ஹெமிங்வேயுடன் ஒரு சந்திப்பு
1934ம்
ஆண்டின் இனிய இளவேனிற்காலத்தில் மின்னபோலீஸ் ட்ரிபியூன் பத்திரிகையின் இளம்
நிருபர் அர்னால்ட் சாமுவேல்சன், அமெரிக்க
இலக்கியப் பிதாமகர்களில் ஒருவரான எர்னஸ்ட் ஹெமிங்வேயைச் சந்திப்பதற்காக
மின்னசோட்டாவிலிருந்து ஃப்ளோரிடாவுக்குச் சென்றார். ஹெமிங்வே
எழுத்தைக் குறித்து சில விஷயங்களையேனும் தன்னோடு பகிந்து கொள்வார் என்று அவர்
நம்பினார். ஹெமிங்வேயின் விருந்தோம்பல் அவர்
எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பானதாக இருந்தது. இந்த
உரையாடல் நிகழ்ந்தபோது ஹெமிங்வேயுடன் தான் கிட்டத்தட்ட ஒருவருட காலம்
தங்கியிருக்கப் போகிறோம் என்பது அவருக்குத் தெரியாது. ஹெமிங்வேயின்
படகான பைலரின் பாதுகாப்பாளராகப் பணியாற்றியமைக்காக நாளொன்றுக்கு ஒரு டாலர் ஊதியமாக
அவருக்கு வழங்கப்பட்டது. ஃப்ளோரிடா,
க்யூபா மற்றும் கல்ஃப் பகுதிகளில் அவர் மேற்கொண்ட மீன்பிடி பயணங்களில்
அவருடன் செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஹெமிங்வேயுடனான
தனது அனுபவங்களை சாமுவெல்கன் 300 பக்க அளவில்
எழுதி வைத்திருந்ததை 1980ம் ஆண்டு
அவர் மரணமடைந்த பிறகு அவரது மகள் தயேன் தார்பி கண்டெடுத்து “With
Hemingway” என்ற பெயரில் பதிப்பித்தார்.
தார்பி ஒரு அறிமுகத்தில் இவ்வாறு கூறுகிறார். “வெறும்
இருபத்திரெண்டே வயதான மேல்மத்திய கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பண்ணை இளைஞனின்
பார்வையில் ஹெமிங்வேயுடன் பழகவும் எழுதவும் மீன் பிடிக்கவும் கிடைத்த
வாய்ப்புகளைப் பதிவு செய்த புத்தகம் இது.” சாமுவேல்சன்
ஹெமிங்வேயை குறிப்பிட்டிருந்த நாளுக்கு ஒரு நாள் முன்பாகவே சென்று சந்தித்தார்.
அன்று எழுத்துக் கலைக் குறித்து அவர்களுக்கிடையில் நிகழ்ந்த முதல்
உரையாடலின் தமிழ் வடிவமே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
0
ஏப்ரல்
மாத இறுதியில் மித வெப்பம் கொண்ட ஒரு நாளில் அந்தச் சந்திப்பு நடந்தது. மழையிலும்
வெயிலிலும் துவண்டு சாம்பல் நிறம் கொண்டிருந்த சிறிய மர வீடுகளின் வெற்றுச்
சுவர்களில் வெயில் பெருகி வழிந்திருந்தது. நீக்ரோக்களின்
தேவாலயத்திற்கு வெளியே தெருவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். தெரு முனையிலிருந்த மளிகைக் கடையின் தாழ்வார நிழலில் அமர்ந்திருந்த
பரதேசிகள் சிலர் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த கியூபாவின் ரும்பா இசையைக்
கேட்டபடி புகைத்துக் கொண்டிருந்தார்கள். நடுத்தர வயது
மதிக்கத்தக்க ஒருவன் சைக்கிளில் என்னைக் கடந்து போனான். வாகனங்களற்ற
தெரு பெருத்த அமைதியுடன் இருந்தது.
