தி ஜாவின் சிறுகதைகளில் எனக்குப் பிடித்த சிறுகதைகள் என்றொரு பட்டியல் உண்டு. அதுபோலவே நம் ஒவ்வொருவருக்கும் பிடித்த கதைகள் என்று தனிப்பட்ட பட்டியலும் வரிசையும் இருக்கும். எல்லோருக்கும் பொதுவான பட்டியல் ஒன்றையும் உருவாக்க முடியும். அதில் எல்லோருக்கும் பிடித்த கதைகள் சில இடம் பெற்றிருக்கும். பாயாசம், சிலிர்ப்பு, குழந்தைக்கு ஜுரம், கடன் தீர்ந்தது, கோபுர விளக்கு, தவம் உள்ளிட்ட கதைகள் இடம் பெற்றிருக்கும்.
பதினாறாம் வயதில் முதல் சிறுகதையை எழுதிய தி ஜா 45 ஆண்டுகள் தொடர்ந்து எழுதினார். மொத்தம்
112 சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.
அவருடைய சிறுகதை உலகம் மிகப் பரந்தது. விதவிதமான மனிதர்கள், வெவ்வேறு நிலங்கள். காவிரிக் கரையில் தொடங்கி சென்னை, பம்பாய், டில்லி என்று குறுக்கும் நெடுக்குமான நீண்ட பயணங்களைக் கொண்டது.
கணந்தோறும் நிறம் மாறும் மனித இயல்புகள் அனைத்தையும் காய்த்தல் உவத்தலின்றி திரைவிலக்கிக் காட்டும் கண்ணாடி அது. பல சயமங்களில் அந்தக் கண்ணாடியை அவர் நம் முன்னால் நிறுத்தியிருக்கிறாரோ என்று சந்தேகமும் பதற்றமும் பயமும்கூட எழும். நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கதையில் இதை உணர்ந்திருப்போம். அல்லது நமக்குத் தெரிந்தவர்களை, அண்டை வீட்டார்களை நமக்கு அது காட்டியிருக்கக்கூடும். அதனால்தான் அவை நமக்கு நெருக்கமான கதைகளாக, நம்முடைய கதைகளாக இன்றும் நினைவில் நிற்கின்றன.
உலகம் முக்குணங்களால் ஆனது என்கிறது சாங்கிய தத்துவம். சத்துவம், இராஜசம், தாமசம் ஆகிய மூன்று குணங்களே மனிதனின் அடிப்படை இயல்புகளை வகுக்கின்றன. இவை மூன்றும் எந்தவொரு மனிதனிடத்திலும் சம அளவிலோ நிலையாகவோ இருப்பதில்லை. எந்த குணம் எப்போது தலையெடுக்கும் என்பதும் உத்தரவாதமில்லை.
திஜாவின் சிறுகதையுலகை இந்த முக்குணங்களின் புதிர் விளையாட்டு என்றே வகுக்கலாம்.
ஒரு வசதிக்காக அவரது 112 சிறுகதைகளையுமே இந்த மூன்று குணங்களின் அடிப்படையில் பட்டியிலட முடியும். அதே சமயத்தில் பல கதைகளும் எந்தவொரு குறிப்பிட்ட பகுப்பில் மட்டும் அடைபடாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பகுப்புக்குள் இடம் பெறும் வகையில் அமைந்திருப்பவை. மூன்று வகையிலுமேகூட அவற்றை அடையாளப்படுத்தவும் முடியும்.
பாயாசம் கதையின் சாமநாது, ‘அன்பு வைத்த பிள்ளை’ நாராயணசாமி, ‘பரதேசி வந்தான்’ வக்கீல் அண்ணா, ‘மறதிக்கு’ தபால்கார தாத்தாச்சாரி, ‘குழந்தைக்கு ஜுரம்’ பஞ்சாபகேசன், ‘கண்டாமணி’ மார்க்கபந்து, ‘பிடி கருணை’ செட்டியார், ‘கங்கா ஸ்நானம்’ துரையப்பா, ‘சுளிப்பு’ திருமலை ஆசிரியர்,‘கிழவரைப் பற்றி ஒரு கனவு’ மகன், ‘நடேசண்ணா’ கிராமத்து மனிதர்கள், ‘மேரியின் ஆட்டுக்குட்டி’ செல்லப்பா,
‘வேறு வழியில்லை’ கிழவர் என்று எல்லோருமே தமோ குணம் கொண்டவர்கள்.
