Saturday 3 December 2022

‘எளிதில் கடக்க முடியாதது அன்பின் துக்கம்’ - நேர்காணல் - புரவி அக்டோபர் 2022

 


புரவி அக்டோபர் 2022 இதழில் வெளியானது இந்த நேர்காணல். கேள்விகள் அனைத்துமே மனைமாட்சி நாவலை அடிப்படையாகக் கொண்டவை. நேர்காணல் செய்தவர் கமலதேவி.

எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தமிழில் தொடர்ந்து இயங்கி வரும் ஒரு முக்கியமான படைப்பாளி ஆவார். மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள் என்று தமிழ் இலக்கியத்தின் பல வகைமைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அம்மன் நெசவு, மணல்கடிகை வரிசையில் மனைமாட்சி இவரது மூன்றாவது நாவல். ஆண் பெண் அன்பின் பின்னணியில் உருவாகிவந்த நம் சமூக அமைப்பு எதிர்கொள்ளும் சிக்கல்களை இந்த நாவல் பேசுபொருளாகக் கொண்டுள்ளது. ‘இந்த நொடியில் நாம் காண்பது முந்தின நொடியில் கண்ட அதே நதியை அல்ல’ என்றொரு வரி உள்ளது. அதே போலத்தான் சமூகம் வரையறுத்த வாழ்வியல் எல்லைகளும், கண்முன்னே நகர்ந்து செல்வது தெரியாமல் நகர்ந்துவிடும். அப்படி நிறைய எல்லைகளை படிப்படியாகக் கடக்கும்போது ஒரு சந்தியில் திசைமாறலாம். இன்னொன்றில் சங்கமித்துப் பெருக்கெடுக்கலாம். அப்போது மாற்றங்கள் கண்முன்னே நடக்கின்றன. மாற்றங்களை விட அதை சாத்தியமாக்கும் சலனங்கள் முக்கியமானவை. ஓடிக்கொண்டே இருக்கும் நதியின் ஒரு சில கணங்களை அதன் அத்தனை சலனங்களுடனும் இந்த நாவல் தன்னில் உறைய வைத்திருக்கிறது. நுண்ணோக்கியின் அடியில் ஒருதுளி திரவத்தில் ஒரு உலகத்தையே நம்மால் காணமுடியும். அப்படியொரு அனுபவத்தை இந்த நாவல் தருகிறது. ‘மனைமாட்சி’ நாவலை மையப்படுத்தி அவருடன் உரையாடியதிலிருந்து…

1.ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே புரிந்து கொள்ள முடியாத ஆண் பெண் அன்பை நாவல் இந்த காலகட்டத்தில் வைத்து மறுபரிசீலனை செய்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

அன்பை மட்டுமல்ல. ஆண் பெண் உறவு சார்ந்து இதுவரையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து மதிப்பீடுகளை, விழுமியங்களை, கட்டுப்பாடுகளை, வரையறைகளை, எல்லைகளை மறு பரிசீலனை செய்யவேண்டிய அவசியம் உள்ளது. இவை ஒவ்வொன்றும் உருவாக்கப்பட்ட காலமும் சூழலும் வேறு. கல்வி, தொழில் வாய்ப்பு, பொருளாதார சுதந்திரம், வாழ்க்கைச் சூழல் என்று புறவயமான மாற்றங்கள் வெகு வேகமாக ஏற்பட்டிருக்கும்போது மனித உறவுகள் சார்ந்த பல்வேறு காரணிகளையும் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. தனி மனித அளவில் இவற்றின் அளவுகோல்கள் மாறுபடும் என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும். மரபான அமைப்பையும் அதன் விதிகளையும் இன்றைய சூழலில் எப்படிப் புரிந்துகொள்வது என்பதற்கான ஒரு முயற்சிதான் ‘மனைமாட்சி’.

2.இந்த நாவல் பேசுபொருள் சமூகவாழ்க்கைக்காக நாம் இட்டுக் கொண்ட விதிமுறைகளை சற்று மாற்றிப்போட்டுப் பார்க்கிறதா? அல்லது இந்த சிக்கல்கள் என்றும் உள்ளவை தானா?

எல்லைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போதே அவை சார்ந்த சிக்கல்களும் விமர்சனங்களும் எழும். அதுவே இயல்பு. அவை உரத்தொலிக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் முணுமுணுப்புகளேனும் இருந்திருக்கும். எனவே, அந்தச் சிக்கல்கள் குறித்து இன்று வெளிப்படையாக பேச முடிகிறது. விதிமுறைகளை மாற்றிப் போட்டுப் பார்க்கலாம் என்ற கோரிக்கை எழுகிறது. விவாகரத்து என்பதே வெகு அரிதான ஒன்றாக இருந்த காலம்போய் இப்போது சாதாரண நடைமுறைகளில் ஒன்றாகிவிட்டது. ‘ஒத்துவராத இணையுடன் மனக்கசப்புடன் வாழ்வதைக் காட்டிலும் பிரிந்திருப்பது பரவாயில்லை’ என்ற எண்ணம் வலுப்பெற்றிருக்கிறது. சிக்கல்கள் என்றுமிருப்பவைதான். அவற்றுக்கான தீர்வுகள் ஏற்கெனவே உள்ள விதிமுறைகளின்படி சாத்தியமாகபோது அவற்றை மாற்றவேண்டிய தேவை ஏற்படுகிறது.

3.சமூகமாக வாழ வேண்டித்தானே மனையும், ஊரும், நாடும். இந்த எல்லைகளை எப்போதும் நம் ஆதி குணம் மீறிக்கொண்டும் பரிட்சித்துக்கொண்டிருக்கிறதா? இல்லை இந்த மீறல்கள் இயல்பானவையா?

ஆதி குணம் என்பது சுயநலம். தன் பசி தீர்க்கவே கல்லையும் இரும்பையும் ஆயுதமாக்கினான். பசிக்கான வழிவகை உறுதியான பிறகே மனையும் ஊரும் நாடும் உருவாயின. மனை, ஊர், நாடு இவை அனைத்தும் சமூகத்தின் அங்கமே. அதேசமயம் இவை அனைத்துமே தனிமனித சுயநலம் சார்ந்தும் அதனைப் பாதுகாக்கவுமே உருவானவை. எனவே, மீறல்களும் மறுபரிசீலனைகளும் தொடர்ந்தபடியேதான் உள்ளன. அவை இயல்பும்கூட. அவ்வாறன்றி அடுத்ததொரு இலக்கைக் குறித்து யோசித்திருக்கவே முடியாது. மீறல்களும் மறுபரிசீலனைகளும் இல்லாமல் அப்படியே தொடர முடியாது.

4.நாம் சமூகமாக வாழ விதித்துக்கொண்ட விதிமுறைகள் எந்த அளவிற்கு வாழ்வை சிக்கலாக்குகின்றன?

‘சமூகம் என்பது நாலுபேர்’ என்பது பொதுவழக்கு. நான்கு பேரும் நான்கு தனிநபர்கள். நால்வருக்குமான ‘சுயம்’ என்பது வெவ்வேறானது. அவரவர் அளவில் தனித்தன்மைமிக்கது. சில விசயங்களில் ஒத்துப்போகும். பல விசயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். சில விசயங்களில் கருத்து வேறுபாடு இருந்தபோதும் சுயநலத்தின் பொருட்டு மற்றவர்களுடன் அனுசரித்துப் போக நேரும். இந்த அனுசரணைதான் மனை, சமூகம், நாடு போன்ற அமைப்புக்கான அஸ்திவாரம். இந்த அனுசரணையின்பொருட்டு அவரவர் தத்தம் சுயநலத்தை எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் இணக்கத்தைத் தீர்மானிக்கும். இதுபோன்ற விட்டுக்கொடுத்தல்களை அனுசரணைகளை உறுதிப்படுத்தும்பொருட்டே விதிமுறைகள் உருவாயின. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொதுவான நலத்தின்பொருட்டு பேணப்படவேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆனால், தனிமனிதனின் எல்லையை ஓரளவுக்கு மேல் இவை பாதிக்கும்போது சிக்கல்கள் எழும். பொது அமைப்புக்கு எதிரான மனநிலை உருவாகும். தனிமனிதனின் சுயத்தையும் நலத்தையும் பாதிக்காதவரையில் சிக்கல்கள் எழாமல் இருக்கும். சிறிய அளவில் பாதிப்பு வரும் என்றாலும் சிக்கல்தான்.

