Sunday 7 January 2018

அம்மன் நெசவு - சாதியத்தின் வரைபடம்

அம்மன் நெசவு: சாதியத்தின் வரைபடம்


சுப்பிரமணி இரமேஷ்


ம்பதுகளுக்குப் பிறகு தமிழ்நாவல் பெரும்பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட நாவல்களில் வாசகனின் பங்கேற்பு எல்லை விரிந்திருப்பதைக் காணலாம். ஒற்றைப்பரிமாணத்தில் நாவலைக் கண்டடையும் பார்வை மாறியிருக்கிறது. நாவல் குறித்த கோட்பாடுகளை விமர்சகர்கள் இக்கால கட்டத்தில்தாம் உருவாக்கினர். இதனால் ஒரு புனைவின் பிரதியை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவரின் வாசிப்பு எல்லைக்கேற்ப அர்த்தங்களை விரித்துச் செல்லும் ஆற்றலை இக்கால நாவல்கள் அடைந்தன. நேர்க்கோட்டுப்பொருளைத் தரும் பிரதிகள் தன்னைச் சுருக்கிக்கொள்ளத் தொடங்கின. வெகுசன நாவலாசிரியர்கள் இந்த வட்டத்திற்குள் எப்போதும் வரமாட்டார்கள். தமிழகத்தின் வெவ்வேறு புலம்சார்ந்த ஆக்கங்களின் வருகை புனைகதையை ஆழப்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட பகுதியின் முன்மாதிரி அடையாளங்களாக இருந்த எழுத்தாளர்கள் முன்னோடிகள் என்ற இடத்தை அடைந்தனர். பெரும்பரப்பின் சிறுபகுதியினரின் வாழ்க்கையையும் இலக்கியங்கள் பதிவு செய்யத் தொடங்கியதில் அதன் எல்லை மேலும் மேலும் விரிந்துகொண்டே சென்றது. பல இளம் எழுத்தாளர்கள் பல்வேறு உள்முரண்களைக் கட்டியெழுப்பும் நாவல்களுடன் வாசகர்களை அணுகினர்.
கவிதையின் மூலமாக எழுத்துலகில் அறிமுகமான சூத்ரதாரி (மு.கோபால கிருஷ்ணன்) எழுதிய முதல் நாவல் அம்மன் நெசவு (2002). இந்நாவலுக்கு முன்பு ‘பிறிதொரு நதிக்கரையில்’ (2000) என்ற சிறுகதைத் தொகுப்பொன்றும் வெளியாகியிருக்கிறது. தமிழ் நாவல் வரலாற்றில் பெரும்பான்மையான எழுத்தாளர்களின் முதல் நாவல்கள் பெரும் வாசகக் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அந்தப் பட்டியல் நீளமானது. அந்தத் தொடரியில் அம்மன் நெசவும் சேர்ந்துகொள்கிறது என்பதைத் துணிந்து எழுதலாம். நாவல் வெளிவந்த காலத்தில் காத்திரமான உரையாடல்கள் இவ்வாக்கத்தின்மீது நிகழ்த்தப்பட்டனவா என்ற கேள்வி காலம் கடந்தெழுகிறது. இணையத்தில் இந்நாவல் குறித்துத் தேடியதில் ஒன்றிரண்டு பதிவுகள் மட்டுமே கிடைத்தன. பாவண்ணனின் எழுத்து மட்டும்தான் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. தமிழ்நாட்டில் கன்னடம் பேசும் தேவாங்கச் செட்டியார்கள் கோவை, சேலம், திருப்பூர் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். இவர்களின் தெய்வம் சௌடேஸ்வரி அம்மன்; தொழில் நெசவு. கட்டாய மதமாற்றம் காரணமாகவும் தொழில் நிமித்தம் காரணமாகவும் இவர்கள் தமிழகத்திற்குள் நிலம் பெயர்ந்தனர். இன்றளவில் தமிழகத்தில் ஆழமாகக் காலூன்றிய இவர்களில் பலர், தொழிலதிபர்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் புகழ்பெற்றுள்ளனர். பல கல்வி நிறுவனங்களையும் இவர்கள் நடத்தி வருகின்றனர். இத்தகைய தேவாங்கச் செட்டியார்கள் வாழ்தலுக்கான இருப்புத் தேடி நிலம்பெயர்ந்ததைத்தான் சூத்ரதாரி புனைவாக்கியிருக்கிறார்.