இதற்கு மாறாக, தமக்கு இன்னல் தந்தவர் என்பதை பொருட்படுத்தாமல் உதவும் ‘குழந்தைக்கு ஜுரம்’ சரவண வாத்தியாரும் தீ விபத்தில் தொழிலையும் உறவையும் இழந்த நிலையிலும் சொன்ன வார்த்தைக்காக நம்பி வந்தவருடன் ஒரு நாளை எந்தச் சலனமும் காட்டாமல் செலவிடும் ‘யோஷிகி’யும் நண்பரின் மனைவியின் மாங்கல்யத்துக்காக நோன்பிருக்கும் ‘மூர்ச்சை’ நாகராஜபிள்ளையும் பிடில் வித்வானுக்காக கைவசம் இருக்கும் ஐந்து ரூபாயையும் தரத் தயாராகும் ‘கள்ளி’ கிருஷ்ணனும் சத்துவ குணம் மிக்கவர்கள். இவர்களது இந்த சத்துவ குணந்தான் தமோ குணத்தின் தாக்கங்களை மட்டுப்படுத்துகிறது. சமன் குலைவிலிருந்து உலகைக் காப்பாற்றுகிறது.
இவர்களைத் தவிர பல கதைகளிலும் உள்ள இணை கதாபாத்திரங்கள் அனைத்துமே ரஜோ குணம் கொண்டவை. உதாரணமாக, ‘தூரப் பிரயாணம்’ பாலி, ‘வேறு வழியில்லை’ ஞானம், ‘சண்பகப் பூ’ கிழவி, ‘பசி ஆறிற்று’ அகிலாண்டம் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
அதே நேரத்தில் ஒரு சமயம் தமோ குணத்தாலும் வேறொரு சமயம் சத்வ குணத்தாலும் அலைக்கழிப்புக்குள்ளாகும் கதாபாத்திரங்களையும் திஜாவின் கதைகள் நெடுகக் காணமுடியும். லீவு போட்டிருக்கும் நாளன்று முன்னமே அச்சகத்துக்கு வந்து ஒரு நோட்டைத் திருடி கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும் ‘ஸ்ரீராம ஜெயம்’ ராகவாச்சாரி, மனைவியின் மீது சந்தேகம்கொண்டு அவளைப் பழிவாங்க மறுமணம் செய்யத் தயாராகும் ‘பொய்’ கிட்டப்பா ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம்.
‘ரசிகனும் ரசிகை’யும் மார்க்கண்டம் ஞானமுள்ளவர், வித்தை அவர் குரலில் உண்டு. ஆனால் அவரது ரஜோ குணமே ‘ரசிகை’யிடம் தலைகுனியச் செய்கிறது. ‘ரசிகை’யின் நிலையோ இதற்கு நேர்மாறானது.
‘கோதாவரிக் குண்டு’ கங்காபாயும் தத்துவும் செய்யும் காரியங்கள் ரஜோ குணத்தினால் தூண்டப்படுவது. ஆனால், அவர்கள் அந்தந்த கணத்துக்கானத் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றிக்கொள்கிறார்கள். அதில் சரி, தவறு என்று எதையும் யோசிப்பதில்லை.