5. கண்ணன் வேணி வாழ்வில் திருமணபந்தமே அவர்கள் இருவரின் வாழ்வை நிலைகொள்ள வைக்கிறது. காதலை உணராத கண்ணன் காதலை கண்டடைகிறான். வேணி எது காதல் என்பதை உணர்கிறாள். விதிமுறைகள் என்று நாம் நினைப்பவை பெரும்பாலான நேரங்களில் சிக்கலிற்கு தீர்வாகவும் ஆகின்றன அல்லவா?

சிக்கல்கள் எழாமல் இருப்பதற்கும் ஒருவேளை, அப்படி வரும்போது அதற்கான தீர்வுகளைத் தருவதற்குமே விதிமுறைகள் உருவாக்கப்படுகின்றன. குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் பொதுவான சில நடைமுறைகள் சார்ந்த கண்காணிப்பையும் தயக்கத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சென்ற தலைமுறை வரையிலும் அவ்வாறான தயக்கத்தையும் பயத்தையும் மீறுவதற்கான துணிச்சல் மிகக் குறைவாகவே இருந்தது. ‘நாலு பேர் என்ன சொல்லுவாங்க’, ‘ஊருக்குள்ள தலைகாட்ட வேணாமா?’ என்பதுபோன்ற எண்ணங்கள் இருந்தன. இதன்பொருட்டு தனிமனித விருப்பங்களும் முன்னுரிமைகளும்கூட விட்டுத்தரப்பட்டன. குடும்பம், ஊர், சமூகம் போன்ற அமைப்புகள் உறுதியுடன் இருந்தன. இன்று நிலைமை அப்படியில்லை. அண்டைவீட்டாரையே தெரிந்துகொள்ள அக்கறையில்லாத சூழல். பெருநகரங்களிலும் தொழில்வளம் மிகுந்த ஊர்களிலும் குவியும் மக்கள் நெருக்கத்தின் காரணமாக ஊருக்கு என்று இருந்த பொதுவான குணாம்சங்கள் காணாமல் போய்விட்டன. உதாரணமாக, திருப்பூர், கரூர் போன்ற தொழில் நகரங்களைச் சொல்லலாம். இன்று அது பல்வேறு தரப்பட்ட மக்களும் புழங்குகிற இடம். அதற்கென ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தைச் சுட்ட முடியாது. எனவே, சூழலுக்கேற்ப இத்தகைய பொது விதிமுறைகள் மாற்றம் கொள்கின்றன. இதனால் தீர்வுகளைவிட சிக்கல்களே அதிகமும் விளைகின்றன.

கண்ணன், வேணியைப் பொறுத்தவரை அவர்கள் கண்டடையும் காதல் விதிமுறைகளின் பலனல்ல. விதிகளை மீறிய பின் ஏற்பட்ட நிராசைகளின், விளைவுகளின் பலனே.

6.ஒரு தளத்தில் நாம் போட்டுக்கொண்ட திருமணம் என்ற விதிமுறைகைவிடுதல், நம்பிகையின்மை, பெருங்கோபமாக  மாறுகின்றது. திருமண பந்தத்தில் ஒருவகையான சுரண்டல் நடக்கிறது என்றால் சுதந்திரமான ஒரு உறவிலும் உணர்வு சுரண்டல் நடக்கிறது இல்லையா?

இரு நபர்களுக்கிடையிலான உறவு என்றாலே, அது நட்போ காதலோ வேறு எதுவாக இருந்தாலும், அதனதன் அளவில் சுரண்டல் இருந்தே தீரும். அளவுகள்தான் மாறுபடும். சுரண்டல் என்ற சொல்லை வேண்டுமானால் மாற்றிப்போட முயலலாம்.

எனவே, திருமண பந்தத்தில் உள்ள சுரண்டல்களும் மனக்குழப்பங்களும் திருமணம் மீறிய சுதந்திரமான உறவிலும் நிச்சயமாக இருக்கும். இன்று மண உறவு சார்ந்த பார்வையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. மண வாழ்க்கை இல்லாமல் ‘சிங்கி’ளாகவே இருக்கும் போக்கு அதிகரித்துள்ளது.  இவை எல்லாமே திருமணம், குடும்பம் போன்ற அமைப்பின் மீதுள்ள மாற்றுப் பார்வை, விமர்சனம் என்றே சொல்ல முடியும். கல்வியும் பொருளாதார சுதந்திரமும் இத்தகைய பார்வை மாற்றத்தை சாத்தியப்படுத்தியுள்ளன.

7.பொதுவில் நம்மிடம் சொல்லப்படுகிற துரோகம் மற்றும் குற்றஉணர்வுகள் குறித்து இந்த நாவலின் கதாப்பாத்திரங்களுக்கு நிறைய கேள்விகளும்,தடுமாற்றங்களும் உள்ளன. அதைப்பற்றி

குடும்ப அமைப்பின் மீதான கேள்விகள் எழுகின்றன என்றாலும் இத்தனை காலமும் அந்த அமைப்பு மனத்துள் ஏற்படுத்தியிருக்கும் மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் அத்தனை எளிதில் உதற முடிவதில்லை என்பதுதான் காரணம். விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் வழக்கங்களையும் மீறும்போது இயல்பாகவே குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக நேர்கிறது. அப்படித்தான் சமூகம் குறித்த உணர்வு அகத்துள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடுமாற்றங்களைக் கடந்து வர இன்னும் காலம் பிடிக்கும். மேலும் துரோகம், குற்றவுணர்வு போன்றவற்றுக்கான வரையறைகளும் கறாரானவை அல்ல. எனவே அவற்றைக் குறித்த தடுமாற்றங்கள் இயல்பானவையே.

8.ராஜம்பாய்,சாந்தி,மதுமதி போன்ற பெண்களிடம் உள்ள உறுதித்தன்மை ஒரே வகையான உறுதித்தன்மை இல்லை. ஆளாளிற்கு மாறுபடுகிறது. வாழ்வை பொறுத்த வரை உறுதித்தன்மை என்ற பற்றுகோல் மீது கூட கேள்விகளை எழுப்புவதை நாவலின் பேசுபொருளின் வெற்றி என்று நினைக்கிறேன். அப்படி எல்லாம் எளிதாக வகுத்துவிடக் கூடியவை அல்ல வாழ்க்கையின் சிக்கல்கள் என்று நாவலை முடிக்கும் போது தோன்றியது. இதைப்பற்றி உங்கள் கருத்து

ஒவ்வொருவருக்குமான சூழல்கள் வேறு, அவர்கள் எதிர்கொள்கிற சிக்கல்கள் வேறு. ராஜம்பாய் தன்னை மீட்டுக்கொள்ளும் வழிமுறைகளுடன் ஒப்பிடும்போது சாந்தி தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக மேற்கொள்ளும் செயல்கள் வேறு வகையானவை. இரண்டுமே எதிரெதிரான மனப்போக்குகள் கொண்டவை. மதுமதியின் தேர்வுகளும் வேறு மாதிரியானவை. இவர்கள் மூவரும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் ஒன்றுபோல இருக்க வாய்ப்பில்லை. ஆனால், மீளவேண்டும் எனும் உளப்பாங்கில் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. சுற்றிலும் வெவ்வேறு மனப்போக்குகளையும் இலக்குகளையும் கொண்ட மனிதர்களுக்கே நடுவே வாழும்போது உறுதித்தன்மையோ அதன் மீதான பற்றோகூட உத்தரவாதமில்லாதது. சந்தர்ப்பங்களுக்கும் மனிதர்களுக்குமேற்ப மாறக்கூடியது. எனவே, ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட சூழலில் நிகழ்வதைக் கொண்டு இன்னொருவருக்கு இதுபோலவே நிகழும் என்று கணிக்க முடியாது. ஏன், அதே நபருக்கும்கூட இன்னொரு முறை அதுபோலவே நடக்கும் என்றுகூட சொல்ல முடியாது. உறவுகள் சார்ந்த சிக்கல்களில் எதுவொன்றையும் முன்கூட்டியே எளிதில் வகுத்துவிட முடியாது என்பது வாழ்வின் சுவாரஸ்யங்களில் ஒன்று.