உழவுத்தொழில் குறித்துத் தமிழில் எழுதப்பட்ட புனைவுகள் அளவுக்கு நெசவுத்தொழில் குறித்து எழுதப்படவில்லை. அந்தவகையில் இப்புனைவு முக்கியத்துவம் பெறுகிறது. நாவல் வெளிவந்து பதினைந்து வருடங்கள் முடிந்துவிட்டன. இப்போது வாசித்தாலும் நாவலின் மொழி அப்படியே நம்மை உள்வாங்கிக்கொள்கிறது. புனைவு, நெசவுத்தொழில் பிரச்சனையைப் பற்றிப் பேசவில்லை. ஒடுக்குதல் என்பது தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள் மட்டும் நிகழ்வதில்லை; பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள்ளும் வேரூன்றியுள்ளது. தம் சமூகத்தைக் கடந்து எந்தவொரு சமூகமும் சென்றுவிடக்கூடாது என்பதில் அனைவரும் ஒன்றுபோலத்தான் சிந்திக்கிறோம் என்பதைத்தான் இப்புனைவு சில நிகழ்வுகளை முன்பின்னாக வைத்துக் கட்டமைக்கிறது. முகலாய மன்னன் காசிம் கான் உஜ்ஜயினியில் கொள்ளையடிக்கப் படைகளைத் திரட்டி வருகிறான். தேவாங்ககுல செட்டியார் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் குலதெய்வமான சௌடேஸ்வரி அம்மனைத் தூக்கிக்கொண்டு நகரைவிட்டுக் குடிபெயர்வதில் நாவலின் முதல்பகுதி தொடங்குகிறது. 1960களுக்குப் பிறகு கதை நிகழ்வதாக நாவலின் இரண்டாம்பகுதி நெய்யப்பட்டுள்ளது.
செட்டியார்களின் அடுத்த தலைமுறையினர் கொங்கு மண்டலத்தில் உமயஞ்செட்டிப்பாளையத்தில் தங்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் கவுண்டர்களின் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. நிலமும் நீரும் கவுண்டர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்களை நம்பித்தான் செட்டியார்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்துகின்றனர். இந்தச் சூழ்நிலையில் கவுண்டர்களின் அடுத்த தலைமுறையினர் செட்டியார்கள் எப்போதும் தங்கள் காலடியில் கிடக்கவேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மையில் செயல்படுகின்றனர். இவ்வாறு புனைவின் களம் விரிகிறது.
