சாயங்காலம்
0
சந்திரா தங்கராஜ்
0
பால்கனியில் அமர்ந்திருக்கிறேன்
உள்ளே நுழையலாமா வேண்டாமா எனத் தயங்கியபடி
முல்லைக்கொடியின் ஓரத்தில் நிற்கிறது சாயங்காலம்
வெகு நேரமாக நின்று கொண்டே இருக்கிறது
சாயங்காலத்தின் பாஷை அறியாத நான்
அதை உள்ளே கூப்பிட வழியின்றி
வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க
சரசரவென சாயங்காலத்தை விழுங்கி
வெளியை வியாபிக்கிறது இரவு.
0
வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் என்ன செய்வதென்று தெரியாமலே நாம்
விரும்பிய, நினைத்த செயல்களை செய்ய முடியாமல் போய்விடுவதுண்டு. இந்த குறுகிய நேர தடுமாற்றத்தினால்,
இயலாமையினால் ஏற்பட்ட இழப்புகள் நெடுங்காலம் மனத்துள் ஆறா வடுக்களாக எஞ்சி விடுகின்றன.
செய்த தவறை உணர்ந்து அதனால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க நினைத்திருப்போம்.
ஆனால், கணநேரத் தயக்கம் நம்மைத் தடுத்திருக்கும். அதற்குள் அந்த நபர் விலகிப் போயிருப்பார்.
அல்லது மறுமுறை அவரை சந்திக்கும்போது மன்னிப்புக் கேட்பதற்கான மனநிலை நம்மிடம் இல்லாமல்
போயிருக்கும். மனத்துக்குப் பிடித்தப் பெண்ணிடம் நம் எண்ணத்தைச் சொல்ல குறிப்பிட்ட
நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தயாராகி, ஒத்திகை பார்த்துக் காத்திருப்போம். சந்தர்ப்பவசமாய்
அந்த நேரத்தில் நம் தைரியம் நம்மை கைவிட்டிருக்கும். அல்லது நினைத்ததைப் பேசாமல் வேறு
எதையாவது அபத்தமாய் உளறி அசடு வழிந்திருப்போம். சொல்லாத அந்த எண்ணம் அப்படியே புதைந்துபோகும்.
‘யோகம் ஒருமுறைதான் கதவைத் தட்டும், அதை கைகொள்ளாவிட்டால் மறுமுறை
என்று ஒன்று வாய்க்காது’ என்பதை பள்ளி நாட்களிலிருந்து பலமுறை பலபேர் சொல்லிக் கேட்டிருப்போம்.
கதவைத் தட்டி நிற்பது யோகம்தான் என்பது தெரிந்தால் நாம் ஏன் கதவைத் திறக்காமல் நிற்கப்
போகிறோம்? அது தெரியாமல் போகிறது என்பதுதானே துக்கம். யோகத்துக்கு மட்டும் அதென்ன ஒரு
முறை என்று கணக்கு? இன்னொரு முறை தட்டினால் என்ன குறைந்தா போய்விடும் என்று புலம்பும்போது
கேட்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். பிழைக்கத் தெரியாத பயல் என்று இலவச பட்டம் வேறு
கிடைக்கும்.
இந்த யோகம் சாயங்கால ரூபத்தில் சந்திரா பால்கனியில் உட்கார்ந்திருக்கும்போது
முல்லைக் கொடியின் ஓரத்தில் வந்து நிற்கிறது. பாவம், சந்திராவுக்கு அதன் பாஷை தெரியவில்லை.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு எதிரில் இருப்பவர்களின் பாஷை தெரிந்தாலும், அந்த
கணத்தில் சொல்ல வேண்டிய சொற்களை நம்மால் சொல்ல முடியாது போகும். அதுவும் சாயங்காலம்
போன்ற மொழியைக் கடந்தவொன்றுக்கு முன்னால் நிலைமை இன்னும் சிக்கலாகும். உள்ளே வரலாமா
வேண்டாமா என்ற தயக்கத்தில், குழப்பத்தில் நிற்க அதன் பாஷை தெரிந்த இன்னொன்று வந்து
அள்ளிக் கொண்டு போய்விடும். இருள் அப்படித்தான் சாயங்காலத்தை அழைத்துக் கொண்டு போய்விடுகிறது.