நெருக்கமாகக்
கட்டப்பட்ட சின்னஞ்சிறு பழைய வீடுகள் பலவற்றைத் தாண்டி நடந்த பின்பு உயரமான
இரும்பு வேலிகளும் ஈச்ச மரங்களும் சூழ்ந்த பெரும் புல்வெளியுடன் கூடிய அந்த இடத்தை
அடைந்தேன். பழைய நீதிமன்றக் கட்டடத்தை நினைவுறுத்துவது போன்றிருந்தது அந்த வீடு.
அந்த இரண்டடுக்குக் கட்டடம் அமெரிக்க சிவில் யுத்த காலகட்டத்தைச்
சேர்ந்தது.
முன்வாசல்
நிழலில் காக்கிநிற கால் சட்டையும் ஒரு சாதாரண செருப்பையும் அணிந்துகொண்டு ஹெமிங்வே
அமர்ந்திருந்தார். கையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையுடன் விஸ்கி ததும்பும்
கோப்பையும் இருந்தது. வாசலில் நின்ற என்னைப் பார்த்ததும்
எழுந்து வந்து வரவேற்றார்.
வீட்டின்
வடக்குப் பக்கமாய் விரிந்திருந்த நிழலில் இருவரும் உட்கார்ந்தோம். அந்த இடம் ஒரு
படுக்கை அறையைப் போலத் தனிமைகொண்டிருந்தது. அவரது
வீட்டுக்குள் இருப்பது போலவும் அதே சமயம் இல்லாதது போலவும் இருந்தது. கிட்டத்தட்ட தெருவில் நிற்கும் ஒரு மனிதனிடம் வீட்டுக்குள்ளிருந்து
பேசுவது போலிருந்தது.
“இந்த இடம் மிகவும் நன்றாக இருக்கிறது” என்றபடி ஒரு சாய்வு நாற்காலியில்
உட்கார்ந்தேன். வேலியின் இரும்புப் பட்டைகளினூடடாக
கழுத்தை நுழைத்து வெளியேறும் வழி தேடி மெதுவாக நடந்துகொண்டிருந்த மயில்களை
அங்கிருந்து பார்க்க முடிந்தது.
“மோசமில்லை” என்றபடி ஹெமிங்வே எதிரில் உட்கார்ந்தார்.
“காஸ்மோபாலிடனில் வெளியான One trip across பிரமாதமான
கதை”
“ஆமாம். அது ஒரு நல்ல கதைதான்.”
“நான் படித்ததிலேயே மிகச் சிறந்த கதை அதுதான்” சொல்லி முடித்த பிறகு
நான் சொன்னதன் அபத்தம் எனக்கு உறைத்தது.
“அது கடினமான ஒன்றுதான். சைனாமேனின் பற்கள்
பட்டு விஷம் ஏறிவிட்டதோ என அஞ்சி ஒரு நாளைக்கு மூன்று முறை பல் தேய்க்கத்
தீர்மானிக்கும் இடம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தக்
கதையை எழுதுவதற்கு முன்பு நான் 90 நாட்கள் கடலில்
இருந்தேன். எழுதி முடிக்க ஆறு வாரங்கள் பிடித்தன. நீங்கள் எப்போதாவது கதை எழுதிப் பார்த்திருக்கிறீர்களா?”
“சென்ற ஆண்டு குளிர்காலத்தின்போது ஒரு நாளைக்கு 16 மணியிலிருந்து 18 மணிவரையிலும் எழுதித்
தீர்த்து என் மண்டையில் இருப்பதையெல்லாம் கொட்டி முடித்துவிட்டு படுக்கையில்
விழுந்துவிட்டேன். மிகவும் கஷ்டப்பட்டு எழுதினேன்.
இரண்டு நாவல்களையும் இருபது சிறுகதைகளையும் எழுத முடிந்தது.
