Sunday, 4 October 2026

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

 


போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிருச்சி. வீட்ல சின்னதா ஒரு கெட் டுகதர். நீயும் வந்தா நல்லாருக்கும். அம்மாவும் சொன்னாங்க.”

பிஷப் உபகாரசாமி பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தபோதுதான் சரவணனை முதன்முதலாகப் பார்த்தேன். எண்ணெயிட்டு படிய வாரியத் தலை. திருத்தமான உடை. பார்த்தவுடனே பேசத் தொடங்கிவிட்டோம். ஒருநாள் மதியம் எதிர்பாராமல் பள்ளியில் விடுமுறை அறிவித்தபோது சரவணன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். தென்னை மரங்கள் சூழ்ந்த காம்பவுண்டின் மேற்குக் கோடியில் திண்ணை வைத்த ஓட்டு வீடு. தெற்கில் கட்டுத்தரை. அதனையொட்டி வைக்கோல்போர். ஒடித்துப் போட்டிருந்த கிளுவைத் தழைகளை மேய்ந்திருந்தன வெள்ளாடுகள் நான்கு. மல்லிகை மொக்குகளைப் பறித்துக் கொண்டிருந்தார் சரவணனின் அம்மா “என்ன கண்ணு சீக்கரமா வந்துட்டீங்க?”

“லீவு வுட்டாங்கம்மா. நான் சொல்லுவேன்ல பாலு, இவந்தான்.”

“வாப்பா. கை காலக் கழுவிட்டு வாங்க. சோறு உங்கலாம்.”

கொள்ளுப் பருப்பும் அவரைக்காய் பொறியலும் கெட்டித் தயிருமாய் சுவையான உணவு. சுண்ணாம்புக் கரையுடன் சாணமிட்டு மெழுகிய தரையுடன் மிகச் சுத்தமான அடுப்பங்கரை. புளிபோட்டுத் தேய்த்த பளபளப்புடன் பித்தளைப் பாத்திரங்கள் மூலையில் அடுக்கியிருக்க துளியளவு எண்ணெய்ப் பிசுக்கை எங்குமே பார்க்க முடியவில்லை. வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் அம்மாவின் சுறுசுறுப்பும் சுத்தமும் நேர்த்தியும் நிறைந்திருந்தன.

அடிக்கடி வீட்டுக்குப் போகத் தொடங்கி சில மாதங்களுக்குப் பிறகே சரவணனின் அப்பாவும் அம்மாவும் பேசிக் கொள்வதேயில்லை என்பதை கவனித்தேன். பருத்தி வியாபாரியான அவர் காலையில் கடைக்குப் போனால் பின்னிரவில்தான் வீடு திரும்புவார். சரியாக எட்டு மணிக்கு அடுப்பங்கரைத் திண்ணையில் தண்ணீர் சொம்புடன் வட்டிலை வைத்துவிடுவார் அம்மா. நெற்றி நிறைய விபூதிப் பட்டையுடன் வலை பனியனும் வேட்டியுமாய் அப்பா வந்தமரும்போது சூடான தோசையை வட்டிலில் இடுவாள் அம்மா. தக்காளி சாம்பாரும் தாளிக்காத கெட்டிச் சட்னியுமாய் மூன்று தோசைகளைத் தின்றுவிட்டு எழுந்துவிடுவார். கையைக் கழுவி ஈரிழைத் துண்டில் துடைக்கும்போதே சூடான டீ தயாராக இருக்கும். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு புறப்பட்டு விடுவார். சரியாக ஒன்றரை மணிக்கு அடுக்குப் போசியில் மதிய உணவு கடைக்கு வந்துவிடும். ராத்திரி அவர் வீடு திரும்பும்போதும் காலையில் நடந்த அதே காட்சிதான். திண்ணையில் வட்டில். சூடாக தோசையோ உப்புமாவோ. சில நாள்களில் சப்பாத்தி. சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிகரெட். புகைத்துக் கொண்டிருக்கும்போதே அம்மா உள்ளறையில் படுத்துவிடுவாள். அப்பாவின் படுக்கை அதே திண்ணையில்தான். இத்தனைக்கும் நடுவில் இருவருக்கும் நடுவில் ஒரு வார்த்தைகூட இருக்காது.

அப்பாவின் உலகம் பருத்திக் கடையோடு முடிந்துவிட அம்மாவும் அடுப்பங்கரையும் வீடுமாக இருந்துவிட்டார். ஒவ்வொருவருக்கும் அடுத்தவரிடத்தில் பெறவும் தரவும் எதுவுமில்லை என்பதுபோல் இருவரும் அவரவர் எல்லைக்குள் நின்றிருந்தனர்.

