Monday, 20 April 2026

கோவையின் இலக்கிய முன்னோடி - புவியரசு

 


1985ம் ஆண்டு கல்லூரி மாணவனாக இருந்த சமயத்தில்,விஞர் பக்தவத்சலம் திருப்பூரிலிருந்து சூத்ரதாரிஎன்ற சிறுபத்திரிக்கையை வெளியிட்டார். தேவாங்கபுரம் பள்ளியின் மரங்கள் சூழ்ந்த அழகான மைதானத்தில் எளிமையாக நடைபெற்ற வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் புவியரசு. வெள்ளை உடுப்பு, பட்டையான விளிம்புகள் கொண்ட கருப்புக் கண்ணாடி, நீண்ட கிருதாவுடனான நரைத்த தலைமுடியுடனான அவரது கம்பீரம் பார்த்தவுடனே கவர்ந்தது. நான் முதன்முதலாக சந்தித்த மூத்த எழுத்தாளர் அவரே.

ஆறுமாதங்களுக்குப் பிறகு மறுபடி அவரைச் சந்திக்க நேர்ந்தது. கல்லூரியில் நண்பர்களுடன் இணைந்து நடத்திய எண்ணங்கள்கையெழுத்துப் பத்திரிக்கையின் ஆண்டு விழாவுக்கு புவியரசுவை அழைக்கவென கோவை வந்திருந்தோம். சத்குரு இல்லம், ராமசாமி நகர், கவுண்டம்பாளையம் என்ற முகவரி அப்போதுதான் அறிமுகமானது. மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று பேசினார். அன்று அவர் சொன்ன பல பெயர்களும் விஷயங்களும் எங்களுக்கு சிறிதும் அறிமுகமில்லாதவை. ஆனால், அவர் சொல்வதை ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தோம். வானம்பாடி இதழ்களின் பைண்ட் செய்யப்பட்ட ஒரு தொகுப்பை பொக்கிஷம்போல எடுத்து வந்து காட்டினார். அவரது அறையில் எல்லாவிடத்திலும் புத்தகங்கள். மேசையில் எழுதுமிடம் தவிர்த்து மீதி எல்லா இடத்தையும் ஆக்கிரமித்திருந்தன புத்தகங்கள். அந்தப் புத்தகங்களின் மேல் அவர் காட்டிய ஆசை, ஆர்வம் மிகுந்த வியப்பை ஏற்படுத்தியிருந்தது.

தொண்ணூற்று ஐந்து வயதைக் கடந்தவிட்டபோதும் புத்தகங்களின் மீதான அவரது ஆசையும் பித்தும் சற்றும் தணியவில்லை. கோவையில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கும் நாட்களில் மாலை வேளைகளில் கைநிறைய புத்தகங்களுடன் வளைய வருவது அவருக்குப் பிடித்தமானது. அப்போது அவரது முகத்தில் அப்படியொரு நிறைவு ஒளிர்ந்திருக்கும். புதிய பொம்மைகளை அணைத்தபடி உற்சாகத்துடன் ஓடிவரும் குழந்தைகளின் முகத்தில் பார்க்க நேர்கிற பெருமையையும் மகிழ்ச்சியையும் அவரது முகத்தில் காண முடியும்.

எண்ணங்கள்ஆண்டுவிழாவில் அவர்வணக்கம்என்றொரு நீண்ட கவிதையை வாசித்தார். ‘சே குவேராவுக்கு வணக்கம், ஈழப் போராளிகளின் மெஷின் கன்களுக்கு வணக்கம், பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும் வணக்கம்என்று அந்தக் கவிதை அடுக்கடுக்காக வணக்கம் சொல்லும். சமூக அரசியல் விமர்சனங்களை பகடியாக மாற்றி கவிதையாகச் சொல்லும் புவியரசுவின் கவிதையுலகத்தின் ஒரு பதச்சோறு என்று அந்தக் கவிதையைச் சொல்லலாம்.

ஒருவகையில் அது வானம்பாடிஇயக்கத்தின் கவிதைப்பாணியிலிருந்து உருவானது. 1970களின் தொடக்கத்தில் கோவையிலிருந்து  வெளியான கவிதை இதழ்வானம்பாடி’. தமிழ் நவீனக் கவிதை வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனை. மரபுக்கவிதைக்கு மாற்றாக புதுக்கவிதையை முன்னிறுத்திய இதழ் அது. சமூகப் பிரச்சினைகளை உரத்த குரலில் சொல்வதை வலுவாக முன்மொழிந்த இயக்கம் வானம்பாடி. அந்த இதழின் உருவாக்கத்துக்கு காரணமானவர்களில் ஒருவர் புவியரசு. அவரது வீட்டு முகவரியில்தான் இதழ் வெளியானது.

