Thursday 14 November 2019

சங்கரன் நாயர் லைப்ரரி


சங்கரன் நாயர் லைப்ரரி
0
குருமூர்த்தி அண்ணாச்சி சொன்ன இடத்தில் சங்கரன் நாயர் லைப்ரரி இருக்கவில்லை. அவர் சொன்ன இடத்தின் எல்லா அடையாளங்களும் பொருந்தியிருந்தன. அங்கேரிபாளையம் சாலை இருந்தது. இடதுகைப்பக்கம் அந்தக் காலத்து சினிமா பாணியினாலான அகன்ற பால்கனியுடன் பைசன் பங்களாவும் இருந்தது. ஆனால் அடர்ந்த தென்னந்தோப்பையோ அதன் எதிர்புறத்தில் வேலிமுட்களுடன் கூடிய குப்பைமேட்டையோ காணவில்லை. எல்லா இடங்களிலும் இடைவெளியின்றி கட்டடங்கள். அதிலிருந்து கொஞ்ச தூரத்தில் ஜீவா காலனி. பக்கச் சுவர்களில் துருப்பிடித்து உடைந்த கழிவுநீர் குழாய்கள். விரிசல்களில் வேர்பிடித்து தலைகாட்டும் அரசிலைகள். சுவர்ப் பரப்பில் கோலமிட்ட நீர்த்தடங்கள். முதுமையைக் கூடுதலாய் காட்டும் மங்கிய காவி வர்ணம் என நடுத்தர வர்க்க குடியிருப்பின் அச்சான அடையாளங்களுடன்கூடிய அடுக்குமாடிக் குடியிருப்பு. முகப்பு வளைவும் இருந்தது. ஆனால் அதன் எதிரில் சாலையின் மறுபுறம் குருமூர்த்தி அண்ணாச்சி சொன்ன சலூனைக் காணவில்லை. கருப்பு வட்டத்தில் வெள்ளை எண்கள் இட்ட மரப்பலகைகள் வரிசையில் அடுக்கியிருக்கும் ‘மாடர்ன் சலூன்’.
சலூனுக்கு அடுத்தாப்பல டீக்கடை. அண்ணா தேநீரகம்னு போர்டுகூட இருக்கும். நல்லா புளிபோட்டுத் தேச்சு பளிச்சின்னு விபூதிப் பட்டையோட வாங்க வாங்கன்னு சொல்றமாதிரி முன்னாடியே நிக்கும். ஆறுச்சாமியும் நெத்தில அதேமாதிரிதான் விபூதி பூசிருப்பாரு. கடை வாசல்லே கரிபூசின சின்ன போர்டு இருக்கும். டெய்லி ஒரு பொன்மொழி. அண்ணாவோ பெரியாரோ சொன்னதா இருக்கும். அப்பறமாத்தான் சங்கரன் நாயர் லைப்ரரி. சின்னதா ஒரு வீட்லதான். நெலவு மூலையில சின்னதா காலிங் பெல். ஜன்னலுக்கு நேர்கீழே கல்வாழையும் பக்கத்துலயே ஜாதிமல்லிக் கொடியும் இருக்கும்.” குருமூர்த்தி சொன்னதை உறுதிசெய்யும்படியான எந்த அடையாளமும் அங்கிருக்கவில்லை.
பதிலாக ஆறு கடைகளைக் கொண்ட நீண்ட வளாகமே அங்கிருந்தது.
பெங்களுர் தக்காளிகள் நிறைந்த நீலப்பெட்டிகள் அடுக்கிக் கிடந்த மளிகைக் கடையில் காலைநேர நெரிசல். கறிவேப்பிலையை ஒடித்து மடக்கி பாலிதீன் பைக்குள் திணித்தவர் நான் கேட்டதையே காதில் போட்டுக்கொள்ளவில்லை. அடுத்து மூன்று கடைகள் சாத்திக் கிடந்தன. ஒரு பிரவுசிங் செண்டர். அடுத்தது ரிலையன்ஸ் மொபைல் கடை. மூன்றாவதாக டெய்லர் கடை. கடைசியாக இருந்தது டிரைக்ளீனிங். நீண்ட கண்ணாடிப் பெட்டியில் ஒழுங்காய் மடித்த புடவைகள் தொங்கியிருக்க கடையின் நடுவில் அழுக்குத் துணிகளை உதறிப் போட்டுக்கொண்டிருந்தவள் வாசலில் நிழலாடியதும் நிமிர்ந்து பார்த்தாள். அடர்பச்சை சேலைகட்டிய நடுத்தர வயதுக்காரியின் இடுப்பு மடிப்பு பளிச்சிட்டது. சட்டென பார்வையை மாற்றியபடி தயக்கத்துடன் சங்கரன் நாயர் லைப்ரரியைப் பற்றிக் கேட்டேன். கேட்கும்போதே அவளுடைய பதில் என்னவாக இருக்குமென்பது எனக்குத் தெரிந்திருந்தது.
லைப்ரரியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அலைபேசியில் அழைத்துச் சொன்னபோது குருமூர்த்தியால் நம்பமுடியவில்லை. மறுபடியும் அதே அடையாளங்களை குறிப்பிட்டுக் கேட்டபோது எரிச்சல் மூண்டது. பக்கவாதத்தில் இடதுபக்கம் செயலிழந்து பெரும் போராட்டத்துக்குப் பின் நடமாட்டத்தை மீட்க முடிந்திருந்தாலும் அவரால் பயணம் செய்யமுடியாது. ஒருவேளை நேரில் பார்த்திருந்தாலும்கூட அவர் அத்தனை எளிதில் நம்பமாட்டார். அவருடைய நினைவில் நிற்கும் அந்த லைப்ரரியை என் முன்னால் நிறுத்தவே பாடுபடுகிறார்.
நீ ஒரு காரியம் பண்ணு. காலனிக்குள்ள எம் பிளாக்குல ரெண்டாவது மாடில 5ம் நம்பர் வீடு. படில ஏறுனதும் வலதுகை பக்கம் ரெட்டைக் கதவு போட்டது. அங்க பரமேஸ்வரன்னு கேளு. என்னோட பிரெண்டுதான். நிச்சயமா அவருக்குத் தெரியும்.”
ஆனால் பரமேஸ்வரன் வீட்டில் இல்லை. கல்பாத்திக்கு போயிருப்பதாகவும் மறுநாள் காலையில்தான் வருவாரென்றும் ஒருபாதி திறந்த கதவின் வழியாக பதில் கிடைத்தது.
குருமூர்த்தியிடம் சொல்லவில்லை. காலனி வீடுகளுக்கு மத்தியில் விஸ்தாரமான மைதானம். தென்மேற்கு மூலையில் உயரமான தண்ணீர்தொட்டி. மைதானத்தைச் சுற்றி ஓங்கி அடர்ந்த மரங்கள். வேம்பும் புங்கையும் வாகையுமாய் செழித்து நின்றன. பிள்ளையார் கோயிலை அடுத்திருந்த அரசமரத்தடி பெஞ்சில் உட்கார்ந்தேன். காலனியின் வரிசை வீடுகள் குருமூர்த்தி சொன்னதுபோலத்தான் இருந்தன. பெரிய மாற்றங்கள் இல்லை. பெட்டி பெட்டியாய் ஜன்னல் சதுரங்களுடன் அடக்கமாய் நின்றன. மைதானத்தின் மத்தியில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார்கள். கிழக்கு பக்கமாய் அடுத்தடுத்து நான்கு இறகுப் பந்து களங்கள். தளர்ந்த வலைகள் காற்றில் அசைந்திருந்தன. கோயில் மணி ஒலித்தது. வேப்பமரத்திலிருந்து மைனாக்கள் சடசடத்து மேலேறி மறைந்தன. மூன்றாவது பெஞ்சில் தலைசாய்த்து கண்மூடியிருந்தவன் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான். மறுபடியும் படுத்துக்கொண்டான்.
குருமூர்த்தி சொல்வதுபோல அப்படியொரு லைப்ரரி உண்மையிலேயே இங்கிருந்ததா? நாளைக்கு ஒருமுறையாவது சங்கரன் நாயரைப் பற்றி அவரது புத்தகங்களைப் பற்றிச் சொல்லாமல் இருக்கமுடியாது. எத்தனை முறைச் சொன்னாலும் அவருக்கு அலுக்காது. நான் வெகுகாலமாக தேடிக்கொண்டிருக்கும் ஒரு மலையாள மொழிபெயர்ப்பு நாவலைப் பற்றி எதேச்சையாக சொன்னபோது அது சங்கரன் நாயர் லைப்ரரியில் இருப்பதாக சொன்னபோதுதான் நான் சற்று ஆர்வம் காட்டத்தொடங்கினேன்.
