சாஸ்தா பேக்கரி
முகுந்த் நாகராஜன்
0
சாஸ்தா பேக்கரி
ராதா நகர் மெயின் ரோடில் இருந்தது.
நான் சிறுவனாக இருந்தபோது
வேட்டி கட்டிக்கொண்டு
சந்தனம் இட்டுக்கொண்டு
குள்ளமாக இருப்பார் நாயர்.
‘ஹாப் பிரெட்’ வாங்கப் போனால்
‘என்னடா.. ஜுரமா?’ என்று விசாரிப்பார்
கண்ணாடி ஜாடிகளின்
குமிழ் மூடியில் சுற்றும்
குட்டி மின்விசிறியை
வேடிக்கை பார்த்தால்
பரண் மேல் இருக்கும்
பெரிய டின்களில்ள போட்டு
அடைத்துவிடுவதாக மிரட்டுவார்
கிள்ளிவிடுவார்
ஒருமுறை பன் பட்டர் ஜாம் வாங்கிவிட்டு
காசு குறைந்தபோது
‘அடுத்தவாட்டி கொடுத்துடணும்’ என்று
ஜாம் தடவிய கத்தியை எடுத்துக் காட்டினார்
அந்தக் கடை இப்போது இல்லை
பாரதிபுரத்தில் இருக்கும் டீக்கடையில்
அவரைப் பார்த்தேன் சமீபத்தில்
வெளியே நின்று வடை போட்டுக்கொண்டிருந்தார்
‘உங்க பொண்ணா?’ என்று கேட்டு
குழந்தையின் கன்னத்தைக் கிள்ளினார்.
வடையை வாங்கிகொண்டு
காசை நீட்டியபோது
‘அங்க கொடுங்க..’ என்று
கல்லாவைக் காட்டினார்.
0
குழந்தைகளின், சிறுவர்
சிறுமிகளின் உலகத்தை கவிதைக்குள் கொண்டு வருவது அத்தனை எளிதான காரியமல்ல. செறிவான கவிதை
மொழிக்கு மாறானது குழந்தைகளின் எளிய உலகம். உண்மையில் அது மொழியற்றது, பாசாங்கற்றது.
எந்த மொழிக்கும் அப்பாற்பட்டது. சிரமமான இந்த காரியத்தை, அது அத்தனையொன்றும் கஷ்டமில்லை
என்பதுபோல வெகு இயல்பாக, நேர்த்தியாக கவிதைக்குள் கொண்டு வந்து காட்டுபவை முகுந்த நாகராஜனின்
கவிதைகள்.
அடர்த்தியும் அழுத்தமும்
கனமுமான கவிதை வடிவத்துக்குள் குழந்தைகளை இயல்பு மாறாமல் குதூகலத்துடனும் விளையாட்டுத்தனத்துடனும்
காணமுடிவது எத்தனை பெரிய ஆசுவாசம்! அதிகமும் வாசிக்கப்பட்ட, பகிரப்பட்ட அவரது ‘குழந்தைகளின்
ஜன்னல்கள்’ கவிதை இது.
இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் ஸீட்
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்…
இதெல்லாம் ஒரு காரணமா?
‘சாஸ்தா பேக்கரி’ என்கிற இந்தக் கவிதை வாசிக்கும் எல்லோரையும் அவரவர் இளமைக் காலத்துக்கும், அவரவர் ருசித்த பேக்கரிகளுக்கும் இட்டுச் செல்லும்.
திருப்பூரின் புகழ் பெற்ற ‘வீனஸ்’ பேக்கரியைக் குறித்தும் அங்கு கிடைக்கும்
தேங்காய் பன்னைக் குறித்தும் முன்பே என் புனைவுகளில் எழுதியிருக்கிறேன். இப்போது இதை
எழுதும்போதுகூட பெருமாநல்லூர் சாலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்த அந்தக் கடையும்,
வெள்ளை முழுக்கைச் சட்டையை முழங்கைவரை மடித்தபடி பொட்டலம் கட்டித் தரும் அந்த மலையாளத்துக்கார
ஓனரும், வாசலில் வாலை ஆட்டியபடி நிற்கும் கொழுத்த நாயையும் நினைவில் காண முடிகிறது.
