என்நோற்றான் கொல்
0
''உன்னை
உள்ளயே விடக்கூடாதுன்னு
சொல்லிருக்கேன்,
நீ
எப்படி உள்ள வந்தே?''
டாக்டர்
குழந்தைவேலு அழைப்பு மணியை
ஆத்திரத்துடன் அழுத்தினார்.
சிரித்தபடியே
பவ்யமாய் நின்றுகொண்டிருந்த
ராஜன் ''சாரி
சார்.
நான்
வந்து ரொம்ப நாளாச்சு சார்.
கோபப்படாதீங்க.
ஒரே
நிமிஷம்.
சரியா
அறுவது செகண்ட்தான் சார்.''
கெஞ்சினான்.
டாக்டர்
அவன் முகத்தைப் பார்க்காமலே
மறுபடியும் மணியை அழுத்தினார்.
''இந்த
மணியை அழுத்தற நேரத்துல
என்னையப் பார்த்தரலாம்
டாக்டர்,
ப்ளீஸ்''
டோக்கன்
போடும் பணிப்பெண் துப்பட்டாவை
சரிப்படுத்தியபடியே பதற்றத்துடன்
உள்ளே வந்தாள்.
''இந்த
மணி நா அமுக்கி அமுக்கி
வெளையாடறதுக்கு வெச்சுக்கல.
உன்னைய
உள்ள வரச்சொல்லிக் கூப்படத்தான்
தெரியுமில்ல.
இந்தாளத்தான்
உள்ள விடக்கூடாதுன்னு
சொல்லிருக்கேனில்ல.
எப்பிடி
உள்ள வந்தான்?''
அவள்
ராஜனை முறைத்தபடியே ''எனக்குத்
தெரியாது சார்.
நீங்க
வரச்சொன்னதா சொன்னாரு.''
''நீ
வேலைக்குப் புதுசுல்ல.
இப்ப
சொல்றேன் பாரு.
நானா
இவன வரச்சொன்னேன்னு சொன்னாலும்
இந்த ஆள மட்டும் நீ உள்ள
விடக்கூடாது.
மூஞ்சிய
நல்லா பாத்து வெச்சுக்க.
செரியா?''
அவள்
வெளியே போகும்போது கண்களாலேயே
திட்டிக்கொண்டு சென்றாள்.
ராஜன்
எதற்கும் அசையாத பாவத்துடன்
சிரித்தபடியே நின்றான்.
அடர்த்தியான
தலைமுடி.
முகத்திற்கு
வசீகரம் சேர்க்கும் தாடி.
தன்மையான
குரலும் பாவமும்.
எல்லாவற்றையும்விட
அவன் கண்கள்.
முகம்
பார்த்து பேசும் யாரும்
அவனிடம் கடிந்துகொள்ள முடியாதபடி
கனிவை சுரக்கும் கண்கள்.
டாக்டர்
கண்ணாடியைக் கழற்றி மேசையில்
வைத்துவிட்டு முகத்தைத்
துடைத்தார்.
''இதப்
பாருங்க ராஜன்,
உங்கள
நாலு வருஷமா எனக்குத் தெரியும்.
ஒவ்வொரு
மாசமும் தவறாம வர்றீங்க.
குட்.
ஆனா
ஒங்க கம்பெனில தயாரிக்கறது
ரெண்டே ரெண்டு மருந்து.
அதுலயும்
உங்க கம்பெனி காஃப்
சிரப்பைப் பத்தி என்னவிட
ஒங்களுக்கே நல்லாத் தெரியும்.
அப்பறமும்
ஏன் திரும்பத் திரும்ப வந்து
உங்க டைமையும் என்னோட டைமையும்
வேஸ்ட் பண்ணணும்.
நீங்களும்
உருப்படியா வேற எதாச்சும்
பண்ணலாம்.
நானும்
எதாவது செய்ய முடியும்.''
அவருடைய
நிதானமும் கெஞ்சலும் ராஜனுக்கு
சிரிப்பை வரவழைத்தது.
ஆனாலும்
பவ்யம் குறையாது கையிலிருந்து
சேம்பிள் குப்பிகளை மேசையில்
வைத்தான்.
''டாக்டர்,
ரொம்ப
தேங்க்ஸ் டாக்டர்.
இத
நீங்க வெச்சுட்டாலும் சரி,
இல்லை
இதோ இந்தக் குப்பைத் தொட்டியில
போட்டாலும் சரி.
அது
ஒங்க இஷ்டம்.
என்னோட
வேலை டாக்டர்களை பாத்து
மருந்துகளைப் பத்தி சொல்றதுதான்.
உங்களுக்கு
அது இடைஞ்சலா இருந்தாலும்கூட,
எங்களை
மாதிரி ரெப்புகளை ஆதரிக்கறதும்
உங்க கடமையோட ஒரு பகுதிதான்
டாக்டர்...
மொறைக்காதிங்க.
இதோ
கெளம்பிட்டேன்.''
அவசரமாய்
நகர்ந்தவன் ''அப்பறம்
இன்னொரு விஷயம்..
எனக்கொரு
அட்வைஸ் சொன்னீங்களே.
அதையும்கூட
அந்த குப்பைத்தொட்டியிலயே
போட்றலாம் டாக்டர்.
ஏன்னா
அது எனக்குத் தேவைப்படாது
டாக்டர்.
தேங்க்யூ
டாக்டர்.
அடுத்த
மாசமும் வருவேன்.
பாக்கலாம்.''
வெளியே
ஓடினான்.
குழந்தைவேலு
சிரிப்பை அடக்கமாட்டாமல்
நாற்காலியில் சாய்ந்துகொண்டார்.
கதவைத்
தள்ளிக் கொண்டு வெளியே ஓடி
வந்தவனை டோக்கன் பெண் முறைத்தாள்.
''ரொம்ப
டென்ஷனெல்லாம் வேண்டாம்,
கண்மணி,
அடுத்த
மாசம் வரும்போதும் நான் டாக்டர
கட்டாயம் பாத்துட்டுத்தான்
போவேன்.
ஓகே.''
அவசரமாய்
ஷுக்களில் கால்களை நுழைத்துக்
கொண்டிருந்தபோது செல்போன்
ஒலித்தது.
‘அப்பா’
என ஒளிரும் திரையை உற்றுப்
பார்த்தவனின் முகம் சட்டென
உற்சாகமிழந்தது.
ஆத்திரத்துடன்
அழைப்பைத் துண்டித்தான்.
வெளியே
வந்தான்.
இருட்டிக்
கிடந்தது.
மணி
ஒன்பதரை.
சென்னிமலைச்
சாலையின் திருப்பத்திலிருந்த
அந்த வணிக வளாகம் நெடுஞ்சாலை
வாகனங்களின் முகப்பொளியில்
ஒளிர்ந்து நின்றது.
கழுத்துப்
பட்டையை அவிழ்த்து பையில்
திணித்தான்.
பெட்ரோல்
பங்க் அருகில் வண்டிக்கடையில்
வழக்கம்போல கூட்டம் சூழ்ந்து
நின்றது.
பசியில்லை.
பேருந்து
நிலையத்தை நோக்கி மெல்ல
நடந்தான்.
கால்களை
இறுக்கிய ஷுக்களை கழற்றி
எறியவேண்டும்போல எரிச்சலாக
இருந்தது.
வெள்ளரிக்காய்களை
நறுக்கி தட்டில் அடுக்கிக்கொண்டு,
வந்து
நிற்கும் பேருந்துகளை நோக்கி
ஓட்டமெடுக்கும் சிறுவர்,
சிறுமிகளை,
பெண்களை
பார்க்கும்போது பொறாமையாக
இருந்தது.
