சொல் வெறும் கூடு
நம் அகத்தில் நிகழும்
அதன் உயிர்த்தெழல்
சொல் ஒரு சுடர்
விரித்துக் கையேந்தி நாம் நடக்கையில்
வழிதோறும் இருள் நீக்கும்
ஒரு சிற்றகல்.
-
வேணு வேட்ராயன்
0
இந்த ஆண்டு புக் பிரம்மா 2026 இலக்கிய விழாவில், மலையாளக் கவிதை அமர்வு
ஒன்றில் பி.ராமன் முக்கியமான ஒரு கருத்தைச் சொன்னார். அமர்வின் நெறியாளராக இருந்த கவிஞர்
டி.பி.வினோத் ஒரு கேள்வியை எழுப்பினார் “இன்றைய சூழலில் யாருக்குக் கவிதை வேண்டும்?”
இந்தக் கேள்விக்கு பி.ராமன் அளித்த பதில் இன்றைய சூழலில் மிக முக்கியமானதும் பொருத்தமானதுமாகும்.
‘யாருக்கு மொழி அத்தியாவசியமாகத் தேவையோ அவர்களுக்குத்தான் இன்று கவிதையும்
தேவை. பார்வை இல்லாத ஒருவருக்கு தன்னை வெளிப்படுத்த மொழி தேவைப்படுகிறது. தான் நினைப்பதைச்
சொல்ல, தன் எண்ணத்தைக் கூற அவன் மொழியையே நாட வேண்டிய தேவை உள்ளது. எனவே, அப்படிப்பட்ட
ஒருவருக்குக் கவிதைத் தேவைப்படுகிறது. தமக்கென ஒரு மொழியே இல்லாத பழங்குடிகளுக்கும்
கவிதைத் தேவைப்படுகிறது. இன்று மலையாளக் கவிதையில் இதுதான் நடக்கிறது. பார்வைத் திறனற்றவர்கள்
கவிதை எழுதுகிறார்கள். பழங்குடிக் கவிதை என்பது பெருகி இன்று கேரளக் கவிதை மரபின் எல்லைகளை
விரித்திருக்கிறது. யாருக்கெல்லாம் தங்களை வெளிப்படுத்த மொழி தேவைப்படுகிறதோ அவர்களுக்குத்தான்
இன்று கவிதையும் தேவைப்படுகிறது. இன்றையத் தலைமுறையினரில் பலருக்கு மொழியே தேவைப்படுவதில்லை.
எமோஜிக்களின் மொழியே அவர்களது தொடர்பு மொழியாக சுருங்கியுள்ளது. எனவே, அவர்களுக்கு
கவிதைத் தேவைப்படுவதில்லை’ என்ற பொருளில் அவர் தன் கருத்துகளை எப்போதும்போல மிகத் தெளிவாகவும்
உறுதியாகவும் கூறினார்.
தமிழ் மொழியின் சமகாலத் தேவை, அதில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் போன்றவற்றைக்
குறித்த ஆழமான கேள்விகளை சந்திக்கும் சூழலில் இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில்
தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே, கடந்த
இரண்டு தலைமுறையினர்களில் அநேகமாகப் பலருக்கு தமிழை ஒழுங்காக எழுதப் படிக்கத் தெரியாது
என்பதுதான் நிலைமை. அப்படியே தமிழைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும்போது அதை ஆங்கிலத்தில்
எழுதி வாசிக்கிறார்கள். இன்றைய தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் பலரது கையில் உள்ள அட்டைகளிலுள்ள
வாக்கியங்கள், அறிவிப்புகள் ஆங்கிலம் வழியாகவே தமிழில் எழுதப்பட்டுள்ளன.
