Thursday, 19 February 2026

கம்பன் – கவியும் கருத்தும். பி.ஜி.கருத்திருமன்


தமிழ் இலக்கிய வரலாற்றில் இணையில்லாத ஒரு இடத்தைப் பெற்ற காவியம் ‘கம்ப இராமாயணம்’. இரண்டாம் நூற்றாண்டில் அரங்கேறியதாக அறியப்படும் இந்நூல் தமிழர் வாழ்வில் தனித்தகுதி பெற்றது. அது அடைந்துள்ள சிறப்பானத் தகுதிக்கானக் காரணம், அந்நூல் வகுத்துக் கொடுத்துள்ள வாழ்வியல் நெறிகளேயாகும். ஒரு லட்சிய மனிதனை முன்னிறுத்தி குடும்பம், அரசியல், பொருளாதாரம் என்று எல்லா அம்சங்களையும் வரையறுத்துத் தந்துள்ளது. எழுதப்பட்டக் காலத்திலிருந்து இன்று வரை பல துறை வல்லுநர்களாலும் பல்வேறு கோணங்களில் பகுத்தாயப்பட்டுவீட்டபோதும் அதன் ஊற்று இன்னும் வற்றாது சுரக்கிறது.

இராமாயணம் பற்றிய தொடர்ச்சியான புத்தகங்களும் ஆராய்ச்சிகளும் பட்டிமன்ற விவாதங்களும் நம்மை இராமாயணப் பரிச்சயமுள்ளவர்களாய் ஆக்கினபோதும்கூட அதன் வாசிப்பனுபவத்தை எளிதில் அடைந்துவிட முடியாது. கம்ப இராமாயணத்தின் அளவு நமக்கு பெரும் தடையாக இருக்கிறது. கண்களையும் கவனத்தையும் தொலைகாட்சியிடம் பறிகொடுத்துவிட்டுத் தடுமாறுகிற நமக்கு, பத்தாயிரம் பாடல்களைப் படித்து ரசிக்க அவகாசமோ பொறுமையோ இல்லை. கம்பனின் பாத்திரங்களைக் குறித்த வாசகக் கற்பனைக்கு இன்று சிறிதளவும் இடம் கிடையாது. இராமன் என்றவுடன் அருண்கோவிலின் உருவமும், சீதை என்றதும் தீபிகாவின் உருவமும்தான் வாசகனை ஆக்கிரமிக்கின்றன. அசோக வனத்து சீதைக்கு அனுமான் தொலைக்காட்சித் திரை அனுமதிக்குமளவுதான் விஸ்வரூபம் காட்டுகிறான்.

மேலும் இது ‘சாஷே’க்களின் காலம். எல்லாமே தயார்நிலையில் நமக்குத் தேவைப்படுகிறது. வாசக குணாம்சங்களை பெருமளவில் நாம் இழந்துவிட்டோம். இப்படியொரு நிலையில் கம்பராமாயண நூல் தொட முடியாத விஸ்வரூபத்துடன் அலமாரியில் நிற்கிறது. தமிழர்களுக்கு இப்படியொரு துரதிர்ஷ்டம் வாய்க்குமென்பதை 1963ஆம் ஆண்டிலேயே பி.ஜி.கருத்திருமன் அவதானித்திருக்கிறார். அதன் விளைவே ‘கம்பன் – கவியும் கருத்தும்’ என்ற நூல்.

இந்நூலில் கம்பனின் பத்தாயிரம் பாடல்களிலிருந்து 935 பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப் பட்டுள்ளன. கதையை மட்டும் கவனத்தில் கொண்டு பாடல்களை தெரிவு செய்யும்போது காவியச் சிறப்புகள் சிதைந்துவிடும். கம்பராமாயணத்தின் வலிமையும் பெருமையும் கம்பனின் கவிதையும் கற்பனையும்தான். தொகுக்கப்படும் பாடல்கள் வாசகர்களுக்கு கம்பனின் ஆளுமையையும் உணர்த்தவேண்டும். இதையெல்லாம் மிக நேர்த்தியாகச் சிந்தித்து இந்நூலைத் தொகுத்துள்ளார் பி.ஜி.கருத்திருமன். இன்றும் தமிழின் சிறந்த கவிதைகளாக இருக்கிற கம்பனின் சிறந்த பாடல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் கம்ப ராமாயணத்தின் கதாபாத்திரங்களும் விடுபட்டுவிடாமல் பாடல்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்நூலின் சிறப்புக்கு இதன் வடிவமைப்பும் முக்கிய காரணமாகும். கம்பனின் பாடல்கள் நூலின் வலதுபுறத்தில் அச்சிடப்பட்டுள்ளன. அவற்றுக்கான கருத்துரை, விளக்கவுரை, அரும்பதவுரை ஆகியன பாடலுக்கு நேராக நூலின் இடதுபுறத்தில் தரப்பட்டுள்ளன. ‘கதை ஆர்வம்’ மட்டும் உள்ளவர்கள் நூலின் இடதுபுறத்தைப் படித்தால் போதும். தேவையான இடங்களில் பிற காவியங்களிலிருந்து பொருத்தமான மேற்கோள்களும் (பெரும்பாலும் திருக்குறள்) எடுத்தாளப்பட்டுள்ளன. இலக்கணக் குறிப்புகளும் உண்டு. இதெல்லாம் போதாது என்று, நூலின் தொடக்கத்தில், ‘கம்பர்-ஓர் அறிமுகம்’ என்ற 80 பக்கக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. கம்பனின் காலம் தொடங்கி அவரது பாத்திரப் படைப்பு, தத்துவம், உவமை நயங்கள், பிறமொழி இலக்கியங்களும் இராமாயணமும் என்று பல தளங்களில் கம்பனை நமக்கு அறிமுகம் செய்கிறார். கம்பனின் இராவணனும் மில்டனின் சாத்தானும் ஒரே கதாபாத்திரங்கள் என்கிறார். ஷேக்ஸ்பியர், மில்டன், பைரன் என்று மேற்கத்திய கவிஞர்கள் பலரும் கம்பருடன் ஒப்பாயப்பட்டுள்ளனர்.