எந்த
நேரத்திலும் இவர்கள் படு
பிஸியாகத்தான் இருக்கிறார்கள்.
முனியப்பன்
கோவிலின் பீடத்தில்,
மூன்று
முனிகளும் முறுக்கு மீசையுடன்,
உருட்டு
விழிகளுடன் உக்கிரத்துடன்
வீற்றிருந்தார்கள்.
பரவாயில்லை,
இந்த
முனிகளுக்குக்கூட 24X7
காவல்
ஜோலி கசப்பில்லாது,
அலுப்பில்லாது
வாய்த்திருக்கிறது.
மெதுவே
வெளியே வந்த 12ம்
எண் பேருந்தில் தாவி ஏறினான்.
பெருந்துறையிலிருந்து
ஈரோட்டுக்கு 18
கிலோமீட்டர்.
கோவையிலிருந்து,
திருப்பூரிலிருந்து
வரும் எந்த பேருந்தில் ஏறினாலும்
முக்கால் மணிநேரத்தில் ஈரோட்டை
அடைந்துவிடலாம்.
ஆனாலும்
இரவுப் பயணங்களில் ராஜன்
தேர்ந்தெடுப்பது நகரப்பேருந்துகளைத்தான்.
அநேகமாய்
கடைசி டிரிப்பாக இருக்கும்.
ஒவ்வொரு
நிறுத்தத்திலும் நின்று
நிதானமாய் ஆட்களை ஏற்றி
இறக்கிக் கொண்டு அவசரம்
காட்டாது போகும் அதன் நிதானமே
ராஜனுக்கு பிடிக்கும்.
இன்றைக்கும்
கூட்டமில்லை.
இடது
பக்கமாய் ஜன்னலோர இருக்கையை
தேர்ந்து உட்கார்ந்தான்.
''அஞ்சு
ரூவாய்க்கு மூணு,
அஞ்சு
ரூவாய்க்கு மூணு''
ஜன்னலுக்கு
வெளியே தட்டில் பிஞ்சு
விதைகளுடன் வெள்ளரிக் கீற்றுகள்
மின்னின.
பையைத்
திறந்து மாத்திரை அட்டைகளை
எடுத்தான்.
அட்டைக்கு
பத்து மாத்திரைகள்.
பிளாஸ்டிக்
குமிழிக்குள்ளாக இளமஞ்சள்
மாத்திரைகள்.
பெண்களுக்கு
முன்கூட்டியே மாதவிலக்காக்கும்
சமாச்சாரம்.
சென்ற
வாரம் துடுப்பதியில் சரவணா
மெடிக்கல்ஸில் மகேஷ் கேட்டது
நினைவுக்கு வந்தது.
''என்ன
சார் இது.
இந்த
மாத்திரைய யாராச்சும் மாசா
மாசம் வாங்குவாங்களா?
வருஷத்துக்கு
ஒரு தரம் நீங்க வந்தா போதும்.
அதுக்குள்ள
நீங்க குடுத்த ஸ்டாக் வித்து
தீந்துட்டா,
மறுபடி
வேற வாங்கி வெக்கலாம்.
இந்த
ஐட்டத்த தவிர ஒரு காப் சிரப்
போடறீங்க சரி.
அந்த
மருந்தை ஒரு டாக்டர்கூட எழுத
மாட்டேங்கறாங்க.
தப்பி
தவறி யாராச்சும் எழுதி,
யார்
தலையிலயாச்சும் கட்டினா,
மறுநாள்
காலையிலேயே கம்ப்ளைண்ட்.
இதையெல்லாம்
விட்டுட்டு உங்க கம்பெனில
புதுசா காண்டம் எதாச்சும்
தயாரிக்க சொல்லுங்க.
சேல்ஸ்
பிச்சுட்டு போகும்.
அப்பறம்
நீங்க எங்களை தேடி வரவேண்டாம்.
ராஜன்
வர்லியா,
ராஜன்
வர்லியான்னு நாங்களே கேப்போம்.''
மாத்திரையின்
பிளாஸ்டிக் குமிழின் மீது
விரலை வைத்து அழுத்தினான்.
சில்வர்
பேப்பரை கிழித்துக் கொண்டு
வெளியில் உதிர்ந்தது.
ஜன்னலோரமாய்
இடது கையை இருத்திக்கொண்டு
இருட்டில் ஒவ்வொரு மாத்திரையாய்
உதிர்க்கலானான்.
ஈரோடு
போவதற்குள் பத்து அட்டைகளாவது
தீர்ந்துவிடும்.
பேருந்து
பெருந்துறை சந்தை நிறுத்தத்தைத்
தாண்டி இருட்டில் வெளிச்சம்
பாய்ச்சியபடி நகர்ந்தது.
அபிராமி
தியேட்டர் வாசலில் பேருந்து
நிதானித்தபோது இறங்கிக்
கொண்டான்.
இரண்டாவது
ஆட்டம் தொடங்கியிருந்தது.
முதலியார்
மெஸ்ஸில் எண்ணெயில் பொரித்த
புரோட்டாக்கள் தட்டில்
குவிந்திருந்தன.
கொத்துப்
புரோட்டாவின் டண்டணக்கு
ஓசையுடன் ரவி மாஸ்டர்,
தலையில்
இறுக்கிக் கட்டிய ஈரிழைத்துண்டு
உருமாலையுடன் அவனைப் பார்த்துச்
சிரித்தார்.
ராயல்
தியேட்டருக்கு எதிரில்
விரியும் மண்பாதையில் நடந்து
முதலாவது இடது திருப்பத்தில்
திரும்பி மறுபடியும் வலதுகைப்
பக்கமாய் நடந்தால் இரண்டாவது
பெரிய கட்டிடம்தான் பேரின்பவிலாஸ்.
மருந்துக்கம்பெனி
விற்பனை பிரதிநிதிகள்,
நிதி
நிறுவன சிப்பந்திகள்,
ஜவுளிக்கடை
மேற்பார்வையாளர்கள்,
வங்கி
ஊழியர்கள் என்று பலதரப்பட்ட
பேச்சிலர்களையும் வரவேற்று
அடைக்கலம் தருவது பேரின்ப
விலாஸ்தான்.
தெரு
முனையிலிருந்த அய்யனார்
பெட்டிக்கடையிலும்,
அதையடுத்த
டாஸ்மாக்கிலும் அசட்டு
வெளிச்சம்.
நிதானமாக
நடந்தான்.
உடம்பெங்கும்
கசகசத்தது.
குளித்தால்தான்
சாப்பிட முடியும்.
லோட்டஸ்
கண்மருத்துவமனையருகே சண்முகமும்
மணியும் அவனை நிறுத்தினார்கள்.
''என்ன
ரெப்பு?
ரொம்ப
லேட்டாயிருச்சு?
இவ்ளோ
நேரமா உக்காந்துருந்தோம்.
போன்
போட்டா எப்பவும் போலத்தான்.
தொடர்பு
எல்லைக்கு வெளியில இருந்தே.
சாப்டாச்சா,
இல்ல
கூட வரியா?''
இருவரும்
நாளிதழ் ஒன்றின் உதவி ஆசிரியர்கள்.
பத்து
மணிக்கு மேலாக அன்றைய செய்திகளை
அனுப்பி முடித்தானதும்தான்
வெளியில் வருவார்கள்.
விடிகிற
வரையில் நகர்வலம்.
பிறகு
இரண்டு மணிநேரத் தூக்கம்.
இன்றைய
இரவு உலாவுக்கு தயாராகிவிட்ட
தோரணை தெரிந்தது.
