Tuesday 31 May 2022

உலர்நதி ( சிறுகதை )

 


( புரவி - ஆண்டுவிழா சிறப்பிதழ், ஏப்ரல் 2022 ல் வெளிவந்த சிறுகதை )

ஊட்டுக்குள்ளாற பாம்பு பூந்ததுலேர்ந்தே கெட்டகாலம் ஆரம்பிச்சிருச்சு பாவம்” அருக்காணி பொடித்துணியின் நுனியில் கத்தியை வைத்து நிரடி நூலைப் பிடித்து இழுத்தாள். பின்னல் விடுபட்டு இழையிழையாய் பிரிந்தது துணி.

வெளியில் அள்ளிப்போட்டிருந்த சாக்கடையின் அருகில் கிடந்த பெருக்கானின் வயிற்றைக் கொத்திக்கொண்டிருந்த காகத்தையே வெறித்துப் பார்த்தாள் துளசி. இடதுபக்கமாய் உதட்டுக்கு மேலேயிருந்த மருவின் நுனியில் ஒற்றை நரைமயிர் அசைந்தது.

“இன்னிக்கு வெசாளக் கெழமையோட எட்டெட்டு பதினாறு நாளாயிருச்சு கணக்குக்கு. பாக்க பாக்கவே சேர்ல இருந்து அப்பிடியே சாஞ்சிருச்சு மணி. ஓடிப் போயி புடிக்கறதுக்குள்ள டம்னு தலை அம்மியில மோதிருச்சு” அருக்காணி துண்டுத் துணிகளை மூட்டையிலிருந்து அள்ளி தரையில் போட்டாள்.

வெறித்த கண்களுடன் துளசி துண்டுத் துணிகளை உதறி பிரித்துப் போட்டாள். தலையில் இறுகக் கட்டிய துணியின் பழுத்த வேப்பிலை உதிர்ந்திருந்தது. கழுத்தில் மங்கிய சிவப்பில் ஒரு மணிமாலை. களையிழந்த முகத்துக்குப் பொருந்தாமல் மூக்குத்தி மட்டும் வெயிலில் மினுமினுத்தது.

“ஆஸ்பத்திரிலேர்ந்து ரமணி போன் எதும் பண்ணுச்சா?” கண்ணாடிப் பையிலிருந்து சூடான டீயை அட்டை டம்ளரில் வார்த்து நீட்டினாள் ராணி.

குட்டியானை ஒன்று டபடபவென ஓசையெழுப்பியபடி திரும்பி நின்றது. காற்றில் அலைந்தது புழுதி. தடாலென கதவைத் திறந்து குதித்தவனின் காதில் இயர்போன்.

“சித்த மெதுவாத்தான் சாத்தேன். காது கிழியுதுடா கடங்காரா” ராணி டீயை உறிஞ்சினாள்.

“என்க்கு டீயில்லியா அக்கா?” கறையேறிய பற்களைக் காட்டிச் சிரித்தவன் மூட்டைகளின் மேல் தாவி ஏறினான்.

“நீ வருவேன்னுதான் இத்தன நேரமா வெச்சிருந்தேன். இதா இப்பத்தான் இப்பிடிக் குடிச்சிட்டேன்” அட்டை தம்ளரை கசக்கி சாக்கடைக்குள் எறிந்தாள்.

துளசியின் அருகில் வைக்கப்பட்டிருந்த டீயின் மேல் ஆடை படிந்திருந்தது. அவள் இன்னும் கவனமாய் துணிகளைப் பிரித்து போட்டுக்கொண்டிருந்தாள்.

“டீயை எடுத்துக் குடிக்கா. இப்பிடியே மனசுக்குள்ள எல்லாத்தையும் வெச்சிட்டிருந்தா எல்லாம் செரியாயிருமா” ராணி கால்களை மடக்கி அமர்ந்து துணியைப் பிரிக்கலானாள். துளசியிடமிருந்து எந்த பதிலும் இல்லை, அசைவுமில்லை.

“இந்தக்கா ஒண்ணும் பேசமாட்டாங்க. நமக்குத்தான் மனசு கேக்க மாட்டேங்குது. எப்பிடித்தான் கல்லுமாதிரி இருக்காங்களோ” முணுமுணுத்தவளைப் பார்த்து எச்சரிப்பதுபோல முறைத்தாள் அருக்காணி.

குட்டியானையிலிருந்து மூட்டைகளை இறக்கித் தூக்கி வந்தவன் ஏற்கெனவே கிடந்த மூட்டைகளின் மேலே போட்டான். ஓரத்திலிருந்த ஒன்று மெல்லச் சரிந்தது. முதுகை அண்டக்கொடுத்து அப்படியே நிறுத்தினான். மெல்லத் திரும்பி தலையால் முட்டி மேலேற்றினான்.

