Saturday, 18 January 2020

பருவமழையுடன் ஓர் பயணம்



CHASING THE MONSOON
ALEXANDER FRATER
PICADOR INDIA 2005
FIRST PUBLISHED IN 1990 BY VIKING
0
அலெக்ஸாண்டர் ஃபிரேடர் புகழ்பெற்ற பயண எழுத்தாளர். லண்டனில் வசிப்பவர். இம்பீரியல் ஏர்வேஸின் பாதையைத் தொடர்ந்து எழுதிய ‘Beyond the Blue horizon’ நூலும் நிலநடுக்கோட்டு நாடுகளில் பயணம் செய்து எழுதிய ‘Tales from the Torrid Zone’ புத்தகமும் புகழ்பெற்றவை.

சிறுவனாக இருந்தபோது அவரது படுக்கையருகே ஒரு ஓவியம் தொங்கவிடப்பட்டிருந்தது. அடர்ந்த புற்களுடன் கூடிய மலைச் சரிவுகள், முகடுகளில் சிறிய கோபுரங்களுடனான கோயில்கள், புலிகளை நோக்கி ஓங்கிய ஈட்டிகளுடன் நிர்வாண கோலத்தில் வேட்டையர்கள் என அந்த ஓவியத்தின் மிக முக்கியமான அம்சம் அதில் நுட்பத்துடன் வரையப்பட்டிருந்த மழைதான். தாழ்வான மேகங்களிலிருந்து பொழிந்திருந்தது கனமழை. ‘சிரபுஞ்சி .. பூமியின் அதி ஈரமான பிரதேசம்’ என்று தலைப்பிடப்பட்டு எல்.ஜியோ லோபஸ் வரைந்த அந்த ஓவியம் பிரேடரின் பெற்றோருக்கு திருமணப் பரிசாக நண்பர் ஒருவரால் தரப்பட்டது. பரிசளித்தவர் சிரபுஞ்சியில் ஸ்காட்லாந்து கிறிஸ்துவ மிஷனரியின் சார்பாக பணியாற்றிய வேப்ஷாட் என்ற நண்பர். சந்தர்ப்பம் வாய்த்தால் அங்கு போவதை தன் விருப்பமாக அவரது தந்தை அடிக்கடி சொல்லியதுண்டு. கிளாஸ்கோவைச் சேர்ந்தவர். சிரபுஞ்சியை ஐந்து வயதில் இந்த ஓவியத்தின் வழியாகவும், அந்த இடத்தைப் பற்றி சில தகவல்களை தந்தையின் மூலம் அறிந்திருந்த பிரேடர் இந்த இடத்துக்கு பயணிப்போம் என்று யோசித்திருக்க அப்போது வாய்ப்பில்லை.

1986ம் ஆண்டு மேற்கு சைனாவில் தர்கிஸ்தான் பகுதியில் மேற்கொண்ட கடினமான ஒரு பயணத்தின் பலனாக முதுகெலும்பிலிருந்த நரம்பு தொகுப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் லண்டன், குயின் சதுக்கத்தில் உள்ள நரம்பியல் நோய்களுக்கான நேஷனல் ஹாஸ்பிடலுக்கு செல்ல நேர்கிறது. மருத்துவ ஆய்வுகளுக்கு பிறகு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடுமையான பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

