ஆண்மைமிக்க
எழுத்துக்கு ஞானபீடம்
இன்று
எழுத்தும் எழுத்தாளர்களும்
எதிர்கொள்ளும் சவால்களைக்
கருத்தில்
கொள்ளும்போது எழுத்தாளர்களைவிட
எழுத்தே எப்போதும்
மேன்மையானது என்று உறுதியாக
சொல்ல முடியும்.
எழுத்தையும்விட
மேன்மையானது எல்லா தடைகளையும்
கடந்து தம்மை
நிலைநிறுத்திக்கொள்ள தொடர்ந்து
போராடும் மனித குலத்தின்
மதிப்பீடுகளே.
- கிருஷ்ணஷோப்தி
0
2017ம்
ஆண்டுக்கான ஞானபீட விருதைப்
பெறும் கிருஷ்ண ஷோப்தி
இந்தியாவில் இன்று வாழும்
எழுத்தாளர்களிலேயே வயதில்
மூத்தவர்.
அவருக்கு
வயது 97. அவரது
சமகாலத்தவர்கள் பலரும்
ஆங்கிலத்தில் எழுதியபோது
ஹிந்தியில் மட்டுமே எழுதுவது
என்று தீர்மானித்தவர்.
ஹிந்தியில்
மட்டுமல்லாது இந்திய இலக்கிய
உலகில் என்று கொண்டாடப்படும்
முதன்மையான எழுத்தாளரான
கிருஷ்ண ஷோப்தி இலக்கியத்தின்
உயரிய விருதாகக் கருதப்படும்
ஞானபீட விருதைப் பெறும் 57வது
படைப்பாளி.
மகாஸ்வேதா
தேவிக்குப் பிறகு இவ்விருதைப்
பெறும் இரண்டாவது பெண்
எழுத்தாளர்.
1925ம்
ஆண்டு பிப்ரவரி 18ம்
தேதி குஜராத்தில் (பாகிஸ்தான்)
மலை
கிராமம் ஒன்றில் பிறந்த அவர்
தில்லியிலும் சிம்லாவிலும்
கல்வி பயின்றார்.
தேசப்
பிரிவினையின்போது தில்லிக்கு
குடிபெயர்ந்தார்.
ஆரம்பத்தில்
கவிதைகள் எழுதத் தொடங்கிய
கிருஷ்ண ஷோப்தி விரைவிலேயே
தனக்கான துறை உரைநடையே என
தீர்மானித்தார்.
1944களில்
எழுதிய லாமா,
நபீஸா,
சிக்கா
பதல் கயா ஆகிய சிறுகதைகள்
அவரை கவனிக்கச் செய்தன.
ஒரு
எழுத்தாளராக இருக்க வேண்டும்
என்று தன்னை திசை மாற்றிய
தருணத்தை நேர்காணல் ஒன்றில்
நினைவு கூறியுள்ளார்.
”பிரிவினைக்குப்
பின் நான் எழுதிய முதல் கதையான
சிகா பதல் கயாவை பிரதீக்
பத்திரிக்கையின் ஆசிரியரும்
பிரபல கவிஞருமான சச்சிதானந்த
வாத்ஸ்யாயனுக்கு அனுப்பியிருந்தேன்.
சில
நாட்கள் கழித்து தன்னை நேரில்
சந்திக்க முடியுமா என்று
கேட்டிருந்தார்.
அத்தனை
பெரிய கவிஞர்.
பத்திரிக்கை
ஆசிரியர் அப்போதுதான் எழுதத்
தொடங்கிய என்னைச் சந்திக்க
வேண்டும் என்று சொன்னது எனக்கு
ஆச்சரியமாக இருந்தது.
அவரை
சந்தித்தபோது என்னுடைய
கையெழுத்துப் பிரதியை திருப்பித்
தந்தார்.
எனக்கு
புரியவில்லை.