பெட்ரோல் வாடையுடன் புகை கிளப்பிய ஆக்டிவாவை ஓரமாக நிறுத்தி அணைத்தான் செல்வம். செல்போன் ஒலித்தது. “சாயங்காலமா வாங்கிக்கலாங்கண்ணா. ஆறுமணிக்கா குடோன் பக்கம் வாங்கண்ணா. நான் இல்லேன்னாலும் குடுத்துட்டுப் போறேண்ணா.”

குடோனுக்குள் எட்டிப் பார்த்தான். ரகரகமாய் அடுக்கிக் கிடந்தன மூட்டைகள். மூன்று பெண்கள் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தனர். ஒருத்தி அகலத் துணியை உதறி இன்னொரு பெட்டியில் போட்டாள். சிகரெட்டைப் பற்றவைத்து இழுத்தவன் துளசியின் முகத்தை உற்றுப் பார்த்தான்.

“எப்பக்கா ஆபரேசன்?”

நிமிர்ந்து பார்க்காமல் வேலையில் ஆழ்ந்திருக்க அருக்காணி சலிப்புடன் கைகளை உதறினாள் “நீ கேட்டா மட்டும் அவ சொல்லுவாளா? பெத்த புள்ள தலையில அடிபட்டு ஆசுபத்திரில பத்து நாளா கெடக்கறான். ஆபரேசன் பண்டனும்னு சொல்றாங்க. மருமவ பாவம் ஒத்த புள்ளையா அங்க கஷ்டப்பட்டுட்டு நிக்குது. ஒரு எட்டு போயி பாக்கலாம்னுகூட எண்ணமில்லை. அப்பிடி என்ன அழுத்தம் இவளுக்கு?”

“சும்மாயிருக்கா. நீ வேற” சிகரெட்டை போட்டு மிதித்தான்.

0

ஈசானிய மூலையின் கீழ் வரிசையில் கடைசியாக தட்டோட்டைப் பொறுத்தினார் சின்னசாமி ஆசாரி. ஏணி வழியே கீழே இறங்கி வீட்டின் எதிரில் நின்றார். ஓடுகள் வேய்ந்த கூரையை பொறுமையாக நோட்டமிட்டார். கூர் மழுங்கிய சிறு பென்சில் ஒன்று இடது காதில். கைகளில் ஒட்டியிருந்த மண்ணை தட்டி உதிர்த்தார். நிறைவுடன் வேலுசாமியைப் பார்த்துச் சிரித்தார். “நல்லாருக்கு ஆசாரி. அரிசி தெளிச்சிர்லாமா?”

“சுண்ணாம்பு கலக்கியாச்சா?”

“அப்பவே கலக்கியாச்சு. அரிசில கரும்புச் சக்கரைய கலக்கிரவா?” துளசி பெஞ்சின் மேலிருந்த பொட்டலத்தைப் பிரித்தாள். புதுவீடு உருப்பெற்று நிற்கும் குதூகலம் அவள் குரலில்.

“இந்த கொத்தனார் இன்னும் என்ன பண்றாரு? இன்னுமா முடியலை?” வேலுசாமி வடக்குப் பக்கமாய் நடந்தார். கிழக்கு வாசலுடன் கச்சிதமாய் அமைந்திருந்தது ஐந்து அங்கண வீடு. தென்கிழக்கு மூலையில் சமையல் அறை. அதன் பின்னால் பெரியவீடு. மீதியிருந்த நான்கு அங்கணத்தில் இரண்டு தறிகளைப் பூட்டலாம் என்று திட்டம்.

“ராஜா, அண்ணன் எங்கடா?” கீழே நின்று அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தான் சிறியவன்.

“அவன் மட்டும் மேல ஏறிட்டான். என்னைய ஏத்திவிட மாட்டேன்னுட்டாங்க” சிணுங்கியபடியே மேலே கை காட்டினான்.

வடக்கு கோம்பைச் சுவரின் முக்கோணத்தின் நடுவில் தாமரைப் பூவை அமைத்துக் கொண்டிருந்தார் கொத்தனார். சிறிய சாந்து கரண்டியால் காரையை செதுக்கி இதழ்களை ஒழுங்குபடுத்தியவரை அவசரப் படுத்தினான் மணி. அவன் கையில் சிறிய கோலிக்குண்டு. “போதும் கொத்தனாரே. நடுவுல இதை வெக்கலாம். நானே வெக்கவா?” தாமரைப் பூவின் மத்தியில் கோலிக்குண்டை வைக்கலாம் என்று சொன்ன நாள் முதல் இதற்காக காத்திருக்கிறான் மணி.

வெற்றிலையை குதப்பிக்கொண்டிருந்தவரின் தலை அசைந்தது. வேர்வை மினுக்கும் கழுத்தை நொடித்துப் பார்த்தார். தாமரை சரியாகத்தான் வந்திருந்தது. இதழ்களின் அளவை சரிபார்த்துவிட்டு விரல்களால் அளவெடுத்து பூவின் மையத்தை முடிவு செய்து புள்ளி வைத்தார். கையை அசைத்து கோலியைத் தருமாறு சைகை செய்தார். முகம் கோண கோலியை நீட்டினான் மணி. புள்ளியிட்ட இடத்தில் நிதானமாகப் பதித்தார்.

