Saturday 3 December 2022

என்றென்றும் வாசகர் – ‘விஜயா’ வேலாயுதம்

 



( காலச்சுவடு நவம்பர் 2022 இதழில் வெளியான கட்டுரை )

0

கோவை, ராஜவீதியில் உள்ள விஜயா பதிப்பகத்தைத் தேடிச் சென்றது 1984 ஆம் ஆண்டு. கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன் நான். கணையாழி, தீபம் போன்ற இதழ்களையும் சில புத்தகங்களையும் வாங்கியபோது வேலாயுதம் என்னைப் பற்றி விசாரித்தார். புதிய சில புத்தகங்களை எடுத்துக் காட்டி அவற்றைக் குறித்து உற்சாகத்துடன் உரையாடினார். விற்பனையாளரைப்போல அல்லாமல் புத்தகங்களைப் பற்றியும் எழுத்தைக் குறித்தும் ஆர்வத்துடன் பேசியது மிகுந்த வியப்பைத் தந்தது.

முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் பின்னும் அவரிடம் அந்த உற்சாகம் குறையவில்லை. இன்றும் ஒரு புதிய நூல் வெளியாகும்போது, உடனடியாக அதை வாசிப்பதிலும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதிலும் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. ‘நான் பதிப்பாளர் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. விற்பனையாளன் என்று சொல்வதில்தான் மகிழ்ச்சி. அதைக்காட்டிலும் வாசகன் என்பதில்தான் பெருமை’ என்று குறிப்பிடுகிறார். அதுதான் அவரது உற்சாகத்துக்கு அடிப்படையான காரணம். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தொழில்களுக்கேயுரிய ஏற்றத் தாழ்வுகளால், லாப நஷ்டங்களால் ஒரு வியாபாரிக்கு ஆர்வம் குறைவது இயல்பானது. போட்டிகள் நிறைந்த உலகில் அந்த ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்கு வியாபார நோக்கத்தையும் லாபத்தையும் கடந்து ஒரு உந்துசக்தி அவசியம். வேலாயுதம் தன் உந்து சக்தியாக நம்பிக்கை வைத்திருப்பது வாசகர்களிடத்தில், புத்தகங்களிடத்தில்.

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த உலகநாதபுரத்தில் பிறந்த வேலாயுதம் எட்டாம் வகுப்பு வரை படித்தார். ஆறு மைல் தொலைவிலுள்ள பள்ளிக்குச் நடந்து செல்லும் வழியில்தான் அவரைப் பற்றிக்கொண்டது ‘வாசிப்பு பூதம்’. அம்புலிமாமா, டமாரம், மத்தாப்பு, டிங்டாங் போன்று சிறுவர் பத்திரிகைகளைத் தொடர்ந்து படித்தார். படிக்க வசதியில்லாத சூழலில் 1955ஆம் ஆண்டு மணப்பாறையில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோதும் அவர் வாசிப்பை விடவில்லை. கைச்செலவுக்காகக் கிடைக்கும் ஓர் அணாவை சேர்த்து வைத்து இரு மாதத்திற்கு ஒரு முறை வரும் லிப்கோ புத்தக வாகனத்தில் முதல் ஆளாய் ஏறி நின்று புத்தகங்களை வாங்குவார். ‘கல்கண்டு’ இதழில் தமிழ்வாணனின் சங்கர்லாலைப் படிக்க அவர் தவறியதில்லை. சில ஆண்டுகள் கழித்து 1957ஆம் ஆண்டு கோவைக்கு இடம்பெயர்ந்தார். சுக்ரவார்பேட்டையில் இருந்த ‘செலக்ட் எம்போரியம்’ எனும் பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்தார். அருகில் இருந்த நூலகத்தில் புத்தகங்களை எடுத்து வாசிக்கலானார். அங்கிருந்த நூலகர் சரஸ்வதி, அவரது வாசிப்பு ஆர்வத்தைக் கண்டு புதிய எழுத்தாளர்களையும் புத்தகங்களையும் அறிமுகப்படுத்தினார். மு.வ, நா.பார்த்தசாரதி, அகிலன் ஆகியோரின் எழுத்துகள் அவரை ஆட்கொண்டன. தான் வேலைபார்த்த பல்பொருள் அங்காடியிலேயே ஒரு சிறிய அலமாரியில் நூல்களை வைத்து விற்பனை செய்யத் தொடங்கினார். நா.பார்த்தசாரதி தீபம் இதழை 1965ஆம் ஆண்டு தொடங்கினார். அதன் கோவை முகவராக 1966ஆம் ஆண்டே இணைத்துக் கொண்டார் வேலாயுதம்.  

