ஏறத்தாழ முப்பது வருடம் முன்பு, அப்போது நான் உயர்நிலைப் பள்ளி மாணவன், இலக்கியத்தில் எனக்கு ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. மலையாளத்திலும் ஆங்கிலத்திலுமாக தேடித் தேடி படித்துத் தள்ளிக் கொண்டிருந்த நாட்கள் அவை. இலக்கியம் சார்ந்து சுவைமுறைகளும் அவற்றை ஒட்டிய தெரிவுகளும் முடிவுகளும் உருவாகியிருந்தன. பொதுவாக அப்போது உணர்வெழுச்சியே இலக்கியத்தின் இலக்கும் வழிமுறையும் என எண்ணியிருந்தேன். இரு வகைகளில் இலக்கியத்தில் உணர்வெழுச்சி நிகழ்வதைக் கண்டிருந்தேன். ஒன்று, கதைமாந்தர்களின் வாழ்க்கைச் சரடுகள் ஒன்றோடொன்று வெட்டிச் செல்லும்போது உருவாகும் கொந்தளிப்பு. இன்னொன்று, அனைத்தையும் சுழற்றி அடித்துச் செல்லும் அறியாப் பெருவல்லமை அவர்களைப் பேரிழப்புகளுக்கும் இடர்களுக்கும் ஆளாக்கி தனக்குள் இழுத்துக்கொள்ளும் இடங்கள். முதல் வகையைச் சேர்ந்த சார்ல்ஸ் டிக்கன்ஸின் ‘ஆலிவர் ட்விஸ்ட்'டையும், 'இரு நகர்களின் கதை'யையும் வாசித்துவிட்டு நான் கண்ணீர் விட்டு ஏங்கியிருக்கிறேன். இரண்டாவது வகைமையான விக்டர் யூகோவின் 'துயருற்றவர்கள்' என்னைப் பல வாரங்களுக்கு பித்தெடுத்து அலையச் செய்திருக்கிறது. இவ்விரு உணர்ச்சிநிலைகளின் உச்சமாக திரண்டுவரும் ஒரு நிலையையும் யூகோ எனக்குக் காட்டினார். மகத்தானவற்றின் முன் நாம் கொள்ளும் சிறுமையுணர்வும் மறுகணமே நம் அகம் அதற்கிணையாக விரிவதும் இணைந்து அளிக்கும் பெருநிலை அது. அன்பு, கருணை, அறம் என பல்லாயிரமாண்டுக் கால மரபு உருவாக்கிய விழுமியங்களை மீண்டும் மீண்டும் கண்டடைதலையே இலக்கிய வாசிப்பு நமக்களிக்கிறதென உணர்ந்தேன். பின் கார்க்கியும் தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் முறையே அறிமுகமாகி அந்த அகப்புரிதலை விரிவுபடுத்தினர். ஒரு நிலக்காட்சியை உணர்வு பொங்கக் கூறுவதன் மூலமேகூட அவ்வெழுச்சியை அளிக்க இயலுமென மைக்கேல் ஷோலக்கோவ் காட்டினார்.
