யாருமற்றவன்
தூக்கக்
கலக்கத்துடன் உள்ளே வந்த
டாக்டர்,
அப்பாவின்
இடதுகை நாடியைப் பற்றினார்.
அனிச்சையாய்
தன் மணிக்கட்டைத் திருப்பியவர்
கைகடிகாரம் இல்லாததை உணர்ந்து
கடுப்புடன் முகம் சுழித்தார்.
நாடியை
கணித்தபடியே கட்டிலின்
மறுபக்கம் நின்றிருந்த என்னை
ஏறிட்டார்.
கலைந்த
தலைமுடி.
கவனிக்கப்படாத
தாடி மீசை.
பொத்தான்கள்
கழன்ற கசங்கிய சட்டை.
பொதுக்கான
உடல்.
17 வயது
இளைஞன்தான் நான்.
ஆனால்
என் கண்களையும் முகத்தையும்
பார்த்து பலருக்கும் ஏற்படும்
தடுமாற்றம் அவரிடமும் இப்போது.
“எப்பிடித்தான்
சின்னக்குழந்தையாட்டம்
முகத்தை வெச்சுக்கறியோ?
உன்னை
நல்லாத் திட்டணும்னு தோணும்போதுகூட
வாய் வரமாட்டேங்குதுறா.
உள்ளபடியே
உன் முகமே அப்பிடித்தானா.
இல்லை
நடிக்கறியா.
அதையும்
கண்டுபுடிக்க முடியலடா.”
சிலநாட்களுக்கு
முன்பு என் அக்கறையின்மைக்காக
எச்சரித்து அனுப்பும்
உத்தேசத்துடன் அழைத்திருந்த
கல்லூரித் துறைத்தலைவர்
அப்படி எதுவும் செய்யாமல்
புத்திசொல்லி அனுப்பினார்.
வெளியே
வந்ததும் கண்ணாடியில்
முகம்பார்க்க வேண்டுமென்று
நினைத்தேன்.
அதென்ன
அப்படியொரு விசேஷ முகம்?
கழிவறையில்
இருந்த கண்ணாடியில் என்
முகத்தைப் பார்த்தபடியே
நின்றேன்.
இது
என் முகம்தானா?
நடிக்கிறேனா?
எனக்கும்
தெரியவில்லை.
இப்போதும்
அதே பாவத்துடன் கட்டிலில்
கிடக்கும் அப்பா இன்னும்
உயிருடன்தான் இருக்கிறார்
என்ற நம்பிக்கையுடன் டாக்டரின்
முகத்தையே ஆர்வத்துடன்
பார்த்திருக்கின்றன என்
கண்கள்.
டாக்டருக்குத்
தெளிவாகத் தெரிந்திருந்தது.
கண்ணிமைகளை
விலக்கிப் பார்த்தார்.
மார்புத்
துடிப்பைப் பரிசோதித்தார்.
ஆவி
பிரிந்து அரை மணி நேரமாகியிருக்கலாம்
எனத் தீர்மானித்தவர் நர்சின்
கையிலிருந்த சிகிச்சைத் தாளை
வாங்கி சரசரவென எழுதினார்.
தாளின்
மீது நகரும் டாக்டரின்
விரல்களையே கவனத்துடன்
பார்த்திருந்த நான் மெல்லக்
கேட்டேன் “என்னாச்சு டாக்டர்?”.
நிமிர்ந்து
ஒருமுறை என்னைப் பார்த்தார்.
என்
கண்கள் அவரைப் பேசவிடாது
நிறுத்தின.
பெருமூச்சுடன்
நிதானித்தவர் கட்டிலில்
கிடந்த அப்பாவைப் பார்த்தபடியே
கேட்டார் “பெரியவங்க யாரையாச்சும்
வரச் சொல்ல முடியுமா?”
“அப்பாவுக்கு
என்னாச்சு டாக்டர்?”
கலங்கிய
என் கண்களுக்கேற்ப என் குரலும்
வெகுளித்தனத்துடன் ஒலித்தது.
டாக்டர்
மேலும் அந்த இறுக்கத்தைப்
பேண வேண்டாம் என்று
நினைத்திருக்கவேண்டும்.
“சீக்கிரமா
யாரையாச்சும் வரச்சொல்லுப்பா.
உங்கப்பா
போயிட்டாரு.
மத்த
பார்மாலிட்டீஸ் இருக்கு.”
உடனடியாக
அங்கிருந்து நகர்வதுதான்
அவரது உத்தேசமாயிருந்தது.
நர்சிடம்
கைகாட்டிவிட்டு வெளியில்
நடந்தார்.
அப்பாவின்
முகத்தையே உற்றுப் பார்த்தேன்.
தூங்குவது
போலத்தான் தெரிகிறது.
அப்பா
இப்போது உயிருடன் இல்லையா?
பதற்றத்துடன்
அவர் கன்னத்தைத் தொட்டேன்.
வெள்ளை
முடிகள் விரல்களைக் குத்தின.
இன்னும்
அருகில் நெருங்கி பெருமூச்சுடன்
அவர் கண்களை உற்றுப் பார்த்தேன்.
லேசாகத்
திறந்த கண்களில் ஈர மினுமினுப்பு.
உள்ளுக்குள்ளிருந்த
துக்கம் மேலெழுந்து வந்தது.
விசும்பத்
தொடங்கினேன்.
கன்னத்தை
மெல்லத் தட்ட அப்பாவின் தலை
வெறுமனே அசைந்தது.
தாங்கமாட்டாது
அவரது உடல் மீது கவிழ்ந்து
குலுங்கி அழுதேன்.
“அப்பா.
அப்பா
எழுந்திருங்கப்பா.
எனக்கு
பயமா இருக்குப்பா.
பயமா
இருக்குப்பா.”
கன்னத்தைப்
பற்றியபடி கெஞ்சினேன்.
இன்னும்
உயிரின் வெப்பத்தை தக்கவைத்திருந்த
அப்பாவின் உடலை ஆவேசத்துடன்
புரட்டியபடியே அழுதேன்
“எழுந்திருங்கப்பா.
நான்
தனியா இருக்கேம்ப்பா.
ப்ளீஸ்ப்பா.”
இரண்டு
நர்சுகள் ஓடி வந்தனர்.
என்
அழுகையும் வெறிபிடித்தவன்போல்
அப்பாவின் உடலைப் பற்றி
உலுக்குவதையும் கண்டு ஒருகணம்
அஞ்சி நின்றனர்.
“சார்லஸ்
அண்ணே… கொஞ்சம் வாங்கண்ணே
சீக்கிரம்.”
ஒருத்தி
கத்தி அழைத்தாள்.
சார்லஸ்
வந்து என் தோளைப் பிடித்து
நிறுத்தினான்.
சீற்றத்துடன்
திரும்பிய என் கண்கள் சார்லஸ்ஸை
திடுக்கிடச் செய்தன.
“விடுங்க
என்னை.
எங்கப்பாவை
நான் எழுப்பணும்.
டாக்டர்
பொய் சொல்றாரு.
அவர்
உசுரோடதான் இருக்கறார்.
விடுங்க.
நான்
கூப்பிட்டா எங்கப்பா
எழுந்திருப்பாரு.”
மூர்க்கத்துடன்
விலக எத்தனிக்க சார்லஸின்
பிடி இறுகியது.
படுக்கை
அருகிலிருந்து அவனை நகர்த்தினான்.
“சரிப்பா.
இரு.
டாக்டரை
வந்து பாக்கச் சொல்லலாம்.
நீ
உக்காரு.
அமைதியா
இரு.”
விசும்பியவாறே
பெஞ்சில் உட்கார்ந்தவுடன்
அப்பாவின் உடல் என்னிலிருந்து
விலகி எங்கோ தனித்துக் கிடப்பது
போலிருந்தது.
கண்களைத்
துடைத்தவன் நிமிர்ந்து
சார்லஸைப் பார்த்தேன்.
முதுகை
அணைத்தபடியிருந்த இடதுகையை
விலக்கினேன்.
காக்கி
உடை அணிந்த இருவர் தள்ளுபடுக்கையுடன்
அறைக்குள் வந்ததைக் கண்டு
எழுந்து நின்றேன்.
சட்டென
வேறொரு வாடை அறைக்குள் கவிவதை
அச்சத்துடன் உணர்ந்தேன்.
“என்ன
பண்ணப் போறீங்க?”
அப்பாவின்
மீதிருந்த போர்வையை இழுத்து
கீழே போட்ட ஒருவன் தலைமாட்டுப்பக்கம்
நகர்ந்தான்.
கால்மாட்டில்
நின்றவனைப் பார்த்துத்
தலையசைக்க இருவரும்
படுக்கைவிரிப்பைப் பற்றித்
தூக்கினர்.
கட்டிலில்
இருந்த அப்பாவின் கனத்த உடல்
கணப்பொழுதில் தள்ளுப்படுக்கையில்
கிடந்தது.