9.மதுமதி, முத்தரசு காதாப்பாத்திரங்களின் எல்லைக்கள் தடுமாறினாலும் இருவரின் உறவும் நட்பாகவே அழகாக வந்திருக்கிறது சார். அதை பற்றி

அன்றாட வாழ்வில் இவ்வாறான நட்புகளைக் காணமுடியும். அடுத்தவர் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து ஆழமான புரிதலுடன், ஏமாற்றங்களும் கருத்து வேறுபாடுகளும் இருந்தபோதிலும், நட்புடன் இருக்க முடிகிறது. முத்தரசுவுக்கு மதுமதியின் மேல் ஈடுபாடு உண்டு. அவள் திருமண முறிவு அவனுக்கு உள்ளூர மகிழ்ச்சியையே அளிக்கிறது. அவள் பாண்டிச்சேரிக்கு வரப்போவது குறித்து எதிர்பார்ப்பும் உள்ளது. இவை அனைத்தையும் அறிந்தே மதுமதி சரவணனைக் குறித்து அவனிடம் சொல்கிறாள். இருவருக்குமிடையே ஒரு சிறு கண்ணாமூச்சி ஆட்டம்.    

10.நாவல் பேசும் இந்த உறவு சிக்கல்கள் என்றும் உள்ளவை என்றாலும் கூட இரண்டாயிரத்திற்குப்  பிறகு உலகமயாமாாக்கலில் இன்னும் கூடுதல் கனம் கொள்கிறது. இதை எப்படி கையாள்வது எந்த சந்தி நிலையில் நிற்கிறோம்.  ஜெயகாந்தனின் கற்பு பற்றிய கேள்வி அக்னிபிரவேசத்தில் தொடங்கி கங்கை எங்கே போகிறாள் விரிந்து மீண்டும் கேள்வியாகவே எஞ்சும். இன்று நமக்கு அந்த சிக்கல் தள்ளி சென்று விட்டது என்று நினைக்கிறேன். அதைத்தாண்டி ஆண்பெண் உறவின் அடுத்த நிலையில் நின்று பேசும் படைப்பு என்பதே இதன் முக்கியத்துவம். மீண்டும் அதே கேள்வி தான்நாவலில் அன்பு என்ற தீராத பேசுபொருளைஉடல் என்ற எல்லையை கடக்க வைக்க விழைந்தீர்களா?

ஜெயகாந்தனின் ‘அக்னி பிரவேசம்’ இப்போது எழுதப்பட்டால் அன்று ஏற்படுத்திய அதேயளவுக்கான அதிர்வுகளை ஏற்படுத்துமா என்பது சந்தேகம். ஆனால், அக்னி பிரவேசமும், கங்கை எங்கே போகிறாளும் பொதுச் சிந்தனையில் ஏற்படுத்திய அசைவுகள் முக்கியமானவை. அவை எழுப்பிய கேள்விகள்தான் இன்று பல மாற்றங்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளன. உலகமயமாக்கல், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி சாத்தியப்படுத்திய பொருளாதார மேன்மை, சமூக ஊடகங்கள் போன்ற பல்வேறு காரணிகளும் மனித உறவுகள் குறித்து ஏற்கெனவே நம்மிடையே உள்ள மரபான சில அணுகுமுறைகளை கேள்விக்குட்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளன. இதில் சாதகங்களும் உண்டு. பாதங்களும் உண்டு. குறிப்பாக ஆண் பெண் உறவு சார்ந்தும் குடும்ப அமைப்பு சார்ந்தும் நுட்பமான கேள்விகள் எழுந்துள்ளன. இதுவரையும் உறுதிபட பேணப்பட்டு வந்த மரபான அமைப்புகளான திருமணம், குடும்பம் இரண்டையும் மறுவரையறை செய்யவேண்டிய தேவைகள் உள்ளன. மண முறிவுகளும் தற்கொலைகளும் மனப்பிறழ்வுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழல். மரபான குடும்ப அமைப்பும் திருமண பந்தமும் எத்தகைய நிர்ப்பந்தங்களை விதிக்கின்றன என்று ஒரு தரப்பிலும் அதிலிருந்து விலகுந்தோறும் சந்திக்க நேர்கிற விளைவுகளைக் குறித்து இன்னொரு தரப்பிலுமாக ‘மனைமாட்சி’ விவாதிக்கிறது. மரபான அவ்வமைப்புகளின் இருப்பையும் இன்மையையும் ஒருசேர சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.    

11.இதில் யாரும் அதீத லட்சியக் கனவுகளை உடையவர்கள் இல்லை. அதனால் அவர்களின் சிக்கல்களும் தன் சூழலில் உள்ளன. என்றாலும் கூட கதாப்பாத்திங்களின் தன்மை வியக்க வைப்பது. குறிப்பாக கண்ணன்,தியாகு,ராஜம்பாய் போன்றர்கள் பற்றி..

பிற இருவருடன் ராஜம்பாயை ஒப்பிடும்போது அவருக்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவகாசம் கிடைத்தது. இனியொரு முறை திரும்பவும் குடும்ப வாழ்வு அமையும் என்பது பற்றிய எண்ணமோ கனவோ அவரிடம் இல்லை. ஆனால், கண்ணனும் தியாகுவும் அன்றாடம் துயரங்களை எதிர்கொண்டவர்கள். ஒவ்வொரு நாளும் புதியப் பிரச்சினைகளை சந்தித்தவர்கள். எனவே, கனவுகளுக்கும் லட்சியங்களுக்குமான நேரமோ மனநிலையோ வாய்க்கவில்லை. தியாகுவுக்கு சாந்தி காதல் மனைவி. அவளை அறிந்தவன். அத்தனை மூர்க்கத்தையும் பிடிவாதத்தையும் அவற்றின் பலன்களையும் தன்னையன்றி வேறு யார் தாங்க முடியும் என்ற பக்குவம் கொண்டவன். பிள்ளைகளுக்காக மட்டுமே அவளை விட்டு விலகத் தீர்மானிக்கிறான். ஒருநாளும் அவளை வெறுக்கவில்லை. வாணியின் மீது கண்ணனுக்கு கோபம் இருந்தபோதும் அது வெறுப்பாக மாறவில்லை. ஏமாற்றப்பட்டதை எண்ணி வருத்தமே எஞ்சுகிறது. இவ்வாறான குணநலன்களே எதிர்மறையான குணாம்சங்களுக்கு ஈடுகட்டுவதாக அமைகின்றன. இயற்கையின் சமன்பாடுகள் அப்படித்தான் இருக்கமுடியும்.

12..ராஜம்பாய்க்கு திருமணம் என்பது நான்கு நாள் பந்தம். அது மீண்டும் முதுமையில் மலர்வதை ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்கஎனக்கு ஒருசில அப்பாக்கள் மனதில் வந்து சென்றார்கள். எவ்வளவு அழகான தடுமாற்றங்களும் தயங்கங்களும் பயங்களும் கொண்டதுஅதை எழுதுவதற்கு யாராவது இன்ஸ்பிரேசன் உண்டா?. ஏனெனில் இந்த நாவலில் ராஜம்பாய் கொள்ளும் நிறைவை வேறெந்த கதாப்பாத்திரமும் எய்தவில்லை.

முன்பே சொன்னதுபோல மீண்டும் அப்படியொரு வாய்ப்பு அமையும் என்று ராஜம் பாய் எதிர்பார்க்கவில்லை. தான் உண்டு, தன்னுடைய மெஸ் உண்டு, துர்க்கை உண்டு என்றிருந்தவருக்கு மீண்டும் வைத்தியநாதனைக் கண்டதும் தாங்க முடியவில்லை. விட்ட இடத்திலிருந்து தொடங்குவதுபோல் ஒரு புத்துணர்வு. ராஜம் பாய் அத்தனை இயல்பாய் அதை ஏற்றுக்கொள்வதுபோல வைத்தியநாதனால் முடியவில்லை. குடும்பம், மகள், உறவுகள் ஆகியன குறித்து பயம். தயக்கம். ஏதோ ஒரு தருணத்திற்காகக் காத்திருந்ததுபோல் இருவரும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

நான் முன்பின் பார்த்தறியாத ஒரு பெண்மணி. பெயர்கூடத் தெரியாது. ஆனால், அப்படியொரு வாழ்வை அவர் இறுதிவரை வாழ்ந்திருக்கிறார். நண்பர் ஒருவரின் உறவினர். கும்பகோணத்தில் சக்ரபாணி கோயில் வளாகத்தில் ஒரு மாலைப்பொழுதில் அவருடைய சாயலில் இருந்த ஒரு பெண்மணியைக் கண்டதும் இந்தக் கதையைச் சொன்னார். அப்போது வெறுமனே கேட்டுக்கொண்டேன். நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் ராஜம் பாயாக உருமாறுவார் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

ராஜம் பாய் கதாபாத்திரத்துக்கு மட்டுந்தான் இன்ஸ்பிரேஷன். வைத்தியநாதன் முழுக்கக் கற்பனையில் உருவான கதாபாத்திரம். அந்தப் பகுதியில் உள்ள பிற எல்லாக் கதாபாத்திரங்களுமே எழுதும் போக்கில் உருவானவையே.

