Showing posts with label புதியன விரும்பு. Show all posts
Showing posts with label புதியன விரும்பு. Show all posts

Monday, 26 January 2026

நித்ய சைதன்ய யதி – இரு அறிமுக நூல்கள்



1998ம் ஆண்டு காலச்சுவடு இதழில் ‘மந்திரம், இசை, மௌனம்’ என்ற தலைப்புடன் ஜெயமோகன் செய்திருந்த நேர்காணல், நித்ய சைதன்ய யதி (1924 – 1989)யின் பெயரை தமிழ் இலக்கிய வாசகர்களிடையே அறிமுகப்படுத்தியது. தத்துவம், கலை, இலக்கியம், ஆன்மீகம் என பல தளங்களில் அமைந்த செறிவான அந்த உரையாடல் நித்ய சைதன்ய யதியின் ஆளுமையை உணரச் செய்தது. அதன் பிறகு செப்டம்பர் 1999 வெளியான ‘சொல் புதிது’ முதல் இதழின் முகப்பில் நித்ய சைதன்ய யதியின் படம் இடம்பெற்றது. மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள் ‘சொல் புதிது’ இதழில் தொடர்ந்து வெளியாயின. ‘நித்யா ஆய்வரங்கு’, ‘காவிய முகாம்’ உள்ளிட்ட இலக்கிய அரங்குகள் பலவும் ஜெயமோகனின் ஒருங்கிணைப்பில் உதகை நாராயண குருகுலத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஜெயச்சந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட நித்ய சைதன்ய யதி நடராஜ குருவின் மாணவர். தத்துவம், புராதன தத்துவம், உளவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். உளவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர். கொல்லம் எஸ்.என் கல்லூரியில் உளவியல் துறைத் தலைவராகவும், சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவத்தில் முதுநிலைப் பேராசிரியராகவும், கொழும்பு வித்யோதயா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அமெரிக்காவில் புகழ்பெற்ற கல்லூரிகளில் சிறப்புப் பேராசிரியராகவும், வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றினார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் கவிதைத்துறை சிறப்புப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

நித்ய சைதன்ய யதி கவிஞர், ஓவியர், எழுத்தாளர். ஆங்கிலத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் மலையாளத்தில் ஐம்பது நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியம், கலை, அறிவியல் தொடர்பான பல அறிமுக நூல்களையும் மலையாளத்தில் எழுதியுள்ளார். இந்திய சிந்தனை மரபையும் மேற்கத்திய சிந்தனை மரபையும் ஆழக் கற்றவர். அத்துடன் கலை, இலக்கியத்தையும் இணைத்துப் பார்க்கும் பார்வையைக் கொண்டிருந்தவர். இவை அனைத்தையும் கவித்துவமாக அணுகுவது அவரது சிறப்பு. ராபர்ட் ஃபிராஸ்ட், எமிலி டிக்கன்ஸன் இருவரும் அவருக்குப் பிடித்தமான கவிஞர்கள். அவரது அலமாரியில் கவிதை நூல்களுக்கு நடுவே சலீம் அலியின் பறவைகள் பற்றிய புத்தகமும் ஐன்ஸ்டீனின் தேற்றங்கள் அடங்கிய நூலும் ‘குட்டி இளவரச‘னும் ‘அற்புத உலகில் ஆலிஸு’ம் இடம்பெற்றிருக்கும். அவரைப் பொறுத்தவரை அவையும்கூட கவிதைகளே. திருக்குறள் அவருக்குப் பிடித்தமான தமிழ்க் கவிதை நூல்.  

யதி அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். நுட்பமான புன்னகையை எப்போதுமே அவரது கண்களில் பார்க்கமுடியும். ‘குருகுலம் சிரிப்புடன் திகழவேண்டும்’ என்பது அவரது கூற்று. ‘நகைச்சுவை இல்லாவிட்டால் தத்துவம் உயிரிழந்துவிடும்’ என்பது அவரது நம்பிக்கை.

நித்ய சைதன்ய யதியைக் குறித்த விரிவான அறிமுகத்துக்கான நூலாக அமைந்திருக்கிறது, அண்மையில் தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி வெளியிட்டிருக்கும் ‘யதி – தத்துவத்தில் கனிதல்’. 2004ம் ஆண்டில் ‘யுனைடெட் ரைட்டர்ஸ்’ வெளியிட்ட ‘அனுபவங்கள் அறிதல்கள்’ நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பாக அமைந்துள்ளது இது.

‘சொல் புதிது’, ‘சுபமங்களா’ உள்ளிட்ட இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான யதியின் கட்டுரைகளும் நேர்காணலும் அவரது சுயசரிதையின் சில பகுதிகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

யதியின் மாணவரான சௌகத் அலி தொகுத்திருக்கும் ‘சுயசரிதை’ நூலின் சில பகுதிகளை ஆர்.சிவக்குமாரும் பாவண்ணனும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செஷான், ஷகால், கிளாட் மோனே ஆகியோரின் ஓவியங்கள் குறித்த கட்டுரைகளை நிர்மால்யா மொழிபெயர்த்திருக்கிறார். ஜெயதேவரின் ‘கீத கோவிந்த’த்தை அடிப்படையாகக் கொண்ட ‘மானுட உணர்வுகள்’ என்ற கட்டுரையை எம்.கோபாலகிருஷ்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். நடராஜ குருவுடனான அவரது அனுபவங்களை விவரித்திருக்கும் கட்டுரையை தமிழில் தந்திருக்கிறார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.  தொல்படிமங்கள், விடுதலையின் மெய்யியல், இருப்பும் அறிதலும் உள்ளிட்ட கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கும் ஜெயமோகன் இந்த நூலுக்கு விரிவான குறிப்பிடத்தக்க ஒரு முன்னுரையையும் எழுதியிருக்கிறார்.

நித்ய சைதன்ய யதி குழந்தைகளின் மேல் அபார பிரியம் கொண்டவர். குழந்தைகளுக்காக எழுதுவதிலும் ஓவியம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு காட்டுபவர். மலையாளத்தில் குழந்தை இலக்கிய நூல்களை எழுதியிருக்கிறார். அவ்வாறான நூல்களில் ஒன்று ‘சின்னச் சின்ன ஞானங்கள்’. உதகை நாராயண குருகுலத்தில் நித்யாவை சந்திக்க சென்றபோது இந்த நூலின் வடிவமைப்பையும் நேர்த்தியையும் கண்டு வியந்த யூமா வாசுகி எதைப் பற்றியது இந்தப் புத்தகம் என்று நண்பர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டார். அங்கிருந்துதான் யூமா வாசுகியின் மொழிபெயர்ப்புப் பணித் தொடங்கியது. முதன்முதலாக அவர் மொழிபெயர்க்க விரும்பிய ‘சின்னச் சின்ன ஞானங்கள்’ இப்போது வெளிவந்துள்ளது.

குழந்தைகளுக்கு சொல்ல விரும்பிய சில விஷயங்களை மிகச் சுருக்கமாகவும் ருசிகரமாகவும் எழுதியிருக்கிறார் யதி. இது குழந்தைகளுக்கானது மட்டுமல்ல. குழந்தைகளைவிட அவர்களது பெற்றோர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் வாசிக்கவேண்டிய புத்தகம் என்பது முக்கியமானது. வீட்டு நூலகத்தின் தேவை, வாசிப்புப் பழக்கம், மரணத்தை எப்படிப் புரிந்துகொள்வது, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கான அரங்கங்கள், கலாச்சாரங்கள், சிரிப்புப் படங்கள், கணிதம் போன்று பல்வேறு விஷயங்களையும் அவரது அனுபவங்களின் பின்னணியில் எளிமையாகச் சித்தரித்திருக்கிறார் யதி. இவற்றை சுவை குன்றாமல் செறிவுடன் மொழிபெயர்த்திருக்கிறார் யூமா வாசுகி. தேவையான இடங்களில் தமிழுக்கு பொருந்தும் வகையில் பட்டியல்களையும் தந்திருக்கிறார்.

கவித்துவமும் அழகும் நிறைந்த பொருத்தமான பல படங்கள் இந்த இரண்டு நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. வடிவமைப்பு, அச்சாக்கம், தரம் என எல்லா வகையிலும் மிகுந்த நேர்த்தியுடனும் அழகுடனும் அமைந்துள்ள இந்த இரண்டு நூல்களும் நித்ய சைதன்ய யதியை மிகச் சரியாக அறிமுகப்படுத்தக்கூடிய தகுதியைக் கொண்டுள்ளன.