யாராக இருந்தபோதும் அவர்களது குணம் எப்படி அமைந்தபோதும் தி.ஜா எந்தத் தீர்ப்பையும் சொல்வதில்லை, குறிப்பால்கூட உணர்த்துவதில்லை. முக்குணங்களும் ஒன்றுக்கொன்று இட்டு நிரப்பும் தன்மையால்தான் உலகம் முழுமையடைகிறது என்பதை உணர்ந்தவர்போல அந்தந்த கணத்தின் நியாயங்களுடன் அல்லது அநீதிகளுடன் கதாபாத்திரங்களை உலவவிடுகிறார். அவரது கதையுலகின் அசல் தன்மைக்கு, யதார்த்த நேர்த்திக்கு, அனைவரையும் உள்ளிழுக்கும் ஈர்ப்புக்கு இதுவே முதன்மையான காரணம்.
பஞ்சாங்கம் இல்லாமல் சரவண வாத்தியார் பூரணமடைவதில்லை. மார்த்தாண்டம் இல்லாமல் ‘ரசிகை’யின் குணம் முழுமடைவதில்லை.
‘கலையும் கபடும், தர்மமும் தடித்தனமும் கைகோர்த்து வளர்ந்த பிரதேசம் காவேரி டெல்டா’ என்ற அவர் சொல்வது இந்த மூன்று குணங்களின் தாக்கங்களைத்தான்.
இடத்தையும் சூழலையும் பொறுத்தே அந்தந்த குணங்கள் தலைதூக்குகின்றன. ஏதேனுமொன்று மீறி தலையெடுக்கும்போது அந்தக் கணத்தில் அது மனிதர்களையும் உறவுகளையும் சூழலையும் குலைத்துப்போடுகிறது. தற்காலிகமான ஒரு சுழலை உருவாக்குகிறது. அது கைமீறிப் போகாமல், பெரும் சேதாரத்தை விளைவிக்காமல் இருக்கும்பொருட்டு அதற்கு எதிரான குணம் உள்ளே வந்து சமன்படுத்துகிறது.
‘தீர்மானம்’ கதையை பொருத்தமான உதாரணமாகச் சொல்லலாம். பத்து வயது விசாலி. மணம் முடித்து இன்னும் கணவன் வீட்டுக்குப் போகவில்லை. திடீரென ஒரு நாள், அப்பா வீட்டில் இல்லாதபோது சோழி ஆடிக்கொண்டிருக்கும் அவளை பிள்ளை வீட்டார் வந்து கட்டாயமாக அழைக்கிறார்கள். அத்தை வேண்டாம் என்று சொன்னபோதும் அவள் புறப்பட்டுப் போகிறாள். வீட்டுக்கு வரும் அப்பா, குழந்தை சாப்பிடாமல் போயிருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் தூக்குவாளியில் சாப்பாடு எடுத்துக்கொண்டு ஓடுகிறார். வழியில் வண்டியை நிறுத்தி அவளுக்குத் தருகிறார். அவள் சாப்பிட்டுவிட்டு திருப்பித் தர மீதிச் சோற்றை எறிந்துவிட்டு திரும்புகிறார்.
முக்குணங்களும் சரியான விகிதாச்சாரத்தில் ஒருவருக்கு அமையுமானால் அவர் ஒரு லட்சிய மனிதனாக விளங்க முடியும். ஆனால், உலகம் முழுக்க லட்சிய மனிதர்கள் மட்டுமே நிறைந்திருந்தால் அதைத் தாங்க முடியாது.
வரலாறு நெடுக யோகம், தியானம், கல்வி, பண்பாடு, கலாச்சாரம், கலை என பல்வேறு கருவிகளும் அமைப்புகளும் ஏற்பாடுகளும் தொடர்ந்து முயல்வது மனிதனுக்குள் இருக்கும் இந்த மூன்று குணங்களையும் சமன்படுத்தவும் முடிந்தவரை சத்துவ குணத்தை மேன்மைப்படுத்தவும்தான். ‘தன்னை அறிதல்’ என்பதன் மையம் அதுதான்.
குழந்தைகளிடம் தன்னியல்பில் சத்துவ குணமே மேலோங்கியிருக்கும். வளருந்தோறும் இந்த குணங்கள் கேடுகளாக திரிபடைகின்றன. தி.ஜா தன்னுடைய கதைகளில் மிகத் துல்லியமாக இதனைப் புலப்படுத்தியிருக்கிறார்.
