இந்திய இலக்கியத்தின் பெரும் கவிஞர், புனைகதையாளர், விமர்சகர். கடந்த ஆறு பத்தாண்டுகளாக இடையறாது அவரது குரல் எழுத்துலகில் கவிதைகளாக, கதைகளாக, விமர்சனங்களாக, மொழியாக்கங்களாக ஒலித்தபடியே இருந்தது. கசடறக் கற்றவர். திசைகளெங்கும் தொடர்ந்து பயணம் செய்தவர். தாயகத்தின் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அடித்தளமாகக் கொண்ட நவீன சர்வதேசப் பார்வையை, அணுகுமுறையைக் கொண்ட வெகுசில இந்திய அறிவுஜீவிகளில் ஒருவர்.
1927ம் வருடம் செப்டம்பர் 19ம் நாள், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பைசாபாத்தில் பிறந்தவர் குன்வர் நாராயண். தனது குழந்தைப்பருவத்தை பைசாபாத்திலும் பின்னர் அயோத்யாவிலும் கழித்தவர். பதினோரு வயதாக இருக்கும்போது தாயும் சகோதரியும் காசநோயில் மரணமுற்றது அவரது வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தத் துயரச் சம்பவத்துக்குப் பின்னர் அவர் தன் சகோதரருடன் லக்னோவுக்கு இடம்பெயர்ந்தார். உறவினர்களுடனான கூட்டுக் குடும்பத்தில் வசித்தார். பல்வேறு அரசியல் தலைவர்கள் வந்து போகும் இடமாக இருந்தது அந்த இல்லமும் இந்திய அரசியலில் காந்தியின் வருகையும் அவரது இளமையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தின. 1947ல் ஒரு வருட காலம் பம்பாயில் ஆச்சாரிய நரேந்திர தேவுடன் தங்கியிருக்க வாய்த்ததும் பின்னர் ஆச்சாரிய கிருபளானியுடன் தில்லியில் தங்கி ‘விஜில்’ பத்திரிக்கையின் உருவாக்கத்தில் உதவி புரிந்ததும் நாராயணின் இளம் மனத்தில் ஆழமான பாதிப்புகளை உருவாக்கின. 1951ம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். நகரத்தின் ஒரு காபி கடையில் வாரம் ஒரு முறை, ‘லேகக் சங்’ (எழுத்தாளர்களின் குழுமம்) என்ற பெயரில் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் சந்திப்பதுண்டு. அங்கு அவர்களுடனான உரையாடல்களும் வாசிப்பும் குன்வர் நாராயணின் இலக்கிய அடிப்படைகளுக்கு உரம் சேர்த்தன. குடும்ப வியாபாரத்தில் ஈடுபட விருப்பம் இல்லாமல் 1955ம் ஆண்டு ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டார். போலந்து, செக்கோஸ்லாவாக்யா, சீனா, ருஷ்யா ஆகிய நாடுகளுக்குச் சென்று நஸீம் இக்மத், ஆன்டன் ஸ்லோன்ஸ்மிகி, பாப்லோ நெருதா ஆகிய கவிஞர்களைச் சந்தித்தார்.
இந்தியாவுக்குத் திரும்பி வந்த சில நாட்களிலிலேயே, 28 வயதில், அவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘சக்ரவியூகம்’ வெளியானது. பெரும் கவனம் பெற்றது. ஆனால், அவரை ஹிந்தி புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக உருவாக்கியது 1959ல் ஹிந்தி மொழியின் பிரசித்திபெற்ற அக்ஞேய தொகுத்தளித்த ‘தீஸ்ரா சப்தக்’ தொகுப்பேயாகும். ஹிந்தி புதுக் கவிதை வரலாற்றின் மைல்கல்லாகக் கருதப்படும் தொகுப்பு அது. அத்தொகுப்பில் இடம்பெற்ற ஏழு சமகாலக் கவிஞர்களில் ஒருவர் குன்வர் நாராயண்.
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற நாராயண் பெரும்பாலும் ஹிந்தியில்தான் எழுதினார். அவ்வப்போது ஆங்கிலத்திலும் உருதுவிலும்கூட. தொடர்ந்து கவிதைகள் எழுதினார் என்றபோதும் அவற்றை பிரசுரிப்பதிலும் பதிப்பிப்பதிலும் நிதானப்போக்கைக் கடைபிடித்தவர். தம் கவிதைகளைக் குறித்து மெத்தப் பணிவான எண்ணம்கொண்டவர்.
