்றிய கட்டுரை, முன்னால் கேரள முதல்வர் ஈ.எம்.எஸ்ஸை சந்தித்த அனுபவம் ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

ஏற்கெனவே வெளியான கட்டுரைத் தொகுப்புகள் கிடைக்காத நிலையில், இந்த நான்கு தொகுதிகளில் உள்ள கட்டுரைகளையும், பிரசுரமாகாத அல்லது தொகுக்கப்படாத கட்டுரைகளையும் இயல்வாரியாகத் தொகுத்து வெளியிடுவது மிகவும் அவசியம் என்ற எண்ணத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்துகொண்டேன். கவிதைக் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளைத் தேடி எடுத்திருந்தேன். ஆனால், அந்த எண்ணத்தை செயல்படுத்தும் விதமாக காலச்சுவடு பதிப்பகம் முயற்சி எடுத்து கட்டுரைத் தொகுதிகளை வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது.

‘வாழ்வை மீட்டிய கலை’ என்ற தலைப்பில் அமைந்த இந்தத் தொகுப்பு, இலக்கியம் அல்லாது இசை, சினிமா, ஓவியம், நாட்டியம் உள்ளிட்ட பிற கலைகளின் மீதான அவரது ஆர்வத்தையும் அக்கறையையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

இந்திய மரபிசையின் மீது ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவர் சுகுமாரன். இசைக் கலைஞர் எம்.டி.ராமநாதனைக் குறித்து எழுதியுள்ள இரண்டு கட்டுரைகளின் வழியாக அந்தக் கலைஞனின் ஆளுமையையும் கலைமேதமையையும் உணர்த்திவிடுகிறார். தஞ்சையில் ஒரு விடுதி அறையில், ‘மருதமலை மாமாணியே’ பாடலின் மூலம் தமிழகமெங்கும் புகழ்பெற்ற மதுரை சோமு, சுகுமாரனுக்காக மூன்று நிமிடம் ஒரு கீர்த்தனையை பாடிய சம்பவத்தை வாசிக்கும்போது கலையின் மீதான அசலான ஆர்வம் அற்புதங்களை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

ஓவியங்களைப் பற்றிய நான்கு கட்டுரைகள் உள்ளன, வின்சென்ட் வான்காவின் வாழ்க்கைச் சரிதமான ‘lust for life’ நூலை அடிப்படையாகக் கொண்ட கட்டுரை ஒரு கலைஞனின் வாழ்வில் காதலும் தோல்வியும் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்புகளை வலியுடன் வெளிப்படுத்துகிறது.

கேரளத்தின் கலாச்சார அடையாளமாக விளங்கும் ‘மோகினியாட்ட’ நிபுணரான கல்யாணிக் குட்டியம்மாவைப் பற்றி சுகுமாரன் அளித்திருக்கும் சித்திரம் உணர்வுப்பூர்வமானது. நடனக் கலைஞர் சந்திரலேகாவைப் பற்றிய கட்டுரை இரண்டு வியப்பூட்டும் தகவல்களைத் தருகிறது. சந்திரலேகா ஒரு கவிஞர் என்பதும், ‘சாலையோரத்தில் ஒரு வானவில்’ என்றொரு தொகுப்பு வெளிவந்திருக்கிறது என்பதும் முதலாவது ஆச்சரியம். இன்னொன்று, ‘மரப்பசு’ நாவலின் நாயகி அம்மணியை தி.ஜா சந்திரலேகாவின் சாயலில்தான் எழுதியிருக்கிறார் என்பது.

தொகுப்பின் பெரும்பகுதி கட்டுரைகள் சினிமாவைக் குறித்தவை. 14 கட்டுரைகளில் அதிகமும் மலையாள சினிமாவைக் குறித்தவையே. சத்யஜித் ரேவை கல்கத்தாவில் அவர் இல்லத்தில் சந்திக்க வாய்த்த அற்புதமான தருணம் சுகுமாரனுக்கு வாழ்வில் வாய்த்த பொன்னான கணங்களில் முதன்மையானதாக இருக்கும். அதேபோல, ஆர்.சண்முகசுந்தரத்தை சந்தித்த நாளில் அவருடனான உரையாடலும் அவர் சுகுமாரனின் சட்டைப் பையில் வைத்த பணத்தாளும் மறக்க முடியாதவையாகவே இருக்கும். 1980களில் கோவையில் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் கவிதைகளைக் கொண்ட வானம்பாடி இதழ் வெளியீட்டை முன்னிட்டு விஜயகுமார் குன்னிசேரி எற்பாடு செய்திருந்த நிகழ்வில் கே.அய்யப்ப பணிக்கர், எம்.கிருஷ்ணன் குட்டி , கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தபோது ஜான் ஆபிரகாமும் வந்திருக்கிறார் என்ற செய்தியை வாசிக்கும்போதும் சுகுமாரனின் வாழ்வனுபவத்தின் செழுமையை அறிந்துகொள்ள முடிகிறது. வைஜயந்தி மாலா, ‘சில்க்’ ஸ்மிதா, ஓவியர் ஆதிமூலம், மலையாள திரை இசையமைப்பாளர் பாபு ராஜ் என்று கட்டுரைகளில் காணக் கிடைக்கிற பல்வேறு முகங்கள் சுகுமாரன் வெவ்வேறு கலைகளின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டை உறுதிப்படுத்துகின்றன.

இந்தக் கட்டுரைகளின் இன்னொரு சிறப்பு இவற்றை வாசிக்கும்போதே குறிப்பிட்ட நபர்களைச் சார்ந்த வேறு சில திறப்புகளையும் வாசகன் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதுதான். உதாரணமாக, சந்திரலேகாவைப் பற்றி ரஸ்டம் பரூச் எழுதிய நூலைக் குறித்த செய்தியும், சந்திரலேகாவின் கவிதைத் தொகுப்பைப் பற்றிய விபரமும் கூடுதல் வாசிப்புக்காக அவற்றைத் தேடிச் செல்லும் ஆர்வத்தைத் தருகின்றன. எம்.டி.ராமநாதன், மதுரை சோமு ஆகியோரைப் பற்றி வாசிக்கும்போதே மேலும் சில தனித்தன்மைமிக்க பாடல்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. அவற்றைத் தேடிக் கேட்கத் தூண்டுகிறது.

இத்தொகுப்பில் காணும் பல்வேறு ஆளுமைகளின் வாழ்வை அர்த்தமுள்ளதாய் ஆக்கியிருப்பவை அவரவர் சார்ந்த கலைகளே. அவர்களைப் போலவே கலைகளின் மீதான தீராத ஆர்வத்தைத் தக்கவைக்கும்படியாகத் தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர் சுகுமாரன். அவர் எழுதிக் காட்டியிருக்கும் கலைஞர்களின் சித்திரங்களோடு சேர்த்து அவரது சொந்த வாழ்வையும் அனுபவத்தையும் கருத்தில்கொண்டே இத்தொகுப்புக்கு ‘வாழ்வை மீட்டிய கலை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

0

( காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘வாழ்வை மீட்டிய கலை’ கட்டுரை நூலுக்கு எழுதியுள்ள தொகுப்புரை )

 

  

ஆவநாழி - பலிபீடத்தில் இன்னுமொரு தலை

  தமிழ் தீவிர இலக்கியத்தின் தொடக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக அமைந்திருப்பவை சிறுபத்திரிகைகள். மணிக்கொடி முதல் இன்று வெளியாகிக் கொண்டி...