பேக்கரிக்கும் மலையாளக் கரைக்கும் அப்படியென்ன பந்தம் என்று தெரியவில்லை. அக்காலத்திய திருப்பூரின் பிரபல பேக்கரிகளான ‘வீனஸ்’, ‘நீலகிரி’ பேக்கரிகளின் உரிமையாளர்கள் மலையாளிகளே. ‘வீனஸ்’ பேக்கரி வெகு காலத்துக்கு முன்பே இல்லாமல் போனது. தேங்காய் பன்னுக்கு பிரபலமான ‘நீலகிரி’ பேக்கரி புஷ்பா தியேட்டர் முனையில் அவிநாசி சாலையில் இன்றும் இருக்கிறது. அங்கு கிடைக்கும் தேங்காய் பன்னுக்கு இணையான ஒன்றை வேறெங்கும் நான் ருசித்ததில்லை. அந்தக் கடையின் முதலாளி மகன் ஆனந்த் பள்ளி இறுதி ஆண்டுகளில் என் வகுப்புத் தோழன். பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதி நாட்களில் வகுப்பளவில் ஏற்பாடு செய்யப்படும் விருந்தின்போது நீலகிரி பேக்கரியின் தேங்காய் பன்னும் உருளைக்கிழங்கு சிப்சும் வழங்கப்பட்டன. எப்போதும் ஷாம்பு போட்டு குளித்த தலைமயிர் நெற்றியில் புரள அடங்கிய குரலில் பேசும் ஆனந்த் இப்போது என்ன செய்கிறான் என்று தெரியவில்லை.
குமரன் சாலையில் பூ மார்க்கெட்டும் பெருமாள் கோயிலும் சந்திக்கும் முனையில் இருந்த பேக்கரியின் வாரிசான வினோத் பன்னிரெண்டு டி யில் படித்தான். பள்ளியின் துணை முதல்வரும், பொருளாதார வகுப்பெடுக்கும் பீட்டர் சார் அவனை விளிப்பது இப்போது காதில் ஒலிக்கிறது ‘ஏம்பா, ரொட்டிக்கட வினோத்து, இங்க வா.’ அந்த ரொட்டிக்கடையும் இன்னும் அதே இடத்தில் உள்ளது. வினோத் என்ன செய்கிறான் என்பது தெரியவில்லை. பன்னிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு தொடர்பு விட்டுப்போயிற்று.
திருப்பூரின் தொழில் வளம் பெருகியபோது அத்துடன் இணைந்து பேக்கரிகளின் எண்ணிக்கையும் பெருகின. இரவும் பகலுமாய் உழைக்கும் தொழிலாளிகளின் தேநீர் தேவையை தீர்த்து வைத்ததுடன் தொடர்ந்து உழைத்த கைகளுக்கு ஓய்வையும் ஆசுவாசத்தையும் அளித்தன அவை. ஒவ்வொரு பகுதியிலும் விடிய விடிய பாய்லரில் நீரும், பாத்திரத்திலும் பாலும் காய்ந்துகொண்டிருந்த பேக்கரிகள் உண்டு. பிற பேக்கரிகளிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட புதுவிதமான தின்பண்டங்களையும் ருசிகளையும் அறிமுகப்படுத்தும் காரியங்கள் மேற்கொள்ளப்பட்டன. தேநீரில் அரைத் தேக்கரண்டி ‘பூஸ்ட்’ தூளைத் தூவி சுவை சேர்த்து அனைவரையும் வியக்கச் செய்தது லட்சுமி நகர் அருகே இருந்த மல்லிகா பேக்கரி. நகர மண்டபத்துக்கு எதிரில் நஞ்சப்பா பள்ளிக்கு போகும் சாலையில் கீழ்த்தளத்தில் இருந்த சுரேஷ் பேக்கரியில் பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு, அப்பள பஜ்ஜிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