வெவ்வேறு காலகட்டத்தில் ஆச்சாரிய நரேந்திர தேவுடனும் ஆச்சாரிய கிருபளானியுடனும் அவர் பணியாற்ற நேர்ந்தமை அவருக்கு இந்திய அரசியலைப் பற்றி, மார்க்ஸியம், பௌத்தம் போன்ற தத்துவங்களைப் பற்றி தெளிவான பார்வையை அடைய உதவியது. வெளிநாட்டுப் பயணமும் புகழ்பெற்ற கவிஞர்களைச் சந்தித்ததும் அவரை ஒரு கவிஞராக உருவாக்கியதில் பெரும் பங்களித்தன. மல்லார்மே, வேலரி போன்ற பிரெஞ்சு கவிஞர்களையும் கவாஃபி, போர்கெஸ் ஆகியோரையும் மொழிபெயர்த்த அனுபவங்கள் கவிதை குறித்த அவரது பார்வையை செழுமையாக்கின. கவிதை மட்டுமல்லாது காவியங்கள், சிறுகதைகள், இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, உலக சினிமாவைப் பற்றிய கட்டுரைகள், சரித்திரம், இசை, பண்பாடு குறித்த கட்டுரைகள் என பல தளங்களிலும் தனது ஆற்றல்மிக்க பங்களிப்புகளைத் தருவதற்கான விசாலமான பார்வையும் நுட்பமான ரசனையும் அவருக்கு அமைந்திருந்தது.
‘வாழ்வெனும் பெரும் திருவிழாவில் ஒரு விகடனைப் (mimic) போல எண்ணற்ற விதங்களில் தன்னை வெளிப்படுத்துகிறான் கவிஞன். அவனது ஒவ்வொரு வெளிப்பாடும் வாழ்க்கையை பரீட்சார்த்தமாக விளக்க முயல்கிறது. அதற்கு பின்னால் இருப்பது வாழ்வின் பன்முகத்தன்மையின் அடிப்படை செயல்பாட்டை புரிந்துகொண்டிருக்கும் விகடனின் சிந்தனையும் அசலான ஆளுமையுமே’ என ஒரு கவிஞனை எப்படி அணுகுவது என்பதைப் பற்றி தீஸ்ரா சப்தக் தொகுப்பில் குன்வர் நாராயண் குறிப்பிட்டிருப்பது அவரது கவிதைகளை எவ்வாறு அணுகவேண்டும் என்பதற்கான ஒரு முக்கியமான குறிப்பாகும்.
ஆறு தொகுப்புகளில் உள்ள எண்ணற்ற கவிதைகளைக் கொண்டு அவரது கவிதைகளைக் குறித்த சுருக்கமான தீர்க்கமான பார்வையை வரையறுப்பது கடினம். என்றாலும் அவரது கவிதைகளின் பொதுத்தன்மைகளாக சிலவற்றைக் குறிப்பிட முடியும். ஒன்று, அதிகமும் காலத்தை பிரதிபலிக்கும் தன்மை. இரண்டாவதாக, வாழ்வின் பல்வேறு முரண்பாடுகளைக் குறித்த தாராளமிக்க, பரந்த, கரிசனைமிகுந்த ஆனால் விமர்சனமற்ற புரிதல். மூன்றாவது, நவீனத்துவம், இனவாதம், இந்தியத்தன்மை போன்ற பெரும் பிரச்சினைகள் சார்ந்து சார்புநிலைகொண்ட உறுதியான நிலைப்பாடுகளை ஏற்க மறுத்தல். ‘கவிதை என்பது இயற்கையாகவே ஒரு சுதந்திரமான கலை வடிவம். தடைகளையோ கட்டளைகளையோ அது வரவேற்பதில்லை. அரை நூற்றாண்டு காலமாக நான் கவிதை எழுதி வருகிறேன். வெவ்வேறு இலக்கியப் போக்குகள் வந்து போவதைப் பார்த்திருக்கிறேன். இவற்றையெல்லாம் தாண்டி இன்றும் நின்றிருப்பது நல்ல கவிதை மட்டுந்தான். அவற்றைச் சுற்றி நடந்த கூப்பாடுகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன’ என்று அவர் குறிப்பிடுவதே கவிதையைக் குறித்த அவரது சுருக்கமான அழுத்தமான பார்வை எனலாம்.
