Thursday 14 November 2019

மரங்கொத்தி




இன்றைய மாலைப்பொழுது அத்தனை அழகு. நீலமும் பொன்னிறமுமான வானம். சருமத்தில் மோதி இளைப்பாற்றிய இளங்காற்று. வீட்டிலிருந்து புறப்படும்போதே அந்த மரங்கொத்தியைக் கண்டேன். அடுத்த வீட்டுத் தோட்டத்தில் ஓங்கி நிற்கும் மருதமரத்தின் பருத்த அடிமரப் புடைப்பின் மேல் தத்தி நின்றபடி கொத்திக் கொண்டிருந்தது. திறவாத மரத்தின் கதவைத் தட்டித் திறப்பது போலிருந்தது அதன் ஓசை. நீண்ட கூரிய அலகுடன் சிலிர்த்தெழுந்த கொண்டையுடன் சொரசொரத்த மரப்பட்டையின் மேல் காலூன்றி நின்றிருந்தது.

மனத்தில் குழப்பங்கள் இல்லை. உன்னைப் பார்க்க முடியுமா பேச முடியுமா என்பது போன்ற தடுமாற்றங்களும் இல்லை. கல்லூரி வாசலிலும் கோயில் முகப்பிலுமாய் காத்திருக்கத் தேவையில்லை. உன் வீட்டில் உன்னை சந்திக்கவிருக்கிறேன். இந்த சந்திப்பு ஒருவகையில் சம்பிரதாயமானது. இருவருக்கும் சங்கடம் தராதது.

ஆசிரியர் காலனிக்குள் நுழையும்போதே கொந்தளித்தது மனம். பழைய நாட்களின் வாசனை. பூப்பந்து மைதானத்தில் விளக்குகள் ஒளிர்ந்து நின்றன. லேசான மழை. வீட்டு வாசலில் நின்று அழைப்பு மணியை அழுத்தினேன். தலையைக் கோதியபடி உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டேன். கதவு திறந்தது. ஆவலுடன் முகம் நிமிர்த்திப் பார்த்தேன்.

வாப்பா. நல்லா இருக்கியா?” உன் அம்மா இரு கதவுகளையும் விரியத் திறந்தாள்.

நாற்காலியில் அமர்ந்த நொடியில் தண்ணீர் சொம்புடன் வெளியே வந்தாய்.
இளம்பச்சை தாவணி. கோடாலி முடிச்சிட்ட கூந்தலில் ஜாதிமல்லிச் சரம். சிறு மேசையில் சொம்பை வைத்துவிட்டு ஒதுங்கி கதவோரமாய் நின்றாய்.

காப்பி சாப்புடுவேல்ல…” அம்மா சமையலறைக்கு நகர்ந்தாள்.

எப்ப வந்தே?” மெல்லிய குரலில் கேட்டாய். பதில்சொல்ல நிமிர்ந்தேன். உன் கண்களைக் கண்டேன்.

காலைலேதான்.” அலைபாய்ந்த கண்களை பார்க்க முடியாமல் பார்வையைத் திருப்பினேன்.

புதன்கிழமை வீடு கிரகபிரவேசம்.” முனைகளில் மஞ்சள் தடவிய அழைப்பிதழை நீட்டினேன். கை நடுங்கியது.

அழைப்பிதழை வாங்கி அலமாரியில் வைத்தாய். கண்கள் என்னிடமிருந்து துளியும் விலகவில்லை. என்னையே உற்றுப் பார்த்திருந்தாய். தண்ணீரை எடுத்து பருகினேன். சட்டையில் கொட்டி நனைத்தது.

வரணுமா வேண்டாமா? ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறே.”

நிமிர்ந்து உன்னைப் பார்த்த நொடியில் அம்மா காபியுடன் வந்தாள். பெருமூச்சுடன் சிரித்தபடியே சொன்னேன் “புதன்கிழமை காலைலே கிரகபிரவேசம். வந்துருங்கம்மா.”

வீடு நல்லா இருக்குன்னு சேகரம்மா சொன்னாங்க. பரவால்லே. நெனச்சதை சாதிச்சுட்டே. அடுத்தது கல்யாணந்தானே?” அழைப்பிதழை எடுத்துப் பிரித்தாள்.

உன் பார்வை இன்னும் என் மீதே நிலைத்திருந்தது. நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதுபோல இமைக்காமல் பார்த்து நின்றாய்.

பதில்சொல்லாமல் காபியை குடித்துவிட்டு எழுந்தேன். அழைப்பு மணி ஒலித்தது. கூடவே ‘காய்வண்டி வந்திருக்கும்மா’ என்று குரல் ஒலிக்கவும் அம்மா எழுந்து வெளியே சென்றாள்.

நான் கிளம்பறேன்.”

அம்மா கேட்டதுக்கு பதில் சொல்லலை” மார்பின் குறுக்கே கைகட்டியபடி கேட்டபோது மீண்டும் உன் கண்களைப் பார்த்தேன். சிலநொடிகள்தான். பனிக் கத்தியின் கூர் நுனியென துளைத்து நின்றது. முன்னெப்போதும் நான் உணராத தொடுகை அது. பொறுக்க முடியாத வெப்பத்துடனும் விடுபட இயலா தண்மையுடனும் கொதித்துத் தழும்பியது.