வாரம் இருமுறை நூல்களுக்காகப் போய் நச்சரித்தமையால் கடுப்பாகிப்போன முழுக்கோடு ஒய்எம்சிஏ நூலகர் எனக்கு எடைமிக்க ஒரு நூலை எடுத்துத் தந்து 'இதைப் படி. உன் தினவு ஆறு மாசத்துக்கு அடங்கும்' என்றார். 'சக்ரவர்த்தி பீட்டர்', அலக்ஸி தல்ஸ்தோய் எழுதியது (எஸ்.ராமகிருஷ்ணன் தமிழாக்கம்). லிட்டன் பிரபு, அலக்ஸாண்டர் டூமா போல மனம் கவரும் ஒரு வரலாற்று நாவல் என்று எண்ணி வீட்டுக்கு ஓடி அதை வாசிக்க இரும்புக் கடலை கொறிக்க முற்பட்டு பல்லுடைந்தது. எளிய நடைதான். நேரடியான கூறுமுறை. எந்த சிக்கலுமே இல்லாத கதைப்போக்கு. ஆனால் உணர்வின் ஈரமே இல்லாத பெரும் சொல்நிலவெளி அது. முற்றிலும் அயல்நிலமொன்றில் இரு கரை நிரப்பி அச்சமூட்டும் அமைதியுடன் ஓடும் ஆழம் மிக்க பேராறொன்றைப் பார்ப்பது போல உணர்ந்தேன். இரண்டு வாரம் கழித்து அதை கொண்டுபோய் கண்ணீர் மல்க திரும்பக் கொடுக்க முயன்றபோது அன்று அங்கே வந்திருந்த பாதிரியார் ஒருவர் என்னிடம் அதைப் பற்றிப் பேசினார். “பொறுமையாகப் படி. சங்ஙம்புழாவின் 'ரமணன்' மட்டுமே இலக்கியமல்ல. வாழ்க்கையின் உணர்ச்சிமிக்க இடங்களை மட்டும் மையப்படுத்தி எழுதுவது ஒரு வழி என்றால் அனைத்தையும் உள்ளடக்கி பற்றில்லாமல் வரலாற்றை முழுமையாகச் சொல்ல முயல்வது இன்னொரு வழிமுறை. இதுவே உண்மையில் வரலாற்றை சரியானபடிச் சொல்கிறது" என்றார். எனக்கு எனக்கு இயல்புவாதம் (நாச்சுரலிசம்) அவ்வாறு அறிமுகமாயிற்று.
பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையின் சலிப்பை வெல்லவே இலக்கியம் படிக்கிறோம். ஆகவே கனவுகளாலும் உணர்ச்சிகளாலும் செறிவூட்டப்பட்ட கூறல்களே நம்மைக் கவர்கின்றன. வாழ்க்கையின் மாறா இயல்பான சலிப்பையும் சீரின்மையையும் கடைபவர்களுக்கு கையில் திரண்டுவரும் பொருளின்மையையும் குறித்துக்கூட உணர்வெழுச்சியுடன் சாராம்சப்படுத்தித்தான் சொல்ல வேண்டியுள்ளது. இயல்புவாதம் வாழ்க்கையை ‘உள்ளது உள்ளபடி' சொல்ல முயல்கிறது. ஆகவே அது வாழ்க்கை மீது ஏற்றப்படும் எல்லா வண்ணங்களையும் கலைத்துப் பார்க்கிறது. உணர்வெழுச்சிகளை ஐயப்படுகிறது. கோட்பாடுகளைப் புறந்தள்ளுகிறது. எல்லா வகையான மையப் படுத்தல்களையும் முற்றாக ஒதுக்கிவிட்டு வாழ்க்கையைக் கண் முன் சிதறிப்பறக்க விடுகிறது. இயல்புவாதம் உலகம் முழுக்க மனிதனின் சிறுமையையும் வீழ்ச்சியையும் சொல்லவே கையாளப்பட்டுள்ளது. இயல்புவாதம் உண்மையில் சற்று முதிர்ந்த மனம் கொண்டவர்களுக்கான அழகியல். கற்பனாவாத, இலட்சியவாத, கோட்பாட்டுவாதக் காலகட்டங்களைத் தாண்டி 'அட இவ்ளவுதான்யா வாழ்க்கை’ என்று தெரிந்துகொண்டவர்களுக்கானது அது.