தாவி
அருகில் வந்த நான் “எங்க
கொண்டு போறீங்க?”
என்று
தடுப்பதுபோலக் கைகளை நீட்டி
அழுதபடியே கேட்டேன்.
சார்லஸ்
என் தோளைப் பற்றி விலக்கினான்.
தள்ளுபடுக்கை
மெல்ல அறைக்கு வெளியே நகர்ந்தது.
“இங்க
வெச்சுருக்கக் கூடாது தம்பி.
காலையில
வரைக்கும் மார்ச்சுவரிலதான்
வெச்சிருப்பாங்க.”
சார்லஸ்
சொன்னதை கவனிக்காதவன்போல்
அறை வாசலையே வெறித்து நின்றேன்.
தள்ளுபடுக்கையின்
சக்கரங்கள் உருளும் ஓசை
இருளில் கரைந்து மறைந்தது.
“அத்தைய
வரச் சொல்லிருக்கியா?”
நான்
பதில் சொல்லவில்லை.
”நானே
சொல்லிர்றேன்.
நீ
அமைதியா இங்கயே இரு.”
தொண்டை
வறண்டிருந்தது.
அலமாரியில்
இருந்த பாட்டிலை எடுத்துக்
குடித்தேன்.
தண்ணீர்
வழிந்து சட்டையை நனைத்தது.
நீரின்
குளுமை என்னை நிதானப்படுத்தியிருந்தது.
பாக்கெட்டிலிருந்து
போனை எடுத்து பொத்தானை
அழுத்தினேன்.
திரை
ஒளிர்ந்து என் முகத்தில்
வெளிச்சம் அபத்தமாய் படர்ந்தது.
விரல்கள்
நிதானமாய் நகர்ந்து தேட
சார்லஸ் அறையை விட்டு அகன்றான்.
அறையில்
யாருமில்லை.
எழுந்து
கதவருகில் வந்து எட்டிப்
பார்த்தபோது நீண்ட வராந்தாவில்
ஓசையற்ற வெளிச்சத்தைத் தவிர
எந்த அசைவுமில்லை.
அறை
விளக்கை அணைத்தேன்.
படுக்கையருகில்
வந்து நின்று தலையணையை
வெறித்தபடியே அப்பாவின் தலை
அழுந்திய இடத்தின் குழிவைத்
தடவினேன்.
சரிந்து
படுத்தேன்.
கண்களை
மூட பயமாயிருந்தது.
இனி
என்ன பயம்?
எதற்காக?
இதோ
இந்த கணத்தில் வெளியே போனால்
தெருவில்தான் நிற்கவேண்டும்.
அப்பாவும்
நானுமாய் ஒண்டிக்கிடந்த அந்த
வீட்டில்தான் இனியும் நான்
இருக்கவேண்டுமா?
ஒன்றரை
மாதமாய் இந்த அறைதான் எல்லாம்.
ஓரமாய்
கிடக்கும் தோல்பையும் சிறிய
பெட்டியும்தான் மொத்த சொத்தும்.
அதற்குள்ளும்
பழைய துணிகள்தான்.
அப்பாவின்
ஒன்றிரண்டு சட்டைகள்.
அழுக்கே
நிறமாகிப்போன வேட்டிகள்.
வேறென்ன?
சற்று
நேரத்துக்கு முன்பு கரகரத்த
மூச்சுடன் இதோ இங்கே கிடந்தவர்
இப்போது இல்லை.
பிணங்களுக்கு
நடுவில் இன்னுமொரு பிணமாகக்
கிடக்கிறார்.
திடுக்கிட்டு
எழுந்து அமர்ந்தேன்.
இவ்வளவுதானா?
இருந்தும்
இல்லாமல்போவதும் இத்தனை
சுலபமா?
சந்திரா
அத்தையிடம்தான் சொல்லியிருக்கிறேன்.
என்னிடமிருந்து
அந்த நேரத்தில் போன் என்றதுமே
அவளுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
அழுகுரலுடன்தான்
எடுத்தாள்.
“அப்பா
செத்துட்டாரு அத்தே.
இப்ப
நான் என்ன செய்யணும்?”
அவளது
அழுகை வலுத்தது.
அவள்
அழும் சத்தத்தைக் கேட்டுநின்ற
என் கண்ணிலும் நீர் வழிந்தது.
சிலநொடிப்பொழுதுதான்.
சட்டென
சுதாரித்தவள் “ஒண்ணில்லடா
கண்ணா.
நீ
அங்கியே தைரியமா இரு.
நா
வரேன்.
பக்கத்துல
சார்லஸ் இருந்தா அவர்கிட்ட
போனைக் குடு” என்றாள்.
எல்லோரும்
கைவிட்ட பின்பும் அப்பாவின்
மீது பாசமும் நம்பிக்கையும்
வைத்திருந்தவள் அவள்மட்டுந்தான்.
மாமாவிடம்
சொல்லியிருப்பாளா?
சக்திவேல்
மாமாவுக்கு உடம்பு சுகமில்லை.
அதுவும்
இந்த நேரத்தில் மாத்திரையைப்
போட்டுக்கொண்டு தூங்கியிருப்பார்.
அப்பாவிடம்
அவர் பேசியே எத்தனை காலம்
ஆயிற்று.
இப்போது
இப்படியொரு சமாச்சாரம்
என்றாலும் பெரிதாய் அலட்டிக்
கொண்டிருக்கமாட்டார்.
“துன்பம்
விட்டுதுன்னு தலையை முழுகு.
அவனெல்லாம்
இருந்து யாருக்கு என்ன
பிரயோசனம்?”
என்று
தொடையில் தாளமிடத் தொடங்கியிருப்பார்.
வங்கியிலிருந்து
ஓய்வு பெற்ற வளமும் வாதையுமாய்
தொலைக்காட்சி முன்னால்
ரிமோட்டை அழுத்தியபடி
உட்கார்ந்திருக்கிறார்.
கனத்த
கட்டைப்பையில் கோப்புகளை
சுமந்தபடி அலுவலகத்துக்கு
ஓடும் அத்தையை இன்னமும்
தொட்டதற்கெல்லாம்
குறைசொல்லிக்கொண்டிருக்கிறார்.
அத்தை
இந்த நேரத்தில் அவரிடம்
எதுவும் சொல்லியிருக்கமாட்டாள்.
லட்சுமி
சித்தியைத்தான் அழைத்திருப்பாள்.
சேலத்தில்
வேலையிலிருக்கும் லட்சுமி
சித்தப்பா சனிக்கிழமைதான்
வருவார்.
மணி
இப்போது என்ன இருக்கும்?
மடிப்பாக்கத்தில்
இருக்கும் கார்த்திகேசன்
மாமாவை இப்போது கூப்பிடமுடியாது.
தலை
வலித்தது.
எழுந்து
அறைக்குள் நடந்தேன்.
யாரோ
எப்போதோ வரட்டும்.
யார்
வந்து இனி என்ன ஆகப்போகிறது.
இப்போது
நான் தனியாக நிற்கிறேன்.
அப்பாவும்
இல்லை.
அம்மாவும்
இல்லை.
யாருமற்றவன்.
அனாதை.
அத்தையும்
சித்தியும் மாமாவும்
இருந்தாலும்கூட அனாதைதான்.
அந்த
எண்ணம் எழுந்த கணத்தில்
குப்பென்று வேர்த்தது.
அப்பாவை
உடனே பார்க்கவேண்டும்
போலிருந்தது.
உண்மையில்
அவர் செத்துப்போனாரா?
டாக்டர்
அவரை சரியாகத்தான் பரிசோதித்தாரா?
சார்லஸ்
என்னவோ சொன்னானே?
மார்ச்சுவரி
எங்கே இருக்கிறது?
அறைக்கு
வெளியே எட்டிப் பார்த்தபாது
சார்லஸும் நர்சுகள் இருவரும்
அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது
தெரிந்தது.
இத்தனை
தொலைவிலிருந்தும் அந்தவொரு
கணத்தில் ஒல்லி நர்சின்
முகத்தில் ஒளிர்ந்திருந்த
வெட்கத்தை கண்டுகொள்ள முடிந்தது.
சட்டென
பின்னகர்ந்தேன்.
முகத்தைத்
துடைத்தபடி கட்டிலில்
உட்கார்ந்தபோது கால்கள்
தன்னிச்சையாக ஆடின.
வராந்தாவின்
விளக்குகள் ஒருகணம் அணைந்து
பின் ஒளிர்ந்தன.
ஆமாம்.
இப்போது
அப்பா இல்லை.
இருந்துதான்
அவர் என்ன செய்துவிட்டார்?
வலதுகால்
கட்டைவிரலின் நகத்தை சுரண்டியவன்
சுற்றுமுற்றும் பார்த்தான்.
மெல்லச்
சிரித்தான்.
