Saturday 18 January 2020

மொழிபெயர்ப்புகளை ஏன் வாசிக்கவேண்டும்?





ஆதிமனிதன் சைகைகளின் வழியாகவே உணர்வுகளை வெளிப்படுத்தினான். சைகைகள் போதாத சமயங்களில் குரல் அவனுக்கு உதவியது. குரலே மொழியாகப் பரிணாமம் பெற்றது. இலக்கியத்தை வெளிப்படுத்த மொழி ஒரு கருவி. ஆனால் மனித உணர்வுகள் மொழிக்கு அப்பாற்பட்டது.
மனிதனின் கற்பனைகளுக்கும் எண்ணங்களுக்கும் எல்லை இல்லை என்றாலும் அவனது புலன்கள் உடலின் இயற்கையான அமைப்பால் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை. அவை அனுமதிக்கும் தொலைவுக்கு அப்பால் எதையும் காணவோ கேட்கவோ உணரவோ முடியாது. எனவே மனித அனுபவங்களும் குறுகலானவையே. தனி மனிதனது சூழலும் வாய்ப்பும் அவனது புழங்குவெளியை தீர்மானிக்கின்றன. அவனது கட்டுக்கயிறு அனுமதிக்கும் அளவே அவனால் சுற்றிவர முடியும்.
ஒவ்வொரு மனிதனின் அனுபவமும் வெவ்வேறானவை. ஒன்றுபோல் இன்னொன்றில்லை. ஒருவனின் அனுபவம் இன்னொருவனுக்கு பாடம். மனித அனுபவங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பே பண்பாடாக கலாச்சாரமாக நாகரிகமாக உருபெற்றிருக்கிறது. இலக்கியத்தின் வழியாக அனுபவங்கள் பகிரப்படும்போதுதான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற உணர்வு உருப்பெறும்.
வெவ்வேறு திசைகளில் உயிர்கொண்டிருக்கும் மனித குலத்தை உலகளாவிய உறவுகளாக உணரச் செய்வது இலக்கியமே. வெவ்வேறு மொழியையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொண்டிருக்கும் மக்கள் யாவரும் தங்களுக்குள் அனைத்தையும் பரிமாறிக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் உதவுவது மொழியாக்கங்களே.
0
சில ஆண்டுகளுக்கு முன்பு கதேவின் ‘Sorrows of Young Werther’ நாவலை ‘காதலின் துயரம்’ என்ற பெயரில் நான் மொழிபெயர்த்தேன். ஆர்.குப்புசாமி முன்னுரை எழுதியிருந்தார். அந்த முன்னுரையிலிருந்து ஒரு பகுதி மொழிபெயர்ப்பைக் குறித்தது.
ஒரு புதிய இளம் எழுத்தாளர் ஒரு கவிதை நூலை வெளியிடுமுன் குறைந்தது உலகத்தரம் வாய்ந்த பத்து கவிதைத் தொகுப்புகளையாவது வாசித்திருக்கவேண்டும். முடிந்தால் அவற்றுள் ஒன்றினையாவது தன் தாய்மொழியில் மொழிபெயர்த்திருக்கவேண்டும். அதே போல் ஒரு புதிய நாவலை எழுதி வெளியிடுமுன் உலகத்தரம் வாய்ந்த ஒரு பத்து நாவல்களையாவது வாசித்திருக்கவேண்டும். அவற்றுள் ஒன்றையாவது தன் தாய்மொழியில் மொழிபெயர்த்திருக்க வேண்டும். இந்த விதி ஐரோப்பிய எழுத்தாளர்களிடையே மிகவும் பிரபலம். சரியான பயிற்சியே முறையான கல்வி என்பதே இதற்குக் காரணம். மகாகவி கதே ஆங்கில நாவலாசிரியரும் கவிஞருமான ஆலிவர் கோல்டுஸ்மித்ன் கவிதை நூலையும் நாவலையும் ஜெர்மன் மொழியில் எழுதினார்.
யதார்த்த நாவலின் தந்தை என்று அழைக்கப்படும் பால்சாக்கின் ஒரு சில நாவல்களை பிரெஞ்சிலிருந்து உருசிய மொழிக்கு மாற்றம் செய்து பயிற்சி பெற்று அவரையே விஞ்சி உலகப் புகழ் பெற்றவர் தாஸ்தாயெவ்ஸ்கி.”
ஆர்.குப்புசாமியின் சொற்கள் முக்கியத்துவை வாய்ந்தவை.
0
ஒரு மொழியின் இலக்கியம் பிறமொழிகளின் மொழியாக்கங்களின் வழியாக புதிய பரிணாமங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். புதிய நகர்வை அடைய முடியும். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி பெற்றுக் கொள்வதற்கும் தருவதற்கும் நிறைய உண்டு.
கவிதை மரபு தமிழின் வளமாக இருந்தபோது சிறுகதை மரபை நாம் மொழியாக்கங்களின் வழியாகவே அடைந்தோம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாபசான் உள்ளிட்ட மேற்கத்திய சிறுகதை மேதைகளின் கதைகளை புதுமைப்பித்தன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் மொழியாக்கம் செய்தனர். தாகூரின் ஆக்கங்களை மொழிபெயர்த்தார் பாரதி. அதன் பிறகே தமிழில் நவீன சிறுகதைகள் எழுதப்படலாயின.  
