Saturday 3 December 2022

கதைவெளியில் புதிய நறுமணம் ‘அத்தர்’ - நல்லதம்பியின் சிறுகதைகள்

 


( சிறுகதை - காலாண்டிதழில் ( ஆகஸ்ட் 2022 ) வெளியான கட்டுரை )

அறிமுகமில்லாத ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை எந்தவொரு எதிர்ப்பார்ப்புமின்றி வாசிக்கும்போது அது தருகிற அனுபவம் தனித்தன்மைமிக்கதாக இருக்கும்.

கே.நல்லதம்பியை அறிமுகமில்லாதவர் என்று சொல்ல முடியாது. விவேக் ஷான்பாக்கின் ‘காச்சர் கோச்சர்’ நாவல் அவரை ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளராக அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு, மிகக் குறைந்த கால அவகாசத்தில் கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்துக்கும் முக்கியமான பல நூல்களை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால், அவரை ஒரு சிறுகதை எழுத்தாளராக அறிமுகப்படுத்தியுள்ளது ‘அத்தர்’ தொகுப்பு.

‘அத்தர்’ மிகச் சிறிய தொகுப்பு. ஆறு கதைகளை மட்டுமே கொண்டது. கிரௌன் அளவில் 120 பக்கங்கள் மட்டுமே. இதைப் படித்து முடித்தவுடன் மீண்டும் ஒரு முறை எழுதியவரின் பெயரைப் பார்த்து உறுதி செய்துகொண்டேன். ஏனெனில் இந்தத் தொகுப்பு அப்படியொரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. கதைகளின் வடிவங்கள் வேறானபோதும் கதை சொல்லும் மொழி ஒன்றே. நேரடியான, எளிமையான ஆனால் செறிவான மொழியிலேயே எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டுள்ளன.

புனைவெழுத்தாளர்கள் மொழியாக்கம் செய்திருக்கும் நூல்களில் புனைவின் நுட்பங்களும் மொழி நேர்த்தியும் துலக்கமாக வெளிப்பட்டிருக்கும். தொழில்முறை மொழிபெயர்ப்பில் உணர நேர்கிற போதாமைகள் அவற்றில் இருக்காது. உலகப் புகழ்பெற்ற புனைவெழுத்தாளர்கள் பலரும் முக்கியமான ஆக்கங்களை மொழிபெயர்த்துள்ளனர்.

மொழிபெயர்ப்பாளராக நாமறிந்த கே.நல்லதம்பியை ஒரு சிறுகதை ஆசிரியராக இத்தொகுப்பு நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இக்கதைகளின் வடிவங்களும் மொழி அமைப்பும் கச்சிதமாக அமைந்திருப்பதை மொழியாக்கத்தின் பலனாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது வடிவம், மொழி குறித்து அவருக்கு இருக்கும் இந்தத் தெளிவே அவருடைய மொழிபெயர்ப்பிலும் காணமுடிகிறது என்றும் சொல்லலாம்.

ஆறு கதைகளில் ‘தமன்நெகாரா’, ‘பிங்க் அண்ட் புளூ’, ‘அத்தர்’ மூன்று கதைகளுக்குள் உள்ள ஒரு பொதுச் சரடு ஆண்-பெண் உறவு. சரியாகச் சொன்னால் மீறல்களுடனான உறவு. இக்கதைகளில் ஆண் பெண் உறவின் மீறல்களை கையாண்டிருக்கும் விதம் தனித்தன்மைமிக்கது. தன்னியல்பில் நிகழும் அத்தகைய உறவை சரியென்றோ தவறென்றோ தீர்ப்பு சொல்லாமல் வாழ்வின் தற்செயல் கணங்களில் ஒன்றாகக் காட்டியிருக்கும் முதிர்ச்சி குறிப்பிடத்தக்கது. மரபின் சுமையால் இன்னும் உள்ளுக்குள் இருக்கும் பயத்தையும் தயக்கத்தையும் மீறி உயிரின் இயல்பான உந்துதல் அதை நோக்கிச் செலுத்தும்போது அது வாழ்வின் ஒரு பகுதியாகிவிடுகிறது. அதன் பின் அதன் லாப நஷ்டங்களை, உணர்வு நிலைகளை அவரவர் நிலையில் அனுபவிக்கவும் நேர்கிறது.