இவர்
இப்போது செத்துப்போனதுகூட
நல்லதுதான்.
பழுதான
சிறுநீரகங்களை சுமந்துகொண்டு
ரத்தச் சுத்திகரிப்புக்கென
வாரத்துக்கு இரண்டு முறை
இந்த அரசாங்க உதவிபெறும்
மருத்துவமனைக்கு அலைந்ததும்
மீதி வேளைகளில் வெளிச்சமும்
காற்றுமில்லாத அந்த அறைக்குள்
பசியோடு பதுங்கிக் கிடந்ததும்
போதும்.
“பதினேழு
வருஷமா உன்னைத் தூக்கி
சுமக்கறேண்டா.
அவ
போன போதே நானும் போயிருக்கணும்.
உன்னாலதாண்டா
நான் இன்னும் உயிரோட இருக்கேன்”
என்று சொல்லிச் சொல்லித்தானே
என்னை இப்படி நிற்க வைத்திருக்கிறார்.
அம்மா
போன பிறகுதான் இந்த தரித்திரம்.
அவள்
இருந்தவரைக்கும் என்னை
பொத்திப் பொத்தியே வளர்த்தாள்.
எல்லோரிடத்திலும்
மரியாதை இருந்தது.
ஏன்
அப்பாவுமே அவள் இருந்த வரைக்கும்
ஒரு ஆளாகத்தான் மாரை நிமிர்த்தியபடி
திரிந்திருந்தார்.
அவர்
செய்யும் காரியங்களைப் பற்றித்
தெரிந்தும் பேசாதிருந்தாள்.
அவற்றின்
விளைவுகளைப் பற்றி அறிந்தும்
யாருக்கும் சொல்லாமல் தானே
சரிசெய்திட முயன்றாள்.
“ஸ்டாக்
மார்கட்னா அப்பிடித்தான்
இருக்கும் வாணி.
ஒருநாள்
போகும்,
ஒருநாள்
வரும்.
காமர்ஸ்
படிச்சவ.
உனக்குத்
தெரியாதா?
சின்னச்
சின்னதா போகும்.
ஒருநாள்
பெரிசா வந்து கொட்டும்.
இன்னிக்கு
நஷ்டமாயிடுச்சேன்னு பயந்து
அதப் பண்ணாம இருந்தா நஷ்டம்
நமக்குத்தான்.
இந்த
ஒரே ஒரு தடவை மட்டும் ஒரு
பத்தாயிரம் ஏற்பாடு பண்ணிக்குடு.
இதுக்கப்பறம்
நீ எதுமே பண்ண வேண்டாம்”
காய்கறி
நறுக்கிக்கொண்டிருந்தவளின்
தோளோடு தலைவைத்துக் கெஞ்சியபோது
அம்மா ஏன் அவனை தள்ளிவிடவில்லை.
பழைய
ஆறாம் வகுப்பு நோட்டுப்
புத்தகத்தில் சோட்டா பீமுக்கு
மீசை வரைந்து கொண்டிருந்த
கல்யாணரங்கன் அப்பாவை
முறைத்தான்.
அந்தப்
பார்வையை உடனடியாகக் கண்டுகொண்ட
அம்மா சிரித்தபடியே நகர்ந்தாள்.
“அதுக்கென்னங்க.
பாக்கலாம்.
இவனைப்
பாருங்க.
சேட்டா
பீமுக்கே மீசை வெக்கறான்.”
“எம்புள்ள
அப்பிடித்தாண்டி.
தைரியசாலி.
வடக்கத்திகாரனுங்க
பொம்மைக்குக்கூட மீசை
வெக்கமாட்டானுங்க.
நாம
அப்பிடியா?
சிங்கம்ல”
என்றபடியே அவன் கன்னத்தைக்
கிள்ள முயன்றபோது கல்யாணரங்கன்
அப்பாவின் கையைத் தட்டிவிட்டான்.
கலையாத
சந்தனப்பொட்டும் முழங்கைக்கு
மேலாய் சுருட்டி மடித்த
முழுக்கைச் சட்டையுமாய்
மின்விசிறிக்குக் கீழே
நாற்காலியில் கால்களை
மடித்துப்போட்டு உட்கார்ந்திருந்த
தாத்தா எச்சரிப்பதுபோல சொன்னதை
அம்மா கேட்டுக்கொள்ளவில்லை.
விளக்கேற்றிய
பொழுது.
கொசுக்களின்
வருகையைத் தடுப்பதற்காக கதவு
ஜன்னல்களை சாத்தியிருந்ததில்
வேர்த்துப் புழுங்கியது.
அம்மா
பால்மணக்க கலந்த காப்பியை
சர்க்கரை சேர்க்காது தாத்தாவிடம்
நீட்டினாள்.
“இப்பிடியே
எடம் குடுத்துட்டிருந்தா
சரிப்படாதும்மா.
இப்பவே
கம்மல்,
மோதிரம்னு
எதுவுமே பாக்கியில்லேன்னு
தெரியும்.
எங்கல்லாமோ
அஞ்சும் பத்துமா கை நீட்டிருக்கே.
கல்யாணம்
காட்சின்னு போனா காதுல
அப்பிடிஇப்பிடின்னு விழுது.
நீ
ரொம்ப வெவரம்னு சொல்லுவேன்.
ஆனா
ஏன் இப்பிடி ஆயிட்டேன்னு
தெரியலை?”
அம்மா
எதுவும் பேசாது தாத்தாவின்
முகத்தைப் பார்த்துச்
சிரித்தாள்.
அம்மா
சிரிக்கும்போது அத்தனை அழகாக
இருக்கும்.
கண்ணும்
அகலக் கண்ணாடியும் தாடையும்
மூக்குமாய் எல்லாமே சேர்ந்து
சிரிக்கும்.
காதோரம்
அலைகிற சுருள்முடிகூட
சிரிப்பதுபோலிருக்கும்.
எனக்கும்
அவளைப் போலவே சிரிக்கவேண்டும்
என்று ஆசை.
அவள்
கவலை இல்லாதவளாக எப்போதும்
இருந்ததில்லை.
ஆனால்
சிரித்துக்கொண்டுதான்
இருந்தாள்.
இத்தனை
இருந்தும் அப்பாதான் கவலையற்றவராக
இருந்தார்.
எதற்கும்
எப்போதும் அவர் கவலைப்படவில்லை.
பங்குச்
சந்தையில் சக்திக்கு மீறிய
நஷ்டம் வந்தபோதும் சரி அதற்காக
வேலை செய்து கொண்டிருந்த
வங்கியில் பணத்தை கையாடியது
கண்டுபிடிக்கப்பட்டபோதும்
சரி அவர் எப்போதும் போலத்தான்
இருந்தார்.
“இதெல்லாம்
நிக்காது வாணி.
இந்த
பேங்குக்காக எத்தனை உழைச்சிருக்கேன்
நான்.
அப்பிடியெல்லாம்
செஞ்சுருவாங்களா?
அப்பறம்
யூனியன்னு ஒண்ணு எதுக்கு
இருக்கு?”
மறுநாள்
பள்ளிக்கு கொடுத்தனுப்பவென்று
வாங்கி வைத்திருந்த காராசேவு
பொட்டலத்தை காலிசெய்துவிட்டு
சூடாக காபி வேண்டுமென கேட்டபோது
அம்மா எதுவுமே சொல்லவில்லை.
அப்பா
சொல்வதையெல்லாம் அப்படியே
நம்பினாள்.
ஏன்
எதற்காக என்று எந்த கேள்வியையும்
அவள் கேட்கவேயில்லை.
பணம்
கையாடல் செய்தது நிரூபிக்கப்பட்டு
வேலையிலிருந்து நீக்கி
வீட்டுக்கு அனுப்பிய நாளன்றும்
அவர் வழக்கம்போலத்தான்
வந்தார்.
வீட்டில்
அப்போது இந்தி டியூசன்.
அம்மா
பிரவீன் வரைக்கும் படித்தவள்.
பக்கத்து
வீட்டு குழந்தைகள் சிலருக்கு
வகுப்பெடுத்தாள்..
அப்போதுதான்
அதே வங்கியில் வேலைபார்க்கும்
மாமா ஒருவர் தொலைபேசியில்
அழைத்து விஷயத்தைச் சொன்னார்.
போனை
அணைத்துவிட்டு கலங்கிய
கண்களுடன் அம்மா அடுக்களைக்குள்
போனாள்.
அடுப்புமேடைக்கு
மேலிருக்கும் ஜன்னல் வழியாக
தெருவில் எதையோ பார்த்துக்கொண்டு
நின்றாள்.
கண்ணாடியைக்
கழற்றி கண்களைத் துடைப்பதை
நான் எட்டிப் பார்த்தேன்.
முகத்தைக்
கழுவிக்கொண்டு வெளியே வந்தவள்
எங்களைப் பார்த்துச் சிரித்தாள்.