தமிழ் இலக்கியத்துக்கு முக்கியப் பங்களிப்பைச் செய்திருக்கும் படைப்பாளிகள் பலரும் மொழிபெயர்ப்பின் தேவையை முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் தம் சொந்த படைப்புகளுக்கு இணையாக மொழிபெயர்ப்புகளையும் தந்திருக்கிறார்கள். பாரதி, புதுமைப்பித்தன், .நா.சு, தி.ஜானகிராமன், பிரமிள், சுந்தரராமசாமி உள்ளிட்ட அனைத்து  படைப்பாளிகளும் தொடர்ந்து மொழியாக்கங்களை செய்துள்ளனர். புதுமைப்பித்தன் தனது ஆக்கங்களுக்கு இணையாக ஆயிரக்கணக்கான பக்கங்களை மொழிபெயர்த்துள்ளார்.
.நா.சு தனது எழுத்துக்களுக்குத் தந்த முக்கியத்துவத்தைக் காட்டிலும் மொழிபெயர்ப்புக்காகத் தந்ததே அதிகம். வாழ்நாளின் பெரும்பகுதியை அதற்காகவே செலவிட்டுள்ளார். ‘பொய்தேவு’ போன்ற நாவல்களை எழுதிய அவரது கவனம் ஐரோப்பிய இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் அவற்றை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதிலேயே குவிந்திருந்தது. “நாவலாசிரியர்களையோ விமர்சகர்களையோ கவனத்துக்குரியவர்களாக எண்ணாத காலம் இது. சமூகம் இது,“ என்று அவர் உணர்ந்திருக்கிறார். “குப்பைக் கூளங்களை பார்த்துத் திளைத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் போதுமான அளவுக்கு மொழிபெயர்ப்பு நூல்களைத் தேடிப் படிப்பதில்லை என்று நன்றாகத் தெரிகிறது. இதனால் வாசகர்களுக்கோ மொழிபெயர்ப்பாளர்களுக்கோ நஷ்டமோ இல்லையோ தமிழ்ப் பண்பாட்டிற்கு பெரும் நஷ்டம் விளைகிறது என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு அப்பாலும் ஒரு நிஜ உலகமும் இலக்கிய உலகமும் இருக்கிறது என்று தெரிந்துகொள்வது தமிழர்களுக்கு மிக மிக அவசியம். அரசியலில் இது கிணற்றுத் தவளைகளின் காலமாக இருக்கலாம். இலக்கியத்தில் கிணற்றுத் தவளைகளாக இருப்பது பெரு நஷ்டமாகும்.“ .நா.சு இல்லாது தமிழில் அன்று நூட் ஹாம்சனின் (Knut Hamsun) பசியையும், ஸெல்மா லாகெலெவ்வின் (Selma Lagerlöf) மதகுருவையும், அன்புவழியையும், வில்லியம் ஸரோயனின் (William Saroyan) மனுஷ்ய நாடகத்தையும், இன்னும் பல ஆக்கங்களையும் வாசித்திருக்க முடியாது. ஐரோப்பிய நாவல்களைக் குறித்த அறிமுகங்கள். சுருக்கங்கள். மொழிபெயர்ப்புகள் என்று பல்வேறு தளங்களில் தமிழில் நாவல் என்கிற இலக்கிய வடிவம் குறித்த அறிமுகத்தையும் அக்கறையையும் வலியுறுத்திய க.நா.சுவின் உழைப்பே இன்றைய தமிழ் நாவல்களின் எழுச்சிக்கு உந்துதலாகவும் அடிப்படையாகவும் அமைந்திருக்க வேண்டும்.
தமிழில் மொழிபெயர்ப்புகளைப் பற்றிப் பேசும்போது ரஷ்ய இலக்கியங்களையும் கம்யூனிஸ சித்தாந்தங்களைக் குறித்த நூல்களையும் பெருமளவு தந்த ராதுகா பதிப்பகத்தையும் முன்னேற்றப் பதிப்பகத்தையும் நினைக்காமல் இருக்க முடியாது.
துளசி ஜெயராமன், சு.கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி ராம்நாத், டி.எஸ்.சொக்கலிங்கம், .நா.குமாரசாமி போன்றோர் பிறமொழிச் செல்வங்களை தமிழில் தருவதற்காகவே பாடுபட்டனர். எழுத்தை நம்பி வாழ்ந்த ஆர்.சண்முகசுந்தரம், எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்கள் பொருளாதாரத் தேவைகளுக்காகவே வங்காளத்திலிருந்து ஏராளமான மொழியாக்கங்களை முனைந்து செய்தனர்பிரம்மராஜன் மீட்சியிலும், கோணங்கி கல்குதிரையிலும் பிறமொழி இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்புக்கு முக்கியத்துவம் தந்தனர்எம்.எஸ் என்று அறியப்படும் எம்.சிவசுப்பிரமணியம் கிழவனும் கடலும் உள்ளிட்ட முக்கிய படைப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தந்தார்ஆர்.சிவக்குமார், ஜி.குப்புசாமி போன்றவர்கள் மொழியாக்கங்களை மட்டுமே செய்து வருகிறார்கள். முன்னுரிமை தருகிறார்கள். தஸ்தாவஸ்கியின் உலகப் புகழ்பெற்ற ரஷ்ய பேரிலக்கியங்களை எம்..சுசீலா அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார். . புவியரசு, சிற்பி உள்ளிட்ட மூத்த கவிஞர்களும் மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.
