ஜெயமோகனின் தளத்தில்
வெளியான ‘மடத்து வீடு’ சிறுகதையே ரா.செந்தில்குமாரை அறிமுகப்படுத்தியது. அந்தக் கதையில்
சித்தரிக்கப்பட்டிருந்த சூழலும், மடத்து வீட்டுப் பெண்களின் குணாம்சங்களை விவரித்திருந்த
விதமும், உடல் முடங்கிப் போன நிலையிலும் சுடரணையாத காமத்தின் உந்துதலை தவிர்க்க நினையாத
அப்பாவின் கதாபாத்திரமும் நல்லதொரு சிறுகதையென அந்தக் கதையை நினைவில் நிற்கச் செய்திருந்தன.
சில வருடங்களுக்குப்
பிறகு ‘இசூமியின் நறுமணம்’ வெளியானது. கேளிக்கையான மனநிலையில் காமத்தை ஒரு கொண்டாட்டமாய்
வெளிப்படுத்தும் மிதப்பான சூழலில் நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் ஒரு பெண்ணிடம் உணர்ந்த
வாசனையை காமத்தைத் தாண்டிய ஒரு அபாரமான அனுபவமாய் முன்வைக்கிற மிக நுட்பமான, ஆழமான
சிறுகதை. பெண்களை போகத்துக்குரிய எதிர் பாலினமாக அணுகும் உயிர் இயல்பை ஒவ்வொரு ஆணும்
கடந்து வர நேரிடும் தருணங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் அது வெவ்வேறு சந்தர்ப்பங்களாய்
அனுபவங்களாய் அமையும். பொதுமைப்படுத்துவது கடினம். அப்படியொரு தெளிவு மனத்தில் ஏற்படும்போது,
சமயங்களில் அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம், உடலிச்சை அடங்கி தந்தைமை மேலெழுந்து
பெண்கள் அனைவரையும் மகள்களாக உணரும் பார்வையைத் தரும். அதுவே இன்னும் மேலான நிலையில்
பெற்றவளுக்கு நிகரானவர்களாய் அவர்களை நிறுத்திக் காட்டும். இசூமியின் நறுமணம் கதையில்
கோபயாஷி சான் எட்டும் உச்சம் இத்தகையதுதான். உணர்வுநிலையில் ஏற்படும் இந்த மாற்றத்தை
எழுத்தில் கொண்டுவருவது சவாலான ஒன்று. ஆனால், காமத்தின் பல்வேறு மனப்பாங்குகளை களிப்பும்
கொண்டாட்டமுமான உரையாடல்களின் வழியாக நகர்த்திச் சென்று அதன் எல்லையில் கோபயாஷியின்
கண்டுணர்தலாக நிறுத்த முடிந்திருக்கிறது. போனி டெயில் பரிசாரகி இந்தக் கதையின் துணை
கதாபாத்திரமாக இருந்தபோதும் இப்படியொரு உச்சத்தை சாத்தியப்படுத்தும் சாட்சியாக சித்தரித்திருப்பது
கதையின் அழுத்தத்தை மேலும் கூட்டுகிறது.
‘இசூமியின் நறுமணம்’
போன்றே இன்னும் சில கதைகளில் ஜப்பானின் பின்னணி ஊடுபாவாக அமைந்திருக்கிறது. மனித உறவுகளுக்கேயுரிய
குணாம்சங்களான சிடுக்குகள், அக மோதல்கள், காமம், துரோகம் போன்றவை எல்லா நிலங்களுக்கும்
பொதுவானவை. அவற்றுடன் அந்தந்த நிலத்தின் கலாச்சார அடையாளங்களையும் நுட்பங்களையும் சேர்க்கும்போது
அந்தக் கதைகளுக்கு தனித்துவம் கூடிவிடுவதைத்தான் ‘தானிவத்தாரி’, ‘கனவுகளில் தொடர்பவள்’,
‘மயக்குறு மக்கள்’, ‘சிடியா கிராஸிங்’ ஆகிய கதைகள் உறுதிப்படுத்துகின்றன.
