Saturday, 9 December 2017

போதி மரத்தின் கீழில்லை அவன் வீடு.

போதி மரத்தின் கீழில்லை அவன் வீடு.



நிழல் பூனையுடன்
வேட்டை விளையாடி
களைத்துத் தூங்குகிறான்.

அவன் எதையும் உபதேசிப்பதில்லை.

மணல் கரையெழுதி
எச்சில் கடல் நிரப்பி
முத்துக் குளித்தெழுகிறான்

அவன் எதையும் கற்பிப்பதில்லை.

பொம்மைகளை
விடுதலை செய்து
புத்தகங்களை நாடு கடத்துகிறான்.
அவன் எதையும் போதிப்பதில்லை.

காலத்தின் முதுகிலேறி
அடம்பிடிக்கும் கடவுளுக்கு
தலை துவட்டுகிறான்.

அவன் எதையும் ரட்சிப்பதில்லை.

வான் மழையும்
வளி ஒளியும்
பேணும் இவ்வுலகின்
அகண்ட மா தலை கனத்தை
உதைத்தாடும் அவன்
மிக எளிமையானவன்
மிக உண்மையானவன்
இத்தனைக்கும்

போதி மரத்தின் கீழில்லை அவன் வீடு.




No comments:

Post a Comment

யுவன் - விஷ்ணுபுரம் விருது

  1 இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர் மாதம். அலுவலகப் பயிற்சி நிமித்தமாக புனே சென்றிருந்தேன். அன்று காலை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்ற...