கைகோர்க்க முடியாத காதலிகளை முதுமையில் நேரில் காணநேரும்போது வைத்தியநாதன்கள் பலர் கொள்ளும் தடுமாற்றத்தையும் தயக்கத்தையும் ஆசையையும் ரசித்திருக்கிறேன். கணப்பொழுதுகள் என்றாலும் அழகானவை.

13. காயத்ரி இந்த காலத்துப்பெண்அப்பாவை புரிந்து கொண்டிருக்கலாம் என்று தோன்றியது? நாம் ஏன் இளமையில் தான் காதலும் அதுசார்ந்த விஷயங்களும் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அப்படியில்லை என்பதற்காக வைத்தியநாதன் காதாப்பாத்திரத்தை எழுதினீர்களா?

ராஜம் பாயை மீண்டும் சந்திப்போம் என்று வைத்தி கனவிலும் எண்ணியதில்லை. கிட்டத்தட்ட அவர் மறந்துபோன ஒரு உறவு. காலம் அந்த வாய்ப்பை வழங்கும்போது அவரால் மறுக்க முடியவில்லை. அதிலும் ராஜம்பாய் தனித்து வாழ்கிறார், தனக்கென ஒரு துணையை அவர் தேடிக்கொள்ளவில்லை என்பது அவரைத் தொந்தரவு செய்கிறது. கட்டிய மனைவியும் திருமணமான மகளும் இருந்தபோதும் அவரால் அந்தத் தூண்டுதலைக் கடந்துசெல்ல முடியவில்லை. செய்த தவறுக்கான பிராயசித்தம் என்ற வலுவான எண்ணம். தொலைபேசி அழைப்பொலி அவருக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. பொய் சொல்லிவிட்டு கும்பகோணம் செல்கிறார். யாரும் அறியாவண்ணம் ராஜம் பாயைப் பார்க்கிறார். வாலிப வயதுக்குரிய ஆர்வம், வயதானவர்களுக்கான பதற்றம் இரண்டுமாக ஒரு நிலை. சுவாரஸ்யமான கதாபாத்திரம்தான். காதலுக்கு வயது பொருட்டில்லைதானே.

காயத்ரி இந்தக் காலத்துப் பெண் என்றாலும் அப்பாவின் காதலை அங்கீகரிப்பதில்லை. அம்மா, தன் குடும்பம், சுற்றம் போன்ற வேறு காரணங்கள் பல இருந்தாலும் சுப்புராமனுடனான அவளது காதல் கைகூடவில்லை என்பதுதான் அடிப்படை காரணம்.

14. மனிதனின் ஆதி உணர்வுகளான பசி,காமம்,வன்மம் போன்றவற்றை கட்டவிழ்த்து விடக்கூடாது என்ற சமூக மனதின் பதற்றம்தான் சமூகக்கட்டமைப்பு என்பதற்கு அடியில் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? சாந்திக்கு தான் மற்றொருவரால் அடக்கப்படுவது பிடிப்பதே இல்லை. அதை அவள் தீவிரமாக எதிர்க்கிறாள். மற்றவரை துன்புறுத்தும் வன்முறை அளவிற்கு செல்கிறாள். ஆனால் மற்ற அனைத்து கதாப்பாத்திரங்களிலும் அதே தன்மை சற்று குறைவாக உள்ளதாக எனக்குத்தோன்றியது. அந்த அடக்குமுறை என்ற விஷயம் தான் நாவல் பேசும் சிக்கல்களில் அடிப்படையாக இருக்குமோ?

சமூகக் கட்டுப்பாடுகள், விதிமுறைகள், ஒழுங்குகள் என அனைத்துமே மனிதனின் அடிப்படை உணர்வுகளைக் கட்டுக்குள் பேணுவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. மனிதன் மனிதனைக் கண்டு அஞ்சுகிறான். ஆதி விலங்கல்லவா? கட்டுத்தறிகளும் கடிவாளங்களும் தேவைப்படுகின்றன. புறவயமான அவ்வாறான அடக்குமுறைகள் அகத்தில் அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலோரின் அகத்துள் அது எல்லை மீறாது உறங்குகையில் சிலருக்குள் மட்டும் அது தடை உடைத்து வெவ்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அன்பும்கூட எல்லை மீறும்போது அடக்குமுறையாகத்தான் மாறிவிடுகிறது. சாந்தியின் விஷயத்தில் நடப்பது அதுதான்.

15.மீறி சென்றுதிரும்பும் வேணியும் இனி தீவிரகாதலில் இருப்பாள் தோன்றியது. உடல் இத்தியாதிகளை தாண்டி சென்று  அங்கு மனமே  நிற்கிறது. அப்படியெனில் இந்த சிக்கல்கள் எல்லாம் மனம் சார்ந்ததா என்ற கேள்வி எழுகிறது

சந்தேகமில்லாமல். புறவயமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் காரணமாக அமைவதோடல்லாமல் அவற்றைத் தோண்டித் துருவி காரணங்களைக் கற்பிப்பதும் மனமே. அதன் ஊசலாட்டங்களே ஒருவனின் குணமாக, தன்மையாக வெளிப்படுகின்றன. உடல் வெறும் கருவி மட்டுமே. இயக்குவது மனம். அதன் ஆழத்துள் நிகழ்வனவற்றைக் கண்டறியும் விஞ்ஞானத்தை மனிதன் இன்னும் முழுமையாக எட்டவில்லை. ஒவ்வொரு கணமும் மாறும் அதன் தன்மை புரிந்துகொள்ள முடியாத ஒன்று. அதுதான் சிக்கல்களுக்குக் காரணம். வேணியைப் பொறுத்தவரை அவள் சந்திக்கும் சிக்கல்கள் அனைத்துமே அவளாக வரவழைத்துக் கொண்டவை. எடுத்த ஒவ்வொரு முடிவுமே அந்தச் சிக்கல்களை மேலும் கூடுதலாக்கின. இனி எதுவும் வாய்ப்பில்லை என்ற சூழ்நிலையில்தான் மீண்டும் கண்ணனை அடைகிறாள். எனவே, உடலும் இளமையும் கடந்தவொரு நிலைதான் அங்கு இருக்கமுடியும்.

16.மகாதேவன் வயிற்றில் பசி ஒரு பாம்பை போல நெளியும் இடத்தில் பசி என்ற உடல் தேவைக்கு முன்னால் மற்ற தேவைகள் இல்லாமல் போவது நாவலின் பேசுபொருள் சார்ந்த மாற்றுதளம். நாவல் முழுக்கவே இது உள்ளது. வள்ளலார்,ராஜம் பாயின் உணவகம் மற்றும் அன்னதானம்,மூன்றாம் பகுதியில் கூட வேணி ஒரு பெண்குழந்தையின் பசிக்கு பழம் கொடுப்பதை கண்ணன் குறிப்பிட்டு சொல்லுவான். அதைப்பற்றி