“இன்னிக்கு
போதும்.
மீதி
பாடத்தை நாளைக்குப் பாக்கலாம்.
ரோட்ல
நடக்கும்போது ஓரமா பத்திரமா
போணும் சரியா.”
அவர்கள்
வெளியே போன அதே சமயத்தில்
வேர்வையில் நனைந்த சட்டையும்
கலைந்த தலைமுடியுமாய் அப்பா
உள்ளே வந்தார்.
வழக்கத்துக்கு
மாறாக இருட்டுவதற்கு முன்பு
வீட்டுக்குள் வந்த அவரை வேறு
யாரோ போல பார்த்தேன்.
அம்மா
அவரது முகத்தையே பார்க்கவில்லை.
“அதுக்குள்ள
டியூசன் முடிஞ்சிதா?”
சட்டையைக்
கழற்றி ஆணியில் மாட்டியபோது
அவர் இடது முதுகிலிருந்த
அகலமான மச்சம் மடங்கி அசைந்தது.
அம்மா
பதில் எதுவும் சொல்லாமல்
சூடான காப்பியை நீட்டினாள்.
தொலைக்காட்சித்
திரையை வெறித்தபடியே முதல்
மடக்கை குடித்தவர் “டிகாஷன்
புதுசா போடலியா?”
என்று
நாக்கைச் சப்புக்கொட்டியபடி
கேட்டார்.
எனக்கும்
காபி குடிக்கவேண்டும்
போலிருந்தது.
ஆனால்
அம்மாவிடம் கேட்க பயமாயிருந்தது.
கண்ணாடியைக்
கழற்றி முந்தானைச் சேலையில்
துடைத்தபடி சுவரோரமாய் சரிந்து
உட்கார்ந்தவள் மெல்லக்
கேட்டாள் “இனி என்ன பண்றதா
ஐடியா?”
ஆடிக்கொண்டிருந்த
அப்பாவின் கால்கள் நின்றன.
கடைசி
மடக்கைக் குடித்துவிட்டு
தம்ளரை தரையில் வைத்தவர்
அம்மாவை முறைத்தார்.
அப்போது
அம்மாவின் முகத்தில் சிரிப்பில்லை.
“அந்த
கொடமொளகாய் மூக்கன் சொல்லிட்டானா?”
“அதுவா
முக்கியம்.”
“அவனுக
எல்லார்த்துக்கும் இப்பத்தான்
சந்தோஷம்.
எப்படா
இப்பிடி ஒண்ணு நடக்கும்னு
நாக்கைத் தொங்கப்போட்டுட்டு
அலைஞ்சானுங்க.
தாயளிங்க…”
அம்மாவின்
கண்கள் அவசரமாய் என்னைத்
தொட்டன.
கணப்பொழுதில்
முகம் மாறியது.
சிறு
வெளிச்சம் போல் புன்னகை விரிய
எழுந்து என்னிடம் வந்து
தலையைத் தடவியபடியே கேட்டாள்
“தோசை வாக்கட்டுமா தங்கம்?”
எனக்கு
அப்போது பசியில்லை.
காபி
வேண்டும் என்று கேட்டாலும்
தந்திருப்பாள்.
நான்
வேண்டாமென தலையாட்டினேன்.
“பசிக்கலையா?
சரி
நீ கொஞ்ச நேரம் தாத்தா வீட்ல
வேணா வெளையாடிட்டு வா.”
அவள்
அப்படிச் சொல்லுவாள் என்பது
எனக்குத் தெரியும்.
அப்பாவின்
முரட்டுத்தனங்களிலிருந்து
அழுக்கிலிருந்து என்னை
பத்திரப்படுத்த அவள் கையாண்ட
உபாயம் அது.
கார்த்திகை விளக்குகள் ஒளி சிந்திய தெருவில் உற்சாகத்துடன் ஓடினேன். தாத்தா வீட்டை நெருங்கிய கணத்தில் நின்றேன். அப்பா சொன்ன அந்த கடைசி வார்த்தை என்ன என்று யோசித்தேன். அங்கேயே இருந்திருக்கலாமா? அப்பாவிடமிருந்து அம்மா என்னை எதற்கு இப்படி விலக்குகிறாள். எல்லோரும் சொல்வதுபோல அப்பா அத்தனை கெட்டவரா?
கார்த்திகை விளக்குகள் ஒளி சிந்திய தெருவில் உற்சாகத்துடன் ஓடினேன். தாத்தா வீட்டை நெருங்கிய கணத்தில் நின்றேன். அப்பா சொன்ன அந்த கடைசி வார்த்தை என்ன என்று யோசித்தேன். அங்கேயே இருந்திருக்கலாமா? அப்பாவிடமிருந்து அம்மா என்னை எதற்கு இப்படி விலக்குகிறாள். எல்லோரும் சொல்வதுபோல அப்பா அத்தனை கெட்டவரா?
அன்றைக்கு
நான் வீடு திரும்பியபோது
தீபங்கள் அணைந்திருந்தன.
துளியும்
ஒளியற்ற கனத்த இருள்.
அம்மா
சாதாரணமாகத்தான் இருந்தாள்.
அப்போதும்
அப்பா தொலைகாட்சியில்தான்
கவனமாக இருந்தார்.
அவர்
கண்கள் சிவந்து வீங்கியிருந்தன.
அழுதிருக்கிறாரா?
அதன்பிறகு
கார்த்திகை வெள்ளி வரையிலும்கூட
அம்மா உயிரோடிருக்கவில்லை.
பள்ளியிலிருந்து
திரும்பியபோது அவள் புறப்பட்டுத்
தயாராய் இருந்தாள்.
வாசலில்
கோலமிட்டு விளக்கேற்றியிருந்தாள்.
டியூசன்
இல்லையென்று சொன்னவள் என்னை
உடனடியாகவே தாத்தா வீட்டுக்குப்
போகுமாறு சொன்னாள்.
“நீ
எங்கம்மா போறே?”
“நானும்
அங்கதாண்டா வரேன்.
கோயிலுக்குப்
போயிட்டு வந்தர்றேன்.
சமத்தா
இரு.”
தாத்தா
வீட்டில் உதிர்ந்த கார்த்திகை
பொரியுருண்டை துணுக்கை
உருட்டிச் சென்ற எறும்பு
வரிசையைப் பார்த்துக்
கொண்டிருந்தபோதுதான் பக்கத்து
வீட்டிலிருந்து தாத்தாவுக்கு
போன் வந்தது.
பனியன்
மட்டுமே அணிந்திருந்த தாத்தா
போனை அப்படியே போட்டுவிட்டு
ஓடினார்.
“தலையில
கல்லப் போட்டுட்டாளே!”
அவரது
கதறலைக் கேட்டு சமையலறையிலிருந்து
மாவுக் கரண்டியுடன் ஓடிவந்த
பாட்டியுடன் நானும் ஏனென்று
தெரியாமல் அழுதபடியே ஓடினேன்.
வீட்டை
நெருங்க முடியாத கூட்டம்.
யாரோ
என்னைத் தூக்கிக்கொண்டார்கள்.
எம்பிப்
பார்த்தபோது வீட்டுக்குள்
ஏராளமான கார்த்திகை விளக்குகள்
ஒன்றுசேர்ந்து எரிவதுபோல்
வெளிச்சம்.
வாளித்
தண்ணீரை இறைத்துக் கொட்டினார்கள்.
என்னைப்
பார்த்துப் பார்த்து எல்லோரும்
அழுதார்கள்.
அம்மாவைக்
காணவில்லை.
“இந்தக்
கொழந்தைய இப்பிடி விட்டுட்டுப்
போறதுக்கு அவளுக்கு எப்பிடி
மனசு வந்துச்சு?”
எங்கே
போனாள் அவள்?
வீட்டைப்
பூட்டிக்கொண்டுதானே போயிருப்பாள்?
எங்கிருந்து
தீ பிடித்திருக்கிறது?
எரியும்
நெருப்பின் அனல் நெருங்கவிடாது
துரத்தியது.
பாட்டி
என்னைப் பொத்தி அணைத்தபடி
எதிர்வீட்டு வாசலில் கதறி
நின்றாள்.
மணியொலித்தபடி
தீயணைப்பு வண்டி வந்தபோது
வேண்டாத எதுவோ நடக்கிறது
என்பதை உணர்ந்தேன்.
அம்மா
அருகில் இல்லாததும் எல்லோரும்
என் கன்னத்தைத் தொட்டு தலையைத்
தடவியபடி அழுவதும் என்னை
பயமுறுத்தியது.
அம்மா
எங்கே?
புரியாமல்
பெருங்குரலெடுத்து அழ
ஆரம்பித்தபோது புகை திரண்டெழுந்து
காட்சிகளை மறைத்தது.
நெருப்பு
முழுக்க அணைந்து புகைமூட்டம்
தணிய வெகு நேரமானது.
