தென்காசியில்
நடக்கவிருக்கும் டி.கே.சி விழாவிற்கு போகிறோம் என்று மரபின் மைந்தன் முத்தையாவும் ரவீந்திரனும்
சொல்லியிருந்தாலும் குற்றாலத்தில் நான்கு நாட்கள் நண்பர்களோடு அளவளாவியிருக்கும் சந்தர்ப்பத்தை
முன்னிட்டே அந்தப் பயணத்தைத் தொடங்கியிருந்தோம். டி.கே.சி குறித்து ஆங்காங்கே படித்ததைத்
தவிர எனக்கு அவரைப் பற்றி வேறெந்த சித்திரமும் இருந்திருக்கவில்லை. மழையின் ஈரமும்
பசுமையும் நிறைந்திருந்த பொள்ளாச்சியைத் தாண்டியதும் ‘ல.ச.வின் பேச்சைக் கேட்கலாம்’
என்று ரவீந்திரன் குறுந்தகடொன்றை இசைக்கச் செய்தார். மூப்பும் கரகரப்புமான ஒரு குரல்.
முதுமைக்கேயுரிய கனிவுடனும் கண்டிப்புடனும் மனத்தை ஈர்த்தது. குறவஞ்சியிலிருந்து ஒரு
பாடல், ஒரு திருக்குறள், அதைத் தொடர்ந்து ஒரு சங்கப் பாடல் என்று ஒவ்வொன்றையும் தெளிவாக
பதம் பிரித்து பொருள் சொல்லி ‘எப்படி சொல்றார் பாத்தேளா!’ என்று தமிழை அவர் வியந்த
விதம் ரசனை மிகுந்தது. அத்துடன் டி.கே.சியுடனான தனது அனுபவங்களையும் துல்லியமான விவரணைகளுடன்
பகிர்ந்து கொண்டிருந்தார். நரைத்த மீசையும் கனிந்த புன்னகையுமாய் ஒரு வரைபடமாய் மட்டுமிருந்த
டி.கே.சியின் முகம் ல.ச வின் நினைவலைகளைக் கேட்ட பிறகு துலக்கம் பெற்றிருந்தது.
பலத்த
மழை பெய்துகொண்டிருந்த ராஜபாளையத்தை நெருங்கும்போதே தென்காசியிலிருந்து அழைப்பு. அன்றிரவு
உணவு அவர்கள் வீட்டில்தான் என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள் டி.கே.சி குடும்பத்தினர்.
‘பஞ்சவடி’
– தென்காசியிலிருக்கும் டி.கே.சியின் இல்லம். பழமையின் அடையாளங்களை இன்னும் இழந்திராத
அந்த வீட்டின் முன்னறையில் டி.கே.சியின் படத்துடன் கல்கி, ராஜாஜி ஆகியோரது படங்களும்
கம்பீரமாக வீற்றிருந்தன.
டி.கே.சியின்
பேரர்களான தீப.நடராஜனும் குத்தாலிங்கமும் தாத்தாவைப் பற்றிய நினைவுகளை இன்றும் பசுமையாகத்
தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் தங்களது பேத்திகள் வரையிலும் டி.கே.சி
எனும் பெருந்தகையின் ஆளுமையை நிறுவியிருக்கிற அருங்காரியத்தையும் செய்திருக்கிறார்கள்.
டி.கே.சியின்
எள்ளுப் பேத்திகள் வரைக்குமான தலைமுறைகள் அனைவருமே தங்களது தாத்தாவைக் குறித்த பெருமிதத்துடன்
அவர் உருவாக்கித் தந்த நற்பண்புகளையும் குணாம்சங்களையும் பேணி நிற்கும் கௌரவத்துடன்
இருப்பதை பார்க்கும்போது ரசிகமணி அவர்களை நேரில் பார்த்திராத ஒவ்வொருவரும் அவரது இருப்பை
அந்த வீட்டிலேயே உணர்ந்திட முடிகிறது.
அவர்
உபயோகித்த நூதனமாக புத்தக அலமாரிகள், புத்தகங்கள், அவரது குறிப்பேடுகள், அவர் கையாண்ட
அகராதிகள், கலைக் களஞ்சியங்கள், நாட்குறிப்புகள் என ஒவ்வொன்றுமே அவர் வாழ்ந்த காலத்தையும்
தமிழுக்கும் தமிழிசைக்கும் அவர் செய்த பெருமைமிகு காரியங்களையும் நினைவுபடுத்தி நிற்கின்றன.
