சுஜாதா ஒரு முறை எழுதியிருந்தார் ‘எதிர்காலத்தில் புகழோ பிரபலமோ ஒரு நொடிக்கும் மேல் இருக்காது’.
இன்றைய சமூக ஊடகச் சூழல் தற்காலிகத் தன்மை கொண்டது. நாளிதழ்கள், வார
மாத பத்திரிகைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. பாரம்பரியமிக்க ஒரு வார இதழ் விரைவில்
நிறுத்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு, படிக்கும் பழக்கம்
குறைந்து போனமைக்கு தொலைக்காட்சி காரணமானது. ஆனால், இன்று தொலைக்காட்சிகளே தடுமாறும்
நிலை. பெண்களை பயனாளர்களாகக் கொண்ட நெடுந்தொடர்கள் கொஞ்சம் தாக்குப் பிடிக்கின்றன.
மற்றபடி தொலைக்காட்சி தொடர்களின் நிலையும் கவலைக்கிடம் என்று துறைசார்ந்த நண்பர்கள்
சொல்கிறார்கள். இதற்கான அடிப்படைக் காரணம் மக்களின் கவனம் இன்ஸ்டா ரீல்ஸ், யூ டியூப்
பக்கமாகத் திரும்பிவிட்டது. குறைவான நேரத்தில் செறிவான கருத்தை கண்ணைக் கவரும் விதத்தில்
சொல்வதுதான் இலக்கணம். இன்று யார் வேண்டுமானாலும் பிரபலமாகலாம், அதன் மூலம் பொருளீட்டலாம்.
கையில் ஒரு திறன்பேசி இருந்தால் போதும். ‘இன்றிருப்பார் நாளையில்லை’ என்ற நிலைதான்
இவர்களுக்கும். சென்ற ஆண்டு சினிமாப் பாடல்களுக்கு அபிநயம் பிடித்த பெண் இன்று ‘சீனி’லேயே
இல்லை. திறமை இருந்தால் எந்த விஷயத்தையும் ‘கண்டெண்ட்’ ஆக்கி விடலாம். உணவகங்கள், சாப்பாடு,
கோயில், துணிக்கடை, தள்ளுவண்டிக் கடைகள், கிரிக்கெட், கணவன் மனைவி அன்றாட சண்டைகள்,
குழந்தைகளின் நடனம் என்று எண்ணற்ற சாத்தியங்கள். வாழ்வின் அன்றாட காரியங்கள் எதையும்
காட்சியாக்கலாம். சில பெண்கள் உடலைக் காட்டி உதடுகளைச் சுழிக்கும் ‘ரீல்’களைப் பார்த்துவிட்டு
நண்பர் ஒருவர் எழுதினார் ‘வெகு விரைவில் முகநூல் வழியாகவே நிர்வாணக் காட்சிகளை தரிசிக்கலாம்’.
இலக்கியம் சார்ந்த ரீல்களும் இந்தப் பட்டியலில் உண்டு. சுரேஷ் பிரதீப் போன்றவர்கள்
தீவிரமாக புத்தக அறிமுகம் செய்கிறார்கள். இந்த ஆண்டு புத்தகக் காட்சியின்போது, புதிய
புத்தகங்களின் அறிமுகங்கள் பலவும் இப்படித்தான் நடந்தன. மனுஷ்யபுத்திரனின் கவிதைகள்
பலவும் இன்ஸ்டாகிராமில் பிரபலம். இன்னொரு பக்கம் யூ டியூபில் எழுத்தாளர்களின் பேட்டிகளும்
ஒலிப்பரப்பாகின்றன.
பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் பாட வேளைகள் 45 நிமிடங்களாக இருந்தன.