அதற்கு மேலும் தாளமுடியாமல் எழுந்தேன். தலையை சாய்த்து முகம் பார்த்தாய். “சொல்லிட்டு போ” என்றபோது முற்றிலுமாய் என்னை ஆட்கொண்டிருந்தாய். இனி ஒரு நிமிடம் அங்கிருந்தாலும் எல்லாமே வீணாகிவிடும். தலையைக் குனிந்தபடி வெளியில் வந்தேன். அம்மாவிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றேன். வண்டியை முடுக்கி சாலைக்கு வந்தபோது முகம் மோதிய காற்று என்னை சமன்படுத்தியது. இன்னும் கொஞ்ச நேரம் உன் முன்னால் நின்றிருந்தாலும் நான் நொறுங்கியிருப்பேன். சென்ற வாரம் உன்னை சந்தித்த பின் அடைந்த சமாதானத்தையும் உறுதியையும் இழந்திருப்பேன்.

வேண்டாம் வேண்டாம் என பிதற்றியபடியே வண்டியை முடுக்கினேன்.

0

போன வாரமும் இதே சனிக்கிழமைதான். இரண்டில் ஒன்றை முடிவு செய்யவேண்டி மாலை நேரத்தில் சாரதாம்பாள் கோயில் வாசலில் காத்திருந்தேன். நீயும் அப்படியொரு முடிவுடன்தான் என்னை எதிர்பார்த்திருந்தாய்.

அன்றைக்கு அங்கே நின்றிருந்தபோது இருபத்தியேழு வருடத் தனிமையை முறித்து என் நிறைகுறைகளில் உன்னை நீ பங்கிட்டுக் கொள்வாய் என்ற உத்தரவாதம் எனக்குள் எப்போதும்போல ஒளிர்ந்திருந்தது.

பெங்களுரிலிருந்து கோவைக்கு 400 கிலோமீட்டர். ஓரிரவில் கடந்துவிடும் தொலைவுதான். பேருந்தில் அமர்ந்த மறுகணத்தில் நான் அதற்கும் முன்னால் ஓடத் தொடங்கிவிடுவேன். அதிகாலை இருட்டில் காந்திபுரத்தின் வெறிச்சோடிய சாலையில் இறங்கும்போதே எனக்குள் பதற்றம் கூடிவிடும். அத்தனை தொலைவை அத்தனை நேரம் கடந்து வந்த எனக்கு இதோ என் வீட்டிலிருந்து கோயில் வாசலுக்கு வந்து சேர்வதற்கு வெகு நேரமும் வெகு தூரமும் ஆகிறது.

இரண்டு வருடங்களாக சனிக்கிழமைகளில் உனக்காக இங்கே காத்திருப்பதற்கு சாரதாம்பளே சாட்சி. சிலநாட்களில் பேச வாய்த்ததுண்டு. இன்னும் பலநாட்களில் பார்க்க மட்டுமே முடிந்திருக்கிறது. வராமல்போன நாட்களும் உண்டு. ஒருபோதும் நீ என்னைப் பார்த்து சிரித்ததில்லை. கனிவுடன் ஒரு சொல்லும் பேசியதில்லை. உன்முகம் பார்க்க வாய்த்த அந்த சில நிமிடங்களுக்காகவே எங்கிருந்தோ தவிப்புடன் ஓடி வந்தவன் நான். உன் இறுகிய முகம் என் வருகையைப் புறக்கணிக்கும். அங்கிருப்பதையே கண்டுகொள்ளாமல் கடிவாளமிட்ட நேர்பார்வையுடன் விலகிச் சென்றபின்னும் நின்றிருப்பேன்.

ஞாயிற்றுக்கிழமை இரவில் ஊரிலிருந்து சோர்வுடன் பெங்களூருக்கு திரும்பும்போது எனக்குள் அந்த கேள்வி மீண்டும் எழும். இத்தனைக்குப் பிறகும் இப்படி ஓடி வந்து அவமானப்பட வேண்டுமா? என்னை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டாய். ஒவ்வொரு முறையும் என்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்து போகிறாய். இரவின் ஒளித்துளிகள் கடந்துபோகும் பாதையை வெறித்துப் பார்த்திருக்கும்போது கண்ணீர் முட்டும். மனம் புரண்டெழும். இல்லை, இனி கூடாது. இத்தோடு இதை நிறுத்திக்கொள்ளலாம். எனக்கென்ன வேறு வேலை இல்லையா? ஒவ்வொரு முறையும் வந்துபோக எத்தனை செலவு. அந்த சொற்ப நிமிடங்களுக்காக எத்தனை திட்டமிடல். எத்தனை தவிப்பு. தேவையில்லை. இனி ஒருபோதும் இந்த மடத்தனத்தை தொடரக்கூடாது. ஊருக்கு வருவதைப் பற்றி யோசிக்கவே கூடாதென சொல்லிக்கொள்வேன்.

ஆனால், அடுத்த வெள்ளிக்கிழமை விடியும்போதே நிலையிழந்து நாள் முழுக்க கவனம் குவியாது தடுமாறி அலைகழிந்திருப்பேன். போதையில் நிறைத்துக்கொள்ளவோ ஏதேனும் திரையரங்கில் அடைந்துகொள்ளவோ முயன்றிருப்பேன். எதுவும் பலிக்காது நள்ளிரவில் நகர் நீங்கும் பேருந்தின் கடைசி இருக்கையில் சரியும்போது என் மீது எனக்கே வெறுப்பாயிருக்கும்.