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கோவை போன்ற ஒரு பெருநகரத்தில் சிறிய அளவில் பல்பொருள் அங்காடி நடத்தியவர்களின் கனவு ரெங்கே கவுடர் வீதியில் உள்ளதுபோல மொத்த சாமான்கள் விற்கும் கடையாக அதை பெரிய அளவில் விரிவுபடுத்துவதாகவே இருந்திருக்கும். இன்று மாபெரும் பல்பொருள் அங்காடியாகக்கூட வெவ்வேறு இடங்களில் கிளைகளுடன் அமைந்திருக்கக்கூடும். ஆனால், ‘சிதம்பரம் பல்பொருள் அங்காடி’யின் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை மட்டுமே விற்பதற்கான ஒரு கடையை அமைக்கவேண்டும் என்ற அந்த புத்தக ஆர்வலரின் கனவு அன்றைய சூழலில் மட்டுமல்ல இன்றைக்கும்கூட விநோதமாகவும் பித்துக்குளித்தனமாகவுமே பார்க்கப்படும். ஆனால், வேலாயுதம் எனும் வாசகர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதற்கு எதிர்காலம் இருக்கிறதா என்று கவலைப்படவில்லை. நம்பிக்கையுடனும் கொஞ்சம் பிடிவாதத்துடனும் அந்தக் கனவைப் பற்றிக்கொண்டு 1977ஆம் ஆண்டு புத்தகக் கடையைத் தொடங்கினார். பாரதியார் நடத்திய இதழான ‘விஜயா’ என்ற பெயரைக் கொண்டு ‘விஜயா பதிப்பகம்’ என்று பெயரிட்டார். தன் மூத்த மகளுக்கும் அதே பெயரை வைத்தார்.

நகரத்தார்கள் புத்தகம் சார்ந்த துறைக்கு வருவதொன்றும் புதிய விஷயமல்ல. தமிழகத்தின் முன்னோடி பதிப்பகங்கள் பலவும் நகரத்தாரின் முயற்சிகளே. வேலாயுதம் புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்துக்கொண்டு விற்பனை இலக்கை மட்டும் கணக்கிட்டபடி உட்கார்ந்திருக்கவில்லை. அப்படி அவர் இருந்திருந்தால் இன்றும் அதே நிலையில் வளராமல் தேங்கிக் கிடக்கும் பல நூறு புத்தகக் கடைகளில், பதிப்பகங்களில் ஒன்றாக நின்றிருக்கும்.

விற்பனைக்கான பொருள் புத்தகம் என்று முடிவு செய்தாகிவிட்டது. வாங்குபவர்கள் யார்? மளிகைக் கடையைப் போலவோ துணிக்கடையைப் போலவே அன்றாடத் தேவைக்கான பொருட்களை வைத்திருப்பதல்லவே புத்தகக் கடை. அல்லது பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள், கைடுகள், நோட்டுப் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் கடையுமல்ல. அன்றாடம் இவற்றை வந்து வாங்கமாட்டார்கள். அதற்காக கடையைத் திறந்து வைத்துக்கொண்டு வரட்டும் என்று காத்திருக்க முடியுமா? எனவே, வேலாயுதம் ‘வாங்குபவர்’களை உருவாக்கத் தீர்மானித்தார். தன்னிடம் உள்ள பொருட்களான புத்தகங்களை ‘வாங்கும்’ வாசகர்களை உருவாக்குவதுதான் தொழில் நிலைத்திருக்க வழிவகுக்கும் என்ற தெளிவு அவருக்கு இருந்தது.

