Wednesday 28 February 2018


மொழி சமைக்கும் நிலம் - .முத்துலிங்கத்தின் எழுத்து

எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான கருவியாக கணிணியும் இணையமும் புழக்கத்துக்கு வந்ததன் பலனாக தமிழ் எழுத்தும் வாசிப்பும் மிக விரிவான தளத்தை அடைய முடிந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் உலகளாவிய உறவாடல் தமிழுக்குத் தந்த நற்கொடைகளில் ஒன்று அ.முத்துலிங்கத்தின் எழுத்து. பனிமூடிய தொலைதேசத்திலிருந்து தினமும் அவர் எழுதுவதை ஒவ்வொரு நாளும் வாசிக்க முடிகிறது.
அயல்வாழ் தமிழ் எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம் தனித்துவம் மிக்கவர். இலங்கையில் பிறந்தவர் என்றாலும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் வரிசையில் அவரை சேர்க்கமுடியாது. காரணம் இரண்டு. ஒன்று, .முத்துலிங்கம் இலங்கையைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது எழுத்துக்கள் புலம் பெயர்ந்தோர் என்ற இலக்கிய வகைமைக்குள் அடங்காதது. இரண்டு, அவரது எழுத்துக்கள் சொந்த மண் குறித்த ஏக்கம் அல்லது கவலை அல்லது கனவு என்ற எல்லைக்கு வெகு வெளியே இன்னும் விரிவான உலகளாவிய மனித குலம் சார்ந்த அக்கறையைக் கொண்டது.
இலங்கையிலிருந்து 1972ம் ஆண்டு அ.முத்துலிங்கம் பணியின்பொருட்டு வெளியேறும்போது இலங்கையின் இனப்போர் உக்கிரம் கொண்டிருக்கவில்லை. இலங்கையில் போர் தீவிரமடைந்தபோதும் பல்வேறு உச்சங்களை அது தொட்டபோதும் வெளியிலிருந்து கவனிக்கும் நிலையிலேயே இருந்திருக்கிறார். எனவே ஷோபா சக்தி, சயந்தன், குணா கவியழகன் போன்றவர்களால் இன்று எழுதப்படும் போர் இலக்கியத் தொகுதிக்குள் முத்துலிங்கத்தின் எழுத்துகளைச் சேர்க்க முடியாது.
.முத்துலிங்கத்தின் எழுத்து பிரதேச எல்லைகளைக் கடந்து நிற்கும் ஒன்று. உலகளாவிய பார்வையும் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்டது. மொழிபெயர்ப்புகளின் மூலமாகவே உலக இலக்கியத்தை வாசித்துக்கொண்டிருந்த தமிழ் வாசகர்களுக்கு நேரடியாக அனுபவமாக்குபவை அவரது ஆக்கங்கள். உலகமெங்கும் பயணிக்கும் ஒரு யாத்ரீகனின் கண்களின் வழி தரிசனமாகும் காட்சிகளின் விநோதங்களையும் ஆழங்களையும் அவரது கதைகள் சாத்தியப்படுத்துகின்றன. தமிழ் சிறுகதை இதுவரையிலும் காட்சிப்படுத்திய வாழ்க்கையின் பரிணாமங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது இது. நமக்கு இதுவரை பழக்கப்பட்ட நிலங்களும், அதன் மனிதர்களும், கலாச்சாரமும் நமக்குள் கட்டமைத்திருக்கும் வாழ்க்கை சார்ந்த பல அடிப்படைகளை உலுக்கும் வகையிலான பல கலாச்சார அம்சங்களின் பிண்ணனியை முத்துலிங்கத்தின் கதைகள் முன்வைக்கின்றன.
அறிமுகமற்ற சூழலில் சந்திக்க நேரும் அனுபவங்களையும், கலாச்சார அம்சங்களையும் எதிர்கொள்ளும் மனம் எப்போதும் அவற்றை தனது சொந்த கலாச்சார பிண்ணனியைக் கொண்டே தரப்படுத்த முயலும். அவ்வாறான தரப்படுத்தலின்போது மேலை கருத்தாக்கங்கள் குறித்தும், கலாச்சாரம் குறித்தும் எப்போதும் ஒரு தகுதிக் குறைவையே உத்தேசிக்கத் தோன்றும். முத்துலிங்கம் அவ்வாறான பொதுவான உத்தேசங்களுக்கு சற்றும் இடம் தராமல் உள்ளவற்றை உள்ளபடி சொல்லுவதோடு நின்றுவிடுகிறார்.