தமிழில் புதுமைப்பித்தன் முதலே இயல்புவாதத்தின் அடுத்த கட்டமான நவீனத்துவம் அரங்கேறிவிட்டது. வாழ்க்கை மீதான தனிநபர்மைய நோக்கு அதற்கு உண்டு. இயல்புவாதத்தின் உணர்ச்சியற்ற, தகவல் சார்ந்த கூறல்முறையை மட்டும் நவீனத்துவம் முன்னெடுத்தது. ஆகவே நமக்கு இயல்புவாதம் வலுவாக உருவாகவில்லை. தமிழின் முதன்மையான இயல்புவாதிகளில் நீல.பத்மநாபன் மட்டுமே தொடர்ந்து எழுதினார்.. ஆ.மாதவன் விரைவிலேயே நவீனத்துவ அழகியலுக்குள் சென்றார்.. அடுத்த கட்ட நகர்வை நிகழ்த்திய பூமணியும் அப்படியே. இயல்புவாதம் உண்மையில் நாவல்களையே முதன்மை வடிவமாகக் கொண்ட அழகியல்போக்கு. தமிழிலும் முதல் பெருநாவலை எழுதியவர் நீலபத்மநாபனே -- தலைமுறைகள். அப்போக்கு தொடரவில்லை. சுப்ரபாரதி மணியன் போன்று அடுத்த கட்ட இயல்புவாத எழுத்தாளர்களும் நல்ல சிறுகதைகளையே உருவாக்கினர்.
இன்று தமிழில் நவீனத்துவத்தின் கொடி இறங்கிய பின் இயல்பு வாதம் மீண்டும் எழுந்திருப்பது அதன் இன்றியமையாத வரலாற்றுத் தேவையையே காட்டுகிறது. சமீபத்தில் பல இயல்புவாத நாவல்கள் வந்துள்ளன, சோ. தருமனின் 'கூகை', கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ போன்றவை முக்கியமான ஆக்கங்கள். என் நோக்கில் தமிழில் எழுதப்பட்ட இயல்புவாத நாவல்களில் முதன்மையான பெரும் படைப்பு எம். கோபாலகிருஷ்ணனின் ‘மணல்கடிகை’
0
மேலைநாட்டில்
தொழிற்புரட்சி உருவாகி அதன் விளைவான அழிவுகளும் சிதைவுகளும் அறியப்பட்டபோது அதை நோக்கித்
திருப்பப்பட்ட கண்ணாடியாக வந்தது இயல்புவாதம். மணல்கடிகையும் இயல்பாகவே
தமிழ்நாட்டுத் தொழில்வளர்ச்சியின் விளைவுகளையே முன்னிலையாக்குகிறது. தன்னைச் சிதைத்துக்கொண்டு டாலராக உருமாறிக்கொண்டிருக்கிறது திருப்பூர்.
சாயக் கழிவால் சாக்கடை யாகிப்போன நொய்யலின் கரையில் கூலிக்காக இரவுபகலாக
உழைத்து அவ்வுழைப்பின் சலிப்பைப் போக்கவே கூலியைச் செலவழித்து அழியும் தொழிலாளிகள்.
லாப வேட்டையில் இரவு பகலாக ஓடி அதன் சலிப்பைக் களியாட்டங்களில் கரைக்கும்
முதலாளிகள். ஓயாது ஓடித் தேய்ந்து அழியும் இயந்திர பாகங்கள் போலத்தான்
அனைத்து மனிதர்களும். அவர்கள் தங்களை உயிரிகளாக உணர வழியமைப்பது
காமம் மட்டுமே. ஆகவே ஒழுக்க நெறிகளையெல்லாம் மீறி சாயச் சாக்கடை
போல எங்கும் பரவி நிறைந்திருக்கிறது காமம்.. முடிவே இல்லாத சலிப்பு,
அதிலிருந்து தப்ப மனிதர்கள் தேடும் வெற்றி தோல்விகளின் சூதாட்டம்,
உழைப்பு, காமம் - அவ்வளவுதான்
வாழ்க்கை. வேறு ஒன்றுமே இல்லை என விரித்து விரித்துக் காட்டி
அடங்குகிறது இந்த 600 பக்க நாவல்.