( யதி-தத்துவத்தின் கனிதல், நன்கொடை ரூ.500/-,

சின்னச் சின்ன ஞானங்கள், நன்கொடை ரூ.120/-

வெளியீடு – தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி )

Tuesday, 20 January 2026

இலட்சியவாதத்தின் எச்சங்கள் - நிழல்கள் மாறும் நொடி



‘காச்சர் கோச்சர்’ நாவல் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அதன் மூலமாக விவேக் ஷான்பாக்கும் தமிழில் பிரபலமடைந்துள்ளார். இந்த நாவல் இன்னொரு வகையிலும் முக்கியமானது. இன்று கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்துக்கும் தீவிரமாகவும் பரவலாகவும் மொழியாக்கம் செய்துவரும் கே.நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்த முதல் நாவல் ‘காச்சர் கோச்சர்’.

0

‘ஊரு பங்கா’ என்ற தலைப்பில் 2015ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான நாவலை ‘நிழல்கள் மாறும் நொடி’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார் கே.நல்லதம்பி. ‘காச்சர் கோச்சர்’ நாவலைப் போலவே பெங்களூரையும், நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் களமாகக் கொண்டிருக்கிறது.

ஐந்து படலங்களைக் கொண்ட இந்த நாவல் வாழ்க்கையைக் குறித்த இரண்டு தலைமுறைகளின் அணுகுமுறையை நுட்பமாக விவாதித்திருக்கிறது.

இலட்சியவாதமே வாழ்வென கொண்டிருந்த ஒரு தலைமுறையே மதிப்பீடுகளை உருவாகிக் கொடுத்திருக்கிறது. சுமுகமான சமூக வாழ்வுக்கான அடிப்படைகளை வகுத்துத் தந்திருக்கிறது. அதற்காக கடுமையான தடைகளையும் சிக்கல்களையும் கடந்து வந்திருக்கிறார்கள் இலட்சியவாதிகள். வாழ்க்கையையே பணயம் வைத்திருக்கிறார்கள். ஆனால், லட்சியத்தை எட்டிய பிறகான சூழலில் அவர்கள் பலசமயங்களில் தேவைப்படுவதில்லை. பொருந்திப்போக முடியாதவர்களாய், யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களாய் ஒதுக்கப்படுகிறார்கள். தங்களது இடம் என்ன என்று தெரியாமல் போகும்போது அவர்கள் பிறரது கேலிக்கும் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகிறார்கள். வரலாற்றில் அவர்களது இடம் முக்கியமானது. ஆனால், நடைமுறை சமூகத்துக்கு அவர்கள் தேவைப்படாதவர்கள். இலட்சியவாதத்தின் கோட்பாடுகளும் யதார்த்தத்தின் அனுசரித்தலுக்குமான பலப்பரீட்சையில் எப்போதும் கைதணிந்து ஓய்வது இலட்சியவாதமே என்பது வரலாற்றுத் துயரம். இத் துயரத்தின் அடித்தளத்தில் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யக்கோரும் இன்றைய நவீன நடைமுறை வாழ்வை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது இந்த நாவல்.

குடும்ப அமைப்பு பெரும் மறுபரிசீலனைக்கு உள்ளாகியிருக்கும் காலம் இது. இன்றைய புதிய தலைமுறையினர், ஜென் ஸீயினர், திருமண உறவு சார்ந்து முக்கியமான சில அடிப்படை கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பெங்களூர் போன்ற பெருநகர வாழ்வின் பின்னணியில் இந்தக் கேள்விகள் மேலும் தீவிரம் கொள்கின்றன. ஒரு நடுத்தர வயது ஆணுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையிலான உறவு இந்தப்  பின்னணியில் எப்படி பரிணாமம் கொள்கிறது, வளர்கிறது, முடிகிறது என்பது இந்த நாவலின் இன்னொரு முக்கியமான சரடு.  

 கிராமத்துப் பின்னணியைக் கொண்ட நடுத்தர வயது ஆணின் சிக்கல் ஒழுக்க மரபுகளாலான கயிறு அவன் கையை எப்போதும் பிணைத்திருப்பதுதான். ‘தெங்கனகேரி மகிமை’ என்று நாவலில் சுட்டப்பட்டிருக்கும் அந்தக் கயிறு, ஒரு இளம்பெண்ணின் வருகையால்,நட்பால், இருப்பால், உறவால் அறுபடுகிறது. மனைவி, பிள்ளை, கௌரவமான வேலை என்று சமூக அந்தஸ்துடன் வாழும் அவனுக்கு இளம்பெண்ணின் நெருக்கமும், இளமையும் தேவைப்படுகிறது. தயக்கங்களும் தடுமாற்றங்களும் இருந்தபோதும் அதற்காக அந்தக் கயிறைத் துண்டிக்காமல் இருக்க அவனால் முடிவதில்லை. ஒழுக்கம் சார்ந்த குழப்பத்துக்கும், ஒருவகை அச்சத்துக்கும், இளம் பெண்ணின் மீதான இச்சைக்குமிடையிலான அவனது ஊசலாட்டத்தில் பெண்ணுடலே வெல்கிறது. அவ்வளவாக பரிச்சயமில்லாமல் அறிமுகமான முதல் சந்திப்பிலேயே தன்னை பியர் குடிக்க அழைக்கும் பெண், அவனுள் ஊறிக்கிடக்கும் தெங்கனேரி மகிமையின் மீது முதல் கல்லை எறிகிறாள். பழக்கம் நெருக்கமாகி நட்பாகும்போது, அவளை வசீகரிக்கவென கிராமத்துக் கதைகளைச் சொல்கிறான். கிமானி வக்கீல், சுங்காபுரர், சந்து போன்ற லட்சியவாதிகள், புரட்சியாளர்கள் பற்றிய கதைகள் அவளைக் கவர்வதற்கான தூண்டில்களாக அமைகின்றன. ஒரு நாள் பிடித்தமான கதையைச் சொன்னதற்கு பரிசாக கன்னத்தில் முத்தம் தருகிறாள். தெங்கனேரி மகிமையின் மீது விழும் வலுவான இரண்டாவது கல் இது. கதைக்கு முத்தத்தைப் பரிசாகத் தந்தவள், அவன் எழுதும் கவிதைகளுக்கு தன்னையே பரிசாகத் தருகிறாள். தயக்கங்களுக்கும் தடுமாற்றங்களுக்கும் நடுவே துணிந்து இப்படியொரு சாகசத்தை மேற்கொண்ட நடுத்தர வயது மனிதருக்கு இதைத்தாண்டி அந்த உறவில் அடுத்த அடியை எடுத்து வைக்க பயம். வெளியே தெரிந்துவிடக்கூடாது என்கிற பதற்றம். ஆனால், இளம்பெண்ணுக்கு இது பிரச்சினையே இல்லை. இப்படி அவன் அஞ்சி நடுங்குவது அவளைச் சீண்டுகிறது. வெறுக்கச் செய்கிறது. அவனை உதறிச் செல்கிறாள். அதுவே நடுத்தர வயது குடும்பஸ்தனுக்கு பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது.

மரபுக்கும் நவீனத்துக்குமான மோதல்களை பல்வேறு கதாபாத்திரங்களையும், தருணங்களையும் கொண்டு விவாதிக்கும் இந்த நாவல் ஒரு தரப்பில் லட்சியவாதம் யதார்த்த வாழ்வுடன் சமரசம் செய்து கொள்வதை பகடியாகவும் இன்னொரு பக்கம் பரிவுடனும் விவாதத்துக்கு உட்படுத்தியுள்ளது. கைது செய்யப்படவேண்டும் என்ற நோக்கத்துடன், நெருக்கடி நிலைக்கு எதிராக திறந்த மைதானத்தில் அரசுக்கு எதிராக உரத்த விமர்சனங்களை எழுப்பும் கிமானி வக்கீலை, ‘பைத்தியங்களுக்கெல்லாம் சிறையில் இடமில்லை’ என்ற காரணத்துக்காக கைது செய்யாமல் விட்டுவிடுகிறது காவல்துறை. ஆனால், அதே சமயம் சுங்காபுரத்தார் கைது செய்யப்பட்டாரா, என்றால் அதன் பிறகு என்ன ஆனார் என்பதைப் பற்றி எந்த விடையுமில்லை.

நாவலில் இணைச்சரடுகள் சிலவும் உள்ளன. அவை இந்த விவாதத்துக்கு மேலும் வலு சேர்க்கும் விதமான சில கேள்விகளையும் எழுப்புகின்றன. கதையின் நாயகனாக வார்க்கப்பட்டுள்ள மன்மோகன் ஒரு நிறுவனத்தின் தணிக்கை அதிகாரி. தன்னுடைய இரகசியமான உறவையும் தொழில்முறை அணுகுமுறையையும் அவன் இணைத்துப் பார்ப்பதை உதாரணமாகச் சுட்டலாம். நாவலின் இறுதிப் பகுதியில் மீண்டும் சந்துவைச் சந்தித்து மது விடுதியில் நிகழும் உரையாடல் இன்னொரு உதாரணம்.