ஆனால் அதே சமயம் பல்வேறு நாடுகளின் கலாச்சாரக் கூறுகளை பகுத்துணர்வதில் எப்போதும் ஒருவருக்கு துணையாக, உரைகல்லாக விளங்குவது அவரவர் அடிமனதில் கால்கொண்டுள்ள சுய பண்பாட்டுக் கூறுகளே. கதைகளாக, பாடல்களாக, புராணங்களாக, இலக்கிய வடிவங்களாக உருக்கொண்டிருக்கும் இக் கூறுகளே முத்துலிங்கத்துக்கு அவர் எதிர்கொண்ட பல்வேறு நிறங்களையும், வெளிகளையும் உள்வாங்கிக்கொள்ள உதவியுள்ளன. கம்பரும், ஒளவையாரும், திருக்குறிப்பு நாயனாரும், புறநானு¡றும், புராணக் கதைகளும் அவருக்கு தன் தரப்பைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும், உறுதி செய்து கொள்ளவும் துணை நின்றுள்ளன. கதைப்போக்கில் வெகு இணக்கமாக இவற்றைப் பொருத்தி வாசகனிடத்திலும் அவ்வாறான ஒரு அனுபவத்தை உறுதி செய்திருக்கிறார்.
கதை வடிவம், மொழி, சித்தரிப்பு நேர்த்தி என்று ஒரு சிறுகதையாளரின் அத்தனை பலங்களையும் கொண்டிருக்கும் முத்துலிங்கத்தின் கதைகளை மேலும் சிறப்புமிக்கதாக்கும் தனித்துவமான அம்சம் அவர் கதைகளில் காண முடிகிற அங்கதமே. அவருடைய எல்லாக் கதைகளிலுமே, அவை எந்த தளத்தில் அமைந்தவையானாலும், சின்னச் சின்ன வரிகளில் இந்த அங்கதத் தன்மை கொப்புளித்து நிற்கிறது. கதைகளின் வாசிப்புத்தன்மையை உத்தரவாதப்படுத்தும் இந்த அம்சத்தை இவ்வளவு நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் கையாண்டிருக்கும் இன்னொரு எழுத்தாளர் தமிழில் இல்லை என்று உறுதியாய் சொல்ல முடியும்.
முத்துலிங்கத்தின் ஒட்டு மொத்த கதை உலகையும் பசி, காதல், மரணம் என்ற மூன்று புள்ளிகளே கட்டியமைத்துள்ளன.உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் தத்தமது தேசம், மொழி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலை என்று எல்லா வேறுபாடுகளையும் தாண்டி இந்த மூன்றையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதற்கான போராட்டமே மனித வாழ்வு. இம் மூன்றையும் ஏதோவொரு விதத்தில் வெல்லும் முயற்சியில்தான் மனிதனின் சகல ஆற்றல்களும் குவிந்து செயல்படுகின்றன.முத்துலிங்கத்தின் புனைவுலகை கட்டியமைத்துள்ள பசி, காதல், மரணம் என்ற மூன்று புள்ளிகளையும் இணைக்கும் ஆதாரமான கோடாகவும் இத் தொகுப்பின் உட்சரடாகவும் அமைந்திருப்பது உயிர்களின் மீதான கருணை என்னும் அம்சமே.
முத்துலிங்கத்தின் பெரும்பாலான கதைகளிலும், கதையின் புலன் தளத்துக்கு அப்பால் அழுத்தமான உட்சரடுகள் மிக நுட்பமாக நெய்யப்பட்டுள்ளதை மிக முக்கியமான ஒன்றாக குறிப்பிட வேண்டியுள்ளது. அவரது கதைப்பாணி வாசகனை சரளமாக உள்ளிழுத்துக் கொள்ளுவது. ஆழ்ந்த வாசிப்பையும் அதிக கவனத்தையும் கோராதது. இதனால் கதைகளின் உட்சரடுகள் மேலும் துலக்கமற்றதாக்கிவிடுவதால் பல சமயங்களில் கதையின் உள் அடுக்குகளை நாம் உணரத் தவறிவிடலாம். இதுவே அவரது கதைகளை மேலும் சிறப்புமிக்கதாகவும், மீண்டும் மீண்டும் வாசிப்பிற்குரியதாகவும் ஆக்கித் தருகிறது.