0
சங்கரன் நாயரை ஜீவா காலனியில் குடியேற்றியது பரமேஸ்வரன்தான். இருவரும் மலையாளிகள் என்பதைத் தவிர தனலட்சுமி மில்லில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள். சங்கரன் நாயருக்கு பூர்விகம் பாலக்காட்டை அடுத்த திருவில்லாமல. பஞ்சாலைத் தொழிலுக்காக பத்தொன்பது வயதிலேயே திருப்பூருக்கு வந்துவிட்டார். பொள்ளாச்சியை அடுத்திருந்த மீனாட்சிபுரத்தில் மாதவியை அவர் மணம் முடித்தபோது வயது முப்பதைக் கடந்திருந்தது. ஒண்டுக்குடித்தனம் இருந்த ஓடக்காடு வீடு ஒத்துவராது என்று வீடு தேடியபோதுதான் பரமேஸ்வரன் ஜீவா காலனி வீட்டைப் பற்றிச் சொன்னது. அது காலனி வீடு அல்ல. காலனிக்கு எதிரிலிருந்த லைன் வீடு. காலனியின் அமைப்பும் போக்குவரத்து நெரிசலற்ற சூழலும் சங்கரன் நாயருக்குப் பிடித்துப் போயிருந்தது. முக்கியமாக ஓடக்காட்டில் இருந்த அளவுக்குத் தண்ணீர் பிரச்சினை இங்கு இல்லை.
இடுப்பளவு நீண்ட கருங்கூந்தலும் அடர்த்தியான கண்மையிட்ட சுடர் விழிகளுமாய் மாதவி வந்திறங்கியபோது பெருமழை பெய்து ஓய்ந்திருந்தது. காலனியின் முகப்பு வளைவை ஒட்டி ஈரம் சொட்ட வரிசையில் நின்ற அசோக மரங்களும் இலைதழைகளுடன் செம்மண் குழம்பென பெருக்கெடுத்த மழைநீரும் அவளுக்குப் பிடித்திருக்கவேண்டும். மழைத்தூறல்களை உள்ளங்கையில் ஏந்தி சிரித்தபடியே நின்றாள். சங்கரன் நாயர் கதவைத் திறந்ததும் உள்ளிருந்து சாம்பல்நிறப் பூனையொன்று வெளியில் தாவியது. சிணுங்கினாற்போல் சிரித்தாள்.
நீண்ட கூடத்தையடுத்து இடதுபக்கம் படுக்கையறை. பின்னால் சமையலறை. பாதுகாப்பான சுற்றுச்சுவருடன் அடக்கமான புழக்கடை. மூலையில் துவைகல். சின்னதாய் பாத்தி. கனகாம்பரமும் தக்காளிச் செடியும் வாடாதிருந்தன. ஆட்டாங்கல்லும் அதற்கு பக்கத்தில் இரண்டுபேர் உட்காரும்படியான திண்ணை.
மாதவிக்கு வீடு வெகுவாகப் பிடித்திருந்தது. விறுவிறுவென பெருக்கித் துடைத்து சமையல் மேடையை தயார்படுத்திக்கொண்டிருந்தபோதுதான் நனைந்த குடையை வாசலில் கவிழ்த்துவிட்டு “புதுவீட்ல சமையல் ஆயிடுச்சா?” என்று குரல்கொடுத்தபடியே பரமேஸ்வரன் உள்ளே வந்தார். கூடத்து நாற்காலியில் உட்கார்ந்தவரின் கண்ணில்பட்டது பிரிக்கப்படாமல் கிடந்த அட்டைப்பெட்டிகள்.
சங்கரன் நாயர் மூக்குப்பொடி டப்பாவை ஆட்காட்டி விரலால் தட்டியபடியே தரையில் உட்கார்ந்தார். “எல்லாம் அவளோட சாதனமாக்கும். புக்ஸ். வல்லிய படிப்பாளி.” மூடியைத் திறந்து பொடியை கவனமாக எடுத்து மூக்கின் நுனியில் தடவினார்.
பரமேஸ்வரன் ஆச்சரியத்துடன் பெட்டிகளை எண்ணினார். பதினாறு பெட்டிகள்.
இத்தரயும் புக்ஸோ?”
அதே.”
இத்தரயும் அடுக்கி எடுத்தா வல்லிய லைப்ரரி அல்லே?”
பக்கத்தில் இருந்த பெட்டியைத் திறந்து ஒரு புத்தகத்தை எடுத்தார். ‘வாஸவேச்வரம்’. நாயரை நிமிர்ந்து பார்த்துவிட்டு தரையில் உட்கார்ந்து அடுத்தப் புத்தகத்தை எடுத்தார். ‘செம்பருத்தி’ ஆச்சரியம் தாளாமல் ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டிவிட்டு தரையில் வைத்தார்.
மூக்குப்பொடியின் லாகிரியில் லயித்திருந்த சங்கரன் நாயர் பரமேஸ்வரனின் பதற்றத்தைக் கண்டு சிரித்தார்.
மாதவி…” பரமேஸ்வரன் அழைத்தபோது தேநீர் கோப்பைகளுடன் வந்து நின்றாள். தரையில் கிடந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டு நாயருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
என்ன மாதவி இது? இதெல்லாம் நீ படிச்சதா?”
ம்.”
எப்பிடி இத்தனை புக்ஸ்?”
பக்கத்து வீட்ல இருந்த சந்திரா அக்கா லைப்ரரியன். பழைய புக்ஸை கழிக்கும்போது சொல்லுவாங்க. கொறைஞ்ச வெலைக்கு எடுத்துக்கலாம். அப்பிடிச் சேத்ததுதான் நெறைய. மலையாளத்துல கொஞ்சம் இருக்கும். அதெல்லாம் கோட்டயத்துல டிரெயினிங் போனபோது வாங்கினது.”
பெட்டிகளைப் பிரித்து புத்தகங்களை கூடத்து அலமாரியிலும் நீண்ட பெஞ்சிலும் அடுக்கிய பின்பு பரமேஸ்வரன்தான் முதன்முதலாய் ஒரு புத்தகத்தை இரவல் வாங்கிச் சென்றார். நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர்.
பரமேஸ்வரனை முதல் உறுப்பினராகக் கொண்டு இயங்கத் தொடங்கிய நூலகத்துக்கு இரண்டாவதாக உறுப்பினர் அமைவதற்கு அடுத்து மூன்றுமாதங்கள் ஆயின.
0
பிரகாசமான வெயிலில் ரெட்டைப் பின்னலும் பச்சை வெள்ளைச் சீருடையுமாய் மாணவிகள் உற்சாகத்துடன் காத்திருந்தார்கள். எட்டேகாலுக்கு ஆறாம் நம்பர் பஸ். முதல் சிப்டுக்கு சங்கரன் நாயர் ஐந்து மணிக்கே புறப்பட்டுப் போயிருந்தார். நெளிமயிர்கற்றையை உலர்த்தியபடி வாசலில் நின்ற மாதவியிடம் தாவணிப்பெண் கேட்டாள் “லைப்ரரியா அக்கா?”
மைகோதியை விலக்கி நிறுத்தியவள் சிரித்தவாறே சொன்னாள் “அப்பிடித்தான்.”
கத புக்கா?”
ம்.”
பாக்கலாமாக்கா?”
ஒருகணம் அவள் முகத்தை கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னாள் “பாக்கற புக் இல்லை. படிக்கற புக். படிக்கறதுன்னா உள்ள போய் பாரு.”
மாதவி அப்படிச் சொன்னது அவளுக்குத் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். உடனடியாகவே தலையாட்டினாள். “இப்ப லேட் ஆயிடுச்சுக்கா. சாயங்காலமா வர்றேன்.”
மாலை ஐந்துமணிக்கு அழைப்புமணி ஒலித்தது. உள்ளறையில் சங்கரன்நாயர் ஒருக்களித்துப் படுத்திருந்தார்.