ஒரு வாசகராக தான் அறிந்ததை அனுபவித்ததை வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் பேசினார். எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது எழுத்துகளைக் குறித்தும் எடுத்துச் சொன்னார். 1976ல் தொடங்கி இன்று வரைக்கும் அவர் நூல்களைக் குறித்துப் பேசாத நாளே இல்லை என்கிற அளவுக்கு புத்தகங்களின் மேலும் எழுத்தின் மீதும் அத்தனை ஆர்வம். நல்ல புத்தகங்களைத் தேடி வாசகர்கள் வர வேலாயுதம் அவர்களின் வாசிப்பும் பரிந்துரையும் முக்கிய காரணமாக அமைந்தது.

வாசகர்களை உருவாக்கியதோடு நின்றுவிடவில்லை. அவர்களுக்கான மரியாதையை கௌரவத்தை அவரே முன்னின்று வழங்கினார். இன்றுவரையிலும் அவருக்கு வாசிப்பின் மீதும், வாசகர்களின் மீதுமான நம்பிக்கை சற்றும் குறையவேயில்லை. வாசிப்பையும் புத்தகங்களையும் வாசகர்களையும் கொண்டாட வேண்டும் என்பதற்காக ‘வாசகர் திருவிழா’வை திட்டமிட்டார்.

இதற்கான விதை, பல்பொருள் அங்காடியில் வேலைபார்த்த சமயத்தில் சென்னையில் உள்ள ‘இந்தியா புக் ஹவுஸ்’க்கு செல்ல நேர்ந்தபோது விழுந்திருக்கிறது. கோவையில் வாசகர் ஒருவர் கேட்டார் என்பதற்காக ஆர்தர் ஹெய்லியின் ‘ஏர்போர்ட்’ நாவலை வாங்குவதற்காக சென்றபோது அந்தக் கடையின் அமைப்பும் அங்கு புத்தகங்களை அடுக்கியிருந்த விதத்தையும் பார்த்தபோது கோவையிலும் இதுபோல செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவுதான் 1979ம் ஆண்டு கோவை விக்டோரியா ஹாலில் நடந்த ‘வாசகர் திருவிழா’. தமிழ்நாட்டின் முதல் வாசகர் திருவிழா அதுதான். ஏராளமான புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. வாசகர்களை வரவழைப்பதற்காக புகழ்பெற்ற எழுத்தாளர்களைக் கலந்துகொள்ளச் செய்தார். புதிய அந்த முயற்சி வாசகர்களையும் புத்தக ஆர்வலர்களையும் பெரிதாகக் கவர்ந்தது.

நல்ல எழுத்துகளைத் தரும் எழுத்தாளர்களைக் கொண்டாடவேண்டும் என்பதில் தணியாத உற்சாகம் கொண்டவர் வேலாயுதம். தமிழகத்தின் பிரபலமான எழுத்தாளர்களை கோவைக்கு வரவழைத்தார்.  வாசகர்களுடன் உரையாடச் செய்தார். எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவுப் பாலமாக அமைந்தது இந்த வாசகர் திருவிழா. கோவைக்கு வருகை தராத தமிழின் பிரபலமான எழுத்தாளர்களே இல்லை என்கிற அளவுக்கு அனைவரையும் அவர் வரவழைத்தார். இன்னும் சொல்லப்போனால் விஜயா வேலாயுதத்தைத் தேடி எழுத்தாளர்களே வர விரும்பினார்கள். ஆரம்ப காலத்தில், அவரது மளிகைக் கடைக்கு கவிஞர் கண்ணதாசனே தேடி வந்ததுபோல இன்றும் கோவைக்கு வரும் எழுத்தாளர்கள் விஜயா பதிப்பகத்துக்கு வராமல் ஊர் திரும்புவதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ‘சாகித்ய அகாதமி’ விருது பெறும் தமிழ் எழுத்தாளருக்கு பாராட்டு விழாவை, நகரமே திரும்பிப் பார்க்கும்படியாக பெரும் கொண்டாட்டமாக நடத்துகிறார்.