1995ம் ஆண்டு ‘யாரும் இன்னொருவர் இல்லை’ தொகுப்புகாக சாகித்ய
அகாதமி விருதும் 2001ம் ஆண்டு இந்திய அளவில் கவிதைக்கான உயரிய விருதாகக் கருதப்படும்
‘கபீர் சம்மான்’ விருதும் 2005ம் ஆண்டு அவரது ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பை போற்றும்
விதமாக ‘ஞானபீட’ விருதும் வழங்கப்பட்டன. இவை தவிர வியாஸ் சம்மான், குமாரன் ஆசான் விருது
உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். 2009ம் ஆண்டில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
சர்வதேச அளவில் அவரது ஆக்கங்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
வெளிவந்திருக்கும் நூல்கள்
1.
சக்ரவியூகம்,
(கவிதைகள்) 1956
2.
பரிவேஷ்
– ஹம் தும், (கவிதைகள்) 1961
3.
ஆத்மஜயி
(காவியம்) – 1965
4.
அகரோன் கே
ஆஸ் பாஸ் (சிறுகதைகள்), 1971
5.
அப்னே சாம்னே
(கவிதைகள்), 1979
6.
கோயி தூஸ்ரா
நஹி, (கவிதைகள்), 1993
7.
ஆஜ் அவ்ர்
ஆஜ் சே பஹலே, (விமர்சனக் கட்டுரைகள்), 1999
8.
மேரே சாக்ஸாத்கார்,
(நேர்காணல்கள்), 2000
9.
இன் தினோ,
(கவிதைகள்), 2008
10.
நா சீமானே(ன்)
நா தூரியா(ன்) (உலகக் கவிதைகள்), 2019
சில கவிதைகள்
வீடு சேர்தல்
நேரடியான ரயிலைப் பிடித்து
அவரவர் வீடு சென்று சேரவே
விரும்புகிறோம் நாம் அனைவரும்
ஒரு ரயிலிருந்து இன்னொரு ரயிலுக்கு மாறும்
அவஸ்தைகளைத் தவிர்க்கவே
விரும்புகிறோம் நாம் அனைவரும்
கடைசியாய் ஒரு யாத்திரையையும்
மேலான ஒரு இருப்பிடத்தையுமே
விரும்புகிறோம் நாம் அனைவரும்
பயணங்கள் துயரகரமானவை என்றும்
அவற்றிலிருந்து விடுவிக்கிறது வீடென்றும்
யோசிக்கிறோம்
உண்மை இப்படியும் இருக்கக்கூடும்
பயணம் என்பது ஒரு சந்தர்ப்பம்
வீடு என்பது ஒரு சாத்தியம்.
ரயில் மாறிப் பயணிப்பது என்பது
எண்ணத்தை மாற்றுவது போன்றது.
நாம் அனைவரும் எப்போது எங்கே எதற்கிடையில் இருக்கிறோமோ
அதுவேயாகும்
வீடு சேர்தல்.
மொழி சிதைந்திருக்கும் சூழலில்
பிளாஸ்டிக் மரங்கள்
நைலான் மலர்கள்
ரப்பர் பறவைகள்
ஒலிப்பதிவு நாடாவில்
நினைவிலிருந்து தொலைந்துபோன
நாடோடிப் பாடல்களின்
துயர்மிகு வரிகள்.
ஒரு மரம் வறண்டு காயும்போது
எல்லாவற்றுக்கும் முன்பாக
அதன் மென்மையான பகுதிகளே
உலர்ந்து போகின்றன
அதனுடைய
மலர்கள்
அதனுடைய
இலைகள்
ஒரு மொழி உலர்ந்து வறளும்போது
சொற்கள் இழக்கின்றன தம் கவித்துவத்தை
உணர்வுகளின் புத்துணர்ச்சியை
எண்ணங்களின் உண்மைத்தன்மையை
மக்களுக்கிடையில் பெரிதாகத் தொடங்குகிறது
அறிமுகமின்மையின் வெறுமையும் இடைவெளிகளும்
நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்
சிந்தனைகளை வெளிப்படுத்தும்போது
சில விஷயங்களை எப்படிச் சொல்லவேண்டும் என்று
எவரது கவனம் அனைத்தின் மீதும் உளதோ
அவர் மீது இருக்கட்டும் அனைவரின் கவனமும்
மொழி சிதைவுற்றிருக்கும் இச்சூழலில்
எங்கேனும் தீ மூளும் எனில்
பூமியிலிருந்து உயிர்ச்சத்தை உறிஞ்சும் ஆற்றலை இழந்த
பட்டமரத்தில்தான் முதலில் அது மூளும்.