இப்போது எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. ஒரு மனிதன் குறிப்பிட்ட விஷயத்தை சராசரியாக
இந்தக் கால அளவுக்குத்தான் ஊன்றி கவனிக்க முடியும் என்ற அடிப்படையில் இந்த கால அளவு
நிர்ணயிக்கப்பட்டது. இப்போது இந்தக் கால அளவு இன்னும் குறைந்துவிட்டது. காரணம், இன்றைய
காட்சி ஊடகங்கள். இதிலும் இதே அடிப்படைதான். இன்று நமக்கு வாய்த்திருக்கும் திறன்பேசிகள்,
தொலைதொடர்பு வசதிகள், உலகளாவிய அளவில் சென்றடையக் கூடிய இணைப்புகள் ஆகிய வசதிகள் சமகாலத்
தலைமுறையினருக்கு பெரும் சுதந்திர வெளியைத் திறந்து விட்டுள்ளன. எந்தவொரு விஷயத்தையும்
அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் சொல்லிவிடவேண்டும் என்பதுதான் நிபந்தனை.
முகநூல் பதிவு அதிகபட்சம் பதினைந்து வரிகளைத் தாண்டக்கூடாது. இந்த எல்லையை மீறும்போது
விரல்கள் தானாக அவற்றை இரக்கமில்லாமல் நகர்த்திக் கடந்துவிடும்.
அச்சு ஊடகத்திலிருந்து காட்சி ஊடகத்துக்கு மாறி இன்று ‘மின்’ ஊடகத்தின்
காலத்தில் இருக்கிறோம்.
சூழலுக்கேற்ப இலக்கிய வடிவங்களும் மாற்றமடைகின்றன. ஊடகத்துக்கேற்ப
அவை அனுமதிக்கும் கால, வெளிக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொள்கின்றன. எழுபதுகளிலிருந்து
தொண்ணூறுகளின் இறுதி வரையிலும் எழுதப்பட்ட நாவல்கள் அதிகபட்சம் நானூறு பக்கங்களே இருந்தன.
கணினி வசதி அறிமுகமான பிறகு நாவல்களின் பக்க எண்ணிக்கை அதிகமாயின. சமகாலத்தில், குறிப்பாக
பெருந்தொற்றுக்குப் பிறகு, இன்றைய ஊடகத்தின் தேவைக்கேற்ப ‘குறுங்கதை’கள் அதிகமும் எழுதப்படுகின்றன.
உலக அளவிலும், தமிழிலும் முன்பே குறுங்கதைகள் எழுதப்பட்டிருந்தாலும், இந்த வடிவம் முகநூலுக்கு
மிகப் பொருத்தமான வடிவமாக அமைந்திருக்கிறது.
இந்த வடிவத்தைப் புரிந்துகொண்டு தொடக்கம் முதலே இதில் கவனத்துடனும்
தீவிரத்துடனும் எழுதி வருபவர் போகன் சங்கர். கவிதைகள், குறுங்கதைகளைத் தொடர்ந்து முகநூலில்
எழுதுகிறார். ‘சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்’ என்ற இத்தொகுப்பில் முக நூலில் எழுதப்பட்ட
77 குறுங்கதைகள் இடம்பெற்றுள்ளன.
முகநூல் பயனாள்களுக்காக, வாசகர்கள் அல்ல, எழுதப்படும் இக்கதைகளுக்கென்று
பொதுவான சில குணாம்சங்கள் உண்டு. முதலாவது, வாசிப்பு சுவாரஸ்யத்தைக் கொண்டவை இக்கதைகள்.
விறுவிறுவென உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல்மிக்கவை. அடுத்தது, எதிர்பாராத திருப்பங்களை,
திடுக்கிடல்களை, வியப்பை, திகைப்பைத் தரும் இக்கதைகள் அவ்வப்போது அச்சத்தையும் நெகிழ்ச்சியையும்
அளிக்கும். மூன்றாவதாக, கடைசி வரியில் சிறிய அதிர்ச்சியையோ அல்லது எதிர்பாராத திருப்பத்தையோ
தருவதாக இருக்கும்.
போகனின் இத்தொகுப்பிலுள்ள கதைகளிலும் மேற்சொன்ன அம்சங்கள் உண்டு. இதுபோன்று
கதைகளை எழுதியதன் பின்னணியில் உள்ள காரணங்களை முன்னுரையில் போகன் தெளிவுபடுத்தியுள்ளார்.