.முத்துலிங்கத்தின் எழுத்து புனைகதைகளோடு நின்றுவிடவில்லை. எண்ணிக்கையிலும் தரத்திலும் வாசிப்புத்தன்மையிலும் சிறுகதைகளுக்கு சமமான அளவுக்கு முத்துலிங்கத்தின் கட்டுரைகள் வெளியாகின்றன. சமீபகாலத்தில் தமிழின் புனைவல்லாத எழுத்துக்களின் அமைப்பிலும் போக்கிலும் அபரிமிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கட்டுரைகள் பல சமயங்களில் புனைவுக்கு மிக நெருக்கமான இடத்தில் நின்று பிரமிக்கவைக்கின்றன. கட்டுரைக்கும் புனைவுக்கும் நடுவில் இருந்த அடர்த்தியான கோடு காணாமல்போயிருக்கிறது.
.முத்துலிங்கத்தின் புனைகதைகளையும் கட்டுரைகளையும் பிரித்தறிவது கடினம். இரண்டுமே ஒரே மொழியமைப்பை வாசிப்புத் தன்மையை கச்சிதத்தைக் கொண்டிருப்பவை. எதை கதையாக்க வேண்டும், கட்டுரையாக்கவேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக தீர்மானித்திருக்கிறார். அவரது கட்டுரைகள் பெரும் அறிவுப்புலத்தின் சிறு விள்ளல்கள். தகவல் வெள்ளத்தின் நடுவே நாம் தவறவிடுபவற்றையும் நமது பார்வைக்கு வராமல்போகும் நிகழ்வுகளையும் முதன்மைபடுத்துகின்றன இக்கட்டுரைகள்.
சமீபத்தில் வெளியான கணிதமேதை ராமானுஜத்தைப் பற்றிய கட்டுரை மிகச் சரியான உதாரணமாகும். அவரைப் பற்றி ஆங்கிலத்தில் வெளியான புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. புத்தகத்தை நேரடியாகப் படிப்பதைப் போன்ற தன்மையுடன் அதேசமயத்தில் ராமானுஜத்தைப் பற்றிய நுட்பமான சித்திரத்தையும் இக்கட்டுரை சாத்தியப்படுத்தியுள்ளது.
தான் வாசித்தப் புத்தகங்கள், எதிர்கொண்ட வாழ்வியல் அனுபவங்கள், அபத்தங்கள் எல்லாவற்றையும் அவருக்கேயுரிய தனித்துவமான மொழியில் புன்னகைத்தபடியே சொல்ல முடிகிறது. பில் பிரைசனின் புத்தகத்தினால் தூண்டப்பெற்று கட்டுரைகள் எழுதத் தொடங்கிய முத்துலிங்கத்தின் நோக்கம் தன்னுடைய பாண்டியத்தியத்தை காட்டவோ, மேதாவிலாசத்தை வெளிப்படுத்தி வாசகர்களை அசத்தவோ அல்ல. தான் வாசித்து உணர்ந்ததை பிறரிடம் பகிர்ந்துகொள்வது மட்டுந்தான். அதனால்தான் கால்பந்தாட்டத்தைப் பற்றியும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமிடையேயான உறவைப் பற்றியும் உற்சாகத்துடன் எழுத முடிகிறது.