காமத்தின் இச்சைக்கு போதுமென்ற மனம் கிடையாது, மேலும் மேலும் என்று வாய்ப்புகளைத் தேடியபடியே இருக்கும். முற்றிலுமாகத் துண்டித்துவிட்ட உறவை அல்ப ஆசை, நடுத்தர வயது மன்மோகனை வீட்டின் சுற்றுச் சுவர் தாண்டி மரத்தில் ஏறி வாசலில் நிற்கச் செய்கிறது. அங்கிருந்து அவனால் வந்த வழியில் மட்டுமே திரும்ப முடியும். அது சாத்தியமா? என்ற கேள்வியுடன் நாவல் முடிகிறது. சுவர் ஏறி அங்கிருந்து மரத்தில் தாவி உள்ளே குதித்தவனுக்கு வெளியே வரவும் தெரிய வேண்டுமல்லவா?

விவேக் ஷான்பாக் தன் புனைவுகளை வலுவான கதாபாத்திரங்களின் மூலமாகவே அடர்த்திப் பெறச் செய்வார். இந்த நாவலிலும் அபாரமான சில கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. கிமானி வக்கீல், மன்மோகன், ஷமி, சுங்காபுரர் போன்ற முதன்மை கதாபாத்திரங்களுக்கு நடுவே சிறிதும் பெரிதுமான அழுத்தமான கதாபாத்திரங்களும் தனித்தன்மையுடன் இடம் பெற்றுள்ளன. கிமானி வக்கீலின் அம்மா நீலாவதியும் சதானந்த ஆசிரியரின் மனைவி ரமாவையும் உதாரணமாக கவனிக்கலாம்.  

நேரடியான, சீரான கதையாக அல்லாமல் கதைக்குள் கதை, கதையை மீறிய கதை போன்ற உத்திகளால் புனையப்பட்டிருந்தபோதும் இந்த நாவல் தான் எழுப்பும் கேள்வியை தெளிவாகவும் உரக்கவும் முன்வைத்திருக்கிறது. அதற்கான பதிலை யோசிக்க வேண்டிய இன்றைய தலைமுறை, சென்ற தலைமுறையினர் உருவாக்கி வைத்திருக்கிற மதிப்பீடுகளை ஒரு முறை திரும்பிப் பார்த்து பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்ற பரிந்துரையையும் இந்த நாவல் செய்திருக்கிறது.

0

கே.நல்லதம்பியின் மொழியாக்கம் சீரான மொழிநடையுடன் இலகுவாக அமைந்திருப்பது நாவலை அணுக பெரிதும் உதவியுள்ளது. 2015ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் கன்னட இலக்கிய உலகிலும் பொது வெளியிலும் எந்தவிதமான வரவேற்பை, விமர்சனத்தைப் பெற்றது என்பது குறித்தும் ஒரு சிறிய முன்னுரையை எழுதியிருந்தால் நாவலை மேலும் புரிந்துகொள்ள துணைநிற்கும்.

0

நிழல்கள் மாறும் நொடி – விவேக் ஷான்பாக் – தமிழில் கே.நல்லதம்பி

ஸீரோ டிகிரி பதிப்பகம். அக்டோபர் 2025 

Tuesday, 13 January 2026

உடல் பராமரிப்பு வணிகத்தின் உளவியல் களம் - பா.கண்மணியின் ‘வீனஸ்’

 



0

‘இடபம்’ நாவலின் மூலம் கவனம் ஈர்த்தவர் பா.கண்மணி. பங்குச் சந்தையைக் களமாகவும் அதிகமும் ஆண்கள் புழங்கும் அந்த வசீகர உலகில் செயல்படும் பெண்ணைக் கதாநாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது என்பதால் ‘இடபம்’ புதிய முக்கியமான நாவல்களின் வரிசையில் இடம் பிடித்தது. அதுவே அவரது இந்த இரண்டாவது நாவலின் மீது கூடுதலான எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

‘இடபம்’ நாவலைப் போலவே ‘வீனஸ்’ நாவலின் களமும் புதியது, வசீகரமானது. களம் இதுதான் என்று தெரிந்தவுடனே அதற்குள் இருக்கும் சாத்தியங்களும் சவால்களும் நமக்குள் இன்னும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

நவீன வாழ்வின் அடையாளங்களில் ஒன்றாகிப் போன அம்சம் ‘ஜிம்’களும் ‘பியூட்டி பார்லர்’களும். பெருநகரங்களில் என்று மட்டுமல்லாமல் இன்று சின்னஞ்சிறு ஊர்களிலும்கூட அழகு நிலையங்களும், உடற்பயிற்சிக் கூடங்களும் பெரும் எண்ணிக்கையில் இடம் பிடித்துள்ளன. உடலினைப் பேணுதல் என்பதைப் பற்றிய அக்கறை அனைத்து வயதினரிடத்தும் ‘டிரெண்டா’க உருவாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும், விளையாடுவதும், ஓடுவதும் துறை சார்ந்த ஒன்றாக மட்டுமே இருந்தது. மைதானங்களே அதற்கான முக்கியமான களமும் இடமும். உடற்பயிற்சி செய்வதற்கான கருவிகளும், தளவாடங்களும் மைதானத்திலேயே நிறுவப்பட்டிருந்தன. இன்று நிலைமை அவ்வாறில்லை. தெருவுக்குத் தெரு உடற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. காலையும் மாலையும் வேர்க்க விறுவிறுக்க பயிற்சிகள் தொடர்கின்றன.

பெண்களுக்கான அழகு நிலையங்கள் முன்பே இருந்தன என்றாலும் அதிகமும் அவை மணப்பெண் அலங்காரம், முக அலங்காரம் போன்ற ஒருசில அம்சங்களையே கொண்டிருந்தன. இன்று அழகு நிலையங்களின் பட்டியலில் உள்ள சேவைகளைப் படிக்கும்போது வியப்பாக உள்ளது. உச்சி முதல் உள்ளங்கால் வரைக்குமான பராமரிப்பு சேவைகளை இந்த அழகு நிலையங்கள் வழங்குகின்றன. தோற்றத்தைப் பேணுதலிலும் ஆகச்சிறந்த முறையில் தன்னை வெளிப்படுத்துவதிலும் பெரும் அக்கறை காட்டப்படுகிறது. இதில் வயது வித்தியாசங்கள் கிடையாது. இன்னும் ஊன்றி கவனித்தால் இளம் பெண்களைக் காட்டிலும் நடுத்தர வயதுப் பெண்கள் இதற்கு கூடுதல் கவனத்தையும் முக்கியத்துவத்தையும் அளிக்கிறார்கள் என்பதை உணரலாம். மணமாகி குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பின் உடலைப் பராமரிப்பதும் கவனிப்பதும் தேவையற்றது என்ற மனப்பான்மையிலிருந்து வெளியேறியிருப்பதையும் கவனிக்கலாம்.

இந்த விழிப்புணர்வுக்கு என்ன காரணம்? இன்றைய உணவுப் பழக்கங்களும், அன்றாடத்தின் கால வரையறைகளுமே. நமது வழக்கமான உணவுப் பழக்கத்துக்கு மாறாக புதிய வகை உணவுகள் இன்றைய சந்தையில் அதிக அளவில் புழங்குகின்றன. கணினித் தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய நாடுகளின் வேலை நேரங்களுக்கு ஏற்ப இங்கே கண்விழித்து பணியாற்ற வேண்டிய சூழல். பள்ளிக் காலங்கள் முதலே தூக்கச் சுழற்சியில் மாற்றங்கள். சரியான, ஆழ்ந்த தூக்கம் என்பதற்கான வரையறையும் மாறிவிட்டது. உணவும், தூக்கமும் தரும் இயல்பான ஆரோக்கியம் இன்றைய சூழலில் தவிர்க்கப்படுகிறது, மறுக்கப்படுகிறது. எனவே, இழக்க நேரும் ஆரோக்கியத்தை மீட்க வழியாகவே உடற்பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன.

நடுத்தர வயதுப் பெண்களின் மனநிலையிலும் தம் உடலைப் பேண வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இன்றைய சமூகச் சூழலில் இதுவொரு பெரும் மாற்றம். உடல் பராமரிப்புக்கு நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யத் தயங்குவதில்லை. தன்னைச் சுற்றிலும் உள்ள அண்டை வீட்டுப் பெண்கள், உடன் பணியாற்றும் பெண்கள், உறவினர்கள் என்று பிற பெண்களுக்கு நடுவில் தன்னையும் ஆரோக்கியமாக, அழகாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

இத்தகைய விழிப்புணர்வும் மனநிலை மாற்றமும் தொழில் முதலீடாக மாறி அழகு, ஆரோக்கியம், உடல் பராமரிப்பு ஆகியவை பெரும் சந்தையாக உருவாகியிருப்பதைத்தான் இன்று பார்க்கிறோம். உடற்பயிற்சி கூடங்களும், அழகு நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கும் சூழலையும் அங்குள்ள எண்ணற்ற கருவிகளையும் தளவாடங்களையும் அவற்றுள் பயன்படுத்தப்படும் அழகு சாதனங்களையும் நுட்பமாக கவனித்தால் இவற்றின் சந்தை மதிப்பை கணக்கிட முடியும். பயிற்சிக்கு தகுந்த உடைகள், காலணிகள், பருகும் பானங்கள், பரிந்துரைக்கும் உணவு வகைகள் என்று அனைத்துமே வியாபாரத்தின் கண்ணிகள்தான். நகம், புருவம், கேசம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பராமரிப்பு முறைகள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான சாதனங்கள், பூச்சுகள். உடலை இளைக்கச் செய்யலாம், எடை கூட்டவும் முடியும்.