காலையில் விசாரித்தவள் சட்டைப் பாவாடையோடு இன்னும் அழகாக நின்றாள். கண்மை தீட்டிய மாதவியின் கத்திக் கண்களை வியந்தபடியே தயக்கத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். வாராந்தரிகளில் தொடர்கதைகள் வாசித்துப் பழக்கம் என்றவளுக்கு சாண்டில்யனை பாலகுமாரனை சுஜாதாவைத் தெரிந்திருந்தது. பதினோராம் வகுப்பிலிருந்த அவளுக்கு சாண்டில்யனின் ‘ஜலதீப’த்தை எடுத்துத் தந்தாள் மாதவி.
உற்சாகத்துடன் விடைபெற்று செருப்பைப் போட்டுக்கொண்டவள் வெட்கத்துடன் சொன்னாள் “உங்க கண்ணு பயங்கரமா டிஸ்டர்ப் பண்ணுதுக்கா.”
அந்த வாரத்தின் சனிக்கிழமை மாலை அவித்து நறுக்கிய பனங்கிழங்கும் பால் கலக்காத தேநீருமாய் மாதவி பின்திண்ணையில் சங்கரன்நாயருடன் பேசிக்கொண்டிருந்த வேளையில் இரண்டு தோழிகளுடன் வந்தாள் அவள். ‘ஜலதீபம்’ பிடித்திருந்ததாகவும் தோழிகள் அதைப் படிக்க விரும்புவதாகவும் சொன்னவள் உறுப்பினராவது எப்படி என்று கேட்டாள்.
மாதவி வாய்விட்டுச் சிரித்த சத்தம் சங்கரன் நாயரை கூடத்துக்கு வரவழைத்தது.
எந்தா காரியம்?”
சந்தோஷத்தில் மிதக்கும் கண்களில் நீர் துளிர்க்க மாதவி கேட்டாள் “நம்மோட ஈ லைப்ரரியில மெம்பர்ஷிப் உண்ணடாக்கணம்..”
மூன்று பெண்களை ஏறிட்டவர் நெற்றியைத் தடவினார். “அதானோ காரியம். மில் லைப்ரரியில கணக்குண்டு. ஒரு மெம்பருக்கு ரெண்டு புக். பத்து நாள் அவகாசம். மெம்பர்ஷிப் பத்து ரூவா. பின்னே புக்குக்கு அஞ்சு… அத்ர மதி.”
கம்பிச் சுருளென தலைமுடிகள் அலைய மாதவி தலையசைத்து மறுத்தாள். “ஏய். அங்ஙன இல்ல. ஸ்கூல் ஸ்டூடன்ஸ்னு… அத்ர அமவுண்ட் ஆவஸ்யமில்ல. அஞ்சு ரூபா மெம்பர்ஷிப். ஒரு ரூவா ரெண்ட். அது மதி.”
உறுப்பினர் கட்டணம், நூல் வாடகை விபரங்களுடன் இன்னும் சில நிபந்தனைகளை சேர்த்து சிறிய அட்டையை கதவருகில் ஸ்விட்ச் போர்டுக்குக் கீழே தொங்கவிட்டார். புத்தகங்களில் கிறுக்கவோ அடிக்கோடிடவோ கூடாது. பக்கங்களின் மூலைகளை மடக்கக்கூடாது. புத்தகத்தை பத்து நாட்களுக்குள் திருப்பித் தரவேண்டும்.
பரமேஸ்வரன் தன்னிடமிருந்த சோவியத் நாவல்களைக் கொண்டுவந்து அடுக்கிவிட கூடத்தின் நாலாப்பக்கமும் புத்தகங்கள் ஆக்கிரமித்தன. ஜீவா காலனியின் பெண்களுக்கான நூலகமாக உருமாறியபோது சங்கரன் நாயர் லைப்ரரி என்ற பெயரும் நிலைத்தது.
0
தாடியை நீவியபடியே ஏற இறங்கப் பார்த்தவர் பெட் பாட்டில் மூட்டைகளுக்கு நடுவே ஓரமாகக் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியைக் காட்டிச் சொன்னார் “உக்காருங்க.”
பழைய புத்தகங்களின் மக்கிய வாடை. அடுக்கிக் கிடந்த செய்தித்தாள் கட்டுகள். துருவேறிய சங்கிலிகளுடனான தராசு. அழுக்கேறிய பனியன் வேர்வையில் நனைந்திருக்க எழுந்து நின்றார். தயக்கத்துடன் நாற்காலியில் உட்கார்ந்ததும் பீடியைப் பற்றவைத்தார். உள்ளங்கைகளுக்கு நடுவே நெருப்பை நிறுத்திய கணத்தில் முகம் சுடர்ந்தது. நரைமயிர் அடர்ந்த தாடி. காய்ந்த உதடுகள்.
நாயர் லைப்ரரியைப் பத்தி ஒங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
மைதானத்தில் படுத்துக் கிடந்தவன் மெல்ல எழுந்து என்ன செய்வதென்று தெரியாமல் மேற்கில் சென்ற பாதையில் நடந்தபோதுதான் நாற்சந்தி முனையிலிருந்த இந்தக் கடை கண்ணில் பட்டது. பழைய பேப்பர் கடை. இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்துடன்தான் விசாரித்தேன்.
குருமூர்த்தி சார் சொன்னார்” என்று தகவலைச் சொன்னதும் புகையை உள்ளிழுத்து நிறுத்திவிட்டு தரையைப் பார்த்தார்.
நாயர் இப்ப இங்க இல்லை.”
அவரே தொடரட்டும் என்று காத்திருந்தேன்.
அந்த லைப்ரரியும் இல்லை. நாயரும் இல்லை. எல்லாம் போச்சு. மாதவி போனதோட எல்லாமே போயிருச்சு.”
0
ஈரம் உலர்ந்த கூந்தல் காற்றில் அலைபாய தலையணையில் முதுகைச் சாய்த்துப் படுத்திருந்தாள் மாதவி. கையில் ஏந்தியிருந்த புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவளின் முகத்தில் புன்னகை.
சங்கரன் நாயர் தலை துவட்டியபடியே உள்ளே நுழைந்தார். மெல்லிய சீகக்காய் வாசனை. மாதவி புத்தகத்திலிருந்த கண்களை விலக்காமலே மெல்லச் சொன்னாள் “டிபன் ரெடி. இதோ வருன்னூ.”
புத்தகத்தை உற்றுப் பார்த்தவர் துண்டின் நுனியைத் திருகி இடதுகாதில் நுழைத்தபடியே கேட்டார் “இத எத்ர பிராவஸ்யம் வாயிக்கும் நீ… பரீட்சைக்கு வாயிக்குன்னது போல.”
புத்தகத்தின் அட்டையை திருப்பிப் பார்த்தாள். ‘அகலிகை’ தலைப்புக்குக் கீழே ‘சதானந்தன்’ என்றிருந்தது. விரல்கள் அந்த எழுத்துக்களை மெல்லத் தடவி நகர்ந்தன.
இப்போள் நீ மற்றுள்ளவருடெ புஸ்தகங்கள் வாயிக்குனில்ல. எப்போளும் சதானந்தன்றெ புக்ஸ் மாத்ரம். அல்லே?”
அவள் தலையை அசைத்தபடியே எழுந்தாள். புத்தகத்தை கட்டிலின்மேல் இருத்திவிட்டு கூந்தலை உதறி கொண்டையிட்டாள். நீண்ட கழுத்தின் பின்புற வெழுப்பில் பொற்சரடு மின்னியது.
அவள் பதில் சொல்லவில்லை. சங்கரன் நாயருக்கும் தெரியும், இந்தக் கேள்விக்கு எப்போதும் அவள் பதில் சொல்வதில்லை என. படுக்கையறை அலமாரியில் இருக்கும் சதானந்தனின் புத்தகங்களை தொட யாருக்கும் அனுமதி இல்லை. ஒரேயொரு முறை புத்தகத்தின் முதல் பக்கத்தை அவருக்குக் காட்டியிருக்கிறாள். ‘பிரியமான மாதவிக்கு…’ சற்றே சாய்ந்தவாக்கிலான அழுத்தமான கையெழுத்து. கீழே சதானந்தனின் ஒப்பம். 2001ம் ஆண்டின் ஜனவரி முதல்நாள் தேதியிட்டிருந்தது.