இந்த முறை இப்படியிருக்காது. உன்னிடம் நிச்சயம் ஏதேனும் மாற்றம் இருக்கும். என்னைப் போலவே நீயும் தூக்கமின்றி யோசித்திருப்பாய். என்னைக் குறித்து உனக்கு அக்கறையுண்டு. கவலைகள் உண்டு. மனதின் ஓரத்தில் இன்னமும் நீங்காமல் நின்றிருக்கும் என்னைப் பற்றிய அனுசரணைகளும் கடந்த நாட்களின் நினைவுகளுமாய் ஏதேனும் ரசவாதம் நிகழ்த்தக்கூடுமென பக்தனைப்போல் துதித்தபடி அன்றைய நீள் இரவை கழித்திருந்தேன்.
வழக்கம்போலவே நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் புறப்பட்டேன். எதிரில் செங்கல் வரிசையுடன் நிமிர்ந்திருந்தது கட்டடம். பூச்சுவேலை முடிந்திருக்கவில்லை. உன்னை மனதில் இருத்தி நீயும் நானும் சேர்ந்து வாழ நான் கட்டியிருக்கும் அழகிய கூடு. மார்கழி பனியுதிரும் விடிகாலையில் இந்த வாசலில் நீ கோலமிடும் சித்திரம் ஒன்றை வரைந்திருக்கிறேன். அதை நினைத்து சிரித்தபடிதான் வண்டியை முடுக்கினேன்.
அன்றைய சந்திப்பு ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று. எதிர்பார்த்ததுபோலவே ஒரு மாற்றம். அவ்வாறு அமையும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. கோயிலுக்குள்ளிருந்து வெளியே வந்தவள் நேராக என்னிடம் வந்தாய். முகம்பார்த்து ஒரு முறை சிரித்தாய். பின் பேசத்தொடங்கினாய். பத்து நிமிடங்களுக்கும் குறைவான சந்திப்புதான். நீதான் நிறைய பேசினாய். எதுவுமே சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். என் பதில் எதையும் நீ எதிர்பார்க்கவில்லை. சொல்லவேண்டியதை சொல்லி முடித்ததும் தலையசைத்துவிட்டு நகர்ந்து சென்றாய்.
இதற்கு முன்பு சொன்னதையேதான் திரும்பவும் சொன்னாய். ஆனால் கருணையும் கனிவுமான பார்வையுடன் அதை நீ சொன்னபோது எனக்கு வலிக்கவில்லை. மறுத்துப் பேச இயலவில்லை. ஒருவித நிறைவு. மனம் லேசாகியிருந்தது. இப்படியொரு கனிவை உன் கண்களில் கண்டு எத்தனை நாட்களாயிற்று.
0
ஆசிரியர் காலனியில் ராஜசேகரின் வீடும் உன் வீடும் அருகருகே. கார்த்திகை தீபங்கள் ஒளிர்ந்திருந்த ஒரு புதன்கிழமை மாலை வேளை அது. ராஜசேகர் வீட்டில் இல்லை. காவி அரைவேட்டியுடன் கட்டிலில் அப்பா ஒருக்களித்துப் படுத்திருந்தார். ஷிப்டிலிருந்து மதியம்தான் திரும்பியிருக்கவேண்டும். மலையாள மனோரமாவை புரட்டிக்கொண்டிருந்த அம்மா “வரு மோனே. சாயா எடுக்கட்டா…” என்றபடி எழுந்து உள்ளே போனாள். தேங்காய் எண்ணெயின் மணத்துடனான நேந்திர சிப்ஸ்களை கொறித்தபடியே கணித குறிப்பேட்டில் முக்கோணமொன்றை கவனத்துடன் வரைந்துகொண்டிருந்தேன்.

அழைப்பு மணியொலித்தது. கதவு திறந்துதான் இருந்தது. அம்மா குரலெழுப்பினாள் “யாரு?”

கதவைத் திறந்து தயக்கத்துடன் எட்டிப் பார்த்தாய் நீ. கதவின் இடைவெளியில் முகத்தை மட்டும் நீட்டி நின்றாய்.

ராஜா இல்லையா” தயக்கத்துடன் கேட்டபடி நின்ற உன் பார்வை என்னை ஒருமுறை தொட்டு மீண்டது. அப்போது உன்னை யாரென்றே எனக்குத் தெரியாது. ஆனால் உன் முகமும் குரலும் என் கவனத்தை சிதறடித்தன.

யாரு சித்ராவா உள்ள வாம்மா” அம்மா எழுந்து கதவருகே நகர்ந்தாள்.