நல்ல, தரமான வாசகர்களை உருவாக்கியதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கான தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் கவனத்துடன் செயலாற்றுகிறார். நல்ல எழுத்தாளர்களின் பெயரை வாசகர்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்பதற்காக அவர்களின் பெயரில் விருதுகள் வழங்குகிறார்.

1999ம் ஆண்டு சி.ஆர்.ரவீந்திரனின் ‘ஈரம் கசிந்த நிலம்’ நாவலுக்கு ‘பாஷா பரிஷத்’ விருது வழங்கப்பட்டது. அந்த விழாவுக்காக சி.ஆர்.ரவீந்திரனுடன் கல்கத்தா சென்றிருந்தார் வேலாயுதம். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் சிறந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பரிசையும் ஒரு புரவலர் வழங்குவதையும் அந்தப் புரவலர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளாததையும் கவனித்த வேலாயுதம் தமிழகத்திலும் இதுபோல ஏன் முயலக்கூடாது என்று யோசித்தார். அதன் விளைவுதான் ‘விஜயா வாசகர்’ வட்டத்தின் விருதுகள்.

தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் மூத்த எழுத்தாளருக்கு ‘ஜெயகாந்தன் விருது’ (ஒரு லட்ச ரூபாய்), இளம் படைப்பாளிகளுக்கு ‘புதுமைப்பித்தன் விருது’ (இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்), ‘கவிஞர் மீரா விருது’ (இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்), சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கான கே.எஸ்.சுப்ரமணியன் விருது (ரூபாய் ஒரு லட்சம்) ஆகிய விருதுகள் புரவலர்களின் உதவியுடன் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. தமிழ் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருதுகளில் அதிகபட்ச தொகையுடன் கூடிய கி.ரா விருது (ஐந்து லட்சம்) கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படுகிறது.

சுக்ரவார்பேட்டில் அரசு நூலகத்தில் வாசிப்பை ஊக்கப்படுத்திய சரஸ்வதியைப் போன்ற நூலகர்களை அங்கீகரிக்கவேண்டும் என்ற நோக்குடன் அரசு நூலகர்களில் தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘சக்தி வை கோவிந்தன் விருது’ வழங்கப்படுகிறது. புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான சமூகப் பணியை மேற்கொள்ளும் புத்தக விற்பனையாளர்கள் அடையாளம் காணப்பட்டு ‘வானதி திருநாவுக்கரசு’ விருது வழங்கப்படுகிறது.

நூலகர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் விருதுகொடுப்பதோ அல்லது ஒரு மேடையில் வைத்து கௌரவப்படுத்துவதோ யாரும் நினைத்துப் பார்க்காத ஒன்று. தொடர்ந்து இந்தச் சமூகத்தில் புத்தகம், நூலகம், வாசிப்பு என்பதன் இன்றியமையாமையை அவர் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார். அந்தப் பணியை செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை தட்டிக்கொடுப்பதன் வழியாக இன்னும் சிலரை அந்தப் பாதையில் ஓடச்செய்யும், உற்சாகப்படுத்தும் வேலையை கவனமாக அவர் செய்தபடியே இருக்கிறார். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற மின் அங்காடிகளின் போட்டிகளையும் சமாளித்து புத்தக விற்பனையை ஒரு தொழிலாக மேற்கொண்டிருக்கும் விற்பனையாளர்களை ஊக்குவிக்கவேண்டும், அவர்களுக்கு தேவையான பயிற்சிகளைத் தரவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.