‘ரசனைக்கென்று ஒரு பிறவி’ என்பதை நிரூபிக்கும் விதத்தில் அவை ஒவ்வொன்றுமே புதுமையுடனும்
கலை நயத்துடனும் இருந்தன.
சட்டைப்பைக்குள்
வைத்துக்கொள்வதற்கேற்ற அளவிலான குறிப்பேடுகளை அவரே தயாரித்திருக்கிறார். இரண்டு பக்கங்களிலிருந்தும்
அந்தக் குறிப்பேட்டை அவர் உபயோகித்திருக்கிறார். ஒரு பக்க அட்டையில் சிறிய ஒரு சிவலிங்க
முத்திரை. மறு பக்கத்தின் அட்டையில் சங்கு முத்திரை. அவரே வரைந்த முத்திரைகள். சிவலிங்கம்
இருந்த பக்கத்திலிருந்து குறிப்பேட்டைப் பிரித்தால் சைவ இலக்கியம் சார்ந்த படைப்புகளை,
குறிப்புகளை எழுதியிருக்கிறார். சங்கு முத்திரை உள்ள பக்கத்திலிருந்து பிரித்துப் பார்த்தால்
வைணவ இலக்கியம் சார்ந்த பாடல்களையும், குறிப்புகளையும் எழுதியிருக்கிறார். இதுபோல அவரது
தனிப்பட்ட ரசனை சார்ந்த அடையாளங்களை அவர் பயன்படுத்திய எல்லாப் பொருட்களிலுமே காண முடிந்தது.
கட்டுரையையோ
உரையையோ எழுதும்போது முழுத்தாளையும் அப்படியே பயன்படுத்தாமல் அதை சரிபாதியாகக் கிழித்து
புத்தகம் போலாக்கி எழுதுவதையே வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். ஒவ்வொரு உரையின் முகப்பிலும்
அது எங்கே, எந்த விழாவுக்காக எழுதப்பட்டது, யார் தலைமை வகித்தார்கள் என்ற விபரங்கள்
தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழ்
இலக்கியத்தில் அவரது ஆர்வம் அனைவரும் அறிந்தது ஒன்றுதான். ஆனால் அவரது புத்தக அலமாரியை
அதிகமும் ஆக்கிரமித்திருப்பவை ஆங்கில செவ்விலக்கியங்களே. படித்தப் புத்தகங்களின் கடைசிப்
பக்கங்களில் அந்த நூலைப் பற்றிய தனது கருத்துகளை சுருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்குறிப்புகள் எவையும் விரிவாக எழுதப்பட்டிருக்கவில்லை. பெரும்பாலும் ஒற்றை வரிகளாய்
குறிப்புகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. பாரதிதாசன் விழா நிதிக்காக அண்ணாவிடம் காசோலை
தந்ததைப் பற்றிய ஒரு குறிப்பைப் பார்க்கமுடிந்தது. அவரது அலமாரியில் பார்த்த இன்னொரு
புத்தகம் ஹிட்லரின் ‘மெய்ன் காம்ப்’பின் தமிழ் மொழியாக்கம். 1928ம் ஆண்டு சுப்பிரமணியம்
என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டடு கோலாலம்பூரில் பதிப்பிக்கப்பட்டது.
ஆங்கிலக்
கல்வி முறையை கடுமையாக விமர்சித்த டி.கே.சி தமது பேரன்களை பள்ளிக்கே அனுப்பாமல் வீட்டிலேயே
அடிப்படைப் பாடங்களை கற்றுத்தர ஏற்பாடு செய்திருக்கிறார். இன்று அவரது வீட்டில் அவரது
புத்தக அலமாரிக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் கணிணியின் வரவை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்
என்ற கேள்வி எழுந்தது.
டி.கே.சியின்
சமையல் ரசனையை காலங்கள் கடந்தும் அவரது குடும்பத்தினர் இன்றும் உற்சாகமாக செயல்படுத்தியிருப்பதை
அன்றைய இரவு விருந்தின்போது ருசிக்க முடிந்தது.
குற்றால
அருவியில் பெருகி வழியும் வெள்ளத்தைப் பார்க்க முடியாதது ஏமாற்றமாகவே இருந்தது. ஐந்தருவியில்
பெண்களுக்கு மூன்று, ஆண்களுக்கு இரண்டு என்று சொத்து பிரித்து எழுதி நடுவே தகரத் தடுப்பு
போட்டு நிறுத்திவிட்டதில் ஐந்தருவியின் அழகு குலைந்து போயிருப்பதை யாரிடம் போய் சொல்ல?
