Tuesday, 13 April 2021

நிழலன்றி ஏதுமற்றவன்


(‘ரசனை’ ஏப்ரல் 2007 இதழில் வெளியான கட்டுரை. இந்த இதழின் முகப்பில் கிருபாவின் படம் இடம் பெற்றிருந்தது. மரபின் மைந்தன் முத்தையாவுக்கு நன்றி.)

கலைந்த தலைமுடி. முகம் மறைத்துப் படர்ந்து கிடக்கும் தாடி. கருத்த உதடுகள். எப்போதும் மேல்நோக்கிச் சஞ்சரித்திருக்கும் இடுங்கிய கண்கள். மெலிந்த உடல். பின்னிரவு வரையிலும் விழித்திருந்த களைப்பும் போதையும் கொண்ட உருவம். நெருங்கும் எவரையும் சற்றே மனம் பதறவைக்கும் பசியின் வாடை.

இந்த அடையாளங்களுடன் சென்னையில் இளைஞர்கள் பலரையும் நீங்கள் சந்தித்திருக்கலாம். அடுத்த வேளை பசிக்கு உணவுண்டா என்று தெரியாது. எத்தனை வேளை பசியை ஒத்திவைத்திருக்கிறார்கள் என்றும் கணக்கில்லை. இதோ, இவனது வாழ்க்கை இன்றோடு விடைபெற்றுவிடக்கூடும் என்றே நம்மை நினைக்க வைக்கும்படியான அவலமான நிலையில் சுற்றிக்கொண்டிருக்கும் இவர்கள் அனைவரையும் வாழ்க்கையோடு பிணைத்து வைத்திருக்கும் மிக மெல்லிய இழை சினிமாக் கனவுதான்.

திசைகள்தோறும் இரும்புக் கதவுகள் கொண்ட சினிமா எனும் கனவு மாளிகையின் எதிரே தவம் கிடக்கிறார்கள். அவமானங்களையும் வலிகளையும் பொருட்படுத்தாமல் தினம்தினம் ஆயிரம் கதவுகளை மோதிப் பார்க்கிறார்கள். வெற்றி லட்சத்தில் ஒருவனுக்கே என்ற யதார்த்தத்தை அறிந்திருந்தபோதும், அந்த ஒருவன் தானே என்ற பலத்த நம்பிக்கையுடன் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து வந்து காத்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் சினிமாவுக்கான கதைகள் சில புனையப்பட்டிருக்கும். அவற்றை வெகு ரகசியமாய் பொத்திப் பொத்தி வைத்திருப்பார்கள். மிதமிஞ்சிய போதையிலும்கூட அந்த ரகசியக் கதைகளின் முதல் எழுத்தைக்கூட உச்சரித்துவிட மாட்டார்கள். சிலமணி நேரத் தூக்கத்தின்போதும்கூட கதைகளை யாரும் களவாடிவிடக்கூடாது என்று உயிரின் ஆழத்தில் புதைத்து வைத்திருப்பார்கள். வேளாவேளைக்கு கதறியழும் பசியின் குரல் காதுகளுக்கு எட்டாதபடிக்கு இந்த ரகசியக் கதையை திரும்பத் திரும்ப மெருகேற்றி உரம்கூட்டிக் கொண்டிருப்பார்கள்.

கோடம்பாக்கமே கதியென்று கிடக்கும் இத்தகைய லட்சக்கணக்கான இளைஞர்களில் ஜெ.பிரான்சிஸ் கிருபாவும் ஒருவர்.

திருநெல்வேலி நாகர்கோயில் பாதையில் சற்றே விலகி அமைந்துள்ளது பத்தினிப்பாறை எனும் சிறு கிராமம் கிருபாவின் சொந்த ஊர். இரண்டே வகுப்பறைகள் கொண்ட கிராமத்துப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பு. பிறகு பக்கத்திலுள்ள காரங்காடு என்ற ஊரில் எட்டாம் வகுப்புவரை. குடும்பத்தின் கடைசிப் பையன் என்பதால் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்ற ஆசை அப்பாவுக்கு. ஆனால் படிப்பைத் தொடர முடியாத குடும்பச் சூழ்நிலை.

