Monday, 1 December 2025

கவிதையும் ஞானமும் 5 - வழிப்பறிச் சம்பவம்



 




உண்பதும் உடுப்பதும் துயில்வதும் எழுவதுமான அன்றாடத்தின் சலிப்புகளுக்கு நடுவே சில விசயங்கள் மட்டும் அலுப்பூட்டாதவை. கவிதைகளிலும் ஒருசில பாடுபொருட்கள் மட்டும் ஒவ்வொரு கவிதையிலும் மெருகிழக்காமல் புதிய அனுபவங்களைத் தர வல்லவை. சூரியோதயத்தைக் குறித்து ஓரிரு வரிகளேனும் எழுதாத கவிஞர்களே இல்லை.  ‘நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி, சூரியனைக் காணோம்’ என்று பசுவய்யாவும், ‘மலை விளிம்பில் சூரியனுக்குப் புராதன மனிதனின் புன்னகை’ என்று சுகுமாரனும், ‘பூமித் தோலில் அழகுத் தேமல்’ என்று பிரமிளும் உதயத்தைக் கண்டிருக்கிறார்கள்.

வெகு நீளமான கிழக்கு கடற்கரையின் வெவ்வேறு கரைகளில் ஒவ்வொரு நாளும் உதயசூரியனைக் காணவேண்டி எண்ணற்றோர் காத்திருக்கின்றனர். வானும் வெளியும் நீரும் ஒன்றுகலந்த கருநீல எல்லையை கிழித்து சாம்பல் வெளிச்சம் கசிவதில் தொடங்குகிறது அந்நாளின் அபூர்வத் தருணம். அடிவானம் முழுதும் மஞ்சள் பூசும். கொஞ்சம் குங்குமச் சிவப்பும் கூடும். மேகத் திட்டுக்களில் தீப்பிடிக்கும். பொன்மகுடத்தின் உச்சி ஒளிர எழுகதிர் தலைகாட்டும். செக்கச் சிவந்ததொரு ஒளிப்புள்ளி காணுந்தோறும் வளர்ந்து வட்டத்தட்டின் விளிம்பாக திரண்டெழும். கடலும் வானும் பித்துற்று பரவச நிறங்களை இறைக்கும். சுடரும் வளைகோடு இருபுறமும் இறங்கிச் சேர்ந்திடும். செவ்வட்டம் முழுமையுற்று சுழலும். ஏந்திய கடலின் கையிலிருந்து வானின் விரிகரங்களுக்கு தாவிய நொடியில் அந்தக் காட்சி முடிவுறும். சூரியோதயம் பார்த்தாயிற்று. உலகு மொத்தமும் அன்றாடத்துக்குத் திரும்பும். மீண்டும் மறுநாள் அதே கரைகளில் வேறு பலரும் அதே காட்சியைக் காணக் காத்திருப்பார்கள்.

காலைப் பொழுதின் அழகையும் மனத்துக்கு தரும் நிறைவையும் வாய்க்காதபோது அது ஏற்படுத்தும் ஏமாற்றத்தையும் கவிதையில் எழுதுவது வழக்கமானதுதான். நம்பிக்கை, மீட்சி, ஏமாற்றம் என்று பல்வேறு உணர்வுகளையும் சுட்டும் படிமமாக அமைந்துவிடுகிறது. ஆனால் அதுவே கண்ணையும் மனத்தையும் கொள்ளைகொள்ளும் இக்காட்சியை ஒரு வழிப்பறிச் சம்பவமாக எழுதிக் காட்டும்போது கவிதையின் சாத்தியங்களைக் குறித்த ‘அட!’ என்ற வியப்பு கூடிவிடுகிறது. 