‘தீவிர இலக்கியத்தை துப்பறியும் பாணியில் எழுதுவது’ என்கிறார். இதில் உள்ள கதைகளில்
துப்பறியும் பாணியிலான கதைகளைக் காண முடியவில்லை. திடுக்கிடலைத் தரும் கதைகள் உள்ளன.
பெண்ணா, பேயா? என்ற மருட்சியைத் தரும் கதைளும் உண்டு. போகனுக்கு பேய்க் கதைகள் எழுதுவதில்
விருப்பம் அதிகம். பெண்ணை பேயாகவும், பேயையே பெண்ணாகவும் உருமாற்றிக் காட்டும் விளையாட்டில்
கைதேர்ந்தவர்.
பேயா, பெண்ணா என்ற மயக்கத்தைப் போன்றதுதான் துறவுக்கும் சம்சார வாழ்வுக்குமான
வித்தியாசங்களும். துறவுக்கும் லௌகீக வாழ்வுக்குடையில் உள்ள சன்னமான கோட்டின் இருபுறமும்
நின்றபடி இதுவா அதுவா என்று குழம்பித் தவிப்பவர்களின் கதைகளை இத்தொகுப்பில் சித்தரித்துள்ளார்.
அன்றாட வாழ்வின் நெருக்கடிகளிலிருந்து அஞ்சியோடும் எளிய மனிதனுக்கு துறவை எட்டுவதும்
அத்தனை எளிதானது அல்ல.
தொகுப்பிலுள்ள கதைகள் சில கங்கைக் கரையை, காசியை, கயாவை களமாகக் கொண்டுள்ளன.
பக்தி, வேதாந்தம், துறவு என்று பல்வேறு நிலைகளையும் அன்றாடத்தின் நோக்கில் புரிந்துகொள்ள
இக்கதைகள் முனைகின்றன.
நோய்மை, மரணம், மரண பயம், மரணத்துக்குப் பிறகு என்ன என்பது போன்ற நிலைகளை
கதைகளின் வழியே போகன் அலசிப் பார்ப்பதுண்டு. நோய்மையின் கூறுகள் மனிதனின் அக இயல்பைக்
குலைத்துப் போடும் யதார்த்தத்தையும் அபத்தமான காரணங்களுக்காக சம்பவிக்கும் மரணத்தின்
குரூரத்தையும் சித்தரிப்பதின் மூலம் வாழ்வின் பொருளை பகுத்துணர முயல்கின்றன இக்கதைகள்.
வாழ்வின் பொருள் என்பதும்கூட அபத்தம்தானே.
நோய்மையை, மரணத்தைப் பற்றிப் பேசும்போது நோய் தீர்க்கும் மருத்துவம்
குறித்தும் சில கதைகள் குறிப்பிடுகின்றன. ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவங்களும்
இவற்றில் அடக்கம். மருத்துவமனைக் களங்களும் அங்கங்கே உண்டு.
எழுத்தாளர்கள், கவிஞர்கள் இல்லாமல் போகன் கதைகள் இருக்க முடியாது.
இதில் பெரும்பாலான கதைகளில் அவர்களே கதாபாத்திரங்கள். அவர்களைப் போலவே இந்தக் கதைகளும்
பதற்றம் மிக்கவையாக, குழப்பம் கொண்டவையாக அமைந்திருப்பதில் வியப்பில்லை. எழுத்தாளன்
தன்னைக் கொண்டு காதலை, மரணத்தை, துறவை, நோய்மையை, துக்கத்தை அணுகிப் பார்த்திருப்பதன்
விளைவுகள் என்று இந்தக் கதைகளைப் புரிந்துகொள்ளலாம்.
முன்னாள் காதலிகள், முறிந்த காதல், வரைமீறிய உறவுகள் ஆகியனவும் உண்டு.