அந்த ஒரு சொல் மட்டும் செவியில் அதிர்ந்து நின்றது. நிமிர்ந்து பார்த்தேன். சட்டென உன் பார்வையைத் திருப்பினாய். அறையினுள் பதுங்கியிருந்த அந்திப்பொழுதின் மந்தகாசம் ஒருகணம் விடுபட்டு ஒளிர்ந்தது.
அம்மா கதவை முழுக்கத் திறந்தாள். உன்னைப் பார்த்தேன். மஞ்சள் தாவணி. ஏதோவொரு புத்தகத்தையும் குறிப்பேட்டையும் மார்புடன் அணைத்திருந்த உன் வலது கையில் ஒரு ஜதை வளையல்கள். தலையாட்டி பேசுகையில் சேர்ந்தசைந்த தொங்கட்டான்கள். எதிர்வீட்டு வாசலில் வண்ணக் கோலத்துக்கு நடுவே ஐந்துமுக விளக்கு ஒளிர்ந்து நின்றது.
உன்னிடம் அம்மா என்ன சொன்னாள், நீ என்ன பதில் சொன்னாய் என்பதெல்லாம் என் கவனத்தில் இருக்கவில்லை. இரண்டொரு நிமிடம்தான். கனிந்தொளிரும் விழிகளுடன் புன்னகைத்தாய். அம்மாவிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றாய். திரும்பி நகரும் கணத்தில் ஒரு சிறு நொடியில் என்னைப் பார்த்தாய். நகர்ந்து மறைந்தாய்.
யேசுதாஸின் மலையாளப் பாடலொன்றை உரக்கப் பாடியபடியே ராஜசேகர் படியேறி வந்தான். உற்சாகம் நொடிப்பொழுதும் அவனை கைவிட்டதில்லை. தவறிய கோட்டை மீண்டும் நான் அழித்துக்கொண்டிருந்தேன்.
அதுக்குள்ள முடிச்சிட்டியா நீ. சீக்கிரம் முடி. உனக்கு வேற வேலை இருக்கு” தந்த நிறத்தில் அகலமாய் சட்டமிடப்பட்ட கண்ணாடியைக் கழற்றி கான்கிரீட் பலகைகளாலான புத்தக அலமாரியில் வைத்துவிட்டு அம்மாவின் மடியில் தலைவைத்தான்.
நீ எங்க போனே. சித்ரா வந்து கேட்டுட்டு போனா” அம்மா அவன் தோளில் அடித்தாள்.
வெடுக்கென எழுந்தான். கண்ணாடியை பரபரப்புடன் தேடி எடுத்துப் போட்டுக்கொண்டான் “எப்பம்மா?”
வழியில நீ பாக்கலியா. கால்மணி நேரம் இருக்கும்.”
நான் எதையும் கண்டுகொள்ளாமல் மறுபடியும் கோட்டை இழுத்தேன்.
உன்னைப் பாக்கத்தான்டா அவ வந்தா” ராஜசேகரன் சொன்னபோதுதான் அத்தனை நேரமும் சரியாக விழாத அந்தக் கோடு ஒழுங்காக அமைந்தது.
உன் பார்வை ஒருமுறை அசைந்தது. எதுவும் சொல்லாமல் அடுத்த கோட்டை அளவெடுக்கலானேன்.
ராஜசேகர் சூடான தேநீரை பருகியபடியே சொன்னான் “அவளுக்கு ரெகார்ட் நோட்டுல நெறைய படம் போடணுமாம். நீ வரைஞ்சு தருவேன்னு சொன்னேன்.”
ஆசிர்வாதங்களோ அதிர்ஷ்டங்களோ வழிதவறியும் எட்டிப் பார்த்திராத என் அன்றாடங்களினூடே தப்பிப்போய் எனக்கு வாய்த்திருந்த நல்வினையொன்று உன்னை என்னிடம் சேர்த்தது. வாசனையுடன் அருகில் அமர்த்தியது. மீண்டும் அதே பார்வை. படிய வாரிய கருங்கூந்தலின் நடுவகிடு அத்தனை கச்சிதம். நாசி முனையிலிருந்து நீளும் நேர்கோடும் வகிட்டு முனையிலிருந்து இன்னொரு நேர்கோடும் இழுத்தால் இரண்டும் சந்திக்கும் இடத்தில் பொட்டிட்டிருந்தாய்.
உயிரியல் பாடப் புத்தகத்தின் பக்கங்களை குறிப்பேட்டின் முனையில் பென்சிலால் குறித்திருப்பதைக் காட்டி உரிய படங்களை வரைந்து தரச் சொன்னாய். கண்களின் விசையீர்ப்பில் புலன்களனைத்தையும் இழந்த வாழ்வின் அக்கணத்தில்தான் உன்னை எனக்குள் வரையத் தொடங்கினேன்.
அன்று உடுத்தியிருந்த இளஞ்சிவப்பு தாவணியின் ஓரங்களில் பட்டாம்பூச்சிகள் பறந்திருந்தன. உன் நினைவுகளின் கடக்க முடியாப் பெருஞ்சுவரில் அவற்றை சித்திரங்களாக்கி பறக்க விட்டிருக்கிறேன்.
உயிரியல் குறிப்பேட்டில் வரைந்திருந்த படங்களுக்காக நன்றி சொல்லவே மறுமுறை சந்தித்தாய். பிசகற்ற துல்லியமான கோடுகளுக்காக பரவசம் மினுங்கும் கண்களுடன் நீ பாராட்டியபோது சந்தோஷமாயிருந்தது. ‘அபாரமான சித்திர வித்தைக்காரன் இவன்’ என ராஜசேகரிடம் சொன்னபடியே கழுத்துச் சங்கிலியை நேர்செய்தாய். தாவரவியல் குறிப்பேட்டில் படங்களை முடித்துத் தந்தபோது உன் கண்களைப் பார்த்துப் பேசத் துணிந்திருந்தேன். உன் வனப்பைக் குறித்து இத்தனை நாளும் காதில் கேட்டவை வெறும் சொற்கள் என உணர்ந்தேன். புறத் தோற்றத்தை மிளிரச் செய்யும் உளநேர்த்தி உன்னிடம் இருந்ததை அருகிருந்த வேளைகளில் நான் கண்டேன். கோணவியல் அளவுகளைப் போல காரியங்களில் அத்தனையிலும் துல்லியம். புத்தகங்களிலும் குறிப்பேடுகளிலும் எழுதப்பட்டிருக்கும் உன் பெயர் எல்லாவற்றிலும் ஒன்றுபோல ஒரே அளவில் ஒரே தினுசில் அமைந்திருக்கும். குண்டுகுண்டான கையெழுத்து. அலட்சியமோ அவசரமோ எதிலுமில்லை. துளியளவு பிசகையும் அனுமதிக்காத உன் நேர்த்தி உடுத்தும் உடையிலும் பேசும் பேச்சிலும்கூட.