நான்
களைத்திருந்தேன்.
கண்கள்
காந்தின.
சட்டென்று
புகைமண்டிய இருட்டை உடைப்பதுபோல
அழுகைச் சத்தம் வெடித்தது.
தாத்தாவின்
கதறல் கேட்டு பாட்டி எழுந்தோடினாள்.
திண்ணையில்
எம்பி நின்று எட்டிப் பார்த்தபோது
தீயணைப்பு வீரர்கள் எதையோ
சுமந்து வந்து வாசலில்
போட்டார்கள்.
என்
கண்களை யார் கைகளோ மூடின.
எதற்காக
என்னைப் பார்க்கவிடாது
செய்தார்கள் என்று அப்போது
எனக்குத் தெரியவில்லை.
இரண்டு
நாட்களுக்குப் பிறகு அது என்
அம்மாவின் கருகிய உடலென்று
நானே தெரிந்துகொண்டேன்.
என்னால்
நம்ப முடியவில்லை.
அத்தனை
அழகான சிரிப்பும் திருத்தமும்
கொண்ட அம்மாவா அது?
வெறும்
கரிக்கட்டை அல்லவா?
கால்விரல்களில்
இருந்த மிஞ்சிகள்தான் அம்மாவென
உறுதிப்படுத்த உதவியதாய்
பேசிக்கொண்டார்கள்.
காலையிலேதான்
அப்பாவைப் பார்த்தேன்.
எல்லோரும்
திட்டிக் கொண்டிருக்க கண்ணீருடன்
அவர் தரையை வெறித்தபடியே
வெகுநேரம் உட்கார்ந்திருந்தார்.
எரிந்து
சிதைந்த வீட்டில் எடுப்பதற்கென்று
எதுவும் மிஞ்சவில்லை.
ஆனாலும்
அவர் அதனருகிலேயே அன்று மாலை
வரைக்கும் காத்திருந்தார்.
என்னவென்று
தெரியாமலே சொல்லிக் கொடுத்தபடி
அம்மாவுக்கான காரியங்களை
செய்தேன்.
அம்மாவின்
காரியங்கள் முடிந்த கையோடு
அப்பாவுடன் என்னை அனுப்பிவிட்டார்
தாத்தா.
“அந்தப்
பாவி இந்தப் புள்ளையையும்
கொன்னு தின்னுருவான்.
அவன்கிட்ட
குடுக்காதீங்க.
இங்கயே
இருக்கட்டும் அவன்” என்று
பாட்டி என்னை இறுக்கி அணைத்தபடி
அழுதாள்.
தாத்தா
ஒப்புக்கொள்ளவில்லை.
தாத்தா
ஏன் என்னை அப்பாவுடன் அனுப்பினார்
என்று எனக்கு புரியவில்லை.
மகளே
போய்விட்டாள்,
இனி
அவள் பிள்ளை எதற்கு என்று
நினைத்திருக்கலாம்.
அப்படித்தான்
அப்பா பிற்பாடு ஒருநாள்
என்னிடம் சொன்னார்.
பல
நாட்கள் நான் பள்ளிக்குப்
போகவில்லை.
மாமாவின்
கண்டிப்புகளையும் மீறி சந்திரா
அத்தைதான் அவள் வீட்டில்
எங்கள் இருவரையும் இருத்திக்கொண்டாள்.
இரவு
வெகுநேரம் அப்பாவுக்கு
புத்திமதி சொல்லுவாள்.
என்னை
வளர்த்து ஆளாக்கவேண்டிய
தேவையை வலியுறுத்துவாள்.
பள்ளிக்கு
அருகில் இருக்கட்டும் என்று
ஒரு வீட்டை ஒத்திக்குப்
பிடித்து அத்தியாவசியமான
பொருட்களை வாங்கித் தந்தாள்.
இதனால்
மாமாவுக்கு அத்தைக்கும்
தீராத சண்டை.
“அவனே
தெருவுல நிக்கறான்.
இருக்கறதுக்கு
ஒரு எடம் வேணாமா?
இதோ
ஒத்திக்கு வீடு பாத்துக்
குடுத்தாச்சு.
கொஞ்சம்
சாமான் வாங்கிப் போடலாம்.
அதுகூட
செய்ய வேணாமா?
அவ
செத்துப் போயிட்டா.
கூடவே
இவங்க ரெண்டு பேரும் செத்துப்
போகணுமா?”
அத்தை
குமுறலுடன் கேட்டபோது மாமா
அமர்த்தலாய் சிரித்தார்.
“சரி.
எல்லாம்
பண்ணிட்டேல்லா.
இத்தோட
விடு.
இனி
அவன் பொங்கித் தின்னானா இல்லே
ஈரத்துணியோட கெடந்தானான்னு
கவலப்படாம நம்ம பொழப்பைப்
பாரு.
அதவிட்டுட்டு
மாசமாச்சுன்னா வாடகைக்கு
வந்து நிக்கறது ஸ்கூல் பீஸ்
கட்டணும்னு கையைப் பெசஞ்சட்டு
வர்றதுன்னு எதும் கூடாது.
அவ்ளோதான்.”
கறாராய்
சொன்னவர் என்னையும்கூட
வெறுப்போடுதான் பார்த்தார்.
அப்பா
அப்போதும்கூட எதைப் பற்றியும்
கவலைப்படவில்லை.
புதுவீட்டுக்குள்
வந்தவுடனே அத்தையிடம் வெகு
சாதாரணமாய் சொன்னார் “இன்னுங்கொஞ்ச
பெரிய வீடா பாத்துருக்கலாமில்லை.”
“அவர்
திட்டறதுல தப்பே இல்லடா”
என்றவள் குரல் உடைந்து அழத்
தொடங்கினாள்.
எதற்காக
அழுகிறாள் என்று தெரியாமலே
எனக்கும் அழுகை வந்தது.
“நீ
எதுக்கு இப்ப அழறே?
நான்
என்ன அப்பிடியே ஒண்ணுக்கும்
இல்லாம போயிடுவேன்னு நீயும்
நெனக்கறியாடி?
அதெல்லாம்
நடக்காது பாத்துக்க.
என்னவோ
கெட்ட நேரம்.
அவளுக்கு
என்மேல நம்பிக்கை இல்லை.
அவசரப்பட்டு
போயிட்டா.
இன்னும்
ஒருமாசந்தான் பாத்துக்க.
மறுபடி
பேங்குக்கு போப்போறேன்.
எல்லாத்தையும்
செரி பண்ணிடுவேன்.”
அப்பா
சொன்னதை அத்தை எத்தனை தூரம்
நம்பினாள் என்று தெரியவில்லை.
விடைபெற்று
போகும்போது பர்சிலிருந்து
பணத்தை எடுத்து அப்பாவின்
கையில் திணித்தாள்.
நிறைய
பணம்போலத்தான் இருந்தது.
மாமாவுக்குத்
தெரியாமல்தான் தந்திருப்பாள்.
“பக்கத்துல
மெஸ் இருக்கு.
வேளைக்கு
வாங்கிக் குடு.
என்னத்தையாச்சும்
பண்ணிக்கோ.
ஒருமாசம்
இதோன்னு வந்துரும்.
வாடகை,
மளிகை,
பால்னு
செலவு வரிசையா வந்து நிக்கும்.
ஞாபகம்
இருக்கட்டும்.
எல்லாத்துக்கும்
நான் இருக்கேன்னு தெனாவெட்டாத்
திரியாதே.
ஓரளவுக்குத்தான்
என்னாலயும் முடியும்.”
என்னருகில்
வந்தவள் கன்னத்தைத் தொட்டாள்.
கண்ணில்
நீர் வழிந்தது.
அத்தையின்
பளபளக்கும் சங்கிலியைத்
தொடப் போனேன்.
அதற்குள்
அவள் நிமிர்ந்து “நல்லாப்
படிக்கணும்.
பத்திரமா
இருக்கணும்.
அத்தை
ஞாயித்துக் கிழமை வந்துப்
பாக்கறேன்.
சரியா?”
என்றபடி
கையைப் பற்றி அழுத்தினாள்.
அதன்
பிறகு சிலநாட்களில் சந்திரா
அத்தை தனியாகவும் சில
ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சுமி
சித்தியுடனும் வந்தாள்.
ஒவ்வொரு
முறையும் இனி உனக்குப் பணம்
தரமாட்டேன் என்றே அப்பாவிடம்
சொல்லுவாள்.
ஆனாலும்
போகும்போது பணம் தந்துவிட்டுத்தான்
போனாள்.
அவர்கள்
போன பிறகு அப்பா சிரித்தபடியே
சொல்வது வழக்கம்.
“குடுக்கட்டுமே.
அதான்
எல்லாரும் சம்பாதிக்கறாங்கல்ல.”
அவர்
ஏன் அப்படிச் சொல்கிறார்
என்று அப்போது எனக்குப்
புரியவில்லை.