“உலகத்தின் வாசலே திறந்து கிடப்பது போல ஊத்துக்குளி ரோடு ஆளரவமற்று நீண்டிருந்தது" எனத் தொடங்குகிறது இந்நாவல். இந்நாவலின் மிக முக்கியமான வரி இது. திறந்து கிடக்கிறது உலகம். எண்ணற்ற வாய்ப்புகளும் அழகுகளும் கொண்ட பெருவெளி. அதில் செல்கிறார்கள் பள்ளிப் படிப்பு முடித்து விடுமுறையைக் கொண்டாடச் செல்லும் ஐந்து திருப்பூர் இளைஞர்கள் பரந்தாமன், சிவா, சண்முகம், திருச்செல்வன். அன்பழகன். ‘அலைகள் ஓய்வதில்லை' படம் வெளிவந்த காலம். காமம் முகிழ்க்கும் பருவம். திரைப்படம் அதன் வெளிப்பாடாக இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் கண்முன் கிடக்கிறது. வாய்ப்புகளின் வெளி. ஐவரும் திருப்பூர் அருகே உள்ள கயித்தமலை என்ற சிறிய குன்றில் ஏறி திருப்பூரை நோக்குகிறார்கள். ஒருவனுக்கு எதிர்காலம் ஆவலூட்டும் சவால். ஒருவனுக்கு சுமந்தேயாக வேண்டிய சுமை. ஒருவனுக்கு துய்க்கப்பட வேண்டிய பொருள்.. ஒருவனுக்கு ஏற்கனவே வகுக்கப்பட்ட பாதை.. ஒருவனுக்கு வாசித்தறிய வேண்டிய நூல்.. ஆலையின் பற்சக்கரங்களை நோக்கும் இளம் கரும்புத் தண்டுகள்.
அங்கே தொடங்குகிறது நாவல். ஐவருடைய தனியியல்புகளே அவர்களுடைய கைமுதல்களும் தடைகளும் ஆக அமைகின்றன. நிதானமும் கணக்குத்தன்மையும் கொண்ட திரு மாமாவின் சீட்டு நிறுவனத்தில் சேர்ந்து திடமாக சீராக முன்னேறுகையில் அனைத்து திறமைகளும் இருந்தும் பிறரிடம் உறவுகளைப் பேண முடியாது போகும் அன்பழகனால் மீண்டும் மீண்டும் தோற்கவே முடிகிறது. அப்பா சேர்த்த செல்வம் துணையிருப்பதனால் சண்முகம் சோம்பேறி இலக்கியம் வளர்த்து தன்னை மறைத்துக் கொள்கிறான். கொள்கைகள், அமைப்புகள் எங்கும் நிலைகொள்ளாமல் பரந்தாமன் அலைபாயும் போது சிவா பிறர் உழைப்பைச் சுரண்டிச் சேர்த்து மேலும் வளரும் வித்தையை மெல்ல கற்றுக்கொள்கிறான். ஐந்து கோலங்களும் நான்கு திசைகளில் பின்னி விரிகின்றன.
ஐந்து நண்பர்களும் நாவலின் ஐந்து பகுதிகளின் முதல் அத்தி யாயங்கள்தோறும் திருப்பூரைச் சுற்றியுள்ள ஐந்து சிறு குன்றுகளில் ஒன்றின் மீது மீண்டும் சந்திக்கும் தருணங்கள் இந்நாவலில் மையப் புள்ளிகள். விசித்திரமான ஓர் வெறுமையுணர்வை அப்பகுதிகள் அளிக்கின்றன. ஒரு பகுதியின் வாழ்க்கைச் சித்தரிப்பு பின்னிப் பின்னி விரிந்து சென்று எதையுமே எட்டாமல் முடிகிறது. அடுத்த பகுதியில் நண்பர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். நிறைய மாறியிருக்கிறார்கள். நிறைய நகர்ந்திருக்கிறார்கள். ஆனால் பெரிதாக ஒன்றும் நிகழவும் இல்லை. இழப்புகள், ஈட்டல்கள், ஈட்டல் போலும் இழப்புகள், இழப்பு போலும் விடுதலைகள்.. மீண்டும் புதிதாக ஒரு தொடக்கம். அதுகூட ஒரு பாவனையே. ஒட்டுமொத்தமாக எதிலுமே சாரமாக ஏதுமில்லை என்ற பெரும் சலிப்பு. அந்த மொட்டைக் குன்றுகள் மீது கவிந்த மேகமற்ற நீலவான் போல அத்தருணங்கள் மீது சூழ்கிறது. இயந்திரமயமாகிப்போன வாழ்க்கையைப் பற்றிய கசப்பும் சோர்வும் தான் இந்நாவலின் தரிசனமாகத் திரண்டெழுகின்றன.