''நீங்க
போங்க பிரஸ்ஸு.
இந்த
உடுப்பையெல்லாம் கழட்டி
எறிஞ்சுட்டு ஒரு குளியலப்
போட்டுட்ட வரேன்.''
“அப்பறம்
ஒரு விஷயம் ரெப்பு.
உங்கப்பா
லேண்ட் லைன்ல கூப்பிட்டார்.
வந்தா
பேசச் சொன்னார்.”
சொன்னதை
காதில் வாங்கிக்கொள்ளாது
ராஜன் அவசரமாய் நகர்ந்தான்.
பேரின்பவிலாஸின்
கிரில் கதவு ஒரு ஆள் நுழையுமளவு
திறந்திருந்தது.
பெரிய
லத்தியுடன் வாசலில் உட்கார்ந்து
காவல் செய்யும் 'மேன்சன்முனி'யை
காணவில்லை.
படிகளைக்
கடந்து நடந்தான்.
அறைக்கதவு
தாழிடப்பட்டிருக்கவில்லை.
தள்ளினான்.
மைக்ரோலேபில்
வேலை செய்யும் மாணிக்கவேல்
சுவரையொட்டி படுத்திருந்தான்.
இரண்டு
கைகளையும் கால்களுக்கு நடுவில்
செருகிக் கிடந்தவன் ஆழ்ந்த
தூக்கத்திலிருந்தான்.
தலையணையை
மடியில் வைத்தபடி வெகு
மும்முரமாக ஆனந்தவிகடனை
வாசித்துக் கொண்டிருந்த
முத்தண்ணன் தலை நிமிர்த்தவேயில்லை.
ராஜன்
பையை மூலையில் போட்டுவிட்டு
முத்தண்ணன் கையிலிருந்த
விகடனைப் பிடுங்கினான்.
நிதானமாக
நடுவில் இருந்த முப்பத்திஐந்து
பக்க சாணித்தாள் புத்தகத்தை
நுனிவிரல்களால் எடுத்து
முத்தண்ணனின் மடியில் போட்டான்.
''இப்ப
படிங்கண்ணே.
யாரும்
எதும் சொல்லமாட்டாங்க.
வீணா
இன்னொரு பத்திரிக்கை பேரை
பெருசு பண்ணாதீங்க.''
முத்தண்ணன்
தடைபட்ட வாக்கியத்தை தேடும்
மும்முரத்தில் இருந்தார்.
சாயங்காலமாய்
மூலப்பட்டறை பெட்ரோல் பங்க்
அருகிலிருக்கும் வேப்பமரத்து
பெட்டிக்கடையில் அந்தப்
புத்தகத்தை வாங்கி பனியனுக்குள்
சொருகிக் கொண்டு வந்திருப்பார்.
ஜவுளிக்கடை
குடோனில் சரக்குகளை பிரித்து
சரிபார்த்து ஒவ்வொரு ஐட்டத்திலும்
ஸ்டிக்கர் ஒட்டி அடுக்குவதுதான்
அவருடைய வேலை.
சரியாக
இரவு ஏழு மணிக்கெல்லாம்
வேட்டியை உதறி மடித்துக்
கட்டிக்கொண்டு இறங்கிவிடுவார்.
ஒல்லியான
உடல்வாகு என்பதால் அவருடைய
நடை வழக்கத்துக்கு மாறான
அவசரத்துடன் இருக்கும்.
தொங்கட்டான்
கிழவி கடையில் மூன்று இட்லி
ஒரே ஒரு ஆப்பத்தை சாப்பிட்டானதும்,
ஒரு
மசாலா டீ.
வேப்பமரத்துக்கடையில்
ஒரு வில்ஸ் சிகரெட்டை வாங்கி
நிதானமாக ஒவ்வொரு இழுப்பிலும்
புகையை நுரையீரலுக்குள்
நிரப்பி அதன் கார மிதப்பை
அனுபவித்தபடியே கிளிப்பில்
செருகிக் கிடக்கும் புத்தகங்களை
பார்வையிடுவார்.
சிகரெட்டை
முடித்து தரையில் போட்டு
காலால் நசுக்கியானதும்,
உள்ளேயிருந்து
அஜந்தா பாக்குப் பொட்டலத்துடன்
புத்தகம் ஒன்றும் கடலைமிட்டாய்
ஜாடியின் மீது வந்து உட்காரும்.
''புதுசுதானே?''
என்றபடியே
புத்தகத்தை எடுத்து பனியனுக்குள்
செருகிக் கொண்டு நடக்கத்
தொடங்கிவிடுவார்.
அங்கிருந்து
பேரின்பவிலாஸிற்கு வந்து
சேர இருபது நிமிடங்கள்
பிடிக்கும்.
அறைக்குள்
நுழைந்ததும் புத்தகத்தை
எடுத்து காரியமாய் விகடனுக்குள்
சொருகி வைப்பார்.
உடுப்பை
மாற்றிக் கொண்டு தலையணையை
மடியில் போட்டு உட்கார்ந்தால்
எழுத்தெண்ணிப் படித்துவிட்டுத்தான்
மறுவேலை பார்ப்பார்.
படித்து
முடித்த கையோடு ''எழவு
என்னத்த எழுதறானுங்க தாயளிங்க.
எல்லாத்துலயும்
ஒரே மாதிரி.
புதுசா
யோசிக்கவே மாட்டேங்கறாங்க''
என்று
சலித்தபடியே அந்தப் புத்தகத்தை
அறை மூலைக்கு கடாசி எறிவார்.
ஆனாலும்
மறுநாள் சாயங்காலம் அவருடைய
பனியனுக்குள் இன்னொரு புத்தகம்
இல்லாமல் போகாது.
இடுப்பில்
துண்டைக் கட்டிக்கொண்டு
வெளியில் வந்தான் ராஜன்.
வடக்கு
எல்லையில் வரிசையாக நான்கு
குளியலறைகள்.
காலை
நேரத்தில்தான் எல்லாவற்றுக்கும்
அவசரம்.
இப்போது
நிதானமாய் குளிக்க முடியும்.
குளியலறை
ஈரமில்லாமல் உப்புசமாய்
இருந்தது.
வாளியில்
தண்ணீர் நிறைகிற வரையில்
கண்களை மூடிக் கொண்டு நின்றான்.
கண்களுக்குள்
முள்ளாக காந்தியது.
தண்ணீரை
அள்ளி தலையில் நிதானமாக
ஊற்றினான்.
உச்சியும்
உடலும் குளிரும் மட்டும்
அள்ளி அள்ளி ஊற்றிக் கொண்டே
நின்றான்.
உடல்
சூடு மொத்தமும் நீரில் கரைந்து
வழிவது போலொரு இதம்.
உற்சாகமாக
இருந்தது.
தண்ணீரை
மொண்டு மொண்டு ஊற்றிக் கொண்டே
இருந்தான்.
நீர்மையான
இருள் என காவிரி மெதுவே ஊர்ந்து
நகர்ந்தது.
அகன்ற
நதிப்பரப்பில் பாறைகளும்
முட்புதர்களும் அச்சுறுத்தின.
தொலைவில்
காகித ஆலையின் சிம்னிகளும்
மஞ்சள் விளக்குகளும் ஒளிர்ந்து
நின்றன.
தென்
கரை மயானத்தில் பிரகாசமான
நெருப்பு.
அகாலத்தில்
எரியும் பிணமா?
ராஜன்
நெருப்பின் திசையை கூர்ந்து
பார்த்திருந்தான்.
முற்றிய
மஞ்சள் காமாலையுடன் அம்மா
படுக்கையில் கிடக்கிறாள்.