சரியான சந்தர்ப்பத்தில் சரியான முடிவை சரியான விதத்தில் எடுக்கும்போதுதான்
அனைத்தும் கைகூடி வருகிறது. இதில் ஏதேனுமொன்று சரியாக அமையாது போகும்போது ஒட்டுமொத்தமாய்
அனைத்தும் கைவிட்டுப் போகிறது. முல்லைக் கொடியருகில் காத்து நின்ற சாயங்காலத்தை வீட்டுக்குள்
வரவழைக்க முடியாமல் போய் இருட்டுக்கு அதைத் தாரை வார்க்க நேர்வதுபோல.
இப்படி எல்லா நேரங்களிலும் நடந்துவிடுவதில்லை. முடிவெடுக்க முடியாத
சந்தர்ப்பங்கள் பலவகையில் உண்டு. நல்ல இரண்டு வாய்ப்புகள் நமக்கெதிரில் உள்ள போது இதுவா
அதுவா என்று தெரிவு செய்ய முடியாத நிலை, அடுத்தது நமக்கு என்ன வேண்டும் என்பதே உறுதியாகத்
தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் நிலை, முந்தைய கசப்பான அனுபவங்களின் காரணமாக
மீண்டும் ஒரு அடியைத் தாங்க முடியாதென்கிற அச்சம் மேலோங்கியிருக்கும் நிலை என்று நாம்
பலவீனமாகத் தவிக்கும் கணங்கள் அவை. இவ்வாறான பலவீனங்கள் எதுவும் இல்லாமல் நாம் நம்மை
மறந்து ஏதேனுமொன்றில் ஆழ்ந்து ஒன்றிப்போய், கிறங்கிப்போய் நிற்கும் சமயங்களிலும் இவ்வாறு
நாம் தீர்மானிக்க முடியாமல் போவதும் நடக்கும். இந்தக் கவிதை சொல்லிக்கு அன்றைய மாலைப்
பொழுதில் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது.
அந்திப் பொழுதில் பால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்க வாய்ப்பதே
அபூர்வம். அப்படியொரு கணத்தில் நம் எண்ணங்கள் பின்னகர்ந்து இயற்கையின் அழகில், லயத்தில்
நம்மை மறந்திருப்போம். அலைகளற்ற ஆழ்கடலாய் மனம் அமைதியில் நிறைந்திருக்கும். அந்த நேரம்
பார்த்து முல்லைக் கொடியோரம் தயங்கி நிற்கிறது சாயங்காலம். அப்போதைய நிலையில் அந்த
நேரத்தில் இயற்கையின் ஒரு பகுதியாகவே நம்மால் அந்த சாயங்காலத்தைப் பார்க்க முடியும்.
உள்ளே வரத் தயங்கி அது காத்திருக்கிறது என்பதை அறியாமலே வேடிக்கை பார்த்திருப்போம்.
நம் சொல்லுக்காக அது காத்திருப்பதும் அதன் உத்தேசம் அறியாமல் நாமும் வேடிக்கை பார்த்திருப்பதும்
வெகு நேரத்துக்குத் தாக்குப் பிடிக்காது. இருட்டுக்கு இப்படிப்பட்ட குழப்பம் எதுவுமில்லை.
நொடிப்பொழுதில் அள்ளி விழுங்கி விடுகிறது.
இந்தக் கவிதையில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சி மிக எளிமையானது. சாதாரணமானது.
அனைவருக்கும் வாய்க்கும் ஒன்றுதான். ஆனால், எளிய சாதாரணமான காட்சி ஒரு சம்பவமாக மாறுகிறது.
சாயங்காலம் ஒரு கதாபாத்திரம். கவிதை சொல்லி இன்னொரு கதாபாத்திரம். இருவருக்குள்ளும்
பார்வை பரிமாற்றம் மட்டுமே. இந்த மௌன நாடகம் முடிவுறுவதற்குள் இன்னொரு கதாபாத்திரம்
நொடிப்பொழுது தோன்றி மறைகிறது. சாயங்காலத்தை அள்ளிக்கொண்டு மறையும் இருட்டுதான் அந்த
மூன்றாவது கதாபாத்திரம். அதன் பின் சம்பவம் முடிந்து காட்சியும் முடிவுறுகிறது. கவிதையும்.

No comments:
Post a Comment