எல்லா புக்லேயும் கையொப்பு உண்டு. எல்லாம் புது வருஷம் ஜனிக்கும்போள் தன்னதா.” சொன்னபோது அவள் கண்கள் மின்னின.
என்டெ வாயனயெக்கெ பேப்பரோட நின்னு போயி. எனிக்கு இத்ர வலிய புக்குகள் கண்டு கத வாயிக்குன்னத விஜாரிக்கும்போள்… ஐய… எனிக்கு ஆவஸ்யமில்ல” நாயர் தலையாட்டியபடியே நகர்ந்தார்.
இதில் கத மாத்ரம் அல்ல. சத்யமானு உள்ளது. நம்முடெ மனஸினெ காட்டுன்ன கண்ணாடியாணு ஓரான்னும். பிரத்யேகிச்சு சதானந்தன்டெ எழுத்து கூடுதல் ஸ்பெஷல்.”
கட்டிலில் கிடந்த உலர்ந்த துணிகளை மடிக்கத் தொடங்கியபோது மாதவி முதுகைக் காட்டியபடி அலமாரியின் பக்கமாய் நின்றாள்.
ஈ ரைட்டருடெ ஸ்தலம் எவிடெயானு?”
புடவையை உதறி மடித்து நீவியபடியே கேட்டபோது மாதவி திரும்பினாள். நாயரை உற்றுப் பார்த்தாள்.
கோட்டயத்தினு அடுத்து… எந்தா?”
ஏய்… அது ஒண்ணுல்ல.”
ஒளிர்பச்சை நூலால் ஓரங்கள் தைக்கப்பட்ட கருப்புப் பாவாடையை மடித்தவர் மீண்டும் கேட்டார் “ரைட்டரைக் கண்டதுண்டோ மாதவி?”.
மாதவி கையிலிருந்த புத்தகத்தைப் புரட்டினாள். பின்னட்டையில் இருந்த சதானந்தனின் படத்தைப் பார்த்தாள். உதடுகளில் நகை மின்ன தோள்களை குலுக்கினாள்.
ரெண்டு மூணு தடவை. புக் ஃபேர்ல வெச்சு.”
சிறிய இடைவெளியில் கேட்டார் “ஓ..”.
மாதவி சிரித்தபடியே அருகில் வந்தாள். “என்டெ விவாஹத்தினு விளிச்சு. பக்ஷே வந்நில்ல. அத்தேஷத்தின்டெ புதிய புஸ்தகத்தெ சன்மானமாயிட்டு அயச்சிருன்னு.”
ஓ”
அத்தேஹம் விவாகிதனானோ?”
ம். பக்ஷே, பார்ய ஒப்பம் இல்லா. ஒற்றைக்காநு.”
நாயர் சிரித்தபடியே சொன்னார் “அதானோ காரியம். ஞான் கேட்டுட்டுண்டு. ஈ சினிமாக்காரன்மார்க்கும் எழுத்துக்கார்க்கும் குடும்ப ஜீவிதம் சரியாவில்லான்னு. அங்ஙனயோ?”
காதோரத்தில் அலைந்த தலைமுடியை ஒதுக்கிய மாதவி உற்றுப் பார்த்தாள். தோள்களைக் குலுக்கினாள். “ரெண்டு ஆளோடு குடும்ப ஜீவிதம் நயிக்குன்னது ஏது பெண்ணினும் பிரயாசமானு.”
யாரானு ரெண்டு ஆள்?” வியப்புடன் கேட்டபோது அவரது பெரிய கண்களின் விழிப்படலத்தில் சிவப்பு நரம்புகளைப் பார்க்க முடிந்தது.
ஒண்ணு எழுத்துக்காரன். அவன் சரிக்கும் பிராந்தன். மற்றுவன் எழுதாத்த பர்த்தாவு. அவன் மனுஷன். இவனை சகிக்காம். பிராந்தனை எங்ஙனெ சகிக்கான் பற்று?” மாதவி சிரித்தாள். பிறகு சொன்னாள் “இப்பிராந்தனை ஆ மனுஷனே இஷ்டப்படுலா. பின்னெ எங்ஙனெ பார்யா இஷ்டப்பெடும்.”
நாயர் கண்களை மூடியபடி தலையை ஆட்டினார் “எனிக்கு ஒண்ணும் மனசிலாயில்லா விடு.”
நான்காவது பனியனையும் மடித்து வைத்துவிட்டு எழுந்தவர் வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டார். துணிகளை எடுத்து அலமாரியில் அதனதன் இடத்தில் சீராக அடுக்கினார். “பின்னே இப்போள் எழுத்துக்காரன் கத்தெக்கெ அயக்காரில்லே?”
மாதவி புத்தகத்தை அலமாரியில் வைத்துவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி சொன்னாள் “இப்போள் காரியமாயிட்டு எழுதான் ஒண்ணுமில்லா” குரலில் தலைகாட்டிய வருத்தத்தை உணர்ந்த நொடியில் திரும்பிச் சிரித்தாள்.
எப்போலெங்ஙிலும் ஒரு போன் விளி. எங்ஙெனெயுண்டு? வாயிக்காருண்டோ? நாட்டிலேக்கு வராருண்டோ? இங்ஙனெ… இப்போள் அத்தேகத்தின்டெ எழுத்தில் ஜீவன் இல்லா. அதானு பிரஸ்னம். நோக்காம். ஒரு பிராவஸ்யம் போய் காணணம் என்னுண்டு.”
நாயர் ஜன்னல் விளிம்பில் வைத்திருந்த மூக்குப்பொடி டப்பாவை எடுத்து ஆட்காட்டி விரலால் தட்டினார். மூடியை கவனமாகத் திறந்து ஒரு சிட்டிகையை எடுத்தார். மூக்கின் நுனியில் ஈசியபோது மாதவி கட்டிலில் அமர்ந்து சிரித்தாள்.
நாயர் பொடி டப்பாவை வைத்துவிட்டு வேட்டி நுனியால் மூக்கைத் துடைத்தார். மூக்கை உறிஞ்சியபடியே கேட்டார் “எந்தா சிரி?”
ஒண்ணுமில்லா. பொடி வலிக்குன்னத குறிச்சு சதானந்தான் எழுதிட்டுண்டு. ஆ ஓர்ம வந்நு.”
0
நாயர் ரொம்ப நல்ல மனுஷன். அதுந்து பேசமாட்டாரு. காலனில எதுன்னாலும் முன்னாடி வந்து நிப்பாரு. இத்தன வருஷமா இங்கிருந்து பாஷைதான் சரியா வர்லையே தவிர ரொம்ப தங்கமான ஆளு. அவருக்கு மாதவி வந்தது அதிர்ஷ்டந்தான். அந்தப் பொண்ணு இவரை எப்பிடி கல்யாணம் கட்டிக்கிச்சுன்னு எரிச்சல்படாத ஆளே இல்லேன்னு சொல்லணும். நானே அப்பிடி சமயத்துல யோசிச்சிருக்கேன். அனாவசியமா வீட்ட விட்டு வெளிய வராது. எதாச்சும் நோம்பி நொடின்னா கோயிலுக்கு வரும். அந்தப் பொண்ணைப் பாக்கறதுக்காகவே நெறைய பேரு அந்த லைப்ரரில மெம்பர் ஆனாங்க. இல்லன்னா நம்மெல்லாம் எங்க போயி புக் படிச்சோம்.”
பீடியைச் சுண்டி எறிந்துவிட்டு எச்சிலைத் துப்பினார். கழுத்துப்புற வேர்வையைத் துடைத்தவர் சிக்னலுக்காக புகைக் கக்கியபடி காத்திருந்த வண்டிகளை வெறித்துப் பார்த்தார்.
அவங்க வீட்டுல மலையாளப் பேப்பர்தான். மூணு மாசத்துக்கு ஒருக்கா போயிருவேன். தேதிவாரியா கட்டி வெச்சிருப்பாங்க. எப்பப் பாத்தாலும் ஒரேமாதிரிதான் இருக்கும் அந்தப் பொண்ணு. அப்பத்தான் குளிச்சுட்டு வந்தா மாதிரி குளுகுளுன்னு இருக்கும். அசதியாவோ அலுப்பாவோ முகஞ்சுளிச்சுப் பாத்ததில்லை. என்ன கேட்டாலும் லேசா சிரிப்பாங்க. ஒத்த வார்த்தை பேசுவாங்க.”