சௌடேஸ்வரி அம்மன் குடிகொண்டிருக்கும் பூசாரியப்பனின் வீடு மட்டும்தான் வீடு என்கிற தகுதியைப் பெற்றிருக்கிறது. இதற்குக் காரணம் அம்மன். அம்மன்தான் பூசாரியப்பனின் இருப்பை உயர்த்தியிருக்கிறாள். ஒருநாள் அம்மனின் நெசவு நஞ்சப்பனின் தறியில் விழுந்துவிடுகிறது. தங்கள் குடும்பத்தின் இருப்பு முழுமையையும் இழந்துவிட்டதாக உணர்கிறான் பூசாரியப்பனின் மகன் வெள்ளிங்கிரி. ஊராரின் தீர்மானத்தில் அம்மன் நஞ்சப்பனின் வீட்டுக்குக் குடிபெயர்கிறாள். அன்றிலிருந்து தொடங்குகிறது செட்டியார்களின் வீழ்ச்சி. அம்மனைப் பிரித்த செட்டியார்களைப் பழிவாங்கக் கவுண்டர்களுடன் கூட்டுச் சேர்கிறான் வெள்ளிங்கிரி. பாவடியில் நாசம்செய்த பண்ணாடிக் கவுண்டரின் எருது வாலை நறுக்குவதில் முளைவிடுகிறது செட்டியார்களுக்கும் கவுண்டர்களுக்குமான பகை. வெள்ளிங்கிரியுடன் ரங்கண்ணன் மகன் ஈஸ்வரனும் கவுண்டர்களைச் செட்டியார்களுக்கு எதிராகக் கொம்பு சீவுகிறான். அடுத்தடுத்த நகர்வுகளில் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை, சந்தைக்குச் செல்லும் குறுக்குவழி போன்ற அடிப்படை வாழ்வாதாரங்களில் கவுண்டர்கள் தடை போடுகின்றனர். கவுண்டர்களுடனான பகை செட்டியார்களைத் தனிக்கிணறு தோண்டத் தூண்டுகிறது. அதனையும் மயில்சாமியும் அப்புக்குட்டியும் தடுக்கின்றனர். வெளாந்தோட்டக் கவுண்டர் உதவியுடன் கிணற்றில் நீர் பெருகுகிறது. இதற்கிடையில் தேர்தல் வருகிறது. அவினாசிப் பகுதிக்குப் பண்ணாடிக் கவுண்டர் வேட்பாளராக நிற்கிறார். திட்டமிட்டுக் கவுண்டரைத் தோற்கடிக்கின்றனர். பகை கொழுந்துவிட்டு எரிகிறது. செட்டியார்கள் பலவழிகளில் தாக்கப்படுகிறார்கள். காவல்துறை பணத்தின்பின் நிற்கிறது. சோமனூர் கவுண்டர் கொலை செய்யப்படுகிறார். மீண்டும் செட்டியார்கள் வாழ்தல்வேண்டி அம்மனுடன் திருப்பூருக்குக் குடிபெயர்கின்றனர்.
நெசவுத்தொழில் செய்பவர்கள் குறித்த வேறொரு சித்திரத்தை நாவல் கட்டமைக்கிறது. செட்டியார்-கவுண்டர் இடையிலான சாதிப் பிரச்சனைகளையும் நுட்பமாக விவரிக்கிறது. தங்களுடன் வாழும் வேற்றுச்சாதியைச் சார்ந்தவர்கள், தங்களை மீறிச்செல்லும்போது உண்டாகும் அசூயையை நாவல் முழுக்க உணர முடிகிறது. வெளாந்தோட்டக் கவுண்டர் மட்டும் விதிவிலக்கு. தன்னுடைய சாதியை எதிர்த்துச் செட்டியார்களுக்கு உதவுகிறார். சொந்தச் சாதிக்கு எதிராகச் செயல்படும் வெள்ளிங்கிரி, ஈஸ்வரன் ஆகிய கதாபாத்திரங்கள் கூர்மையடையவில்லை. எந்த இடத்திலும் இவர்கள் ஊராரின் எதிர்ப்புக்கு ஆளாகவில்லை. கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சாதியின்மீது தீராத பற்றுக்கொண்டவர்கள் என்ற கருத்தியலுக்கு இப்புனைவும் வலுச்சேர்க்கிறது. வன்மத்தின் எந்த எல்லைக்கும் அவர்கள் செல்லுவார்கள் என்ற உண்மையைப் புனைவு பல இடங்களில் கோடிட்டுக் காட்டுகிறது. திருவிழாவில் தீ வைக்கின்றனர். கிணறு வெட்ட வந்த ஆட்களை மயில்சாமியும் அப்புக்குட்டியும் சாராயக்கடையில் வைத்துக் கண்மூடித்தனமாகத் தாக்குகின்றனர். செட்டியார்கள் பாவுபோடும் இடத்தில் மயில்சாமி உள்ளிட்ட வகையறாக்கள் விடியற்காலையில் மலங்கழித்து அவர்களின் தொழிலை முடக்குகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் வன்முறையின் பாதைக்குச் செட்டியார்களைக் கூட்டிச்செல்கின்றன.