இந்தச் சந்தை வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. அழகுக் கலை என்பது இன்று ஒரு தகுதி, படிப்பு. தகுந்த உணவு முறையைப் பரிந்துரைக்கவென நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். உடற் பயிற்சியை சொல்லித் தரவும், முறைப்படுத்தவுமான பயிற்சியாளர்களும் உள்ளனர். உடற்பயிற்சிக் கூடங்களை, அழகு நிலையங்களை அமைக்க வங்கிகள் கடன் தருகின்றன. கருவிகளும் சாதனங்களும் அழகூட்டும் பொருட்களும் தவணை முறை கடனுக்கு வழங்கப்படுகின்றன.

உடல் பராமரிப்பு, ஆரோக்கியம் சார்ந்த இந்தப் பெரும் சந்தையே ‘வீனஸ்’ நாவலின் களம். இந்தச் சந்தையின் பல்வேறு கண்ணிகளே இதன் கதாபாத்திரங்கள். இவர்களின் பார்வையில் இந்தச் சந்தையின் அடிப்படை உளவியலை, அதன் நுட்பங்களை அலசிப் பார்க்கிறது ‘வீனஸ்’. வியாபாரமும் சந்தையும் தரும் மன அழுத்தங்களையும் சவால்களை சமாளித்து அழகு நிலையத்தை வெற்றிகரமாக நடத்தும் ரஞ்சனிக்கு தன் மகள் தன்னிடமிருந்து விலகி நிற்பதை ஒரு தாயாக எப்படி கையாள்வது என்பது தீராத புதிராக, விடையற்ற பெரும் கேள்வியாக நிற்கிறது. ‘மாடல்’ அழகியாக உலகை வெல்ல வேண்டும் என்ற பேரவாவுடன் தன் எல்லா இச்சைகளையும் கட்டுப்படுத்தி உடலைப் பேணும் நிஷாவுக்கு தன் வனப்பில் மயங்கியுள்ள தன் பணக்கார காதலனையும் அவன் கட்டுப்பாடுகளையும் சமாளிப்பது பெரும் சவாலாக உருவெடுக்கிறது. செல்வந்தரான கணவரின் வியாபாரத் தந்திரங்களுக்கு மட்டும் அழகை வெளிப்படுத்த அனுமதிக்கப்படும் சந்தியாவின் உளவியல் மோதல்கள் வேறு வகையானவை. அவளது திறன்களோ சாமர்த்தியங்களோ கணவனுக்கு சிறிதும் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. உடல் இச்சையைத் தீர்க்கும் ஒரு கருவி என்பதைத் தவிர வேறு மதிப்பில்லை. உடலைப் பரிசோதனைக் கூடமாக்கி ரசாயங்களைக் கொட்டிப் பாழாக்கும் வணிக வலைகளிலிருந்து காப்பாற்றும் பெரும் பொறுப்பை ஏற்கும் திலோத்தமாவின் நோக்கங்கள் வேறு. பாதையும் வேறு. உடற்பயிற்சி நிலையத்தில் தன் உடல் உறுதியால், பராமரிப்பால் பெண்களின் கவனத்தைக் கவரும் அவ்வளவாக படிப்பறிவற்ற, ஆங்கிலம் பேச வராத பிருத்வி வந்ததை வரவில் வைப்பவன். உள்ளமட்டும் உடலைப் பேணி அதன் மூலம் வருவதைக் கொண்டு எதிர்காலத்தை அமைக்கத் திட்டமிடுபவன். ‘வீனஸ்’ முதலாளி ரஞ்சனியின் மீது ஆசை கொண்டிருக்கும் உளவியல் மருத்துவர் இன்னொரு கதாபாத்திரம். தன் பொருளாதாரத் தேவைக்கு தன்னை அவள் பயன்படுத்துகிறாள் என்று தெரிந்தும், தன் ஆசைக்கு அவள் இணங்குவாளா என்று நப்பாசையுடன் காத்திருக்கும் அவரை வெகு இயல்பாகவும் நுட்பமாகவும் கையாள்கிறாள் ரஞ்சனி.

யோசித்துப் பார்க்கும்போது இந்தக் களமும் இதன் சாத்தியங்களும் உருவாக்கும் உலகம் மிகப் பெரியது, ஆழமானது, நுட்பமானது. இக் கதாபாத்திரங்களின் உளவியல் மோதல்களும் தடுமாற்றங்களும் சரிவுகளும் இணைந்தும் விலகியும் சிதறியும் ஏற்படுத்தும் தாக்கங்கள் மிக வலுவானவை. ஆனால், இத்தகைய ஒரு செறிவான களத்தில் இந்த நாவல் சென்றிருக்க வேண்டிய ஆழத்தையும் தொலைவையும் எட்டாமல் நின்றிருப்பது சோர்வைத் தருகிறது. சவாலான களம், வலுவான கதாபாத்திரங்கள் அமைந்திருந்தும் அவற்றின் முழு வீச்சையும் எட்டிப் பிடிக்க முயலாமல் போனது துரதிர்ஷ்டமே. தமிழ் இலக்கியத்தில் விவாதிக்கப்படாத, சமகாலத்தில் இன்றைய சமூகம் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றை எடுத்துக்கொண்ட வகையில் இந்த நாவல் மிக முக்கியமானது.

 

( ‘வீனஸ்’, பா.கண்மணி, எதிர் வெளியீடு, டிசம்பர் 2025 )

( பிப்ரவரி 2026 நீலி இதழில் வெளியானது )

 

 

 

 

 

Saturday, 3 December 2022

கதைவெளியில் புதிய நறுமணம் ‘அத்தர்’ - நல்லதம்பியின் சிறுகதைகள்

 


( சிறுகதை - காலாண்டிதழில் ( ஆகஸ்ட் 2022 ) வெளியான கட்டுரை )

அறிமுகமில்லாத ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை எந்தவொரு எதிர்ப்பார்ப்புமின்றி வாசிக்கும்போது அது தருகிற அனுபவம் தனித்தன்மைமிக்கதாக இருக்கும்.

கே.நல்லதம்பியை அறிமுகமில்லாதவர் என்று சொல்ல முடியாது. விவேக் ஷான்பாக்கின் ‘காச்சர் கோச்சர்’ நாவல் அவரை ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளராக அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு, மிகக் குறைந்த கால அவகாசத்தில் கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்துக்கும் முக்கியமான பல நூல்களை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால், அவரை ஒரு சிறுகதை எழுத்தாளராக அறிமுகப்படுத்தியுள்ளது ‘அத்தர்’ தொகுப்பு.

‘அத்தர்’ மிகச் சிறிய தொகுப்பு. ஆறு கதைகளை மட்டுமே கொண்டது. கிரௌன் அளவில் 120 பக்கங்கள் மட்டுமே. இதைப் படித்து முடித்தவுடன் மீண்டும் ஒரு முறை எழுதியவரின் பெயரைப் பார்த்து உறுதி செய்துகொண்டேன். ஏனெனில் இந்தத் தொகுப்பு அப்படியொரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. கதைகளின் வடிவங்கள் வேறானபோதும் கதை சொல்லும் மொழி ஒன்றே. நேரடியான, எளிமையான ஆனால் செறிவான மொழியிலேயே எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டுள்ளன.

புனைவெழுத்தாளர்கள் மொழியாக்கம் செய்திருக்கும் நூல்களில் புனைவின் நுட்பங்களும் மொழி நேர்த்தியும் துலக்கமாக வெளிப்பட்டிருக்கும். தொழில்முறை மொழிபெயர்ப்பில் உணர நேர்கிற போதாமைகள் அவற்றில் இருக்காது. உலகப் புகழ்பெற்ற புனைவெழுத்தாளர்கள் பலரும் முக்கியமான ஆக்கங்களை மொழிபெயர்த்துள்ளனர்.

மொழிபெயர்ப்பாளராக நாமறிந்த கே.நல்லதம்பியை ஒரு சிறுகதை ஆசிரியராக இத்தொகுப்பு நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இக்கதைகளின் வடிவங்களும் மொழி அமைப்பும் கச்சிதமாக அமைந்திருப்பதை மொழியாக்கத்தின் பலனாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது வடிவம், மொழி குறித்து அவருக்கு இருக்கும் இந்தத் தெளிவே அவருடைய மொழிபெயர்ப்பிலும் காணமுடிகிறது என்றும் சொல்லலாம்.