“பின்ன
என்னடா கண்ணு.
நீயும்
அவங்க புள்ளைங்க மாதிரி
படிக்கவேண்டியவன்.
பெரிய
வீட்டுல சவுக்கியமா
இருக்கவேண்டியவன்.
என்னவோ
என் நேரம் சரியா இல்லை .
அதுக்காக
இப்பிடியே கெடைக்கற பாதி
சம்பளத்தை வெச்சுட்டு இந்த
பொந்துக்குள்ள பசியோட கெடக்க
முடியுமா?
வேலைக்குப்
போம்போது நான் கேட்டேனா.
இப்போ
இல்லே.
அவளும்
விட்டுட்டுப் போயிட்டா.
உன்னை
வெச்சுட்டு நான் என்ன
பண்ணமுடியும்?
தரட்டும்.
கூடப்
பொறந்தவங்க இருக்கறது
இதுக்குத்தானே?
இல்லேன்னுதான்
சொல்லுவாங்க.
ஆனாலும்
தராம இருக்க முடியாது.
ஏன்னா
அவங்களுக்கு மனசு உறுத்துது.
நமக்கு
சேரவேண்டியதையும் சேர்த்து
அவங்க அனுபவிக்கறாங்கறது
அவங்க மனசாட்சிக்குத் தெரியும்.”
ஏன்
அப்படிச் சொல்கிறார் என்று
புரியாமல் நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.
“ஆனா
ஒரு விஷயத்தை நெனப்புல
வெச்சுக்க.
ஆண்டவன்
உனக்கு இப்பிடி ஒரு முகத்தைக்
குடுத்துருக்கான்.
உன்னைப்
பாத்தா யாருக்கும் கோவமே
வராது.
தப்பாவே
நெனக்க முடியாது.
உன்
முகந்தான் உன்னோட பலம்.
அவங்க
உன் முகத்தைப் பாத்ததுமே நீ
அம்மா இல்லாத புள்ளைங்கற
எண்ணந்தான் அவங்களுக்கு
வரும்.
அதுதான்
உன்னைக் காப்பாத்தும்
பாத்துக்க.”
இதுபோல
அப்பா நிறைய சொன்னதுண்டு.
ஆனால்
இது மட்டும் எனக்குள்
பதிந்துபோனது.
ஒவ்வொரு
முறை கண்ணாடியில் முகம்
பார்க்கும்போதும் அவர் சொன்னதை
நினைத்துக்கொள்வேன்.
அதற்கு
பிறகு அப்பா வங்கிக்கு நடையாய்
நடந்தார்.
அவர்
மீதான வழக்கு முடிய இரண்டு
வருடங்கள் ஆயின.
குற்றங்கள்
நிரூபணமாகி பணிநீக்கம்
செய்யப்பட்டார்.
அதுவரையிலும்
கிடைத்த பாதி சம்பளமும்
இல்லாமல் போனது.
வாங்கிய
கடனுக்காக வீட்டை எடுத்துக்கொண்டார்கள்.
அடகு
வைத்த அம்மாவின் நகையை மீட்க
முடியாமல் அதுவும் கைவிட்டுப்போனது.
இத்தனைக்கும்
நடுவில் நான் பள்ளிக்கூடம்
போனேன்.
பரீட்சை
எழுதினேன்.
பனிரெண்டாம்
வகுப்பில் சுமாரான மதிப்பெண்.
காஞ்சிபுரம்
அருகில் பொறியியல் கல்லூரியில்
இடம் கிடைத்தது.
அத்தையும்
சித்தியும் மாமாவுமாய்
சேர்ந்து பணம்கட்டி விடுதியில்
சேர்த்தார்கள்.
நான்
படித்துத் தேறிதான் என்
அப்பாவைக் காப்பாற்றவேண்டும்
என்று ஒன்றுபோல எல்லோரும்
என்னிடம் புத்திமதி சொன்னார்கள்.
அப்பாவைத்
தனியாக விட்டுவிட்டுப்
போவதென்பது கொஞ்சம் சிரமமாகத்தான்
இருந்தது.
ஆனாலும்
விடுதியும் வேளைக்கு உணவும்
எனக்கு அப்பாவைவிட முக்கியமானதாக
இருந்தது.
அம்மா
போய் ஆறேழு வருடங்கள் வரையும்
என்னையும் வைத்துக்கொண்டு
பிழைக்க முடிந்தவருக்கு
இனிமேல் தனியாக பிழைப்பை
ஓட்டுவதென்பது சிரமமாக
இருக்காது என்று என்னையே
நான் சமாதானம் செய்துகொண்டேன்.
அப்பாவும்
என்னை உற்சாகத்துடன்தான்
கல்லூரிக்கு அனுப்பினார்.
அவருக்கும்
என் மீது அப்படியொரு எண்ணம்
இருந்திருக்கவேண்டும்.
பரிதாபம்
தொனிக்கும் என் முகத்தை
அவருக்கும் காட்டியபடி
விடைபெற்றபோது சிரித்தார்.
“என்கிட்டயேவா?”
குழப்பமும்
பயமுமாய் முதல்நாள் இரவு
தூங்காமல் கிடந்தேன் என்றாலும்
விடுதிச் சூழலில் ஒட்டிக்கொள்ள
நான் சிரமப்படவேயில்லை.
அறை
நண்பர்களும் கல்லூரி வகுப்புகளும்
மூளையை நிறைத்தபோது அப்பாவின்
நினைவுகள் பின்தங்கின.
தினசரி
இரண்டு வேளைகள் பேசியது
விட்டுப்போய் இராத்திரி
ஒருமுறை மட்டும் அதுவும் சில
நிமிடங்கள் என்று குறைந்தது.
அவர்
அருகில் இல்லாதது எனக்கு ஒரு
விஷயமாகவே இல்லை.
ஆனால்
இதனால் அவர் எத்தனை
உருக்குலைந்திருக்கிறார்
என்று முதன்முதலாய் கண்டபோது
திடுக்கிட்டேன் நான்.
கல்லூரியில்
சேர்ந்து ஒருமாதம் கழித்து
வார இறுதியில் அவரைப் பார்க்க
வந்தேன்.
பஸ்
நிறுத்தத்தில் எனக்காக
காத்திருப்பதாகச் சொன்னார்.
சொன்ன
நேரத்துக்கு ஒருமணி நேரம்
தாமதம் ஆயிருந்தது.
மறுபடி
மறுபடி அழைத்தபடியே இருந்தார்.
சற்றே
எரிச்சல்கூட.
பிதுங்கி
வழியும் கூட்டத்திலிருந்து
வெளியே இறங்கி தலைமுடியை
கோதியபடியே தேடினேன்.
பேருந்துக்காக
காத்திருந்த கூட்டத்தில்
அவரைக் காணாமல் அலைபேசியை
எடுத்த கணத்தில் அவரைப்
பார்த்தேன்.
நிறுத்தத்துக்கு
சற்றே தள்ளி வளைந்து திரும்பும்
நடைபாதையின் ஓரத்தில் விளக்குத்
தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.
அப்பாதான்
அது என்று நம்ப விரும்பாதவனாய்
நடுக்கத்துடன் நெருங்கினேன்.
தளர்ந்து
தொங்கிப்போன தலையுடன் அவரைப்
பார்த்ததும் உடனடியாய்
அங்கிருந்து விலகிப் போய்விட
வேண்டுமென்றே மனம் புரண்டது.
நிறமிழந்து
கசங்கிய பேண்டும் நைந்து
கிழிந்த காலர் விளிம்புடனான
டீ சர்ட்டுமாய் பரிதாப கோலத்தில்
அவரை நெருங்க இசையவில்லை.
பிச்சைக்காரனைப்
போலவும் போதை மீறிய குடிகாரனைப்
போலவுமாய் தன்வசம் மறந்து
தளர்ந்து சோர்வுடன் காத்திருந்தார்.
நிமிர்ந்து
என்னைப் பார்த்த கணத்தில்
சட்டென எழுந்தார்.
அவருக்கே
வெட்கமாயிருந்திருக்க
வேண்டும்.
இதெல்லாம்
ஒன்றுமில்லை என்பதுபோல மண்
அப்பிய உள்ளங்கையைத் தட்டியபடியே
“கண்ணு.
வந்துட்டியா?
ரொம்ப
நேரமா நின்னுட்டிருந்தனா.
அதான்
இப்பிடியே...”
என்றவர்
என் கையைப் பற்றினார்.
அந்த
ஒருகணத்தில் என்னை மறந்து
அழுதேன் நான்.
“என்னடா
இது?”
தோளைத்
தட்டினார்.
இருவரும்
நகர்ந்து நடந்தோம்.
உடல்
தளர்ந்து உற்சாகம் கழன்று
பல ஆண்டு இடைவெளிக்குப் பின்
அவரைப் பார்ப்பது போலிருந்தது.