கன்னடத்திலிருந்து பாவண்ணனும் மலையாளத்திலிருந்து சுகுமாரன், குளச்சல் யூசுப், நிர்மால்யா உள்ளிட்டோரும் இந்தியாவின் பிறமொழி இலக்கியப் படைப்புகளை தமிழில் தருகிறார்கள். தமிழின் நேரடி படைப்புகளுக்கு இணையாக மொழிபெயர்ப்புகள் இன்று வெளியாகின்றன. சாகித்ய அகாதமியும் நேஷனல் புக் டிரஸ்ட்டும் மட்டுமே மொழியாக்கங்களை வெயிட்ட சூழல் இன்றில்லை. தமிழின் முன்னணிப் பதிப்பகங்கள் அனைத்துமே இன்று மொழிபெயர்ப்புகளை வெளியிடுகின்றன. மொழியாக்கப் படைப்புகளை மட்டுமே வெளியிடும் குறிஞ்சிவேலனின் ‘திசை எட்டும்’ இதழும் அதன் வழியாக வழங்கப்படும் ‘நல்லி’ மொழிபெயர்ப்பு விருதுகளும், ஆத்மாநாம் அறக்கட்டளையின் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்கப்படும் மொழிபெயர்ப்பு விருதும் குறிப்பிடத்தக்கன.
0
மொழிபெயர்ப்புகளின் வழியாக புதியவொரு மாற்றுப் பார்வையை நம்மால் பெற முடியும். இதுவரையிலான கோணத்திலிருந்து வேறான ஒன்றை காட்ட வல்லது அது. மகாபாரதத்தை நமக்குப் பழகி வந்த வடிவிலிருந்து பார்வையிலிருந்து வேறானவொரு வடிவில் பார்வையில் அணுகலாம் என்ற சாத்தியங்களை மொழிபெயர்ப்புகளின் வழியாக உணரமுடிந்தது. மலையாளத்திலிருந்து பி.கே.பாலகிருஷ்ணனின் ‘இனி நான் உறங்கட்டும்’ நாவலை ஆ.மாதவனும், எம்.டி.வாசுதேவநாயரின் ‘இரண்டாம் இட’த்தை குறிஞ்சிவேலனும் தமிழில் தந்தபோது மகாபாரதத்தை அணுகும் வேறு சாத்தியங்களை அறிய வாய்த்தது.
எஸ்.எல்.பைரப்பாவின் ‘பருவம்’ நாவலை பாவண்ணன் கன்னடத்திலிருந்த தமிழில் மொழிபெயர்த்தார். பிரதிபா ரேவின் ஒரிய நாவல் ‘யக்ஞசேனா’ தமிழில் ‘திரௌபதியின் கதை’யாக வெளியானது.
செவ்வியல் ஆக்கமொன்றையும் வேறு கோணத்தில் அணுகும் விசாலமான பார்வையை மொழிபெயர்ப்புகளின் வழியாகப் பெற முடிகிறது. ஏற்கெனவே நமக்கு நன்கு அறிமுகமான காவியங்களை செவ்வியல் படைப்புகளை இன்னொரு புதிய கோணத்தில் அணுகும்போது அவை மேலும் அர்த்தச் செறிவையும் ஆழத்தையும் அடைகின்றன.
மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் கன்னடத்தில் எழுதிய ‘சிக்கவீர ராஜேந்திரனை’ ஹேமா ஆனந்ததீர்த்தனின் முயற்சியால் தமிழில் வாசிக்கும்போது நம் அண்டை மாநிலத்தின் வரலாற்றுப் பார்வையை அறிய முடிகிறது.
வாழ்வனுபவங்களின் வழியாகவும் இலக்கியத்தின் மூலமாகவும் பெற்றிருக்கும் நம் அறிதலை மேலும் கூர்மைப்படுத்த பிறமொழி இலக்கியங்கள் கைகொடுக்கின்றன. நமது மொழியில் இதுவரை முயலாத வாழ்க்கையை அவற்றின் பாடுகளை வேற்று மொழி இலக்கிய ஆக்கங்களின் வழியாக மட்டுமே அறிய முடிகிறது. தாராசங்கர் பானர்ஜி வங்காளத்தில் எழுதிய ‘ஆரோக்கிய நிகேதனம்’ நாவல் காட்டும் மோதலையும் அதன் வழியாக மேலெழும் தரிசனத்தையும் த.நா.குமாரசாமியின் மொழியாக்கத்தின் மூலமாகவே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
குர் அதுல் ஐன் ஹைதர் என்ற பெண்மணி உருது மொழியில் எழுதிய ‘அக்னி நதி’யை சௌரி மொழிபெயர்க்காமல் இருந்திருந்தால் அப்படியொரு எழுத்தாளர் இருந்தார் என்பதோ அந்த நாவல் சொன்ன வாழ்வையோ நம்மால் அறிந்திருக்க முடியாது.
செங்கதிர் மொழிபெயர்த்துத் தொகுத்த ரேமண்ட் கார்வரின் ‘வீட்டின் மிக அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு’ சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும்போது அசோகமித்திரனின் கதை உலகத்துடன் கார்வரின் அமெரிக்கக் கதைக்களம் எவ்வளவு நெருக்கமாக இயங்கியது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
பெண்ணிய எழுத்துக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல  இஸ்மாத் சுக்தாயின் உருது எழுத்துக்கள் தமிழை அடைய இத்தனை ஆண்டுகள் கழிந்துள்ளன.
