“எளிமையானது உன் அன்பு
நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர்போல”
சுகுமாரனின் ஒரு கவிதை
இப்படி முடியும். பொதுவாக, எளிமையை நாம் சற்று குறைவாகவோ அல்லது தவறாகவோதான் எடைபோடுகிறோம்.
ஒரு மனிதனைக் குறித்து, அவரது ஆளுமையை மதிப்பிட, குறைந்தபட்ச ஒப்பனைகள் தேவைப்படுகின்றன.
அரசியல், ஆன்மிகம், வியாபாரம், கல்வி, மருத்துவம் என்று எந்தவொருத் துறையிலும் எளிமை
அல்லாது பகட்டும் விளம்பரமுமே கவனமும் வெற்றியும் பெறுகிறது. எனவேதான், இவை அனைத்துமே
நிறுவனமயமாகின்றன. மக்களைக் கவரவும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் இது அவசியம்.
மூன்று மாதத்துக்கு முன்பே
முன் பதிவு செய்து, குறித்த நேரத்தில் வரிசையில் நின்று காத்திருந்து, பொறுமையாய் நகர்ந்து,
‘ஜருகண்டி, ஜருகண்டி’ என்ற குரல்களுக்கு இடையே நொடிநேர தரிசனத்தையே சாத்தியப்படுத்தும்
திருப்பதி ஏழுமலையானுக்கு இருக்கும் ‘டிமாண்ட்’, தெருமுனையில் அரசமரத்தடியில் வெள்ளை
ஈரிழைத் துண்டும் எறும்பு வரிசையுமாக உட்கார்ந்திருக்கும் பிள்ளையருக்கு இருப்பதில்லை.
உதகை நாராயண குருகுலத்தில்
இருந்த தம்பான் சுவாமிகள் மிகவும் எளிமையானவர். கணுக்காலுக்கு மேலே ஏறிய முரட்டு வேட்டியும்
அதே துணியாலான மேல்சட்டையுமாய் குருகுல வளாகத்தில் எங்குமிருப்பவர். எல்லா வேலைகளையும்
செய்பவர். ஒருமுறை குருகுலத்தில் தங்கியருந்தபோது மதிய சாப்பாட்டில் ஏதோவொன்று நாஞ்சில்நாடனுக்கு
ஒத்துக்கொள்ளாமல் இரவில் நான்கைந்து முறை கழிப்பறைக்குச் செல்ல நேர்ந்தது. விடிகாலையில்
தம்பான் சாமிகளைப் பார்த்து விபரத்தைச் சொன்னபோது சிறிய பொட்டலத்தை எடுத்து வந்து நாஞ்சில்நாடனிடம்
தந்தார் “வாயிலிட்டு சப்பிக்கோ. அரமணிக்கூறு எதும் வேணாம். சரியாகும்.” நாஞ்சில் அதை
எச்சிலில் ஊறவைத்துச் சப்பி விழுங்கினார். அடுத்த அரைமணி நேரத்தில் உபாதை சரியானது.
தம்பான் சாமியிடம் நன்றி சொல்லிவிட்டு என்ன மருந்து அது என்று நாஞ்சில்நாடன் வினவினார்.
“அது ஒண்ணில்ல. மாம்பழக் கொட்டைக்குள்ள ஒரு விதை இருக்கும். அதோட பவுடர்தான்.” மாங்கொட்டை
பவுடரை மருந்தாகத் தந்த தம்பான் சாமி, முறையாகப் பயின்ற ஆங்கில மருத்துவர். அவரைப்
போலவே அவர் தந்த, சொன்ன மருந்துகளும் மிக எளிமையானவை, எளிதில் கிடைப்பவை.
நகரவாசிகளான நாம் பொதுவாக
வனத்துள் வாழும் பழங்குடிகளை, சந்தடியற்ற தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களைக் குறித்து
குறைவாகவே எடைபோடுகிறோம். எப்போதும் அவர்களுக்கு எதையேனும் கற்றுத் தரவே முனைகிறோம்.
அவர்களைக் காட்டிலும் நாம் மேலே இருக்கிறோம் என்ற மிதப்பு நம்மிடம் உண்டு. நம்முடைய
கருணையை, தயவை எதிர்பார்த்து அவர்கள் வாழ்கிறார்கள் என்ற எண்ணத்துடனே அவர்களை அணுகுகிறோம்.