என்னென்னவோ
கேட்டுக்கொண்டே வந்தார்.
பதில்
சொன்னேனா இல்லையா என்பதுகூட
எனக்கு நினைவில்லை.
என்னை
நானே சினந்தேன்.
என்
அற்பத்தனத்தை எண்ணி வெட்கப்பட்டேன்.
இப்படி
இவரை விட்டுவிட்டுப்
போயிருக்கக்கூடாதென்று
பதறினேன்.
வீட்டை
நெருங்குவதற்கு சற்று முன்பு
அப்போதுதான் நினைவுக்கு
வந்ததுபோலக் கேட்டார் “ஏதாச்சும்
சாப்டறாயாடா?”
வேண்டாமென்று
மறுத்துவிட்டு வீட்டுக்குள்
வந்து கணத்தில்தான் அவர்
கேட்டதின் பொருள் எனக்கு
உறைத்தது.
வீடு
இன்னும் இருட்டாக குப்பையாக
துக்கம்கூடிக் கிடந்தது.
மூச்சுத்
திணறலுடன் அழுக்கின் வாடைகூடிய
கட்டிலில் விழுந்து அழுதேன்.
தீயில்
வெந்துபோன அம்மாவின் சிரிப்பும்
அன்றைக்கெல்லாம் விரல்களில்
ஒட்டிக்கிடந்த பொரியுருண்டையின்
பிசுபிசுப்பும் பிச்சைக்காரன்போல்
தெருவில் காத்திருந்த அப்பாவின்
முகமும் பசிக்குப் பழகி
நொந்திருந்த அவர் உடலும்
உக்கிரமாய் பெருகி ஆவேசத்துடன்
என்னை அழுத்தி நோகடித்தன.
அருகில்
அமர்ந்து தோளைத் தட்டி என்
அழுகையை நிறுத்த முயன்ற அவர்
மடிமீது தாவிப் புரண்டபோது
அவரை விட்டுப் போகவே கூடாதென
முடிவு செய்தேன்.
இரண்டு
நாட்களும் வீட்டுக்குள்ளேயே
அடைந்து கிடந்தேன்.
எங்கும்
போகவில்லை.
அத்தையும்
சித்தியும் வீட்டுக்கு
வரச்சொல்லி அழைத்தார்கள்.
வேலையிருப்பதாகச்
சொல்லி மறுத்தேன்.
பேசுவதைத்
தவிர்த்தேன்.
எல்லோர்
மீதும் கோபம்.
எல்லாவற்றின்
மேலும் ஆத்திரம்.
சொந்தம்
பந்தம் பாசம் நேசம் எதற்கும்
அர்த்தமில்லை,
எல்லாம்
பாசாங்கென புழுங்கிக் கிடந்தேன்.
தட்டு
முழுக்க சாப்பாட்டைப் போட்டு
சாம்பாரைக் குழைத்து ஆசையுடன்
சாப்பிடும் அப்பா நான்கு
பிடி உண்டுவிட்டு “இப்பல்லாம்
முடியலடா...”
என்று
கை கழுவியபோது எல்லாவற்றையும்
நொறுக்கிப்போடும் மூர்க்கம்
கனன்றது.
எல்லோரையும்
பழிதீர்க்கவேண்டும் என்ற
அர்த்தமில்லாத வெறி.
நகங்களைக்
கொறித்து பற்களை நெரித்து
பெருமூச்சுவிட்டபடி இருண்ட
அறைக்குள்ளேயே கிடந்தேன்.
அப்பாவுக்கே
வியப்பு.
கொஞ்சம்
பயந்தார்.
உடம்பு
சரியில்லையா,
கல்லூரியில்
எதுவும் பிரச்சினையா என்று
பேச்சுக்கொடுத்தபோது அவர்
மேலும் சினத்தைக் கக்கினேன்.
ஞாயிற்றுக்கிழமை
விடிந்தபோது குளிக்காமல்கூட
பையைத் தூக்கிக்கொண்டு
புறப்பட்டேன்.
அப்பா
எதுவும் சொல்லவில்லை.
யாரிடமோ
காசு வாங்கும் முயற்சியில்
முதல்நாள் முழுக்க அலைந்திருந்தவர்
தோற்றுப்போய் நின்றார்.
பர்ஸை
எடுத்துப் பார்த்தேன்.
பஸ்
கட்டணத்துக்கான காசை மட்டும்
வைத்துக்கொண்டு மீதமிருந்த
சொற்பத் தொகையை அவர் கையில்
திணித்தேன்.
மறுத்தவரை
முறைத்துவிட்டு வெளியே
நடந்தேன்.
விடுதிக்குப்
போன பின்பும் அறையிலேயே
கிடந்தேன்.
எதிலும்
கவனம் குவியவில்லை.
என்ன
செய்யவேண்டுமென்று குழப்பம்.
ஆத்திரமும்
வெறியும் தணிந்தபோதும்
அப்பாவின் இந்த நிலைக்கு
எல்லோரும்தான் காரணம் என்று
பிடிவாதமாய் நம்பினேன்.
ஒவ்வொரு
வேளை உணவும் அப்பாவை நினைவுபடுத்தி
வதைத்தபோதும் அதையும் மீறி
உண்ணத் தூண்டிய பசியும் நாவின்
ருசியும் என்னை மேலும்
நோகடித்தன.
வார
இறுதிவரையிலும் காத்திருக்கப்
பொறுக்காமல் வெள்ளிக்கிழமை
இரவுப் பொழுதில் வீட்டை
அடைந்தபோது கதவு திறந்தே
கிடந்தது.
இருட்டைக்
கண்டதும் அரண்டு நின்றேன்.
உள்ளே
நுழைந்து விளக்கைப் போட்டபோது
கட்டிலுக்குக் கீழேயிருந்து
பூனை தாவி வெளியே ஓடியது.
அறையின்
மூலையில் முனகல் சத்தம்.
பழந்துணிபோல்
சுருண்டு கிடந்தார் அப்பா.
நியாயமாய்
பசி அவரது குடலைத்தான்
தின்றிருக்கவேண்டும்.
அப்படியல்லாது
சிறுநீரகம் ஏன் பாழ்பட்டதென்று
யாருக்கும் புரியவில்லை.
கார்த்திகேசன்
மாமாதான் டாக்டரிடம் அழைத்துப்
போனார்.
சிறுநீரகம்
இரண்டுமே செயல்கெட்டுப்
போனதை வெகுசாதாரணமாகச் சொன்ன
அந்த நிபுணர் வாரத்துக்கு
ஒருமுறையேனும் ரத்தச்
சுத்திகரிப்பு செய்யவேண்டியது
அவசியம் என்றார்.
அதற்கான
செலவுத் தொகையைக் கணக்கிட்ட
மாமா உடனடியாக அத்தையையும்
சித்தியையும் உடனடியாக
மருத்துவமனைக்கு வரவழைத்தார்.
கால்கள்
இரண்டும் மினுமினுக்கும்
தூண்கள்போல் நீட்டிக் கிடக்க
அப்பா மருந்து மயக்கத்தில்
கிடந்தார்.
கண்ணீர்
வற்றியவள்போல் அத்தை வெறித்துப்
பார்த்தாள்.
லட்சக்கணக்கான
பணத்துக்கு என்ன செய்ய முடியும்?
மாற்று
சிறுநீரகத்துக்கான ஏற்பாட்டைப்
பற்றி யோசிக்கவே முடியாது.
அதற்கான
அவகாசமும் இல்லை.
மருத்துவக்
கல்லூரி ஒன்றின் தகவல்
தொடர்பாளராக இருக்கும்
சித்தியின் மைத்துனனின்
சிபாரிசின் பேரில் தனியார்
அறக்கட்டளை நடத்தும் இந்த
மருத்துவமனையில் இலவச
சிகிச்சைக்கு ஏற்பாடு
செய்யப்பட்டது.
மாற்று
சிறுநீரகம் கிடைத்து அறுவை
சிகிச்சை செய்யும் வரையிலும்
ரத்தச் சுத்திகரிப்பை மேற்கொள்ள
வேண்டும் என்று சொல்லப்பட்டது.
வாரம்
இரண்டுமுறை அழைத்து வரவேண்டும்.
வீட்டிலிருந்து
ஒவ்வொரு தடவையும் பேருந்தில்
அவரை அழைத்துச் செல்வது பெரும்
போராட்டமாயிருந்தது.
சில
நாட்களுக்குப் பிறகு
மருத்துவமனையிலேயே தங்கிக்
கொள்ள அனுமதி கிடைத்தது
சிரமத்தைக் குறைத்தது.
கல்லூரியை
மறந்தேன்.
படிப்பைப்
பற்றிய சிந்தனையே விட்டுப்போயிருந்தது.
தோல்
கருத்து நரம்புகள் புடைத்த
கைகளுடனான அப்பாவின் கிடப்பைப்
பற்றியே தலைவலிக்கும் அளவுக்கு
யோசித்தேன்.
