Sunday, 4 October 2026

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

 


போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிருச்சி. வீட்ல சின்னதா ஒரு கெட் டுகதர். நீயும் வந்தா நல்லாருக்கும். அம்மாவும் சொன்னாங்க.”

பிஷப் உபகாரசாமி பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தபோதுதான் சரவணனை முதன்முதலாகப் பார்த்தேன். எண்ணெயிட்டு படிய வாரியத் தலை. திருத்தமான உடை. பார்த்தவுடனே பேசத் தொடங்கிவிட்டோம். ஒருநாள் மதியம் எதிர்பாராமல் பள்ளியில் விடுமுறை அறிவித்தபோது சரவணன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். தென்னை மரங்கள் சூழ்ந்த காம்பவுண்டின் மேற்குக் கோடியில் திண்ணை வைத்த ஓட்டு வீடு. தெற்கில் கட்டுத்தரை. அதனையொட்டி வைக்கோல்போர். ஒடித்துப் போட்டிருந்த கிளுவைத் தழைகளை மேய்ந்திருந்தன வெள்ளாடுகள் நான்கு. மல்லிகை மொக்குகளைப் பறித்துக் கொண்டிருந்தார் சரவணனின் அம்மா “என்ன கண்ணு சீக்கரமா வந்துட்டீங்க?”

“லீவு வுட்டாங்கம்மா. நான் சொல்லுவேன்ல பாலு, இவந்தான்.”

“வாப்பா. கை காலக் கழுவிட்டு வாங்க. சோறு உங்கலாம்.”

கொள்ளுப் பருப்பும் அவரைக்காய் பொறியலும் கெட்டித் தயிருமாய் சுவையான உணவு. சுண்ணாம்புக் கரையுடன் சாணமிட்டு மெழுகிய தரையுடன் மிகச் சுத்தமான அடுப்பங்கரை. புளிபோட்டுத் தேய்த்த பளபளப்புடன் பித்தளைப் பாத்திரங்கள் மூலையில் அடுக்கியிருக்க துளியளவு எண்ணெய்ப் பிசுக்கை எங்குமே பார்க்க முடியவில்லை. வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் அம்மாவின் சுறுசுறுப்பும் சுத்தமும் நேர்த்தியும் நிறைந்திருந்தன.

அடிக்கடி வீட்டுக்குப் போகத் தொடங்கி சில மாதங்களுக்குப் பிறகே சரவணனின் அப்பாவும் அம்மாவும் பேசிக் கொள்வதேயில்லை என்பதை கவனித்தேன். பருத்தி வியாபாரியான அவர் காலையில் கடைக்குப் போனால் பின்னிரவில்தான் வீடு திரும்புவார். சரியாக எட்டு மணிக்கு அடுப்பங்கரைத் திண்ணையில் தண்ணீர் சொம்புடன் வட்டிலை வைத்துவிடுவார் அம்மா. நெற்றி நிறைய விபூதிப் பட்டையுடன் வலை பனியனும் வேட்டியுமாய் அப்பா வந்தமரும்போது சூடான தோசையை வட்டிலில் இடுவாள் அம்மா. தக்காளி சாம்பாரும் தாளிக்காத கெட்டிச் சட்னியுமாய் மூன்று தோசைகளைத் தின்றுவிட்டு எழுந்துவிடுவார். கையைக் கழுவி ஈரிழைத் துண்டில் துடைக்கும்போதே சூடான டீ தயாராக இருக்கும். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு புறப்பட்டு விடுவார். சரியாக ஒன்றரை மணிக்கு அடுக்குப் போசியில் மதிய உணவு கடைக்கு வந்துவிடும். ராத்திரி அவர் வீடு திரும்பும்போதும் காலையில் நடந்த அதே காட்சிதான். திண்ணையில் வட்டில். சூடாக தோசையோ உப்புமாவோ. சில நாள்களில் சப்பாத்தி. சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிகரெட். புகைத்துக் கொண்டிருக்கும்போதே அம்மா உள்ளறையில் படுத்துவிடுவாள். அப்பாவின் படுக்கை அதே திண்ணையில்தான். இத்தனைக்கும் நடுவில் இருவருக்கும் நடுவில் ஒரு வார்த்தைகூட இருக்காது.

அப்பாவின் உலகம் பருத்திக் கடையோடு முடிந்துவிட அம்மாவும் அடுப்பங்கரையும் வீடுமாக இருந்துவிட்டார். ஒவ்வொருவருக்கும் அடுத்தவரிடத்தில் பெறவும் தரவும் எதுவுமில்லை என்பதுபோல் இருவரும் அவரவர் எல்லைக்குள் நின்றிருந்தனர்.