அந்தக்
கதையில் கிராமப்புறத்து
இஸ்லாமியர்கள் மட்டுமே
பயன்படுத்தக் கூடிய சில
சொற்களைப் பயன்படுத்தியிருந்தேன்.
அவற்றை
அவர் திருத்தியிருப்பார்
என்று எண்ணினேன்.
ஆனால்
அவர் அப்படிச் செய்யவில்லை.
அந்தத்
தருணத்தில்தான் எழுத்தை
இன்னும் தீவிரமாக அணுகவேண்டும்
என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
அத்துடன்
ஒரு வாக்கியத்தை அவர்
எழுதியிருந்தார்.
பிற
அனைத்துமே நன்றாகத்தான்
உள்ளது, உன்
பெயரைத் தவிர.
கிருஷ்ணஷோப்தி
என்பது மிகவும் பழையமாதிரியாக
உள்ளது.”
இந்திய
பாகிஸ்தான் பிரிவினை தொடங்கி
இந்திய சமூகத்தில் ஆண் பெண்
உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள்,
தொடர்ந்து
பாழ்பட்டு வரும் மதிப்பீடுகள்
என்று அவர் தேர்ந்தெடுத்த
களங்கள் அனைத்தும் சவாலானவையே.
அதோடு
இப் படைப்புகள் யாவும்
துணிச்சலும் வேகமும் கொண்ட
கதாபாத்திரங்ளைக் கொண்டு
எழுதப்பட்டிருப்பதால்
தனித்துவமானவையாகவும் மறக்க
முடியாதவையாகவும் அமைந்தன.
ஹிந்தி
இலக்கிய உலகில் பெண்களின்
மன உலகை,
உடல்
இச்சைகளை வெளிப்படையாக பேசத்
துணியாதபோது கிருஷ்ணஷோப்தி
தனது படைப்புகளில் துணிச்சலும்
சுதந்திரமும் காமம் சார்ந்த
உறுதியான நிலைப்பாடுகளும்
கொண்ட பெண் கதாபாத்திரங்களை
அறிமுகப்படுத்தினார்.
அந்த
வகையில் அவரது மித்ரோ மர்ஜானி
நாவல் ஹிந்தி இலக்கிய உலகிலேயே
விசேஷ கவனம் பெற்ற ஒன்று.
அடிப்படையில்
அந்த நாவல் பெண்ணியப் பிரதியாக
கருதப்பட்டபோதும் ஷோப்தி
எப்போதுமே ‘பெண் எழுத்தாளர்’
என்று தன்னை அடைமொழிப்படுத்துவதை
உறுதியாக புறக்கணித்தார்.
‘நான்
ஒரு பெண்ணியவாதியல்ல.
படைப்பாளி’
என்று தனது நிலைப்பாட்டை
தெளிவுபடுத்தினார்.
அவரது
பெண் கதாபாத்திரங்கள் ஒருபோதும்
கருணையை பச்சாதாபத்தை கோரி
நிற்பவை அல்ல.
வலிகளையும்
வேதனைகளையும் துணிச்சலுடன்
மிக கௌரவமாக ஏற்று நிற்பவை.
இந்திய
இலக்கியத்தின் முன்னணி
விமர்சகர்கள் பலரும் அவரை
ஆண்மைமிக்க எழுத்தாளர் என்றே
குறிப்பிடுகின்றனர்.
அவரது
எழுத்துக்கள் ஆபாசம் மிகுந்தவை
என்று எப்போதுமே கூக்கூரல்
எழுவதுண்டு.
கிருஷ்ணஷோப்தி
ஒருபோதும் அவற்றை பொருட்படுத்தியதில்லை.
அவ்வாறான
தனது கதைக் களங்களுக்கும்
கதாபாத்திரங்களுக்குமான
உந்துதலைப் பற்றி
குறிப்பிட்டிருக்கிறார்.
‘என்னுடைய
அம்மா துர்கா மிகவும் வலிமை
மிகுந்தவள்.
குதிரைச்
சவாரியில் தேர்ந்தவள்.