நம்புவதற்கான அவசரம் காரணமாக
ஒருமுறை செய்தி வந்தது
கவிதை இப்போது கவிதையாக இருப்பதில்லை என
அப்படியே அது பரவியது
கவிதையே இப்போது இருப்பதில்லை என்றும்.
நம்புகிறவர்கள் நம்பிவிட்டனர்
கவிதை மரித்துவிட்டதென
ஆனால் சந்தேகிப்பவர்கள் சந்தேகப்பட்டனர்
அவ்வாறு நிகழ வாய்ப்பில்லையென
இப்படியாக பிழைத்துப் போனது கவிதையின் உயிர்
இவ்வாறு நடப்பது முதல் முறையல்ல
நம்பிக்கைகளின் அவசரம் காரணமாக
வெறும் ஒரு சந்தேகம் காப்பாற்றியிருக்கும்
ஏதேனுமொரு அப்பாவியை.
கவிதை
கவிதை அறிக்கை அல்ல, சாட்சி
சிலசமயங்களில் நமக்கு முன்னே
சிலசமயங்களில் நம்மைவிட முன்பாக
சிலசயமங்களில் நமக்குப் பிறகு
உண்மையை தன் முழுமையான பொருளாகவும்
மேன்மையான மனிதனையே தன் முழு முயற்சியாகவும் கொண்டவொரு
மொழியில் அது உரைப்பதை
யாரேனும் விரும்பினாலும் தடுக்கமுடியாது.
விளம்பரங்களைப்போல ஒட்டிக்கொண்டிருக்க
ஊர்வலங்களைப்போல புறப்பட
கோஷங்களைப்போல ஒலிக்க
தேர்தல்களைப்போல வென்றிட
அதற்கு இப்போது எந்த அவசரமும் இல்லை
அது மனிதனின் மொழியில்
எங்கேனும் எப்படியாவது உயிருடன் இருக்கும்,
அவ்வளவுதான்.
கவிதையின் அவசியம்
கவிதையால் தரமுடியும் நிறைய
ஏனென்றால்
வாழ்வில் நிறையவே
சாத்தியமாகும் கவிதையால்
அதற்கு நாம்
இடம்கொடுத்தால்
மரம் பூக்களுக்கு இடம்தருவதைப்போல
இரவு நட்சத்திரங்களுக்கு இடம்தருவதைப்போல
நமக்குள்ளே எங்கேனும்
அதற்கென பாதுகாத்து வைத்திருக்க முடியும்
ஒரு மூலையை
பூமிக்கும் வானுக்கும் இடையே
மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே
ஆகக் குறைவான இடைவெளி இருக்கும்படியான ஒரு மூலையை
அப்படி யாரேனும் விரும்பினால்
கவிதையுடனான வாழ்வை வாழலாம்
முற்றிலும் கவிதையற்ற வாழ்க்கையை
புரியலாம் கவிதையற்ற காதலை.
உடைந்த குத்துவாளின்
கைப்பிடி
உடைந்த குத்துவாளின் கைப்பிடி ஒன்றை
கையில் ஏந்தியபடி
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
குத்துவாட்களைக் குறித்தும்
அவற்றைப் பாய்ச்சக்கூடிய கைகளைக் குறித்தும்
கொலைகாரர்களையும் தாக்குதல்களையும் பற்றியும்
ஆயிரம் ஆண்டுகளைப் பற்றியும்
திடீரென்று ஒரு கணம்
ஏதோவொரு இருட்டுச் சந்தில்
யாரும் கேட்காது மறைந்துவிடுகிற
அலறலைக் குறித்தும்…
வெற்றியின் சாவி
இருவரது கைகளிலும் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கிகள்
இருவரும் ஒருவரையொருவர் அஞ்சினர்
இருவரது இதயங்களிலும் நிறைந்திருந்தது
அடுத்தவர் மீதான பழைய வெறுப்பு.
அந்த வேளையில் அங்கு அவர்கள் இருவர் மட்டுமே.