வாழ்க்கையை நுட்பமான தகவல்களை அடுக்கி அடுக்கி விரித்து சித்தரித்து முடிவில் வெறுமையைக் காட்டி பின்னகரும் கோபாலகிருஷ்ணனின் கூறுமுறையே இந்நாவலின் பெரும் வலிமை. எந்தவித கனவுக்கும் எழுச்சிக்கும் இடமளிக்காதது இது. பெரும்பாலான பகுதிகள் கற்பனையே இல்லாத ஒருவர், ஒரு. வணிகர் அல்லது தொழிலாளி, யதார்த்தமாகச் சொல்வது போல தகவல்களை அடுக்கி விவரித்தபடியே செல்கின்றன. இப்பரப்பில் சட்டென்று சில பகுதிகள் அழுத்தமான கவித்துவத்துடன் எழுகின்றன. “மேற்கு வாசலில் வானத்து நட்சத்திரங்கள் கண்ணில் பட்டன. துளியற்ற மழையென இறங்கி மலைக்கோயிலை நனைப்பது போல கோபுர உச்சியிலும் மண்டபக் கூரையிலும் நிலவொளி பொழிந்தது." இவ்வரியில்கூட கற்பனாவாதப் பண்பைவிட யதார்த்த நோக்கே தெரிகிறது. மேலும் பாதி வாழ்க்கை, தேடலிலும் இழப்பிலும் எய்தலிலுமாக முடிந்தது பற்றிய நண்பர்களின் உரையாடலின் ஊடாக இவ்வரி வருகிறது. அந்த வெறுமையை நிலவும் பிரதிபலிக்கிறது.
ஒவ்வொருவரும் தங்கள் போக்கில் அடைந்தும் இழந்தும் ஏறியும் இறங்கியும் முன்னகரும் காட்சியை மிக இயல்பாக, ஆசிரியரின் முயற்சி சற்றும் வெளித்தெரியாமல், சொல்ல முடிந்திருக்கிறது என்பதே இந்நாவலின் வெற்றி. வணிகச் சூதின் ஆட்டங்களின் வழியாக சிவா முன்னகர்கிறான்.. குற்ற உணர்வை வெல்லும் கலையைக் கற்கிறான். ஆனால் கார், பங்களா, செல்வந்த மனைவி என அனைத்தையும் அடைந்த பின்னும் புறப்பட்ட அதே இடத்தில் அனைத்தையும் இழந்தவன் போல அமர்ந்திருப்பதாகவே உணர முடிகிறது. காம உறவுகளை வைத்து விளையாடும் சண்முகம் திருமண உறவின் மூலம் வெளித்தெரியா அடி ஒன்றைப் பெற்று உறவின் வலியை உணர்கிறான். அதிலிருந்து உறவெனும் சங்கிலியின் மகத்தான வல்லமையை உணர்கிறான். பெண்ணெனும் பித்தெடுத்தவன் தன் மகள் எனும் புள்ளியில் மனம் குவிந்து அடங்குவதன் பின் உள்ள கவித்துவம் இந்நாவலின் ஒளிகளில் ஒன்று. இவ்வாறு நாவலில் நிகழும் மாற்றங்களும் வளர்ச்சிகளும் பல. ஆனால் பெரிதாக ஒன்றும் நிகழவில்லை என்ற பாவனையையே நாவல் நெடுகிலும் கொண்டிருக்கிறது.