இவன் தேவையில்லாமல் மிகைப்படுத்துவதாய் ஒருகணம் நினைத்தேன்.
நல்லபடியாத்தான் இருந்துச்சு. என்னவோ திடீர்னு பத்துநாள் அந்தம்மா ஊர்ல இல்லை. ஊருக்குப் போயிருக்காங்கன்னு நாயர் சொன்னாரு. அப்பறம் ஒரு வாரம் ஆச்சு. ஒரு மாசம் ஆச்சு. ஆளே காணலை. நாயரும் கண்ணுல தட்டுப்படலை. வெளியில ஒரு அட்டை மட்டும் தொங்கிச்சு ‘விடுமுறை’ன்னு. என்ன ஏதுன்னு யாருக்கும் தெரியலை.”
மிகுந்த விசனத்துடன் அவன் சொன்னபோது ஆச்சரியமாயிருந்தது. கூடவே கொஞ்சம் சந்தேகமும். ‘இவனுக்கு உண்மையிலேயே மாதவியைத் தெரியுமா?”
மீண்டும் ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டவன் புகையை ஊதியபடியே பேப்பர் கட்டுகள் அடங்கிய பெஞ்சின் முனையில் உட்கார்ந்தான்.
அதுக்கப்பறமா நான் நாயரைப் பார்க்கலை. பக்கத்துவீட்டு பீட்டர் சார்தான் சொன்னாரு. ஒருநா ராத்திரி நாயர் மட்டும் வந்துருக்காரு. எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு விடிகாலைலேயே போய்ட்டாருன்னு. எங்க போனாரு என்னாச்சுன்னு எந்த விபரமும் தெரியலை.”
திடீரென்று இந்த இழை இப்படி அறுபட்டுப் போகுமென்று நினைக்கவில்லை. எரிச்சலைக் காட்டிக்கொள்ளாமல் சிகரெட்டைப் பற்றவைத்தேன்.
டீ சொல்லட்டுமா?” என்றவன் எதிர்ப்பக்கத்துக் கடைக்கு கைகாட்டினான். டம்ளர்களைக் கழுவிக்கொண்டிருந்தவன் தலையையாட்டினான்.
அந்த பீட்டர் சார் இருக்காரா?”
அவன் சிரித்தபோது பற்களின் மஞ்சள் கறை பளிச்சிட்டது. “பீட்டர் சாரெல்லாம் காலமாயி வருஷம் பத்தாயிருச்சு. அந்த வீட்டையே வித்துட்டு போயிட்டாங்க. இப்ப நாயரைப் பத்தி தெரிஞ்ச ஒரே ஆளு அந்த பரமேஸ்வரன்தான். அவரும் இப்ப ஊர்ல இல்லேன்னு சொல்றீங்க.”
சூடான தேநீர் சற்றே நிதானத்தைத் தந்தது. ஊருக்கே திரும்பிப் போயிருப்பாரோ?
அவரு எந்த மில்லுல வேலை செஞ்சாரு?”
தனலட்சுமி மில்லு. அங்க போயி விசாரிக்கலாம்னு பாக்கறீங்களா?” பீடியை தரையில் போட்டு நசுக்கியவர் டீ தம்ளர்களை பெஞ்சின் கீழே வைத்தார்.
திருப்பூர்ல இப்ப ஒரு மில்லும் கெடையாது. எல்லாத்தையும் இடிச்சு நொறுக்கி சைட் போட்டாச்சு. ஒரு காலத்துல பத்து பன்னென்டு மில்லுக இருந்துச்சு.”
எதையும் யோசிக்காம நீங்க நாளைக்கு காலையில வந்து பரமேஸ்வரனைப் பாருங்க. செரியா?” பேப்பர் கட்டுகளைத் தரையில் போட்டு அடுக்கலானார்.
0
இது பழைய மாதவி இல்லை. இவள் வேறொருத்தி’ சங்கரன் நாயரின் மனதில் அந்த எண்ணம் எழுந்ததும் பயந்தார்.
ஒருபாதி திறந்திருந்த பின்வாசல் கதவு வழியாக சமையல்கட்டில் விழுந்த வெளிச்சத்தையே உற்றுப் பார்த்திருந்தவளது முகம் பிரகாசித்தது. மூக்கு நுனியில் வெயில் கற்றை விழுந்து சரிந்தது. ஈர உதடுகள் பளிச்சிட்டன. கருப்புப் புடவையின் ஓரச் சிவப்பும் அவள் நெற்றிப் பொட்டும் ஒரே நிறத்திலிருந்தன.
சற்று முன்பு மதியம் மூன்று மணிக்கு தொலைபேசி ஒலித்தபோது சங்கரன் நாயர் ஷிப்டு முடிந்து வந்திருக்கவில்லை. எப்போதும்போல மின்விசிறிக் காற்றில் கூந்தல் பறந்திருக்க மாதவி தரையில் படுத்திருந்தாள். தூங்குவதில்லை. ஆனால் கண்களை மூடியபடி நினைவுகளில் ஆழ்ந்திருப்பாள். முகத்தில் அவ்வப்போது விரியும் புன்னகையும் சிலவேளைகளில் களுக்கென்ற சிரிப்புமாய் கழியும் அந்த வேளை அவளுக்கு மிகப் பிடித்தமானது.
அழைத்தது சதானந்தன். ஆச்சரியம்தான் என்றாலும் சிலநாட்களாகவே மாதவி இந்த அழைப்பை எதிர்பார்த்திருந்தாள். இது ஏதேனும் ஒரு நாளில் இதுபோன்ற பொழுதொன்றில் வரக்கூடும் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. அடிக்கடி இல்லையென்றாலும் மாதம் ஒரு முறையேனும் அவன் அழைப்பதுண்டு. இதே நேரத்தில்தான். அரைமணி நேரம் வரை நீளும் பேச்சில் பெரும்பகுதி அவனேதான் பேசுவான். சிலசமயங்களில் இரண்டு நிமிடங்களில் அழைப்பு முடிந்துவிடும்.
சமீப நாட்களில் அவனது அழைப்பில் இருந்த பதற்றத்தையும் இவளைப் பார்க்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தவிப்பையும் உணர்ந்திருந்தாள். சங்கரன் நாயரிடம் ஒன்றும் சொல்லவில்லை.
மாதவி இனியும் யோசிக்காத. எனக்கு ரொம்ப முடியல. எத்தனை நாள்னு தெரியலை. டயாலிஸிஸ் போயிட்டிருக்கு. நீ வந்தா பரவால்லேன்னு கெஞ்சறேன். பதிலே சொல்ல மாட்டேங்கற.”
உங்களுக்குத் தெரியாதா? எப்பிடி நான் வரமுடியும்?”
உசுரோட இருக்கும்போது பாக்கணும்னா ரெண்டுநாள்ல வா. இல்லேன்னா எப்பவும் வராதே.”
அழைப்புத் துண்டிக்கப்பட்டது. காற்றின் வெற்றோசையை கேட்டபடியே அமர்ந்திருந்தவள் அவனது எண்ணைச் சொடுக்கினாள்.
மூன்று முறை ஒலித்து அடங்கியது. மீண்டும் முயன்றபோது மூச்சிறைத்தபடி கேட்டான் “என்ன?”
ஏன் இப்பிடி பண்றீங்க. டாக்டர் என்ன சொல்றாங்க?”
டயாலிஸிஸ் பண்ணலைன்னா ரெண்டு நாள்தான் இருப்பேன்னு சொல்றாங்க.”
ஏன் டயாலிஸிஸ் பண்ணவேண்டாம்?”
அதப் பண்ணி உசுரோட இருந்து நான் என்ன பண்ணப் போறேன்?”
சட்டென உடைந்து கண்ணீர் திரண்டது.
கெட்டுப் போன ஒடம்பு. எத்தனை நாளைக்கி இப்பிடி ஊசியும் மருந்துமா காப்பாத்தி வெக்கறது? அப்பிடி காப்பாத்தி என்ன ஆகணும்?”
சரி. ஓகே. நீங்க சொல்றபடியே பாத்தாலும் நான் அங்க வந்து என்ன பண்ண முடியும்?”
பதில் வரவில்லை. அழைப்பைத் துண்டித்திருந்தான்.