எழுத்தின் மீதான ஆர்வம் எழுத்தாளர்களைத் தேடி அவர்களுடன் உரையாடச் சொல்லும். நேரடியாக எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடும் அனுபவம் எல்லா நேரங்களிலும் உவப்பளிப்பதாக இருக்காது. ஆனாலும் எழுத்தாளனின் புற உலகை அறியவும் அதன் வழியாக அவனுடைய எழுத்தை அணுகவும் அத்தகைய சந்திப்புகள் உதவும். .முத்துலிங்கம் எழுத்தாளர்களை தொடர்ந்து சந்திக்கிறார். அவர்களை சந்திப்பதற்கென மெனக்கெடுகிறார். நேரில் சந்திக்க வாய்ப்புகள் அமையாதபோது மின்னஞ்சல்கள் மூலம் கேள்விகளை அனுப்பி பதில்களை பெறுகிறார். எழுத்தாளர்களுடனான உரையாடலில் அ.முத்துலிங்கம் காட்டுகிற ஆர்வம் சிறப்பான நேர்காணல்களை தமிழுக்குத் தந்திருக்கிறது. அத்தகைய நேர்காணல்களைக் கொண்ட வியத்தலும் இலமே என்ற அவரது நூல் மிக முக்கியமானது. பல்வேறு அயல்மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுடனான உரையாடல்கள் அடங்கியது. சமகால எழுத்தாளர்களை நமக்கு அறிமுகப்படுத்துவதோடு எழுத்துச் செயல்பாட்டின் மீதான அவர்களது பார்வையையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. தமிழில் அறிமுகம் இல்லாத டேவிட் செடாரிஸ், டேவிட் பெஸ்மொஸ்கிஸ் போன்ற சமகால எழுத்தாளர்களின் குரலையும் அவர்களது கதைகளையும் நாம் அறியமுடிகிறது. ஓர் அங்குல உயரக் குறைவால் விண்வெளி விஞ்ஞானியாக முடியாத மேரி ஆன் மோகன்ராஜ் இன்று உலகில் காம இலக்கிய படைப்பாளிகளில் முன்னணியில் இருப்பவர். இவருடனான தொலைபேசி உரையாடலின்போது எப்படி இந்தத் துறையில் எழுத வந்தீர்கள் என்று கேட்டதற்கு மேரியின் பதில் - மிக மோசமாக எழுதினார்கள். அதை என்னால் தாங்க முடியாமல் இருந்தது. என்னால் நன்றாக எழுத முடியும். ஆகவே, எழுதினேன்.
அரும்பாடுபட்டு சென்னை வானொலி சிவாஜியின் பேட்டியை எடுத்து இன்றுவரையிலும் ஒலிபரப்பாகாத அதைக் கேட்கும் தன் ஆசையைத் தெரிவிக்கும் பிபிசி சிவராமகிருஷ்ணனுடனான பேட்டி வரலாற்றின் புதைகுழிக்குள் எத்தகைய பொக்கிஷங்களெல்லாம் மறைந்து கிடக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறது.
சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என்பதோடு தனக்குப் பிடித்த கதைகளை மொழிபெயர்க்கவும் செய்கிறார் முத்துலிங்கம். உலகின் பல்வேறு மொழிகளில் வெளியான சிறப்பான கதைகளை மொழிபெயர்த்துத் தொகுக்கும் முயற்சி ஒன்றை சிலஆண்டுகளுக்கு முன்பு முன்னெடுத்திருந்தார். அதற்காக நான் ஜும்பா லகரியின் கதையொன்றை மொழிபெயர்த்தது நினைவிருக்கிறது. தொகுப்பு என்ன ஆனது என்பது தெரியவில்லை.

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
அ முத்துலிங்கத்தின் இணையப் பக்கத்தின் முகப்பில் உள்ள ஔவையின் இந்தப் பாடல் அவரது எழுத்தின் சாரத்தை வெகு கச்சிதமாக சுட்டி நிற்கிறது.
வாழிய நிலனே எனும் வாக்கின் வெவ்வேறு அழுத்தங்களையே அவரது படைப்புகள் தொடர்ந்து முன்னிறுத்துகின்றன.