இன்று தமிழில் மொழியாக்கம் செய்யும் இளம் எழுத்தாளர்கள் உலகின் பல்வேறு திசைகளிலிருந்து கதைகளை தெரிவு செய்கின்றனர். நம் சிறுபத்திரிக்கைச் சூழலில் புழக்கத்தில் இருந்த பெயர்களுக்கு அப்பால் உள்ள புனைவுலகத்தைத் தமிழுக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக இயங்குகின்றனர்.
க்ரியா, காலச்சுவடு, எதிர், அடையாளம், தமிழினி, சந்தியா போன்ற பதிப்பகங்கள் மொழியாக்கங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை வெளியிடுவதில் அக்கறை செலுத்துகின்றன.
மொழிபெயர்ப்புகளுக்கான ஆரோக்கியமான இச்சூழலில் ஐசக் பாஷவிஸ் சிங்கர், பிளானரி ஓ கார்னர், கேப்ரியா மார்க்வெஸ் உள்ளிட்ட உலக சிறுகதையாளர்களின் கதைகள் பல்வேறு இதழ்களிலும், உலகச் சிறுகதைத் தொகுப்புகளிலும் இடம்பெற்றுள்ளனவே தவிர குறிப்பிட்ட எழுத்தாளரின் தொகுப்பாக வெளியாகவில்லை. ரே பிராட்பரி, ஐஸக் அசிமோவ், ஆர்தர் சி கிளார்க் போன்ற அறிவியல் புனைகதையாளர்களின் கதைகளும் போதுமான அளவில் வெளியாகவில்லை.
0
நமது ஆயுளும் வாழிடமும் அனுபவ வெளியும் மிகவும் சுருங்கியது. எல்லைக்குட்பட்டது. உப்புக் கடலை நக்கிக் குடிக்க முயலும் பூனைகள் நாம். நம்மால் எத்தனை தொலைவு எம்பிக் குதித்தாலும் கிட்டும் அனுபவம் சொற்பம்தான். நாம் அறிந்த நிலவெளியை வாழ்க்கையை மட்டுமே நமது மொழி இலக்கியத்தின் வழியாக அறிய வாய்ப்பிருக்கிறது. நம் கட்புலனுக்கு எட்டாத உலகின் பிரமாண்டத்தையும் அதன் வெவ்வேறு நிலவெளிகளையும் இலக்கியங்களே காட்சிப்படுத்துகின்றன
இன்னொரு மொழியில் இன்னொரு உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிய நமக்கு மொழிபெயர்ப்புகளே உதவ முடியும்.
இமயவரம்பன் சேரலாதன், கங்கைகொண்டான், கடாரம் கொண்டான் என்று பெருமிதங்கள் பல இருந்தபோதும் கலிங்கத்தையும் அதைத் தாண்டிய வங்கத்தையும் பற்றிய விரிவான அறிமுகத்தை அவற்றின் வாழ்க்கையை நமக்குச் சொன்னவை த.நா.சேனாபதி மொழிபெயர்த்த விபூதிபூஷண் பந்தோபாத்யாயவின் ‘இலட்சிய இந்து ஓட்ட‘லும், துளசி ஜெயராமன் தந்த லக்ஷ்மிநந்தன் போராவின் ‘கங்கைப் பருந்தின் சிறகு‘ம் சு.கிருஷ்ணமூர்த்தியால் சாத்தியமான அதீன் பந்தோபாத்யாவின் ‘நீலகண்டப் பறவையைத் தேடி’யும்தான்.
ஹிந்தியில் இன்று வெளியாகும் பல இலக்கிய படைப்புகளை அறியமுடியாத நிலை உள்ளது. ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சரஸ்வதி ராம்நாத் பல மொழியாக்கங்களை நமக்குத் தந்தார். ஹிந்தி நாவல் உலகின் சக்ரவர்த்தி என்று அறியப்படும் முன்ஷி பிரேம்சந்தின் ‘கோதான்’ நாவலை அவர் மொழிபெயர்க்காதிருப்பின் தமிழில் அதை வாசிக்கும் வாய்ப்பே அமைந்திருக்காது.
ரஷ்ய இலக்கியங்களின் வழியாகவே நாம் பனியடர்ந்த மலைப்பகுதிகளையும் குளிர் மிகுந்த தூந்திரப்பிரதேசங்களையும் தெரிந்துகொள்ள முடிந்தது. அதிகாலையின் அமைதியில், உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், வெண்ணிற இரவுகள் என்று பல்வேறு ஆக்கங்களே சைப்ரஸ் மரங்களடர்ந்த ரஷ்ய நிலப் பகுதிகளை நமக்குக் காட்டின.
ஜியாங் ரோங்கின் ஓநாய் குலச் சின்னம் நாவலை சி.மோகனின் கச்சிதமான மொழிபெயர்ப்பில் வாசிக்கும்போதுதான் மங்கோலிய மேய்ச்சல் நில நாடோடி மக்களின் மகத்தான நாகரிகம் நவீனத்துவத்தின் தாக்குதல்களால் மறைந்து போன அவலத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. மேய்ச்சல் நிலங்களுக்கும் ஓநாய்களுக்கும் அங்கு வாழும் மக்களுக்குமான பிரிக்கமுடியா உறவையும் அதன் நிலவெளிகளின் அமைப்பும் அவர்களின் வாழ்வும் எத்தனை நெருக்கமானவை என்பதையும் கண்டறிய முடிகிறது.