“நேரமாச்சு கொத்தனாரே. வாங்க. அரிசி தெளிக்கணும்.”

எச்சரிக்கையுடன் மணியை கீழே இறக்கிவிட்ட பின் கொத்தனாரும் குதித்தார். எச்சிலைத் துப்பிவிட்டு வாய் கொப்புளித்தவர் ஓடுகளை பார்வையிட்டார்.

“சரியாதான் இருக்கு. சுண்ணாம்பு தெளிக்கலாம்” உத்தரவு கிடைத்ததுபோல ஆசாரி கலக்கிய சுண்ணாம்பை கையில் அள்ளி ஓடுகளின்மேல் தெளித்தார். சிவப்பு ஓடுகளின் மேல் சுண்ணாம்புத் துளிகள் விழுந்ததும் ஆவி எழுந்தது. நொடியில் வெண்மை துலங்கி பளபளத்தது.

பின்பக்கமாய் சுண்ணாம்பு தெளிக்க ஆசாரி நகர்ந்ததும் துளசியைப் பார்த்தார் “அரிசி எங்கம்மா?”

கலக்கி வைத்த அரிசிக் குண்டாவை நீட்டினாள். ஊற வைத்த அரிசியில் சர்க்கரை கரைந்திருந்தது. “சௌடேஸ்வரி தாயே. குடும்பம் தழைக்கணும். கொலம் விளங்கணும் தாயே” கையால் அரிசியை அள்ளி கூரையின் மீது இறைத்தார். இதற்காகவே வேப்பமரக் கொப்பில் காத்திருந்த காக்கைகள் கரைந்தபடியே கூரையின் மேல் இறங்கின.

“கண்ணு இந்தா நீ வாங்கிக்க” ஒரு குத்து அரிசியை எடுத்து ராஜாவிடம் நீட்டினார். ஆசையுடன் வாங்கி அப்படியே வாயில் போட்டான்.

மணியின் நண்பர்கள் வரிசையில் நின்றனர். அரிசியை வாயில் போட்டு மென்றபடியே தாமரையில் பதிக்கப்பட்ட கோலியை வியந்து பார்த்தனர்.

தண்ணீர் சொம்புடன் கூரையைப் பார்த்தபடி நின்ற துளசியை ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்தார் வேலுசாமி  “கோம்ப வெச்ச அஞ்சு அங்கண வீடு வேணும்னியே. சந்தோஷமா தொளசி?”

“இன்னும் வேல முடியலேங்க. காலையில புண்ணியாசனம். மாவிலை கட்டணும். பூசைக்கு கோயில் பூசாரியை வரச் சொல்லிருக்கு. எல்லாத்தையும் எடுத்து வெக்கணும். தண்ணி பத்து கொடம் வேணும். இப்பவே இப்பிடி நின்னுட்டா முடியாது” செல்லமாய் கோபித்தபடியே உள்ளே விரைந்தாள்.

விடிகாலையில் அந்த அழுகைச் சத்தத்தைக் கேட்டு எழுந்த மணிக்கு எதுவும் புரியவில்லை. சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமென்று அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. கால்சட்டையை மேலேற்றியபடியே எழுந்து வெளியில் வந்தான். புதுவீட்டில் நாளையிலிருந்துதான் படுக்க முடியும் என்று சொன்னதால் பின்னாலிருந்த தாத்தா வீட்டில்தான் படுத்திருந்தான். அம்மாவுடம்கூட அங்கேதான் படுத்திருந்தாள், இப்போது ராஜா மட்டுந்தான் கிடக்கிறான்.

புது வீட்டுக்கு முன்னால் கூட்டம் சேர்ந்திருந்தது. மெதுவாக நடந்துவந்த அவனைப் பார்த்தவுடனே பெட்டிக்கடை சரசக்கா ஓடி வந்து தூக்கிக்கொண்டாள் “அய்யோ ராசா…”

எல்லோரும் ஏன் அழுகிறார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை. சரசு அவனை உள்ளே தூக்கிக்கொண்டு போனாள். நடு வீட்டில் அப்பா படுத்திருக்கிறார். எல்லோரும் அழுகிறார்கள். அம்மா சுவரில் சாய்ந்து அவரையே வெறித்திருந்தாள்.

0

அவர்கள் மூவரும் பழைய டி.வி.எஸ் ஃபிப்டியில் வந்து இறங்கியபோது மணி வீட்டு வாசலில் தெருவே கூடியிருந்தது. அழுக்கான உருமாலை, அதேயளவு அழுக்கான சட்டையும் வேட்டியுடனும் இருந்த பெரியவரின் கையில் பூண் போட்ட ஒரு தடி. அதன் நுனி சற்றே வளைந்திருந்தது. மற்ற இருவரில் ஒருவன் அரைக்கால் சட்டையும் ரஜினி படம்போட்ட மஞ்சள் பனியனும் அணிந்திருந்தான். இன்னொருவன் பிற இருவரையும்விட வயதில் இளையவன். நீண்ட கம்பியை வைத்திருந்தான்.