திடீரென்று ஒருநாள் அகாலமாய் மறைந்தார் அப்பா. மாரடைப்பு. கனமாய் கவிந்தது பெருந்துக்கம். கண்ணீர் விடவில்லை. புலம்பி அழவுமில்லை. நிலைகுலைந்த வீட்டில் அம்மா கழுத்தில் சுற்றிய புடவைத் தலைப்புடன் உட்கார்ந்திருந்தார்.

பதினாறு கும்பிட்ட பிறகு அனைவரும் அவரவர் வேலைக்குத் திரும்பினர். சரவணன் பருத்திக் கடைக்குப் போனான். அப்பாவின் வட்டிலில் இப்போது சரவணனுக்கு அம்மா சூடான தோசையை இட்டார். மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தான் சரவணன். வேறெந்த மாற்றமும் அம்மாவிடம் இருக்கவில்லை.

முதல் வருஷாந்திரத்துக்குப் போயிருந்தபோது சரவணன் சொன்னான் “இதுவே அம்மா போயி அப்பா இருந்துருந்தா ரொம்ப சிரமப்பட்டிருப்பாரு. அம்மாகிட்ட எந்த வித்தியாசமும் தெரியலை. எதையும் வெளிய காட்டிக்கறதுமில்லை.”

எத்தனை காலம் எப்படிப்பட்ட தாம்பத்திய வாழ்க்கையில் இருந்திருந்தாலும், புரிதல் இருந்தாலும் இல்லாதுபோனாலும், முதுமையில் கணவனும் மனைவியும் உடனிருப்பது பெரும் ஆறுதல்தான். மனைவி இல்லாது போகும் உலகில் கணவன் சமாளிப்பது கடினம். கணவன் இல்லாதுபோனாலும் அன்றாடத்தைக் கடத்துவது மனைவிக்கு எளிது.

மகளோ மகனோ யார் வீடாக இருந்தாலும் அம்மாக்களால் சமாளிக்க முடியும். யாருமே இல்லாத நிலையில் கூட சமையல் வேலை செய்தோ, பண்டபாத்திரம் கழுவியோ, வீட்டு வேலை செய்தோ எவர் தயவுமின்றி தனியாகப் பொங்கிச் சாப்பிட்டு நாட்களை கடத்திவிடவும் முடியும். ஆனால், அப்பாக்களின் கதை அப்படியில்லை. எவரையேனும் சார்ந்திருக்க வேண்டிய நிலை. வேலை செய்து சம்பாதித்தாலும்கூட ஒவ்வொரு வேளையும் பொங்கித் திங்க இன்னொருவர் கையை எதிர்பார்த்திருக்கவே நேரிடுகிறது, பெரும்பாலும். கணவரில்லாத வெறுமையை மனைவியால் பேரன் பேத்திகளைக் கொண்டோ உழைப்பைக் கொண்டோ நிரப்பிக் கொள்ள முடியும். ஆனால், மனைவியில்லாத வெறுமையைத் தாங்குவதோ தாண்டுவதோ கணவனுக்கு எளிதில்லை.

வாழ்ந்தபோது மனைவிக்கு எத்தகைய இடத்தையும் மரியாதையையும் கணவன் கொடுத்திருந்தார் என்பது அவரது மனச்சான்றுக்கு உட்பட்டது. ஆனால், மனைவி இல்லாத காலத்தில் அன்றாடத்தின் ஒவ்வொரு நகர்விலும் அவரது இருப்பை கணவன் உணர்ந்தபடியேதான் இருக்க நேரும்.

பலரது வாழ்வின் தவிர்க்க முடியாத இந்த விதியை சதீஷ்குமார் சீனிவாசனின் இந்தக் கவிதை மிகச் செறிவாகவும் ஆழமாகவும் துலக்கித் தருகிறது.

அம்மா போலவே ஒரு நிழல்

வழக்கம்போல

அம்மாவும்

செத்துப் போயிருந்தாள்.

அம்மாவிடம்

எந்தக் கனவும் இல்லாதவராகத்தான்

இருந்தார் அப்பா.

வழக்கத்துக்கு மாறாக நடந்துகொள்ளும்

அப்பாவின் பின்னால்

அம்மா போலவே

ஒரு நிழல்.