கடவுளை முதன்மைப்படுத்தி நாவல் தொடங்குகிறது. அதே கடவுளுடன் ஊரைவிட்டுச் செட்டியார்கள் வெளியேறுவதாக நாவல் முடிகிறது. இடையில் கடவுள் என்கிற தொன்மம் செட்டியார்கள் வாழ்க்கையில் எந்த இடத்தை இட்டு நிரப்பியது என்ற கேள்வி எழுகிறது. சாதியக் கலவரத்திற்குத் தொடக்கமாக இருப்பது சௌடேஸ்வரி அம்மனின் இடப்பெயர்வுதான் என்ற வாசிப்பை நாவலில் நிகழ்த்தமுடியும். பூசாரியப்பன் வீட்டில் இருக்கும்போது ஊரில் எந்தப் பிரச்சனையும் இல்லை. நஞ்சப்பனின் வீட்டிற்குப் பெயர்ந்தபிறகுதான் ஊர் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறது. அம்மன் வீட்டிற்கு வருவதை நஞ்சப்பன் விரும்பவில்லை; அவன் மனைவி மட்டும் அம்மனின் வருகையில் பரபரப்படைகிறாள். அம்மனின்மீது கட்டப்பட்டுள்ள தொன்மம் அவளுக்குப் பெருமிதத்தைத் தருகிறது. போலி மதிப்பீடுகளால் உவகை கொள்கிறாள். இந்த மதிப்பீட்டை இழக்க விரும்பாத பூசாரியப்பனின் குடும்பம் துக்கத்தில் வீழ்கிறது. அம்மன் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது அவர்கள் அடையும் ஏமாற்றத்தை நாவல் கவனமாகப் பதிவு செய்துள்ளது. தங்களின் மரியாதை அம்மனைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளதை அக்குடும்பம் உணர்கிறது. பூசாரியப்பனும் அவனது மனைவியும் அழுகையினூடாக அந்தத் துக்கத்தை இறக்கிவைக்க முயலுகின்றனர். ஆனால் வெள்ளிங்கிரி தன்னுடைய துக்கத்தை வன்மமாக மாற்றுகிறான். இரு சாதிகளுக்குள்ளும் பகையை வளர்க்கும் தரகனாக மாறுகிறான். எனவே, சாதிப் பிரச்சனையின் வேராக இருப்பது அம்மன்தான் என்ற பார்வைக்கும் நாவல் இடமளிக்கிறது. அம்மன் நஞ்சப்பனின் வீட்டிற்கு வந்தபிறகு ஊரில் நல்லதெதுவும் நடந்ததாக நாவல் சித்தரிக்கவில்லை. சந்திரவதி ஆற்றைக் கடந்துவரும்போது முகலாயர்களிடமிருந்து செட்டியார்களைக் காப்பாற்றியதாகப் புனையப்படும் அம்மன், கவுண்டர்களிடமிருந்து அவர்களைக் காக்கத் தவறிவிட்டதாக வாசிக்கவும் இடமிருக்கிறது.
