Thursday 14 November 2019

கால்நடையாளனின் தனிவழி




(‘பாதுஷா என்கிற கால்நடையாளன்’ சிறுகதைத் தொகுதி பற்றிய குறிப்பு)



சிறுகதையின் தொடக்க காலம் முதல் இன்று வரை அதன் உள்ளடக்கமும் வடிவமும் சொல்முறையும் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. முந்தைய ஒன்றிலிருந்து வேறுபட்டிருக்கும் விதத்தில் கதையை எழுதவேண்டும் எனும் கதைசொல்லிகளின் முனைப்பே இவ்வாறான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. வடிவத்தை செறிவுபடுத்தும் நோக்கிலும் அதன் வாசிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின் வழியாக சிறுகதை பல்வேறு பரிமாணங்களை அடைந்துள்ளது. வடிவமற்ற கதை, கதையற்ற கதை, நெடுங்கதை, இலக்கணங்களுக்கு மாறான கதை, நுண்கதை, நீள் கதை என்று ஏராளமான வகைப்பாடுகளில் எழுதப்பட்டுள்ளது.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளவை நாவல்களே. தகழி, எம்.டி.வாசுதேவன் நாயர், , முகுந்தன், .வி.விஜயன் ஆகியோரது ஆக்கங்களின் வழியாக மலையாள நாவல்களைப் பற்றிய அறிமுகம் உள்ளது. அதேநேரத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மலையாள சிறுகதைகளின் எண்ணிக்கையை யோசித்தால் சிறுகதையில் அங்கே என்ன நடக்கிறது என்பதை கணிக்க போதுமானவையாக இல்லை. பஷீர், என்.எஸ்.மாதவன், சக்காரியா, கமலா தாஸ் போன்றவர்களது தொகுப்புகளின் வழியாக ஓரளவு அறிந்திருக்கிறோம். சமகால மலையாள சிறுகதையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் குறித்தும் இன்றைய சிறுகதையாளர்களைக் குறித்தும் போதிய அளவு அறிமுகம் இல்லை.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ‘பாதுஷா என்ற கால்நடையாளன்’ என்ற சிறுகதைத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. உண்ணி.ஆர் எழுதிய சிறுகதைகள் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் சில வருடங்களுக்கு முன்பு ‘காளி நாடகம்’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டு வெளியானது.
தமிழில் இன்று எழுதிவரும் சிறுகதையாளர்கள் பலரிடமும் சிறுகதையை புதிய முறையில் சொல்லவேண்டும் என்ற முனைப்பை கவனிக்க முடிகிறது. பல்வேறு வடிவ உத்திகளையும் சொல்முறைகளையும் கையாள்கிறார்கள். பல சமயங்களில் இவ்வாறான முனைப்பு சிறுகதையின் அடிப்படையான வாசிப்புத்தன்மைக்கு ஏதுவாக அமையாமல் போகிறது. சொல்லவேண்டிய கதையை ஒருங்கமையாத மொழியும் கச்சிதமற்ற வடிவமும் சிதைத்துவிடுவதை பல கதைகளிலும் பார்க்க முடிந்துள்ளது. ஒரு கதையை புதுமையாகவும் இதுவரை சொல்லப்படாத விதத்திலும் எழுதுவதற்கான உதாரணங்களாக உண்ணி.ஆர்-ன் சிறுகதைகளைச் சொல்ல முடியும்.
கதையின் சொல்முறையே உண்ணியை தனித்துவப்படுத்துகிறது. நவீன சிறுகதை எழுதவேண்டும் என்பதற்காக அவர் வடிவத்தைக் கலைத்துப் போடுவதோ வாக்கிய அமைப்பை மாற்றியமைப்பதோ இல்லை. மரபான கதை வடிவையும் வாக்கிய அமைப்பையுமே பெரிதும் பிரயோகிக்கும் அவர் கவிதையின் நுட்பத்தைக் கொண்டு தன் சொல்முறையை தேர்ந்திருக்கிறார். கதையில் அவர் சொல்வது மிகக் குறைவானதே. சொல்லப்போனால் ஒரு காட்சியின் சிற்சில கணங்களையே எழுதிக் காட்டுகிறார். கதையின் முன்னும் பின்னுமான காட்சிகளையும் நீட்சிகளையும் அவர் சொல்வதில்லை. ஆனால் அவர் வரையும் கோடுகளிலிருந்து முழுமையான சித்திரத்தை வாசகனால் பார்த்துவிட முடிகிறது. மிகக் குறைவான சொற்களில் விவரிக்கப்படும் கதாபாத்திரங்கள் கச்சிதமான சித்தரிப்பின் வழியாக உயிர்பெறுகிறார்கள். மனதைக் கனக்கச் செய்யும் துயர்மிகு சந்தர்ப்பங்களை அவர் எந்தவிதமான உணர்ச்சிப்பெருக்குமற்ற அசைவுகளாக நிறுத்தியபோதிலும் வாசகனிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துபவையாக உள்ளன.
ஒரு நவீன சிறுகதையை எளிமையாகவும் விளையாட்டாகவும் சொல்ல முடியும் என்பதற்கு ‘விடுமுறை நாள் ஆட்டம்’ கச்சிதமான உதாரணம். சமகால வாழ்வு தனிமனிதனுக்குள் திரட்டிச் சேர்த்திருக்கும் வன்முறை வெகு இயல்பான கொண்டாட்டமான தருணத்தில் வெளிப்படும் திடுக்கிடலை எந்தவிதமான மெனக்கெடலுமின்றி இக்கதை வாசகனிடத்தில் ஏற்படுத்துகிறது.