மொபெட்டை நிறுத்திவிட்டு நாயர் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தபோது மாதவி தொலைபேசி மேசைக்கு அருகில்தான் உட்கார்ந்திருந்தாள். உலர்ந்த கண்ணீர்தடம். இறுகிய பார்வை.
சங்கரன் நாயர் ஒன்றும் கேட்காமல் குளியலறைக்குள் புகுந்தார். எப்போதும்போல நிதானமாக உடலைக் கழுவினார். துவட்டிய ஈரிழைத்துண்டை கொடியில் உலர்த்திவிட்டு அடுப்பைப் பற்றவைத்தார். பால் கொதித்ததும் தேயிலையைப் போட்டுக் கலக்கினார்.
சூடான தேநீரை அவள் முன்னால் வைத்துவிட்டு மின்விசிறியை முடுக்கினார். தேநீரை பருகியபடியே அவளை உற்றுப் பார்த்தார்.
ரைட்டருக்கு ரொம்ப முடியலையா?
தம்ளரை கையிலெடுத்தவள் நிதானமாகப் பருகினாள். குடித்து முடித்தவுடன் முகத்தைத் துடைத்தவள் கால்களை நீட்டிக்கொண்டாள். “மதுரம் கூடுதலான்னு…”
ஓ”
ம். போன் வந்நிருன்னு. டெய்லி டயாலிஸிஸ். சகாயத்தினு யாருமில்ல அதானு பிரஸ்னம்.”
போய் கண்டுட்டு வராமல்லோ?”
ம்ம். போகணும். அதான்…”
போயிட்டு வா. மனுஷன் சுகமில்லாதெ கெடக்குந்நு. இப்போள் ஆரெங்கிலும் போய் எந்தென்னு அன்வேஷிக்கும்போள் சமாதானம் கிட்டும். எத்தர வலிய எழுத்துக்காரன். எத்தர எழுதிய ஆளானு. அத்தர போய் வாயிச்சிரிக்கும். ஈ சமயத்து யாரும் இல்லெங்கில் கஷ்டமானு.”
நாயரையே உற்றுப் பார்த்திருந்தவள் அழத் தொடங்கினாள். உடல் குலுங்க முழங்காலில் தலைகவிழ்த்தாள். நாயர் தம்ளர்களை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் புகுந்தார். பாத்திரங்களைக் கழுவித் துடைத்து மேடையில் கவிழ்த்துவிட்டு உள்ளே வந்தபோது அவள் தரையில் கிடந்தாள்.
கரைஞ்ஞிட்டு ஒரு காரியவும் இல்ல. ராத்திரி பஸ்ஸில் போயால் நன்னாயிருக்கும். ஞான் போய்…”
துணிகளை அடுக்கிக்கொண்டு புறப்பட்டபோது அவள் அதே கருப்புப் புடவையுடன்தான் இருந்தாள். தண்ணீர் நிரப்பிய பாட்டிலை அவள் கையில் கொடுத்தபோது நாயர் கேட்டார் “ஒரு சம்சயம். தெற்றாயி விஜாரிக்கண்டா இப்போள் நீ னாணான் போகுன்னது பிராந்தனையானோ அல்லெங்கில் மனுஷனையானோ?”
மாதவி இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. சிறு திடுக்கிடலுடன் தலையாட்டிவிட்டு செருப்பை மாட்டிக்கொண்டாள்.
0
பரமேஸ்வரன் கண்ணாடியைக் கழற்றி தலையணை அருகில் வைத்தார். மூக்குத் தண்டின் மேலிருந்த தழும்பை மெல்லத் தடவியபடியே கால்களை நீட்டிக்கொண்டார். நெடிய உடலில் தளர்ச்சி துலக்கமாகத் தெரிந்தது. கைவைத்த பனியனில் அங்கங்கே சிறு பொத்தல்கள்.
காலை பதினோரு மணிக்கு அதே வீட்டுக்கு மறுபடி வந்து கதவைத் தட்டியபோது பரமேஸ்வரனே திறந்தது எனக்கு பெரும் ஆசுவாசத்தைத் தந்திருந்தது. மருமகள் ஏற்கெனவே நான் தேடி வந்த விஷயத்தைச் சொல்லியிருக்கவேண்டும். “நீங்கதான் நேத்திக்கு வந்தீங்களா?”
என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் தனது அறைக்குள் அழைத்துச் சென்றார். அறையில் எல்லா இடங்களிலும் புத்தகங்களே நிறைந்திருந்தன. மூலையில் இருந்த மேசை, அடுத்திருந்த நீண்ட பெஞ்சு, கதவருகில் நின்ற இரும்பு அலமாரி, கட்டிலுக்கு அடியில் இருந்த இடம் என எல்லா இடங்களிலும் புத்தகங்கள். கட்டிலில் உட்கார்ந்து கால்களை நீட்டிக்கொண்டு என்னை நிதானமாகப் பார்த்தார். அடர்ந்த தலைமுடி முழுக்க நரைத்திருந்தது. சதுரமான பட்டைக் கண்ணாடி. இடது தாடையில் அழுத்தமான தழும்பு பளபளத்தது.
இத்தனை வருஷம் கழிச்சு சங்கரன் நாயர் லைப்ரரியைத் தேடி ஒருத்தர் வருவார்னு நான் யோசிக்கவேயில்லை.”
வயது எழுபதைக் கடந்திருக்கவேண்டும். இன்னும் பத்திரிக்கை, புத்தகங்கள் என அலைந்திருப்பது அவரை உற்சாகத்துடன் வைத்திருந்தது.
மாதவி அதுக்கப்பறம் வரவேயில்லையா?” என்று கேட்டேன்.
அதுக்கப்பறமா மாதவி வரவேயில்லை. ரெண்டு நாளாச்சு மூணு நாளாச்சு. இன்னிக்கு வந்துருவா நாளைக்கு வந்துருவான்னு நாயரும் பாத்துட்டிருந்தார். ஒரு வாரங் கழிச்சு ஒரு லெட்டர் வந்துச்சு.”
அந்தக் கடிதத்தை அவர் மீண்டும் நினைவிலிருந்து வாசிப்பதுபோல கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார்.
சுருக்கமா அவ எழுதிருந்தது இதுதான். இனிமே நான் வரலை. கடைசி காலத்துல அவர்கூட இருக்க விருப்பம். நான் இல்லாம நீங்க சமாளிச்சுக்குவீங்கன்னு தெரியும். இதுமாதிரிதான் எழுதிருந்தா. நாயருக்கு பெரிய அதிர்ச்சியில்லைன்னுதான் சொல்லணும். ஒருமாதிரி அவருக்குத் தெரியும்போல. இதுல சமாதானம் பண்றதுக்கோ சண்டைபோட்டு கூட்டிட்டு வர்றதுக்கோ என்ன இருக்கு? இருக்கட்டும். அவளுக்கு எது சந்தோஷமா அப்பிடியே இருக்கட்டும்னு மனுஷன் ஷிப்டுக்கு கௌம்பிப் போயிட்டார். மறுநாள் காலையிலதான் தெரியும் ராத்திரியோட ராத்திரியா வீட்டை காலிபண்ணிட்டு போயிட்டாருன்னு.”
நீங்க அவரைப் பாக்கவேயில்லையா?” நான் ஆவல் தாளாமல் கேட்டேன்.
ஒரு மாசமிருக்கும். வேலை வேண்டான்னு எழுதிக் குடுக்கறதுக்காக மில்லுக்கு வந்தப்பத்தான் பாத்தேன். மனுஷன் அப்பிடியேதான் இருந்தார்.”
கட்டிலில் இருந்து எழுந்து கட்டமிட்ட வெள்ளை வேட்டியை சரிசெய்தார். பானையில் இருந்த தண்ணீரைப் பிடித்துக் குடித்தார்.
எங்க போனாரு?”
இனி வேல பாத்து என்னாகப் போகுது? புள்ளையா குட்டியா? அவ விட்டுட்டு போன சொத்து புஸ்தகந்தான். அந்தத் தொழிலையே நடத்தறேன்னு சொன்னாரு. உடுமலைப்பேட்டை பக்கத்துல லட்சுமி மில் ஒண்ணு இருந்துச்சு. அங்க இருந்த தொழிற்சங்கக் கட்டிடத்துல ஒருபகுதியை ஒதுக்கிக் குடுத்தாங்க. அங்கதான் லைப்ரரியை வெச்சாரு. பக்கத்துல ஒரு சின்ன வீட்லதான் தங்கிக்கிட்டாரு.”