.முத்துலிங்கத்தின் ஒவ்வொரு படைப்பும் புதியதை நோக்கியது. தமிழ் வாசகனுக்கான அறிவும் அனுபவமுமாய் அமைவது. விகாசமும் விநோதமும் கொண்ட உலகளாவிய தரிசனத்துக்கு இட்டுச் செல்வது. இத்தனை ஆண்டுகளின் உலகளாவிய பயணங்களிலிருந்தும் வாழ்விலிருந்தும் தேனீயைப்போல தேடித் தேடிச் சேர்த்த துளிகளை எழுத்தில் சேமித்துத் தருகிறார். காரியத்தில் உறுதியும் சோர்வுறாத ஊக்கமும் கொண்டே இப்படியொரு பணியைச் செய்வது சாத்தியம். ஒவ்வொரு நொடியிலும் எழுத்தின் வழியாக தன்னை நிறுவியபடியே இருக்க முனைகிறார். சொந்த மண் இல்லை, உறவுகளும் அருகில் இல்லை எனும் சோர்வை மொழியின் வழியாக கடக்கத் துணிகிறார். நிலம் கைவிட்டபோதும் அவரை மொழி கைவிடவில்லை. மொழியின் வழியாக இன்னும் பரந்துபட்ட நிலத்தில் தன் பெயரை அவர் ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டே இருக்கிறார்.
0
சொல்வனம் - பிப்ரவரி 2017

யானை பிழைத்த வேல்
Image result for டொரினா

0
தமிழ்ச் சிறுகதை நூறாண்டு காலத்தைக் கடந்துவிட்டது. ஏற்றமும் தாழ்வும் உச்சமும் சரிவுமென பல அலைகளுக்கிடையே தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளது. உள்ளுர் தரம், உலகத் தரம் என்று எந்த அளவுகோலுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய திடமான கதைகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன.
மணிக்கொடி காலம் தொடங்கி இன்றைய இணைய இதழ்கள் வரையிலான நீண்ட இடையறாத தொடர் ஓட்டத்தில் ஒரு தலைமுறை தன் அடுத்த தலைமுறைக்கு சிறுகதையை கைமாற்றித் தந்தபடியேதான் உள்ளது. இன்று புதிய எழுத்தாளன் ஒருவனால் எழுதப்படும் புதிய சிறுகதைக்குள் அன்றைய மூத்த முன்னோடி எழுத்தாளனின் சாயலும் குணமும் துளியளவேனும் எஞ்சியே நிற்கிறது. உடலும் பாணியும் மொழியும் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டிருப்பினும் உள்ளடக்க அளவில் சிறுகதை பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை.
நீதிபோதனைகள் ஒழுக்கவாதம் யதார்த்தவாதம் தனிமனிதவாதம் நவீனத்துவம் பின் நவீனத்துவம் மாய யதார்த்தம், மீபுனைவு என்று பல்வேறு தேற்றங்கள் சிறுகதை வடிவத்தின்மேல் பொருத்தப்பட்டன.. இவ்வாறான பரிசோதனைகளும் கோட்பாடுகளும் வாசிப்பின் பல்வேறு தரப்புகளே அன்றி எழுதுவதற்கான அடிப்படைகள் அல்ல என்பதை சிறுகதை வெகு அடக்கத்துடன் மொழிந்து நிற்கிறது. காலந்தோறும் முளைத்தெழுந்த தற்காலிக வசீகரங்கள் நிறம் மங்கி தளர்ந்த பின்பும் முன்னோடிகளின் கிளாசிக் கதைகள் தொடர்ந்து வாசிக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன. புதிய எழுத்தாளர்களுக்கு சவால் விடுத்து நிற்கின்றன. ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கும் பெரும் தொகையிலிருந்து விலகி புதிய ஒன்றை உருவாக்கவும் அவற்றின் மேன்மைகளிலிருந்து தனித்து புதிய சிறப்பொன்றை கண்டடையவும் புதிய சிறுகதையாளன் பெரும் உழைப்பைச் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான வாசிப்புப் பின்புலமும் புனைவுத் திறனும் மிக்கவர்களே தனக்கு முன் நிற்கும் பிரமாண்டமான புனைவுலகத்தோடு முட்டி மோதி பொருதிப் பார்க்கத் துணிய முடியும். அத்தகைய முயற்சியில் அவன் மோசமாக தோல்வியுறலாம். கேலி செய்யப்படலாம். ஆனாலும் அவன் முயற்சித்துத் தோற்றவன். யானை பிழைத்த வேல் ஏந்தியவன்.
தமிழ்ச் சிறுகதை இன்று வேண்டி நிற்பது அத்தகைய யானை பிழைத்த வேல் ஏந்தியவர்களையே!