அவள்
விரல் படும் இடமெல்லாம் மஞ்சள்
ஈசிக் கொள்கிறது.
உதடுகள்
வெளுத்து கன்னக் கதுப்புகளும்
நெற்றியும் காது மடல்களும்
மஞ்சள் பூசி குளித்தது போல
மினுமினுக்கிறது.
உயரமான
ஜன்னலின் கருப்புக் கம்பிகளை
வருடியவாறு நிற்கும் அவனை
கையசைத்து அருகில் அழைக்கிறாள்.
கட்டிலின்
அருகில் சென்று மண்டியிட்டு
அமர்ந்தவனின் தலையை தளர்ந்த
அவள் கை வருடுகிறது.
கண்களில்
ஏனோ கண்ணீர் முட்டுகிறது.
பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வு
நடந்துகொண்டிருந்தது.
மறுநாள்
கணிதம்.
அம்மா
படுக்கையில் விழுந்த பிறகு
அவனுக்கு சொல்லித் தர யாருமில்லை.
கணிதம்
என்றால் அம்மாவுக்கு கொள்ளை
பிரியம்.
''செண்டம்
வாங்கணும்''
உதடுகள்
முணுமுணுத்தன.
அவள்
உயிர்ச்சத்தையெல்லாம்
உறிஞ்சிக் கொண்ட மஞ்சள்
வார்த்தைகள் அவனுக்குள்
பெரும் வலியைத் தந்தன.
கண்களைத்
துடைத்தபடியே வெளியே வந்தான்.
விடிய
விடிய கணக்குகளை திரும்பத்
திரும்ப போட்டுப் பார்த்தபடியே
தூங்கிப்போனான்.
கேள்வித்தாளைப்
பார்த்ததுமே அவனுக்கு செண்டம்
வாங்கிவிடும் நம்பிக்கை
வந்துவிட்டது.
அம்மாவிடம்
கேள்வித்தாளைக் காட்டி ''நல்லா
எழுதிருக்கேன் அம்மா''
என்று
சொல்லவேண்டும் என்று நினைத்துக்
கொண்டே எழுதத் தொடங்கினான்.
இன்னும்
இரண்டு கணக்குகள்தான் பாக்கி.
தலைமை
ஆசிரியர் எழுதியது போதும்
என்று அவன் தலையை ஆறுதலாய்
தடவிக் கொடுத்து அனுப்பினார்.
அவனை
அழைத்துப்போக சைக்கிள்கடை
மணி வந்திருந்தான்.
நெற்றியில்
பெரிய குங்குமப் பொட்டு.
மேலே
கனத்த ரோஜா மாலை.
அம்மாவுக்கு
ரொம்பப் பிடித்த வாடாமல்லி
கலர் சவுக்கிளி சேலை.
முகம்
இப்போதும் மஞ்சள் பூசிக்
குளித்ததுபோல பளபளத்தது.
நடுக்கூடத்தில்
கிடத்தியிருந்தார்கள்.
தலைமாட்டில்
குத்துவிளக்கின் ஒற்றைச்
சுடர் மினுங்கலாய் அசைந்திருந்தது.
வெறுமனே
பார்த்துக் கொண்டே நின்றான்.
அவனை
கட்டிப் பிடித்து வேர்வை
பிசுபிசுப்புடன் யார் யாரோ
என்னவெல்லாமோ சொல்லி அழுதார்கள்.
அவனுக்கு
அழுகையே வரவில்லை.
பரீட்சையில்
போடாமல் விட்டுவிட்டு வந்த
அந்த இரண்டு கணக்கையும்
முடித்திருந்தால் அம்மா
சொன்னபடி செண்டம் வாங்கியிருக்கலாம்.
அதை
மட்டும் அவளிடத்தில்,
தளர்ந்த
அவள் உள்ளங்கையைப் பற்றியபடி,
சொல்ல
வேண்டும் போலிருந்தது.
பிளஸ்
டூவுக்காக திண்டுக்கல்லில்
ஹாஸ்டலில் சேர்த்தக் கையோடு
திருமங்கலத்திலிருந்து அப்பா
அன்னம்மாவை வீட்டுக்கு அழைத்து
வந்துவிட்டார்.
சித்திரை
திருவிழாவின்போது அன்னம்மாவை
அலுவலகத்தில் உடன் வேலைசெய்பவள்
என்று வீட்டுக்கு அழைத்து
வந்தபோதே அம்மா கண்டுகொண்டாள்.
அப்பாவின்
மீதான நம்பிக்கை தப்பிப்போன
வருத்தம் அவளை நோய்மையில்
கிடத்தியது.
அதன்பின்
அவள் மீளவில்லை என்பதை ராஜன்
அறிவான்.
அன்னம்மாவின்
முகம் பார்க்கப் பிடிக்காமல்
பிளஸ் டூ-வின்போது
விடுதியில் சேர்ந்தான்.
அம்மா
ஆசைப்பட்டபடி கணிதத்தில்
நூற்றுக்கு நூறு.
அதோடு
அக்கவுண்டன்சியிலும்.
மதிப்பெண்
பட்டியலை கையில் வாங்கிய
நொடியில் அழுகை பொங்கியது.
வீட்டுக்கு
போகப் பிடிக்கவில்லை.
முன்பே
தீர்மானித்தபடி இரண்டு
மாதங்கள் கோரிப்பாளையத்தில்
இருந்த டுடோரியல் காலேஜில்
பாடம் சொல்லிக் கொடுத்தான்.
இரவுகளில்
அங்கேயே தங்கினான்.
அமெரிக்கன்
கல்லூரியில் பி.பி.ஏவில்
சுலபமாக இடம் கிடைத்தது.
டுடோரியல்
காலேஜில் இரண்டு வேளைகளிலும்
வகுப்புகள்.
கல்லூரிக்கு
போக விரும்பாத மதியப் பொழுதுகளில்
திருமலை நாயக்கர் மகாலின்
ஆளற்ற மேல் விதானத்தில்
படுத்துக் கிடந்தான்.
ஒரே
பாடத்தை மீண்டும் மீண்டும்
ஓதியதில் அலுப்பு.
ஒன்றிரண்டு
மாதங்கள் சும்மா இருந்து
அதுவும் அலுத்து காசுக்கு
தட்டுப்பாடு வந்தபோது
மதனகோபாலின் மருந்துக்
கம்பெனியில் இன்ன வேலை என்று
தெரியாமலேயே கேட்ட கேள்விகெல்லாம்
தலையாட்டிவிட்டு சேர்ந்துகொண்டான்.
மதனகோபாலுக்கு
ராஜனின் முகவசீகரத்தில்
நம்பிக்கை வந்திருக்கவேண்டும்.
அல்லது
அவர் தர உத்தேசித்திருந்த
சொற்ப ஊதியத்திற்கு வேறு
ஆட்கள் கிடைக்காதிருந்திக்க
வேண்டும்.
ஈரோட்டில்
வந்து இறங்கியதும் இதுபோன்ற
ஒரு அதிகாலை இருளில்தான்.
ஒருமாத
காலத்துக்குள்ளாக ராஜன்
பேரின்பவிலாஸில் தவிர்க்க
முடியாத நபராகவும்,
ஈரோடு
பகுதியின் மருத்துவர்களிடமும்
மருந்துக் கடைகளிலும் தவிர்க்க
வேண்டிய நபராகவும் ஆகிவிட்டான்.
டுடோரியல்
காலேஜுக்கு ஒன்றிரண்டு முறை
சந்திக்க வந்த அப்பாவிடம்
அவன் முகம்கொடுத்துப் பேசவில்லை.