எவராலும்
அடக்க முடியாத குதிரைகளை
அவளிடம் கொண்டு வருவார்கள்.
அவற்றை
அவள் சுலபமாக அடக்கிவிடுவாள்.
ஆனாலும்கூட
அவள் தன் திருமணத்துக்குப்
பிறகு தன்னுடன் கொண்டு வந்த
புத்தகங்களுடன் சுஹாக் ராத்,
ரம்னி
ரகஸ்யா என்ற இரண்டு நூல்கள்
இருந்தன.
ஆணுக்கும்
பெண்ணுக்குமான பரஸ்பர
விட்டுக்கொடுத்தல் தன்மையான
அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை
இந்திய இலக்கியப் பிரதிகளும்
பலவும் முன்வைக்கின்றன.
அதுவே
என் எழுத்தில் வெளிப்படுகிறது”.
இக்கருத்தை
வலுப்படுத்தும் முகமாக ஆண்
பெயரான ஹஸ்மத் என்ற புனைப்பெயரிலும்
எழுதி வருகிறார்.
இலக்கிய
நண்பர்களைப் பற்றியும்
எழுத்தாளர்களைப் பற்றியுமான
கட்டுரைகளை இந்தப் புனைப்பெயரிலேயே
அவர் எழுதுகிறார்.
இதைப்
பற்றிய அவரது கருத்துகள்
கவனிக்கத் தக்கவை.
“ஹஸ்மத்
என்ற பெயரில் எழுதும்போது
எழுதும் பாணி மட்டுமல்லாது
என்னுடைய கையெழுத்துமேகூட
மாறிவிடுவதை நான் கவனித்திருக்கிறேன்.
வெள்ளைத்
தாளில் உருக்கொள்ளும் சொற்களின்
உருவமும் பொருளும் கிருஷ்ணஷோப்தி
என்ற பெயரில் எழுதப்படும்போது
வெளிப்படுவதற்கு முற்றிலும்
மாறானதாகவே உள்ளன.”
“எழுத்தில்
ஆண் பெண் என பேதமில்லை,,
பெண்
இலக்கியம் என்பதில் நம்பிக்கையில்லை.
கோட்பாட்டாளர்கள்
வேண்டுமானால் ஒரு படைப்பை
குறுகிய நோக்கில் அணுகலாம்.
ஆனால்
என்னைப் பொறுத்தவரையில்
மேன்மையான படைப்பில் ஆண்
பெண் இரண்டு அம்சங்களுமே
கலந்தே நிற்கும்.
பெண்ணைப்
பற்றி எழுதப்பட்ட நாவல் அது
ஆண் எழுத்தாளாரால் எழுதப்பட்டது
என்பதாலே உண்மைத்தன்மை
குறைந்ததாக கருதப்பட முடியாது.
என்னுடைய
மித்ரோ மர்ஜானி நாவலில் மித்ரோ
( முதன்மை
கதாபாத்திரம் )
தன்னுடைய
உடையைக் கழற்றி முலைகளை
வெகுநேரம் ஆசையுடன் உற்றுப்
பார்க்கிறாள்.
அப்போது
அந்தப் பார்வையில் திரள்வது
ஒரு பெண்ணின் கண்கள் மட்டுமல்ல,
ஆணின்
கண்களும்தான்”.
கிருஷ்ணஷோப்தியின்
படைப்புகளின் தனித்துவம்
அவரது மொழியாகும்.
பஞ்சாபி,
உருது,
ஹிந்தி
ஆகிய மூன்று மொழிகளின் பேச்சு
வழக்குகளை தேவைக்கேற்ப கலந்து
உருவாக்கும் விசேஷமான பாணி
அவரது எழுத்துக்களுக்கு
கூடுதல் பரிமாணத்தை அளித்தது.
“ஒவ்வொரு
மொழிக்கும் பிரதேச வழக்குக்கும்
என்று தனி குணாம்சங்கள் உண்டு.