எல்லா ஊர்களிலும் சாலைகளிலும் காண முடிந்த ‘முனியாண்டி விலாஸ்’கள் திடீரென்று காணாமல் போனது போலவே பாரம்பரியமான இத்தகைய ‘ரொட்டி’க்கடைகள் காணாமல் போய் அவற்றினிடத்தில் ‘ஐயங்கார் பேக்கரி’களும் ‘ஐஸ்வர்யா’பேக்கரிகளும் எழுந்தன. ஒரேபோல தோற்றத்துடன், மேசை நாற்காலிகளுடன், முகப்பு அலங்காரத்துடன் அமைந்திருந்தன அந்த பேக்கரிகள். உழைக்கவும் தொழில் செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் இடத்தை மட்டும் கண்டுபிடித்து தெரிவு செய்தால், கடைக்குத் தேவையான பிற அனைத்தையும் ‘பைனான்ஸ்’ முறையில் முதலீடு செய்து தரும் உத்திகள் பெருகின. இதற்கு ஈடாக தினம் ஒரு தொகையை முதலீடு செய்பவருக்குச் செலுத்தவேண்டும். கடையைத் திறந்தாலும் திறக்காவிட்டாலும், வியாபாரம் நடந்தாலும் நடக்காது போனாலும் தினசரி தொகையைச் செலுத்தியாக வேண்டும். தொகையை செலுத்த முடியாதபோது கடை கைமாறிவிடும்.
பேக்கரிகள் நடத்துவதில் பெரும் சவால் சரியான டீ மாஸ்டரையும் சரக்கு மாஸ்டரையும் கண்டுபிடிப்பது. அப்படிக் கண்டுபிடித்த மாஸ்டர்களை எப்பாடுபட்டாவது தக்கவைத்துக் கொள்வது. ருசியான தேநீரை சரியான சூட்டில் தரும் டீ மாஸ்டர்களை தேநீர் ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அதேபோல எண்ணெய்ச் சட்டியின் முன்னால் நின்று சிரித்துப் பேசியபடியே போண்டா, பஜ்ஜிகளை பதமாய் சுட்டெடுத்துப் போடும் சரக்கு மாஸ்டர்களும் வியாபாரத்துக்கு முக்கியம். இந்த இருவரையும் பக்குவமாக கையாளவேண்டும். அவர்கள் போக்குக்கு அனுசரித்துப் போக வேண்டும். கேட்கும்போது கேள்வி எதுவும் எழுப்பாமல் ‘அட்வான்ஸ்’ தரவேண்டும். சம்பளத்தைக் கூட்டித் தரவேண்டும். லீவு கேட்டால் முகம் சுளிக்கக்கூடாது. இவற்றையெல்லாம் மீறி, எந்த நேரத்தில் இவர்கள் இருவருக்குமோ அல்லது யாரேனும் ஒருவருக்கோ, ‘தான் இல்லாவிட்டால் இந்தக் கடை இல்லை’ என்ற எண்ணம் தலைதூக்குகிறதோ, அத்துடன் முடிந்தது சோலி.
பேக்கரி முதலாளிகள் எல்லா நேரத்திலும் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து காசை எண்ணிக்கொண்டிருக்க முடியாது. ‘மாஸ்டர்’கள் இல்லாத சமயங்களில் டீ போடவும் போண்டா பஜ்ஜிகளை சுடவும் தெரிந்திருக்க வேண்டும். ‘அரைச் சக்கர’, ‘வித்வுட்டு’, ‘கண்ணாடி கிளாஸ்’, ‘அட்டை தம்ளர்’, ‘ப்ளாக்’, ‘பால் டீ’ என்று விதவிதமான தேவைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும். கடையை முடிந்த வரை சுத்தமாக பராமரிப்பதும் சுறுசுறுப்புக்கு குறையாமலும் வைத்திருப்பது அவசியம். இதெல்லாவற்றையும்விட குறைந்தபட்சம் தினசரி வசூல் தொகையளவுக்கேனும் வியாபாரம் நடப்பதை உறுதிப்படுத்தினால்தான் தலை தப்பும்.