ஆறு கதைகளில் ‘தமன்நெகாரா’, ‘பிங்க் அண்ட் புளூ’, ‘அத்தர்’ மூன்று கதைகளுக்குள் உள்ள ஒரு பொதுச் சரடு ஆண்-பெண் உறவு. சரியாகச் சொன்னால் மீறல்களுடனான உறவு. இக்கதைகளில் ஆண் பெண் உறவின் மீறல்களை கையாண்டிருக்கும் விதம் தனித்தன்மைமிக்கது. தன்னியல்பில் நிகழும் அத்தகைய உறவை சரியென்றோ தவறென்றோ தீர்ப்பு சொல்லாமல் வாழ்வின் தற்செயல் கணங்களில் ஒன்றாகக் காட்டியிருக்கும் முதிர்ச்சி குறிப்பிடத்தக்கது. மரபின் சுமையால் இன்னும் உள்ளுக்குள் இருக்கும் பயத்தையும் தயக்கத்தையும் மீறி உயிரின் இயல்பான உந்துதல் அதை நோக்கிச் செலுத்தும்போது அது வாழ்வின் ஒரு பகுதியாகிவிடுகிறது. அதன் பின் அதன் லாப நஷ்டங்களை, உணர்வு நிலைகளை அவரவர் நிலையில் அனுபவிக்கவும் நேர்கிறது.

‘தமன்நெகாரா’ என்ற தீவில் தற்செயலாகச் சந்திக்கும் மத்திய வயது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் இணக்கத்தைத் தொடர்ந்து ஒரே அறையில் தங்குகிறார்கள். பொதுவான ரசனை சார்ந்து நிறைய பேசுகிறார்கள். கூடிக் களிக்கிறார்கள். ஆனால் சொந்த விபரங்களைப் பரிமாறிக் கொள்ளாமலே பிரிந்து போகிறார்கள். இருவருக்கும் இணையர்கள் உண்டு. குடும்பமும் உண்டு. அவரவர் வாழ்வில் அடைய முடியாத ஏதோவொரு நிறைவை இந்தத் தற்செயல் உறவில் கண்டடைகிறார்கள். இது சரியா, தவறா என்ற விவாதத்தையோ இதற்குப் பின் இவர்கள் இருவரும் எப்படிப்பட்ட உணர்வுடன் இருப்பார்கள் என்ற கேள்வியையோ இந்தக் கதை எழுப்பவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் வாழ்வில் அடைய முடியாத சில வெற்றிடங்கள் இருக்கக்கூடும். எதிர்பார்ப்புகளும் நிச்சயம் இருக்கும். ஆனால், அவற்றை அடையக்கூடிய வாய்ப்புகளும் அப்படி அமையும்போது நேரடியாக ஏற்றுக்கொள்கிற மனநிலையை அடைவது எளிதில்லை. அப்படியொரு சாத்தியத்தைத்தான் இந்தக் கதை முன்னிறுத்துகிறது.

இதற்கு மாறாக, திருமணத்துக்குப் பின் பல காலம் கழித்து முன்னாள் காதலியைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தைச் சொல்வது ‘பிங்க் அண்ட் ப்ளு’. கதையில் எந்த புதுமையும் இல்லை. ஆனால், கதையைச் சொன்ன விதம் வழக்கத்துக்கு மாறானது. கதாபாத்திரங்கள், சந்திக்கும் இடங்கள் வழியாக வெவ்வேறு கோணங்களில் சின்னச் சின்ன பத்திகளில் கதை விரிகிறது. கதையின் முடிவு, கதைக்கான முடிவாக மட்டும் அமையாமல், இதுவரையிலும் மறுக்கப்படுகிற அல்லது ஏற்றுக் கொள்ளத் தயங்குகிற ஒன்றுக்கான சமூகத்தின் பதிலாகவும் அமைந்திருப்பதில் இந்தக் கதை இன்னொரு சிறப்பு.

அழகான ஒரு காதல் நாவலுக்கான கருவைக் கொண்டது ‘அத்தர்’. வழக்கமான பாணியில் அல்லாமல் முற்றிலும் புதிய விதத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது. கடைத் தெருவில் கிடக்கும் கடிதம், அதிலிருந்து விரியும் பழைய காதல் கதை, அதைப் படித்துவிட்டு வீடு தேடி வந்து அந்தக் கடிதத்தைப் பெற்றுச் சொல்லும் ஒருத்தி என மிக நுட்பமாக அமைந்துள்ளது.

மூன்று கதைகளுமே திருமணம் தாண்டிய உறவைப் பேசுகின்றன. உடல் தேவைகளையும் கடந்து வேறு போதாமைகளுடனும்தான் குடும்ப அமைப்பு இருக்கக்கூடும். அதன் எல்லைகளை அனுசரித்து இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் மன அழுத்தத்துக்கும் விரிசலுக்கும் காரணமாகிறது. இந்த யதார்த்தத்தின் பின்னணியுடனே இக்கதைகள் அமைந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

இத்தொகுப்பை ‘சொல்லாத காதல்களுக்கு’ சமர்ப்பணம் செய்திருப்பது பொருத்தமானதுதான்.

கதை ஒழுங்கு மிக்க பிற கதைகளுடன் ஒப்பிடும்போது ஆல்பர் காமுவின் ‘அவுட் சைடர்’ தளர்வான அமைப்பைக் கொண்டுள்ளது. பசி பொறுக்காமல் கடையில் புத்தகத்தைத் திருடி மாட்டிக் கொள்வதும் அதன் பிறகான அவமான உணர்வுமே கதையின் மையம். கதை இந்த மையத்திலிருந்து விலகி முன்னும் பின்னுமாக அலைவதால் அடர்த்தி குறைந்து பலவீமடைந்துள்ளது.

குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இல்லாத தனிமை ஒரு மனிதனுக்குள் ஏற்படுத்தும் பல்வேறு உணர்வு நிலைகளைச் சொல்லும் ‘வீட்டின் தனிமையில்’ எல்லோருக்குமான அனுபவத்தைக் கொண்டது. நோய்த்தொற்று காலத்தில் யாருமில்லாது வீட்டுக்குள் இருக்க வேண்டிய சூழலில் மனம் கொள்ளும் கோலங்களை பலரும் அனுபவித்திருக்கக்கூடும். மனைவியைக் குறித்தும் வீட்டு வேலைகளைக் குறித்தும் உணர்ந்து கொள்ளவும் வாய்ப்பாகவும் அமைந்திருக்கும். நிதானத்துடன் தன்னை உற்றுப் பார்க்கும் தருணங்களை இக்கதை செறிவுடன் காட்டியுள்ளது.

முழுக்க வெளிப்படையாக இருப்பதென்பது சாத்தியமில்லை. ஒவ்வொருவரைக் குறித்தும் வெளியில் சொல்ல முடியாத விமர்சனங்கள், கருத்துகள் இருக்கவே செய்யும். அவற்றை அறிய நேர்ந்தால் நிம்மதியாக இருக்க முடியாத சூழலைச் சித்தரிக்கிறது ‘கண்ணாடி’. மீயதார்த்த கதைக்கான ஒரு முயற்சி.

 

மைசூரில் பிறந்த நல்லதம்பி தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற பிறகு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டார். பணிக் காலத்தில் ஹைதராபாத்தில் இருந்தவருக்கு கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளும் தெரியும்.

ஒரே சமயத்தில் தமிழிலும், கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் இக்கதைகளை எழுதியிருக்கிறார் கே.நல்லதம்பி. அதற்கான அடையாளங்களை சில இடங்களில் காண முடிகிறது. ‘அப்போது டிரைவர் மற்றும் உதவியாளன் வாய்விட்டு உரக்கச் சிரிப்பார்கள்’, ‘ஆனால் அவை மற்ற வாசனைகளைப் பற்றி மனிதர்கள் போல எந்த ஆர்வத்தையும் காட்டுவதில்லை’, ‘இந்த கடைசி நான்கை முன் சொன்னதுபோல கையால் எழுதப்பட்டிருந்தது’ போன்ற வரிகளை உதாரணமாகக் காட்டலாம். குறிப்பிட்ட பிரதேசத்துக்கானது என்று சொல்லும்படியாக எந்த அம்சங்களும் இல்லாமல் கதையை தெரிவு செய்திருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது.   

கதையை கச்சிதமாகத் தொடங்கி, எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லிச் சென்று நேர்த்தியமாக முடிக்கிறார் நல்லதம்பி. கதைகளுக்கு நடுவில் கவிதை போன்ற சில வரிகள் அமைந்துள்ளன. ‘நான் எப்போதும் இதுபோல தொலைந்து போனதில்லை, கண்டுகொண்டதும் இல்லை’, ‘நிர்வாணமாக இருக்கும்போது நம்மிடம் எல்லாமே இருப்பதுபோலவும், எதுவுமே இல்லாதது போலவும் ஒரு உணர்வு’ போன்ற வரிகளைச் சுட்டலாம். கதையின் சூழலை சின்னச் சின்ன தகவல்களுடன் துல்லியமாக உருவாக்க முடிகிறது.