இன்னொரு
மொழியையும் வழக்கையும் கொண்டு
அவற்றை ஈடு செய்ய முடியாது.
ஒவ்வொரு
சொல்லுக்கும் உடல் உண்டு.
ஆன்மா
உண்டு.
உடுப்பும்
உண்டு.
தொடர்ந்த
புழக்கத்தின் வழியாகவும்
குறிப்பிடுதலின் மூலமாகவுமே
சொற்கள் வலுப்பெறும்.
எழுத்தாளர்களுக்கு
சொற்களே ஆயுதம்”..
“நான்
தகவல்களைத் தேட முனைவதில்லை.
உண்மையைத்
தேடுகிறேன்.
எழுத்தின்
உண்மையைத் தேடுகிறேன்.
உண்மையை
கண்டடையும் அந்தத் தேடலின்போது
மனித மதிப்பீடுகள் சார்ந்த
ஆழமான அறிதலையும் கண்டடைய
நேர்கிறது.
அதுவே
இலக்கியத்தின் அடையாளம்.”
என்று
சொல்லும் ஷோப்தி ‘இலக்கியம்
கலை ஆவது மொழியின் வழியாகத்தான்’
என்கிறார்.
தொடக்கம்
முதலே தனது படைப்பு மொழியில்
தெளிவும் தீர்மானமும்
கொண்டிருந்தார்.
தனது
முதல் நாவலில் ஏராளமான பஞ்சாபி
சொற்கள் கலந்திருப்பதைப்
பற்றி கவிஞர் அம்ரித் லால்
நகர் கவலைத் தெரிவித்தபோது
பத்து ஆண்டுகள் கழித்துப்
பாருங்கள்,
என்ன
நடக்கிறதென்று என்று பதில்
சொன்னாராம்.
1952ம்
ஆண்டு சன்னா என்ற தலைப்பில்
எழுதிய நாவலை அலகாபாத்தில்
இருந்த லீடர் பதிப்பகத்துக்கு
அனுப்பினார்.
நாவல்
அச்சாகி வந்தபோது அதில் பல
இடங்களில் தான் பயன்படுத்தியிருந்த
உருது சொற்களுக்கும் பஞ்சாபி
சொற்களுக்கும் பதிலாக சமஸ்கிருத
வார்த்தைகள் இடப்பட்டிருப்பதைக்
கண்டார்.
உடனடியாக
வேலையை நிறுத்தச் சொல்லி
தந்தியடித்தது மட்டுமன்றி
அதுவரை அச்சாகியிருந்த அத்தனை
பிரதிகளையும் தானே வாங்கி
அவற்றை கிழித்தெறிந்தார்.
அப்போது
மூலையில் போட்ட அந்தக்
கையெழுத்துப் பிரதியை 30
ஆண்டுகளுக்குப்
பிறகு ராஜ்கமல் பதிப்பகத்தின்
ஷீலா சந்துவின் வேண்டுகோளில்
பேரிலேயே வெளியே எடுத்தார்.
சில
திருத்தங்களுக்குப் பிறகு
‘ஜிந்தகிநாமா ஜிந்தா ருக்’
என்ற பெயரில் அச்சாகிய அந்த
நாவலே 1980ம்
ஆண்டு அவருக்கு சாகித்திய
அகாதமி விருதைப் பெற்றுத்
தந்தது.
இவரது
தொடர்ந்த வலுவான பங்களிப்புகளை
அங்கீகரிக்கும் வகையில்
1981ம்
ஆண்டு சிரோமணி விருது,
1982ல்
ஹிந்தி அகாதமி விருது 1999ம்
ஆண்டு கதா சூடாமணி விருது,
2008ம்
ஆண்டு தில்லி ஹிந்தி அகாதமியின்
சலாகா விருது ஆகியவற்றால்
கௌரவிக்கப்பட்டுள்ளார்..
பிர்லா
இவரது வியாஸ் சம்மான் நாவலுக்கு
பவுன்டேஷனின் வியாஸ் சம்மான்
விருது அளிக்கப்பட்டது.