தனது பதினான்காவது வயதில் பம்பாய்க்கு ரயிலேறுகிறார்.. பம்பாய் அவருக்கு வாழ்வின் இருண்ட தரிசனங்களை பரிசளிக்கிறது. அதற்கு உள்ளிருந்தேதான் கிருபா தன்னைக் கண்டுகொள்கிறார். இரும்புப் பட்டறைகளும் தொழிற்சாலைகளும் நிறைந்த ஒரு தொழில் வளாகத்தில் இருக்கும் டீக்கடை ஒன்றில் டீ சப்ளையராக வேலை. சம்மட்டியின் சத்தங்களும் தீப்பொறிகளும் இரும்புத் துருவின் வாடையுமாயிருந்த அந்த இடத்தில் இருந்த ஒரு லேத் பட்டறையில் டர்னர் வேலை அவருக்குப் பிடித்திருந்தது. ஆனால் சிறுவன் என்பதால் வேலைக்குச் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். பகலில் டீ சப்ளையராகவும் இரவில் லேத் டர்னரின் உதவியாளராகவும் சில மாதங்கள் கழிகின்றன. தனது பதினேழாவது வயதில் கிருபா ஒரு தேர்ந்த டர்னராகிறார். மேலும் சில ஆண்டுகள் உற்சாகமாகத்துடனும் அக்கறையுடனும் தொழில் ஈடுபட்டிருந்தார். இருபத்தி மூன்றாவது வயதில் தானே ஒரு பட்டறையைத் தொடங்கி நடத்துகிறார். ஆ, வாழ்க்கை நமக்கும் வாய்த்துவிட்டது என்று நிமிர்ந்தபோது விதி பாபர் மசூதி சம்பவத்தின் வடிவில் 1992ம் ஆண்டு எதிர்ப்பட்டது. ஒரு வருடம் தொழில் முடங்கிப்போனது. வாங்கிய கடனுக்கான வட்டி, மூடிக்கிடந்த இரும்புப் பட்டறையில் குடியேறிவிட்டது.

வாழ்க்கை கைவிட்டுவிட்டது என்றிருந்த நிலையில் கவிதை கிருபாவுக்கு அடைக்கலம் தந்தது. கொஞ்சம் படிக்கவும் எழுதவும் தொடங்கியிருந்தார். தினமணிக்கதிரின் கடைசிப் பக்கத்தில் கலாப்ரியாவின் ‘உலகெலாம் சூரியன்’ தொகுப்பைக் குறித்த ஒரு குறிப்பு. ‘ஒரு குத்து சுண்டல் கூடக் கிடைக்குமென்று தங்கையை இடுப்பில் சுமந்து போகும் அக்கா’ சிறுமியைப் பற்றிய கவிதை கிருபாவின் பார்வையையே மாற்றியது.

பம்பாய் கைவிட்ட நிலையில் 1998ம் ஆண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார். கொஞ்சம் சினிமாக் கனவும் கவிதைகளுமே அவர் கைவசம் இருந்தன. பம்பாய் நண்பர்கள் சிலரின் உதவியால் ‘காமராசர்’ படத்தில் திரைக்கதையாளராகவும் வசனகர்த்தாகவும் பணியாற்றினார்..

இந்த நாட்களில் கிருபாவின் தோற்றம் எதிர்படுவோரை சற்றே அதிரச் செய்யும்விதமாய் இருந்தது. கலைந்து, காற்றில் அலையும் நீண்ட தலைமுடி, அடர்ந்து முகம் மூடிக்கிடக்கும் தாடி, மஞ்சளோடி இடுங்கிக் கிடக்கும் கண்கள். அவர் தங்கியிருந்த தி.நகர் மேன்ஷன் அறைவாசிகள் பலருக்கு அவரது தோற்றம் முகஞ்சுளிக்க வைப்பதாய் இருந்தது. கடுமையான வகைளும் தூற்றல்களும் அவரைச் சுற்றி விழுந்தவண்ணமிருந்தன. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கிருபாவை அந்த மேன்ஷனில் கண்டுபிடிப்பது வெகு சிரமம். நான்கு அடுக்குகள்கொண்ட அந்த மேன்ஷனில் அவருக்கென்று ஒரு அறை கிடையாது. நண்பர்களின் தயவில் ஏதேனுமொரு அறை மூலையில் சுருண்டு கிடப்பார்.

