Saturday 24 April 2021

நிழற்காடு – விஜயராவணன்


 

சிறுகதைகளை எழுத முயலும் ஒருவர் தனது பால்யகால அனுபவங்களை எழுத முனைவதே இயல்பு. எழுதத் துவங்கும்போது எழும் பதற்றங்களையும் சந்தேகங்களையும் நம்பிக்கைக் குலைவையும் சமன்படுத்த அது உதவும். சிறார் பருவம் அவரவர்க்கான தனித்த ரகசியங்களையும் கொண்டாட்டங்களையும் பல சமயங்களில் துயரங்களையும்கூட கொண்டிருக்கும். அவ்வாறான மன உலகிலிருந்து வெளிப்படும் எழுத்தில் உணரநேர்கிற களங்கமின்மை அந்தக் கதைகளுக்கு விசேஷமான ஒளியைத் தருகிறது. வியப்பும் சாகசமும் கற்பனையுமாய் கலந்த அந்த உலகம் எளிமையானதும் அழகானதும்கூட. அந்தப் பருவத்தின் நிறங்களையும் வாசனைகளையும் துல்லியமாகவும் சீராகவும் சொல்வது எளிது.

இங்கிருந்து அடுத்த நிலைக்கு நகரும்போது குடும்பம், உறவு சார்ந்த நுட்பமான இழைகளையும் மர்மங்களையும் துலக்கிப் பார்க்க முனையலாம். எந்த அளவுக்கு எதைச் சொல்லலாம் என்ற தெளிவு கூடியிருக்கும். கணிசமான வாசிப்பும் எழுத்துப் பழக்கமும் சேருமென்றால் புனைவு சார்ந்த தெளிவையும் தேர்வையும் இந்த நிலையில் அடைந்துவிட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே தன் முன்னால் உள்ள புனைவின் வடிவங்களையும் மொழியமைப்பையும் கடந்து புதிதாக எதையேனும் முயலவேண்டும் என்ற சாகச உணர்வு இதன் அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும். புதிய கதைப்புலத்தில் வேறு விதமான உணர்வு நிலைகளைச் சொல்ல முனையக்கூடும். இந்த முயற்சியில் நிச்சயமாக சாதிக்க முடியும் என்பது உறுதியில்லை என்றாலும் அந்த அடியை நோக்கி எட்டுவைக்கும் திறன் கைகூடியிருக்கும் என்பதுதான் இதன் அனுகூலம்.

விஜயராவணனின் ‘நிழற்காடு’ தொகுப்பிலுள்ள கதைகள், அவர் இந்த படிநிலைகளைக் கடந்து வந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துவனவாய் உள்ளன. அதே சமயத்தில் ஒரே கதையில் இந்த மூன்று படிநிலைகளும் ஒன்று கலந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

‘மொட்டை மாடி’, ‘காகிதக் கப்பல்’, ‘அநாமதேய சயனம்’ ஆகிய மூன்றும் சிறார் பருவத்தின் அனுபவங்களைக் கொண்டவை. ‘மொட்டை மாடி’ தனக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக தலைமுடியை இழக்கும் சிறுவனின் கதை. வேறு அடுக்குகள் எவையும் இல்லாத நேரடியான, சற்றே புகார்த்தன்மையும் நகைப்பும் கொண்டது. ‘அநாமதேய சயனம்’ தூங்கிக் கொண்டே இருக்க விரும்பும் சிறுவனில் தொடங்கி, தூக்கத்தின் மீதான அத்தகைய ஈடுபாடு அவன் வளருந்தோறும் பெருகி, கட்டாயமாக மறுக்கப்படும் நிலையில் சிதைவுறும் நிலையை எட்டுகிறது. சிறுவர் பருவத்தில் சாத்தியமாகும் எளிய விருப்பம், வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளில் பொறுப்புகளும் சுமைகளும் கூடுந்தோறும் அரிதான ஒன்றாக கைவிட்டுப்போகிறது. மனநிலையிலும் வாழ்நிலையிலும் உருவாகும் மாற்றத்தை ஒன்றிணைக்கும்போது இந்தக் கதை கூடுதல் ஆழத்தை அடைகிறது. ‘காகிதக் கப்பல்’ என்ற தலைப்பே அனைவரையும் சிறுவர் பருவத்துக்கு சட்டென்று இழுத்துச் சென்றுவிடுகிறது. இந்த உடனடி கவன ஈர்ப்பின் விசையில் கதைக்குள் நுழையும்போது நமக்குக் காத்திருப்பது வேறொரு உலகம். கல்கத்தாவில் சின்னஞ்சிறிய உணவகத்தில் வேலை பார்க்கும் ஒரு சிறுவனையும் அவனது கப்பல் கனவையும் அந்த உலகம் காட்டுகிறது. கப்பலைப் பார்க்கவேண்டும் என்ற அவனது கனவை துல்லியமாகச் சொல்லிச் செல்லும் அதே நேரத்தில் சிதைவுற்ற அவனது வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளையும் திறந்து காட்டுகிறது. பால்ய காலத்து காட்சிகளிலிருந்து, எளிய சந்தோஷங்களிலிருந்து நகரும் கதை அடுத்தடுத்து துயரங்களையும் சோதனைகளையும் காட்டும்போதுகூட சிறுவனின் எளிய களங்கமற்ற மனம் அவற்றின் அழுத்தத்தை ஒற்றியெடுத்து கப்பலைக் காணும் அவனது கனவை மட்டுமே துலக்கிக் காட்டும்விதமாக  சொல்லப்பட்டிருப்பதே இந்தக் கதையின் சிறப்பு.