பேரூர் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர் புவியரசு. ஒரு தமிழாசிரியராக கோவையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்தவர். ஆனால்வானம்பாடிஇயக்கத்தையும் அதைச் சார்ந்த கவிஞர்களையும் கடுமையாக விமர்சித்தவர்கள் தமிழ் ஆசிரியர்களே. .பொ.சியின் தமிழரசு கழகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர்.

தமிழ் இலக்கியங்களோடு நின்றுவிடாமல் சமணம், பௌத்தம் உள்ளிட்ட தத்துவங்களையும் அதன் பின் மார்க்ஸியத்தையும் கற்றுத் தேர்ந்தவர். நெருக்கடிநிலையின்போது இந்திரா காந்தியை ஆதரித்துஇந்திரா-இந்தியாஎன்ற நூலை தமிழ்நாடனுடன் இணைந்து எழுதிபோதிலும், அந்த நடவடிக்கை தவறு என்று உணர்ந்தவுடன் சிறிதும் தயக்கமின்றி தம் நிலைபாட்டை மாற்றிக்கொண்டார்.

புவியரசுவின் கையெழுத்து அழகானது. நன்றாக ஓவியம் வரையக்கூடியவர். அவர் எழுதுவதே ஓவியம் வரைவது போலத்தான் இருக்கும். அவரது தந்தையார் சுப்பையாவிடமிருந்து பெற்ற கொடை அது. கோவையின் புகழ்பெற்ற புரூக் பாண்ட்தேயிலை நிறுவனத்தில் ஓவியராக வேலைபார்த்தவர். அதன் லட்சினை ஓவியமானஒரு மொட்டும் இரு இலைகளும்ஓவியத்தை வரைந்தவர். புராணிக ஓவிய மரபு தெரிந்தவர்.

புவியரசு ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே குற்றங்கள், புலனாய்வு, கதை, கவிதைகள் கலந்தவொரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய அனுபவம் உண்டு. தந்தையின் ஓவியங்களுடன் வெட்டி ஒட்டிய வண்ணப் படங்களுடன் புதுமையான பத்திரிக்கையாக அதை வடிவமைத்திருந்தார். அந்த அனுபவம்தான் பின்னாட்களில்வானம்பாடி’, ‘காற்றுஎன்று பல சிற்றிதழ்களையும் நடத்த உதவின.

பத்திரிக்கைகளின் மீதும் எழுத்தின் மீதும் புவியரசுவின் ஆர்வத்துக்கு மேலும் உரமூட்டியவர் என்று பகடாலு நரசிம்மலு நாயுடுவைச் சொல்லலாம். கோவையில் முதன்முதலாக அச்சகத்தை நிறுவி அச்சுப் பத்திரிக்கையை கொண்டுவந்தவர் நரசிம்மலு நாயுடு. தமிழில் முதல் பயண இலக்கியத்தை எழுதியவர். அவர் மீது பெரும் பற்று கொண்ட புவியரசு தன்னை அவரது வாரிசு என்று பெருமையுடன் சொல்வார். 110 புத்தகங்களை எழுதியிருக்கும் நரசிம்மலு நாயுடுவுக்கு, இதுவரை 107 புத்தகங்களை எழுதியிருக்கும் புவியரசு தகுதியான வாரிசுதான் என்பதில் சந்தேகமில்லை.

கையொப்பம்கவிதைத் தொகுப்புக்காக 2009ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார். காஜி நஸ்ருல் இஸ்லாம் எழுதியதி ரெவல்யூஸனரியின் மொழியாக்கத்துக்காக 2007ம் ஆண்டிலும் சாகித்ய அகாதமியின் மொழியாக்க விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஆறு கவிதைத் தொகுப்புகளையும், மிர்தாத்தின் புத்தகம், கரம்சோவ் சகோதரர்கள் உள்ளிட்ட நூல்களையும், ஷேக்ஸ்பியர், ஓஷோ, தாகூர், கலில் கிப்ரான், உமர் கயாம் ஆகியோரின் புத்தகங்கள் உள்ளிட்ட எண்ணற்ற மொழிபெயர்ப்புகளையும் செய்திருந்தபோதும் அவருக்கு பிடித்த இலக்கிய வடிவம் நாவல். எல்லா மொழி நாவல்களையும் விரும்பிப் படிப்பவர். நாவலின் மீதிருந்த ஈர்ப்பினால்தான் 88 வயதில்கண்மணி சோபியாஎன்ற நாவலை எழுதினார்.   

புவியரசு நவீன நாடகங்களிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ‘காற்று’ என்ற நாடக இதழையும் நடத்தினார். சில நாடகங்களை இயக்கியிருக்கிறார்.  ‘மனிதன்’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய நாடகங்கள் வெளியாகியுள்ளன.