அவரது சட்டைப்பையில் சுருண்டு கிடந்த கவிதைகளை நண்பர்கள் சிலர் படிக்க நேர்ந்தது. ‘கல் மத்தளம்’ என்ற கவிதை அவருக்கும் யூமா வாசுகிக்கும் இடையில் ஒரு ஆழமான உறவையும் நட்பையும் ஏற்படுத்தித் தந்தது. இருவரையும் நெருக்கமாகப் பிணைத்த இன்னொரு பொது அம்சம், பசி. பலநாள் இரவுகளில் கையிலிருக்கும் சில்லறைகளைக்கொண்டு மூன்று இட்லிகளை வாங்கி இருவரும் பகிர்ந்துண்டு பசியாறியிருக்கிறார்கள். நெடுந்தொலைவு கவிதை பேசி இரவைக் கடத்தி நடந்திருக்கிறார்கள். மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து பழவந்தாங்கலுக்கான கடைசி ரயிலில் யூமாவை ஏற்றிவிட்டு கிருபா திரும்பி நடந்து வரும்போது இருளும் நட்சத்திரங்களும் மட்டுமே அவருக்குத் துணையிருக்கும்.

கிருபா போன்ற இளைஞர்களுக்கு சென்னையில் இரவு வேளையில் உணவு கிடைக்கிறதோ இல்லையோ இரவு மதுவருந்துதல் மட்டும் எப்படியோ அமைந்துவிடுவது இன்றுவரை விளங்கிக்கொள்ள முடியாத விநோதம்.

கிருபா ஆசையாகவும் வெகு உல்லாசமாகவும் குடிப்பதுண்டு. எத்தனை குடித்தாலும் சலம்பல்கள் இருக்காது. அடுத்தவருக்கு தொந்தரவு இருக்காது. போதை அவருக்குள் இறங்குந்தோறும் அவரது இயல்பான அமைதி மேலும் துலக்கம் பெற்று பேரமைதியாகிவிடும். அண்ணாச்சி ராஜமார்த்தாண்டனைப் போல போதையின் மௌனத்தையும் அதன் அளப்பரிய அழகையும் கொண்டாடத் தெரிந்தவர் கிருபா.

ஒரு பாடலாசிரியராக அடையாளப்படுத்திககொள்ள கிருபாவும் அவரது நண்பர்கள் சிலரும் செய்த முயற்சிகள் பலனளிக்காத சூழ்நிலை. பசியும் நிராசையும் இரவில் யார் தயவிலேனும் வாய்க்கும் பெரும் போதையுமாய் கழிந்த நாட்களில் கிருபா பெரும் மனப் பதற்றத்துக்கு ஆளானார். கவிதை மனம் எந்த சந்தர்ப்பத்திலும் பின்னடைநதுவிடவிலல்லை. உடல்நிலை கெட்டுப் போயிருந்தபோது கவிதை மேலும் தீவிரம் கொண்டிருந்தது.

நண்பர் யூமா வாசுகியின் முயற்சியினால் முதல் தொகுப்பாக ‘மெர்சியாவின் காயங்கள்’ தமிழினி வெளியீடாக வெளிவந்தது. தொடர்ந்து தீவிரமாக எழுதினார். உடனடியாகவே ‘வலியோடு முறியும் மின்னல்’, ‘நிழலன்றி ஏதுமற்றவன்’ இரண்டு தொகுப்புகளும் வெளியாயின.