இவற்றின் விளைவுகளான துயரம், துரோகம், நினைவேக்கங்களும் கணிசமாக உண்டு. பாருக்குட்டி
ஒன்றிரண்டு கதைகளில் மட்டுமே தலைகாட்டியிருக்கிறார்.
‘சலிப்புற்ற இலக்கிய வகைமையிலிருந்து உடைத்துக் கொண்டு வெளியில் வந்து
எழுதியிருக்கிறேன். இவற்றை பரிசோதனைக்காக எழுதவில்லை. சக்திப்பூர்வமாக சொல்வதற்காக
எடுத்துக்கொண்ட வடிவம் – அனுபானம்’ என்கிறார் போகன். ஹோமியோபதியிலும் மருந்தின் வீரியத்தைக்
குறித்து இப்படியொரு அடிப்படை உண்டு. சுண்டக் காய்ச்சிய பால் போலத்தான்.
பாரதியார் தன் கவிதையொன்றில் ‘தேம்பற் பிசாசு’ என்று எழுதியிருந்ததை
கதையொன்றில் குறிப்பிடுகிறார் போகன். இக்கதைகளிலும் அவ்வாறான ‘தேம்பற் பிசாசு’களையே
போகன் நமக்குக் காட்டியிருக்கிறார். அவை தேம்ப மட்டும் செய்யவில்லை. புலம்புகின்றன,
நகைக்கின்றன, வியக்கின்றன, திடுக்கிடுகின்றன, கண்ணீர் விடுகின்றன, தோன்றி மறைகின்றன.
முகநூலுக்காக அல்லது காட்சி ஊடகத்துக்காக எழுதப்படும் இந்த வகை இலக்கிய
வடிவங்கள் தமக்கேயுரிய பலம், பலவீனம் இரண்டையும் கொண்டுள்ளன.
1.
சமகால ஊடகங்களுக்கான வடிவம் என்பதால் திறன்பேசியைக் கொண்டே
வாசிக்க முடியும்.
2.
இலக்கிய வாசகர்கள் அல்லாத பொது பயனாளர்களையும் வாசிக்கச்
செய்யும்.
3.
அச்சு ஊடகத்துக்கு வராத, திறன்பேசி பயனாளர்கள் முகநூல்
வழியாக இவற்றை வாசிக்கலாம்.
4.
பிரசுரத்துக்காக காத்திருக்க வேண்டாம். நேரடியாக பதிவேற்றலாம்.
5.
பதிவேற்றிய சில நொடிகளில் அதற்கான எதிர்வினைகளை அறிய முடியும்.
6.
செம்மையாக்கம், சொற்களின் எண்ணிக்கை, பக்க அளவு போன்ற
கட்டுப்பாடுகள் கிடையாது.
இவற்றின் பலவீனங்கள் எவை?
1.
பதிவுகள் குறைந்த ஆயுள் கொண்டவை. அதிகபட்சம் ஒரு நாளும்
குறைந்தபட்சம் சில விநாடிகளும்தான்.
2.
யாரைச் சென்றடைகிறது என்பதைப் பற்றிய தெளிவின்மை.
3.
கிடைக்கும் எதிர்வினைகள் எழுதுபவனை பாதிக்கின்றன.
4.
எதிர்வினைக்கேற்ப தன் எழுத்தை மாற்றவேண்டிய கட்டாயம்.
5.
தீவிரத்தை நோக்கி அல்லாமல் கேளிக்கையை, கவன ஈர்ப்பை நோக்கியதாகவே
எழுத்து மாறுகிறது.
இக் கதைகளின் தன்மைகளை, அது எழுதப்பட்டதன் நோக்கத்தை குறிப்பிடும்படியாகவே
இத்தொகுப்பின் தலைப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும். ‘கடவுளின்
இல்லம்’, ‘காலப் பறவை’, ‘வருடங்களுக்கு முந்தைய நிலவொளி’, ‘வான்கோவின் சகோதரர்கள்’,
‘உயிர்க் கயிறு’ போன்ற தலைப்புகள் இத் தொகுப்பில் உண்டு. அவற்றையெல்லாம் விடுத்து,
‘சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருப்பதின் பின்னணியை
யோசிக்கலாம்.