திடீரென்று ஒருநாள் அகாலமாய் மறைந்தார் அப்பா. மாரடைப்பு. கனமாய் கவிந்தது பெருந்துக்கம். கண்ணீர் விடவில்லை. புலம்பி அழவுமில்லை. நிலைகுலைந்த வீட்டில் அம்மா கழுத்தில் சுற்றிய புடவைத் தலைப்புடன் உட்கார்ந்திருந்தார்.

பதினாறு கும்பிட்ட பிறகு அனைவரும் அவரவர் வேலைக்குத் திரும்பினர். சரவணன் பருத்திக் கடைக்குப் போனான். அப்பாவின் வட்டிலில் இப்போது சரவணனுக்கு அம்மா சூடான தோசையை இட்டார். மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தான் சரவணன். வேறெந்த மாற்றமும் அம்மாவிடம் இருக்கவில்லை.

முதல் வருஷாந்திரத்துக்குப் போயிருந்தபோது சரவணன் சொன்னான் “இதுவே அம்மா போயி அப்பா இருந்துருந்தா ரொம்ப சிரமப்பட்டிருப்பாரு. அம்மாகிட்ட எந்த வித்தியாசமும் தெரியலை. எதையும் வெளிய காட்டிக்கறதுமில்லை.”

எத்தனை காலம் எப்படிப்பட்ட தாம்பத்திய வாழ்க்கையில் இருந்திருந்தாலும், புரிதல் இருந்தாலும் இல்லாதுபோனாலும், முதுமையில் கணவனும் மனைவியும் உடனிருப்பது பெரும் ஆறுதல்தான். மனைவி இல்லாது போகும் உலகில் கணவன் சமாளிப்பது கடினம். கணவன் இல்லாதுபோனாலும் அன்றாடத்தைக் கடத்துவது மனைவிக்கு எளிது.

மகளோ மகனோ யார் வீடாக இருந்தாலும் அம்மாக்களால் சமாளிக்க முடியும். யாருமே இல்லாத நிலையில் கூட சமையல் வேலை செய்தோ, பண்டபாத்திரம் கழுவியோ, வீட்டு வேலை செய்தோ எவர் தயவுமின்றி தனியாகப் பொங்கிச் சாப்பிட்டு நாட்களை கடத்திவிடவும் முடியும். ஆனால், அப்பாக்களின் கதை அப்படியில்லை. எவரையேனும் சார்ந்திருக்க வேண்டிய நிலை. வேலை செய்து சம்பாதித்தாலும்கூட ஒவ்வொரு வேளையும் பொங்கித் திங்க இன்னொருவர் கையை எதிர்பார்த்திருக்கவே நேரிடுகிறது, பெரும்பாலும். கணவரில்லாத வெறுமையை மனைவியால் பேரன் பேத்திகளைக் கொண்டோ உழைப்பைக் கொண்டோ நிரப்பிக் கொள்ள முடியும். ஆனால், மனைவியில்லாத வெறுமையைத் தாங்குவதோ தாண்டுவதோ கணவனுக்கு எளிதில்லை.

வாழ்ந்தபோது மனைவிக்கு எத்தகைய இடத்தையும் மரியாதையையும் கணவன் கொடுத்திருந்தார் என்பது அவரது மனச்சான்றுக்கு உட்பட்டது. ஆனால், மனைவி இல்லாத காலத்தில் அன்றாடத்தின் ஒவ்வொரு நகர்விலும் அவரது இருப்பை கணவன் உணர்ந்தபடியேதான் இருக்க நேரும்.

பலரது வாழ்வின் தவிர்க்க முடியாத இந்த விதியை சதீஷ்குமார் சீனிவாசனின் இந்தக் கவிதை மிகச் செறிவாகவும் ஆழமாகவும் துலக்கித் தருகிறது.

அம்மா போலவே ஒரு நிழல்

வழக்கம்போல

அம்மாவும்

செத்துப் போயிருந்தாள்.

அம்மாவிடம்

எந்தக் கனவும் இல்லாதவராகத்தான்

இருந்தார் அப்பா.

வழக்கத்துக்கு மாறாக நடந்துகொள்ளும்

அப்பாவின் பின்னால்

அம்மா போலவே

ஒரு நிழல்.

 

0

இளம் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனின் ஐந்து தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. எளிமையும் கூர்மையுமான மொழியில் ஆழங்களைத் தொட முயல்பவை இவரது கவிதைகள்.

அண்மையில் வெளியான ‘எனக்குத் தெரிந்தவரை வானில் பறவைகள் இல்லை’ தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதை இது.

2023ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...