“உசுரு எங்க இருக்கு?” பெரியவர் வெற்றிலையை மடித்து வாயில் அதக்கினார். நுனிவிரலிலிருந்த சுண்ணாம்பை கீழ் வரிசை முன்பற்களில் ஈசினார். செம்பட்டை முடி கழுத்தில் புரண்டது.

மணியின் பார்வையில் அவ்வளவாய் நம்பிக்கையில்லை “கோம்பை ஓட்டுக்குக் கீழே இருக்கு.”

டயராலான கனத்த செருப்பை வாசலில் உதறிவிட்டு உள்ளே நுழைந்தான். தறிக்கு முன்னால் மடுப்பு நீண்டு கிடந்தது. இன்னொரு தறியில் அச்சுப் புனைக்க ஆரம்பித்திருந்தனர்.

காலைப் பொழுதின் வெளிச்சம் கூடத்தில் விழுந்திருந்தது. மணி டார்ச்சை ஒளிரச் செய்து கூரையை நோக்கி பாய்ச்சினான். ஐந்து அங்கண வீடு. இரண்டாம் அங்கணத்துக்கும் மூன்றாம் அங்கணத்துக்கும் இடையில் நின்ற தாங்குமரத்தின் உச்சியில் வெளிச்சம் நின்றது. ஒன்றும் தெரியவில்லை. கொஞ்சம் விலகி நின்று கூர்ந்து பார்த்தான். இதற்குள் ரஜினி பனியன் போட்ட இளைஞன் உள்ளே வந்திருந்தான்.

“வால் தெரியுது பாரு பெருசு” என்றவன் டார்ச்சை வாங்கி ஒளியை சற்றே விலக்கிக் காட்டினான்.

“ஆமாம்பா. பெரிய ஜீவன்தான். எப்பிடிப்பா?”

கூரையை நோட்டமிட்டு நின்ற இளைஞனையே உற்றுப் பார்த்தான் மணி.

“ஓட்டைப் பிரிச்சாதான் முடியும்” குரலில் எந்த தயக்கமும் இல்லை. மிகச் சரியாகக் கணித்தவன்போல உறுதியாகச் சொன்னான்.

பெரியவர் மணியைப் பார்த்தார்.

மூவரும் வெளியில் வந்ததும் கூட்டம் ஆவலுடன் நெருங்கியது. பாத்திரக்கடை வெள்ளியங்கிரிதான் போன்போட்டு மூவரையும் வரவழைத்திருந்தார்.

“அய்யா மேலதான் படுத்திருக்கு. கொஞ்சம் பெருசு போலத் தெரியுது. ஓட்டைப் பிரிச்சுதான் புடிக்கணும்.” சற்று தள்ளிச் சென்று கிளுவை வேலியின் மேல் எச்சிலைத் துப்பினான். மூன்றாமவன் தலையைச் சொறிந்தபடியே அருகில் வந்தான்.

“மணி, என்னப்பா செய்யறது?” காதுமடல்களின் மேலிருந்த முடியை நீவினார் வெள்ளிங்கிரி.

“வேற வழியில்ல மாமா. ஆனா ஓட்டைப் பிரிச்சு அடுக்கறதுன்னா பெரிய வேலையாச்சே.”

வேப்ப மரத்தடியிலிருந்து அவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்த துளசி ஒருகணம் திரும்பிப் பார்த்தாள். அருகில் நின்றிருந்த பேத்தி கௌசியை காணவில்லை. அவசரமாக சுற்றுமுற்றும் பார்த்தாள்.

“அம்மா, பிரிச்சு பாக்கச் சொல்லிறலாமா?” மணி அருகில் வந்து கேட்டதும் தலையாட்டினாள். ஆனால் அவளது பார்வை கௌசியையே தேடிக்கொண்டிருந்தது.

“என்னத்தே பாக்கறீங்க?” ரமணி மெதுவாகக் கேட்டாள். அவளுக்கும் யாரைத் தேடுகிறாள் என்று தெரியும்.

“எங்க போனா?”

“அங்க பாருங்க. மாமா வீட்டுல புறாக்கூண்டு பக்கத்துல நிக்கறா. சுகுணா கூப்பிட்டுச்சுன்ன போயிருக்கா. நீங்க எதுக்கு இப்பிடி பயப்படறீங்க?” ரமணி இன்னும் தணிவான குரலில் சொன்னாள்.

புறாக் கூண்டின் அருகில் நின்றவளைப் பார்த்ததும் பெருமூச்செறிந்த துளசி வேப்ப மரத்தடியில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

மூன்றாமவன் ஏணியில் விறுவிறுவென ஏறிச் செல்ல பின்னாலேயே ரஜினி இளைஞனும் தாவி ஏறினான். பெரியவர் எச்சிலை துப்பிவிட்டு வேட்டியை தளர்த்தி கோவணம்போல இறுக்கிக் கட்டியபின் வடக்குப் பக்கத்திலிருந்து நிதானமாக ஏறினார்.