 

0

இளம் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனின் ஐந்து தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. எளிமையும் கூர்மையுமான மொழியில் ஆழங்களைத் தொட முயல்பவை இவரது கவிதைகள்.

அண்மையில் வெளியான ‘எனக்குத் தெரிந்தவரை வானில் பறவைகள் இல்லை’ தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதை இது.

2023ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அக இருளை நீக்கும் சுடர் - கவிதையும் ஞானமும் 15 - வேணுவேட்ராயன்

 

 

சொல் வெறும் கூடு

நம் அகத்தில் நிகழும்

அதன் உயிர்த்தெழல்

சொல் ஒரு சுடர்

விரித்துக் கையேந்தி நாம் நடக்கையில்

வழிதோறும் இருள் நீக்கும்

ஒரு சிற்றகல். 

-            வேணு வேட்ராயன்


0

இந்த ஆண்டு புக் பிரம்மா 2026 இலக்கிய விழாவில், மலையாளக் கவிதை அமர்வு ஒன்றில் பி.ராமன் முக்கியமான ஒரு கருத்தைச் சொன்னார். அமர்வின் நெறியாளராக இருந்த கவிஞர் டி.பி.வினோத் ஒரு கேள்வியை எழுப்பினார் “இன்றைய சூழலில் யாருக்குக் கவிதை வேண்டும்?” இந்தக் கேள்விக்கு பி.ராமன் அளித்த பதில் இன்றைய சூழலில் மிக முக்கியமானதும் பொருத்தமானதுமாகும்.

‘யாருக்கு மொழி அத்தியாவசியமாகத் தேவையோ அவர்களுக்குத்தான் இன்று கவிதையும் தேவை. பார்வை இல்லாத ஒருவருக்கு தன்னை வெளிப்படுத்த மொழி தேவைப்படுகிறது. தான் நினைப்பதைச் சொல்ல, தன் எண்ணத்தைக் கூற அவன் மொழியையே நாட வேண்டிய தேவை உள்ளது. எனவே, அப்படிப்பட்ட ஒருவருக்குக் கவிதைத் தேவைப்படுகிறது. தமக்கென ஒரு மொழியே இல்லாத பழங்குடிகளுக்கும் கவிதைத் தேவைப்படுகிறது. இன்று மலையாளக் கவிதையில் இதுதான் நடக்கிறது. பார்வைத் திறனற்றவர்கள் கவிதை எழுதுகிறார்கள். பழங்குடிக் கவிதை என்பது பெருகி இன்று கேரளக் கவிதை மரபின் எல்லைகளை விரித்திருக்கிறது. யாருக்கெல்லாம் தங்களை வெளிப்படுத்த மொழி தேவைப்படுகிறதோ அவர்களுக்குத்தான் இன்று கவிதையும் தேவைப்படுகிறது. இன்றையத் தலைமுறையினரில் பலருக்கு மொழியே தேவைப்படுவதில்லை. எமோஜிக்களின் மொழியே அவர்களது தொடர்பு மொழியாக சுருங்கியுள்ளது. எனவே, அவர்களுக்கு கவிதைத் தேவைப்படுவதில்லை’ என்ற பொருளில் அவர் தன் கருத்துகளை எப்போதும்போல மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் கூறினார்.

தமிழ் மொழியின் சமகாலத் தேவை, அதில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் போன்றவற்றைக் குறித்த ஆழமான கேள்விகளை சந்திக்கும் சூழலில் இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே, கடந்த இரண்டு தலைமுறையினர்களில் அநேகமாகப் பலருக்கு தமிழை ஒழுங்காக எழுதப் படிக்கத் தெரியாது என்பதுதான் நிலைமை. அப்படியே தமிழைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும்போது அதை ஆங்கிலத்தில் எழுதி வாசிக்கிறார்கள். இன்றைய தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் பலரது கையில் உள்ள அட்டைகளிலுள்ள வாக்கியங்கள், அறிவிப்புகள் ஆங்கிலம் வழியாகவே தமிழில் எழுதப்பட்டுள்ளன.