பெரிதும்
தனிமை விரும்பியான கிருஷ்ணஷோப்தியின்
நண்பர்கள் நிர்மல் வர்மாவும்
கிருஷ்ண பல்தேவ் வைதும் இம்
மூவரும் ஹிந்தி இலக்கியத்தின்
போக்கை தொடர்ந்து பல ஆண்டுகள்
தீர்மானித்தவர்கள்.
தில்லியில்
உள்ள அவரது மயூர் விகார்
இல்லத்தில் இவர்களுக்கிடையேயான
கடிதங்கள் பலவும் பிரசுரம்
பெறாத பொக்கிஷங்களாக கோப்புகளில்
உறைந்துள்ளன.
கூட்டத்திலிருந்து
அவர் விலகி இருக்க நினைத்தாலும்
சர்ச்சைகளிலிருந்து அவர்
தப்பியதில்லை.
தேர்ந்தெடுக்கும்
கதைக் களங்கள் மட்டுமல்லாது
அவரது துணிச்சலான நிலைப்பாடுகளும்
விவாதங்களுக்குக் காரணமாகியுள்ளன.
தன்
மனதுக்கு சரியெனப் படுவதற்கே
அவர் செவி சாய்த்தார்.
அதை
அச்சமின்றி வெளிப்படுத்தினார்.
அவருக்கும்
பிரபல எழுத்தாளர் அம்ரிதா
ப்ரீதமுக்கும் இடையிலான
வழக்கு இந்திய இலக்கிய உலகில்
வெகு பிரசித்தமானது.
ஷோப்தியின்
‘ஜிந்தகினாமா’ நாவல் வெளியான
சில மாதங்களுக்குப் பிறகு
அம்ரிதா ப்ரீதம் தனது கவிதைத்
தொகுப்புக்கு ‘ஹர்தத் கா
ஜிந்தகிநாமா’ என்று
பெயரிட்டிருப்பதாய் அறிவிப்பு
வெளியானது.
காப்புரிமைச்
சட்டப்படி இது தவறு,
இந்தத்
தலைப்பு தனக்கே சொந்தமானது
என்று கிருஷ்ணஷோப்தி 1984ம்
ஆண்டு வழக்கு தொடுத்தார்.
அம்ரிதா
ப்ரீதம் புகழ்பெற்ற கவிஞர்
என்பதை அறிந்தும் பலர் இதைச்
செய்யவேண்டாம் என்று தடுத்தும்
இந்த வழக்கில் வெல்வது
சுலபமில்லை என்று தெரிந்தும்கூட
தன்னுடைய முடிவில் உறுதியாக
இருந்தார்.
வழக்கு
விசாரணைக்கு வந்தபோது நீதிபதி
“எனக்கு அம்ரிதா ப்ரீதமைத்
தெரியும்.
பெரிய
எழுத்தாளர்.
ஆனால்
கிருஷ்ணஷோப்தியைப் பற்றி
நான் கேள்விப்பட்டதில்லை”
என்று கூறியுள்ளார்..
“தில்லியில்
ஹிந்தி எழுத்தாளர்களை
யாருக்குத்தான் தெரியும்?
உங்களைப்
பொறுத்தமட்டில் நாங்கள்
எல்லாம் தொல்லை கொடுப்பவர்கள்தானே-”
என்று
பதில் சொன்னார் கிருஷ்ணஷோப்தி.
26 ஆண்டுகள்
நடந்தது இந்த வழக்கு.
ஜிந்தகிநாமா
என்ற சொல்லுக்கு விளக்கம்
தரும்பொருட்டு குஷ்வந்த்
சிங், அசோக்
வாஜ்பாய் உட்பட பல முக்கிய
படைப்பாளிகள் சாட்சியளித்தார்கள்.