உண்மையில், அவர்களின் அனுபவ அறிவு நமது ஏட்டுக் கல்வி அறிவைவிட பல மடங்கு வலுவானது,
அன்றாடத்திலிருந்து உருவானது.
துறவிகள் வசிக்கும் தீவுக்கு
படகிலேறி வரும் பாதிரியாருக்கு ( பிஷப் ) அந்த எண்ணம்தான் மேலோங்கியுள்ளது. தோற்றத்தையும்
அணிந்திருக்கும் உடையையும்கொண்டு தவறாகக் கணித்து, முறையாக பிரார்த்தனை செய்யத் தெரியவில்லை
என்று அந்த மூவருக்கும் கற்றுத் தருகிறார்.
ஆனால், இந்தக் கதையின்
தொடக்கத்தில் தரப்பட்டுள்ள மத்தேயுவின் வசனமே இக்கதையின் சுருக்கத்தை உணர்த்திவிடுகிறது.
தனியே, ஆளற்றத் தீவில்
வசிக்கும் அந்த மூன்று துறவிகளுக்கும், இறைவனைப் பிரார்த்திப்பது என்பது வாழ்வின் ஒரு
பகுதியல்ல. அவர்களுடைய வாழ்க்கை முறையே இறைவனைப் பிரார்த்தனை செய்வதுதான். கப்பலில்
செல்பவர்கள், புகழ்பெற்ற சொலோவ்த்ஸ் துறவியர் மடத்துக்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள்.
வியாபாரிகள், மீனவர்கள் ஆகியோருடன் பிஷப்பும் ஆண்டவரைத் தேடி, ரஷ்யாவின் புகழ்பெற்ற
பழமையான மடத்துக்குச் செல்கிறார்கள். ஆனால், துறவிகளுக்கு இறைவன் வேறெங்குமில்லை. அல்லது
எங்குமிருக்கிறான். இருக்குமிடத்திலிருந்து பிரார்த்தனை செய்வதுதான் அவர்களுக்குத்
தெரிந்தது. மற்றபடி எப்போதாவது ஏதேனும் படகு ஒதுங்க நேர்ந்தால் அவர்களுக்கு உதவி செய்வார்கள்.
அந்தத் தீவில் முறையான தேவாலயம் கிடையாது. ஆர்ப்பாட்டமோ ஆடம்பரமோ இல்லை. நுட்பமாக கதையில்
அமைந்திருக்கும் இந்த முரண் பல ஆழங்களுக்கு இட்டுச் செல்லக்கூடியது.
கதையெங்கும் பிஷப்பின்
ஆதிக்கத்தைப் பார்க்க முடியும். மீனவர்கள் பலமுறை சுட்டிக் காட்டியும் பிஷப் தன் கண்ணுக்கு
தீவு தெரியவில்லை என்றே சொல்கிறார். எளியோருக்கும் அதிகாரத்துக்குமான இடைவெளி இப்பேர்ப்பட்டதுதான்.
அதிகாரமே எளியோர்க்கு எதையும் எடுத்துக் காட்டமுடியும், சொல்லமுடியும், கொடுக்க முடியும்.
மேலும், பிஷப் அந்தத்
தீவுக்கு செல்வதன் நோக்கம், ‘அவர்கள் மூவரும் ஆன்ம முக்திக்காக வசிக்கிறார்கள்’ என்று
மீனவர்கள் சொல்லும்போது உள்ளூற அவர் சீண்டப்படுவதால்தான். ‘தேவாலயம் என்கிற பிரமாண்டமான
அமைப்பும் பிஷப் என்கிற அதிகாரமும் இல்லாமல் எப்படி ஒருவர் ஆன்ம முக்தி பெறுவது சாத்தியம்?
அப்படி யாரும் சொல்வதையோ, நினைப்பதையோகூட எப்படி அனுமதிக்க முடியும்?’ என்பதுதான் அவரை
அங்கு செல்லத் தூண்டுகிறது.