இன்றைய தலைமுறையினர் தமிழில் எழுதவோ வாசிக்கவோ செய்யாத சூழலில் தமிழின் தூய்மையைக் காப்போம் என்று எல்லாவற்றையும், பொருத்தத்தைப் பற்றியோ பொருளைக் குறித்தோ கவலைப்படாமல், தமிழில் மாற்றும் தூய்மையாளர்கள் ஒருபக்கமும் தமிழில் எழுதும்போது ஒற்றுப் பிழைகள் பற்றியெல்லாம் கவலையில்லை என்கிற தாராளவாதிகள் இன்னொரு பக்கமுமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

மொழி என்பது தொடர்புக்கான ஒரு ஊடகம், கருவி என்ற அடிப்படையை அறிந்திராதோர் எவருமில்லை. ஆனால், அது ஊடகம், கருவி மட்டுமல்ல. சிந்தனைக்கான அடிப்படை. நம் சிந்தனைகளை கட்டமைக்கும் மொழியே தாய்மொழி. தெளிவான சிந்தனைக்கு மொழி சார்ந்த தெளிவும் அறிவும் திறமும் அவசியம். அவ்வாறன்றி, எந்த மொழியில் நாம் சிந்திக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் தடுமாறும்போது சிந்தனையும் தடுமாறும். சிந்தனை தடுமாறும்போது வழிகள் தடுமாறும். அவ்வாறான ஒரு நிலையைத்தான் இன்று நாம் கண்ணுறுகிறோம்.

குடிமைப்பணி உள்ளிட்ட எல்லாப் போட்டித் தேர்வுகளையுமே இன்று தமிழில் எழுத முடியும் என்ற நிலையில் பள்ளிக்கூடங்களில் தமிழைத் தவிர்க்க வேண்டிய தேவை இல்லை. குறைந்தபட்சம் மேல்நிலைப் பள்ளி வரையிலுமேனும் தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும். தமிழகத்திலுள்ள பள்ளிகளில் தமிழ் ஒரு மொழியாக கற்பிக்கப்பட வேண்டும். இதன் வழியாகத்தான் இன்றைக்கு நிலவும் மொழி சார்ந்த பெரும் குழப்பத்திலிருந்து விடுபட முடியும். தமிழும் அல்லாமல் ஆங்கிலமும் இல்லாமல் ஊடகங்களில் புழங்கும் குறியீட்டு மொழியை நம்பியிருக்கும் தலைமுறையினரின் சிந்தனைக் குழப்பத்துக்கு ஒரே தீர்வு மொழிக் கல்வியாகவே இருக்க முடியும்.

சொல்லும் மொழியும் அகத்தில் ஒளிரும் சுடர். ‘உள்ளத்திலே ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்’ என்பது கவி வாக்கு. சொல்லிலும் மொழியிலும் தெளிவில்லையேல், ஒளி இல்லையேல் உள்ளத்தில் எஞ்சுவது இருள் மட்டுமே.

இருள் நீக்கும் மொழியும் சொல்லுமே இன்றைய தலைமுறைக்குத் தேவை. நம் அகத்தில் உயிர்த்தெழலை நிகழ்த்தும் சொல்லையும் மொழியையும் கொண்டே இருள் நீக்க இயலும்.

கவிதையும் அகத்தில் ஒளிரும் சுடர்தான். அச்சுடர் கவிதையை வாசிக்கும் ஒவ்வொருவரின் அகத்திலும் ஒவ்வொருவிதமாக இருள் துலக்கி ஒளி கூட்டும். பல சமயங்களில் கவிதைக்கும் சொல்லுக்கும் பொருள் விளங்காமல் போகலாம். ஆனால், அப்போதும்கூட அவை ஒளிரும் சுடர்கள்தான் என்பதில் எந்த மாற்றமுமில்லை. கூடவே, அச்சுடர்களின் மூலம் அக இருள் நீங்கும்போது அனைத்துக்குமே பொருள் தானாகவே விளங்குவதும் நிகழும்.   

0   

வேணு வேட்ராயன் எளிமையின் மூலம் ஆழத்தை எட்ட முனையும் கவிதைகளை எழுதுபவர். அவரது கவிதையுலகம் இறுக்கமற்றது. காட்சிகளின் வழியே கண்டடையச் செய்வது.

முதல் தொகுப்பு ‘அலகில் அலகு’ 2019ஆம் ஆண்டு வெளியானது. ‘நீர்வழிப்படூஉம் நிலா’ எனும் இரண்டாவது தொகுப்பு தன்னறம் வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்ளது.

2020ஆம் ஆண்டில் குமரகுருபரன் விருது வழங்கப்பட்டுள்ளது.

அம்மாவின் நீங்கா நிழல் - கவிதையும் ஞானமும் 16 - சதீஷ்குமார் சீனிவாசன்

  போன மாதத்தில் ஒரு நாள் ஊருக்குப் போயிருந்தபோது நெருங்கிய நண்பன் சரவணனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது “அம்மாவுக்கு தொண்ணூறு வயசு முடிஞ்சிரு...