குறைவான எண்ணிக்கையைக் கொண்ட தொகுப்பு என்றாலும் வடிவிலும் சொல் முறையிலும் நேர்த்தியான வாசிப்பை உறுதிப்படுத்துகிறது. இடம்பெற்றுள்ள கதைகள் புதிய அனுபவங்களைத் தருவதால் ‘அத்தர்’ பொருட்படுத்தத்தக்க ஒரு வரவாகும்.

(‘அத்தர்’ – சிறுகதைகள், எதிர் வெளியீடு )

Saturday, 1 May 2021

எளியவர்களின் அன்றாடங்கள் - ஜான் சுந்தரின் ‘பறப்பன, திரிவன, சிரிப்பன’

 


ஜான் சுந்தரின் ‘நகலிசைக் கலைஞன்’ தொகுப்பு வெளியாகி சில மாதங்கள் கழித்தே வாசிக்க நேர்ந்தது. பிரமாதமான ஒரு நாவலுக்கான தனித்துவமான கதாபாத்திரங்களையும் புனைவுத் தருணங்களையும் கொண்டிருந்தது அந்தக் கட்டுரைத் தொகுப்பு. இசைக் கலைஞர்களின் உல்லாசமும் கொண்டாட்டமுமான குணாம்சங்களை துள்ளலும் துடிப்புமாக சொல்லிய ஜான் சுந்தரின் மொழி அதே வலிமையுடன் அவர்களது வாழ்க்கையின் துயர நாட்களையும் ஆதுரத்துடன் சித்தரித்திருந்தது.

இது ஜான் சுந்தரின் எட்டு சிறுகதைகளைக் கொண்டது இத் தொகுப்பு. இவற்றில் பல கதைகளை வெளியான சந்தர்ப்பங்களிலேயே வாசித்திருக்கிறேன். கொங்கு பிரதேசத்துக்கேயுரிய தனித்துவமான, வக்கணையான மொழியும் சற்றே குசும்புடன் அவற்றை சித்தரிக்கும் சொல்முறையும் இக்கதைகளை வேறுபடுத்திக் காட்டிய அம்சங்கள். இப்போது தொகுப்பாக வாசிக்கும்போது இக் கதைகளின் வேறு சில தன்மைகளை கவனிக்க முடிந்தது.

இவை வாசித்துப் பழகிய, ஏற்கெனவே அறிந்த தளங்களில் எழுதப்பட்ட கதைகள் அல்ல.

சிறுவர் பிராயத்துக் கதைகள் என இவற்றைக் குறிப்பிடலாம். ஒவ்வொருவருக்குள்ளும் சற்றும் வண்ணமிழக்காத சிறார் பருவத்தின் வெவ்வேறு காட்சிகளை இக் கதைகள் மீட்டுத் தருகின்றன. குதூகலமும் கொண்டாட்டமுமான தூய அந்த நாட்களின் பரவசத்தை கூடுதல் குறைவின்றி சொல்லிச் செல்கின்றன. கொங்கு பிரதேசத்துக்கேயுரிய மொழியில் அந்தப் பருவத்தின் விளையாட்டுகள், ‘செல்ல’ப் பெயர்கள், சிறுதீனிகள் என எல்லாவற்றையும் நினைக்கச் செய்கின்றன.

‘செல்ல’ப் பிராணிகளின் கதைகள் என்றும் இவற்றைச் சொல்லலாம். சிறுவர் பருவத்தையும் செல்லப் பிராணிகளையும் பிரிக்க முடியாது. கிளிகள், நாய்கள், பூனைகள், காக்கைகள், அணில்கள், ஆட்டுக்குட்டியோடு பாம்பும் கூட கதைகளுக்கு நடுவே ஓடித் திரிகின்றன.  வீட்டில் திரியும் வளர்ப்புப் பிராணிகளுடனான பிணைப்பை நேர்த்தியாக வார்த்துள்ளன இக்கதைகள்.

சிறுவர் பிராயத்துக் கதைகள் அல்லது செல்லப் பிராணிகளின் கதைகள் என்று இவற்றை வகுத்துக்கொண்டாலும் இவை எளியவர்களின் மிக எளிய வாழ்க்கையையே சித்தரித்துள்ளன என்பதே இவற்றின் சிறப்பு. ஒண்டுக் குடித்தனங்கள், புறம்போக்கு நிலத்தில் அமைந்த குடிசைகள், மில் தொழிலாளர்களின் குடியிருப்புகள் என இக்கதைகள் நிகழும் களங்கள் அன்றாடம் கடந்து செல்பவை. உத்தரவாதம் அற்றவை. ஆனால் இங்குள்ள மனிதர்களுக்கு நடுவேதான் ஆடுகளும் பூனைகளும் நாய்களும் கோழிகளும்கூட உயிர் வாழ்கின்றன. அன்றாடத்தின் நிச்சயமின்மைக்கு நடுவே சின்னச் சின்ன சந்தோஷங்களை இச் சிறு உயிர்களே தருகின்றன. மழையோ வேறு இயற்கைச் சீற்றமோ தாக்கும்போது அவர்களுடன் சேர்ந்து இந்த உயிர்களும் அல்லலுறுகின்றன.

எளியவர்களது வாழ்வின் நிச்சயமற்ற அன்றாடங்களை, பாடுகளை, சிக்கல்களை, துயரம் பிழிய இடைவெளியின்றி கோர்க்கப்பட்ட வாதைகூடிய சொற்களைக் கொண்டுதான் அழுத்தமாகச் சொல்லமுடியும் என்பதில்லை.   கிளிகளும் பூனைகளும் நாய்களும் ஓடியாடி திரிந்திருக்கும் சிறுவர்களின் உலகத்துக்குள் அவர்களுக்கான கோணத்தில் சொல்லும்போது இன்னும் கனம் கூடுகிறது. ‘அந்தோணி’யின் மீதான தெரஸாவின் தாயன்பையும், ‘கிக்கி’ வளர்க்கும் மலரக்காவின் துரோகத்தையும், மில்களில் பாம்பு பிடிக்கும் சசியின் காருண்யத்தையும் வெகு சுலபமாக இக் கதைகளின் பின்னணிகளே உணர்த்துகின்றன.

‘நகலிசைக் கலைஞர்கள்’ தொகுப்பில் கண்ட பல்வேறு கலைஞர்களைப் போலவே இத்தொகுப்பிலும் சாமி, ராணி, ஸ்ரீஜா, பிரிட்டோ சார் போன்ற அபூர்வமான குணச்சித்திரங்களைப் பார்க்க முடிகிறது. இவர்களே நம் அன்றாடத்தின் அரிதார சலிப்பைத் துடைப்பவர்கள்.

இத்தொகுப்பின் இன்னொரு சுவாரஸ்யம், வாசிப்பினிடையே கேட்கக் கிடைக்கும் ‘ஓசை’கள். ஜான் சுந்தர் இசைக் கலைஞர் என்பதால் அன்றாடத்தின் ஓசைகளை தவறவிடாமல் வாக்கியங்களுக்கிடையே கோர்த்துவிடுகிறார். ‘அபூம்சகா’, ‘டிக்கினி டிக்கினி’ என அந்த ஓசைகளுடன் படிக்கும்போது கதையும் அந்த கதாபாத்திரமும் இன்னும் நெருக்கமாகிவிடுகிற்து. அதேபோல, ஜோக்குட்டி, ரேக்குட்டி, கிக்கி, டிப்பி, டிக்கா என்று கதாபாத்திரங்களுக்கு அவர் சூட்டும் பெயர்கள் விசேஷமானவை.

சுவையாகவும் நேர்த்தியாகவும் சொல்லியுள்ள இக்கதைகளில் சில ( பேசாமடந்தை, பித்தளை நாகம்) திருத்தமாக முடிவுகளை எட்டவில்லை. லைன்வீட்டு சந்தில் ஒரு பியானோ எனும் ஒற்றை வரியில் ஆச்சரியத்தை தரும் ‘கின்னரப்பெட்டி’யும் ‘அணில்களுக்கு மட்டுமல்ல காக்கைகளுக்கும் பசிக்கும்’ என்ற மனவெழுச்சியுடன் அமைந்த ‘பறப்பன, திரிவன, சிரிப்பன’வும் அவ்வாறான உச்சத்தை எட்டியுள்ளன.

‘பறப்பன, திரிவன, சிரிப்பன’ என மிகப் பொருத்தமாக பெயர் சூட்டப்பட்டிருக்கும் இத்தொகுப்பு எளிய உயிர்களின் இருப்பினால் மேன்மையுற்றிருக்கும் எளியவர்களின் அன்றாடங்களை சிறார் பருவத்துக்கேயுரிய களங்கமற்ற பார்வையில் நேர்த்தியாகத் தந்திருக்கிறது.