துருக்கியின் வரலாற்று பின்புலங்களைக் கொண்டு பல நாவல்கள் இன்று தமிழில் வாசிக்கக் கிடைப்பது மொழிபெயர்ப்புகளின் வழியாகவே. தன்பினாரின் ‘நிச்சலனம்’, ‘நேர நெறிமுறை நிலையம்’ ஆகிய நாவல்களின் வழியாகவே துருக்கியின் இன்றைய வாழ்வை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. துருக்கி இலக்கியங்களை ஆர்வத்துடனும் முனைப்புடனும் தமிழாக்கம் செய்துவரும் ஜி.குப்புசாமியின் பங்களிப்பு முக்கியமானது. ‘பனி’, ‘என் பெயர் சிவப்பு’, ‘இஸ்தான்புல்’ உள்ளிட்ட ஓரான் பாமுக்கின் நாவல்கள் பலவற்றையும் தமிழில் இன்று படிக்க முடிவது குறிப்பிடத்தக்கது.
ஹராகி முராகாமி, யாசுநேரி கவபட்டா ஆகியோரின் எழுத்துகளே ஜப்பானிய வாழ்வை அவர்களது நம்பிக்கைகளை நம்மிடம் கொண்டுசேர்க்கின்றன.
கார்சியா காப்ரியல் மார்க்வெஸ்ஸின் ஒரு நூற்றாண்டின் தனிமையையும் எரிந்திராவையும் விநோத யாத்திரைகளின் பல கதைகளையும் வாசிக்கும்போதுதான் லத்தீன் அமெரிக்க மக்களின் வாழ்வோடு பிணைந்து கிடக்கும் ஐதீகங்களையும் பழங்கதைகளையும் நம்பிக்கைகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. அத்துடன் அவை நம் இந்திய வாழ்வோடு எத்தனை நெருக்கமானது என்பதையும் உணர்த்துகின்றன.
இந்திய நாவல்களைப் பற்றிய தனது நூலில் ஜெயமோகன் குறிப்பிடுவது முக்கியமானது. “இந்திய இலக்கியத்துக்கு என ஏதேனும் தனித்தன்மை இருக்க முடியுமெனில் அது இதுதான் – மண்ணளவு பொறுமையும் கருணையும் கொண்ட சக்திவடிவங்களான பெண்கள். ஆதிகவி எழுதிய சீதையின் வடிவம் நம் பண்பாட்டில் ஆழ்படிமமாக உறைந்திருக்கிறது. எல்லா இந்தியப் படைப்பாளிகளின் நெஞ்சிலும் அவர்கள் அன்னையின் சித்திரம் அழியா ஓவியமாக உள்ளது.”
மொழிபெயர்ப்புகளின்றி நம்மால் இந்தியாவின் பிற மொழி நாவல்களை வாசித்திருப்பதோ பொதுவான இந்த அம்சத்தை நம்மால் உணர்ந்துகொள்வதோ சாத்தியமில்லை.
ஒரு குடும்பம் சிதைகிறது, பருவம், மண்ணும் மனிதரும், சிக்கவீர ராஜேந்திரன், சமஸ்காரா ஆகிய கன்னட நாவல்களும் அற்ப ஜீவி, அவன் காட்டை வென்றான் ஆகிய தெலுங்கு நாவல்களும் செம்மீன், இரண்டாம் இடம், இனி நான் உறங்கட்டும், கயிறு, தோட்டியின் மகன், கசாக்கின் இதிகாசம், உள்ளிட்ட மலையாள நாவல்களும் ஆரோக்கிய நிகேதனம், கொல்லப்படுவதில்லை, நீலகண்ட பறவையைத் தேடி, பதேர் பாஞ்சாலி ஆகிய வங்க நாவல்களும் நமக்குத் தரும் இந்தியச் சித்திரம் என்பது முக்கியமானது.
மானுடம் குறித்த இந்த அறிதலும் அவர்களின் வாழ்வின் வழியாக நாம் பெற்றுக்கொள்ளும் எண்ணங்களும் நமது வாழ்வை நமது இருப்பைப் புரிந்துகொள்ள பெரிதும் துணை நிற்கின்றன.
0
இன்னொன்றுடன் ஒப்பிட்டு நிறுத்து நம்மை நாம் எடைபோட்டுக் கொள்ள எல்லா நிலைகளிலும் துலாக்கோல் ஒன்று தேவை. பண்பாட்டை மொழியை இலக்கியத்தை அளவிடவும் அறிந்துகொள்ளவுமான துலாக்கோல் மொழிபெயர்ப்பு ஆகும்.
தமிழில் எழுதப்படும் கவிதைகளை கதைகளை நாவல்களை கட்டுரைகளை வாசித்துச் செல்லும்போது அவற்றுக்கான தர மதிப்பீடு என்பது மொழிக்குள்ளாக நிகழ்ந்தால் மட்டும் போதாது. இன்னொரு மொழியில் உள்ள பார்வைகளையும் நவீன சிந்தனையோட்டத்தில அவை கொண்டுள்ள மாற்றங்களை அறிந்துகொள்ளாமல் போவோமானால் நம்முடைய பார்வையும் சிந்தனையும் தேங்கிப் போகவும் இறுகிவிடவும் வாய்ப்புண்டு. இன்னொரு மொழியின் சிந்தனைப் போக்கை மாற்றங்களை கண்டுணர்ந்து அதைப் பற்றிய யோசனைகளும் விவாதங்களும் நம்முடைய சிந்தனையிலும் பார்வையிலும் தகுந்த மாற்றத்தைக் கொண்டுவர வாய்ப்புண்டு.