இப்பவும் அங்கதான் இருக்காரா?”
இல்லை. உடுமலைப்பேட்டைக்கே போயிட்டாரு. கோர்ட்டுக்கு பின்னாடி புளியமர பஸ் ஸ்டாப் இருக்கு. அங்க போயி சங்கரன் நாயர்னு கேட்டா சொல்லுவாங்க.”
கடைசியா நீங்க அவரை எப்பப் பாத்தீங்க?”
மில்லுல இருந்து போனதுக்கப்பறமா ரெண்டு தடவை உடுமலைப்பேட்டையில சந்திச்சேன். பழைய ஆட்கள் போயி அவரைப் பாக்கறதை அவர் விரும்பலை. எதையும் ஞாபகப்படுத்தவேணாம்னு நெனச்சிருக்கலாம். அதான் இப்பல்லாம் போய் பாக்கறதில்லை. இப்ப நீங்க அங்க போனாக்கூட நீங்க தேடற புக்கை அவர் தருவார்னு சொல்ல முடியாது.”
அலமாரியின் மேலடுக்கிலிருந்து உருவி எடுத்துத் தந்த பழைய புத்தகத்தின் முதல் பக்கத்தில் அந்த முத்திரை. ‘சங்கரன் நாயர் லைப்ரரி, அண்ணா காலனி, திருப்பூர்’. பழுப்புக் காகிதத்தில் ஊதா மசியில் அழுத்தமான முத்திரை. 187 என்ற எண் கருப்பு மசியால் எழுதப்பட்டிருந்தது.
இந்த ஒண்ணுதான் எங்கிட்ட இருக்கு.”
அந்த சதானந்தன் என்ன ஆனார்? அப்பறம் மாதவியைப் பத்தி ஏதாவது தெரிஞ்சதா?”
பரமேஸ்வரன் மேசையின் மேல் அடுக்கியிருந்த கோப்புகளில் ஒன்றை எடுத்தார். செய்தித்தாள் நறுக்குகள், படங்கள் என தேதி வாரியாக கோர்க்கப்பட்டிருந்தன.
இதப் பாருங்க. சதானந்தன் இறந்து போன செய்தி. மாதவி இங்கிருந்து போயி ஒரு வருஷம் கழிச்சு எறந்துருக்கார். அதுவரைக்கும் அவர்கூடத்தான் இருந்தாளா என்னன்னு விவரம் தெரியலை.”
பழுப்பேறிய மலையாள செய்தித் தாளில் மங்கலான படம். முன்னர் எப்போதோ எடுக்கப்பட்ட படமாக இருக்கவேண்டும். நீண்ட தலைமுடி, தாடையில் ஒட்டிக்கொண்ட குறுந்தாடி, நடுமூக்கு வரை இறங்கிய கண்ணாடி வழியாக உற்று நோக்கும் கண்கள், ஜிப்பா என எழுத்தாளனின் அநேக லட்சணங்களையும் கொண்டிருந்தது அந்த கருப்பு வெள்ளைப் படம்.
மாதவியோட படம் எதுவும் இருக்கா?”
எப்படி அந்தக் கேள்வியை நான் கேட்டேன் என்று எனக்கே புரியவில்லை. அவர் சற்றே முறுவலித்தார். பிறகு நிதானத்துடன் தலையாட்டினார். “சங்கரன் நாயரோட கல்யாணப் படத்துல இருக்கா. ஆனா அது எங்கிட்ட இல்லை.”
மாடியிலிருந்து கீழே வந்த பின்பு ஜன்னலை நிமிர்ந்து பார்த்தேன். பரமேஸ்வரன் பார்த்துக் கொண்டு நின்றார்.
0
உடுமலைப்பேட்டைக்கு டிக்கெட் வாங்கியிருந்த நான் “லட்சுமி மில் எறங்கு” என்று கண்டக்டரின் குரல் கேட்டதும் அவசரமாக எழுந்து இறங்கினேன்.
பேருந்து நகர்ந்த பின்பு நிறுத்தத்தை அடுத்து பெரிய அரசமரத்தின் கீழிருந்த இளநீர் கடையருகே சென்றேன். குளுமையான நிழல். சில்லென்ற இளநீர். எதிர்புறமிருந்த மைதானத்தை அடுத்திருந்த கம்பங்களில் நிறமிழந்த கொடிகள் தளர்ந்து அசைந்தன.
எந்த சங்கத்தை கேக்கறீங்க? கதுரா, சுத்தியலா?”
எனக்கு சொல்லத் தெரியவில்லை.
எதுத்தாப்பல செல்போன் கடை இருக்கு பாருங்க. அங்க போய் கேளுங்க.”
செல்போன் கடையை ஒட்டிய சந்தில் பின்பக்கமாய் ஒடுங்கியிருந்தது சங்கம். துணிபோர்த்திய கேரம்போர்டுக்கு அருகில் முகத்தை மூடி படுத்திருந்தவர் சோம்பலுடன் எழுந்தார். இடுங்கிய கண்களால் எரிச்சலுடன் பார்த்தவர் லுங்கியை இறுக்கியபடியே யோசித்தார்.
ஆமா. முன்னாடி இருந்ததா சொல்லுவாங்க.”
பானையிலிருந்து தண்ணீரை எடுத்து முகத்தில் இறைத்தார். கண்களைத் துடைத்துவிட்டு கொப்புளித்துத் துப்பினார்.
இப்ப லைப்ரரியெல்லாம் இங்க ஒண்ணும் இல்ல.”
உள்ள பாக்கலாமா?”
உள்ளெயெல்லாம் ஒண்ணுமில்ல. இதா இப்பிடி எட்டுக்கு எட்டுதான். மீதியெல்லாம் கடைக்கு வாடகைக்கு விட்டாச்சு.”
இனி எதையும் கேட்கவேண்டாம் என்ற எண்ணம் எழுந்தது. நிறுத்தத்தை நெருங்கும்போது வந்து நின்ற பேருந்தில் ஏறி அமர்ந்தேன். சங்கரன் நாயர் லைப்ரரி இனி எங்கும் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை முற்றிலுமாக மறையலானது.
0
பேருக்குத்தான் புளியமர நிறுத்தம். அந்த இடத்தில் எந்த மரமும் இருக்கவில்லை. வரிசையாய் கடைகள். வாசலில் ஏராளமான வாகனங்கள். எல்லா இடத்திலும் பரபரப்பு. விதவிதமான அலங்காரங்களுடன் செல்போன் கடைகள். நீலமும் சிவப்புமாய் குடைகள். ‘மாமன் பிரியாணி’ கடை வாசலில் ஆட்கள் இலைவைத்த தட்டில் சுடச்சுட பிரியாணியை சுவைத்து நின்றார்கள்.
பூக்கடையிலிருந்தவளின் கழுத்தில் ஏராள நகைகள். “நாயர் கடையா?”
கடை இல்லை. லைப்ரரி.”
பூக்களை அடுக்கி லாவகத்துடன் விரல்கள் நூலை முடிச்சிட்டிருக்க தலைநிமிர்த்தாமல் அலட்சியமாகச் சொன்னாள் “அது தெரியாது. அங்க பாத்திரக் கடை இருக்கு. அதத்தான் நாயர் கடைன்னு சொல்லுவாங்க.”
எங்க இருக்கு?”
இதா கெழக்க போற ரோட்டுல போனா ரெண்டாவது முக்குல இருக்கு. பக்கத்துல ஆட்டோ மாரியம்மன் கோயில் இருக்கும் பாருங்க. அங்கதான்.”
மெல்ல நடந்தேன். இதுதான் கடைசி வாய்ப்பு. சங்கரன் நாயரும் அவருடைய புத்தகங்களும் இல்லையில்லை மாதவியின் புத்தகங்களும் இங்கேதான் இருக்கின்றனவா? பாத்திரக் கடையா? சற்றே படபடப்பாக உணர்ந்தேன். நொதித்தோடிய சாக்கடை பள்ளத்தின் அருகில் பிளாஸ்டிக் குப்பைகள் கருப்பாய் குவிந்திருந்தன. பாதாளச் சாக்கடைக்காக தோண்டிய பள்ளங்களினூடே வாகனங்கள் தடுமாறி ஊர்ந்தன.