கோயில் வாசல்களை கடைகள் அடைத்துக்கொண்டிருக்கும் வணிகக் கலாச்சாரத்துக்கு குற்றாலநாதரின்
கோயிலும் தப்பிவிடவில்லை. கோயிலின் அக விஸ்தீரணங்களை அமுக்கிப்போட்டிருக்கும் கடைகளில்
ஜாதிக்காய் ஊறுகாய்களும் மலைப்பழங்களும் மசாலா வஸ்துக்களும் குவிந்து கிடக்கின்றன.
சூரிய சந்திர எஃப்.எம் ரேடியோக்கள் கொஞ்சிக் கொஞ்சித் தமிழ் வளர்க்கின்றன. ‘மந்தி சிந்து
கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சி‘ய குற்றாலத்தில் மனிதர் சிந்தும் கனிகளுக்காய் மந்தியினங்கள்
காணுமிடங்களிலெல்லாம் தாவித் திரிந்தபடி அலைகின்றன.
இந்த
நவீன குற்றாலத்தில் ஐந்தருவி செல்லும் சாலையில்தான் டி.கே.சி வாழ்ந்த வீடும் அவரது
நினைவாய் அமைந்துள்ள நூலகமும் உள்ளது என்கிற விஷயமே அங்கிருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.
தன் உற்ற நண்பர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும்
இருந்த சமயத்தில்கூட தனக்கென எதையும் பெற்றுக்கொள்ள முனையாது குற்றால முனிவராகவே வாழ்ந்த
டி.கே.சி தனது இறுதிகாலத்தில் வசித்த இரண்டு வீடுகளும் இன்று சுற்றுலாப் பயணிகள் வாடகைக்குத்
தங்கும் விடுதிகளாக இருப்பதைப் பார்க்க சங்கடமாயிருந்தது. அவரது நினைவாக உள்ள நூலகத்தின்
‘பெயர் பலகை’கூட நிறம் மங்கி நிற்பது டி.கே.சிக்கு பெருமை தருவதாயில்லை.
இதற்கு
மாறாக பழைய குற்றாலத்துக்கு செல்லும் பாதையில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் நம்
மனச்சோர்வை அமைதிப்படுத்துவதாய் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் திரிகூட மலையின் நீலச்
சிகரங்களின் நிழலில் பசுமை கொஞ்சும் வயல்வெளிகளின் புறத்தில் எளிமையாக அமைந்துள்ளது
அவரது சமாதி. மூங்கில் தட்டிகளாலும் கீற்றுக் கூரையினாலும் அமைக்கப்பட்ட அந்த நினைவிடத்தில்
கவிமணியின் பாடல் பொறிக்கப்பட்டுள்ளது. பிறந்த நாளன்று அவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்த
வேளையில் குற்றாலத்தின் குளிர்காற்றும் இளவெயிலும் குலாவிக் கொண்டிருந்தன.
வந்தவர்கள்
அனைவரும் மாலை சூட்டி மலரஞ்சலி செலுத்தினார்கள். டி.கே.சியின் மாணவர் தீட்சிதர் என்பார்
பாமாலை சூட்டி நெகிழச் செய்தர். அங்கிருந்த வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளின்
கழுத்து மணியோசை அந்த மலைச்சாரலின் அமைதியினூடே டி.கே.சியின் நினைவுகளைப் போற்றி நின்ற
ஆத்மார்த்தமான உள்ளங்களின் நல்லஞ்சலிகளை ஏற்றுக்கொண்ட ரசிகமணியின் புன்னகையாகவே ஒலித்துக்கொண்டிருந்தது.
திரிகூட
மலையின் நீலச் சிகரங்களும் பசுமைகொஞ்சும் வயல்வெளிகளும் கொலுசொலியுடன் வீடெங்கும் ஓடித்
திரியும் சுட்டிப்பெண்போல அவ்வப்போது கடந்து போகும் சாரல் மழையும் ஒன்றுகூடி ஆசிர்வதித்திருக்கும்
அமைதியான இடத்தில் கம்பீரமான எளிமையுடன் அமைந்துள்ளது டி.கே.சியின் நினைவிடம்.