இந்நூலின் ஆசிரியர் பி.ஜி.கருத்திருமன் ‘கோவைக் கம்பன்’ என்று பெயர் பெற்றவர். அடிப்படையில் விவசாயியாக இருந்த இவரை காந்தியடிகளின் கிராம ராஜ்ய கருத்துகள் சத்தியாகிரக இயக்கத்துக்கு இழுத்து வந்தன. இந்திய அரசியலில் இருபது ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து செயல்பட்டபோதும் கம்பனைக் கற்பதில் தளராது இருந்தவ. காந்தியின் கனவைக் கம்பராமாயணத்தில் கண்ட அவர் அந்நூலை விரிவான அளவில் மக்கள் படித்து உணரவேண்டும் என்கிற தீர்மானத்துடன் இந்நூலை எழுதினார்.

‘இந்நிலவுல மக்கள் எல்லோரும் அவரைப் போற்றவேண்டும். இக்காவியப் பண்புகளை, நெறிகளை எல்லோரும் உணர்ந்து கடைப்பிடித்தல் வேண்டும். சுவர்க்கம் என்று சொல்லப்படுவதில் அடைகிற பேரின்பத்திற்கு நிகரான பேரின்பத்தைக் கம்பர் கவிச்சுவையால் இங்கேயே எல்லோரும் அடைய வேண்டும்’ என்று தமது நோக்கத்தைக் குறிப்பிடுகிறார்.

‘சிறிய படகில் ஏறிக்கொண்டு பெருங்கடலில் திசை தெரியாமல் பிரயாணம் செய்யும்படியான தன்மையை ஒத்ததுதான் என் முயற்சி. கம்பன் மொழியில் சொல்லவேண்டுமானால் நான் இதற்குக் கருத்துரை வழங்குவதென்பது ஊமையன் பகற்கனவு காண்பது போன்றதே ஆகும்’ என்று அவர் குறிப்பிட்டபோதும்கூட, பத்தாயிரம் பாடல்களைக் கற்றுத் தேர்ந்து அவற்றைத் தொகுப்பதென்பது சாதாரணமான காரியமல்ல, தளராத உழைப்பும் அக்கறையும் தேவை.

1963இல் வெளிவந்த இந்நூலுக்கு இராஜாஜி, காமராஜர், சர் பி.சி.ராமசாமி ஐயர் போன்றவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளனர்.

‘தமிழ் புத்தகாலயம்’ இந்நூலை வெளியிட்டிருக்கிறது. கண.முத்தையா தமது பதிப்பாளர் உரையில் ‘எங்கள் நிறுவனத்தின் 17 வருட வரலாற்றில் இந்நூல் வெளியீடு ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். 1949ஆம் ஆண்டு பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் நூல்களை நாங்கள் வெளியிடத் தொடங்கியதற்குப் பிறகு ஏற்பட்ட இரண்டவது முக்கிய நிகழ்ச்சி இது’ என்று பெருமைகொள்கிறார். 1992இல் இதன் நான்காம் பதிப்பு வெளிவந்துள்ளது.

இந்நூல் வெளியீட்டில் முக்கிய பங்காற்றியமைக்காக கு.அழகிரிசாமி நன்றியுடன் நினைக்கப்பட்டிருக்கிறார்.

0

கம்பன் – கவியும் கருத்தும், பி.ஜி.கருத்திருமன்

தமிழ்ப் புத்தகாலயம் வெளியீடு

பக் 624 – விலை ரூ.125. ( 1992 )

( காலச்சுவடு ஏப்ரல் 1997இல் வெளியானது இக்கட்டுரை. இந்த நூல் வர்த்தமானன் பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டிருப்பதாய் தெரிகிறது. 

Internet Archive இல் இதை வாசிக்க முடியும்.

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl7kuMy/mode/2up )

No comments:

Post a Comment

இந்திய இலக்கியம்

பொதுவாக குறிப்பிட்ட ஒரு நாட்டின் இலக்கியம் என்றால் அது அந்த நாட்டின் மொழியில் எழுதப்பட்டதாக இருக்கும். ரஷ்ய இலக்கியம் என்றால் ரஷ்ய மொழியில...