இன்றைய தலைமுறையினர் தமிழில் எழுதவோ வாசிக்கவோ செய்யாத சூழலில் தமிழின்
தூய்மையைக் காப்போம் என்று எல்லாவற்றையும், பொருத்தத்தைப் பற்றியோ பொருளைக் குறித்தோ
கவலைப்படாமல், தமிழில் மாற்றும் தூய்மையாளர்கள் ஒருபக்கமும் தமிழில் எழுதும்போது ஒற்றுப்
பிழைகள் பற்றியெல்லாம் கவலையில்லை என்கிற தாராளவாதிகள் இன்னொரு பக்கமுமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
மொழி என்பது தொடர்புக்கான ஒரு ஊடகம், கருவி என்ற அடிப்படையை அறிந்திராதோர்
எவருமில்லை. ஆனால், அது ஊடகம், கருவி மட்டுமல்ல. சிந்தனைக்கான அடிப்படை. நம் சிந்தனைகளை
கட்டமைக்கும் மொழியே தாய்மொழி. தெளிவான சிந்தனைக்கு மொழி சார்ந்த தெளிவும் அறிவும்
திறமும் அவசியம். அவ்வாறன்றி, எந்த மொழியில் நாம் சிந்திக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல்
தடுமாறும்போது சிந்தனையும் தடுமாறும். சிந்தனை தடுமாறும்போது வழிகள் தடுமாறும். அவ்வாறான
ஒரு நிலையைத்தான் இன்று நாம் கண்ணுறுகிறோம்.
குடிமைப்பணி உள்ளிட்ட எல்லாப் போட்டித் தேர்வுகளையுமே இன்று தமிழில்
எழுத முடியும் என்ற நிலையில் பள்ளிக்கூடங்களில் தமிழைத் தவிர்க்க வேண்டிய தேவை இல்லை.
குறைந்தபட்சம் மேல்நிலைப் பள்ளி வரையிலுமேனும் தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட
வேண்டும். தமிழகத்திலுள்ள பள்ளிகளில் தமிழ் ஒரு மொழியாக கற்பிக்கப்பட வேண்டும். இதன்
வழியாகத்தான் இன்றைக்கு நிலவும் மொழி சார்ந்த பெரும் குழப்பத்திலிருந்து விடுபட முடியும்.
தமிழும் அல்லாமல் ஆங்கிலமும் இல்லாமல் ஊடகங்களில் புழங்கும் குறியீட்டு மொழியை நம்பியிருக்கும்
தலைமுறையினரின் சிந்தனைக் குழப்பத்துக்கு ஒரே தீர்வு மொழிக் கல்வியாகவே இருக்க முடியும்.
சொல்லும் மொழியும் அகத்தில் ஒளிரும் சுடர். ‘உள்ளத்திலே ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்’ என்பது கவி வாக்கு. சொல்லிலும் மொழியிலும் தெளிவில்லையேல்,
ஒளி இல்லையேல் உள்ளத்தில் எஞ்சுவது இருள் மட்டுமே.
இருள் நீக்கும் மொழியும் சொல்லுமே இன்றைய தலைமுறைக்குத் தேவை. நம்
அகத்தில் உயிர்த்தெழலை நிகழ்த்தும் சொல்லையும் மொழியையும் கொண்டே இருள் நீக்க இயலும்.
கவிதையும் அகத்தில் ஒளிரும் சுடர்தான். அச்சுடர் கவிதையை வாசிக்கும்
ஒவ்வொருவரின் அகத்திலும் ஒவ்வொருவிதமாக இருள் துலக்கி ஒளி கூட்டும். பல சமயங்களில்
கவிதைக்கும் சொல்லுக்கும் பொருள் விளங்காமல் போகலாம். ஆனால், அப்போதும்கூட அவை ஒளிரும்
சுடர்கள்தான் என்பதில் எந்த மாற்றமுமில்லை. கூடவே, அச்சுடர்களின் மூலம் அக இருள் நீங்கும்போது
அனைத்துக்குமே பொருள் தானாகவே விளங்குவதும் நிகழும்.
0
வேணு வேட்ராயன் எளிமையின் மூலம் ஆழத்தை எட்ட முனையும்
கவிதைகளை எழுதுபவர். அவரது கவிதையுலகம் இறுக்கமற்றது. காட்சிகளின் வழியே கண்டடையச்
செய்வது.
முதல் தொகுப்பு ‘அலகில் அலகு’ 2019ஆம் ஆண்டு வெளியானது.
‘நீர்வழிப்படூஉம் நிலா’ எனும் இரண்டாவது தொகுப்பு தன்னறம் வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்ளது.
2020ஆம் ஆண்டில் குமரகுருபரன் விருது வழங்கப்பட்டுள்ளது.