சமகால ஊடகங்கள் தம் கதைகளுக்கு இடும் தலைப்புகளை யோசித்துப் பார்த்தால்
இது புரியும். பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும், கவன ஈர்ப்புக்கானதாகவும், உடனடியாக
பார்க்கச் செய்வதாகவும் தலைப்புகள் இருக்கும். தொகுப்பின் இந்தத் தலைப்பும் இதே காரணங்களைக்
கொண்டிருக்கிறது.
இவை சமகால ஊடகத்தில், முகநூலில் எழுதப்பட்ட கதைகள். சமகால ஊடகப் பயனாளர்களுக்காக
எழுதப்பட்ட கதைகள். எனவே, இப்படியொரு தலைப்பில் இவை வெளி வருவதில் வியப்பேதுமில்லை.
இந்த எழுபத்தி ஏழு கதைகளைப் படித்து முடித்து சில மணி நேரங்களுக்குப்
பிறகு எத்தனை கதைகள் நினைவில் நிற்கின்றன என்று யோசித்துப் பார்க்கலாம். மின்னல் தெறிப்புகள்
போல சில கதைகள். உத்தேசமான வெளிச்சம்போல சில கதைகள். மத்தாப்புப் பொறிகளின் வெளிச்சம்போல
சில கதைகள். இத் தெறிப்புகளும் பொறிகளும் வெளிச்சங்களும் விரைவில் காணாமல் போகின்றன.
ஒளியாக வெளிச்சமாக அவை நீடிப்பதில்லை. நினைவில் தங்குவதில்லை.
நொடி நேரத் திடுக்கிடலை, புன்னகையை, மயக்கத்தை, கிளர்ச்சியை, வியப்பை,
திகைப்பை, சிரிப்பை விரும்பி வாசிப்பவர்களுக்கு இக்கதைகள் அவர்கள் எதிர்பார்க்கும்
அனுபவத்தை நிச்சயமாகத் தரும். ஆனால், முகநூலில் எழுதப்பட்ட இக்கதைகளை சிறுகதைத் தொகுப்பாக
அச்சு ஊடகத்தில் வாசிக்கும்போது அவ்வாறான நொடிநேர அனுபவம் மட்டும் போதுமானதாயில்லை.
இலக்கிய வடிவங்கள் காலத்துக்கேற்ப, ஊடகங்களுக்கு ஏற்ப மாறலாம். ஆனால்,
இலக்கியத்தின் நோக்கம் மாறாதது. இலக்கியத்தின் பணி, நொடி நேர உணர்வுகளை ஏற்படுத்துவதல்ல.
நின்றெரியும் சுடரைப் போல ஒளி தருவது.
இத்தொகுப்பிலுள்ள ‘தொலைவின் ஒளி’, ‘நெஞ்சின் எலும்புகள்’, ‘பங்கு’,
‘புண்ணிய கரை’ போன்ற கதைகள் தருகின்ற ஒளியையும் வெளிச்சத்தையும் பிற கதைகள் தருவதில்லை.
போகனால் இத்தகைய கதைகளை எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இவை. இதற்கு முந்தைய தொகுப்புகளிலும்
இதுபோன்ற கதைகளை எழுதியுள்ளார். ஆனால், நின்றெரியும் சுடரைவிட மத்தாப்பு பொறிகளே போதும்
என்ற சமகால ஊடகத் தேவையை மட்டும் கருத்தில்கொண்டதன் விளைவுதான் இக்கதைகள்.
0
சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல் – போகன் சங்கர்
வெளியீடு – யாவரும் பதிப்பகம்
டிசம்பர் 2025, பக்கங்கள் 202, விலை ரூ.260.
( 09.05.2026 கோவையில் Critical Revolutionaries அமைப்பு ஏற்பாடு செய்திருந்த
நூல் அறிமுக விழாவில் ஆற்றிய உரை )

No comments:
Post a Comment