அதோடு
அவரும் வருவதை நிறுத்தினார்.
ஈரோடு
வந்த பிறகு அப்படியொரு சொந்தம்
இருப்பதை மறக்கவே விரும்பினான்.
யார்
கேட்டாலும் “நான் ஒரு அடிமை
பூதம்டா.
எங்க
மொதலாளி மதனகோபால் பழைய ஜாடியை
திறந்தபோது நான் வந்து
நின்னேனாம்.
சொல்லுங்க
ஹுஜுர்.
நான்
உங்கள் அடிமை.
என்ன
செய்யணும்னு கையை கட்டிட்டு
கேட்டேனாம்.
லேகியம்
விக்க அனுப்பிட்டாரு” என்று
கிண்டலாய் சிரித்து மழுப்புவான்
அல்லது “என்னைப் பத்தி எதுக்கு
விசாரிக்கறே?
தங்கச்சியை
கட்டித் தரப்போறியா?
போடா.
வேலையப்
பாத்துட்டு.
வந்துட்டான்
ஜாதகம் கேட்டுட்டு” என்று
எரிந்து விழுவான்.
இப்போது
இரண்டு மாதங்களாக அப்பா அவனை
சந்திக்க முயல்கிறார்.
வருந்தி
வற்புறுத்தி அழைத்தபடியே
இருக்கிறார்.
மதுரைக்கே
வந்துவிடும்படியும் எல்லோரும்
சேர்ந்தே இருக்கலாம் என்றும்
அவனுக்கு பெண் பார்த்து
வைத்திருப்பதாயும் நிறைய
காரணங்களை முன்வைக்கிறார்.
கோணல்
கையெழுத்தில் இன்லேண்ட்
லெட்டர் அல்லது நோட்டுப்
புத்தகத்தில் கிழித்த ரூல்டு
பேப்பரின் இரண்டு பக்கங்களிலும்
பெண்ணின் கையெழுத்தில்
எழுதப்பட்ட கடிதம்.
அல்லது
நண்பர்களின் வழியாக தூது
என்று அவனை தொடர்ந்து
கொண்டிருந்தார்.
முகம்
பார்க்கவோ பேசவோ அவன்
அனுமதிக்காதபோதும் அவர் தன்
முயற்சிகளை கைவிடாமல் துரத்தி
வருவது அவனை நிம்மதி இழுக்கச்
செய்திருந்தது.
சீக்கிரமாய்
ஏதேனும் ஒரு வழியில் இதற்கு
முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென
தீர்மானித்திருந்தான் ராஜன்.
குளுமையான
காற்று.
கடந்து
செல்லும் பேருந்துகளின்
இரைச்சலையும் மீறி ஆற்றுப்படுகையின்
விநோத ரீங்காரம்.
தொலைவில்
பாலத்தின் மீது சதுர வெளிச்சங்களின்
வரிசையோடு ரயில்வண்டி
தடதடத்தோடியது.
கையிலிருந்த
காலி சிகரெட் பெட்டியை சுண்டி
எறிந்தான்.
கையிலிருந்த
கடிதத்தை நிதானமாகக் கிழித்தான்.
உள்ளங்கையை
விரிக்கவும் காற்று அள்ளிக்கொண்டு
போனது.
கிழிசல்
துண்டுகள் அலைந்து மிதந்து
காணாமல் போயின.
மறுபடியும்
சிகரெட்டை பற்றவைத்தான்.
ஒலித்துக்
கொண்டிருந்த செல்போனை லட்சியம்
செய்யாமல் உள்ளங்கையில்
அடுக்கிய சீட்டுக்களிலேயே
கவனமாக இருந்தான் ராஜன்.
மணியும்
சரவணனும் அவரவர் சீட்டுக்களை
வரிசைப்படுத்துவதில்
ஆழ்ந்திருந்தனர்.
செல்லப்பன்
மட்டும் ஒலிக்கும் செல்போனையும்
இவர்கள் மூவரையும் கேள்வியுடன்
பார்த்தான்.
செல்லப்பன்
நாளிதழில் வேலைக்கு சேர்ந்து
ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.
வெள்ளிக்கிழமை
இரவுதான் பேரின்பவிலாஸிற்கு
வந்து சேர்ந்திருக்கிறான்.
மீண்டும்
செல்போன் அழைக்கத் தொடங்கியது.
''என்னது?
கம்பெனி
காலிங்.
கம்பெனி
காலிங்னு வருது?
இவரு
எடுக்கவே மாட்டேங்கறாரு?''
மணி
சீட்டிலிருந்து பார்வையை
விலக்காமலே அலட்சியமாக
சொன்னான்.
''செல்லப்பா,
டென்ஷன்
ஆகாதே.
கம்பெனி
காலிங்னா அது ராஜனோட மொதலாளி
காலிங்னு அர்த்தம்.
போதுமா?
நீ
சீட்டைப் போடு.''
செல்போனை
உற்றுப்பார்த்தான் செல்லப்பன்.
''இதோட
பதிமூணாவது மிஸ்டு கால்னு
வருது.
மொதலாளி
கூப்படறாரு.
இவரு
எடுக்கவே மாட்டேங்கறாரு?''
மணியும்
சரவணனும் புன்னகைத்தார்கள்.
''பதிமூணுதானே.
ராத்திரிக்குள்ள
செஞ்சுரி அடிச்சிருவாரு
பாரு.''
செல்லப்பனுக்கு
ஆச்சரியமாக இருந்தது.
இதுவரையிலும்
வாய் திறந்து பதில் சொல்லாத
ராஜனின் முகத்தில் எதுவும்
சலனமிருக்கிறதா என்று தேடியபடியே
கேட்டான்.
''இப்பிடி
செஞ்சா,
அப்பறம்
எப்பிடி சம்பளம் தருவாரு?
வேலைய
வுட்டு தூக்கிர மாட்டாரா?''
''அட
நீ ரொம்பத்தான் கவலப்படற.
அவனப்பாரு.
எதாச்சும்
காதுல வாங்கிக்கறானா?
ஒரு
சீட்டுக்காக கழுகுமாதிரி
பாத்துட்டு உக்காந்துருக்கான்.
யார்
கையில அந்த சீட்டு இருக்குன்னுகூட
தெரியும்.
நீ
வெசனப்பட்டு அந்த சீட்டை
போட்றப்போற பாத்துக்க.''
செல்லப்பன்
ராஜனை விநோதமாய் பார்த்தபடியே
சீட்டைக் கவிழ்த்தினான்.
''சாரைப்
புரிஞ்சுக்கவே முடியல பாஸ்.
மண்டை
காஞ்சுருச்சு.
ரிலாக்ஸா
பாட்டாச்சும் கேக்கலாமே?''
அவனுக்கு
இடது கை பக்கத்திலிருந்த
டேப் ரிகார்டரின் விசையை
அழுத்தினான்.
சரவணனிடமிருந்து
பீறிட்டு வெடித்தது சிரிப்பு.
மணி
வாயைப் பொத்திக் கொண்டான்.
செல்லப்பன்
இருவரின் சிரிப்புக்கு
காரணத்தை யோசித்தபடியே ஒலி
அளவைக் கூட்டினான்.
''முத்துக்களோ
கண்கள்…''
டி.எம்.எஸ்ஸின்
குரல் அறையில் கணீரென்று
சுழன்றது.
''சூப்பர்
பாட்டு பாஸ்.
எனக்கு
ரொம்பப் புடிச்ச பாட்டு.''
செல்லப்பன்
உற்சாகமாய் பாடியபடியே சீட்டை
எடுத்து கலக்கத் தொடங்கினான்.