நவீன தமிழ்க் கவிதையின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கவிதைப் பாணி கிருபாவை தனித்து அடையாளம் காட்டியது. அபாரமான மொழியாளுமை, தனித்துவம் மிக்கப் படிமங்கள் ஆகிய இரண்டும் அவரது கவிதையின் முத்திரைகள். கூறியது கூறலின்றி மொழியின் நுட்பமான திருகல்களின் வழியாக கற்பனையின் வெகு எல்லையில் மட்டுமே கண்டறிய முடிகிற படிமங்கள் தொடர்ந்து அவரது கவிதைகளில் ஆளுமை செலுத்துகின்றன. தமிழ்க் கவிதையை பெரிதும் ஆக்கிரமித்திருக்கும் அறிவுஜீவித்தனம் மிகுந்த, உத்திகளால் ஒளியூட்டப்பட்ட ‘மூளை’க் கவிதைப் போக்குக்கு நேர்மாறானது கிருபாவின் தன்னிச்சையான உணர்வெழுச்சிமிக்கக் கவிதைகள். அவரை நவீனக் கவிதைப் போக்குக்கு தடம் மாற்றியவை கலாப்ரியாவின் கவிதைகள். சு.வில்வரெத்தினம், தேவதேவன் ஆகியோரது கவிதைகளை அவர் விரும்பிப் படிப்பதுண்டு.

ஒரு கவிஞராக அறியப்பட்டிருந்த கிருபா ‘கன்னி’ நாவலின் வழியாக ஒரு நாவலாசிரியராக உருவெடுத்திருக்கிறார். கவிதைத் தொகுப்புகள் தயாரான சந்தர்ப்பங்களில் தமிழினி வசந்தகுமாரோடு நட்பு ஏற்பட்டது. இந்த நாவலுக்கான தொடக்கமும் நிகழ்ந்தது. தொடர்ந்து எழுதப் பணித்ததன் விளைவாக ‘கன்னி’ நாவல் இரண்டாண்டு கால அளவில் உருவானது. கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த அவர் ஒரு பெரும் நாவலின் வழியாக உரைநடைக்கு வந்திருக்கிறார். இதுவரையிலுமான தமிழ் உரைநடையாளர்கள் எவரது பாதிப்பும் இல்லாத ஒரு தனித்துவமான மயக்கமூட்டும் இவரது உரைநடை ஆச்சரியமளிக்கிறது. எல்லைகளோ கட்டுப்பாடுகளோ இல்லாத கற்பனையின் தன்னிச்சையான இயக்கத்தில் உருவாகியிருக்கும் மொழியும் படிமங்களும் கொண்ட இந்த உரைநடை கன்னி நாவலின் பெரும் கவனிப்புக்கு முக்கிய காரணம்.

தமிழ் இலக்கியத்துள் இருக்கும் குழு மனப்பான்மை, இலக்கிய அரசியல், அக்கப்போர் இவற்றிலெல்லாம் கிருபாவுக்கு அக்கறை கிடையாது. வெகுஜனப் பத்திரிகையில் எழுதக்கூடாது என்ற விரதமும் கிடையாது. ஆனால், எதையும் தானாகக் கேட்டுப் பெறலாகாது என்பதில் தீர்மானமாக இருப்பவர். இன்று அவர் சினிமாவில் பாட்டெழுதிக் கொண்டிருக்கலாம். ஆனந்த விகடனில் கவிதை எழுதலாம். இவை எதுவுமே அவர் கேட்டுப் பெற்ற வாய்ப்புகள் இல்லை. சினிமா வாய்ப்புக்காக இல்லாத கதவுகளையெல்லாம் தட்டிக் கொண்டிருப்பவர்களின் மத்தியில் ‘நானாக எதையும் தேடிப் போக மாட்டேன்’ என்றிருப்பது ஆச்சரியமானதுதான். ‘தேடிப் போகத் தொடங்கினால் அலைந்தே செத்துப் போகவேண்டியதுதான்’ என்று அவர் சொல்வது யதார்த்தமானதுதான்.