இதே தன்மையைக் கொண்டிருக்கும் ‘லீலை’ சில ஆண்டுகளுக்கு முன்பு பிரசுரமானபோது பெரிதும் கவனிக்கப்பட்ட ஒன்று. வாழ்வின் ஒவ்வொரு நாளையும் விநோத சாகசங்களாகவே எதிர்கொள்ளும் ஒருவனையும் அவ்வாறான கிறுக்குத்தனங்களுக்காகவே அன்றாடத்தின் இருப்பின்பொருட்டு தம்மை ஒப்புக்கொடுக்கும் பெண்களையும் மையமாகக்கொண்டிருக்கும் இக்கதையின் முடிவு அதிர்ச்சிகரமானதும் அபாரமான குறியீட்டுத்தன்மைகொண்டதும் ஆகும்.
எளிமையானதுபோல் தோற்றந்தரும் கதைகளின் வழியே உண்ணி இட்டுச் செல்லும் வாழ்வின் புதிர் வழிகள் வெகு சிக்கலானவை. பெரும் துயரையும் வலியையும் சுமந்து நிற்பவை. ‘மூன்று பயணிகள்’ கதையில் துலக்கமாக வெளிப்படும் சிறுமியின் அப்பாவித்தனம் அவளது அன்னையின் துயரை இன்னும் வலிமிகுந்ததாக மாற்றுகிறது. புகைவண்டியில் சந்திக்கும் வயதான அந்த மனிதர் சிறுமிக்கு மீட்பராக தோற்றந்தரும் அதேசமயத்தில் அவளது அம்மாவுக்கு திரும்பவியலா பாதைக்கு அவளை அழைத்துச் செல்ல வந்திருக்கும் மரணமாகவே தென்படுகிறார். குழந்தைகளினூடாக கதையை சொல்வதன் வழியாக அவருக்கு இரண்டு வசதிகள் இருப்பதை ‘பூதம்’ கதையின் வழியாக உணரலாம். ஒன்று, துயரார்ந்த வாழ்வின் தருணங்களை உள்ளடக்கிய கதையில் இயல்பாக அமையும் அழுத்தத்தை ஒற்றியெடுத்துவிட முடிகிறது. இன்னொன்று, எளிய கதையே இது என்ற தோற்றத்தை தருவதன் வழியாக வாசகனை சற்றே ஆசுவாசப்படுத்தி இறுதியில் கூடுதலான தாக்கத்தைத் தர முடிகிறது.
வரலாற்றையும் இதுவரையிலும் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளையும் மதிப்பீடுகளையும் மறுபரிசீலனை செய்வது நவீன சிறுகதைகளின் தன்மைகளில் ஒன்று. ‘காளி நாடகம்’, ‘ஆலிஸின் அற்புத உலகம்’, ‘கடவுளின் பாவம்’ போன்ற கதைகளில் வரலாற்றையும் மதிப்பீடுகளையும் நுட்பமாக பகடிக்கு உட்படுத்துகிறார் உண்ணி. தாய்வழிச் சமூக அமைப்பான கேரளாவில் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை ‘ஆலிஸின் அற்புத’ உலகமாக அடக்கமான மொழியில் சித்தரிக்கும்போது சிறுகதை தன்னளவில் நவீன தன்மையை எளிதில் அடைந்துவிடுகிறது. கார்ல் மார்க்ஸ் அடைய நினைத்த இலக்குகளின் இன்றைய நிலையை நுட்பமாக விமர்சனங்களுக்கு உட்படுத்துகிற ‘பூத’த்தில் அவரை சிறுவனும் சிறுமியும் கண்டெடுக்கும் செம்புக் குடத்தில் அடைபட்டிருக்கும் பூதமாக எதிர்பகடியின் வழியாக முன்னிறுத்துகிறது. சொல்லப்பட்டுள்ள கதைக்கும் உத்தேசித்திருக்கும் உட்பொருளுக்குமான கனத்த இடைவெளியுடன் இக்கதை வேறுதளத்தை வெகு இயல்பாகவே சென்றடைகிறது.
சமகால அவலங்களை சமூக விமர்சனங்களை பிரத்யேகமான வடிவிலும் மொழியிலும் நேரடியாகச் சொல்லும் கதைகள் வாசகனிடத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைக் காட்டிலும், சிறையில் வதைப்பட்டுத் தொழும் இஸ்லாமியக் கிழவனை ஒரு புகைப்படம்போல நிறுத்தும் ‘பாதுஷா என்கிற கால்நடையாளன்’ கதை நிகழ்த்துகிற பாதிப்பு அழுத்தமானது.
இதுவரையிலும் ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் தனித்துவத்துடனும் ஒன்றிலிருந்து இன்னொன்று மாறுபட்டதாகவும் அமைந்துள்ளன. மிகுந்த கவனத்துடனும் கூர்நோக்குடனும் கதைகளை தெரிவுசெய்திருக்கும் சுகுமாரன், அவற்றை வெகு நேர்த்தியாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பல கதைகளிலும் வாக்கியங்கள் பலவும் கவிதையின் செறிவையும் நுண்மைமையும் கொண்டுள்ளன.
முன்னுதாரணமற்ற வகையிலானது உண்ணியின் கதையெழுத்து’ என்று சுகுமாரன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் பொருத்தமானது. ஏற்கெனவே உறுதிப்பட்டிருக்கும் பாதையில் அல்லாது எளிமையும் கச்சிதமும்கூடிய வடிவிலும் மொழியிலும் புதியதொரு தனிவழியில் அமைந்துள்ள உண்ணியின் கதைகள் வாசகனுக்கு நெருக்கமானவை. அதேநேரத்தில் சவாலானவை.
0
(காலச்சுவடு, அக்டோபர் 2019 )

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...