Tuesday 25 May 2021

கருப்பு வெள்ளை ஆல்பம் - பாவண்ணனின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள்




கடந்த ஆண்டு நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின்போது எழுதப்பட்ட கதைகள் இவை. அவ்வப்போது இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாயின. காலம் நம் முன்னால் பெரும் திகைப்பையோ அதிர்ச்சியையோ அளித்து நிற்கும்போது இயல்பாகவே மனம் கடந்த காலத்தை நோக்கிச் செல்லும். இளமைக்கால நினைவுகளின் வழியாக நிகழ்காலத்தின் வெறுமையை சலிப்பை ஏமாற்றத்தை ஈடுகட்டவோ அல்லது அவற்றிலிருந்து தப்பிக்கவோ முயல்வதுண்டு. பாவண்ணன் அவ்வாறு தன் இளமைக்கால நினைவுகளுக்குள் சென்றதன் பலனாக இக்கதைகள் உருவாகியுள்ளன.

கதைகள் அனைத்துமே சமகாலத்துக்கு முற்பட்ட காலத்தில் நடப்பவை. ஒருவிதத்தில் நமது பால்யத்தை நினைவுபடுத்துபவை. சிறுவர் பருவத்தின் நினைவுகளின் வழியாக அந்த உலகத்தைத் திரும்பிப் பார்க்கும்போது இன்றைய நம் வாழ்வு எத்தனை பொருண்மையற்றதாக பொருளற்றதாக சலிப்பானதாக அமைந்து போயுள்ளது என்பதை முகத்தில் அறைவதுபோல இக்கதைகள் உணர்த்துகின்றன. வாழ்வின் ஒவ்வொரு கணமும் புத்துணர்வுடன் புதிய அனுபவங்களுடன் திறந்து நின்றிருந்த காலங்கள் அவை. அன்றும் வாழ்வின் பாடுகளும் துயரங்களும் புரியாத சிக்கல்களும் நம்மைச் சுற்றி இருந்தனதான். ஆனால், அவற்றைப் பொருட்படுத்தாத ஒரு களங்கமின்மையுடன் அனைத்தையுமே மிக எளிதாக அணுகும் பால்ய குணத்துடன் இருக்க நேர்ந்த அதிர்ஷ்டத்தையே இக்கதைகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. வசதிகளற்ற சூழலில் கிடைப்பதைக் கொண்டு பசியாறி இருப்பதைக்கொண்டு திருப்தியுற்ற அந்த நாட்களைக் குறித்து இன்றும்கூட நமக்கு பெரிய புகார்கள் இல்லை. ஏனெனில், நம்மைச் சுற்றிய உலகமும் மனிதர்களும்கூட அப்படித்தான் இருந்தார்கள்.

கிராமத்துக்கு ஆர்மோனியத்துடன் வரும் ஒரு பாடகருடனான சிறுவர்களின் அனுபவங்களும் எதன்பொருட்டும் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளாத அவரது குணமும் ‘தனிவழி’யின் சிறப்பு. இதில் அந்தத் தனிவழி குறித்த தெளிவோ புரிதலோ அவருடன் விளையாடிய சிறுவர்களுக்கு அன்று இருந்திருக்காது. ஆனால், இப்போது அதைத் திரும்பிப் பார்க்கும்போது எதனால் அவரது வழி தனிவழியாக அமைந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும். அப்படியொரு தெளிவும் புரிதலும் தனிவழியும் இப்போது அமையக்கூடுமென்றால் வாழ்க்கையை இத்தனை சிக்கலாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஜவுளிக்கடை வாசலில் முயல், யானை போன்ற உருவங்களில் நின்று வேடிக்கை காட்டி குழந்தைகளைக் கவரும் நபர்களைக் குறித்து யாரும் கவனிப்பதுகூட கிடையாது. அது ஒரு வியாபாரத் தந்திரம் என்ற எண்ணமே பெரும்பாலும். ஒரு நாள் முழுக்க வாசலிலேயே நின்றபடி புழுங்கித் தவிக்கும் அவர்களது நிலையைக் குறித்து கவலைப்படவோ யோசித்துப்பார்க்கவோ நேரமில்லாத அவசர உலகம். அண்மையில் நாகர்கோவிலில் விளம்பரப் பலகைகளை முதுகில் மாட்டிக்கொண்டு இளைஞர்கள் உலவியக் காட்சியைப் பார்க்க நேர்ந்தது. வேலையின்மையும் பொருளாதாரத் தேவையும் இப்படியொரு நிலைக்குத் தள்ளுகிறது. அவ்வாறான ஒரு இளைஞனின் மனத்தில் எழும் காதலையும் அதன் தவிப்பை, அழகை தொட்டுக் காட்டுகிறது ‘சங்கராபரணி’. அதே கடையின் வாசலில் ஒன்றரை வருடமாக அவன் நிற்கிறான், ஆனால் அவள் அவனைப் பார்த்ததேயில்லை. ஏனெனில் அவர்கள் வேடிக்கை காட்டும் முயல், யானை, கரடி அவ்வளவுதான். நாமும்கூட நமது பக்கத்து வீட்டுக்காரர்களை இப்படித்தான் பலசமயம் முகம் தெரியாத அளவு ‘நெருக்க’த்துடன் அணுகுகிறோம்.