இந்த அம்சத்தை
துலக்கிக் காட்டவென ‘மலரினும் மெல்லிது காமம்’, ‘தானிவத்தாரி’ ஆகிய இரண்டு கதைகளைச்
சொல்லலாம். ஆண் பெண் உறவில் எழும் தடுமாற்றமும் விளைவும்தான் இரண்டு கதைகளிலுமே மையம்.
தமிழகச் சூழலில் சொல்லப்பட்டிருக்கும் ‘மலரினும் மெல்லிது காமம்’ கதையில் ‘தெரிந்த
மனிதன் என்ன தீமையை செய்துவிட முடியும்?’ என்ற வாக்கியமே ஜப்பானின் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள
‘தானிவத்தாரி’ கதையில் ‘பள்ளத்தாக்கைக் கடக்க துணைவரும் பாட’லாகச் சொல்லப்பட்டுள்ளது.
சக மனிதனின் மீது இன்னொருவன் கொள்ளும் நம்பிக்கை ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் சிதறடிக்கப்படும்போதுகூட
முற்றிலும் அவன் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை; அடுத்தவர் மீது அந்தக் கசப்பைப் பொருத்திப்
பார்ப்பதுமில்லை என்பதையே இரண்டு கதைகளும் வெவ்வேறு சொற்களில் வெளிப்படுத்துகின்றன.
‘அனுபவ பாத்தியம்’
கதையில், மன்னார்குடியில் குத்தகை நிலத்தைத் திருப்பித் தர மறுப்பவர்களின் மனநிலையும்
‘நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள்’ கதையில் கிகுச்சி சானின் மீது குற்றம் சாட்டும் ஜீவானந்தத்தின்
மனோபாவமும் அடிப்படையில் ஒன்றுதான்.
‘செர்ரி பிளாசம்’,
‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ இரண்டும் அபத்தமான புதிர் கணங்களில் மையம் கொண்டவை. திட்டமிடல்கள்
அனைத்தையும் நொடியில் ஒன்றுமில்லாமல் செய்கிற வல்லமைகொண்ட மரணமே இரண்டிலும் கையாளப்பட்டுள்ளது.
அளவுக்கதிகமான பற்றுதலும் உறவுகளும் அர்த்தமற்றவையோ என்று மனம் சோர்வுறும்போது தக்கயாமாவின்
உச்சிப்பகுதியில் ஒரு பழைய மரவீட்டின் அருகில் ககி மரத்திலிருந்து கனிகளைப் பறித்துக்
கொண்டிருக்கும் கிழவரையும், அவர் நிற்கிற ஏணியைப் பிடித்துக்கொண்டிருக்கிற கிழவியையும்
காட்டுகிறார் செந்தில்குமார். நல்ல அனுபவத்தை தரும் சிறுகதை இதற்கு மேல் எதையும் சொல்லாது.
‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ கதையும் மேலதிகமாக எதையும் சொல்லவில்லை.
காஞ்சி எழுத்துகள்,
சகுரா மலர்கள், கிமோனா, சாமுராய்கள், சிம்பாசி ரயில் சந்திப்பு, விதவிதமான பானங்கள்,
உணவுகள் என ஜப்பானுக்கேயுரிய அடையாளங்கள் கதையில் தேவையான அளவுக்கு மிகப் பொருத்தமான
இடங்களில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன.
உலகெங்கும் கால்கொண்டிருக்கும்
இன்றைய புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர், தம் அயல்நில வாழ்வின் அனுபவங்களை தமிழ் கதைப்புலத்துக்கு
வலுசேர்க்கும் புனைவுகளாக மாற்றித் தருகிறார்கள். அந்த வரிசையில் ரா.செந்தில்குமாரின்
‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பை சிறிதும் தயக்கமின்றி சேர்க்கலாம்.
0
இசூமியின் நறுமணம், ரா.செந்தில்குமார்
யாவரும் பப்ளிஷர்ஸ் - ஜனவரி 2021
No comments:
Post a Comment