இரண்டு முக்கிய மாற்றங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். முதலாவது பிறமொழி இலக்கியம் தமிழில் ஏற்படுத்திய பாதிப்பு. இரண்டாவது தமிழ் இலக்கியம் பிறமொழியில் உருவாக்கிய மாற்றம்.
பிறமொழி இலக்கியம் தமிழில் ஏற்படுத்திய பாதிப்புக்கு உதாரணமாக தலித் இலக்கியத்தைச் சொல்லலாம். தலித் இலக்கியம் பற்றிய எண்ணமும் சிந்தனையும் தமிழ் வாழ்வில் எழுத்தில் இருந்தபோதும், அரவிந்த் மாளகத்தியின் ‘கவர்மெண்ட் பிராமணனு’ம், சித்தலிங்கய்யாவின் ‘ஊரும் சேரி’யும் பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் தமிழில் வந்த பின்பே அந்தச் சொல்லாடல்களும் உரையாடல்களும் வலுப்பெற்றன. தலித் இலக்கியம் தமிழில் வலுப்பெற அத்தகைய மொழிபெயர்ப்புகள் காரணிகளாகின.
தமிழ் இலக்கியம் பிறமொழி ஒன்றின் மேல் செலுத்திய தாக்கத்துக்கு உதாரணமாக நவீன மலையாளக் கவிதைகளைக் குறிப்பிடலாம். 1990களின் இறுதி வரையிலும் பெரும்பகுதி ஓசைநயத்துடன் பாடப்படும் தன்மையைக் கொண்டிருந்தது மலையாளக் கவிதை. … ம் ஆண்டு குற்றாலத்தில் தமிழ் மலையாள கவிதைப் பட்டறை ஒன்றை ஒருங்கிணைத்தார் ஜெயமோகன். தமிழில் இருந்து சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன், எம்.யுவன், கலாப்ரியா, .மோகனரங்கன், ஆகியோரும் மலையாளத்திலிருந்து டி.பி.ராஜீவன், கல்பற்றா நாராயணன், ராமன், அன்வர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த பட்டறைக்குப் பிறகே நவீன கவிதைகள் அடங்கிய புதுநானூறு என்ற தொகுப்பை மலையாளத்தில் தந்தார் ஆற்றூர் ரவிவர்மா. மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் கவிதைகள் மலையாள நவீனக் கவிஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. மலையாளக் கவிதை தமிழின் நவீனக் கவிதை அம்சங்களை உள்வாங்கி திசைமாறியது.
இந்தியா பல்வேறு மொழிகளின் கலாச்சாரங்களின் கூட்டமைப்பு. அவற்றுக்கு இடையேயான புரிதல்களையும் உறவையும் பேணுவதற்கு உறுதிப்படுத்துவதற்கு ஆரோக்கியமான பரிமாற்றங்கள் தேவை. அவ்வாறான பரிமாற்றங்கள் மொழிபெயர்ப்பின் வழியாகவே சாத்தியம்.
0
மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு கருவியாகவும் மொழிபெயர்ப்பு பெரும் பங்காற்றுகிறது.
புதிய கலைச் சொற்களை உருவாக்கும் தேவையை பிறமொழிகள் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக ஆங்கிலம் வழியாக உலக இலக்கியங்களை மொழிபெயர்க்கும்போது ஏராளமான தமிழ்ச் சொற்கள் உருவாகி வந்துள்ளன. இன்று வெகு சாதாரணமாக நம் புழக்கத்தில் உள்ள பல சொற்கள் அத்தகைய மொழியாக்கங்களின் வழியாக நமக்குக் கிடைத்தவையே.
உதாரணமாக Lift என்ற சொல்லுக்கு ‘மின் தூக்கி’ என்பதை பொது இடங்களில் பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. அதேபோல telephone என்கிற சொல்லுக்கு தொலைபேசி என்ற சொல்.
ரஷ்ய இலக்கியங்களின் வழியாக நமக்குக் கிடைத்துள்ள பல சொற்கள், சப்பாத்து, சதுக்கம், சுங்கான் குழாய் ( cigar pipe ), சுவாரஸ்யம் மிக்கவை.
0
மொழிபெயர்ப்புகளின் வழியாக நிகழ்கிற வரவும் போக்கும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என அனைத்து விதமான வடிவங்களிலும் கணிசமானத் தாக்கங்களை தேடுதல்களை ஏற்படுத்துகின்றனகுறிப்பாக படைப்புகளில் தமிழில் அடைய வேண்டிய எல்லைகள் எவை, ஏன் இப்படியான முயற்சிகள் இங்கு இல்லை போன்ற ஆதாரமான கேள்விகளை எழுப்புகின்றன. இத்தகைய கேள்விகளே ஆரோக்கியமான மாற்றங்களுக்கான தூண்டுதல்களாக அமைகின்றன.