ஆனால் ஒன்றும் உருப்படியாக அமையவில்லை. காஸ்மோபாலிடனில்
உங்கள் கதையை வாசிக்க நேர்ந்தது. படித்ததும் உங்களைப்
பார்த்தாக வேண்டுமென்று தீர்மானித்து புறப்பட்டு வந்துவிட்டேன்.”
“எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாய் தெரிந்து கொண்டது ஒரே நேரத்தில் நிறைய எழுதக்கூடாது என்பதுதான்.” ஹெமிங்வே என் தோளில் தட்டியபடி சொன்னார்.
“எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாய் தெரிந்து கொண்டது ஒரே நேரத்தில் நிறைய எழுதக்கூடாது என்பதுதான்.” ஹெமிங்வே என் தோளில் தட்டியபடி சொன்னார்.
“உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடக்கூடாது. எப்போதும் மறுநாளைக்குக் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கவேண்டும். எழுத்தை எப்போது நிறுத்துவது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது
முக்கியமானது. இருப்பதெல்லாம் எழுதித் தீரட்டும் என்று
காலியாகும் வரைக் காத்திருக்கக்கூடாது. சுவாரய்மாய்
எழுதிக் கொண்டேயிருக்கும்போது சரியான ஒரு இடத்தைத் தொட்டவுடன் இதற்கடுத்து என்ன
வரப்போகிறது என்று தெரியும்பட்சத்தில் எழுதுவதை நிறுத்திவிட்வேண்டும். எழுதுவதை நிறுத்திய பின்பு அதைப் பற்றி யோசிக்கவே கூடாது. நமது ஆழ்மனம் தேவையான வேலைகளைச் செய்துகொள்ளும். மறுநாள் காலையில் நல்ல தூக்கத்திற்குப் பின்பு புத்துணர்வுடன்
இருக்கிறபோது முதல் நாள் எழுதியதை மீண்டும் எழுதவேண்டும். முதல் நாள் நிறுத்திய இடத்திற்கு வந்து அதன் பிறகு தொடரவேண்டும்.
மீண்டுமொரு உச்சத்தைத் தொட்டவுடன் நிறுத்திவிட வேண்டும். இவ்வாறு எழுதுபோது நீ எழுதுவது சுவாரஸ்யமிக்கதாய் இருக்கும். ஒரு நாவலை இவ்வாறு எழுதிக் கொண்டேபோகும்போது நாவலின் ஓட்டம் தடைபடாது
வாசிப்பு சுவாரஸ்யம் கொண்டதாக அமைந்துவிடும். ஒவ்வொரு
நாளும் நாவலின் முதல் வரியிலிருந்ததுதான் எழுதித் தொடரவேண்டும். சற்றே நீளமாகிவிட்டதென்றால் இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்களுக்கு
முன்னாலிருந்து திரும்ப எழுதவேண்டும். ஆனாலும் வாரத்தில்
ஒரு முறையாவது தொடக்கத்திலிருந்து எழுதிவிட வேண்டும். இவ்வாறு
எழுதுவதன் வழியாக அதை ஒரே படைப்பாக உருவாகக்க முடியும். எழுதி
முடித்ததும் அதிலிருந்து எதையெல்லாம் வெளியே எடுக்க முடியுமோ எல்லாவற்றையும்
நீக்கிவிடவேண்டும். எதை வெளியே எடுப்பது என்று
தீர்மானிப்பதும் முக்கியமான விஷயம். நீங்கள் சரியாகத்தான்
எழுதுகிறீர்களா என்பதை நீங்கள் வெட்டி எறிபவற்றைக் கொண்டு தீர்மானித்துவிட
முடியும். நீங்கள் எழுதியதை இன்னொருவர் மேலும் சுவையுடன்
எழுதிவிட முடியும் என்று நீங்கள் நினைக்கிறவற்றை தயக்கமின்றி உங்களால் வெட்டியெறிய
முடியுமென்றால் நீங்கள் தகுதியுடன்தான் எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.”