“ராத்திரி லைட்டெல்லாம் ஆப் பண்ணிட்டு படுத்து கண்ணை மூடித் தூங்கும்போது ஸ்ஸ்ன்னு சத்தம் கேக்கும். அப்பறம் ஒண்ணும் தெரியாது. சித்த நேரத்துல மறுக்கா அதே மாதிரி சத்தம். ஸ்.. ஸ்..ன்னு. செரி நமக்குத்தான் வயசாயிருச்சு. தூக்கம் வர்லைன்னு சும்மா இருந்துட்டேன். ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல. இப்ப பதினைஞ்சு நாளாச்சு. ரெண்டு நாள் முன்னாடிதான் அத்தையும் சத்தம் கேக்குதுன்னு சொல்றா. கௌசியும் அவங்கப்பாகிட்ட சொல்லிட்டு இருந்தா. அவதான் ஓட்டு மேல இருந்து சத்தம் வருதுன்னு சந்தேகமா சொன்னா. ராத்திரி லைட் அடிச்சு பாத்தா ஒண்ணும் தெரியலை. நேத்திக்கு சாயங்காலம். லைட் போட்டு அஞ்சு நிமிஷங்கூட ஆகலை. மேல இருந்து சொத்துன்னு எலி ஒண்ணு விழுந்துச்சு. கரெக்டா நூல் ராட்டை பக்கத்துல. கௌசி அலறி அடிச்சுட்டு வெளியே ஓடுனா. அப்பத்தான் மூஞ்சி கழுவிட்டு வந்தவளை கட்டிப் புடிச்சுட்டா. அப்பறமா பாவாவைக் கூப்பிட்டு பாத்தா எலி செத்து போயிருந்துச்சு. மேல அந்த சத்தம். மாமாவும் சின்னானும் வந்து லைட் அடிச்சு பாத்தா வால் தொங்கறது தெரிஞ்சுது. ஒரே பயமா போச்சு. இத்தனை நாளும் தலைக்கு மேல அது படுத்துட்டு எலியைப் புடிச்சுட்டிருந்துருக்கு. எங்க இருந்து வந்து சேந்துச்சோ, தெரியலை. இத்தனைக்கும் நாங் கோயலுக்கு போனா புத்துக்கு பால் ஊத்தாம வந்ததில்லை. என்ன கெட்ட நேரமோ இப்பிடியெல்லாம் நடக்குது” ரமணி சேலைத் தலைப்பால் நெற்றியைத் துடைத்துக்கொண்டாள்.

பிரித்த ஓடுகளை வாங்கி கீழே அடுக்கினார்கள். மூன்றாமவன்தான் எச்சரிக்கையுடன் ஒவ்வொரு ஓடாக விலக்கி நீக்கினான். பெரியவர் எதிர்பக்கமாய் கம்பியுடன் மடங்கி அமர்ந்திருந்தார். பொழுது ஓடிக்கொண்டிருந்தது. வெயிலில் நிற்க முடியாமல் மர நிழல்களில் ஒதுங்கியிருந்தனர்.

சுகுணா வீட்டைத் திரும்பிப் பார்த்தபோது புறாக்கூண்டின் அருகில் இருக்கவில்லை கௌசி. பதற்றத்துடன் எழுந்த துளசி வேடிக்கை பார்த்து நின்ற கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியில் போனாள்.

“புடிச்சுட்டான்போல” யாரோ சத்தமாய் சொன்னதும் கூட்டம் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு எட்டிப் பார்த்தது.

பெரியவர் கம்பியை நீட்டியபடி நின்றார். இரண்டாமவன் கையிலிருந்த கம்பியால் அழுத்திப் பிடித்திருந்தான்.

“எல்லாரும் கொஞ்சம் வெலகி நில்லுங்க. பெரிய உசுரு. இங்கிருந்து புடிச்சு தூக்கிட்டு வர்றது செரமம். கீழ போடவேண்டி இருக்கும்” பெரியவர் எச்சரித்ததும் கூட்டம் பதறி விலகியது.

ஒன்றிரண்டு ஓடுகள் நொறுங்கி வீட்டுக்குள் விழுந்ததை கவலையுடன் பார்த்தாள் ரமணி. நல்லவேளையாய் மடுப்பில் எதுவும் விழவில்லை.