தந்தையிடமிருந்து புவியரசு அவர்களுக்குக் கிடைத்த இன்னொரு நற்கொடை தத்துவங்களின் மீதான ஆர்வம். இதுவே பின்னாட்களில் அவரை மொழிபெயர்ப்புகளை நோக்கி இட்டுச் சென்றது. சென்னையில் வசித்த நாட்களில் கண்ணதாசன் பதிப்பகத்துக்காக ஓஷோவின் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்தார். அதே காலகட்டத்தில் உமர் கய்யாம், கலீல் கிப்ரான், தாகூர் ஆகியோரின் படைப்புகளை மொழியாக்கம் செய்தார். ஐம்பதுக்கும் அதிகமான புத்தகங்களை அவர் மொழிபெயர்த்திருந்தபோதும் அவரது மொழியாக்கத்தில் வெளியான இரண்டு நூல்களை தமிழுக்குக் கிடைத்த பெரும் கொடையாகச் சொல்லலாம்.

ஒன்று, மிகைல் நைமி எழுதிய மிர்தாதின் புத்தகம். மிகைல் நைமி லெபனானைச் சேர்ந்த கவிஞர். கலீல் கிப்ரானின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். அவரது மிக நெருக்கமான நண்பர். கிப்ரானின் ‘the prophet’யைப் போன்றவொரு அல்லது அதைவிட அபாரமான ஒரு படைப்பை எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியதுதான் ‘the book of Mirdad’, ஓஷோ தனக்குப் பிடித்த புத்தகங்களில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டிருந்தபோதும், தமிழில் இதை புவியரசு மொழிபெயர்க்கும் வரையிலும் அறியப்படாத ஒரு புத்தகமாகவே இருந்தது.

தமிழில் மிக அதிகமான விற்ற ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகம் மிர்தாதின் புத்தகமாகத்தான் இருக்கவேண்டும். அதைப் படித்துவிட்டு புவியரசுதான் மிர்தாத் என்று தேடி வந்தவர்கள் இருக்கிறார்கள். காரணம், அந்த நூலை புவியரசு மொழிபெயர்த்திருக்கும் விதம். நேரடியாக தமிழில் எழுதப்பட்ட ஒன்று என நினைக்கும்படியாக எளிமையாகவும் இயல்பாகவும் செறிவாகவும் மொழிபெயர்த்திருக்கிறார் புவியரசு.

தமிழுக்கு புவியரசு மொழிபெயர்ப்பின் வழியாகக் கொடுத்த கொடை என தஸ்தவஸ்கியின்கரம்சோவ் சகோதரர்கள்நூலைக் குறிப்பிடலாம். உண்மையில் அதுவொரு அசுர சாதனை. ஆயிரத்துக்கு மேலான பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் ஆறு வெவ்வேறு ஆங்கிலப் பிரதிகளை ஒப்பிட்டு மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன. இந்த நாவலை மொழிபெயர்க்கும்போது புவியரசுவின் வயது எழுபதை நெருங்கிவிட்டது. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இதை எழுதி முடிக்கும் சமயத்தில் அவர் கை வீங்கி பேனாவைப் பிடிக்கவே முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த வயதில் உடலை வருத்திக்கொண்டு ஏன் இப்படி இதை மொழிபெயர்க்கவேண்டும்? பணம் கிடைக்கும் என்றா? தமிழ்ச் சூழலை நன்கறிந்தவர்கள் அப்படி நம்பமாட்டார்கள்.

தஸ்தாவஸ்கியைப் படித்து மொழிபெயர்த்த பிறகு வாழ்க்கையில் எல்லா சங்கடங்களும் சாதாரணமாகிவிடுகின்றன. எவ்வளவு அவமானங்களும் துயரங்களும் வந்தாலும் கவலையே படவேண்டாம் என்பதுதான் தஸ்தாவஸ்கி தரும் ஞானம்என்று புவியரசு குறிப்பிடுகிறார். அந்த ஞானத்தை அவர் அடைந்தது மட்டுமன்றி நம் எல்லோருக்கும் அந்த ஞானத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கம்தான் அவரை அத்தனை சிரமப்பட்டு மொழிபெயர்க்கச் செய்திருக்கிறது.

No comments:

Post a Comment

கோவையின் இலக்கிய முன்னோடி - புவியரசு

  1985 ம் ஆண்டு கல்லூரி மாணவ னாக இருந்த சமயத்தில், க விஞர் பக்தவத்சலம் திருப்பூரிலிருந்து ‘ சூத்ரதாரி ’ என்ற சிறுபத்திரிக்கையை வெளி...