0

பறப்பன, திரிவன, சிரிப்பன ( சிறுகதைகள்)ஜான் சுந்தர்

காலச்சுவடு பதிப்பகம்

Saturday, 24 April 2021

நிழற்காடு – விஜயராவணன்


 

சிறுகதைகளை எழுத முயலும் ஒருவர் தனது பால்யகால அனுபவங்களை எழுத முனைவதே இயல்பு. எழுதத் துவங்கும்போது எழும் பதற்றங்களையும் சந்தேகங்களையும் நம்பிக்கைக் குலைவையும் சமன்படுத்த அது உதவும். சிறார் பருவம் அவரவர்க்கான தனித்த ரகசியங்களையும் கொண்டாட்டங்களையும் பல சமயங்களில் துயரங்களையும்கூட கொண்டிருக்கும். அவ்வாறான மன உலகிலிருந்து வெளிப்படும் எழுத்தில் உணரநேர்கிற களங்கமின்மை அந்தக் கதைகளுக்கு விசேஷமான ஒளியைத் தருகிறது. வியப்பும் சாகசமும் கற்பனையுமாய் கலந்த அந்த உலகம் எளிமையானதும் அழகானதும்கூட. அந்தப் பருவத்தின் நிறங்களையும் வாசனைகளையும் துல்லியமாகவும் சீராகவும் சொல்வது எளிது.

இங்கிருந்து அடுத்த நிலைக்கு நகரும்போது குடும்பம், உறவு சார்ந்த நுட்பமான இழைகளையும் மர்மங்களையும் துலக்கிப் பார்க்க முனையலாம். எந்த அளவுக்கு எதைச் சொல்லலாம் என்ற தெளிவு கூடியிருக்கும். கணிசமான வாசிப்பும் எழுத்துப் பழக்கமும் சேருமென்றால் புனைவு சார்ந்த தெளிவையும் தேர்வையும் இந்த நிலையில் அடைந்துவிட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே தன் முன்னால் உள்ள புனைவின் வடிவங்களையும் மொழியமைப்பையும் கடந்து புதிதாக எதையேனும் முயலவேண்டும் என்ற சாகச உணர்வு இதன் அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும். புதிய கதைப்புலத்தில் வேறு விதமான உணர்வு நிலைகளைச் சொல்ல முனையக்கூடும். இந்த முயற்சியில் நிச்சயமாக சாதிக்க முடியும் என்பது உறுதியில்லை என்றாலும் அந்த அடியை நோக்கி எட்டுவைக்கும் திறன் கைகூடியிருக்கும் என்பதுதான் இதன் அனுகூலம்.

விஜயராவணனின் ‘நிழற்காடு’ தொகுப்பிலுள்ள கதைகள், அவர் இந்த படிநிலைகளைக் கடந்து வந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துவனவாய் உள்ளன. அதே சமயத்தில் ஒரே கதையில் இந்த மூன்று படிநிலைகளும் ஒன்று கலந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

‘மொட்டை மாடி’, ‘காகிதக் கப்பல்’, ‘அநாமதேய சயனம்’ ஆகிய மூன்றும் சிறார் பருவத்தின் அனுபவங்களைக் கொண்டவை. ‘மொட்டை மாடி’ தனக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக தலைமுடியை இழக்கும் சிறுவனின் கதை. வேறு அடுக்குகள் எவையும் இல்லாத நேரடியான, சற்றே புகார்த்தன்மையும் நகைப்பும் கொண்டது. ‘அநாமதேய சயனம்’ தூங்கிக் கொண்டே இருக்க விரும்பும் சிறுவனில் தொடங்கி, தூக்கத்தின் மீதான அத்தகைய ஈடுபாடு அவன் வளருந்தோறும் பெருகி, கட்டாயமாக மறுக்கப்படும் நிலையில் சிதைவுறும் நிலையை எட்டுகிறது. சிறுவர் பருவத்தில் சாத்தியமாகும் எளிய விருப்பம், வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளில் பொறுப்புகளும் சுமைகளும் கூடுந்தோறும் அரிதான ஒன்றாக கைவிட்டுப்போகிறது. மனநிலையிலும் வாழ்நிலையிலும் உருவாகும் மாற்றத்தை ஒன்றிணைக்கும்போது இந்தக் கதை கூடுதல் ஆழத்தை அடைகிறது. ‘காகிதக் கப்பல்’ என்ற தலைப்பே அனைவரையும் சிறுவர் பருவத்துக்கு சட்டென்று இழுத்துச் சென்றுவிடுகிறது. இந்த உடனடி கவன ஈர்ப்பின் விசையில் கதைக்குள் நுழையும்போது நமக்குக் காத்திருப்பது வேறொரு உலகம். கல்கத்தாவில் சின்னஞ்சிறிய உணவகத்தில் வேலை பார்க்கும் ஒரு சிறுவனையும் அவனது கப்பல் கனவையும் அந்த உலகம் காட்டுகிறது. கப்பலைப் பார்க்கவேண்டும் என்ற அவனது கனவை துல்லியமாகச் சொல்லிச் செல்லும் அதே நேரத்தில் சிதைவுற்ற அவனது வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளையும் திறந்து காட்டுகிறது. பால்ய காலத்து காட்சிகளிலிருந்து, எளிய சந்தோஷங்களிலிருந்து நகரும் கதை அடுத்தடுத்து துயரங்களையும் சோதனைகளையும் காட்டும்போதுகூட சிறுவனின் எளிய களங்கமற்ற மனம் அவற்றின் அழுத்தத்தை ஒற்றியெடுத்து கப்பலைக் காணும் அவனது கனவை மட்டுமே துலக்கிக் காட்டும்விதமாக  சொல்லப்பட்டிருப்பதே இந்தக் கதையின் சிறப்பு.

‘சிட்டுக்குருவி’, ‘முகங்கள்’ ஆகிய இரண்டு கதைகளும் குடும்பம், உறவுகள் சார்ந்தவை. இயற்கைக்கும் பிற உயிர்களுக்கும் மனிதனுக்குமிடையேயான பிணைப்பை சொல்லத்தகுந்த கதைகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் உள்ளன. எதை நாம் இழந்துகொண்டிருக்கிறோமோ அதைக் குறித்து அதிகமும் பேசத்தான் வேண்டும் என்பதுபோல இத்தகைய புனைவுகள் எழுதப்படுகின்றன. சிட்டுக்குருவியின் கூட்டுக்காகவும், குஞ்சுகளுக்காகவும் பரிதவிக்கும் அதே பெற்ற மனம்தான் ‘முகங்கள்’ கதையிலும் இழந்த மகனுக்காகத் தவித்துக் கிடக்கிறது.

சொல்முறையில் புதிதாக எதையேனும் முயலவேண்டும் என்பதன் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளவை ‘சவப்பெட்டி’, ‘நிழற்காடு’ ஆகிய கதைகள். ‘நிழற்காடு’ தொன்மங்கள், கிராமங்களுக்கேயுரிய நம்பிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியுடன் அசாதாரண நிகழ்வுகளைக் கொண்டுள்ளதால் ஒரு புனைகதையாக இது அனுபவமாகிறது. அதே சமயத்தில், நிகழ்கால மோதல்களை லேசான அரசியல் பார்வையுடன் சொல்ல முனைந்துள்ள ‘சவப்பெட்டி’ தன்னளவில் புனைவாக உருமாறுவதில் தடுமாற்றங்கள் உள்ளன.

இந்தத் தொகுப்பில் விஜயராவணனை தனித்துவத்துடன் அடையாளப்படுத்தும் கதைகளாக இரண்டு கதைகளைச் சொல்லலாம். ஒன்று, ‘உதைக்கப்படாத கால்பந்து’. உள்நாட்டுக் கலகமும் உத்தரவாதமற்ற அன்றாடமுமான ஒரு ஆப்பிரிக்க நாட்டில், வேலை நிமித்தமாகச் செல்லும் ஒருவனின் அனுபவம் இந்தக் கதை. அந்த நாட்டின் இளைஞர்களும் சிறுவர்களும் அதிகமும் நேசிப்பது கால்பந்து. அழுக்கான கால்பந்தோடு அன்றாடமும் சந்திக்க நேரும் சிறுவனுக்கு புதிய கால்பந்துகளை வாங்கித் தரும் கதைசொல்லி, அவன் நினைத்தாற்போல கால்பந்தாடும் சிறுவனல்ல என்பதை உணர்வதோடு கதை முடிகிறது. இந்தக் கதையிலும் அரசியல், சமகால நிகழ்வுகள், தனிமனித அவலம் என பல்வேறு இழைகளும் உள்ளடங்கியுள்ளன. ஆனால், இவற்றினூடே கால்பந்தை நேசிக்கும் சிறுவனைக் குறித்த சித்திரமும் அவனை அதிலிருந்து விலக்கும் சூழலும் தெளிவாக மேலெழுந்துள்ளன.