அவரது அசட்டையான தோற்றம் அவரது இயல்பையும் புத்திகூர்மையையும் மறைத்துவிடக்கூடியது. அபாரமான புத்திசாலி. எந்த புத்தகத்தையும் படிக்கத் தொடங்கிய சில பக்கங்களுக்குள்ளாகவே முழுக்க அவதானித்துவிடக்கூடிய தனித்திறன் அவரிடம் உண்டு. நண்பர்களிடமும் தன் உறவினர்களிடமும் அன்பாகவும் பிரியமாகவும் இருப்பவர் கிருபா. அவரிடம் பொறாமையோ போட்டி மனப்பான்மையோ கிடையாது. இயல்பாக வெளிப்படும் பிரியமே அவரை ஆட்கொண்டிருக்கிறது.

நல்லதை நல்லதென்று மனம் திறந்து பாராட்டும் குணம் உண்டு. அவரது இயல்பின் காரணமாகவே அவருக்கு வாய்க்கும் நண்பர்கள் அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

பெற்றோர்களின் மீதும் பெரும் அன்புகொண்ட கிருபா உறவினர்களையும் குழந்தைகளையும் பார்க்கும்போது குதூகலம் அடைந்துவிடுகிகறார். ஒருமுறை தொலைபேசியில் “இப்போ என்னைச் சுத்தி இருவது மருமக்கமார் இருக்காங்க… உற்சாகமாயிருக்கு” என்று ஊரிலிருந்து சொன்னபோது அவரது குரல் தளுதளுத்தது. சென்னைத் தெருக்களில் பின்னிரவு நேரங்களில் யாரும் உடனில்லாது தனித்து நடந்திருந்த நாட்கள் அப்போது அவருக்கு நினைவில் வந்திருக்கக்கூடும்.

அவருக்கு அண்மையில் கோவையில் ‘தேவமகள்’ அறக்கட்டளை விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிக்கொண்டிருக்கும்போது “இந்தப் பணத்தை அம்மாட்ட கொண்டு கொடுக்கணும். கோயில்ல எனக்காக நேத்திக் கடன் ஒண்ணு பாக்கியிருக்குண்ணு சொன்னாங்க…” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். ஆனந்த விகடனில் வெளியாகும் ‘மல்லிகைக் கிழமைகள்’ கவிதைகளை ஒவ்வொரு வாரமும் அவரது கிராமம் மொத்தமும் ஆவலுடன் வாங்கிப் படித்து ‘நம்ம பையன் எழுதிருக்காண்டா…’ என்று கொண்டாடுகிறது.

காயங்களோடும் வலிகளோடும் நிழலன்றி ஏதுமற்றவனாய் திசைகள்தோறும் திரிந்தபோதும் அவரைச் சுற்றி ஏராளமான அன்பும் அக்கறையும் வாய்த்தபடியேதான் உள்ளன. அவரது மனத்தில் பொங்கிப் பெருகும் அன்பின் சுனையிலிருந்தே அத்தகைய குளுமையும் வாய்த்திருக்கமுடியும். ‘மற்றவர்களுக்கு நீ எதைத் தருகிறாயோ அதையே அவர்களும் உனக்குத் தருவார்கள்’ என்றொரு வாக்கு உண்டு. வாழ்வின் பெரும்பாலான தருணங்களில் பசியோடும் மன அழுத்தத்தோடும் போராடிக் கிடந்த கிருபா பிறருக்கு எப்போதும் அன்பையும் புன்னகையையுமே தந்திருக்கிறார். அதே அன்பையும் புன்னகையையுமே அவரது நண்பர்கள் எப்போதும் அவரிடம் திருப்பித் தந்துகொண்டிருக்கின்றனர்.


No comments:

Post a Comment

யுவன் - விஷ்ணுபுரம் விருது

  1 இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர் மாதம். அலுவலகப் பயிற்சி நிமித்தமாக புனே சென்றிருந்தேன். அன்று காலை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்ற...