அம்மனின் இடப்பெயர்ச்சிக்குப் பிறகு நஞ்சப்பனின் குடும்பமும் தமது இயல்பான வாழ்க்கையை இழந்துவிடுகிறது. ஒழுங்காகத் தறிபோட முடியவில்லை. அம்மனுக்குச் சேவை செய்வதிலேயே காலம் கழிகிறது; வருமானம் குறைகிறது; செலவு அதிகரிக்கிறது. மனைவியுடனான உறவிலும் இடைவெளி விழுகிறது. இதுபோன்ற நவீன வாசிப்பையும் நாவலில் நிகழ்த்தலாம். எந்தவொரு கதாபாத்திரத்தையும் நாவல் பிரதானப்படுத்தவில்லை என்கிறவகையில் இப்புனைவு தனித்த இடம் பெறுகிறது. பல கதாபாத்திரங்கள் புனைவில் இடம்பெற்றிருந்தாலும் கதைதான் நாவலின் மையப்புள்ளி. இந்தப் புள்ளியைச் சுற்றிப் பாத்திரங்கள் சுழலுகின்றன. சோமனூர் கவுண்டர் வீட்டில் வேலை செய்யும் ‘ஆராயி’ என்ற சக்கிலியப் பெண் கதாபாத்திரம் மட்டும் நாவலை வேறொரு தளத்திற்கு நகர்த்த உதவியிருக்கிறது. ஒருநாள் பசுமாட்டின் மடியைத் தொட்டுப் பால் கறக்கிறாள் ஆராயி. செட்டியார்கள்மீதுள்ள கோபத்தைக் கவுண்டர் இவள்மீது இறக்குகிறார். அம்மிக்கல்லைத் தூக்கிக் கைமீது போடுகிறார். இவள் எதிர்ப்பேதும் காட்டாமல் அலறுகிறாள். சாதியத்தின் கோரமுகத்தைச் சூத்ரதாரி இந்த இடத்தில் வெளிப்படையாக எழுதிச் செல்கிறார். தங்களுக்குக் கீழே கிடந்த ஒருகூட்டம் தங்களுக்கு இணையாக முன்னேறுவதைச் சாதிய மனம் ஏற்க மறுக்கிறது. உதிரிகளாகக் கிடக்கும் சக்கிலியர்கள் செட்டியார்களைப் போன்று எதிர்க்கப்போவதில்லை. திராணியற்ற அவர்களை எளிதாக நசுக்கிவிடலாம் என்கிற ஆதிக்க மனம் ஆராயியின் கையை உடைக்கிறது. ஆனால் ஆராயி என்கிற பெண்ணுடல்மீது மயக்கங்கொண்ட கவுண்டரின் மகன் மயில்சாமி அவளுக்கு மருத்துவம் பார்க்கிறான். அவளுடன் உறவுகொள்கிறான். “உங்கப்பன் கறவையோட மடியில கை வெச்சதுக்கு கைய நசுக்கறான்… நீ யென்னடான்னா… எம் மடியில…” (.149) என்று மயில்சாமியை ஆராயி கேட்கும் இடம் முக்கியமானது. பாலியல் தேவைக்காகத் தாழ்த்தப்பட்டவர்களைத் தொடுவதென்பது எப்போதும் ஆதிக்கச் சாதியினருக்குத் தீட்டாகப் படுவதில்லை என்ற இடத்தை நாவல் அடைகிறது. இந்நாவலின் கதை அண்ணா உயிருடன் இருந்த அறுபதுகளின் பிற்பகுதியில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. தி.மு..வின் அரசியல் பிரவேசம் தொடங்கும் காலகட்டத்தில் சாதியத்தின் வேர் அடுத்த தலைமுறையினருக்குப் எப்படிப் பரவுகிறது என்பதை நாவல் தொட்டுச் செல்கிறது.
நெசவுத்தொழில் சார்ந்த விரிவான சித்திரத்தையும் நாவல் உருவாக்குகிறது. நெசவுத்தொழிலில் பயன்படுத்தப்படும் பொருட்கள், பாவு போடுதலில் உள்ள பிரச்சனைகள் என நாவல் ஆங்காங்கே பேசுகிறது. எந்த இடத்திலும் புனைவு பிரச்சாரத்தை முன்னெடுக்கவில்லை. நிகழ்களத்தை எழுதும்போது ஓர் அந்நியத் தன்மையை நாவலாசிரியர்கள் தம் படைப்புகளில் கசியவிட்டுவிடுவதைப் பல புனைவுகளில் காணலாம். ஆனால் சூத்ரதாரியை அவ்வாறு மதிப்பிட முடியாது. நாவலின் மொழி மிக முக்கியமானது. புனைவுக்கு நவீனத்தன்மையை ஆசிரியர் பயன்படுத்தும் மொழிதான் தீர்மானிக்கிறது. கவிதைக்குரிய மொழிப்பிரயோகம் நாவலில் துலக்கமடைகிறது. “அவனுக்குள் தடுமாற்றத்துடன் நூலிழையை அறுத்து ஓடிக்கொண்டிருந்த தறிநாடா இப்போது லாவகமான விசையுடன் இசைந்து ஓடியது”(.35) என்ற உவமையில் நஞ்சப்பனின் மனமாற்றத்தைக் குறிப்பிடுகிறார். “மூடிய இமைகளைத் துளைத்து நுழைந்தது நட்சத்திரத்தின் உடைந்த முனையொன்று. கண்ணுக்குள் மின்னல் சட்டென்று பரவி மறைந்தது” (.39) என்ற படிமம் பூசாரியப்பனின் மனப்பிரக்ஞை. அம்மன் வீட்டைவிட்டுப் போனபின் இருக்கும் வெறுமையைப் பூசாரியப்பனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆசிரியர் இதனை மொழிவழியாக வாசகனுக்குக் கடத்தும் இடம் மிகவும் நுட்பமானது.