சரிந்தாற்போல கால்களை நகர்த்தி சற்றே கீழே வந்த இரண்டாமவன் அழுத்திப் பிடித்திருந்த கையை விலக்காமல் கனத்த சாக்குப் பையை விரித்தான். பெரியவர் கால்களை அகட்டி உறுதியாக படுத்திருந்தார். மூவரும் ஒருவரையொருவர் ஒருகணம் பார்த்து தலையசைத்தனர். அடுத்த நொடியில் பெரியவர் வாலைப் பிடித்து இழுக்க காற்றில் துள்ளி நெளிந்த பாம்பை கையில் பற்றி சாக்குப்பைக்குள் போட்டான் இரண்டாமவன். மூன்றாவன் சாக்குப் பையின் வாயை சுருட்டி இறுக்கினான். நொடிப்பொழுதும் தாமதிக்காமல் ஓட்டின் மேலிருந்து அப்படியே சரிந்து கீழே குதித்தனர் இருவரும். வண்டியின் மீது வைத்திருந்த இன்னொரு கனத்த பையில் சாக்குப் பையை அப்படியே சுருட்டித் திணித்தான். கயிறைச் சுற்றி இறுக்கினான்.

பெரியவர் கம்பியைப் பொறுக்கி எடுத்து வந்தார். வேட்டி மடியிலிருந்து வெற்றிலையை எடுத்துத் தடவினார் “எவ்ளோ பெருசு பாத்தீங்களா? சுலவத்துல புடிக்க முடியாது. ராத்திரி எரை எடுத்துருக்கும்போல. அதான் அப்பிடியே கெடந்துருக்கு.”

துளசி திரும்பி வந்தபோது கூட்டம் கலைந்திருந்தது. பெரியவர் சாக்குப்பையைப் பிடித்தபடி பின்னால் உட்கார்ந்திருக்க, புகை கக்கியவாறு வண்டி புறப்பட்டுப் போனது.

“சார பாம்புன்னு சொன்னாங்க. நீ அதப் பாக்கலியாம்மா?” மணி துளசியின் முகத்தை ஏறிட்டான்.

“நாலஞ்சு ஓடுக ஒடஞ்சிருச்சு பாவா. இப்பவே வேற ஓடு போட்டுட்டா தேவலை” ரமணி அப்படியே நின்றாள்.

“என்னம்மா ஒண்ணுமே பேச மாட்டேங்கறே?”

வீட்டுக்குள் நுழைந்தவள் சுவரில் சரிந்து உட்கார்ந்து கூரையைப் பார்த்தாள். உடைந்த ஓடுகளின் வழியே வெளிச்சம் பீறிட்டது.

“கௌசி எங்க?” சொம்பிலிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு கேட்டான் மணி.

“காலையில வருவான்னு நெனக்கறேன், கழுத்துல தாலியோட” துளசியின் கரகரப்பான குரல் நடுங்கியது.

ஓட்டுத் துண்டுகளைப் பொறுக்கக் குனிந்த மணியும் ரமணியும் ஒருகணம் திரும்பிப் பார்த்தார்கள்.

“அவன் வந்திருந்தானா இங்க?” ஆத்திரத்துடன் எழுந்து வெளியில் ஓடினான்.

0

கோதுமையில் கிடந்த பொடிக் கற்களை பொறுக்கி எறிந்தாள் துளசி. முகம் இறுகியிருந்தது. துவைக்கிற கல்லின் மேல் தத்தி நின்றது சிட்டுக்குருவி. நாற்காலியில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தான் மணி. இடதுகை அவன் மடியில் கிடக்க தலை ஒருபக்கமாய் சரிந்திருந்தது. வாயைத் துடைத்துவிட்டு கைகளைக் கழுவிய ரமணி நரை துளிர்த்த தலைமயிரை அள்ளி முடிந்துகொண்டாள்.

 “மக போன கையோடவே எல்லாம் போயிருச்சு தொளசி. பாவம், வெசனத்துலயே மணிக்கு கைகால் வெளாங்கத போயிருச்சு. வருஷம் நாலாச்சு. எத்தனை ஆசுபத்திரிக்குத்தான் போயிருப்பீங்க. சும்மா சொல்லக்கூடாது. மருமவளும் தெகிரியம் விடாம அலையறா. வேலைக்கு போறாளாட்டமா இருக்கு” அருக்காணி கோதுமையைப் புடைக்க பொன்னிற தூசிகள் காற்றில் பறந்தன.

துளசி எப்போதும்போல பதில் சொல்லவில்லை.

“வெள்ளிங்கிரியே வீட்டை வாங்கிருச்சுபோல. சொன்னாங்க. ஆனாலும் இத்தனை சலீசா நீங்க குடுத்துருக்கப்படாது. சொந்தம்னாலும் காசுன்னு வந்துட்டா எல்லாருமே வேத்து ஆளாயிர்றாங்க.”

பூரணி டீ தம்ளரை வைத்துவிட்டு கொடியில் கிடந்த துணிகளை மடித்தாள்.

“இப்ப எதுக்கும்மா அதைப் பத்தியெல்லாம் பேசறீங்க?”

“இல்ல தாயீ. இந்த ஒத்த டாப்பு லைன் வீட்ல உக்காந்துட்டு செரமப்படறீங்களே, மனசு கேக்கலை. எங்கியோ கேரளாவுல எண்ணெய் வைத்தியம் செய்யறாங்களாம். அழைச்சிட்டு போலாமில்ல?”