‘சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்’ அக்கணாக்குட்டியும், ‘சத்தியமா’ ரமணனும், ‘சிலிர்ப்பு’ காமாட்சியும், ‘பாப்பாவுக்குப் பரிசு’ பாப்பாவும், ‘தங்கம்’ ராமலிங்கமும் உலகின் அன்றாடங்களால் அவற்றின் பல்வேறு நல்லவை அல்லவைகளால் களங்கப்படாத தூயவர்கள்.
அக்கணாக்குட்டியும் ரமணுனும் காமாட்சியும் ராமலிங்கமும் தம்மளவில் களங்கமற்று இருப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடுத்திருப்பவர்களையும் அவ்வாறான மனநிலையினுள்ள இழுக்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. ‘உன்னை ஏமாத்தியிருக்காடா எல்லாரும், அசட்டுப்பொணமே’ என்று அப்பா திட்டும்போது அக்கணாக்குட்டி மறுக்கிறான். செய்தித்தாளைக் காட்டி அது ஒட்டும் வியாதியல்ல என்று உறுதியாகச் சொல்கிறான். அவரும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு படிக்க ஆரம்பிக்கிறார்.
காலண்டரை எதிர்வீட்டுப் பிள்ளையிடம் பறிகொடுத்துவிட்டு பதிலாக ஒரு ரப்பரை வாங்கிக்கொண்டு வரும் ரமணனைப் பார்த்து அப்பா சொல்கிறார் “இந்த மாதிரி தெய்வங்கள்ளாம் இந்தப் பூமியிலே ஏண்டி பிறக்கிறதுகள்?”.
நண்பனைக் காப்பாற்றபோய் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு எம்டன் செத்துப்போகும்போது தி.ஜா சொல்கிறார் “அதான் பெரியவனா ஆகாமலே தப்பிச்சுனுட்டான்.”
வளரும்போது குழந்தைகளிடமிருந்து காணாமல்போகும் அல்லது திரிபடையும் இந்த சத்துவ குணமே முதுமையில் கனிகிறது. இந்தக் கனிவைத்தான் தி.ஜா பல கதைகளிலும் முதன்மைப்படுத்தியிருக்கிறார்.
பெண்களைக் குறித்தே தி.ஜா பிரமாதமாய் எழுதியிருக்கிறார் என்று பொதுவான அபிப்ராயம் உண்டு. ஒரு நோக்கில் அது சரிதான். ஆனால், அவரது சிறுகதைகளைக் கூர்ந்து வாசிக்கும்போது தெரிய வரும் இன்னொரு உண்மை, பெண்களுக்கு நிகராக அல்லது அவர்களைவிடவும் சற்று கூடுதலாக முதியவர்களைக் குறித்து எழுதியிருக்கிறார் என்பதுதான்.
‘தலைமயிர் தங்க நிறமாக மாறிற்று. பொதுவாக நரை என்றுதான் அதற்குப் பெயர். ஆனால் அவளைப் பற்றிய வரையில் நரையென்றா அதைச் சொல்ல முடியும்? வெள்ளையாகப் பூக்கவில்லை அவள் தலை. பழுத்து வெளிர் மஞ்சளிட்ட பூவரசிலை போல் மாறிவிட்டது’ என்றுதான் அழகின் முதிர்ச்சியையும் சித்தரிக்கிறார் தி.ஜா.