நல்ல எழுத்தை வாசித்தவுடனே குறிப்பிட்ட அந்த எழுத்தாளரை தொலைபேசியில் அழைத்து மனம் நெகிழ மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுவது அவருடைய பண்பு. பலசமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு குரல் தடுமாறும். சொல்ல வந்ததை சொல்லி முடிக்க முடியாமல் அடுத்தடுத்து உணர்ச்சிகள் அலைமோதும். அந்த பரவசத்திலும் மகிழ்ச்சியிலும் வேலாயுதம் எனும் வாசகரின் எல்லையற்ற ஆனந்தத்தை உணரமுடியும்.

எல்லோரையும்போல பிறந்தநாளிலும், பண்டிகை நாட்களிலும் அவர் புத்தாடை அணிவதில்லை. நூலகச் சிற்பி எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளான ஆகஸ்ட் 12, சக்தி வை கோவிந்தனின் பிறந்த நாளான ஜூன் 26, உ.வே.சாவின் பிறந்த நாளான பிப்ரவரி 19, உலக புத்தக தினமான ஏப்ரல் 23 ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே அவர் புத்தாடைகள் அணிகிறார்.

தமிழ் பதிப்புத் துறை முன்னோடியான ‘சக்தி’ வை.கோவிந்தன் அவர்களின் குடும்பம் வறுமையில், ஆதரவற்ற நிலையில் வாடுவதைக் கண்டு 2006ஆம் ஆண்டு பலரது ஒத்துழைப்போடு நிதி திரட்ட ஏற்பாடு செய்தார். மூன்று லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டு குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

இத்தனை ஆண்டுகளாக அவர் வெவ்வேறு எழுத்தாளர்களுக்கும், மையிட்ட ‘நிப்’ பேனாவைக் கொண்டு அவருடைய அழகிய கையெழுத்துடனான கடிதங்களைத் தொகுக்க முடிந்தால் நாற்பதாண்டு கால தமிழ் இலக்கியம் பற்றிய விரிவான சித்திரமாக அது அமையும். வேலாயுதம் என்ற வாசகர் ஒரு படைப்பை எப்படி அணுகினார் என்பதற்கான சான்றுகள் அந்தக் கடிதங்கள். இன்றும் அவர் எழுதுவது அதே ‘நிப்’ பேனாதான். இந்த வயதிலும் அவருடைய கையெழுத்து அதே அழகுடனும் ஒழுங்குடனுமே நிலைத்திருக்கிறது.

கோவையில் இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதற்கென ஒரு அரங்கை நிறுவ வேண்டும் என்பது அவரது விருப்பம். ‘விஜயா பதிப்பக’த்தின் மாடியில் ‘ரோஜா முத்தையா அரங்கம்’ என்ற பெயரில் அப்படியொரு அரங்கை அவர் அமைத்திருக்கிறார். கம்பனில் தொடங்கி உ.வே.சா, பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் என தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த ஆளுமைகளின் படங்கள் அந்த அரங்கில் அணிவகுக்கின்றன.

சுந்தர ராமசாமி அமெரிக்காவில் காலமான செய்தி வருகிறது. இந்தியாவுக்கு அவரைக் கொண்டு வரும் நாள் உறுதியானவுடனே நாகர்கோவிலுக்கு செல்வது பற்றி முடிவாகிறது. நாஞ்சில்நாடன், வேலாயுதம் இருவருடன் நானும் இரவுப் பேருந்தில் பயணம். உள்ளே ஏறி அமர்கிறோம். அவரது இருக்கைக்குப் பக்கத்து இருக்கை எனக்கு. பேருந்து புறப்பட்டவுடன் சட்டை பையிலிருந்து சிறிய சணல் கயிறு துண்டொன்றை எடுத்தார். செருப்புகளைக் கழற்றியவர் அவற்றைக் கயிற்றில் கோர்த்து முன்னிருக்கையின் கால்பகுதியில் கட்டி வைத்தார். “செருப்பு முன்னாடி நகந்து போயிடும். விடிகாத்தால எறங்கும்போது எங்க இருக்குன்னு தேடணும். தூங்கறவங்களை எழுப்பித் தொந்தரவு செய்யறமாதிரி ஆயிடும். அதான் இப்பிடி கட்டி வெச்சிட்டா யாருக்கும் சிரமம் இருக்காதில்ல.”