0
கார்த்திக் பாலசுப்ரமணியம் 2011ம் ஆண்டிலிருந்து கதைகள் எழுதுகிறார். இணைய இதழ்களில் பிரசுரம் பெற்றுள்ளன.
புதிய சிறுகதையாளன் பொதுவாக முயற்சிக்கும் கதைகளிலிருந்தே அவரும் தொடங்கியிருக்கிறார். இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்பத்தை அல்லது அதிர்ச்சியைத் தரும் சிறுகதை இலக்கணத்துக்கேற்ப வெகு கச்சிதமாக எழுதப்பட்டிருக்கும் கதை ‘ஒரு காதல் மூன்று கடிதங்கள்.’ இலக்கண சுத்தம் கொண்ட இக்கதை திருத்தமான சொல்முறையால் இறுதித் திருப்பம் பெரும் அழுத்தம் பெற்றுள்ளது.
டொரினோ, யயகிரகணம் இரண்டும் பால்யம் அல்லது இளமை சார்ந்த நினைவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.. பெரும் எண்ணிக்கையிலான இவ்வாறான சிறுகதைகளுக்கு நடுவில் நம்மை கவனிக்கச் செய்வது இவற்றின் விநோதமான தலைப்புகளே..
டொரினோ ஏற்கெனவே தமிழ்ச் சிறுகதைகளில் திரும்பத் திரும்ப எழுதப்பட்ட கதையே. அறிந்தும் அறியாத பருவத்தின்போது வயதில் மூத்த பெண்கள் அவர்களது இயல்பின் காரணமாக நமக்குள் உருவாக்கும் சித்திரத்துக்கு நேர்மாறாக காலத்தின் சுழலில் அவர்கள் சென்றடையும் எதிர்பாராதபொரு இடம் நம்மை சமன்குலையச் செய்வதாகும் அறியத் துடிக்கும் முனைப்பும் வசீகரமும் மிகுந்த நாட்கள் நினைவில் எழும்போதே அன்றைய மனிதர்களின் இன்றைய இருப்பும் மேலெழும்போது நாம் உணரும் சங்கடத்தை இக்கதை முன்னிறுத்துகிறது. தமிழ்ச் சிறுகதைகளில் உலவும் பதின்பருவ அக்காக்களைக் குறித்து எவரேனும் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம். அந்த அக்காக்களின் வரிசையில் இன்னுமொரு கதையாக அமைந்துள்ளது டொரினோ.
யயகிரகணம் என்கிற தலைப்பில் உள்ள நவீனமும் கதைநெடுக அது உணர்த்தும் மன இறுக்கமும் கதையைத் தனித்துவப்படுத்தியுள்ளது . நவீன இலக்கியம் சார்ந்த பெயர்களும் சொல்லாடல்களும் கதையின் மையத்துக்கு உதவுவதாயில்லை என்பதை கவனித்திருப்பின் அவற்றை எளிதாகத் தவிர்த்து இதே கதையை வேறு தளத்துக்கு சுலபமாக நகர்த்தியிருக்க முடியும்.
பழகிவந்த சிறுகதைத் தடத்தில் இதுவரையிலும் நடந்திருந்த கார்த்திக் தனது துறை சார்ந்த கிளை பாதையில் அடியெடுக்க முனைந்திருப்பது முக்கியமானது. ‘பார்வை’, ‘லிண்டா தாமஸ்’, ‘பொதுப்புத்தி’ ஆகிய மூன்று கதைகளின் வழியாக தமிழ்ச் சிறுகதை முன்பறியாத புதியதொரு களத்தின் அறிமுகத்தை தர முயன்றிருக்கிறார்.