‘தமன்நெகாரா’ என்ற தீவில் தற்செயலாகச் சந்திக்கும் மத்திய வயது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் இணக்கத்தைத் தொடர்ந்து ஒரே அறையில் தங்குகிறார்கள். பொதுவான ரசனை சார்ந்து நிறைய பேசுகிறார்கள். கூடிக் களிக்கிறார்கள். ஆனால் சொந்த விபரங்களைப் பரிமாறிக் கொள்ளாமலே பிரிந்து போகிறார்கள். இருவருக்கும் இணையர்கள் உண்டு. குடும்பமும் உண்டு. அவரவர் வாழ்வில் அடைய முடியாத ஏதோவொரு நிறைவை இந்தத் தற்செயல் உறவில் கண்டடைகிறார்கள். இது சரியா, தவறா என்ற விவாதத்தையோ இதற்குப் பின் இவர்கள் இருவரும் எப்படிப்பட்ட உணர்வுடன் இருப்பார்கள் என்ற கேள்வியையோ இந்தக் கதை எழுப்பவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் வாழ்வில் அடைய முடியாத சில வெற்றிடங்கள் இருக்கக்கூடும். எதிர்பார்ப்புகளும் நிச்சயம் இருக்கும். ஆனால், அவற்றை அடையக்கூடிய வாய்ப்புகளும் அப்படி அமையும்போது நேரடியாக ஏற்றுக்கொள்கிற மனநிலையை அடைவது எளிதில்லை. அப்படியொரு சாத்தியத்தைத்தான் இந்தக் கதை முன்னிறுத்துகிறது.

இதற்கு மாறாக, திருமணத்துக்குப் பின் பல காலம் கழித்து முன்னாள் காதலியைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தைச் சொல்வது ‘பிங்க் அண்ட் ப்ளு’. கதையில் எந்த புதுமையும் இல்லை. ஆனால், கதையைச் சொன்ன விதம் வழக்கத்துக்கு மாறானது. கதாபாத்திரங்கள், சந்திக்கும் இடங்கள் வழியாக வெவ்வேறு கோணங்களில் சின்னச் சின்ன பத்திகளில் கதை விரிகிறது. கதையின் முடிவு, கதைக்கான முடிவாக மட்டும் அமையாமல், இதுவரையிலும் மறுக்கப்படுகிற அல்லது ஏற்றுக் கொள்ளத் தயங்குகிற ஒன்றுக்கான சமூகத்தின் பதிலாகவும் அமைந்திருப்பதில் இந்தக் கதை இன்னொரு சிறப்பு.

அழகான ஒரு காதல் நாவலுக்கான கருவைக் கொண்டது ‘அத்தர்’. வழக்கமான பாணியில் அல்லாமல் முற்றிலும் புதிய விதத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது. கடைத் தெருவில் கிடக்கும் கடிதம், அதிலிருந்து விரியும் பழைய காதல் கதை, அதைப் படித்துவிட்டு வீடு தேடி வந்து அந்தக் கடிதத்தைப் பெற்றுச் சொல்லும் ஒருத்தி என மிக நுட்பமாக அமைந்துள்ளது.

மூன்று கதைகளுமே திருமணம் தாண்டிய உறவைப் பேசுகின்றன. உடல் தேவைகளையும் கடந்து வேறு போதாமைகளுடனும்தான் குடும்ப அமைப்பு இருக்கக்கூடும். அதன் எல்லைகளை அனுசரித்து இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் மன அழுத்தத்துக்கும் விரிசலுக்கும் காரணமாகிறது. இந்த யதார்த்தத்தின் பின்னணியுடனே இக்கதைகள் அமைந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

இத்தொகுப்பை ‘சொல்லாத காதல்களுக்கு’ சமர்ப்பணம் செய்திருப்பது பொருத்தமானதுதான்.

கதை ஒழுங்கு மிக்க பிற கதைகளுடன் ஒப்பிடும்போது ஆல்பர் காமுவின் ‘அவுட் சைடர்’ தளர்வான அமைப்பைக் கொண்டுள்ளது. பசி பொறுக்காமல் கடையில் புத்தகத்தைத் திருடி மாட்டிக் கொள்வதும் அதன் பிறகான அவமான உணர்வுமே கதையின் மையம். கதை இந்த மையத்திலிருந்து விலகி முன்னும் பின்னுமாக அலைவதால் அடர்த்தி குறைந்து பலவீமடைந்துள்ளது.

குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இல்லாத தனிமை ஒரு மனிதனுக்குள் ஏற்படுத்தும் பல்வேறு உணர்வு நிலைகளைச் சொல்லும் ‘வீட்டின் தனிமையில்’ எல்லோருக்குமான அனுபவத்தைக் கொண்டது. நோய்த்தொற்று காலத்தில் யாருமில்லாது வீட்டுக்குள் இருக்க வேண்டிய சூழலில் மனம் கொள்ளும் கோலங்களை பலரும் அனுபவித்திருக்கக்கூடும். மனைவியைக் குறித்தும் வீட்டு வேலைகளைக் குறித்தும் உணர்ந்து கொள்ளவும் வாய்ப்பாகவும் அமைந்திருக்கும். நிதானத்துடன் தன்னை உற்றுப் பார்க்கும் தருணங்களை இக்கதை செறிவுடன் காட்டியுள்ளது.

முழுக்க வெளிப்படையாக இருப்பதென்பது சாத்தியமில்லை. ஒவ்வொருவரைக் குறித்தும் வெளியில் சொல்ல முடியாத விமர்சனங்கள், கருத்துகள் இருக்கவே செய்யும். அவற்றை அறிய நேர்ந்தால் நிம்மதியாக இருக்க முடியாத சூழலைச் சித்தரிக்கிறது ‘கண்ணாடி’. மீயதார்த்த கதைக்கான ஒரு முயற்சி.

 

மைசூரில் பிறந்த நல்லதம்பி தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற பிறகு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டார். பணிக் காலத்தில் ஹைதராபாத்தில் இருந்தவருக்கு கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளும் தெரியும்.

ஒரே சமயத்தில் தமிழிலும், கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் இக்கதைகளை எழுதியிருக்கிறார் கே.நல்லதம்பி. அதற்கான அடையாளங்களை சில இடங்களில் காண முடிகிறது. ‘அப்போது டிரைவர் மற்றும் உதவியாளன் வாய்விட்டு உரக்கச் சிரிப்பார்கள்’, ‘ஆனால் அவை மற்ற வாசனைகளைப் பற்றி மனிதர்கள் போல எந்த ஆர்வத்தையும் காட்டுவதில்லை’, ‘இந்த கடைசி நான்கை முன் சொன்னதுபோல கையால் எழுதப்பட்டிருந்தது’ போன்ற வரிகளை உதாரணமாகக் காட்டலாம். குறிப்பிட்ட பிரதேசத்துக்கானது என்று சொல்லும்படியாக எந்த அம்சங்களும் இல்லாமல் கதையை தெரிவு செய்திருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது.   

கதையை கச்சிதமாகத் தொடங்கி, எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லிச் சென்று நேர்த்தியமாக முடிக்கிறார் நல்லதம்பி. கதைகளுக்கு நடுவில் கவிதை போன்ற சில வரிகள் அமைந்துள்ளன. ‘நான் எப்போதும் இதுபோல தொலைந்து போனதில்லை, கண்டுகொண்டதும் இல்லை’, ‘நிர்வாணமாக இருக்கும்போது நம்மிடம் எல்லாமே இருப்பதுபோலவும், எதுவுமே இல்லாதது போலவும் ஒரு உணர்வு’ போன்ற வரிகளைச் சுட்டலாம். கதையின் சூழலை சின்னச் சின்ன தகவல்களுடன் துல்லியமாக உருவாக்க முடிகிறது.

குறைவான எண்ணிக்கையைக் கொண்ட தொகுப்பு என்றாலும் வடிவிலும் சொல் முறையிலும் நேர்த்தியான வாசிப்பை உறுதிப்படுத்துகிறது. இடம்பெற்றுள்ள கதைகள் புதிய அனுபவங்களைத் தருவதால் ‘அத்தர்’ பொருட்படுத்தத்தக்க ஒரு வரவாகும்.

(‘அத்தர்’ – சிறுகதைகள், எதிர் வெளியீடு )

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...