எள்ளு
பேத்திகள் ஸ்ருதியும் சௌம்யாவும் பாடல் ஒன்றை தங்களது அன்புக்குரிய டி.கே.சி தாத்தாவுக்காக
பாடிக்கொண்டிருக்க இன்னொரு எள்ளு பேத்தி திவ்யா தன் வயதுக்கேயுரிய துள்ளல்களுடன் தீப.நடராஜனின்
கைகளைப் பிடித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். துருதுருப்பான அவளது கண்கள் வயல்வெளி
மாடுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. கண்களை திறந்தும் மூடியும் கூப்பிய கைகளுடன்
பேத்திகள் பாடி முடித்தனர். நிறைவானதொரு அமைதி. மௌனம். திவ்யாவுக்கும் தன் பங்குக்கு
டி.கே.சி தாத்தாவை மகிழ்விக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசையிருந்திருக்கும். யாரும்
எதிர்பார்க்காத அந்த நேரத்தில் சட்டென்று ஆர்வம் துள்ளும் குரலில் உற்சாகமாகக் கூச்சலிட்டாள்
“மாடு ஒண்ணுக்குப் போகுதே!”
அவள்
சொன்னதைக் கேட்டு டி.கே.சியும்கூட நரை மீசை நெளிய நகைத்து ரசித்திருப்பார் என்பது உறுதி.
மாலையில்
நடந்த விழாவில் டி.கே.சியின் நினைவுகளை போற்றிய பெருந்தகைகளுக்கு நடுவில் ல.ச அவர்கள்
தமிழக அரசின் லச்சிணையாக ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தை டி.கே.சி முன்மொழிந்ததையும்,
இட்லிக்கு தொட்டுக்கொள்ள டி.கே.சி பரிந்துரைத்த பீர்க்கங்காய் அரைத்துவிட்ட சாம்பார்
தயாரிக்கும் பக்குவத்தையும் சுவைபடச் சொன்னார். டி.கே.சியின் இன்னொரு எள்ளுப்பேத்தியான
ஸ்ருதியின் மேடைப்பேச்சு தொடரும் அவரது பாராம்பரியத்தை உறுதிப்படுத்தியது. அதே மேடையில்
‘ரசனை’ மாத இதழ் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாஞ்சில்நாடன்,
ஜெயமோகன், சௌந்தர், கலாப்ரியா, சுதேசமித்திரன், தஞ்சை செழியன் என்று இலக்கிய முகங்கள்
பலவும் ரசிகமணியின் விழாவில் கலந்துகொண்டிருந்தது அவரது குடும்பத்தினருக்கும் அறக்கட்டளையினருக்கும்
நிறைவளித்தது.
குற்றாலம்
என்றதும் கொட்டும் அருவிகளும் குரங்குகளும் பார்டர் கடை புரோட்டாவும் மசாஜ் இசக்கியும்
மட்டுமே நினைவுக்கு வரும் இன்றைய தலைமுறையினரின் நினைவில் டி..கே.சியை முதன்மைப்படுத்த
முடியுமானால் அவரது ரசனையையும் எளிமையையும் நமது அவசத வாழ்விலும்கூட நடைமுறைப்படுத்தமுடியும்
என்றே சொல்லலாம்.
டி.கே.சியின்
மீது பெருமதிப்புகொண்ட பாலகிருஷ்ணராஜா அவர்களின் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த
நாட்களில் பல்வேறு விஷயங்களைத் தொட்டு உரையாடல்கள் நீண்டன. புனை கதையல்லாத விஷயங்களிலும்
ஒரு எழுத்தாளன் கவனம் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவ்வாறான வாசிப்பு எழுத்தில்
கொண்டு சேர்க்கும் பரிணாமங்களையும் இந்த உரையாடல்கள் உறுதிப்படுத்தின.
அடர்ந்த
நிழல்சோலைகளுக்கு நடுவில் இருந்த இலஞ்சி குமரன் கோயிலின் ஆளரவமற்ற பிரகாரத்திலும் செண்பகாதேவி
அருவிக்குப்போகும் மலைப்பாறையில் இருந்த செங்குத்துப் பாறையொன்றின் முகப்பிலிருந்து
தரிசனமாகும் காட்டின் ஆழத்திலும் தென்காசிக் கோயிலின் கோபுர வாசலில் நிற்கும்போது நம்மை
மோதியணைக்கும் காற்றின் மூர்க்கத்திலும் மனம் அடைந்த பரவசத்தின் ஒவ்வொரு திவலையுமே
இன்னும் ஈரம் உலராமல் மின்னி ஒளிர்வதுபோல் வரைபடமாய் மட்டுமிருந்த டி.கே.சியின் உருவம்
கம்பீரமாய் மனத்தில் உருக்கொண்டுவிட்ட நிறைவை இந்தப் பயணம் சாத்தியமாக்கியுள்ளது-
(ரசனை,
அக்டோபர் 2004 இதழில் வெளியான கட்டுரை.)
No comments:
Post a Comment