இறுதியில்
2011ம்
ஆண்டு, அம்ரிதா
ப்ரீதம் காலமாகி ஆறு ஆண்டுகள்
கழித்து,
அவருக்கு
சாதகமாக தீர்ப்பு வெளியானது.
இந்த
வழக்கு நீண்ட காலம் தீர்க்கப்படாமல்
தேங்கியதாலும் இறுதியில்
அடைந்த தோல்வியின் காரணமாகவும்
ஜிந்தகிநாமா என்ற பெயரிலேயே
மூன்று தொடர் நாவல்களை எழுதத்
திட்டமிட்டிருந்ததை கிருஷ்ணஷோப்தி
கிடப்பில் போட நேர்ந்தது.
2010ம்
ஆண்டு இந்திய அரசின் உயரிய
விருதான பத்ம பூஷண் விருதுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதான
அறிவிப்பு வெளியானபோது தனது
கொள்கைக்கு எதிரானது என்பதால்
அதனை ஏற்க மறுத்தார்.
கருத்துச்
சுதந்திரத்துக்கு எதிரான
மத்திய அரசின் போக்கையும்
இந்தி எழுத்தாளர்களைக்
குறித்து அப்போதைய மத்திய
அமைச்சர் ஒருவர் தெரிவித்த
கருத்தையும் கண்டித்து 2015ம்
ஆண்டு சாகித்திய அகாதமி
விருதையும் ஃபெலோஷிப்
அங்கீகாரத்தையும் அவர்
திருப்பித் தந்தார்.
தனது
எழுத்தில் வலுவாக முன்வைத்த
ஆண்மைமிக்கப் படைப்பாளியின்
குரலை பொதுவெளியிலும் உரக்கப்
பேசிய துணிச்சல் வெகு அபூர்வமான
ஒன்று.
ஒவ்வொரு
படைப்பையும் மூன்று முறை
திருத்தி எழுதும் வழக்கம்
கொண்டவர் கிருஷ்ணஷோப்தி.
“நாவலின்
முதல் வரியை எழுதிய அந்த
நொடியிலேயே எனது ஆற்றலில்
பாதியை அதற்கு ஒப்புக்
கொடுத்துவிடுவேன்..
அந்த
முதல் வரியை எழுதியவுடனே
எனக்குத் தெரியும் அந்த வரியை
நான் சீராட்டிப் பேண வேண்டுமென்று.
அதை
எப்படி வளர்த்தெடுப்பது
என்று எனக்குத் தெரியும்.
அதைச்
சரியாக செய்யும்போது அடுத்து
வரவேண்டிய பிற வரிகள் தானாகவே
வந்து சேர்ந்துகொள்ளும்”
என்று குறிப்பிடுகிறார்..
தனது
நாவல்களை குறித்து அவர்
முன்கூட்டியே திட்டமிட்டதில்லை.
முதல்
வரியை எழுதிய பிறகு தாமாகவே
வளர்ந்து முடிவதாகவே அமைந்துள்ளன.
“உள்ளுக்குள்
முளைத்தெழும் அந்த முதல்
வரிக்கு நீங்கள் முழுவதுமாக
ஆட்பட்டுவிடவேண்டும்.
அது
உள்ளுக்குள் வளர்ந்து உரம்
பெறுவதற்கான காலத்தையும்
இடத்தையும் அனுமதிக்கவேண்டும்.”.
ஜிந்தகிநாமா,
மித்ரோ
மர்ஜானி,
தர்
சே பிசௌரி,
சூரஜ்முகி
அந்தேரி கி,
யாரோன்
கி யார்,
சமய்
சர்கம், யே
லடுகி ஆகிய எட்டு நாவல்கள்,
இரண்டு
குறுநாவல்கள்,
இரண்டு
கட்டுரைத் தொகுதிகள்,
நபீசா,
சிகா
பாதல் கயா,
பச்பன்
ஆகிய கதைகள் கொண்ட ஒரு சிறுகதைத்
தொகுப்பு ஆகியன அவரது படைப்புகள்.