விடிகாலைப் பொழுதுகளில் இறங்கும் நேரத்தில் செருப்பை காணாமல் தேடி நானும் பலமுறை அவஸ்தைபட்டிருக்கிறேன். ஆனால் ஒருநாளும் இந்த யோசனை எனக்குத் தோன்றியதில்லை.

கச்சிதமான திட்டமிடல், ஒரு பொருளின் மேல் உள்ள அக்கறை, மற்றவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்ற கரிசனம் என பல பெரிய விஷயங்களை அந்தச் சின்ன சணல் கயிறு துண்டு எனக்கு அந்த நேரத்தில் புலப்படுத்தியது.

எங்கேனும் பயணம் செய்யும்போது வழியில் பனைமரத்தைக் கண்டால் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தச் சொல்லி இறங்குவார் வேலாயுதம். ‘பனைமரம் மட்டும் ஓலை தராமல் இருந்திருந்தால் தமிழ் இலக்கியத்தின் இரண்டாயிரம் ஆண்டு செல்வம் நமக்குக் கிடைத்திருக்காது. பனை ஓலை இல்லையென்றால் நம் இலக்கியங்கள் இல்லை. இலக்கியம் இல்லை என்றால் நான் புத்தகத் தொழிலையும் செய்திருக்க முடியாது” என்று சொல்லியபடி பனைமரத்தை வணங்குவார்.  

விஜயா பதிப்பகத்துக்கென ஒரு வாசகம் உண்டு ‘அறிவுலகவாதிகளின் அட்சயப் பாத்திரம்’. அது அறிவுலவாதிகளுக்கான அட்சயப் பாத்திரம் மட்டுமல்ல, ஆர்வமுள்ள வாசகர்களுக்கான அபாரமான நூலகம். வாசிக்கத் தொடங்கியவர்கள் தேர்ந்த வாசகர்களாகவும், அவர்களில் பலர் எழுத்தாளர்களாகவும், இன்னும் பலநூறு பேர் சிறந்த பண்பாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.

வாசிப்பின் மேலும் வாசகர்களின் மீதும் தளராத நம்பிக்கை வைத்திருக்கும் ‘விஜயா’ வேலாயுதம் போன்றவர்களின் பணியும் அதன் விளைவுகளுமே புத்தகங்களையும் பதிப்புத் துறையையும் தொடர்ந்து காப்பாற்றித் தரும். அதுவே நல்ல மனங்களையும் பண்பையும் உறுதி செய்து சீர்மிகுந்த சமுதாயத்துக்கான அடிப்படையாக அமையும்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் அவர் மேற்கொண்ட இந்தப் பணி, கோவையில் தரமான அறிவுச் சூழலை உருவாக்க உதவியுள்ளது. நல்ல எழுத்தையும் நல்ல புத்தகங்களையும் வாசித்து வரவேற்கும் நல்ல வாசகர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. பதிப்புத் துறையில் ‘சக்தி’ வை கோவிந்தனும் நூலகங்களை உருவாக்குவதில் எஸ் ஆர் ரங்கநாதனும் ஆற்றிய பணிகளுக்கு இணையான பெரும்பணி தரமான வாசகர்களை உருவாக்கித் தந்திருக்கும் வேலாயுதம் அவர்களுடைய பணி. கோவை ஒரு வணிக நகரமாக எந்தளவுக்கு போற்றப்படுகிறதோ அதே அளவுக்கு நல்ல வாசகர்களைக் கொண்டிருக்கும் நகரம் என்ற காரணத்துக்காகவும் பாராட்டப்படுகிறது. அந்தப் பெருமையை அடையச் செய்திருப்பதுதான் ‘விஜயா’ வேலாயுதத்தின் சாதனை.

0

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...