உன்னைப் பற்றிய வியப்பும் உன்னுடனான தருணங்கள் தந்த பரவசமும் என்னை உருமாற்றின. ராஜசேகரைப் போலவே நானும் பாடல்களை முணுமுணுக்கலானேன். கண்ணாடியில் நின்று என்னைப் பார்க்கத் தொடங்கினேன். உன்னை மகிழ்விக்கும் ஓவியங்களுக்காக பென்சில்களை கூராக்கி ஆட்காட்டி விரல் தசை முழுக்க கத்தியின் கீறல்கள்.
ஆசை முளைவிடும்போதே அதைக் குறித்த அச்சமும் எழுந்தது. தயங்கினேன். கூடாது என்று விலக நினைத்தேன். மழைப்பொழுதுகளில் ஒழுகும் கூரையும் பொத்தல் விழுந்த தடுக்குமாய் நிற்கும் வீட்டில் சரிந்து படுக்கும்போது இதெல்லாம் எனக்கு ஒத்துவராது என்று உரக்கச் சொல்லிக் கொள்வேன். பார்க்கக்கூடாது, பேசக்கூடாது, உன்னோடு பழகவும் கூடாது என்று உருப்போட்டபடி புரண்டிருப்பேன்.
மறுபடியும் என்னை இந்த மாயச்சுழலில் இழுத்திறக்கியது ராஜசேகரன்தான். வகுப்புகள் முடிந்து கல்லூரியிலிருந்து புறப்பட்டால் இருவரது மிதிவண்டிகளும் பாதை மாறாமல் ஆசிரியர் காலனி சி பிளாக் வாசலை வந்தடைந்துவிடுவதுதான் வழக்கம். ஆனால், ஒரு வாரமாய் நான் அறுபதடி சாலையில் ஆண்டகை மேல்நிலைப் பள்ளி திருப்பத்திலேயே விடைபெற்றேன். ‘வீட்டில கொஞ்சம் வேலடா. அப்பறமா வரேன்’ என்று ஒவ்வொரு நாளும் காரணம் சொல்லிக்கொண்டிருந்த என்னை வெள்ளிக்கிழமை மாலையில் கட்டாயமாய் உடன் அழைத்துப் போனான்.
ஆவிபறக்கும் தேநீர் கோப்பைகளை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்குப் போனபோதுதான் ராஜசேகரன் சொன்னான் “வீட்ல மட்டும் இல்லடா. சித்ராவும் உன்னைப் பாக்கவே முடியலேன்னு கேட்டா.” நீலவானில் வெண் பஞ்சு மேகங்கள். மரங்களின் உச்சிக் கிளைகளைத் தழுவியோடியது காற்று. காலனியின் மத்தியிலிருந்த மைதானம் பரபரத்திருந்தது. தண்ணீர் தொட்டியருகே வண்ணக் குடங்களின் வரிசை. எவர்சில்வர் பாத்திரங்களை அடுக்கிய வண்டியிலிருந்து விளம்பரக் குரல்.
அவன் சொன்னவுடனே பாதங்கள் குளிர்ந்தன. வெப்பம் மேலெழுந்து உள்ளங்கையில் பரவியது. தேநீரை ஒரு மிடறு பருகிவிட்டு காதர் பங்களா வளாகத்தில் ஓங்கி நின்ற தென்னைகளைப் பார்த்தேன்.
எனக்கென்னமோ அவ சாதாரணமா கேட்டமாதிரி தெரியலை” அவனது சட்டையின் வட்ட காலர் படபடத்தது. என் முகத்தையே பார்த்தபடி அவன் சொல்லவும் நான் தடுமாறினேன்.
நீ ஒருவாரமா இங்க வராம இருக்கறதுக்கும் அவ கேட்டதுக்கும் சம்பந்தம் இருக்கறதா தோணுது. என்னடா விஷயம்?” நேருக்கு நேராக அவன் கேட்டபோது என்னால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. தண்ணீர் தொட்டியின் அருகே கிடந்த எச்சில் பருக்கைகளை கொத்தித் தின்றன காகங்கள்.
ஒண்ணுமில்லடா. யோசிச்சுப் பாத்தா இதெல்லாம் சரியா வராதுன்னு தோணுது. அதான்” துண்டு துண்டான வார்த்தைகள். அவன் சரியாகக் கோர்த்துக் கொண்டான்.
சரியா வருமாங்கறதப் பத்தி இப்ப யோசிக்காத. மொதல்ல மனசுல இருக்கறதை சொல்லு. இப்பிடி ஓடி ஒளியாத.”
அவன் அப்படிச் சொன்ன பிறகுதான் உன் சுற்றுவட்டப் பாதையில் நான் மீண்டும் இறங்கினேன். இந்த முறை திரும்புதலுக்கான வாய்ப்பை உதிர்த்திருந்தேன். மறுநாள் அதே மொட்டை மாடியில் என்னைக் கண்டதும் கண்ணீர் துளிகள் உன் கன்னத்தில் உருண்டோடின. செல்லமாய் கோபித்துக் கொண்டாய். என்ன கோபம் என பேச மறுத்தாய். அதுவே எனக்கான ஒப்புதல் என உறுதியாய் நம்பத் தொடங்கினேன்.