‘சிட்டுக்குருவி’, ‘முகங்கள்’ ஆகிய இரண்டு கதைகளும் குடும்பம், உறவுகள் சார்ந்தவை. இயற்கைக்கும் பிற உயிர்களுக்கும் மனிதனுக்குமிடையேயான பிணைப்பை சொல்லத்தகுந்த கதைகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் உள்ளன. எதை நாம் இழந்துகொண்டிருக்கிறோமோ அதைக் குறித்து அதிகமும் பேசத்தான் வேண்டும் என்பதுபோல இத்தகைய புனைவுகள் எழுதப்படுகின்றன. சிட்டுக்குருவியின் கூட்டுக்காகவும், குஞ்சுகளுக்காகவும் பரிதவிக்கும் அதே பெற்ற மனம்தான் ‘முகங்கள்’ கதையிலும் இழந்த மகனுக்காகத் தவித்துக் கிடக்கிறது.

சொல்முறையில் புதிதாக எதையேனும் முயலவேண்டும் என்பதன் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளவை ‘சவப்பெட்டி’, ‘நிழற்காடு’ ஆகிய கதைகள். ‘நிழற்காடு’ தொன்மங்கள், கிராமங்களுக்கேயுரிய நம்பிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியுடன் அசாதாரண நிகழ்வுகளைக் கொண்டுள்ளதால் ஒரு புனைகதையாக இது அனுபவமாகிறது. அதே சமயத்தில், நிகழ்கால மோதல்களை லேசான அரசியல் பார்வையுடன் சொல்ல முனைந்துள்ள ‘சவப்பெட்டி’ தன்னளவில் புனைவாக உருமாறுவதில் தடுமாற்றங்கள் உள்ளன.

இந்தத் தொகுப்பில் விஜயராவணனை தனித்துவத்துடன் அடையாளப்படுத்தும் கதைகளாக இரண்டு கதைகளைச் சொல்லலாம். ஒன்று, ‘உதைக்கப்படாத கால்பந்து’. உள்நாட்டுக் கலகமும் உத்தரவாதமற்ற அன்றாடமுமான ஒரு ஆப்பிரிக்க நாட்டில், வேலை நிமித்தமாகச் செல்லும் ஒருவனின் அனுபவம் இந்தக் கதை. அந்த நாட்டின் இளைஞர்களும் சிறுவர்களும் அதிகமும் நேசிப்பது கால்பந்து. அழுக்கான கால்பந்தோடு அன்றாடமும் சந்திக்க நேரும் சிறுவனுக்கு புதிய கால்பந்துகளை வாங்கித் தரும் கதைசொல்லி, அவன் நினைத்தாற்போல கால்பந்தாடும் சிறுவனல்ல என்பதை உணர்வதோடு கதை முடிகிறது. இந்தக் கதையிலும் அரசியல், சமகால நிகழ்வுகள், தனிமனித அவலம் என பல்வேறு இழைகளும் உள்ளடங்கியுள்ளன. ஆனால், இவற்றினூடே கால்பந்தை நேசிக்கும் சிறுவனைக் குறித்த சித்திரமும் அவனை அதிலிருந்து விலக்கும் சூழலும் தெளிவாக மேலெழுந்துள்ளன.

இரண்டாவது கதை, ‘பேசும் தேநீர் கோப்பைகள்’. ஒரு நீள்கவிதையென அழகான படிமங்களும் எளிமையான உரையாடல்களும் அமைந்த சிறுகதை. அடிக்கடி நிறம் மாறும் ஜப்பானின் பியூஜி எரிமலையை வண்ணங்கள் கொண்டு வரைய முயலும் பார்வைத் திறனிழந்த ஓவியர் ஹாருட்டோவும், அவரது தேநீர் கோப்பைகளும், விருந்தினரின் கையிலிருக்கும் பூனையுமாக அபாரமான அனுபவத்தைத் தரும் கதை. கலைஞனின் மனம் கொள்ளும் பித்து, கண்டடையும் நொடியில் அடையும் பரவசம், மேலும் மேலும் என விழையும் துடிப்பு, அனைத்துக்கும் அப்பால் கவியும் மௌனம் என கதை நெடுகிலும் அழகிய தருணங்கள். ஒரு மொழிபெயர்ப்புக்குக் கதை என யோசிக்கச் செய்யுமளவு மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் எழுதப்பட்டுள்ளது.

திருகலான மொழியில் சிக்கலான வாக்கிய அமைப்பைக்கொண்டுதான் புதுவகைக் கதைகளை எழுத முடியும் என்ற மனப்போக்கு தேவையற்றது என்பதை வழிமொழிகிறது விஜயராவணனின் இத் தொகுப்பு.

0

சால்ட் வெளியீடு – டிசம்பர் 2020

1 comment:

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...