கைவிடப்பட்ட முதியவர்களைக் குறித்த சித்திரங்கள் தொடர்ந்து தி.ஜாவின் கதைகளில் இடம்பெற்றுள்ளன. முதல் தொகுப்பிலுள்ள ‘வேண்டாம் பூசனி’ கதையே இதன் தொடக்கம். பிள்ளைகளைப் பெற்று வளர்த்து இறுதிக் காலத்தில் ஒத்துழைக்காத உடலுடன் அணையாத உயிரிச்சையின் வதையுடன் காலம்கழிக்க நேரும் அவர்களது தவிப்பை பல கதைகளிலும் அழுத்தமாகக் காட்டியுள்ளார். ‘பிள்ளை வைத்திருந்த அன்பு ஒவ்வொரு கிழிசலிலும் எட்டிப் பார்த்தது’ ( அன்பு வைத்த பிள்ளை ) என்ற ஒரே வரியில் அவளது நிலையை நெற்றியில் அடித்தாற்போல திஜா சொல்லிக் காட்டிவிடுகிறார். மனைவியை இழந்த நிலையிலும் வளர்த்து படிக்க வைத்து 83வது வயதில் தள்ளாமையின் காரணமாக தன்னிடம் வந்து சேரும் அப்பாவை தன்னிடம் வைத்துக்கொள்ள மனமின்றி ஊருக்கு அனுப்புகிறான் பிள்ளை, திரும்பிச் செல்வதற்கான ரயில் கட்டணத்தை அவரிமிருந்து வசூலித்துக்கொண்டு. (கிழவரைப் பற்றிய ஒரு கனவு). வயிற்றுப் பசிக்காக எந்த அவமானத்தையும் பொருட்படுத்தாது வெயிலில் அலைந்து ஒரு காலசேட்பத்துக்காக யார் வீட்டு வாசலிலோ காத்திருக்கிறார்கள் பவபூதிகள். இறந்துபோன தன் மனைவியின் நினைவிலிருந்து மீள முடியாத வெம்மையுடன் ‘வெந்நீரில் சர்க்கரை கலந்து தரச்சொல்கிறார்’ வெங்கு. இந்த நிலைக்கு ஆளாக்கிய தத்தம் பிள்ளைகளைக் குறித்து இவர்களுக்குப் புகார்கள் இருந்தபோதும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். வேறுவழியில்லை. ஆனாலும் அப்படி ஏற்றுக்கொள்வதற்குக் காரணம் அவர்களுக்குள் இருக்கும் கனிவுதான்.
வயதானபோதும் கனியாத, பொல்லாத கிழங்களுக்கும் திஜா கதைகளில் இடம் அளித்திருக்கிறார். மரம் பழுத்த இலைகளை உதிர்ப்பதுபோல கயமையை சின்னத்தனங்களை உதிர்க்காது செதில்களைப் போலச் சேர்த்து வைத்திருக்கும் கிழவர்களை அவர் கதைகளில் காண முடியும். சந்தர்ப்பவசமாக நேர்ந்த தவறை தானாகவே சொல்லியபோதும் அவளை மன்னிக்கும் மனமில்லாமல் சாகும்வரை தனிமையை, புறக்கணிப்பை, துயரைச் சுமக்க வைக்கிறார் வயது ஏறி உடல் முதிர்ந்தபோதும் மனம் கனியாத ‘தபால்காரர்’ (மறதிக்கு). மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவளைப் பழிவாங்கவென வறுமைக்கு விலைகொடுத்து இரண்டாம் தாரமாய் ஒரு இளம்பெண்ணை மணந்து ‘இழந்த வாலிபத்தைத் திரும்பப் பெறு’வதற்காக மார ரஸத்தை உபயோகித்து மாண்டுபோகிறார் கிருஷ்ணசாமி (பொய்). சோப்பு போட்டு முகம் கழுவி எண்ணெயிட்டு தலை சீவும் இளம் மனைவியைப் பார்த்து ‘என்னடி தளுக்கு சுந்தரி, யாருக்காகடி இதெல்லாம்’ என்று கேட்டு அடித்து நொறுக்குகிறார் நரசிம்மன் ( வேறு வழியில்லை ). தம்பியின் மகளது திருமண பைவத்தைக் காணப் பொறுக்காத மனத்தின் அவலமே சாமநாதுவை பாயாசத்தைக் கவிழ்க்கச் செய்கிறது. வாடகைக்குக் குடியிருக்கும் குடும்பத்தை காலிசெய்வதற்காக அந்த வீட்டுப் பெண்ணுக்குக் காதல் கடிதம் எழுதும் குறும்புக்காரக் கிழவர் இன்னொரு விதம் ( போர்ஷன் காலி ).