பட்டப் படிப்பை முடித்ததும் ஏதேனும் ஒரு பனியன் நிறுவனத்தில் ‘கணக்குப்பிள்ளை’யாகக் காலத்தைக் கடத்துவதே என் விதி என்றே நினைத்திருந்த என்னிடம் ஆறாம் பருவத் தேர்வின் இறுதி நாள். தேர்வுக்கூடத்தில் நுழைவதற்கு சில நிமிடங்கள் முன்பு வணிகவியல் பேராசிரியர் முத்துசாமி வாசலில் வந்து நின்றார் “பரீட்சை முடிஞ்சதும் என்னை வந்துப் பாத்துட்டு போ.”
தேர்வு முடிந்ததும் அறையில் அவரை சந்தித்தபோது ஒரு கடிதத்தைக் கொடுத்தார். கோவையில் உள்ள தேயிலை நிறுவனமொன்றில் ஆறுமாத பணிப் பயிற்சிக்கான அழைப்புக் கடிதம். ஆறுமாத காலம் பயிற்சி முடிந்ததும் இளநிலை கணக்கராக பணியமர்த்திக் கொள்ளவும் அவரே பரிந்துரைத்திருந்தார். கூலித் தறியில் உழைத்து உடல் கூடாகி மெலிந்த அப்பாவும் உடுக்க இரண்டு சேலையும் உண்ண இருவேளை சோறுமிருந்தால் சொர்க்கம் என்றிருந்த அம்மாவும் கருப்பராயன் கோயிலில் முடியெடுத்துக்கொண்டார்கள். இதுவரையிலும் இல்லாத தகுதியும் சேர்ந்த துணிச்சலில் உன்னிடம் சொல்ல நாள் குறித்தேன்.
அதுவொரு புதன்கிழமை. ஓணம் பண்டிகைக்கான அரசு விடுமுறை. கடிதமா வாழ்த்தட்டையா என்றெல்லாம் யோசிக்கவில்லை. நேரில் சொல்லவே தீர்மானித்தேன். ராஜசேகரனேதான் இப்போதும் துணைநின்றான். அப்பாவும் அம்மாவும் ஐயப்பன் கோயிலுக்கு செல்லத் திட்டமிட்ட நேரத்தில் ஓணத்தை முன்னிட்டு உன்னை வீட்டுக்கு அழைத்தான்.
ராஜசேகரன் உலர்த்திய துணிகளை எடுத்து வருகிறேன் என்று மாடிக்குப் போனான். பலாப்பழ பாயசத்தை ருசித்துக்கொண்டிருந்த நீ என்னைப் பார்த்து சிரித்தாய் “என்ன ரொம்ப நெர்வஸா இருக்கே.”
ம். அப்பிடித்தான்.”
உனக்கென்ன பதற்றம், வேலை கெடைச்சிருச்சி. கொஞ்ச நாள்ல நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகவேண்டிதுதானே.”
சரிதான். அதான் நல்ல பொண்ணுகிட்ட சம்மதம் கெடைக்கணுமேங்கற பதற்றம்.”
பாயசக் கோப்பையை வைத்துவிட்டு பூப்போட்ட அழகிய கைகுட்டையால் உதடுகளைத் துடைத்தாய். “உன்னை யாராவது வேண்டான்னு சொல்லுவாங்களா?”
அப்ப சரின்னு சொல்லு.” நேரடியாகவே நான் கேட்டேன். அந்த நொடியை நான் தீர்மானிக்கவில்லை என்றாலும் அப்படி அமைந்துவிட்டது. சொன்ன மறுநொடியில் என் படபடப்பு சட்டென அடங்கிப் போனது.
நீ சற்றும் எதிர்பார்க்கவில்லைபோலும். அதிர்ந்த முகத்துடன் வெறித்தாய். நான் கேட்டதன் பொருள் அதுதானா என்று கேள்வியுடன் உற்றுப் பார்த்தாய். உன் பதிலை எதிர்பார்த்து நின்றேன் நான் “உனக்கு சம்மதமா?”
கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றாய். தண்ணீரில் அலசும் ஓசை. கையைத் துடைத்தபடி வெளியே வந்து எதிரில் நின்றாய் “இத நான் எதிர்பார்க்கல கார்த்தி. சாரி.”
அப்பிடின்னா…”
உனக்கு புரியும். மனசைப் போட்டு குழப்பிக்காம கொஞ்சம் பிராக்டிக்கலா யோசி.”
அடுத்து என்ன சொல்வதெனத் தெரியாமல் திகைத்து நின்றிருக்க நீ வெளியேறினாய்.
ஆனால் மனம்சோரவில்லை. விடாது தொடர்ந்தேன். பெங்களூருக்கு பணிமாற்றம் ஆன பின்னும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் வந்து நின்றேன். உன் பார்வையில் படும்படி கல்லூரி வாசலிலும் கோயில் முகப்பிலும் காத்திருந்தேன்.
நான் விலகிப்போயிருக்க வேண்டும். என் நடவடிக்கைகள் அம்மாவுக்கு கவலையளித்தன. அப்பா கண்டுகொள்ளவில்லை. ஊருக்கு வரவேண்டாமென ராஜசேகர் சொன்னதை கேட்கவில்லை. உன் விலகல்களை தற்காலிகமென்றே நம்பினேன். வீடு கட்டும் வேலையைத் தொடங்கினேன். இப்போதிருக்கும் வீட்டுக்கு எதிரிலேயே மனையை வாங்கித் திட்டமிட்டேன். அம்மாவின் விருப்பத்தைக் காட்டிலும் உன்னை மனதில் நிறுத்தியே ஒவ்வொன்றையும் வடிவமைத்தேன்.
0
பெருமாநல்லூர் நெடுஞ்சாலை விலக்கில் பஞ்சாபி தாபாவில் அன்றிரவு நண்பர்களின் வழக்கமான கூடுகை. என் உற்சாகமும் குதூகலமும் அவர்களை ஆச்சரியப்படுத்தின.
என்னடா இன்னிக்கு செம மூட்ல இருக்கே” ராஜசேகர் சிகரெட்டை பற்றவைத்தான்.
வீட்டு கிரகபிரவேசத்துக்கு பார்ட்டியா மாப்ளே” சரவணன் பீர் பாட்டிலை பல்லால் கடித்துத் திருகினான்.