இரண்டாவது கதை, ‘பேசும் தேநீர் கோப்பைகள்’. ஒரு நீள்கவிதையென அழகான படிமங்களும் எளிமையான உரையாடல்களும் அமைந்த சிறுகதை. அடிக்கடி நிறம் மாறும் ஜப்பானின் பியூஜி எரிமலையை வண்ணங்கள் கொண்டு வரைய முயலும் பார்வைத் திறனிழந்த ஓவியர் ஹாருட்டோவும், அவரது தேநீர் கோப்பைகளும், விருந்தினரின் கையிலிருக்கும் பூனையுமாக அபாரமான அனுபவத்தைத் தரும் கதை. கலைஞனின் மனம் கொள்ளும் பித்து, கண்டடையும் நொடியில் அடையும் பரவசம், மேலும் மேலும் என விழையும் துடிப்பு, அனைத்துக்கும் அப்பால் கவியும் மௌனம் என கதை நெடுகிலும் அழகிய தருணங்கள். ஒரு மொழிபெயர்ப்புக்குக் கதை என யோசிக்கச் செய்யுமளவு மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் எழுதப்பட்டுள்ளது.

திருகலான மொழியில் சிக்கலான வாக்கிய அமைப்பைக்கொண்டுதான் புதுவகைக் கதைகளை எழுத முடியும் என்ற மனப்போக்கு தேவையற்றது என்பதை வழிமொழிகிறது விஜயராவணனின் இத் தொகுப்பு.

0

சால்ட் வெளியீடு – டிசம்பர் 2020

இசூமியின் நறுமணம் – ரா.செந்தில்குமார்


 

ஜெயமோகனின் தளத்தில் வெளியான ‘மடத்து வீடு’ சிறுகதையே ரா.செந்தில்குமாரை அறிமுகப்படுத்தியது. அந்தக் கதையில் சித்தரிக்கப்பட்டிருந்த சூழலும், மடத்து வீட்டுப் பெண்களின் குணாம்சங்களை விவரித்திருந்த விதமும், உடல் முடங்கிப் போன நிலையிலும் சுடரணையாத காமத்தின் உந்துதலை தவிர்க்க நினையாத அப்பாவின் கதாபாத்திரமும் நல்லதொரு சிறுகதையென அந்தக் கதையை நினைவில் நிற்கச் செய்திருந்தன.

சில வருடங்களுக்குப் பிறகு ‘இசூமியின் நறுமணம்’ வெளியானது. கேளிக்கையான மனநிலையில் காமத்தை ஒரு கொண்டாட்டமாய் வெளிப்படுத்தும் மிதப்பான சூழலில் நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் ஒரு பெண்ணிடம் உணர்ந்த வாசனையை காமத்தைத் தாண்டிய ஒரு அபாரமான அனுபவமாய் முன்வைக்கிற மிக நுட்பமான, ஆழமான சிறுகதை. பெண்களை போகத்துக்குரிய எதிர் பாலினமாக அணுகும் உயிர் இயல்பை ஒவ்வொரு ஆணும் கடந்து வர நேரிடும் தருணங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் அது வெவ்வேறு சந்தர்ப்பங்களாய் அனுபவங்களாய் அமையும். பொதுமைப்படுத்துவது கடினம். அப்படியொரு தெளிவு மனத்தில் ஏற்படும்போது, சமயங்களில் அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம், உடலிச்சை அடங்கி தந்தைமை மேலெழுந்து பெண்கள் அனைவரையும் மகள்களாக உணரும் பார்வையைத் தரும். அதுவே இன்னும் மேலான நிலையில் பெற்றவளுக்கு நிகரானவர்களாய் அவர்களை நிறுத்திக் காட்டும். இசூமியின் நறுமணம் கதையில் கோபயாஷி சான் எட்டும் உச்சம் இத்தகையதுதான். உணர்வுநிலையில் ஏற்படும் இந்த மாற்றத்தை எழுத்தில் கொண்டுவருவது சவாலான ஒன்று. ஆனால், காமத்தின் பல்வேறு மனப்பாங்குகளை களிப்பும் கொண்டாட்டமுமான உரையாடல்களின் வழியாக நகர்த்திச் சென்று அதன் எல்லையில் கோபயாஷியின் கண்டுணர்தலாக நிறுத்த முடிந்திருக்கிறது. போனி டெயில் பரிசாரகி இந்தக் கதையின் துணை கதாபாத்திரமாக இருந்தபோதும் இப்படியொரு உச்சத்தை சாத்தியப்படுத்தும் சாட்சியாக சித்தரித்திருப்பது கதையின் அழுத்தத்தை மேலும் கூட்டுகிறது.

‘இசூமியின் நறுமணம்’ போன்றே இன்னும் சில கதைகளில் ஜப்பானின் பின்னணி ஊடுபாவாக அமைந்திருக்கிறது. மனித உறவுகளுக்கேயுரிய குணாம்சங்களான சிடுக்குகள், அக மோதல்கள், காமம், துரோகம் போன்றவை எல்லா நிலங்களுக்கும் பொதுவானவை. அவற்றுடன் அந்தந்த நிலத்தின் கலாச்சார அடையாளங்களையும் நுட்பங்களையும் சேர்க்கும்போது அந்தக் கதைகளுக்கு தனித்துவம் கூடிவிடுவதைத்தான் ‘தானிவத்தாரி’, ‘கனவுகளில் தொடர்பவள்’, ‘மயக்குறு மக்கள்’, ‘சிடியா கிராஸிங்’ ஆகிய கதைகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த அம்சத்தை துலக்கிக் காட்டவென ‘மலரினும் மெல்லிது காமம்’, ‘தானிவத்தாரி’ ஆகிய இரண்டு கதைகளைச் சொல்லலாம். ஆண் பெண் உறவில் எழும் தடுமாற்றமும் விளைவும்தான் இரண்டு கதைகளிலுமே மையம். தமிழகச் சூழலில் சொல்லப்பட்டிருக்கும் ‘மலரினும் மெல்லிது காமம்’ கதையில் ‘தெரிந்த மனிதன் என்ன தீமையை செய்துவிட முடியும்?’ என்ற வாக்கியமே ஜப்பானின் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள ‘தானிவத்தாரி’ கதையில் ‘பள்ளத்தாக்கைக் கடக்க துணைவரும் பாட’லாகச் சொல்லப்பட்டுள்ளது. சக மனிதனின் மீது இன்னொருவன் கொள்ளும் நம்பிக்கை ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் சிதறடிக்கப்படும்போதுகூட முற்றிலும் அவன் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை; அடுத்தவர் மீது அந்தக் கசப்பைப் பொருத்திப் பார்ப்பதுமில்லை என்பதையே இரண்டு கதைகளும் வெவ்வேறு சொற்களில் வெளிப்படுத்துகின்றன.

‘அனுபவ பாத்தியம்’ கதையில், மன்னார்குடியில் குத்தகை நிலத்தைத் திருப்பித் தர மறுப்பவர்களின் மனநிலையும் ‘நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள்’ கதையில் கிகுச்சி சானின் மீது குற்றம் சாட்டும் ஜீவானந்தத்தின் மனோபாவமும் அடிப்படையில் ஒன்றுதான்.

‘செர்ரி பிளாசம்’, ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ இரண்டும் அபத்தமான புதிர் கணங்களில் மையம் கொண்டவை. திட்டமிடல்கள் அனைத்தையும் நொடியில் ஒன்றுமில்லாமல் செய்கிற வல்லமைகொண்ட மரணமே இரண்டிலும் கையாளப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான பற்றுதலும் உறவுகளும் அர்த்தமற்றவையோ என்று மனம் சோர்வுறும்போது தக்கயாமாவின் உச்சிப்பகுதியில் ஒரு பழைய மரவீட்டின் அருகில் ககி மரத்திலிருந்து கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கும் கிழவரையும், அவர் நிற்கிற ஏணியைப் பிடித்துக்கொண்டிருக்கிற கிழவியையும் காட்டுகிறார் செந்தில்குமார். நல்ல அனுபவத்தை தரும் சிறுகதை இதற்கு மேல் எதையும் சொல்லாது. ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ கதையும் மேலதிகமாக எதையும் சொல்லவில்லை.

காஞ்சி எழுத்துகள், சகுரா மலர்கள், கிமோனா, சாமுராய்கள், சிம்பாசி ரயில் சந்திப்பு, விதவிதமான பானங்கள், உணவுகள் என ஜப்பானுக்கேயுரிய அடையாளங்கள் கதையில் தேவையான அளவுக்கு மிகப் பொருத்தமான இடங்களில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன.

உலகெங்கும் கால்கொண்டிருக்கும் இன்றைய புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர், தம் அயல்நில வாழ்வின் அனுபவங்களை தமிழ் கதைப்புலத்துக்கு வலுசேர்க்கும் புனைவுகளாக மாற்றித் தருகிறார்கள். அந்த வரிசையில் ரா.செந்தில்குமாரின் ‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பை சிறிதும் தயக்கமின்றி சேர்க்கலாம்.

0

இசூமியின் நறுமணம், ரா.செந்தில்குமார்

யாவரும் பப்ளிஷர்ஸ் - ஜனவரி 2021

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...