மனிதனின் உடலுள் அணையாது எரிந்துகொண்டிருக்கும் நெருப்பு பசி. இந்த நெருப்பைத் தணிக்கும்பொருட்டே உடல் தொடர்ந்து இயங்குகிறது. உந்திப் பசிக்கு உணவு. போதுமென்று சொல்லக் கூடியது. உடற்பசி காமம். அதனைத் தணிக்க இன்னொரு உடல். ஒருபோதும் நிறைவு கொள்ளக்கூடியதல்ல. இச்சையின் கடைசிச் சொட்டு வற்றும் வரையிலும் நின்று எரியக்கூடிய கனல். உந்திப் பசியும் உடற்பசியும் பொந்துள் வைக்கப்பட்டிருக்கும் அக்னிக் குஞ்சுகள்தான். கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் காட்டையே கொழுத்திவிடும் வீரியம் கொண்டவை. அதை உணர்ந்தே திருமணம், குடும்பம் என்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. சமூக நடைமுறைகளும் ஒழுக்க விதிகளும் எழுதப்பட்டன. கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. இரு நெருப்புகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதால்தான் உணவின் வழியே காமத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வழிமுறைகளை கண்டுணர்ந்து கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது. நெறிகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக உடற்பசியைப் பொறுத்துக் கொள்ளவும் கடந்து செல்லவும் முடியும். ஆனால், உந்திப் பசி அவ்வாறானதல்ல. சில வேளைகளுக்குப் பின் அதைப் பொறுத்துக் கொள்வது சாத்தியமில்லை. உடலின் இயக்கத்துக்கு ஆற்றல் தேவை என்பதால் தொடர்ந்து அது ஒவ்வொரு அணுவிலும் ‘பசி, பசி’ என்று நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். அதைத் தணிக்கும்பொருட்டு எதையும் செய்யத் துணியும். பசியின் பொருட்டு செய்யப்படும் காரியங்கள் பாவக்கணக்கில் சேர்வதில்லை. எனவேதான், பசித்தவனுக்கு சோறிடுவதை தர்மம் என்றார்கள். ‘வயிற்றுக்கு சோறிட வேண்டும்’ என்று அறன் வலியுறுத்தினார்கள். பசித்தவன் இரந்து நின்றால் யாரும் இல்லை என்று சொல்லாத பொதுப்பண்பு பேணப்படுகிறது.

ஒரு நெருப்பு பகிர்ந்துண்டு வாழ்வதை வலியுறுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. இன்னொரு நெருப்போ கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு ஒழுக்க நெறிகளைப் பேணுவதை வலியுறுத்துகிறது.

இரண்டுமே அதிகாரங்களுக்கு வழிவகுக்கும் தன்மைகொண்டவை. உந்திப்பசி மண்ணின் மீதும் பொன்னின் மீதும் அதிகாரத்தை உருவாக்குவது. உடற்பசி பெண்ணின் மீதான அதிகாரத்தை உருவாக்குகிறது.

இந்த இரு நெருப்புகளை மனிதகுலம் எவ்வாறு கையாளவேண்டும், அவற்றின் விளைவுகள் என்ன என்பதையே கலையும் இலக்கியமும் தொடர்ந்து பேசுகின்றன.

17. திருமணத்திற்கு அடுத்தநாள் திருச்சி சாரதாஸ் முன்னால் மனைவியை நிறுத்தி விட்டு மகாதேவன் மட்டும் ஹோட்டலில் சென்று சாப்பிடுவான். அவனை தேடி வந்து  பார்க்கும் மதியை போலவே எனக்கும்  என்னடா என்று இருந்தது. ஆனால் அந்த பாகம் முடியும் போது அந்த நிகழ்விற்கு சரியான ஆதாரத்தை தந்தது. பசியை ஆழமாக சொல்ல முடிந்திருக்கிறது. பசி அவனுள் ஒரு ஆறாத காயமாக உள்ளது. நான் இதுவரை குழந்தைகளில் நோய் மறக்க முடியாத துயரத்தை,தனிமையை தரவல்லது என்று நினைத்தேன். பசியும் அவ்வாறானது என்று மகாதேவன் கதாப்பாத்திரம் உணர்த்துகிறது. மகாதேவன் போன்ற வெகுளியான கதாப்பாத்திரங்களை எழுதியப் பின் எப்படி அதிலிருந்து மீண்டு வந்தீர்கள்?

இந்த நாவலை எழுதுவதற்கான முதல் பொறி அந்தக் காட்சிதான். கட்டிய மனைவியை விட்டுவிட்டு உணவகத்தில் தனியே அமர்ந்து ஒருவன் சாப்பிடுகிறான் என்பதில் உள்ள விநோதம் பல கேள்விகளையும் எழுப்பியது. அந்தக் கேள்விகளைப் பின்தொடர்ந்து சென்றபோது உருவான கதாபாத்திரம்தான் மகாதேவன். நாவலின் தொடக்கம் முதல் கடைசி வரையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் தன்போக்கில் அப்படியே இருக்கும் கதாபாத்திரம். அந்த வெகுளித்தனத்தின் ஆழத்தில் உறைந்திருப்பது பசி. அதைக் கண்டுணர்வது அத்தனை எளிதல்ல. அதைப் புரிந்துகொள்ள முடியாதபோது அல்லது தாங்கமுடியாதபோது அதற்கு ‘பித்துக்குளித்தனம்’, ‘முட்டாள்தனம்’ என்று வேறு பெயரிட்டு விலக்கி வைக்கிறோம்.

நாவலில் ராஜம்பாய்க்கு இணையான உயரங்கள் கொண்ட கதாபாத்திரம் மகாதேவன்.

பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலிலும் இதுபோன்று ஒரு காட்சி இடம்பெறும். அரிசிச் சோறே பார்த்திராத மகனை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே ருசித்துச் சாப்பிடுவார் தந்தை. நாவல் முழுக்க அந்தக் கதாபாத்திரத்தின் கவனம் உணவின் மீதுதான் குவிந்திருக்கும்.

இதுபோன்ற கதாபாத்திரங்கள் தரும் மனவெழுச்சிகள் அசாதாரணமானவை. மகாதேவன் செய்யும் காரியங்களைப் பார்த்தால் சினம் மூளும். எரிச்சல் மிகும். அடித்து விரட்டவேண்டும் போல ஆத்திரம் வரும். அதேசமயம், அவன் மீது பரிதாபம் வரும். அவனுக்கு உதவ முடியுமா என்ற எண்ணமும் எழும். அவனைப் புரிந்துகொள்வது கடினமென்பதால் அவனுக்கு நட்போ உறவுகளோ அமைவதும் சிரமம். .. ஆனால், அப்படி அமைபவர்கள் அவனை முழுமையாகத் தாங்குவார்கள். துணை நிற்பார்கள். வாத்தியாரும் மங்கையும் போல. திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சோற்றுப் பொட்டலத்தை எடுத்து வைத்துத் தரும் பெண்மணியைப் போல.

18.மகாதேவனில் வயிற்று பசி விரிந்து அன்பிற்கான பசியாகிறது. அந்த பசி பெரும் துக்கமாக மாறுகிறது. சன்னிதியில்அன்பு பெரும் துக்கமாகும் தருணம்நாவலில் என்னை ஆட்கொண்ட தருணம். அதை பற் றி கூறுங்கள்

அன்பு, பாசம், கருணை, காதல், செல்வம், அதிகாரம் எந்தவொன்றும் அதீதமாக இருக்கும்போதும் சரி அல்லது சிறிதளவுகூட இல்லாதபோதும் சரி, அது துக்கத்தையேக் கொடுக்கும். அதை அனுபவிக்கும்போது உள்ள நிறைவைக் காட்டிலும் அதன் இல்லாமையால் நேரிடும் துயரம் தாங்க முடியாதது. தாமரை இலைத் தண்ணீர்போல அதை பாவிப்பது அத்தனை எளிதல்ல. தாங்க முடியாத அன்பைப் பெறும்போது அதன் இருப்பு தரும் சந்தோஷத்தைக் காட்டிலும் அது இல்லாமல் போகக்கூடுமோ என்ற அச்சம் பயங்கரமானது. இழப்பின் துக்கத்தை, ஏமாற்றத்தின் கசப்பைத் தாங்க முடிவதுபோல எளிதில் கடக்க முடியாதது அன்பின் துக்கம்.

19.கதாப்பாத்திரங்களை தாண்டி வள்ளளார், அய்யாரப்பன், சௌடீஸ்வரி, துர்கை என்று நாவலின் உணர்வு நிலைகள் தெய்வங்கள் மூலமாவும் உணர்த்தப்படுகிறது. திருவையாறு, காவிரி , கிருஷ்ணவேணி நதி,கோதாவரி, அமரவதி,  பாரதபுழை என்று  நதிகளும், குன்றுகளும் நாவலில் விரிந்த நிலப்பரப்பு சித்திரத்தை அளிக்கின்றது. விரிந்த பின்புலத்தில் மூன்று வெவ்வேறு தனிக்கதைகள் நம் நிலத்தின் ஒரு கதையாகிறது. இந்த நிலத்தையும்,இந்த நிலத்தின் மனிதர்களின் மனநிலைகளையும்,நதிகளையும்  நாவலை இணைக்கும் சரடாக வைத்தீர்களா?