ஆனால் தோட்டாக்கள் வெடித்தபோது
மாண்டு விழுந்தவன்
அந்த இடத்திலேயே இல்லாத,
டீக் கடையில் இருந்த ஒரு மூன்றாமவன்.
பிடிபட்டவன் நான்காவதாய் ஒருவன்.
அவன் டீக்கடையில் இருக்கவில்லை
தனது வீட்டில்தான் இருந்தான்,
அவனது சாட்சியத்தின் பேரில்
ஐந்தாவதாய் ஒருவனை விசாரித்து
ஆறாவதாய் ஒருவன் கைதுசெய்யப்பட்டான்
ஏழாமவனின் வாக்குமூலத்தின்பேரில்
எட்டாமவன் மேல் வழக்குத் தொடுக்கப்பட்டு
அதன் பலனாக ஒன்பதாமவன் தண்டிக்கப்பட்டான்
குற்றமில்லாதவன் என்று விடுவிக்கப்பட்டான் பத்தாமவன்
பதினொன்றாமவனின் முன்னால் வந்து முறையிட்டான்
அவன் மூலமாக
புதிய வெற்றிக்கான சாவியொன்றை
அவன் தன் விரல்களில் சுழற்றிக்கொண்டிருப்பதைக்
கண்டடைந்தான்
வேப்பம்பூ
முற்றத்தில் நிற்கும் வேப்பமரம்
பூக்கும்போது
கசப்பும் இனிப்புமான மருந்தின் வாசனை
நிறைகிறது வீடெங்கும்.
சோப்புநீர்க் குமிழிகள்போல்
காற்றில் உதிர்ந்திருக்கும் சிறு வெள்ளைப் பூக்கள்
துளசிமாடத்துக்கு நீர்வார்த்துவிட்டுத் திரும்பும்
அம்மாவின் கூந்தலில்
ஒட்டிக்கொள்ளும் ஒன்றிரண்டு பூக்கள்.
அந்தப்பூக்களைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம்
‘பூ’என ஒருமையில் அன்றி
‘பூக்கள்’ என பன்மையிலேயே யோசித்திருந்தேன் என்பது
விநோதமான ஒன்று.
அவை வாடுவதை ஒருபோதும் கண்டதில்லை நான்
செம்மயிர்க்கொன்றையைப் போலவோ
செம்மந்தாரையைப்போலவோ
வண்ணங்களுடன் மலர்வதுமில்லை அவை.
ஆனாலும் அவை உதிரும்போது
மகிழ்ச்சியுமில்லை, துயரமுமில்லை.
மலர்வதைக் காட்டிலும்
மேலும் கம்பீரத்துடனும் கௌரவத்துடனும்.
பிரமாண்டமான நீளாயுள்கொண்ட அந்த மரத்தைப் பற்றி
நினைக்கும்போதெல்லாம்
நினைவுக்கு வருகிறது உபநிடதம்
நினைவுக்கு வருகிறது தூய்மையான எளிய வாழ்க்கைமுறை
எப்போதும் அமைதியில் உறைந்திருக்கும் அதன் நிழலில்
உண்டு
கோடையில் குளிர்ச்சியையும்
குளிர்காலத்தில் வெம்மையையும் அளிக்கும்
விசித்திரமான ஒரு குணாதிசயம்.
தீர்க்கமும் தோழமையும் செறிந்த மண்மணம்
நினைவுக்கு வருகிறது
தாத்தாவின் சுபாவத்தைப்போல
நினைவுக்கு வருகிறது
எப்போதும் எல்லோருக்காகவும்
மரத்தின் கீழே போடப்பட்டிருக்கும்
ஒன்றிரண்டு கயிற்றுக் கட்டில்களும்
வேப்பம்பழங்களுடன் விளையாடிக் கழித்த குழந்தைப்பருவமும்
நினைவுக்கு வருகிறது
வேப்பமரத்துக்குக் கீழே
கிடத்தப்பட்ட அப்பாவின் உடலின்மேல்,
சங்கோசத்துடன் பற்றேதுமின்றி உதிர்ந்திருந்தன
சின்னச் சின்னப் பூக்கள்,
அம்மாவின் கூந்தலிலிருந்து உதிர்வதைப்போல.
கண்ணீர்த் துளிகளைப்போல் அல்லாமல்
தேற்றுதலென.