மணியின் வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தவள் அலட்சியத்துடன் நடந்தாள் “போலாந்தான். காசுக்கு எங்க போறது? இப்பவே கால் வயித்துக் கஞ்சிக்கு வழியக் காணம். ஒருத்தி பாடுபட்டா முடியுமா?”

துளசியின் கண்கள் மேலுயர்ந்து நொடியில் தாழ்ந்தன. அருக்காணி புடவையை உதறினாள் “அவ வந்து எட்டிகூட பாக்கலையா?”

“வந்தாளே. சம்பாதிச்சு சேத்து வெச்சதெல்லாம் கேட்டு வாங்கிட்டு போனாளே. இவங்களும் எல்லாத்தையும் தூக்கிக் குடுத்துட்டாங்க. மவராசியா இருக்கட்டும்.”

துளசி முறத்தில் கோதுமையை அள்ளி நிதானமாய் புடைக்கலானாள்.

“இவ ஒருத்தி. இப்பிடியே மனசுக்குள்ள போட்டு அடச்சு வெச்சிட்டு என்ன பண்ட போறாளோ?”

சிட்டுக் குருவிகள் இப்போது அருகில் வந்து தத்தின. சிதறிக் கிடந்த தானிய மணிகளைக் கொத்தித் தின்றன. துளசி ஒரு பிடி கோதுமையை இறைத்தாள்.

“பனியன் குடோனுக்கு வேலைக்கு வரேன்னு சொன்னியே தொளசி. காலையில எட்டு மணிக்கு ரெடியா இரு. போலாம்” மூட்டையை இடுப்பில் இடுக்கிக்கொண்டு அருக்காணி தெருவில் இறங்கினாள்.

‘வீரவாண்டிலேர்ந்து கழுத்து நெறைய நகையோடவும் கையில வளையலோடவும் புதுப் பொண்ணா வந்து இதே தெருவுல மஞ்ச நீராடினது இன்னும் கண்ணுல நிக்குது. ஆண்டவென யாரைத்தான் சோதிக்காம விட்டான்’ வாய்க்குள்ளேயே முணுமுணுத்தவள் திரும்பிப் பார்த்தாள். துளசி அதே இடத்தில்தான் உட்கார்ந்திருந்தாள்.  

0

தெருமுனை கம்பத்திலிருந்து மங்கலான வெளிச்சம். இருட்டில் ஆட்களோடு சேர்ந்து உட்கார்ந்திருந்தாள் துளசி. தொலைவில் ஒலிப்பெருக்கிச் சத்தம்.

“உங்கள் பொன்னான வாக்குகளை…”

அருக்காணி செய்தித்தாளில் பொதிந்திருந்த பப்ஸை நீட்டினாள் “இதச் சாப்புடு. வேப்பாளர் ஓட்டுக் கேக்கறதுக்கு வந்துட்டு போனதுக்கு அப்பறந்தான் புரோட்டா பொட்டலாம் தருவாங்க. காசும்.”

துளசி வாங்கிக்கொண்டாள். பசி. நாலுமணிக்கு குடித்த டீ எப்போதோ காணாமல் போயிருந்தது. கௌசிக்கு காளான் பப்ஸ் என்றால் பிடிக்கும். பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தாள். வெங்காய பப்ஸ்தான்.

“இதோ இன்னும் சற்று நேரத்தில்… உங்கள் வேட்பாளர்… உங்கள் ஆதரவு பெற்ற அன்புக்குரிய வேட்பாளர்… நமது தொகுதியின் வெற்றி வேட்பாளர்… வந்துகொண்டிருக்கிறார்” மின்னொளியுடன் வாகனம் மெதுவாக நாற்சந்தியைக் கடந்து திரும்பியது.

“ஆறு மணிக்கே வர்றதுன்னு சொன்னாங்கன்னு ராத்திரி ஷிப்ட் வேண்டாம்னு சொல்லிட்டு இங்க வந்தா இப்பிடி காக்க வெக்கறானுங்க” பக்கத்து பாய் குடோனில் துணி பொறுக்கும் அம்சா அங்கலாய்த்தாள்.

“சொன்ன நேரத்துக்கு வந்துருவாங்களா? நீ நேத்திக்கு தாமர கட்சி ஊர்வலத்துக்கு போனியே அம்சா? எவ்ளோ குடுத்தாங்க?”

“என்னத்த குடுக்கறாங்க. அதே முந்நூறு ரூவாதேன். புரோட்டாவுக்கும் வெறும் சால்னாதான். போன வாரம் எல கட்சில பிரியாணி பொட்டலம். கெரகத்த அன்னிக்கு பாத்து எனக்கு போவ முடியாத போச்சு.”

“உங்கள் சின்னம்… வெற்றிச் சின்னம். இதோ வந்து கொண்டிருக்கிறார். உங்களைச் சந்திக்க வெற்றி வேட்பாளர் வந்துகொண்டிருக்கிறார்” இன்னொரு வாகனம் இன்னும் உரத்தொலிக்கும் குரலுடன் விரைந்து மறைந்தது.