குறிப்பிட்ட ஒரு மொழியின் கலாச்சாரத் தேவைக்கேற்ப கையாளப்பட்ட ஒரு வடிவத்தை தமிழில் அதன் பொருத்தப்பபாட்டைப் பற்றிய கவலையில்லாமல் அந்த வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதைப் ‘போலச் செய்’யும் விபத்துகளும் நிகழ்ந்துள்ளன என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
தல்ஸ்தோயின் போரும் அமைதியும், தஸ்தாவஸ்கியின் கரம்சோவ் சகோதரர்கள் போன்ற ரஷ்ய பேரிலக்கியங்கள் தமிழ் நாவல்களின் அளவிலும் உள்ளடக்கத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. புறம் அகம் என இரண்டு எல்லைகளில் நின்றபடி இவ்விரு பெரும் ஆளுமைகளும் இன்றும் தமிழின் ஆக்கங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்றனர்.
பால்ஸாக், ஜேம்ஸ் ஜாய்ஸ், விளாதிமிர் நபகோவ், இடாலோ கால்வினோ, ஹெமிங்வே, கசன்ஸாக்கிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே, தாமஸ் மன், செர்வான்டிஸ் உள்ளிட்ட நாவலாசிரியர்களைக் குறித்தும் அவர்களது ஆக்கங்களைப் பற்றியுமான தொடர்ந்த உரையாடல்கள் தமிழ் நாவல்களின் போக்கில் உள்ளார்ந்த மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. ஆல்பர்ட் காம்யூவின் அந்நியன், பிரான்ஸ் காஃப்காவின் விசாரணை, உருமாற்றம் ஆகிய நாவல்கள் இருத்தலியம் சார்ந்த பார்வையுடன் எழுத்தை அணுகும் போக்கை ஏற்படுத்தின. மார்க்வெஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் தமிழில் வருவதற்கே முன்பே ஆங்கிலம் வழியாக நாவலின் கட்டமைப்பிலும் கூறுமுறையிலும் உள்ள சாத்தியங்களை முன்வைத்தது.

சாகித்ய அகாதமியும் நேஷனல் புக் டிரஸ்டும் வெளியிட்ட அக்னி நதி, நீலகண்ட பறவையைத் தேடி, மண்ணும் மனிதரும், ஒரு குடும்பம் சிதைகிறது, ஆரோக்கிய நிகேதனம், சோரட் உனது பெருகும் வெள்ளம், கறையான், பருவம், சிக்கவீர ராஜேந்திரன், சமஸ்காரா, கோரா, செம்மீன், மதிலுகள், இரண்டாம் இடம், மய்யழிக் கரையோரம், கயிறு, இதுதான் நம் வாழ்க்கை, கங்கைப் பருந்தின் சிறகுகள், தர்பாரி ராகம், மறைந்த காட்சிகள், அழிந்த பிறகு போன்ற இந்திய நாவல்கள் தமிழ் நாவல்கள் குறித்த விவாதங்களுக்கும் சுயபரிசோதனைக்கும் வழிவகுத்தன.
இப்போது ஹால்டார் லேக்ஸ்நஸ் (மீனும் பண்பாடும்), ஃபிரான்ஸ் சீலன்பா (சாதுவான பாரம்பரியம்), டேவிட் கிராஸ்மன் ( நிலத்தின் விளிம்புக்கு ) போன்ற தமிழுக்கு இதுவரை அறிமுகமில்லாத நாவலாசிரியர்களை பதிப்பித்துள்ளது காலச்சுவடு. அதேபோல சார்லஸ் புகோவஸ்கி, கால்லோஸ் ஃபுயந்தோஸ், சல்மான் ருஸ்தி போன்றவர்களின் நாவல்களை எதிர் வெளியீடு பதிப்பித்துள்ளது. இத்தகைய முயற்சிகள் தமிழ் நாவல்களின் போக்கிலும் பார்வையிலும் புதிய திறப்புகளை உருவாக்கும் சாத்தியங்களைக் கொண்டுள்ளன.
போர்ஹே, மார்க்வெஸ், முராகாமி உள்ளிட்ட சிறுகதையாளர்களின் கதைகள் தமிழ் சிறுகதையாளர்களிடத்தும் வாசகர்களிடத்தும் அழுத்தமானச் சலனங்களை ஏற்படுத்தியுள்ளன.
சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் வெளியான பாப்லோ நெருதாவின் கவிதைகளும் ஸ்ரீராம் தமிழ்படுத்திய ழாக் பிரெவரின் ‘சொற்க’ளும் சி.மணி மொழிபெயர்த்த லா வோட்சுவின் கவிதைகளும் சத்தியமூர்த்தி மொழிபெயர்த்த ரூமியின் கவிதைகளும் பிரம்மராஜனின் மொழிபெயர்ப்பில் வெளியான உலகக் கவிதைகளும் தமிழ்க் கவிதையில் செறிவானத் தாக்கங்களைத் தந்துள்ளன.