இன்னும்
அடங்காத சிரிப்புடன் இருவரும்
தடுமாறினார்கள்.
ராஜன்
மிகுந்த லயிப்புடன் பாடலோடு
வாயசைத்துக் கொண்டிருந்ததைப்
பார்க்க செல்லப்பனுக்கு
ஆறுதலாயிருந்தது.
அவரவர்க்கான
சீட்டுக்களை எடுத்து கையில்
வைத்து அடுக்கியபோதும் அவர்கள்
இருவரும் சிரித்தபடியே
இருந்தது எரிச்சலைத் தந்தது.
ஆண்
குரலும் பெண் குரலும் இணைந்து
தேயவும் பாடல் முடிவுற்றது.
இருவரும்
செல்லப்பாவின் முகத்தைப்
பார்த்தார்கள்.
வெற்று
ஒலிநாடாவின் கரகரத்த ஓசைக்குப்
பிறகு அடுத்தப் பாடல் தொடங்கியது.
''முத்துக்களோ
கண்கள்…''
திடுக்கிட்ட
செல்லப்பன் டேப் ரிகார்டரை
உற்றுப் பார்த்தான்.
''ஸ்டரக்
ஆயிருச்சா பாஸ்?''
ராஜன்
பதில் சொல்லாமல் உற்சாகத்துடன்
செளந்திரராஜனுடன் இணைந்து
பாடிக் கொண்டிருந்தான்.
''என்ன
பாஸ்.
சிரிச்சுட்டே
இருக்கீங்க.
ஒரே
பாட்டை ரெண்டு தடவ பதிவு
பண்ணிட்டீங்களா?''
மணி
வயிற்றைப் பிடித்துக் கொண்டான்.
தொடர்ந்து
சிரித்ததில் அவனுக்கு
மூச்சிறைத்தது.
கண்ணீர்
தழும்பி கன்னத்தில் வழிந்தது.
சரவணன்
குப்புற கவிழ்ந்து
சிரித்துக்கொண்டிருந்தான்.
''ரெண்டு
தடவ இல்ல.
செல்லப்பா.''
மூச்சிரைத்தபடியே
தொடர்ந்தான்.
''ஒரே
பாட்டை ரெண்டு பக்கமும் பதிவு
பண்ணி வெச்சிருக்கான்.
ஒனக்கு
ரொம்பப் புடிச்ச பாட்டுன்னு
சொன்னியே.
கேளு.
கேளு.
டேப்
முடியறமட்டும் ஆசையா கேளு.
25தடவ
இதே பாட்டுதான் வரும்.''
பெரும்
அவமானத்துடன் ஆத்திரத்துடன்
செல்லப்பன் ராஜனை முறைத்தான்.
இந்த
உரையாடல் எதுவுமே காதில்
விழாதவனாய் ராஜன் அதே சிரிப்புடன்,
அதே
உற்சாகத்துடன் பாடலைத்
தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.
அவனது
செல்போன் இன்னும் ஒருமுறை
ஒலித்தது.
சிரிக்கத்
தொடங்கிய செல்லப்பன் திரும்பிப்
பார்த்தான்.
‘அப்பா.’
“பாஸ்.
அப்பா
கூப்டறாரு.
பேசுங்க.”
கையிலிருந்த
சீட்டுக்களை ஆத்திரத்துடன்
விசிறி எறிந்தான் ராஜன்.
பயந்து
பின்னகர்ந்த செல்லப்பனை
முறைத்தபடியே சிகரெட் பெட்டியை
தேடி எடுத்துக்கொண்டு வெளியே
போனான்.
பேரின்பவிலாஸ்
காலை நேர பரபரப்பிலிருந்து
விடுபட்டிருந்தது.
'மேன்சன்முனி'யின்
மேசையின் மீதிருந்த
எப்.எம்மிலிருந்து
பித்துக்குளி முருகதாஸின்
பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
இன்செய்திருந்த
சட்டையின் சுருக்குகளை நீவி
சரிசெய்வதில் முனைந்திருந்தான்
சரவணன்.
நெற்றிமேட்டில்
வேர்வை கோர்த்திருக்க,
மணி
தரையில் போர்வையை மடித்துப்போட்டு
அன்றைக்கான தன் உடுப்பை அயர்ன்
செய்துகொண்டிருந்தான்.
செல்லப்பன்
சுலோகத்தை முணுமுணுத்தபடியே
நெற்றியில் விபூதி இட்டுக்
கொண்டு திரும்பும்போது ராஜன்
அறைக்குள் வந்தான்.
வெளியில்
புறப்பட்டுப் போகும் கோலத்தில்
இருந்தான்.
மருந்துப்
பையை கட்டில் மீது வைத்தவன்
மின்விசிறியின் விசையைக்
கூட்டினான்.
''மணி
பத்தாகுது.
மூணுபேரும்
இன்னும் கெளம்பலியா?''
வெளிர்
நீல நிறச் சட்டையும் கருப்பு
பேண்டுமாய் பளிச்சென்றிருந்தான்.
காற்றில்
அலைந்த தலைமுடியும் டிரிம்
செய்யப்பட்ட தாடியும் எடுப்பாக
இருந்தது.
''இன்னிக்கு
எந்த ஊரு பாஸ்.
காலையிலேயே
பொறப்பட்டாச்சுபோல.''
செல்லப்பன்
கட்டிலில் கிடந்த தோள்பையை
எடுத்துக்கொண்டான்.
ராஜன்
பதில் சொல்லாமல் சிரித்தான்.
''உங்களுக்கு
ஒரு போக்கிடம் இருக்கு.
எனக்கென்ன.
இந்த
மடம் இல்லையா இன்னொரு சந்தைமடம்.''
மணி
திரும்பி நின்று முறைத்தான்.
''காலையில
தத்துவமா.
மவனே.
இப்ப
என்ன.
சாப்புட
வரியா?''
''ஆனா
எந்த மடமானாலும் எனக்கு
சாயங்காலந்தான் எடம் கெடைக்கும்..
ராத்திரியும்
பகலும் இல்லாத ஒரு நேரத்துல
பொறந்த ஜென்மங்கதான் ரெப்புங்க
நாங்க.''
ராஜன்
குரலுயர்த்தினான்.
''செரி
இருக்கட்டும்.
வா''
சரவணன்
அறைக் கதவருகே நின்றான்.
ராஜன்
கைகளை உயர்த்தி உடலை முறுக்கி
சடவெடுத்தான்.
எழுந்து
நின்றான்.
வாசலில்
நின்ற மூவரையும் பார்த்து
சிரித்தான்.
சட்டைப்
பொத்தான்களை அவிழ்க்கத்
தொடங்கியவன் ''நீங்க
பொறப்படுங்க.
சேச்சிகிட்ட
ஒரு நாலு இட்லி மட்டும் தரச்
சொல்லிட்டு போங்க.
நா
மெதுவா கெளம்பி வர்றேன்''
என்ற
கொடியில் கிடந்த கைலியை
உருவினான்.
மணி
தலையில் அடித்துக்கொண்டான்.
''டேய்
வாங்கடா நீங்க.
தினம்தினம்
நடக்கற கூத்துதான?
இன்னிக்கென்ன
அதிசயமா?''
''இந்தா
சாவி பத்திரம்.
எங்கியாவது
போறதுன்னா முனிகிட்ட குடுத்துட்டு
போ மவராசா.?''
ஒற்றைச்
சாவியை தூக்கி எறிந்தான்
சரவணன்.
இதற்குள்
மணி படிகளில் இறங்கத்
தொடங்கியிருந்தான்.
செல்லப்பன்
பின்னாலேயே ஓடினான்.