அடங்கிய ஒளியினூடே சிறு குடில்கள். ஈர இலைகளுடன் குற்றுச்செடிகள். நெடுஞ்சாலை வாகனங்களின் முகப்பு விளக்குகள் அவ்வப்போது ஒளிர்ந்து மறைந்தன.
போனவாரம் அவளப் பாத்தியாடா. அதே கதைதானே?” வினோத்தின் கண்களில் தயக்கம்.
வேறென்ன. தெரிஞ்சதுதானே” யோசித்தபடியே புகையை உள்ளிழுத்தேன். ”ஆனா நின்னு பேசினா” என்றதும் மூவரும் நிமிர்ந்தனர்.
கொஞ்ச நேரம் பேசினாடா. சொன்னதேதான். ஆனா கோவமில்லாம திட்டாம, எப்பவும் பேசற மாதிரி பேசினா. ரொம்ப நாள் கழிச்சு பழைய சித்ராவை இன்னிக்கு பாத்தேன்.”
ஆம். வெகு நாட்கள் கழித்து அன்று என்மேல் கொஞ்சம் பரிவுகொண்டிருந்தாய். கண்கள் என் முகம் கண்டு தளர்ந்து நிலம் பார்த்தன. உதடுகள் ஒட்டிக்கொண்டு பேச தடுமாறினாய். சந்தோஷம் தாளாமல் நின்றவனை உன் சொற்களே ஆற்றுப்படுத்தின.
போதும் கார்த்தி. உனக்கென்ன குறை. நீ நல்லா இருக்கேடா. என்னை சொமந்துட்டு ஏன் இப்பிடி சிரமப்படற. இது சரியா வராதுங்கறது உனக்கும் தெரியும். நீயும் கஷ்டப்பட்டு என்னையும் சேர்த்து கஷ்டப்படுத்தறே. உன்னை நான் ஏன் வேண்டாங்கறேன்னு உனக்குத் தெரியும். ஆனா தெரியாதவன் மாதிரி நடந்துக்கறே. இப்ப நான் நின்னு உன்கிட்ட பேசறதே கடைசியா ஒருதடவை சொல்லிப் பாக்கலாம்ங்கற நம்பிக்கையிலதான். போதும் கார்த்தி. விட்ரு.”
நீ கெஞ்சுவதைக் காண சகிக்கவில்லை. இதற்கு முன்னும் நீ சொன்னதேதான். புதிதாய் எதுவுமில்லை. ஆனாலும் பொறுமையாகக் கேட்டு நின்றேன்.
புரிஞ்சுக்குவேன்னு நெனக்கறேன். அப்பறம் வருத்தப்படாதே.”
நீலச் சட்டையணிந்த பரிசாரகன் பீங்கான் தட்டுகளை கட்டிலில் வைத்தான். நெற்றியில் விழுந்த முடிக்கற்றைகள் நிமிர்ந்து உலுக்கியதும் மேலேறின. திருத்தமாய் வடிவமைத்த தாடியுடனான வடக்கத்திய முகம். காதில் கடுக்கன்.
சொல்லிட்டு போயிட்டா. எனக்கே வெக்கமா இருந்துச்சு. அப்ப இருந்து அதையேதான் யோசிக்கறேன். இதையேதான் இத்தனை வருஷமா சொல்லிருக்கா. இன்னிக்கென்னவோ புதுசா கேக்கற மாதிரி இருந்துதுடா. பாவம்டா. ரொம்ப படுத்திட்டேன்.”
வினோத் வாயைத் துடைத்தபடி சிரித்தான் “ஒவ்வொரு தடவையும் வழக்கமா இதையேதான் சொல்றடா.”
மேகக் கூட்டத்தின் விளிம்புகள் ஒளிர்ந்தன. நிலவு மெல்ல எட்டிப் பார்த்தது. பலத்த பாட்டுச் சத்தத்துடன் பேருந்து கடந்து போனது.
இல்லடா. இனி அவளை தொந்தரவு பண்ணமாட்டேன். அந்த எண்ணத்தையே விட்டுட்டேன். கிரகபிரவேசம் முடிஞ்சதும் பொண்ணு பாக்கலாம்னு அம்மாகிட்ட சொல்லப் போறேன்.”
ராஜசேகர் உற்றுப் பார்த்தான். எழுந்து அருகில் வந்து முதுகில் அறைந்தான். “இத்தன வருஷமா சொன்னதெல்லாம் உன் தலையில ஏறலை. இன்னிக்கு எப்பிடிடா?”
ஏனென்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் உன்னை இனி சந்திக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். உன் வழியில் குறுக்கிடாமல் உடனடியாக இங்கிருந்து விலகிப் போகவும் தீர்மானித்திருந்தேன்.
தெரியலடா. ஆனா அதுதான் நல்லது. கிரகபிரவேசம் முடியட்டும். கொஞ்ச நாள்ல கல்யாணம். வேறெங்காச்சும் தூரமா டிரான்ஸ்பர் கேட்டு போயிடபோறேன். புது இடம். புது மனுஷங்க. எல்லாம் சரியாயிடும்.”
மூவரும் கைகுலுக்கினர். நிலவின் பிரகாசத்தில் நுரைத்துப் பொங்கியது பீர்.
ஜேசுதாஸ் பாட்டு எதாச்சும் பாடுறா” ராஜசேகரிடம் கேட்டதும் சிரித்தான்.
உற்சாகத்துடன் பாடினான். உச்சிவானில் நகரும் நிலவைப் பார்த்தபடியே கட்டிலில் அமர்ந்திருந்தேன்.
விடைபெறுகையில் ராஜசேகர்தான் சொன்னான் “கிரகபிரவேசத்துக்கு அவளை இன்வைட் பண்ணினயாடா?”
0
கட்டடத்துக்கு வெளியே கயிற்றுக் கட்டிலில் அப்பா படுத்திருந்தார். கொசுவர்த்தியின் நுனிக்கங்கு காற்றில் ஒளிர்ந்து அடங்கியது. பாலக்கால் போட்ட நாளிலிருந்து அப்பா பரபரப்பாய் அலைகிறார். மணல் லோடு இறக்குவதும் சிமெண்ட் மூட்டைகளை பத்திரப்படுத்துவதுமாய் பொழுது போதவில்லை. கட்டடத்தின் ஒவ்வொரு அங்குலமும் அவர் கண் முன்னால் வளர்ந்து நிற்கிறது.