0
இன்று நம்மிடையே பெருகியுள்ள சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு என்பது கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சிறிய அரசு சாராக் குழுக்களும் அக்கறையுள்ள மனிதர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி ஓயாது உழைத்ததின் பலனே. மசானா புகாகோவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’யும் இ.எஃப்.ஷுமேக்கரின் ‘சிறியதே அழகு’ம் இன்று பரவலாக வாசிக்கப்படுகிறதுசென்னை புக்ஸ் என்ற பதிப்பகம் 1980களில் இதை மொழிபெயர்த்து வெளியிட்டது. சுற்றுச்சூழல் குறித்தும் இயற்கை வேளாண்மை குறித்தும் நம்மிடையே ஒரு நம்மாழ்வார் தோன்றுவதற்கு இத்தனை காலம் ஆனது. அவர் தொடங்கி வைத்த சிறுநெருப்பை ஏந்தி இன்று பலரும் இயற்கை வேளாண்மை, சுற்றுச் சூழல் சார்ந்த விழிப்புணர்வை பெரும் யாகமாக வளர்த்தெடுக்கிறார்கள். ஆனால் அதன் தொடக்கமும் கருத்தாக்கத்தின் வித்தும் மொழியாக்கத்தின் வழியாக நாம் பெற்றதே. சாலிம் அலியின் ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, ஜிம் கார்பெட்டின் குமாயுன் புலிகள் உள்ளிட்ட கானுயிர் குறித்த பல நூல்களும் நமக்கு மொழியாக்கங்களின் வழியாகவே கிடைத்தன.
அறிவியலையும் தத்துவத்தையும் அணுகவும் வாசிக்கவும்  மொழிபெயர்ப்புகளே வழியமைக்கின்றன. வெ.சாமிநாத சர்மாவின் மொழியாக்கத்தில் வெளியான பிளாட்டோவின் ‘அரசியல்’ ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, கரிச்சான் குஞ்சு மொழிபெயர்த்த தேவி பிரசாத் சட்டோபாத்யாயவின் ‘இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பவையும் அழிந்தனவும்’, .ஜி.எத்திராஜூலு தமிழில் மொழிபெயர்த்த ராகுல சாங்கிருத்யாயனின் ‘இந்தியத் தத்துவ இயல் வரிசை’ ஆகிய தத்துவ நூல்களும் முக்கியமானவை. உலகத் தத்துவ வரலாற்றை அனைவருக்கும் புரியும்படி கதையாகக் கூறும் யொஸ்டைன் கார்டெரின் நார்விய நாவலான ‘சோஃபியின் உலகம்’ ஆர்.சிவக்குமாரின் மொழியாக்கத்தில் வெளியான முக்கியமான ஒன்று.
பால் கரஸ் எழுதிய புத்தரின் புனித வாக்கு உள்ளிட்ட புத்தரைப் பற்றிய பல நூல்களின் மொழிபெயர்ப்புகளே தமிழில் அறிய உதவியுள்ளன. புவியரசுவின் மொழியாக்கத்தில் வெளியான ஓஷோவின் பல நூல்களும் மிர்தாத்தின் புத்தகமும் ஆன்மிக தத்துவ வரிசையில் குறிப்பிடத்தக்கவை. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் அபாரமான ஆங்கிலப் புத்தகங்கள் பலவற்றின் தமிழ் மொழியாக்கங்கள் இன்று வாய்த்துள்ளன.
மொழிபெயர்ப்பின் துணையின்றி காந்தியின் சத்திய சோதனையை சேகுவேராவின் மோட்டார் சைக்கிள் டைரியையோ எலி வீஸலின் இரவையோ ஆனி ஃபிராங்கின் இளம் பெண்ணின் நாட்குறிப்பையோ மாயா ஏஞ்சலோவின் கூண்டு பறவைகள் ஏன் பாடுவதில்லை நூலையோ தமிழில் வாசித்திருக்க முடியாது.
சினிமா குறித்த நூல்களும் உரையாடல்களும் இன்று வலுப்பெற்றிருக்கிறது. ஆனால் 2000க்கு முன்னால் அத்தகைய நூல்களையும் உரையாடல்களையும் சாத்தியமாக்கியது மொழியாக்கங்களே. பேல பெலாஸின் ‘சினிமா கோட்பாடு’ நூலையும் சென்னை புக்ஸ் மொழிபெயர்த்து வெளியிட்டது. ரித்விக் கட்டக்கைப் பற்றியும் சத்யஜித்ரே பற்றிமான மொழிபெயர்ப்பு நூல்களே யதார்த்த சினிமாவின் போக்கை அறிமுகப்படுத்தின.
0
தமிழில் நேரடியாக எழுதப்படும் ஆக்கங்களை மட்டுமே நாம் படிக்கவேண்டும் என்று தீர்மானித்தால் பிற கலாச்சாரங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்வியல் கூறுகளையும் அறிந்துகொள்ள முடியாது. நாம் வாழும் இந்த நிலப்பரப்புக்கென சில அம்சங்கள் உண்டு. சீதோஷ்ணநிலை, உணவு உடை இருப்பிடம் சார்ந்த கூறுகள் என பல அம்சங்கள் பிற வடக்கத்திய மாநிலங்களிலிருந்து உலகின் பிற பகுதிகளிலிருந்து மிகவும் வேறுபட்டவை. நாம் நம்முடைய வாசிப்பை நேரடி படைப்புகளோடு நிறுத்திவிடும்போது நமது அனுபவங்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் நின்றுவிடும்.
மொழியாக்கங்களை தகுதிக் குறைவான படைப்பாக அணுகும் மனநிலையிலிருந்து இப்படியொரு கேள்வி எழுமானால் வருத்தத்துக்குரியது. உண்மையில் மொழியாக்கம் இல்லாதுபோயிருந்தால் அல்லது அவற்றை தகுதிக் குறைவானவையாக ஒதுக்கியிருந்தால் நம் வாசிப்பு விகாசம் பெற்றிருக்க முடியாது. தமிழ் இலக்கியமும் புதிய உயரங்களை அடைந்திருக்க முடியாது.

0

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...