''என்ன
பாஸ்.
டிரஸ்
பண்ணிட்டு வெளியில கெளம்பினாரு.
இப்ப
வர்லேன்னு ரூம்லயே நின்னுட்டாரு.''
மூச்சு
வாங்கியது.
''நீ
என்ன மண்ணாடா?
ஒவ்வொண்ணயும்
என்ன ஏன்னு கேட்டுட்டு?''
மணி
அவன் முதுகில் தட்டினான்.
''இப்ப
சார் நாலு இட்லி கேட்டாரில்ல.
வந்ததும்
கெட்டி சட்னியோட நல்லா
மெத்திட்டு,
அப்பிடியே
படுத்துத் தூங்குவாரு.
சாயங்காலம்
நாம வந்து எழுப்பினாதான்
உண்டு.
அதுவும்
டீ சொல்லிட்டுதான் எழுப்பணும்.”
தலையாட்டியபடியே
நடந்த செல்லப்பனை தோளில்
தட்டி நிறுத்திவிட்டு சரவணன்
சொன்னான் “அவன்கிட்ட என்ன
வேணா கேளு.
எதப்
பத்தி வேணாப் பேசு.
கண்டுக்கவே
மாட்டான்.
அவங்க
ஃபேமிலி பத்தி மட்டும் எதையும்
கேக்கக் கூடாது தெரியுதா?
அப்பறம்
டெரர் ஆயிடுவான்.”
பங்குனி
மாத செவ்வாய்க்கிழமை.
மாரியம்மன்
பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை.
பேரின்பவிலாஸ்
உற்சாகத்திலிருந்தது.
நாளிதழ்
அறையில் சீட்டுக் கச்சேரி
சூடுபிடித்திருந்தது.
ஆறு
கைகள்.
ஒவ்வொரு
கைக்கும் பின்னால் எட்டிப்
பார்த்து பரபரத்தபடி இரண்டிரண்டு
தலைகள்.
முத்தண்ணனுக்கு
வகையாக சீட்டு மாட்டிக் கொண்ட
உற்சாகத்தில் இருந்தார்.
மணியும்
சரவணனும் அவரை கவிழ்ப்பதற்கான
உத்திகளை யோசித்துக்
கொண்டிருந்தனர்.
டீக்கடைப்
பையன் கம்பிவலை முழுக்க காலி
டம்ளர்களுடன் ஒத்தைக் காலில்
நின்றபடி வேடிக்கை பார்த்தான்.
அறை
முழுக்க சுழன்றிருந்தது
சிகரெட்டின் கார நெடி.
மேன்சன்முனி
தரையில் குச்சியைத் தட்டியபடியே
மேலேறி வந்தார்.
பேரின்பவிலாஸ்
வளாகத்துக்குள் அவ்வப்போது
தோரணையுடன் உலா வருவார்.
எந்த
நேரமானாலும் தரையில் குச்சியைத்
தட்டாமல் நடக்க முடியாது
அவரால்.
அவருக்கு
பின்னால் கையில் பழுப்பு நிற
ரெக்சின் பையுடன் தடித்த
பிரேமுடனான கண்ணாடி அணிந்த
ஒருவர் தயங்கியபடியே வந்தார்.
வயது
50க்கும்
கூட இருக்கும்.
வெளிர்
மஞ்சள் நிறத்தில் பொடிக்கட்டமிட்ட
சட்டை.
அடர்த்தியான
சாம்பல் வண்ணத்தில் தளர்வாக
தைக்கப்பட்ட பேண்ட்.
முழுக்கைச்
சட்டையை முழங்கைவரை நேர்த்தியாக
உருட்டி மடித்துவிட்டிருந்தார்.
தலைமுடியில்
செம்பட்டை மினுத்தது.
''ராஜனப்
பாக்க கெஸ்ட் வந்துருக்காங்க.
எங்க
அவன்?''
மேன்சன்முனி
புகைமண்டலத்துக்குள் உருவத்தைத்
தேடினார்.
யாரும்
திரும்பிப் பார்க்கவில்லை.
லத்தியால்
கதவைத் தட்டிய முனி ''கேக்கறது
காதுல விழலியா துரைங்களா?''
உரத்துக்
கேட்டார்.
''எப்பவும்
போல அவன் காலையிலேயே வெளியில
போயிட்டானே.''
மணி
கத்தினான்.
வெளியில்
இருப்பவருக்கும் காதில்
விழட்டும் என்பதுபோலிருந்தது.
முனி
நமுட்டலாய் சிரித்தார்.
''நா
பாக்கலயே சரவணா.
செரி
இவரு பாவம் மதுரையிலேர்ந்து
அவனப் பாக்கணும்னு வந்துருக்காராம்.
என்னன்னு
கேளு?''
லத்தியை
தரையில் தட்டியபடியே படிகளில்
இறங்கி கீழே போனார்.
சரவணன்
எழுந்து வந்தான்.
வெளியில்
நிற்பவரைப் பார்த்ததும் ஒரு
கணம் தயங்கினான்.
''தம்பி,
நா
மதுரையிலேர்ந்து வர்றேன்.''
குரல்
கரகரத்தது.
சரவணனுக்கு
அவர் சொல்லாமலே அனைத்தும்
விளங்கியது.
ராஜனின்
முதலாளி மதனகோபால்.
ஒன்றிரண்டு
தடவைகள் செல்போனில் அவனுக்காக
பேசும்போது கேட்ட குரல்,
நேரில்
வேறுமாதிரி ஒலித்தது.
''ராஜன்
இருக்கானா?”
“இல்ல
சார்…” தடுமாறி நின்றபோது
அவர் உள்ளே எட்டிப் பார்த்தார்.
“இங்கதான்
இருப்பான்.
தெரியும்.
கூப்ட்டா
வர்றதில்லை.
போன்ல
பேசறதும் கெடையாது.
என்ன
அவ்ளோ பிஸியா அவன்?''
அதட்டினாற்போல
கேட்டார்.
சரவணனுக்கு
சங்கடமாயிருந்தது.
தொடர்ந்து
அவர் தொலைபேசியில் பேச
முயற்சிப்பதும்,
கடிதங்கள்
எழுதுவதும் எதற்குமே பதில்
இல்லாமல் ராஜன் தன்போக்கில்
இருப்பதும் தெரிந்த விஷயம்தான்.
ராஜனின்
போக்கு தருகிற வேடிக்கையும்
சிரிப்பும் இப்போது நேரில்
அந்த மனிதரைக் காணும்போது
பரிதாபமாய் மாறிற்று.
ஒரு
நிமிடம் உண்மையை சொல்லிவிடலாமா
என்று மனம் துடித்தது.
அதே
நொடியில் கைலியை சரிசெய்தபடியே
மணி வெளியில் வந்தான்.
''சார்.
வாங்க
சார் செளக்கியமா?
ஏன்
வெளியிலயே நிக்கறீங்க.
நாந்தான்
மணி.
உங்ககூட
போன்ல பேசிருக்கேன்.''
''நல்லது
தம்பி.
பரவால்லே.
நீங்களாச்சும்
கொஞ்சம் பெரியமனசு பண்ணி
பேசறீங்க.
ராஜனோட
குரலக்கேட்டே வருஷக் கணக்காகுது.
ஆள்
இருக்கானா இல்லையான்னே
தெரியமாட்டேங்குது.
மாசமானா
சம்பளத்தைக் கேட்டு ஒரு
எஸ்எம்எஸ் மட்டும் வந்துருது
கறாரா.''
மணியும்
சரவணனும் ஒரு கணம் தடுமாறினார்கள்.