பல மாதங்களுக்குப் பின்பு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் காத்திருக்கும்போது இந்தியாவைச் சேர்ந்த பாப்டிஸ்டா தம்பதிகளை சந்திக்கிறார். சாதாரண உரையாடலின்போது இந்திய பருவமழையைப் பற்றி பேச்செழுகிறது. பம்பாயில் பெய்கிற பருவமழையைப் பற்றி திருமதி பாப்டிஸ்டா பேசும்போது கிரேடருக்கு சிரபுஞ்சி ஓவியம் நினைவுக்கு வருகிறது. பருவமழையை பார்த்து அனுபவித்ததில்லை என்று சொன்னதும் நீங்கள் அவசியம் பார்க்கவேண்டியது என்று இருவரும் சொல்கிறார்கள். பாப்டிஸ்டாவும் ஒரு எழுத்தாளர் என்று சொன்னதும் உற்சாத்துடன் உரையாடல் தொடர்கிறது. மழையைப் பற்றிய காளிதாசரின் கவிதையை சொல்கிறார். தேக ஆரோக்கியத்தை மழைக்காலம் மீட்டு தருவதைப் பற்றியும் கேரளாவில் பருவமழையின் போது செய்யப்படும் சிகிச்சைகள் மிகவும் பிரபலம் என்று சொல்லும்போது வியப்பளிக்கிறது. சிரபுஞ்சிக்கு போக முடியுமா என்று கேட்கிறார். அரசியல் காரணங்களால் சூழ்நிலை சாதகமாக இல்லை என்று பதில் வருகிறது. பருவமழையை பின்தொடர முடியுமா என்று கேட்கும்போது திருவனந்தபுரத்திலிருந்து தொடங்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த கணத்தில் கன்னியாகுமரியிலிருந்து இமயமலைக்கான அந்த பயணத்தை பிரேடர் தீர்மானிக்கிறார்.

இந்தியாவுக்கு புறப்படுகிறார். 1987ம் ஆண்டு மே மாதம் தொடங்கி ஜுலை வரையிலான இரண்டு மாத பயண அனுபவமே ‘பருவமழைப் பயணம்’.

கன்னியாகுமரியிலிருந்து சிரபுஞ்சி வரையிலான பிரேடரின் கனவுப் பயணத்தை விவரிக்கிறது இந்த நூல். பொதுவாக பயண இலக்கியங்களில் ஏற்கெனவே அறிந்த தகவல்களும் வழித்தடங்களும் குறிப்பிட்ட பிரதேசத்தின் சிறப்பம்சங்களுமே வெவ்வேறு பாணியில் எழுதப்பட்டிருக்கும். பயணத்தின் வழியாக அந்த நிலத்தின் பல்வேறு பண்பாட்டு கூறுகளையும் வாழ்வியல் அம்சங்களையும் மக்களின் அன்றாடங்களையும் முன்னிறுத்தும் பயணக் கட்டுரைகள் மிகக் குறைவானவையே. பருவமழையை பின்தொடர்வதின் வழியாக பிரேடரின் இந்த நூல் இந்திய நிலத்தின் பல்வேறு கலாச்சாரக் கூறுகளை நம்பிக்கைகளை கேளிக்கைகளை ஏற்றதாழ்வுகளை அரசியல் கூறுகளை நிர்வாக அமைப்புகளின் கோளாறுகளை துல்லியமாக தந்திருக்கிறது. பருவமழை இந்திய மக்களின் பல்வேறு மாநிலத்தின் மக்களிடையே ஏற்படுத்தும் நம்பிக்கைகளையும் பாதிப்புகளையும் நயமாக விவரிக்கும் இந்த நூல் மழைவேண்டி செய்யப்படும் யாகங்கள், பூசைகள், பிரபல பாடகர்கள் பாடும் அம்தவர்ஷினி ராகங்கள், பலிகள் என மழையை முன்னிறுத்தி நம்மிடையே உள்ள ஏராளமான கலாச்சார அம்சங்களையும் பட்டியலிட்டுள்ளது. பருவமழையை நம்பியுள்ள விவசாயம் ஒருபுறம்; கொட்டும் மழை ஏற்படுத்தும் சேதாரங்கள் மறுபுறம் என வரமாகவும் சாபமாகவும் அமைகிற போக்கை இயல்பாக சித்தரிக்கிறது.