இந்நாவலின் பெண்களின் சித்தரிப்பிலும் தமிழிலக்கியம் பொதுவாகக் கண்டிராத ஆளுமைகளே விரிகின்றன. நளினமற்ற பெண்கள்,. கற்பனைப் பூச்சு பெறாத பெண்கள். உழைப்பவர்கள். உழைப்பைச் சுரண்டுபவர்கள். ஏமாற்றுபவர்கள். ஏமாற்றப்படுபவர்கள். நாவல் முழுக்க பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டபடியே இருக்கிறார்கள். அவர்களுக்கே அது தேவையாகிறது. கல்வியோ பண்பாடோ சிறக்காத சூழலில் டாலர் மூலம் பணம் மட்டும் வரும்போது வெற்றுப் பகட்டாகவே அது செலவிடப்பட முடியும். சிவாவால் ஏமாற்றப்பட்டு இயல்பாக அடுத்த கட்டத்துக்குச் செல்லும் விமலாவும் சரி, கட்டுப்படாத அலைதல் கொண்ட பூங்கொடியும் சரி, எவ்விதமான சிறப்பு அழுத்தங்களும் இல்லாமல் சாதாரணமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளமையால் மிகுந்த நம்பகத்தன்மை பெற்று நம்முள் வளரும் குணச்சித்திரங்கள்.
இந்நாவலின் வெறுமையை நிகழ்த்தும் கூறுகளில் முக்கியமானது இயற்கையே இல்லாத திருப்பூரின் வரண்ட நகரச்சித்திரம். திரும்பத் திரும்ப தொழில் நிறுவனங்கள், கடைகள், சந்துகள், தூசு, புழுதி, திரையரங்குகள், டீக்கடைகள், பிரியாணிக் கடைகள்... மொத்த நகரமே ஒரு பெரிய பின்னல் இயந்திரம் போல மனிதர்களைச் சேர்த்துப் பின்னி இயங்குகிறது. நகரத்துக்கு வெளியே வந்து குன்று மீதேறி நோக்கும்போது அபத்தமான ஒரு சலனமாக மட்டுமே அது தெரிகிறது.. அப்படி வந்து நோக்குபவர்களோ சிலர் மட்டுமே.. அப்படி நோக்கும் தன்மை ஒன்று காரணமாகவே அந்த ஐந்து பேரும் இந்நாவலின் கதைத்தலைவர்கள் ஆனார்கள் போலும்.. அனைத்து வெறுமையையும் தாண்டிச் சென்று அவர்களால் புன்னகை கொள்ள முடிவது அதனால்தான்.
இந்நாவலில் வாழ்க்கைக்கு அப்பால் சென்று வாழ்க்கையை நோக்கும் ஆன்மீகத் தேடல் எதற்கும் இடமளிக்கவில்லை ஆசிரியர்.. அது குறித்த தெளிவு அவருக்கு இருப்பதைப் பல தருணங்களில் காட்டிச்செல்கிறார். வணிகத்தை விட்டு விலகி மலை மீது வந்துவிட்ட துறவி ஒருவரைப் பற்றிய சித்தரிப்பின்போதுகூட அவருக்கு ஆன்மீகமான அலைக்கழிப்புகளை அளிக்க தீர்மானமாக மறுத்துவிடுகிறார். அவர் வெறுமே ஒதுங்கி இருக்கும் எளிய மனிதர் மட்டுமே. நாவலில் மதம் இருக்கிறது, கடவுள்கள் உள்ளனர், அனைத்துமே அந்த நகரின் தொழிலியக்கத்துக்கான துணைப்பொருட்கள் மட்டுமே. அதற்கப்பால் செல்லும் ஆன்மீகமே இல்லை.
ஆனால், நாவலின் இறுதியில் ஐவரும் சென்னிமலையில் காணும் தண்ணாசிச் சித்தரின் சமாதி
எளிய ஒரு நிறத்தீற்றலாக வாசக மனதைத் தொட்டுச் செல்கிறது. 'காத்துல
காஞ்ச எலை மாதிரி நடக்கும்’' சித்தரின் நான்கு வரிச் சித்திரம்
திருப்பூர் என்னும் மாபெரும் எந்திரத்தை எங்கோ எதிர்கொள்கிறது.