''நீங்க
வாங்க சார்.
கீழ
போலாம்.
அவன்
காலையில ரூம்ல எங்க சார்
தங்கறான்.
எங்கயாவது
பொறப்பட்டு போயிட்டு நைட்டுதான்
வருவான்.
இன்னிக்கு
லீவு வேறயா?
எங்கயாவது
புரோகிராம் போட்டுட்டு
போயிருப்பான்''
இருவரும்
அவரை அனுப்பிவிடுவதிலேயே
காரியமாயிருந்தார்கள்.
''போன்ல
கூப்பிட்டா ஐயா பேசமாட்டாரா?''
அறைகதவுகளின்மீது
பார்வையை ஓட்டியபடியே கேட்டார்.
''அவன்
செல்போனையே எடுக்கறதில்ல
சார்.
பல
நாள் அது ரூம்லயேதான்
கேப்பாரில்லாத கெடக்கும்.
இன்னிக்கும்
எடுத்துட்டு போயிருக்கானா
இல்லியா தெரியாது.
அப்பிடியே
இருந்தாலும் ஆண்டவனே கால்
பண்ணாகூட எடுக்க மாட்டான்.
உங்களுக்கு
தெரியாதா சார்.
அவன்
அப்பிடித்தான் சார்.''
மேன்சன்
வாசலில் நின்றவர் அனலோடிய
வெயிலை வெறித்தார்.
“அவங்கிட்ட
முக்கியமான ஒரு விஷயம்
சொல்லணும்.
நானும்
நாலு நாளா மாத்தி மாத்தி போன்ல
கூப்பிட்டுட்டேதான் இருக்கேன்.
சிக்க
மாட்டேங்கறான்” என்றவர்
ஒருகணம் தயங்கினார்.
“உங்களுக்கெதுவும்
தெரியுமா?”
என்று
பொதுவாய் கேட்டார்.
அவர்
முகத்தில் தொற்றிய பதற்றத்தைக்
கண்டதும் இருவரையும் பயம்
கவ்வியது.
“சரி.
அவங்கிட்டயே
சொல்லிக்கறேன்” என்றவாறே
தொப்பியை போட்டபடி நடக்கலானார்.
காந்தி
பூங்கா மைதானத்தில் ஓடிக்
களைத்த வேர்வையுடன் எதிர்ப்பட்ட
செல்லப்பன் மதனகோபாலைப்
பார்த்ததும் நின்றான்.
''யாரை
சார் பாக்கணும்?''
உற்சாகமாக
விசாரித்தான்.
செல்லப்பனின்
குரலைக் கேட்டு மேலிருந்து
எட்டிப் பார்த்த சரவணன் ''டேய்
செல்லா இருடா''
என்று
அலறியபடியே கையசைத்தான்.
அதற்குள்ளாகவே
''நீங்க
வாங்க சார்” என்று அவரை
அழைத்துக் கொண்டு படிகளில்
மேலே ஏறினான்.
அறை
வாசலில் சரவணனைப் பார்த்ததும்
நின்றான்.
''பாஸ்.
நம்ம
ரெப்பைப் பாக்க அவங்க மொதலாளி
வந்துருக்காரு,
வெளியில
போயிட்டதா யாரோ சொல்லிட்டாங்க
போல.
அவரு
மேல நம்ம சிங்காரம் ரூம்ல
இல்ல கெடக்கறாரு..''
சரவணனின்
முகம் போன போக்கை கவனிக்கவேயில்லை.
''செல்லா
சொதப்பிட்டாண்டா.
என்னடா
செய்யறது?''
சரவணன்
அறைக்குள் திரும்பி பல்லைக்
கடித்தபடியே கத்தினான்.
''இன்னிக்கு
மஞ்சநீர்தான் மவனே''
என்றபடியே
மணியும் முத்தண்ணனும் வெளியே
வந்தார்கள்.
மூவரும்
மெதுவே மேலே ஏறினார்கள்.
செல்லப்பன்
''ரெப்பு
ரெப்பு''
அழைத்தபடியே
கதவைத் தட்டினான்.
தடாலென்று
கதவு திறந்தது.
கலைந்த
தலையுடன் எட்டிப் பார்த்தான்
ராஜன்.
சட்டை
அணியாமல் கைலியுடன் இருந்தான்.
செல்லப்பனுக்கு
பின்னால் களைப்பும் ஆத்திரமுமாக
நின்றிருந்த மதனகோபாலைப்
பார்த்தான்.
ஒரு
நொடி கண்களைத் தாழ்த்தினான்.
முகம்
கனன்றது.
“யார்
சார் நீங்க?
என்ன
வேணும்?”
என்று
வெளியில் வராமலேயே கேட்டான்.
பதட்டமில்லை.
ஆச்சரியமில்லை.
நிதானமாக
நின்றான்.
கைகள்
கதவருகில் எப்போதும் சாத்திவிடும்
அவசரத்திலேயே நின்றன.
''என்னது?
யார்னா
கேக்கறே?''
கத்தத்
தொடங்கியவரை கைகாட்டி
நிறுத்தினான் ராஜன்.
“கத்தாதீங்க
சார்.
மெதுவா
பேசுசுங்க.”
ராஜன்
இன்னும் கதவை முழுக்கத்
திறக்கவில்லை.
செல்லப்பன்
“ரெப்பு.
உள்ள
கூட்டிட்டு போங்களேன்”
என்றதும் சுள்ளென்று விழுந்தான்
ராஜன்.
“மூடிட்டு
போடா.”
மூவரும்
அவசரமாய் நகர்ந்து படிகளில்
இறங்கி மறைந்தனர்.
ராஜன்
சிகரெட்டைப் பற்றவைத்தபடியே
நிதானமாகச் சொன்னான் “நேத்திக்கே
என் வேலையை ராஜினாமா பண்ணிட்டேன்.
இப்ப
எதுக்கு வந்து என்னைத் தொல்லை
பண்றீங்க?”
மதனகோபால்
ஒருகணம் அதிர்ந்தார்.
தொப்பியைக்
கழற்றிவிட்டு உச்சந்தலையின்
வேர்வையைத் துடைத்தவர் பையை
கீழே வைத்தார்.
குளியலறையில்
துணி துவைக்கும் சத்தம்.
மேன்சனுக்கு
அடுத்திருந்த காலியிடத்தில்
கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
காற்றில்
நெளிந்து கலையும் சிகரெட்
புகையை கவனித்து நின்றவனின்
கையைப் பற்றியபடி மெதுவாகச்
சொன்னார் “கோவப்படாதேப்பா.
உங்கிட்ட
ஒரு முக்கியமான விஷயத்தை
சொல்லணும்.
உனக்குத்
தெரியுமா இல்லையான்னு எனக்குத்
தெரியலை…”
ராஜன்
எதுவும் சொல்லாது அவர்
முகத்தையேப் பார்த்திருந்தான்.
அவன்
நாசியிலிருந்து புகை மெல்ல
வெளியேறியது.
“உங்கப்பா
போயிட்டாரு தெரியும்ல…”
சட்டென
ராஜன் தலை குனிந்தான்.
கைகளை
அவசரமாய் விடுவித்தவன்
சிகரெட்டை உதட்டில் வைத்து
வேகமாய் உறிஞ்சினான்.
மதனகோபாலின்
முகத்தை வெறித்துப் பார்ததபடியே
சொன்னான் “தெரியும்.
அவர்
செத்துப்போய் ரொம்ப வருஷமாச்சு.”
அவரது
பதிலை எதிர்பார்க்காமல்
ஓசையுடன் கதவைச் சாத்தினான்.
0
No comments:
Post a Comment