அம்மன் நெசவு நாவலில் பெண் கதாபாத்திரங்களின் வார்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. நாவல் மீண்டும் மீண்டும் ஒன்றை வலியுறுத்திச் சொல்கிறது. ஆண்களின் பகையால் அதிகமும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தாம். கவுண்டர்களுடனான பகையால் பெண்கள் தண்ணீர் கொண்டுவரவும் சந்தைக்குச் செல்லவும் சங்கடங்களை எதிர்கொள்கிறார்கள். “ஊர் தகராறுல எல்லாமே நம்ம தலையில இல்ல வந்து விழுது. இப்புடி ஊரெல்லாம் சுத்திட்டுச் சந்தைக்குப் போறதும் நாமதான். வெடியால பாவுக் கஞ்சிக்குத் தண்ணி வேணும்னா எங்கடா ரெண்டு கொடம் கெடக்கிம்னு அலையறதும் நாமதான். இந்த ஆம்பளங்க தகராறையும் பண்ணிக்குவாங்க. உக்காந்து உக்காந்து குண்டி தேய நாயமும் பேசிக்குவாங்க” (.90) என்ற விமர்சனத்திற்கு எப்போதும் பதில் கிடைக்கப் போவதில்லை.
அம்மன் நெசவு என்பது ஒரு தொன்மம். இன்றும் சௌடேஸ்வரி அம்மன் நெசவு செய்வதுபோன்று தொழில்நுட்பத்துடன் கோவில்களை உருவாக்கி வழிபடும் மரபு தொடர்கிறது. இணையத்திலும் இது தொடர்பான வீடியோ பதிவுகள் காணக்கிடைக்கின்றன. கடவுளுக்குப் பின்னால் பின்னப்பட்டுள்ள தொன்மங்கள் மேலதிகம். சாதிய மோதல்கள் உருவாவதற்குத் தெய்வம் எவ்வாறு காரணியாகிறது என்ற ஒரு கண்ணியைப் பிடித்துக்கொண்டு இப்புனைவு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவாங்கச் செட்டியார்களின் இனவரைவியல் குறித்து நாவல் விரித்துரைக்கவில்லை. இந்தப் பகுதியிலும் ஆசிரியர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள் நிகழும் ஒடுக்குதல்களை வெளிச்சப்படுத்திய ‘கோவேறு கழுதைகள்’ (1994) நாவல்பெற்ற இடத்தை இந்நாவலும் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கோவேறு கழுதைகள் விவாதிக்கப்பட்ட அளவுக்கு இந்நாவல் விவாதிக்கப்படவில்லை என்பதும் சாதிய அரசியல்தான். பிற்படுத்தப்பட்ட இரு சாதிகளின் மனச்சாயலைப் புதிய களம், திரும்பத் திரும்ப வாசிக்கத்தூண்டும் மொழிநடை என நாவல் நுண்மையாகப் பின்னியிருக்கிறது. இடதுசாரிகளின் பார்வையில் இப்புனைவை அணுகும்போது இதன் பரப்பு இன்னும் விரியக்கூடும்.


No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...