ஆட்டோ மாரியம்மன் கோயிலை அடையாளம் காணமுடிந்தது. சாலையின் நடுவில் சிறிய கோயில். நின்றேன். நாற்புறமும் பிரியும் சாலைகள். எந்த மூலையில் இருக்கிறார் சங்கரன் நாயர்?
தல தளபதி‘சலூன். அதையடுத்து ஜெராக்ஸ் கடை. ராஜதானி பேக்கரி.
பேக்கரி வாசலில் நின்ற ஆட்டோக்காரர் டீயை உறிஞ்சியபடியே அலட்சியமாகச் சொன்னார் “பின்னால திரும்பிப் பாருங்க.”
நான் திரும்பிப் பார்த்தேன். எனக்கு எதுவும் புரியவில்லை. “அந்தப் பாத்திரக் கடைதான். போங்க.”
அப்போதுதான் கவனித்தேன். ‘நாயர் பாத்திரக்கடை’ ராஜதானி பேக்கரிக்கும் ஜெராக்ஸ் கடைக்கும் நடுவில்.
கடையில் யாரும் இருக்கவில்லை. முன்னால் ஒரு மேசை. தொலைபேசி. நாற்காலியை ஒட்டி பின்னால் சாமியானாவுக்கான கம்பங்களும் வண்ணப் படுதாக்களும் கிடந்தன. இடது ஓரத்தில் பெரிய அடுப்புகள். அதையொட்டி பாத்திரங்கள் அடுக்கிய அலமாரி. ஒரு ஆள் மட்டுமே நுழையும் வாசலில் திரை.
சார்…”
இரண்டாவது முறை அழைத்தபோது திரையைத் தள்ளிக்கொண்டு நிதானமாக வெளியே வந்தவர் என்னை நிமிர்ந்து பார்க்காமல் நாற்காலியில் அமர்ந்தவுடன் கேட்டார் “என்ன வேணும்?”
இவர்தான் சங்கரன் நாயரா?
சங்கரன் நாயர்”
நான் சொன்னதும் தடித்த கண்ணாடியை மேலே தள்ளியபடி நிமிர்ந்து பார்த்தார். இணக்கமில்லாத முகபாவம் மேலும் இறுகியது.
உங்களுக்கு என்ன வேணும்?”
அவரத்தான் பாக்கணும். நான் ரொம்ப தூரத்துலேர்ந்து வரேன்”
நாற்காலியின் முதுகில் கிடந்த துண்டை எடுத்து அருகில் கிடந்த ஸ்டூலைத் துடைத்தார்.
உக்காருங்க.”
மின்விசிறியின் வேகத்தைக் கூட்டினார். குட்டையான தடித்த உருவம். கழுத்துச் சதை தொங்கி தோளைத் தொட்டிருந்தது. காதுமடல்களில் கட்டையான மயிர்கற்றை. பிடரியிலும் புறங்களிலுமாய் ஒட்டியிருந்தது நரைமயிர். காவி வேட்டி கணுக்காலுக்கு மேலாக நின்றது.
சொல்லுங்க.’
தயங்கினேன். எதிலிருந்து தொடங்குவது?
குருமூர்த்தி சார்னு… இப்ப பெங்களூர்ல இருக்கார். முன்னாடி அண்ணாகாலனில…”
அவர் கையை உயர்த்தி நிறுத்தினார். “குருமூர்த்தியா… நல்லா இருக்காரா?”
ஒரு பிடி கிடைத்த மகிழ்ச்சியுடன் தொடர்ந்தேன். “இப்ப முடியலை. ரொம்ப ஆசைப்பட்டார் வரணும்னு. ஆனா அவரால நடக்க முடியாது. அதான் என்னைப் பாத்துட்டு வரச் சொன்னார்.”
என்னத்தைப் பாக்கணுமாம் அவனுக்கு?” ஒருகணம் அவர் கண்கள் சினந்தன.
உங்க லைப்ரரி… அதுலேர்ந்த புக்ஸ்…”
அவர் பார்வை என்னை நிறுத்தியது.
வேற வேலையில்லையா தம்பி உங்களுக்கு. அந்தப் பைத்தியகாரன்தான் சொன்னான்னா நீங்களும் வந்துட்டீங்க. லைப்ரரியாம் புஸ்தகமாம். மடையன்.”
கோபத்தில் உதடுகள் துடித்தன. மேசையின் மீதிருந்த அவரது கையின் நடுக்கத்தை என்னால் பார்க்க முடிந்தது.
அவர் தணியும் வரை பொறுத்திருக்க முடிவு செய்தேன். ஒன்றும் சொல்லாமல் வெளியே வேடிக்கை பார்த்தேன்.
யாருக்கு வேணும் புஸ்தகம். இத்தன பேரு இருக்காங்களே. எவனாச்சும் எதையாச்சும் கெவனிக்கறான்னு பாருங்க. எல்லாத்து கையிலயும்தான் ஒலகம் இருக்கே. அப்பறம் எதுக்கு வேணும் புஸ்தகம்.”
அவராகவே பேசட்டும். ஏதேனுமொன்று உடைபட்டு வெளியே கொட்டும். பார்க்கலாம். அதுவாக நடக்கட்டும்.
இப்ப என்ன. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பாருங்க. பேப்பர் படிக்கக்கூட ஆள் இருக்காது. புஸ்தகமாம் புஸ்தகம்.”
மேசையின் ஓரத்திலிருந்த பாட்டிலை எடுத்து நடுக்கத்துடன் தண்ணீர் குடித்தார். நைந்திருந்த கை பனியனின் கழுத்தை இழுத்துவிட்டுக் கொண்டார். “எந்த லைப்ரரிக்கு எவன் போறான்? கவர்மெண்டும் புஸ்தகம் வாங்கறதில்லை. இருக்கற புஸ்தகத்தை எடுத்துப் பாக்கறதுக்குக்கூட ஆள் வரதில்லை. எல்லாத்தையும் வெச்சுட்டு என்ன பண்றது? யாருக்கும் வேணாத பொருளை அடுக்கி அடுக்கி வெச்சுட்டு என்ன பிரயோசனம்?”
புஸ்தகமே எங்கயும் இருக்கக்கூடாது. மரஞ் செடி கொடி இல்லாத பாலைவனம் மாதிரி இந்த ஊரே புஸ்தகம் இல்லாம பாழாப் போகணும். அதையெல்லாம் நான் பாக்கப் போறதில்லை. ஆனா அப்பிடித்தான் நடக்கும்.”
மூச்சு வாங்கியது. கண்களை மூடிக்கொண்டு நாற்காலியில் சாய்ந்தார்.
ஒவ்வொரு புக்கும் ஒரு கண்ணாடி, சத்யம்னு சொல்லுவா. இப்ப ஒருத்தர்க்கும் சத்யம் வேணாம். கண்ணாடியும் வேணாம்.”
நான் எதிர்பார்த்த தருணம். நிமிர்ந்தேன். ஒருகணம் அவர் தன் வார்த்தைகளை உணர்ந்திருக்கவேண்டும். சட்டென முகம் இறுகியது.
எரிச்சலுடன் முறைத்தார் “யார் எக்கேடு கெட்டா எனக்கென்ன? உங்களுக்கு என்ன வேணும்?”
உங்ககிட்ட நான் தேடற புத்தகம் இருந்தா பாக்கலாம்னுதான்…”
எங்கிட்ட இப்ப எந்த புத்தகமும் இல்லை.”
யார்கிட்ட குடுத்தீங்கன்னு தெரிஞ்சா அங்க போய்…”
கசப்புடன் சிரித்தார். “யார்கிட்டயும் நான் குடுக்கலை.”
அப்பறம் என்ன பண்ணுனீங்க?”
மேசை இழுப்பறையைத் திறந்து எதையோ வெளியே எடுத்து மேசையின் மேல் வைத்தார். பொடி டப்பா. நிதானத்துடன் மூடியைத் திறந்து சிட்டிகை அளவுப் பொடியை எடுத்தார். முகர்ந்து பார்த்துவிட்டு மூக்கின் நுனிகளில் தேய்த்தார்.
சிறிய தும்மல். மூக்கை உறிஞ்சினார். கண்கள் நீர் கோர்த்தன.
எல்லாத்தையும் போட்டு கொழுத்திட்டேன்.”
0
(‘கிளைமேட்’ ஜூலை 2019 )







No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...