வாழ்வில் நாம் சாதாரணமாக கடந்து செல்ல நேரும் அசாதாரணமான மனிதர்களின் கதைகள் இவை என்பதே இவற்றின் சிறப்பு. பூங்காக்களில் புகைப்படம் எடுப்பவர், கிராம வைத்தியர், சர்க்கஸ்காரர்கள், ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர், இடம் வீடு தொடர்பான தரகர்கள், நெய் காய்ச்சி தரும் தயிர்க்காரம்மா, சாவு வீட்டில் கிளாரிநெட் வாசிப்பவர்கள், சமையல்காரர், வீட்டு நோயாளிகளைப் பராமரிக்கும் செவிலிகள், நாடகக் கலைஞர் என பல்வேறு விதமான மனிதர்களை இந்த வாழ்வில் நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ கடந்து செல்ல நேர்கிறது. அவர்களின் பின்னுள்ள நெருக்கடிகளை சிக்கல்களைக் குறித்து நமக்கு எதுவுமே தெரியாத சூழலில்தான் நாமும் சிக்குண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கைப்பாட்டுக்கு படாத பாடு படவேண்டியுள்ளது. போராடித்தான் வாழ வேண்டிய நிலை. ஆனால், இவர்கள் அனைவரும் தாமிருக்கும் சூழலில் உள்ளவர்களை மிகுந்த அணுசரணையோடு கருணையோடு அன்போடு அணுகுகிறார்கள். தம்மால் இயன்றவரை அவர்களின் துயரை, வலியை, ஏக்கத்தை பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறார்கள். நெருக்கடியான அவர்களது வாழ்நிலை பிற மனிதர்களைக் குறித்த மேலான புரிதலை சாத்தியப்படுத்துகிறது.

இந்தக் கதைகளில் ஒன்றான ‘உத்தமன் கோவில்’ அபாரமான ஒரு தருணத்தைக் கொண்டிருக்கிறது. கதையின் மையக் கதாபாத்திரமான ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் பாண்டிச்சேரி கடலில் பாரதியுடன் நீந்திய நாட்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். நீந்திக் களித்த பின் கரையில் நின்று பாடலைப் பாடியதையும் சொல்கிறார். இந்தச் சம்பவம் புனைவாகக்கூட இருக்கலாம். ஏனெனில் இது வாய்மொழிக் கூற்றாகவே கதையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், பாரதி கடலில் நீந்துவது, ஈரம்சொட்ட கரையில் நின்று பாடுவது என்ற கற்பனையின் உச்சம் வியக்கச் செய்தது.

பாவண்ணனின் கதைசொல்லும் பாணி நேரடியானது. புதிர் வழிகளற்றது. இயல்பான உரையாடல்களையும் மனித உணர்வுகளையும் வெளிப்படுத்துவது. இத் தொகுப்புகளிலுள்ள சில கதைகள் தேவைக்கதிகமான நீளத்தைக் கொண்டுள்ளன. சொல்ல வந்த கதையின் சூழலுக்கு தேவை என்பதால் தெரிந்தேதான் அத்தகைய தகவல்களை கதைகளில் அடுக்கியிருக்கிறார்.

பாரம்பரியம் மிக்க ஒரு பழைய வீட்டின் பூட்டிய அறையிலிருந்து எடுக்கப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு ஆல்பத்தின் அபூர்வமான படங்களே இக்கதைகள். காலவோட்டத்தில் நாம் தொலைத்துவிட்டு பல்வேறு வாழ்வியல் கூறுகளை இப்படங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன. இன்று காணாமல்போய்விட்ட அல்லது மங்கிப்போன வண்ணங்களைக் குறித்து யோசிக்கச் செய்கிறது இந்த கருப்பு வெள்ளை ஆல்பம்.

எதிர்மறையான மனநிலையுடன் வெறுப்பையும் பகையையும் வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளே இன்றைய சூழலில் மிகுந்திருக்கிறது. அதற்கு மாறாக சக மனிதனை முடிந்தவரை அக்கறையுடனும் சகோதரத்துவத்துடனும் அணுக வேண்டிய அவசியம் உள்ளது. இந்தக் கதைகள் அந்த எண்ணத்தையும் நோக்கத்தையுமே வலியுறுத்துகின்றன. கருமை மட்டுமே நிறைந்துள்ள பதாகையில் ஒரு சிறிய வெண்புள்ளி பிரகாசமாகத் தெரிவதுபோல இந்த கதைகளில் உள்ள மனிதர்கள் அனைவருமே வெண்மையாக, களங்கமற்றவர்களாக, அன்புமிக்கவர்களாக இருப்பதும் அக இருள் நிறைந்த இன்றைய சூழலில் சற்றே உறுத்துவதாகத்தான் இருக்கும். உறுத்தவேண்டும் என்பதுதான் முக்கியம். அந்த உறுத்தல்தான் சிறிய அந்த புள்ளியை பெரிதாக்கி கருமையை சிறு புள்ளியாக்கும் காரியத்துக்கான தொடக்கமாக அமையும்.

இக்கதைகள் அனைத்தையும் ‘ஆனந்த நிலையம்’, ‘கனவு மலர்ந்தது’ என இரண்டு தொகுப்புகளாக சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

0 

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...