பொட்டலத்தைக் கசக்கி எறிந்தாள் துளசி. காதோரம் ரீங்கரித்த கொசுக்களை விரட்டினாள். பாதங்களைச் சொறிந்தாள். புடவையை இழுத்து கால்களை மூடினாள்.

சிவப்பு விளக்கு ஒளிர அவசர ஓசையெழுப்பியபடி ஆம்புலன்ஸ் தெருவில் திரும்பியது. கூட்டம் விலகி வழிவிட்டது. சாலையின் முனைக்கு நகர்ந்து கிழக்கு நோக்கித் திரும்பியதை துளசி உற்றுப் பார்த்தாள்.

“நாளைக்கு ஞாயித்துக் கெழமைதானே தொளசி. ஆசுத்திரிக்கு போயி ஒரு எட்டு பாத்துட்டு வரலாமா?” அருக்காணி புறங்கையிலிருந்த கொசுவை அடித்தாள்.

ஒலிபெருக்கி சத்தம் வலுத்தது. “இதோ வந்துவிட்டார், உங்கள் வேட்பாளர்…” வரிசையாய் வாகனங்கள் அணிவகுத்தன. நாற்சந்தி முழுக்க ஒளி வெள்ளம். அனைவரும் சூழ்ந்து நின்றனர். கூப்பிய கரங்களுடன் வேட்பாளர் சிரித்துக்கொண்டு நின்றார். யாரோ ஒருவர் ரோஜா மாலையை அணிவித்தவுடன் கரவொலி எழுந்தது. மஞ்சள் சேலை கட்டிய பெண்கள் நால்வர் ஆரத்தி எடுக்க தட்டில் தாள்கள் விழுந்தன. கையிலிருந்த கொடிகளை அசைத்தபடி நின்றது காத்திருந்த கூட்டம். அவ்வப்போது கை தட்டினார்கள்.

வாகனங்கள் விலகிப் போய் ஓசைகள் அடங்கியிருந்தன. மீண்டும் இருள் சூழ்ந்திருக்க துளசி ஓரமாய் நின்றிருந்தாள். அருக்காணி கையிலிருந்த ரூபாய் நோட்டுகளை எண்ணித் தந்தாள். துளசி உள்ளங்கையில் சுருட்டிக்கொண்டாள்.

முனியப்பன் கோயில் விலக்கில் திரும்பியபோது மூச்சு வாங்க நின்றாள் அருக்காணி “எதுக்கு இப்பிடி ஓடறே. பசிக்குதுன்னா அங்கயே திங்க வேண்டிதுதானே. வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்னுட்டு இப்ப இப்பிடி இழுத்துட்டு வர்றே. உன்னோட ஒரே ரோதனையாப் போச்சு… இத்தனை செலவு பண்டறாங்க. இன்னொரு நூறு ரூவா குடுக்கறதுக்கு மனசு வரெ மாட்டேங்குது.”

நடை வேகத்தை சற்றும் தளர்த்தாமல் விறுவிறுவென தெருவில் நுழைந்தவள் மறுகணம் அப்படியே நின்றாள். அழுகைச் சத்தம் காதில் விழுந்தது. குடியிருக்கும் லைன் வீட்டு வாசலில் வெளிச்சம். ஆட்கள் கூடியிருந்தைப் பார்க்க முடிந்தது.

அருக்காணி தோளைப் பிடித்துக்கொள்ள துளசி தளர்ந்து நடந்தாள். கையிலிருந்த பொட்டலம் மண்ணில் விழுந்து தெறித்தது. “தெகிரியமா வா. ஒண்ணில்ல தொளசி” அருக்காணி வாய் குளறினாள்.

துளசியைப் பார்த்ததும் அழுகை வலுத்தது. விலகி வழிவிட்டனர்.

வெள்ளைத் துணி சுற்றிய ஒரு பொட்டலமாய் வாசலில் கிடத்தப்பட்டிருந்தான் மணி. மாரில் அடித்துக்கொண்டு அழுத ரமணி நிமிர்ந்து துளசியைப் பார்த்தாள். குமுறல் வெடிக்க கால்களை கட்டிக்கொண்டாள். அவள் தலையைத் தொட்டு நிமிர்த்தினாள். படியருகே தளர்ந்து உட்கார்ந்தாள். அப்போதுதான் முதன்முதலாக பார்ப்பதுபோல அவன் முகத்தை வெறித்துப் பார்த்தாள்.

“இப்பவாச்சும் அழுது தொலையேண்டி. கல்லு மாதிரி எல்லாத்தையும் இப்பிடி வெறிச்சு வெறிச்சுப் பாத்துட்டிருந்து என்னத்த சாதிக்க போறே? இனியும் யார் சாவணும் உனக்கு?” அருக்காணி அவள் முதுகில் மொத்தினாள்.

மடியில் புரண்டு அழும் ரமணியின் முதுகில் கை வைத்தபடி வறண்ட கண்களால் வெறித்திருந்தாள் துளசி.

0

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...