தீயில்
வெந்து செத்தாள் அம்மா.
இப்போது
நோயில் சாகிறார் அப்பா.
யாருமில்லாமல்
நான் இதையெல்லாம் அனுபவித்துக்
கிடக்கிறேன்.
யார்
செய்த பாவம்?
எனக்கு
மட்டும் ஏன் இப்படி?
அத்தையோ
சித்தியோ யாரும் வந்து பார்க்க
முடியாதபோது கண்டுகொள்ளவேயில்லை
என குற்றம் பார்த்தேன்.
தொலைபேசியில்
முயன்ற வேளைகளில் உதாசீனமாய்
பதில் சொன்னேன்.
சனிக்கிழமை
காலையில் பரிசோதித்த மருத்துவர்
என்னிடம் திரும்பத் திரும்ப
வேறு யாரையாவது பார்த்துப்
பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நான்
கார்த்திகேசு மாமாவின் எண்ணைத்
தந்தேன்.
அப்பாவால்
முடியவில்லை.
என்
கையைப் பிடித்தபடியே வறண்டு
வெடித்த உதடுகளை ஈரப்படுத்தியபடியே
பேசினார்.
“நீ
சரியில்லடா.
எனக்கு
ரொம்ப கவலையா இருக்கு.
நீ
இப்பிடி இருக்கறது தப்பு.”
நான்
பதில் சொல்லாது அவரையே
வெறித்திருந்தேன்.
“அவ்ளோதாண்டா
என் ஆயுசு.
அவங்கதாண்டா
எல்லாத்துக்கும்.
அனுசரிச்சு
நல்லபடியா இருந்து பொழச்சுக்கோ.”
அப்படி
அவர் சொன்னது எனக்குப்
பிடிக்கவில்லை.
“எல்லாம்
எனக்குத் தெரியும்ப்பா.”
அப்படிச்
சொல்லியிருக்க வேண்டாம்தான்.
ஆனாலும்
நான் சொன்னேன்.
அப்படிச்
சொன்னது அப்பாவை மிகவும்
தளரச் செய்திருந்தது.
கண்களை
மூடிக்கொள்ள கண்ணீர் மடமடவென
காதோரங்களில் வழிந்தது.
இதோ
இப்போது அப்பா பிணவறையில்
சடலமாய் கிடக்க நான் மட்டும்
காத்திருக்கிறேன்.
இனி
நான் என்ன செய்யவேண்டும்.
விடிகாலை
வரையிலும் காத்திருக்கவேண்டும்.
அவரை
எரித்து சாம்பலாக்கி எங்கேனும்
கரைத்துவிட்டால் அதன் பிறகு
நான் யார்?
மீண்டும்
கல்லூரிக்குச் செல்லவேண்டுமா?
படிப்புதானா?
இல்லையென்றால்
வேறென்ன?
என்னை
அப்படி இருக்கவிடுவார்களா?
படிப்பு
என்றால்தான் அனுமதிப்பார்கள்.
இனியும்
இரண்டு வருடங்கள் அங்கேயே
ஓட்டிவிடலாம்.
அதற்குள்ளாக
என்னுடைய படிப்பின் யோக்கியதை
இவர்களுக்குத் தெரிந்துவிட்டால்
என்னாகும்?
என்னை
கண்டுகொள்ளாது தெருவில்
விட்டுவிடுவார்களா?
அம்மா
இறந்த பின்பு தாத்தா வீட்டிலிருந்து
யாரும் என்னை வந்துப்
பார்க்கவுமில்லை.
இப்போது
அப்பாவின் சாவுக்காக எட்டிப்
பார்ப்பார்களா?
யார்
வீட்டு சொத்திலேனும் எனக்கு
பங்கிருக்கிறதா?
இதைப்
பற்றியெல்லாம எதையாவது
சொல்லிவிட்டு செத்திருக்கலாம்
இந்த அப்பா.
எங்கெல்லாம்
எத்தனை கடன் பாக்கி இருக்கிறது?
அதெல்லாம்
என் தலையில் வந்து விழுமா
என்ன?
எழுந்து
வெளியே வந்தேன்.
மேசையின்
மீது தலைகவிழ்த்து தூங்கியிருந்த
நர்ஸின் தலைமுடி கலைந்திருந்தது.
ஓசைப்படாமல்
வாசலுக்கு வந்தேன்.
விடிகாலையின்
சாம்பல் வெளிச்சம்.
மெல்லிய
பனி தார்ச்சாலையை நனைத்திருந்தது.
கூண்டுக்குள்
தலைக்குல்லாவுடன் அமர்ந்திருந்த
கூர்க்கா எட்டிப் பார்த்தார்.
என்னை
அவருக்குத் தெரியும்.
கை
உயர்த்தி வணக்கம் சொன்னார்.
அப்பாவைப்
பற்றி அவருக்குத் தெரிந்திருக்காது
என்ற நினைத்தவன் வெறுமனே
நடந்தேன்.
சிவப்பு
நிற கார் முகப்பு வெளிச்சத்துடன்
திரும்பியதைக் கண்டதும்
நின்றேன்.
மாமாவின்
கார்தான்.
ஒருகணம்
நான் என் முகத்தை எப்படி
வைத்துக்கொள்ள வேண்டும்
என்று தீர்மானிக்க முடியாமல்
தடுமாறினேன்.
அத்தைதான்
முதலில் இறங்கி என்னருகே ஓடி
வந்தாள்.
அழுகை
முட்டிக் கொண்டு நின்றது.
உதடுகள்
நடுங்க என் தோளைப் பற்றிக்கொண்டு
அழுதாள்.
லட்சுமி
சித்தியின் அழுகை சத்தம்
கேட்டு கூர்க்கா எட்டிப்
பார்த்தார்.
கார்த்திகேசு
மாமா காரை நிறுத்திவிட்டு
வேகமாக அருகில் வர எல்லோருமாய்
உள்ளே நடந்தோம்.
கண்ணீரை
வரவழைத்தபடி அத்தையுடன்
நடந்தபோது எல்லாமே நாடகம்
போலுணர்ந்தேன்.
அறைக்குள்
வந்தபோது லட்சுமி சித்தி
என்னைக் கட்டிக்கொண்டாள்.
குமுறி
அழுதாள்.
நானும்
அழுதேன்.
என்னுடைய
அழுகை எனக்கே வியப்பாக இருந்தது.
அப்பாவின்
கால்கள் நினைவில் அசைந்தன.
வெடித்த
உதடுகளில் குமிழியிட்ட ரத்தத்
துளிகளை எண்ணிக் கொண்டேன்.
அவரது
உடலில் கிளர்ந்த வேம்பின்
வாடையை யோசித்தேன்.
தொடர்ந்து
என்னால் அழ முடிந்தது.
“காலையிலே
பத்து மணியாயிடுங்கறாங்க.
இப்ப
மணி நாலுதான் ஆச்சு.
எட்டு
மணிக்கு எல்லாத்தையும் ஏற்பாடு
பண்ணிட்டு வந்தா இங்கிருந்தே
கொண்டு போயிர்லாம்.”
கார்த்திகேசு
மாமா என் தோளை அணைத்து
அழுத்தினார்.
லட்சுமி
சித்தியின் வீட்டுக்குப்
போவது என்று தீர்மானித்தவுடன்
என்னை காரில் அழைத்துச்
சென்றார்கள்.
அத்தைக்கும்
சித்திக்கும் நடுவில் நான்
இருக்க பனிப்படலத்தை காரின்
மஞ்சள் வெளிச்சம் பிளந்துகொண்டு
போவதை வெறித்துக் கொண்டிருந்தேன்.
.
லட்சுமி
சித்தியின் வீட்டு வாசலில்
நின்றவுடன் மெல்ல கேட்டேன்
“உள்ள வர்லாமா சித்தி?”
என்
முகத்தைக் கூர்ந்து பார்த்த
சித்தி மீண்டும் அழுதாள்.
கார்த்திகேசு
மாமா என்னை உள்ளே அழைத்துக்
கொண்டு போனார்.
சந்திரா
அத்தை போனில் யாரிடமோ தகவல்
சொல்லிக் கொண்டிருக்க நான்
சுவரில் சரிந்து தரையில்
அமர்ந்தேன்.
கால்கள்
வலித்தன.
உடல்
களைத்திருந்தது.
போனை
அணைத்துவிட்டு அத்தை உள்ளே
வந்ததும் அவள் முகத்தைப்
பார்த்தபடி மெல்லக் கேட்டேன்.
“ரொம்பப்
பசிக்குது அத்தை.
சாப்பிட
ஏதாச்சும் இருக்குமா?”
அத்தை
மறுபடியும் கதறி அழத் தொடங்கினாள்.
0
இடைவெளி . ஜனவரி 2017 இதழ்
No comments:
Post a Comment