கடந்த 15 ஆண்டுகளாக தமிழக இளைஞர்களையும் பெற்றோர்களையும் சமூகத்தையும் ஒரு நோய்க்கூறாக பீடித்திருக்கும் தகவல் தொழில் நுட்பத் துறை என்கிற மாய உலகைப் பற்றிய வாய்வழிக் கதைகள் ஏராளம். அவற்றுள் கட்டுக் கதைகளும் கணிசமான சதவீதம் உண்டு. இளைஞர்களிடையே இத்துறை செலுத்தியிருக்கும் ஆதிக்கமும் பாதிப்பும் அளப்பரியவை. நம் இன்றைய சமூகத்தின் பல்வேறு மதிப்பீடுகளை வெகு சுலபமாக இத்துறை அசைத்துப் பார்த்திருக்கிறது. ஆட்டம் காணச் செய்துள்ளது. குறிப்பாக பெண்களிடம் இந்தத் துறை செலுத்தியுள்ள பாதிப்ப சமூக நோக்கிலும் மன நல நோக்கிலும் ஆராயப்பட வேண்டிய ஒன்று. சமீப ஆண்டுகளில் இத்துறை ஏற்படுத்திவரும் நிச்சயமற்ற தன்மையும் பெருத்த அச்சத்தையும் மனஅழுத்தங்களையும் விதைத்துள்ளது.
இந்தத் துறை சார்ந்த இலக்கியங்கள் நமக்கு இதுவரை காட்டியுள்ள பக்கங்கள் பலவும் கட்டற்ற காமத்தையும் போதையையும் களியாட்டத்தையுமே.. அப்படி இல்லையா என்று கேட்டால் அப்படி மட்டுமே இல்லை என்றுதான் பதில் சொல்கிறார்கள். வேறென்ன? என்ற கேள்விக்கு கார்த்திக் போன்ற துறை சார்ந்த இளைஞர்கள் தங்கள் கதைகளின் வழியாகவே பதில் சொல்ல முடியும்.
இளைஞர்களிடமும் பெண்களிடமும் துறை சார்ந்த மன அழுத்தங்களை உறவுச் சிக்கல்களை சொல்ல வேண்டியுள்ளது.. இத்துறைச் சார்ந்தவர்களைப் பற்றிய பொதுவான மனப்பதிவு எத்தகையது என்பதையும் சமூகப் பார்வை எத்தனை ஒருதலைபட்சமானது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இத்துறை சார்ந்தவர்களுக்கே அதிகமும் உள்ளது. கணநேரம் கண்சிமிட்டி உதிரும் எரிநட்சத்திர வாழ்வின் மன அழுத்தம், நாற்பது வயதில் ஓய்வு பெற வேண்டிய அவசரம் தருகிற பதற்றம், குழந்தைப் பேறின்மை தொடங்கி பல்வேறு உடல் உபாதைகள், ஒழுங்கற்ற இணைவாழ்வு என எல்லையற்ற குழப்பங்களும் சிக்கல்களும் கணிசமானவை. வெளியுலகம் முழுக்க அறியாதவை. அல்லது அக்கறை கொள்ளதாவை. இத்துறையின் புழங்குமொழியும் குறியீட்டுச் சொற்களும் புதிய திணைக் கோட்பாடொன்றை உருவாக்குமளவுக்கு வலுவானவை. அனுபவங்களையும் சொல்லாடல்களையும் கொண்டிருப்பவை.
வழிப்போக்கன், விசுவாகம் இரு கதைகளும் மன உலகின் விநோதங்களை அதன் அறியமுடியா ஆழங்களை வெகு இயல்பாக சித்தரிப்பவை. பல சமயங்களில் இத்தகைய நிகழ்வுகள் நம் பலருக்கும் அனுபவமாகும் என்பதால் இவை நமக்கு நெருக்கமான கதைகளாக அமைகின்றன. ஊடகங்களும் சினிமாக்களும் பொதுப் புத்தியில் வடக்கத்தியர்களைக் குறித்து உருவாக்கும் சித்திரத்தை உடைப்பதற்கு இது போன்ற கதைகள் அவசியமாகின்றன.
இதுவரையிலும் சொல்லப்பட்ட எட்டு கதைகளைத் தாண்டி கார்த்திக்கை நம்பிக்கை மிகுந்த சிறுகதையாளராக அடையாளப்படுத்துபவை ‘முடிச்சுகள்’, ‘இரு கோப்பைகள்’ ஆகிய இரு கதைகளே!