மாநிலங்களில் செயலாற்றும் இந்திய வானியல் துறையின் பல்வேறு பரிமாணங்களை ருசிகரமாகச் சொல்லும் அதேசமயத்தில் அரசுத் துறைகளில் வழக்கமாக காணமுடிகிற சுறுசுறுப்பற்ற போக்கையும் சற்றே கேலியுடன் விமர்சிப்பதையும் காணமுடிகிறது. வெவ்வேறு இடங்களிலும் உள்ள சாலைகள் விடுதிகள் பணியாளர்கள் அரசு ஊழியர்கள் விமானிகள் என பல்வேறு தரப்பின் நிறங்களையும் கொண்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருக்கும்போது கள்ளிக்கோட்டையில் தன் வீட்டு பால்கனியிலிருந்து மரணமடைந்த ஜான் ஆபிரஹாம் பற்றி செய்தி வருகிறது. அவருக்காக மலர் வளையங்கள் தயாராவதை பிரேடர் காண்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் கமலா தாஸை அவரது வீட்டில் சந்திக்கிறார். நண்பர்களுடன் கமலாதாஸ் இயற்கையை பேணுவது குறித்தும் புவி வெப்பமடைதல் குறித்தும் உரையாடுகிறார். அவரது கவிதைகள் சிலவற்றையும் வாசிக்கிறார். இதேபோல பம்பாயில் பிரித்திஷ் நந்தியையும் சந்தித்து உரையாடுகிறார்.

பம்பாய் விடுதியில் தங்கியிருக்கும்போது பருவமழையை நானே வரவழைத்தேன் என்று மழையை வரவழைக்கவென ஒருங்கிணைத்த கருவியுடன் வந்து சந்திக்கும் நபருடன் உரையாடும் சமயத்தில் அவர் புத்திசுவாதீனமற்றவர் என்று அவருடைய மகனின் மூலமாக தெரிய வருவது, ராஜஸ்தானில், டீக் நகரத்தில் உள்ள மழைக்கால மாளிகையைக் காணச் செல்கையில் வாடகைக் காரில் ஏற்படும் சுவையான அனுபவங்கள், பழைய அரண்மனையில் சந்திக்க நேரும் பி பி சி செய்திகளை தினமும் கேட்பதாகச் சொல்லி அழகிய ஆங்கிலம் பேசும் இளைஞனுடனான சந்திப்பு, டெல்லியின் பல்வேறு அமைச்சரவை அலுவலகங்களில் சிரபுஞ்சிக்கு செல்வதற்கான அனுமதி கோரி அலையும் நாட்கள், கல்கத்தாவிலிருந்து ஷில்லாங்கிற்கு செல்லும் விமானத்தில் விமான ஓட்டியின் இருக்கையில் அமர்ந்து இமயத்தை காணும் விநோதம் என பிரேட்டருடன் நாமும் சுவைபட பயணிக்க முடிகிறது.

1524ம் ஆண்டு கொச்சியில் மரணமடைந்த வாஸ்கோ ட காமாவின் உடல் அங்குள்ள செயின்ட் ஃபிரான்சிஸ் தேவாலயத்தில் 14 ஆண்டுகள் புதைக்கப்பட்டு அதன் பின் அவருடைய சொந்த ஊரான லிஸ்பனுக்கு கொண்டு செல்லப்பட்டதை விவரித்துள்ளார். இதுபோலவே யூதர்கள் கோவாவை உருவாக்கிய விதத்தையும் சுவைபட கூறியுள்ளார் பிரேடர்.

விவேகானந்தர் பாறை, கொச்சின் யூதர்களின் சினகாக், கோவாவின் பாம் ஜீஸசின் பஸிலிகா, பம்பாயின் தாராவி, சௌபாத்தி கடற்கரையில் உருவான மணற்சிற்பம் என இந்தியாவின் வெவ்வேறு கலாச்சார அடையாளங்களையும் மழை ஈரத்துடன் விவரித்திருக்கிறார்.