டீத் தூளும் பாலும் பேக்கரி ஐட்டங்களும் மாதக் கடனுக்குக் கிடைக்கும் என்றாலும் அதுவும் தீர்க்கவேண்டிய கடன்தான். இதுபோக கடைக்கான வாடகை, ஊழியர்களுக்கான சம்பளம், எரிபொருள் உள்ளிட்ட மாதாந்திர செலவுகளையும் சமாளிக்கவேண்டும். இவற்றையெல்லாம் சமாளித்துக் கொடுத்த பிறகுதான் தனக்கான சம்பளத்தைக் கணக்கிலெடுக்க முடியும். இத்தனைக்கும் பிறகுதான் இலாபம் என்பதைத் தேடவேண்டும்.
தெருவுக்கு பத்து பேக்கரிகள் முளைத்திருக்கும் இடத்தில் ஆரம்ப ஜோரில் களைகட்டும் கடைகள் ஒருசில மாதங்களிலேயே காத்தாடும்போது கல்லாப்பெட்டியில் காசு எண்ணும் முதலாளியின் கதி என்னவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அப்படி காசு எண்ணிக்கொண்டிருந்த முதலாளிதான் வேறொரு இடத்தில் எண்ணெய்ச் சட்டியின் முன்னால் நின்று பஜ்ஜி சுட்டுக் கொண்டிருப்பார். வெதுவெதுப்பான சுடுநீரில் தம்ளர்களை அலசி வரிசையில் அடுக்கி டீ போட்டு நிறைப்பார். கிரகநிலை படுமோசமாக இருந்தால் மேசைகளிலிருந்து எச்சில் தம்ளர்களைப் பொறுக்கிப் போட்டு கழுவிக் கொண்டிருப்பார்.
அவ்வாறு வேறு பேக்கரிகளில் வேலை செய்துகொண்டிருக்கும் பழைய ‘முதலாளி’கள், நம்மைக் காண நேரும்போது பல சமயங்களில் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடுவார்கள். அடையாளம் தெரிந்து முகம் பார்த்துப் பேச முனைந்தாலும் ஆர்வம் காட்டாமல் தலையைக் குனிந்தபடி தவிர்ப்பார்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் நாம் செய்ய வேண்டிய சிறிய உதவி அவர்களது தவிர்ப்பை, தவிப்பைப் புரிந்துகொண்டு தொந்தரவு செய்யாமல் விடுவதுதான்.
நல்லவேளையாக முகுந்த் நாகராஜன் சந்திக்கும் ‘பழைய’ முதலாளி, குழந்தைகளிடம் பிரியத்தைக் காட்டிய முந்தைய காலத்தைப் போலவே, வடை சுட்டுக் கொண்டிருக்கும் வறிய நிலையில் இன்றும் குழந்தைகளிடம் மாறாத அன்பைக் காட்டுபவராக இருக்கிறார். வியாபார நசிவு அவரை வெறுமனே இடம் மாறி நிற்கத்தான் செய்திருக்கிறது. உள்ளுக்குள் அவர் அப்படியேதான் இருக்கிறார். இது அவரது பேரதிர்ஷடம்.
இத்தகைய சரிவுக்குப் பிறகு இவர்களைப் போன்ற ‘பழைய’ முதலாளிகள், எல்லா
நேரங்களிலும் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு ‘அங்க குடுங்க’ என்று கல்லாப்பெட்டியை
கைகாட்ட மாட்டார்கள்.
( பிப்ரவரி 2026 ஆவநாழி மென்னிதழில் வெளியானது )

No comments:
Post a Comment