மனிதர்கள் தம் வாழ்வில் சந்திக்க நேரும் சரிவுகளிலிருந்தும் ஏமாற்றங்களிலிருந்தும் மீண்டிட எதையேனும் பற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மதம், பக்தி, சடங்குகள் என்று பலவும் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை. அவருக்கு அது ஆன்மபலத்தைக் கொடுக்கிறது. அதன் வழியாக மீண்டுவிடலாம் என்று நம்புகிறார். கோயில்களும் சடங்குகளும் அவ்வாறான நம்பிக்கைகளின் வெவ்வேறு வடிவங்களே. அவ்வாறான நம்பிக்கைகள் இல்லாது போனால் வெறுமை சூழ்ந்து எதிர்மறையான எண்ணங்கள் எதையும் செய்யவிடாது அச்சறுத்தும். அப்படியொரு நிலையைத் தாங்க முடியாது. யார் மீதும் நம்பிக்கை இருக்காது. பிடிப்பு இருக்காது. அடுத்த அடியை எடுத்து வைக்க துணிச்சல் இருக்காது. மனம் சோர்ந்த நிலையில் ஆளரவமற்ற கோயில் பிரகாரத்தில் அமைதியாக உட்கார்ந்திருப்பதே பெரும் அமைதியைத் தரும். மனதிலிருந்த பாரத்தை இறக்கி வைத்த நிம்மதி. மனிதன் தன் துக்கத்தையும் பாரங்களையும் இறக்கி வைக்கவே கடவுளைப் படைத்தான் என்று சொல்லலாம். வெவ்வேறு கோயில்களும் தெய்வங்களும் நம்பிக்கைகளும் மனித வாழ்வில் ஏற்படுத்தும் செல்வாக்குகளை சுட்டிக்காட்டவே இந்த நாவலெங்கும் கோயில்களையும் விரதங்கள், நேர்த்திக்கடன், திருவிழாக்கள் போன்று பல்வேறு நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் கதாபாத்திரங்களின் வழியே எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

இந்த நாவலின் முக்கியமான படிமமாக இருப்பது நதி. வெவ்வேறு நதிகள் என்றாலும் அவை அனைத்தும் ஒரே நதி. அல்லது ஒரே நதியின் பல பகுதிகள். நாவலின் மூன்று பகுதிகளுமே நதிக்கரையில் நடப்பவை. நாவலை ஒன்றாக இணைக்கும் முக்கியமான சரடு அது.

நாவலில் உள்ள நதிகளும் கோயில்களும் சடங்குகளும் கதாபாத்திரங்களின் மனநிலைக்கு ஏற்படவே இடம்பெற்றுள்ளன. அவை அனைத்துமே கதாபாத்திரங்கள்தான். எந்தவொன்றும் பின்புலத்துக்காக வெறுமனே பெயரளவில் இடம் பெறவில்லை.

20.நாவலை முடித்தப்பின் இவ்வளவு காதாபாத்திரங்கள், மோதல்கள், கண்ணீர், ஆத்திரங்கள், அடிஉதைகள், காயங்கள், வலிகள், துக்கம் ,மகிழ்ச்சி என்று நாவல் மானுட உணர்வுகளின் ஓயாத நதி என்று தோன்றியது. ஆனால் அனைத்திற்கும் மேலாகஒருகாலை முன்தூக்கி வைத்திருக்கும் தூர்கை என் மனதில் பதிந்துவிட்டது.  அது எனக்கு நாவல் தந்த தரிசனம் என்று தோன்றுகிறது. துர்க்கையின்  முன்வைத்த அந்த டது கால் ஒரு முன்னெடுப்பு. எதற்காயினும். ஈகோவை விட்டு அன்பிற்காக ராஜம்பாய்  முன்னெடுக்கும் ஒரு முன்னெடுப்பு ,அல்லது வன்முறை  தாங்காமல் தியாகு வெளியேறும் முன்னெடுப்பு ,அல்லது வியாச பாகவதர் அடிமையாக மங்கையை கையாளும் போது அவளுமே அதே வன்முறையை பயன்படுத்தத் துணியும் தருணம் என்று நாவல் முழுக்க பல முன்னெடுப்புகளின் சாரமாய் துர்கை நிற்கிறாள்..ராஜத்தின் துர்க்கை அன்பின் , சகிப்பின்,வைராக்கியத்தின் துர்க்கை. இதை எழுதும் போது நீங்கள் உணர்ந்தது என்ன?

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் முக்கியமான ஒரு கோயில். அங்குள்ள தேனுபுரீஸ்வரர் கோயில் மிகப் பிரசித்தி பெற்றது. திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப் பந்தல் வேயச் செய்து, அவர் வருவதைக் காணும் பொருட்டு நந்திகளை விலகியிருக்கச் சொன்னதாக ஸ்தலபுராணம் சொல்கிறது. மிக சுவாரஸ்யமான கதை. ஆனால், இந்தக் கோயில் துர்க்கை வழிபாட்டுக்கே அதிக பிரசித்தி பெற்றது. வழக்கமாக சிவன் கோயில்களில் காணப்படும் துர்க்கைப் போலன்றி இச்சிலை அளவில் பெரியது. எட்டு கஜப் புடவையே எப்பொழுதும் அணிவிக்கப்படுகிறது. எளிய அலங்காரத்திலும் சரி பூரண அலங்காரத்திலும் சரி இந்தத் துர்க்கையின் தோற்றம் மிகக் கம்பீரமாக காட்சி தரும். இடது காலை சற்று முன்னால் வைத்திருக்கும் பாங்கு தனித்தன்மை மிக்கது. வாழ்வின் துயரிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள ராஜம் பாய் இந்த துர்க்கையிடமன்றி வேறு யாரிடம் சரணடைய முடியும்? அது சரணடைதல் மட்டுமல்ல. சவாலும்கூட. அதைத்தான் நீங்கள் முன்னெடுப்பு என்று உணர்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமும் இத்தகைய ஒரு நகர்வினை உருவாக்குகிறார்கள். அதன் விளைவுகள் அவர்கள் உத்தேசித்தது போல இல்லாது போவது வேறு விஷயம்.

21.முதல் பாகத்தை முடிக்கும் போது ராஜம்பாய் அந்த துர்கையாக எனக்கு தெரிந்தார். ஆனாலும் அவர் அதிலிருந்து அன்பை நோக்கிய புரிதலை நோக்கி ஒரு அடி முன்னால் வைக்கிறார்.. அந்த முன் னெடுப்பில் பாதத்தில் கொழுசாய் கிடப்பது ஒரு வீட்டை துலக்கமாக்கும் அன்பும் சகிப்பு தன்மையுமாக இருக்கலாம். அதுதான் காதலா என்று எனக்கு தோன்றியது. அந்த காத்திருத்தல், சகித்தல், கம்பீரம் அவளின் ஆளுமை, தீர்க்கம் என்று வசீகரமான பாத்திரம் ராஜம் பாய். அந்த பாத்திரத்தின் குணச்சித்திரங்களை எழுதியது பற்றி

ராஜம் பாய் ஒரு உண்மையான கதாபாத்திரம் என்றாலும் அவரை நான் நேரில் சந்தித்ததில்லை. ஆனால், அவரது உறுதியும் வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொண்ட துணிச்சலும் மிகவும் வித்தியாசமானவராய் காட்டின. கும்பகோணம் சூழலுக்கு ஏற்ப அவரை ஒரு மெஸ் நடத்தும் பெண்மணியாக முடிவு செய்ததுமே அவரது குணாம்சங்கள் உட்பட அனைத்துமே அதனதன் இடத்தில் கச்சிதமாகப் பொருந்திப்போயின. எனக்குக் கிடைத்த ஒரு கோட்டுச் சித்திரத்தைக் கொண்டு முழுமையான ராஜம் பாயை உருவாக்கினேன். வாழ்வின் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கையாள்கிறார்கள். சிலர் விதியின் கையில் ஒப்படைத்துவிட்டு எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறார்கள். வேறு சிலர் ஜோசியம், பரிகாரம் என்று முயல்கிறார்கள். இன்னும் சிலருக்கு பக்தி, கோயில், வேண்டுதல்கள். ராஜம் பாய் தன்னை பக்தியில் மூழ்கடித்துக் கொள்கிறார். வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகியையும் பட்டீஸ்வரம் துர்க்கையையுமே அவர் கைபிடித்துக்கொள்கிறார். இளமையில் ஏற்பட்ட அந்தப் பெரும் சரிவிலிருந்து, துக்கத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்ட பாங்கும், அதன் பிறகான வாழ்வை அவர் எதிர்கொண் நேர்த்தியும் வியப்பைத் தந்தன. அந்த வியப்பே அவரது கதாபாத்திரத்தை அப்படி வார்க்கச் செய்திருக்கவேண்டும்.