உண்மையில் அவருடைய நோக்கம்,
தீவுக்கு சென்று அந்த மூவரிடமும் ‘சர்ச்’எனும் அமைப்பின் அதிகாரத்தை, ‘பிஷப்’ என்கிற
தன் ஆளுமையை நிறுவுவதுதான். அதன்படியே அனைத்தும் அவருக்கு சாதகமாகவும் நடக்கிறது. முறையாக
பிரார்த்தனை செய்யத் தெரியாத அவர்களுக்கு, எளிதில் கற்றுக்கொள்ள முடியாமல் திணறுபவர்களிடம்,
நாள் முழுக்க செலவிட்டு மீண்டும் மீண்டும் அந்த வழிமுறையைச் சொல்லிய பிறகு மிகுந்த
நிறைவுடன் கப்பலுக்குத் திரும்புகிறார். மூன்று பேர்தானே என்று அவர் அந்த சந்தர்ப்பத்தை
விட பிஷப் என்கிற பதவியும், அது அளித்திருக்கும் அதிகாரமும் அனுமதிப்பதில்லை. மதத்துக்கும்
தான் வகிக்கும் பதவிக்கும் உரிய கடமையைச் செய்த மகிழ்ச்சியுடன் திரும்பி வருகிறார்.
கடைசியில், துறவிகள்
மூவரும் கப்பலைப் பின்தொடர்ந்து வரும் விதத்தைப் பார்க்கும்போதுதான் தான் செய்த தவறு
அவருக்கு உறைக்கிறது. மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறார்.
இந்தக் கதையை டால்ஸ்டாய்
இப்படி முடிக்கும்போது, இதற்கு முன்பு கதையில் படித்துக் கடந்த சில விஷயங்கள் முக்கியத்துவம்
பெறுகின்றன. அல்லது வேறு அடர்த்தியான பொருளுடன் இருப்பதைத் துலக்கமாகப் பார்க்க முடியும்.
தாங்கள் அறிந்தவகையில்,
தங்களது பிரார்த்தனையை இத்தனை ஆண்டுகள் மேற்கொண்டிருக்கும் அவர்களுக்கு பிஷப் முறையான
பிரார்த்தனையைக் கற்றுக்கொடுக்கிறார். இதன் மூலம், தேவாலயத்தின் அதிகாரத்தை நிறுவுகிறார்.
புனித தேவாலயத்தில் உள்ள குருமார்கள் உபதேசிக்கும் வழிமுறையில்தான் ஆண்டவனை வழிபடவேண்டும்
என்று அனைவரையும் கட்டுப்படுத்துகிறார்கள். ஆண்டவனை அடைவதற்கான பாதையில், பிரார்த்தனைக்கான
வழிமுறையில், ஆண்டவனுக்கும் விசுவாசிக்கும் இடையில் அதிகார அமைப்புகளான தேவாலயமும்
குருமார்களும் உண்டு என்பது நிறுவப்படுகிறது.
துறவிகள் மூவரைக் குறித்தும்
மீனவர் விளக்கும் பத்தியை கவனிக்கலாம்.
முதுகு வளைந்து குள்ளமாக
இருக்கும், நூறு வயது மதிக்கத்தக்கவர் பாதிரிகளின் உடை அணிந்திருக்கிறார். கனிவும்
புன்னகையுமாயிருக்கிறார். இரண்டாமவர், உழவர்களின் கிழிந்த உடையை அணிந்தவர், திடகாத்திரமானவர்,
நடுத்தர வயதுடையவர். அன்பும் மகிழ்ச்சியும் நிரம்பியவர். மூன்றாமவரோ, உயரமானவர். அவருடைய
முழங்கால் வரைக்கும் வெண்தாடி நீண்டிருக்கிறது. புருவங்கள் அடர்ந்து தொங்குகின்றன.
பாய் பின்னலை அணிந்திருக்கும் அவர் கண்டிப்பானவர்.
‘கடவுள் எப்படி தன்னைத்
திருவெளிப்பாடு செய்துகொண்டார் என்பதை பிஷப் விளக்குகிறார். கடவுளாகிய தந்தை, கடவுளாகிய
தேவகுமாரன் மற்றும் கடவுளாகிய புனித ஆவி ஆகியோரைப் பற்றியும் சொல்கிறார்’ என்ற பத்தியும்
மேலே உள்ள உருவங்களையும் பொருத்திப் பார்க்கும்போதுதான், பிஷப் ஏன் அவர்களிடம் மன்னிப்புக்
கேட்டார் என்பது புரியும்.