முடிச்சுகள் கதையின் தொடக்கம், நகர்வு, முடிவு ஆகிய மூன்றுமே கச்சிதாக உருவாகி நேர்த்தியுடன் அமைந்துள்ளன. தன் தந்தையைப் பற்றிய புதிரான சித்திரத்தை முடிச்சுகளின் வழியாகக் கடந்து வரும் கதை அமைப்பு கச்சிதமாக வார்க்கப்பட்டுள்ளது. இறுதியில் அவன் அடையும் முழுமை இதுவரையிலும் அவிழ்த்த முடிச்சுகளையும்விட மேலும் சிக்கலான முடிச்சாகி அவன் எதிரில் நிற்பது கதையின் மறு தொடக்கமாகிறது. எல்லா அறிதல்களின் இறுதியிலும் எஞ்சி நிற்பது மற்றுமொரு அறியாமையே என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. அசலுக்கும் பிறர் உருவாக்கும் பிம்பத்துக்கும் நடுவிலான இடைவெளியில் உண்மை எங்கிருக்கிறது என்பதைக் காண்பது அத்தனை சுலபமில்லை.
தொகுப்பின் உச்சமாகி நிற்கும் கதை இருகோப்பைகள். எழுதித் தேர்ந்த கையின் லாவகமும் செறிவும் மொழி அமைதியும் ஒருங்கே அமைந்த சிறப்பான கதை. கதையின் நிகழிடமும் மாந்தர்களும் நமக்கு அன்னியமானர்களாய் இருப்பினும் இக்கதைத் தொட்டுணர்த்தும் மையம் உலகளாவிய அனைவருக்கும் பொதுவானது என்பதால் இக்கதை பிற கதைகளிலிருந்து சிறப்பான கவனிப்பைப் பெறும் இடத்தை அடைந்துள்ளது. மனிதர்கள் தொடர்ந்து தங்களுக்குள் அன்னியமாவதும் குடும்பங்கள் உடைபடுவதும் சிறுத்துப் போவதும் முதியவர்கள் மேலும் மேலும் தனிமைப்படுத்தப்படுவதும் இயல்பாகிப்போன இன்றைய காலகட்டத்தில் இக்கதை உணர்ந்தும் வெறுமை அசாதாரணமானது. அந்திமக் காலத்தில் துணையற்றுப் போகும் ஆண்களின் மனச்சுமையை ஒரு துன்பியல் நாடகத்தின் காட்சிகளாக்கிக் காட்டியுள்ளது ‘இரு கோப்பைகள்’.
0
தொடர்ந்து எழுத முனையும்போது கார்த்திக் யோசிக்க வேண்டிய இரண்டு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். ஒன்று, ‘பொதுப்புத்தி’, ‘பார்வை’ போன்ற பொதுப் பெயர்கள் கதைகளுக்குத் தலைப்பாக்குவது. தலைப்பு கதையைத் தாங்கிப் பிடிக்காவிட்டாலும் கீழே விழ வைப்பதாக இருக்கக்கூடாது. இவ்வாறான தலைப்புகள் நமக்குள் உருவாக்கும் பல்வேறு அனுமானங்கள் கதைகளை வாசிக்கவிடாமல் விலக்கி நிறுத்தும் தன்மைகொண்டவை.. இரண்டாவது, தமிழ் சிறுபத்திரிகைகளில் அதிகமும் புழங்கிய சொற்களுக்கு கதைகளில் இடம் தராமல் பார்த்துக் கொள்வது. உதாரணமாக ‘நிழல் தேடும் ஆண்மை’ என்ற தலைப்பைக் குறிப்பிடலாம்.
வாசிப்பின் பலமும் அனுபவங்களை கதையாக்கத் தேர்ந்தெடுக்கும் நுட்பமும் வாய்க்கப் பெற்ற கார்த்திக் தன் வருகையை இத்தொகுப்பின் மூலம் உரக்கவே அறிவித்திருக்கிறார்.
நிச்சயம் இது யானை பிழைத்த வேல்களில் ஒன்றாகவே இருக்கலாம். அது முக்கியமல்ல. எய்வதற்கான துணிவும் அதற்கான ஆயத்தங்களுமே நல்ல சிறுகதையாளர்களை உருவாக்கும். கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் இக்கதைகள் அவ்வாறான நம்பிக்கையைத் தருகின்றன.
0
டொரினா தொகுப்புக்கான முன்னுரை



‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...