22.அறுநூறு பக்கங்களுக்கு மேலான நாவல் இத்தனை விசாரணைகளுக்குப் பிறகும் கேள்விகளுக்குப் பின்னும் முன் வைக்கும் ஒரு கேள்வி எனக்கு முக்கியமானது.  இதில் உடலை விட மனதுடன் அனைத்து கதாப்பதாத்திரங்களும் போராடுகிறார்கள். ஒரு வேளை அவரவரே வாழ்வை முடிவு செய்தால் தீருமா என்று பார்த்தால் சாந்தியும்  தியாகுவும் முன்னால் வந்து நிற்கிறார்கள்இது தீராத சிக்கல் இல்லையா

மனித உறவுகள் சார்ந்த சிக்கல்களுக்கு பொதுவான தீர்வு என்பது பெரும்பாலும் சாத்தியமில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழலுக்குப் பொருத்தமான தீர்வு அமையக்கூடும். அது இன்னொருவருக்கு பொருந்துவது சாத்தியமில்லை. காதல் மணம் புரிந்தவர்களுக்குள் கூடுதலான புரிதல் இருக்கவேண்டும். அப்படித்தான் எதிர்பார்க்கிறோம். ஆனால், அவர்களுக்குள் வேறு சிக்கல்கள் எழுகின்றன.

முன்பே சொன்னதுபோல உடல் ஒரு காரணம். கருவி மட்டுமே. அதனையும் கடந்து அணுகவேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது.

ஒருவருக்கொருவர் முற்றிலுமாய் பொருந்திப் போவது என்பது முற்றிலும் சாத்தியமில்லை. இடைவெளிகளை எந்தளவு புரிதலுடன் இட்டு நிரப்பிக்கொள்கிறார்கள் என்பதுதான் கவனிக்கவேண்டியது. காரணம் அங்கிருப்பவை இரண்டு தனிநபர்களின் ஈகோக்கள். ஒன்றை ஒன்று சீண்டிக்கொண்டுதான் இருக்கும். இருவருக்குமான பொதுக் காரணங்களுக்காக, பொது நன்மைகளுக்காக அத்தகைய சீண்டல்களைப் பொருட்படுத்தாமல், அனுசரித்து, விட்டுக்கொடுத்து இருவருக்கும் பெரிய அளவில் பாதிப்பில்லாத ஒரு இணக்கமான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படித்தான் இருக்க முடியும். குடும்ப அமைப்பு தரும் பாதுகாப்பு முக்கியம் என்பதற்காக இத்தகைய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்போது குறைந்தபட்ச சச்சரவுகளுடன் அல்லது சிறு மனஸ்தாபங்களுடன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

பாதுகாப்பான இந்த அமைப்பின் பலவீனங்களைப் பொருட்படுத்தாமல் அதன் மூலம் கிடைக்கிற நன்மைகளை மட்டும் கவனத்தில் கொண்டே மிக எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் இதை ஏற்றுக்கொண்டு முன்னகர வேண்டியுள்ளது.

23.மனை மாட்சி என்ற சொல்லிற்கு  பெண் என்ற பிம்பம் தான் மனதில் வந்தது .  அப்படி அல்ல மனையின் மாட்சி என்பது ஆண் பெண் இருவரின் அன்பு பற்றிய புரிதல் தானே சார்.  தியாகுவிடம் உள்ளது தாய்மை எத்தனை நெகிழ்வானது. தாயிடத்தில் தந்தை. தாயுமானவன் இல்லையா?

திருக்குறளில் உள்ள ‘மனை’ என்பது மனைவியைக் குறிப்பதாக உரை விளக்கங்கள் இருப்பதால் இயல்பாகவே மனத்துள் பெண் பிம்பம் தோன்றுகிறது. ‘வாழ்க்கைத் துணை நலம்’ அதிகாரத்தில் பிற குறள்களும் பெண்களைப் பற்றியே பேசுகின்றன என்பதாலும் அப்படி யோசிக்கிறோம். யதார்த்தமான வாழ்வில் அனுசரணையே வாழ்க்கைக்கு அழகைத் தருகிறது. இதில் ஆண் பெண் பேதம் இல்லை. குறிப்பாக பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ள நவீன வாழ்வில் இருவருக்குமான பொறுப்புதான் அது.

இன்னொரு கோணத்தில் இதை அணுகும்போது, ஆணுக்கு அளிக்கப்படும் கூடுதல் சலுகையோ என்ற கேள்வி எழும். பெண்ணின் சிறு தவறும்கூட பெரிதாக்கிக் காட்டப்படும். பிறர் கவனத்தை எளிதில் கவர்ந்துவிடும். எனவே, அவர்கள் இல்லத்தின் மாண்பு குறித்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. குடும்ப அமைப்பு, ஒழுக்க நெறிகள், கட்டுப்பாடுகள் போன்றவை பெண்களுக்கு மட்டுமே, ஆண்கள் தவறுகளே செய்தாலும் அது குடும்பத்தின் மாண்பைக் குலைக்காது என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஒழுக்க நெறிகளும் சமூக அமைப்புகளும் சுயநலத்தை மையமாகக் கொண்டவை என்பதை இத்தகைய வாதங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இருவருக்குமே சமமான பொறுப்புண்டு. யார் தவறு செய்தாலும் அது குடும்பத்தின் மாண்பைக் குலைக்கவே செய்யும். ஆனால், பெண்ணின் உறுதியும் மனத்திடமும் எப்படிப்பட்ட சரிவையும் வீழ்ச்சியையும் கடந்து மேலே வரும் ஆற்றலைக் கொண்டது. வைராக்கியத்துடன் இலக்கை நோக்கிச் செல்லும் பிடிவாதம் கூடுதலாக உண்டு.

ராஜம் பாய், மதுமதி, மங்கை, வேணி, விநோதினி என எல்லாக் கதாபாத்திரங்களுமே உளத்தெளிவு கொண்டவை. தங்களுக்கு எது வேண்டும், வேண்டாம் என்பதில் தடுமாற்றங்கள் இல்லை. வாழ்வில் சந்திக்க நேரும் சிக்கல்களை குழப்பங்களின்றி சமாளிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்வை சகித்துக்கொண்டு வாழ்ந்திருக்க முடியும். எல்லோரையும்போல இருந்திருக்க முடியும். அல்லது விதி எனச் சொல்லி ஒடுங்கிக் கிடந்திருக்கவும் முடியும். ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை. எதிர்த்துப் போராடுகிறார்கள். அதில் தோல்விகளை சந்திக்க நேரும்போதும் சோர்ந்து போவதில்லை.

இதில் சாந்தி மட்டுமே விதிவிலக்கு. கிட்டிய பொம்மையை விட்டுவிடக் கூடாது என்ற பயத்தில் இறுக்கிப் பிடிக்கும் குழந்தை அவள். காதல் கணவனை கசக்கிப் பிழியும் அன்பு. அது மூர்க்கம் என்பதை உணராதவள். எனவே, தியாகு இயல்பாகவே கனிவு கொள்கிறான். அவனன்றி யார் அவளைத் தாங்க முடியும்? அவளது பிடிவாதங்களின் ஊற்று எது என்பதை அறிந்து எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறான். அசாதாரணமான பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவை. சாந்திகளுக்கு அப்படியொருவன் வாய்ப்பது எளிதல்ல. பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, சாந்திக்குமே அவன் தாயுமானவன்தான்.

     24.அதே போல கணவன் மீது விநோதினிக்கு  உள்ள காதல் அப்படியே இருந்தாலும் கூட அவன் இறப்பிற்கு பிறகு அதை கலம் மாற்றி வைத்து எதார்த்தத்தை எதிர்கொள்ளும் மனமுதிர்ச்சியும் கூட அன்பின் இன்னொரு பக்கம் இல்லையா?