தந்தையும் தேவகுமாரனும்
புனித ஆவியுமே மூன்று துறவிகளாக வெளிப்பட்டார்கள் என்று இந்தக் கதைக்கு ஒரு விளக்கமும்
உண்டு. கவனித்துப் பார்த்தால் மிகப் பொருத்தமான விளக்கமும்கூட.
150 ஆண்டுகளுக்கு முன்பு
டாஸ்டாய் எழுதிய இக்கதையை ஒரு குறியீட்டுக் கதையாகவும் வாசிக்க முடியும். கிறித்துவ
மதம் உலகெங்கும் பரவ வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நடந்துவரும் முயற்சிகளை அறிவோம்.
இந்தியாவில், குறிப்பாக கடற்கரையோர மீனவர்களிடம் கிறித்துவம் மேற்கொண்ட முயற்சிகளும்
அதன் தாக்கங்களும் வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றுள்ளவை. கிறித்துவ மத அமைப்பு உலகெங்கும்
தன் அதிகாரத்தை உருவாக்க மேற்கொண்ட, திட்டமிட்ட வழிமுறைகளை இக்கதை உணர்த்துவதையும்
கவனிக்கலாம்.
வரலாற்றில் தொடர்ந்து
மனிதனின் மீதான அதிகாரத்தை செலுத்தும் வலுவான அமைப்பு மதம். உலகின் எல்லா நாடுகளிலும்
மக்களிடத்தும் பல்வேறு மதங்களின் ஆதிக்கத்தை அறிவோம். அரசியல், பொருளாதாரம், கல்வி
உள்ளிட்ட அடிப்படைகளை மதங்களே தீர்மானிக்கின்றன, நிர்வகிக்கின்றன. மனிதனின் பலவீனமான
உணர்வுகளை, விசுவாசத்தை, ஆன்மீகத்தின் பெயரில் ஆட்கொண்டு பயன்படுத்தி வெகு சுலபமாக
மதங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
தல்ஸ்தோயின் மத நம்பிக்கை அவரது காலத்தில் பொதுவில் நிலவிய நம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறானதும் எதிரானதுமாகும்.
இறைமறுப்பிலிருந்து, நாத்திகவாதத்திலிருந்து தன் பார்வையை பெற்றுக்கொண்டவர் தல்ஸ்தோய்.
மத குருமார்களும் அரசுமே புனித உண்மையை மக்களுக்கு போதிக்க முடியும், உணர்த்த முடியும்,
அதற்கான தகுதியும் உரிமையும் அவர்களுக்கே உண்டு என்பதை உறுதியாக மறுத்தவர். இந்த அமைப்புகளும்
அரசுமில்லாமல் மக்கள் தங்கள் எளிமையிலும் அர்ப்பணிப்பிலும் இறைவனையும் உண்மையையும்
கண்டறிய முடியும் என்பதை வலியுறுத்தினார்.
தல்ஸ்தோயின் மரணத்துக்குப்
பிறகு ‘தல்ஸ்தோயின் பைபிள்’ பதிப்பிக்கப்பட்டது. தல்ஸ்தோயின் எழுத்துகளிலிருந்து அவரது
கொள்கைகளை வெளிப்படுத்தும் பத்திகளும் சொற்றொடர்களும் தொகுக்கப்பட்டு இடம்பெற்றன. மார்டின்
லூதர் கிங், காந்தி, தோரோ ஆகியோருடனான தொடர்பில் அவருக்குள் உருவாகியிருந்த எண்ணங்களையும்
எழுத்துகளையும் தொகுத்து தரப்பட்டிருந்தன. மதம் தொடர்பான டால்ஸ்டாயின் கருத்துகளை,
எண்ணங்களை குறிப்புணர்த்துவதாக இக்கதை அமைந்திருக்கிறது.
0
டால்ஸ்டாய் 1985இல் எழுதிய
இந்தச் சிறுகதை NIVA வார இதழில் 1886ஆம் ஆண்டு தொடராக வெளிவந்தது. ’23 Tales’ என்ற
தொகுப்பில் இடம்பெற்றது. இதன் ஆங்கில மொழியாக்கம் 1907ஆம் ஆண்டு வெளியானது. பூ.சோமசுந்தரம்,
ஆர்.சிவகுமார் ஆகியோர் இதைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.
0
சொல்வனம் இதழில் வெளியான இந்தச் சிறுகதைக்கான இணைப்பு. நன்றி - சொல்வனம்

No comments:
Post a Comment