முதுமை என்பது ஒருவிதத்தில் குழந்தைமைக்குத் திரும்புதல். அதுவரையிலான அனைத்து பாடுகளையும் சுமைகளையும் கீழிறக்கி வைத்துவிட்டு உலகின் விநோதங்களை வேடிக்கைப் பார்க்கும் நிலை. ஆயுள் கூடுந்தோறும் கல்லாகும் மரம்போல உள்ளுக்குள் இறுகுவதும் பிடிவாதமும் சினமும் தலைக்கேறி எல்லாவற்றையும் எடுத்தெறிவதும் எதுவுமில்லை என்று உள்ளுக்குள் அடங்கிக் கிடப்பதுமாய் பல்வேறு நிலைகளில் ஏறியும் இறங்கியும் தடுமாறும் அவலம்.
உடலும் உயிரும் மனமும் முக்குணங்களும் ஒன்றுகலந்து கனிந்து புத்துயிர்ப்புடன் நடமாடும் முதுமையின் சித்திரமே ஐந்து தலைமுறைகளைக் காட்டும் ‘துணை’. கதையில் வரும் முதியவர்களின் பெயர்களைச் சுட்டும்போதே தி.ஜாவின் புன்னகையை உணர முடிகிறது. லேடி கிழவர், வயது 102. இருபத்தாறு வருஷம் வேலை பார்த்து ஐம்பத்தாறு வருஷமாய் பென்ஷன் வாங்குபவர். அவரது பிள்ளை சின்னக் குழந்தை, வயது 79. மூத்த தலைமுறைகளின் ஆரோக்கியம், மனப்போக்கு, அக்கறை ஆகியவற்றுடன் இன்றைய தலைமுறையின் பொக்கான உடல்நிலை, தன்னிச்சையான போக்கு என்று எல்லாவற்றையும் அழுத்தமாகச் சொல்லும் இந்தக் கதையின் தலைப்பிலும் தி.ஜாவின் முத்திரையைப் பார்க்க முடியும்.
மீண்டும் நாம் நமக்குப் பிடித்தமான தி.ஜாவின் கதைகளுக்கு வருவோம். இத்தனை கதைகளுக்கு நடுவில் அவை மட்டும் ஏன் நம் அனைவருக்கும் பிடித்தமானவையாக இருக்கின்றன?
‘கோதாவரிக் குண்டு’, ‘சிலிர்ப்பு’, ‘கோபுர விளக்கு’, ‘குழந்தைக்கு ஜுரம்’, ‘பாயாசம்’, ‘கடன் தீர்ந்தது’ என்று தி.ஜாவின் சிறந்த, நமக்குப் பிடித்தமான கதைகளை ஒவ்வொன்றாக யோசித்துப் பார்க்கலாம்.
முக்குணங்களும் ஒன்றையொன்று மீறாது தமக்குள்ளாகவே சமநிலையுடன் ஒன்றை அடுத்தது பூர்த்திசெய்துகொள்ளும் அபூர்வ மனிதர்களைக் கொண்டிருக்கும் கதைகள் நமக்குப் பிடித்துப்போகின்றன.
‘கலையும் கபடும், தர்மமும் தடித்தனமும் கைகோர்த்து வளர்ந்த பிரதேசம் காவேரி டெல்டா’ என்று தி.ஜா சொல்லியிருக்கிறார் என்று கட்டுரையின் நடுவில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். கலையின் வழியே கபடுகளை நீக்குவதும், தடித்தனங்களை விரட்டி தர்மத்தை வெளிப்படுத்துவதுமே அவரது கதைகளின் இலக்காக இருந்திருக்க வேண்டும்.
0
( சேலம் பெரியார் பல்கலைக் கழகமும்
சாகித்திய அகாதமியும் இணைந்து நடத்திய தி.ஜானகிராமன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை
)