ஆனந்த் ஆற்றோடு போய்விட்டான். அவனோடு சேர்ந்து எல்லாம் போய்விடவில்லை. வடியாத பேராறு அல்ல துக்கம். வடியும். அதுவரை நினைவுகளும் சுமையுடன் அழுத்தும். உப்பும் உணவும் உடலில் சேரும்போது மெல்ல மெல்ல அடங்கும். அதற்குப் பிறகு வெளியில் வரவேண்டும். எஞ்சியிருக்கும் வாழ்வைக் கழிக்கவேண்டும். அதை எப்படிச் செய்வது என்பதுதான் கேள்வி. குழந்தைகள் மட்டும் போதும், இன்னொரு துணை வேண்டாம் என்று நிற்கலாம். அப்படி உள்ளவர்களும் உண்டு. விநோதினி வேறுவிதமான முடிவை எடுக்கிறாள். அதை மனமுதிர்ச்சி என்றும் அன்பின் இன்னொரு பக்கம் என்றும் அழைக்கலாம். அப்படியொரு மனமுதிர்ச்சி வாய்க்காவிட்டால், அன்றாட வாழ்வை சமாளிப்பது பெரும் சவாலாகிவிடும். கணவனை இழந்த, குழந்தைகளுடன் உள்ள ஒரு இளம்பெண் அடுத்தது என்ன என்று தீர்மானிப்பது அத்தனை எளிதல்ல. பொருளாதாரம், குடும்பப் பின்னணி என்று பல காரணிகள் உள்ளன. உண்மையில், சுயநலத்தின் இன்னொரு முகமே அது. இப்படிச் சொல்வது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், யோசித்துப் பார்த்தால் எல்லாவற்றிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு வேலியாகவே அதை அவள் ஏற்றுக்கொள்கிறாள். நோக்கம் அதுதான். பின்னர் அது எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும்.

25.கோதாவரி நீரில் மிதக்கும் சிறு தீபத்தை நாவலில் காணும் போது அது அக்னி குழம்பை உணர செய்கிறது. பூமி இத்தனை குளிர்ந்த பின்னும் ஆழத்தில் எஞ்சியிருக்கும் குழைந்த தீ எரிமலையாக உருகி வழியத்தானே செய்கிறது. ஆழத்தில் குளிராத ஒன்று அனைத்து மனிதரில் கனன்று கொண்டே இருக்கிறது. மகாதவனுக்கு பசியாக,சாந்திக்கு கோபமாக,மதுமதிக்கு தாய்தந்தை மீதுள்ள வெறுப்பாக இருக்கிறது. அது தான் நம்மை இயக்கும் விசையா? காமம், பணம், ஆசை, உறவுகள், சாதிபற்று ,காதல் என்று சிறு நெருப்பாக பூத்து நிற்பது அது தான். அது இயக்கி ஓடச்செய்யும் பாவைகளா நாமெல்லாம்?

உயிர்களுக்குள் அப்படியொரு நெருப்பு கனன்று கொண்டிருப்பது இயற்கை. அதுவே உயிரியக்கம். அடிப்படையில் அந்த நெருப்பு பசியாக உள்ளது. பசி தீரும்போது இன்னொரு வடிவெடுக்கிறது. இணைவிருப்பம். பசியும் காமமும் தீரும்போது தனக்கென அவற்றைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டி அதிகாரம். பந்தமும் பாசமுமே அதிகாரத்தின் முதல் படி. அதிகாரம் போட்டிக்கு வழிவகுக்கிறது. பொறாமைகொள்ளச் செய்கிறது. கைப்பற்ற விழைகிறது. பாதுகாக்கவும் பொய் சொல்லவும் கற்றுத் தருகிறது. பகையும் துரோகமும் குற்றங்களும் பெருகுகின்றன. ஆதி நெருப்பின் பல்வேறு வடிவங்களையும் பரிணாமங்களையுமே அன்றாட வாழ்வின் கோலங்களாக நாம் காண்கிறோம். நிலமும் நீரும் எண்ணற்ற மாற்றங்களைச் சந்திக்கின்றன. வனங்களும் உயிர்களும் அழிகின்றன. நாகரிகம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், அணுசக்தி என்று வளர்ச்சியை நோக்கி அசுரவேகத்தில் விரையும் மனிதகுலமும் உருமாறியே வருகிறது. ஆதி நெருப்புதான் வெவ்வேறு ரூபங்களில் உருமாறிக் கொண்டேயிருக்கிறது. கனல் ஒன்றுதான். விளைவுகள் வேறுவேறு.

நாவலின் இறுதி வரி ‘நீரின்றி அமையாது உலகு’. உண்மையில் அந்த நீருக்குள் உறைந்திருப்பது ஆதி நெருப்பே.

26.தன்னுள் கனலும் நெருப்பை சுடராக்கி ஏற்றி வைத்து  ஆளத்தெரிந்தவர்களும், அதை தீயாக்கி எரியவிட்டு  அழிப்பவர்களுமாக மாறி மாறி இருப்பதுதான் மானுட வாழ்வின் சலிப்பில்லாத ஆடலா சார்?

சுடரும் நெருப்பும் வெவ்வேறு ரூபங்களே. பெருநெருப்பின் ஒரு துளியே சுடர். சிறு சுடரின் பெருநடனமே நெருப்பு. ஒன்றை வேண்டுகிறோம். மற்றொன்றை அஞ்சுகிறோம். சுடர் நம்பிக்கையின், நன்மையின் அடையாளம். நெருப்போ அழிவின் அடையாளம்.

நெருப்பு சில வேளைகளில் சுடுகிறது. சில சந்தர்ப்பங்களில் அது நீரு பூத்துக் கிடக்கிறது. ஆக்கவும் செய்கிறது, அழிக்கவும் காரணமாய் அமைகிறது. நமது எண்ணங்களை, செயல்களை அதுவே தீர்மானிக்கிறது. அதற்கேற்ற விளைவுகளையும்.

அந்த நெருப்பு மகாதேவனுக்குள் பசியாகவும், சாந்தியிடம் கணவன் மீதான பொஸசிவ்நெஸ்ஸாகவும், மதுமதியிடம் வெறுப்பாகவும் உருப்பெற்றுள்ளது. ராஜம் பாயிடம் வீறாப்பாக இருப்பது அந்த நெருப்புதான். கண்ணனிடம் பொறுமையாக அது சுடர் விடுகிறது.

நெருப்பை சுடராக மட்டுமே வைத்திருப்பதற்காகத்தான் அறமும் நீதியும் ஒழுக்க நெறிகளும் போதிக்கப்படுகின்றன. தியானமும் யோகமும் பரிந்துரைக்கப்படுகின்றன. வரை மீறும்போது விளைவுகளும் பலத்த சேதங்களை உருவாக்குகின்றன. தொடர்ந்து இதைத்தான் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

27.உங்களின் அடுத்த படைப்பு என்ன என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

வழக்கமான எனது களத்திலிருந்து வேறுபட்ட முற்றிலும் புதிய முயற்சியை மேற்கொள்ள விரும்புகிறேன். ‘மாயப்புன்னகை’ அப்படியொரு முயற்சிதான் என்றாலும் அது அளவில் சிறியது.

ஒரு வனத்தையும் புலிகளையும் பின்புலமாகக் கொண்ட நாவலை எழுதியிருக்கிறேன். ஜனவரி 2023 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவரும்.

அதைத் தொடர்ந்து ‘மனைமாட்சி’ யின் அடுத்த பாகம் வெளியாகும். ஏற்கெனவே எழுதி முடிக்கப்பட்டதுதான். மொத்த நாவலையும் முழுமையாக எழுதி முடித்தபின் 1500 பக்கங்களுக்கு மேல் இருந்தது. எனவே, இரண்டாகப் பிரித்து முதல் பாகத்தை மட்டும் வெளியிட்டோம். முதல் பாகத்தில் இருந்ததுபோலவே வெவ்வேறு இணைகள் இதிலும் உண்டு. ஆனால், இவர்கள் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். களங்கள் வேறு, காட்சிகளும் வேறு.

இவற்றைத் தவிர எழுதி முடிக்கப்படாத இன்னும் இரண்டு நாவல்கள் உள்ளன. பார்க்கலாம்.

0

 

 

 

 

 

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...