பருவமழையைக் குறித்த ஆர்வத்துடன் வந்து அப்படியேதும் அனுபவமாகததை ஏமாற்றத்துடன் நேரு குறிப்பிட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

இந்த நூலின் முகவுரையில் மழைப் பயணத்துக்கு உறுதுணையாக இருந்ததென நன்றி சொல்லியிருக்கும் ஒய்.பி.ராவின் ‘தென்மேற்கு பருவமழை’ புத்தகத்தை திருவனந்தபுரத்தில் மகாத்மா காந்தி சாலையில் ஒரு புத்தகக் கடையில் வாங்கியதை குறிப்பிட்டிருக்கும் பிரேடர் நூலின் பல்வேறு இடங்களிலும் பருவமழை குறித்த ஆய்வில் முக்கிய பங்களிப்பைத் தந்த புத்தகங்களையும் ஆய்வாளர்களையும் குறிப்பிடத் தவறவில்லை.

ஒருபுறம் அபரிமிதமாக பெய்யும் மழை, வெள்ளத்தினால் ஏற்படும் சேதாரங்கள், அழியும் தானியங்கள். மறுபுறம் வறட்சி. பஞ்சம் ஏற்படும் அளவுக்கு விளைச்சலின்மை. ஒரே பிரதேசத்தின் ஓரிடத்தில் மழை பெய்யும்போது அதற்கு மிக அருகில் உள்ள இன்னொரு இடத்தில் மழையின் சுவடே இல்லாமல் போகும் பருவத்தின் விநோதம் என வெவ்வேறு தரப்புகளும் இந்தியாவின் விவரிக்க முடியாத சிக்கலை முன்னிறுத்துகின்றன.

தென்முனையிலிருந்து மழையுடன் பயணித்து பல்வேறு தடைகளையும் இடைஞ்சல்களையும் சமாளித்து கடந்து சிரபுஞ்சியை சென்றடைந்து அதன் ஈரத்தையும் மழையையும் பிரேடர் அனுபவித்து நிற்கும்போது அவருடன் சேர்ந்து பயணித்த நிறைவை அடைய முடிகிறது.

இன்று உலகின் அதிக மழைபொழிவு மிக்க இடம் என்ற பெயரை சிரபுஞ்சி இழந்துவிட்டது. அதேபகுதியில் இமயமலையின் ஒரு பகுதியான காசி மலைத்தொடரின் தென்பகுதியில் உள்ள மாசின்ராம் என்ற இடமே மழைமிகுந்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே பலராலும் பதிவுசெய்யப்பட்ட பல்வேறு தகவல்களின் அடிப்படையில் பருவமழையின் போக்கு கணிக்கப்படும் நிலை இன்று இல்லை. விஞ்ஞான தொழில்நுட்ப அறிவின் அதிதீவிர வளர்ச்சியின் காரணமாக உலகின் பல்வேறு இடங்களில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களையும் காற்றழுத்த வேறுபாடுகளையும் துல்லியமாகக் கணிக்கும் வசதி உள்ளது. தனியார் இணையதளங்கள் பலவும் மிகச் சரியாக சீதோஷ்ண நிலையை கணித்துச் சொல்கிறார்கள். ‘எல் நினோ’, ‘புவி வெப்பமடைதல்’ போன்ற பல்வேறு காரணிகளால் பருவமழை சார்ந்த முந்தைய வரையறைகளும் கால அளவுகளும் பெருமளவு மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளன.

பருவமழையை பின்தொடர்ந்த ஃபிரேடரின் பயணம் நிகழ்ந்தது 1987ல். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நூலின் முதல் பதிப்பு 1990ல் வெளியானது. இடையில் கடந்திருப்பது முப்பது ஆண்டுகள். ஆனால் பருவநிலையிலும், மழை அளவிலும், சீதோஷ்ண நிலையிலும் இன்று ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பார்க்கும்போது வெகுகாலம் கடந்திருப்பதைப் போலொரு மயக்கத்தைத் தருகிறது.
0









No comments:

Post a Comment

யுவன் - விஷ்ணுபுரம் விருது

  1 இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர் மாதம். அலுவலகப் பயிற்சி நிமித்தமாக புனே சென்றிருந்தேன். அன்று காலை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்ற...