வழிபறிக்கு வந்தவனின் முகம் தெரியாதபடி இருட்டாக இருக்கும். அல்லது முகத்தை மூடியிருப்பான். அவன் கையிலிருக்கும் அந்தக் கத்திக்கு அத்தனை வலிமை. உயிர்ப் பயம். ஒரு சிறு கீறலும் எட்டிப் பார்க்கும் துளி ரத்தமும் போதும் நம் ஆயுளுக்கும் நடுக்கம் கொடுக்க. அது நடந்துவிடுமோ என்ற பயத்தில் இருப்பவற்றை நடுங்கியபடியே எடுத்துக் கொடுத்துவிடுமோம். ‘காசு போச்சுன்னா பரவால்ல, சம்பாதிச்சுக்கலாம். உசிரு போனா வருமா?’ என்ற எளிய சமாதானமே வழிப்பறிக்காரர்களின் தேவ வாக்கு. 

வழிப்பறியின்போது அந்த நேரத்தில் நம்மிடம் உள்ள அனைத்தையும் இழக்க நேரும். பையிலிருக்கும் பணம், சங்கிலி, மோதிரம், வளையல், தோடு, கடிகாரம் என்று எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அந்த இழப்பை அத்தனை சீக்கிரம் நம்மால் மறந்துவிட முடியாது. 

ஆனால், இந்தக் கவிதையில் ஜெ.ரோஸலின் சித்தரிப்பது போன்ற ஒரு வழிப்பறி நிகழுமானால் நாம் எல்லோருமே நம்மிடம் உள்ளதனைத்தையும் சிறிதும் பயமின்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொடுத்துவிடுவோம். கேள்விப்படுவோர் அனைவரும் தமக்கும் இவ்வாறு நடக்கவேண்டும் என்று விரும்புவார்கள். விரைவில் அது கைகூடவேண்டும் என்று இஷ்டதெய்வங்களை வேண்டுவார்கள். அன்றாடம் அப்படியொரு வழிப்பறி நிகழவேண்டும் என கடற்கரையெங்கும் அதிகாலையில் ஆட்கூட்டம் கூடிவிடும்.

கவிஞர் ஜெ.ரோஸலின் முகநூலில் கவிதைகளை எழுதுபவர். இது அவருடைய உண்மையான பெயரா, கற்பனையா என்பது தெரியாது. ஆனால், தொடர்ந்து அருமையான கவிதைகளை எழுதி வருகிறார். பெயரோ முகமோ தெரியாமலிருப்பதால் நல்ல கவிதைகளை ரசிக்காமல் இருக்க முடியாதல்லவா?

 

ஜெ.ரோஸலின், தான் வழிப்பறிக்கு ஆளான அந்தப் பாதையை நம் எல்லோருக்கும் காட்டட்டும். அந்த வழிப்பறிக்காரன் கேட்பது போல அனைத்தையும் வெளியே எடுத்துக் கொடுத்துவிடுவோம். அப்படியொரு அற்புதத்தை சாத்தியப்படுத்தியதற்காக அனைவரும் அவருக்கு காலத்துக்கும் நன்றியுடையவராக இருப்போம்.

ஆனால், பாவம் அந்த வழிப்பறிக்காரன். அத்தனை வருத்தங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வான் அவன்?

0

ஒரு வழிப்பறி சம்பவம்

 

தூரத்து மலையும் பக்கத்திலிருந்த வயல்வெளியும்

என் இரு கரங்களையும் மடக்கிப்பிடித்துக்கொண்டன.

பின்னர் ஒரு தங்கக் கத்தி வந்தது.

கைப்பிடிக்கு அந்தப்பக்கம் யாருமில்லை

ஆனால் நீலம்.

"உன் வருத்தத்தையெல்லாம் வெளியே எடு.

என்ன பார்க்கிறாய்

சீக்கிரம்..."

0

நன்றி - ஜெ.ரோஸலின்

No comments:

Post a Comment

கவிதையும் ஞானமும் 6 - தனிமையின் அர்த்தம்

  0 திக்கற்றோர்க்கு ---------------------- யாராவது யாருடனாவது இருக்கத்தான் வேண்டும் அப்படித்தான் எலும்பில் எழுதப்பட்டிருக்கிறது...