அப்பாவை எழுப்பினேன். வீட்டுக்குள் போய் படுக்கச் சொல்லவும் போர்வையுடன் மெல்ல நடந்து போனார்.
உடை மாற்றிக்கொண்டபோது அம்மா புரண்டு படுத்தாள். ஆட்கள் வேலைக்கு வந்தவுடனே அவளும் சித்தாளைப்போல வேலையில் இறங்கிவிடுகிறாள். மேஸ்திரியை விரட்டுகிறாள். பொருட்களை வீணாக்காமல் பாதுகாக்கிறாள். வேலையை முடித்துக்கொண்டு எல்லோரும் போனபின்பு இவள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைக்கிறாள். இன்றும் களைப்புடன் படுத்திருக்கிறாள்.
வெளியில் வந்தேன். பௌர்ணமி வெளிச்சத்தில் கட்டடத்தை நெருங்கினேன். உனக்காக கட்டிய வீடு. இந்த வாசலில் மருதாணிக் கோடுகளிட்ட வலதுகாலை வைத்து நீ உள்ளே நுழையப் போவதில்லை. வாசல் நிலையில் தோள் சாய்ந்து நிற்கமாட்டாய். துளைக்கும் பார்வையும் கிறங்கடிக்கும் சிரிப்பும் இங்கு நிறைய வாய்ப்பில்லை. விசுவிசுவென வீசும் காற்றில் ஜாதிமல்லியின் வாசனை வீசியிருக்காது. எல்லாமே என் கற்பனை மட்டுமே. நீ வரப்போவதில்லை.
கூடத்திலிருந்து சமையலறைக்குள் நுழைந்தேன். வேர்வை துளிர்த்த நெற்றியில் வகிட்டுக் குங்குமம் கலைந்திருக்க என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய். ‘வரணுமா வேண்டாமா?’ என்று கேட்கிறாய்.
தாங்க முடியாமல் வெளியில் வந்தேன். இன்று உன்னை நான் மீண்டும் பார்த்திருக்கக்கூடாது. ஒரு வாரகாலமாய் எல்லாமே அடங்கிக் கிடந்தது. மெல்ல மெல்ல தேறியிருந்தேன். ஆனால் இன்று உன் பார்வை எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டது. உறுதியைக் குலைத்துவிட்டது.
குபேரமூலையில் அமைந்த விசாலமான படுக்கையறைக்கு வழக்கம்போல கால்கள் நகர்ந்தன. படுக்கைக்கு நேர் எதிரில் பனிபொழியும் மார்கழி விடியலில் வாசலில் நீ கோலமிடுவதுபோல வரைந்த அந்த சித்திரம். கைகள் சுவரைத் தடவி நின்றன. சித்திரத்திலிருந்து நிமிர்ந்தாய். ‘என்ன நீ பதில் சொல்லாம போறே’ உன் குரல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.
இத்தனை நாளும் முட்டாளைப்போல உன் பின்னால் அலைந்திருக்கிறேன். அப்போதெல்லாம் இத்தனை உரிமை இல்லை. பார்வையில் இந்த கிறக்கத்தைப் பார்க்கவில்லை. என்மேல் இன்றைக்கு எதற்காக இத்தனை கருணை. இனி உன்னை நான் தொந்தரவு செய்ய வாய்ப்பில்லை என்ற ஆசுவாசமா?
மாடிப்படிகளில் ஏறும்போது காலடியில் மணல் நெறிந்தது. ஒவ்வொரு படியிலும் உன் கைகுலுக்கலைப் பெறவேண்டி கண்விழித்து தீட்டிய ஓவியங்கள். அனைத்தும் நிறமிழந்துவிட்டன.
மொட்டை மாடியில் நின்றேன். தூய நிலவொளியில் உலகம் உறங்கிக் கிடந்தது. மருத மரக் கிளைகள் காற்றில் அசைந்தன. தொலைவில் எங்கோ நாய் குரைக்கும் ஒலி.
எதற்காக என்னை நீ அப்படி பார்த்தாய்? வேண்டாமென்று விலகி வேறு திசையில் செல்லவிருந்தவனை ஏன் இப்படி ஏன் இழுத்து நிறுத்தியிருக்கிறாய்? தீர்மானங்கள் அனைத்தையும் துறந்து மீண்டும் உன் சுழல் வட்டப்பாதைக்குள் கிடக்கிறேன் நான். விலகவும் முடியாமல் மீளவும் இயலாமல் தலைசுற்றுகிறது.
இந்த மயக்கம் உடனே உன்னிடம் இழுத்து வந்து நிறுத்திவிடும். மறுபடியும் மன்றாடி நிற்பேன். கெஞ்சுவேன். அவமானப்படுவேன். ஆம். விடிந்ததும் அதுதான் நடக்கும். அப்படி வந்து நிற்கும்போது உன் கண்கள் மூடிக்கொள்ளும். அப்படித்தான் நடக்கும். எனக்குத் தெரியும். ஆனால் அதை என்னால் தாங்க முடியாது. வேண்டாம். அந்த அவப்பெயரை உன்மேல் சுமத்தக்கூடாது.
விறுவிறுவென கீழே இறங்கினேன். படுக்கையறையின் மூலையில் கிடந்த முக்காலியை எடுத்துப் போட்டு மேலேறி நின்றேன். இடது மூலையில் ஜன்னலையொட்டி தூளிக்காக அமைத்த கொக்கியில் கயிற்றைச் செருகி இழுத்தேன்.
0
(தினகரன் தீபாவளி மலர், 2019)










No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...