சூரிய
அஸ்தமனங்கள் பலவற்றை கண்டிருக்கும்
நான் சூரியோதங்கள் சிலதை
மட்டுமே பார்த்திருக்கிறேன்
என்று சொல்லும் கிருஷ்ணஷோப்தி
ஒவ்வொரு நாளும் மாலை ஏழு
மணிக்கு தனது எழுது மேசையில்
அமர்ந்து எழுதத் தொடங்குகிறார்.
விடிகாலை
வரைக்குமாய் அவரது எழுத்து
தொடர்கிறது.
விடிகாலையில்
தளர்ந்து கண்ணுறங்கும் அவர்
மறுநாள் மதியமே கண் விழிக்கிறார்.
நான்கு
செய்தித்தாட்களை வாசித்த
பின்பு உணவு.
சிறு
ஓய்வு.
நண்பர்களை
சந்திப்பது.
மறுபடியும்
ஏழு மணிக்கு எழுது மேசைக்குத்
திரும்புவது என்பதே அவரது
ஒரு நாள்.
உடல்
நிலை சரியில்லாத நிலையில்
மருத்துவமனையில் இருக்க
நேர்ந்த நாட்களிலும் அவர்
எழுதுவதை நிறுத்தவில்லை.
சமீபத்தில்
தனது சுயசரிதையை ‘குஜராத்
பாகிஸ்தான் சே குஜராத்
ஹிந்துஸ்தான் தக்’ என்ற
பெயரில் எழுதி வெளியிட்டுள்ளார்.
பத்மபூஷன்
விருதை திருப்பி அளித்தது
ஏன் என்று கேட்டபோது “தேசப்
பிரிவினையும் சுதந்திரமும்
நடப்புகளைப் பார்த்தறியும்
வலுவான பார்வைத் தந்தது என்று
எண்ணுகிறேன்.
அரசியல்
போக்கும் அறிவுலகப் போக்கும்
வெவ்வேறானவை.
அரசியலில்
நீங்கள் ஒன்று செய்தால் அதற்கு
போட்டியாக நான் ஒன்று செய்ய
முடியும்.
ஆனால்
அறிவுலகச் சூழலில் அப்படி
நிகழ்வது ஆரோக்கியமானதல்ல.
எனவே
நான் அரசிலிருந்து விலகி
நிற்க விரும்புகிறேன்” என்று
பதில் சொன்ன அவர் இப்போதைய
மத்திய ஆட்சியின் மீது தொடர்ந்து
கறாரான விமர்சனங்களை முன்வைத்து
வருகிறார்.
குழந்தைப்பருவத்தில்
தனது மலை கிராமத்தில் செனாப்
நதிக்கரையில் குதிரையேறி
சவாரி செய்தவர் கிருஷ்ண
ஷோப்தி.
அன்று
அவர் கையில் இறுக்கிய லகானை
இன்று வரை தளர்த்தவில்லை.
வயதும்
தளர்ச்சியும் அவரது எழுத்தில்
தலைகாட்டவில்லை.
தொடர்ந்து
எழுதுவதற்கான அனுபவச் செறிவும்
ஆற்றலும் மிக்க அவர் நேர்காணல்
ஒன்றில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.
“என்
எழுத்தில் தவறான ஒரு சொல்லை
எழுதுகிற அந்த நொடியில்
எழுதுவதை நான் நிறுத்திவிடுவேன்.”.
இந்திய
இலக்கிய உலகில் செல்லமாக
பாட்டியம்மா என்று குறிப்பிடப்படும்
கிருஷ்ணஷோப்தி இன்று வரை
அப்படி ஒரு தவறான சொல்லைப்
பயன்படுத்தவில்லை.
எனவே
அவரது எழுத்தும் நிற்கவில்லை.
நூறாண்டுகள்
தாண்டியும் தொடரட்டும் அவரது
சவாரி.
0
காலச்சுவடு டிசம்பர் 2017
காலச்சுவடு டிசம்பர் 2017
No comments:
Post a Comment