நம்மிடம் விவாதிக்கும் யதார்த்தவாத
நாவலையோ, நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் கற்பனாவாத நாவலையோ
வாசிக்கும் உற்சாகத்துடன் இதுபோன்ற இயல்புவாத நாவலை நாம் வாசித்துவிட முடியாது..
இதிலுள்ள நிகழ்வுகளுக்கு கோர்வையான ஒருமை இல்லை. கிளர்ச்சியளிக்கும் வேகமும் இல்லை. எளிய அன்றாட நிகழ்வுகள்..
ஆனால் அவற்றின் ஊடாக ஓடும் உள்ள மோதல்களைச் சொல்வதில் கோபாலகிருஷ்ணன்
காட்டியுள்ள நுண்மை தமிழின் முக்கியமான ஓர் இலக்கிய நிகழ்வாகும். குறிப்பாக ஆணும் பெண்ணும் ஒருவரோடொருவர் செலுத்திக்கொள்ளும் உளவன்முறை இந்நாவலின்
சிறப்புக் கூறு என்றே சொல்லலாம். காமத்தின் பலவகையான பாவனைகளையும்
கசப்புகளையும் ஏதோ இயந்திர தொழில்நுட்ப விளக்கம் போலச் சொல்லிச் செல்லும்
கோபாலகிருஷ்ணன் ஆணும் பெண்ணும் கொள்ளும் மோதலை அதன் அதிநுண்மை வரை சென்று தொட்டிருக்கிறார்..
சிவாவிடமிருந்து வணிகமும் அதிகாரமும் சித்ராவுக்கு மாறும் இடம் ஓர் உதாரணம்
என்றால் விமலாவிடம் சிவாவும் அவள் கணவனும் நடந்துகொள்ளும் முறைகள் இன்னொரு உதாரணம்.
"சென்னிமலையில் மலைப்பாதையில் குவாலிஸ் அனாயாசமாக வளைந்து ஏறியது ..." எனத் தொடங்கும் இறுதி அத்தியாயத்துடன் முடிகிறது நாவல். நண்பர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள்.. “எப்படிப் பார்த்தாலும் நாம அஞ்சு பேருமே ஓட ஆரம்பிச்ச எடத்துக்கே மறுபடி திரும்பி வந்து நிக்கிறோம். யார் எப்டி இருந்தாலும் அஞ்சு பேரும் ஒண்ணா சிரிச்சுட்டு இருக்கோம். வேற என்னடா வேணும்” என்ற திருவின் கேள்வியில் ஒரு வகையில் நாவல் முடிவு கொள்கிறது. அந்தச் சிரிப்பே மனிதன் அடையக்கூடியதில் உச்சம் என்கிறது போலும் இந்நாவல். மீண்டும் அழுத்தம் மிக்க மொழியில் அதையே சொல்கிறது “மண்ணும் மலைகளும் மனிதர்களும் ஒன்றுபோலாகி பெருங்கடலின் அலைத் திவலைகளாகி கரைந்து நிற்கும் இக்கரையில் கேட்க முடிவதெல்லாம் இன்மையின் சங்கீதத்தை மட்டுமே."
0
நூலுக்குள் எங்குமே விளக்கப்படாத
தலைப்பில் இந்நாவலின் முள் ஒன்று உள்ளது. மணல்கடிகையில் மணல்
விழுந்துகொண்டிருக்கிறது. அமைதியாக, சீராக.
அது முடியும்போது அனைத்தும் கவிழ்ந்து மீண்டும் தொடங்கியாக வேண்டும்.
0
2006ஆம் ஆண்டு அ.முத்துலிங்கம் தொகுத்தளித்த நூல் ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’. உயிர்மை வெளியீடு. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் இருபது பேர் தங்களை பாதித்த நூல்களைக் குறித்து ஆழமான பார்வையை முன்வைத்திருக்கும் நூல் இது. ‘மணல் கடிகை’ நாவலைக் குறித்து ஜெயமோகன் எழுதிய கட்டுரை இது.



No comments:
Post a Comment