என்னுடைய
எழுத்தில் ஆர்வம்கொண்டவராகவும் எனக்கு உதவ வேண்டும் என்ற அக்கறையுடனும் ஹெமிங்வே
ஆர்வத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
“எழுத்து நிறைய இயந்திரத்தனமான வேலைகளை உள்ளடக்கியது என்பதால்
சோர்வடைந்துவிடக்கூடாது. அந்த வேலைகளைச் செய்துதான்
ஆகவேண்டு. சமாளிக்க முடியும். 'A farewell to
Arms' ன் முதல் பகுதியை நான் குறைந்தபட்சம் ஐம்பது முறையேனும்
திருப்பி எழுதியிருப்பேன். திரும்பத் திரும்ப எழுதி சரி
செய்யவேண்டும். முதல் தடவை எழுதுவது எல்லாமே வெறும்
குப்பையாகத்தான் இருக்கும். எழுத ஆரம்பிக்கிற காலத்தில்
எழுதுவது அனைத்து மஹாவாக்கியங்களாகத்தான் இருக்கும். ஆனால்
வாசகனுக்கு அவை எதுவுமே ஒரு பொருட்டாக இருக்காது. தான்
வாசித்துக் கொண்டிருப்பது வெறும் படைப்பல்ல – தன் வாழ்வின் ஒரு பகுதியென்று வாசகன்
உணர்கிறமாதிரி எழுதுவதுதான் லட்சியம் என்பதை மனதில்கொண்டு மறுபடி மறுபடி எழுதி சரி
செய்யவேண்டும். எழுத்தின் அசலான வலிமையே அதுதான். நீ அதை சாதிக்க முடியுமென்றால் வாசகன் உனது படைப்பின் அனைத்து
அனுபவங்களையும் பெற்றுவிட முடியும். உனக்கு அதில் எதுவுமே
அனுபவமாகாமல்கூட போய்விடலாம். கடினமாக உழைக்க
முடியுமென்றால் இன்னும் சிறப்பாக எழுத முடியும். சிறப்பாக
எழுதும்போது உங்கள் எழுத்து மேலும் கூரடைந்துவிடும். உங்கள்
ஒவ்வொரு படைப்பும் முந்தைய ஒன்றிலிருந்து மேம்பட்டிருப்பது அவசியம். எழுதுவதைவிடவும் வேறெதாவது காரியங்கள் செய்யவே எனக்கு விருப்பம்.
என்னால் அவ்வாறு செய்யவும் முடியும். ஆனாலும்
எழுதாமல் இருப்பது எனக்கு பெரும் அசௌகர்யத்தைத் தருகிறது. எனக்குள்ளிருக்கும் திறமையை வீணடிப்பதுபோல் உணர்கிறேன்.”
ஹெமிங்வே
சொல்வது அனைத்தையும் நினைவில் கொள்ளவேண்டிய அக்கறையுடன் நான்
கேட்டுக்கொண்டிருந்தேன். இதன் பிறகு அவரை எப்போதும் சந்திக்கப் போவதில்லை என்கிற உணர்வு
எனக்குள் தீவிரப்பட்டிருந்தது.
“இன்னொரு முக்கியமான விஷயம் உங்களுக்குத் தெரியாததைப் பற்றி
எழுதக்கூடாது. முழுதும் கற்பனையான எதுவுமே கவிதைதான்.
நீங்கள் எழுதக்கூடிய ஊரைப் பற்றியும் மனதிர்களைப் பற்றியும்
முழுமையாக நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அவ்வாறு
இல்லையெனில் உங்களுடைய கதை வெற்றுவெளியில் நடப்பது போலாகிவிடும். எழுத எழுத புதிய புதிய விஷயங்களை தானே கண்டுணர்ந்து கொள்வீர்கள்.
ஒரு நாளைக்கான எழுத்தை நீங்க நிறுத்தும்போது அடுத்து என்ன
நடக்கப் போகிறது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் அதன்
பின்பு என்ன நடக்கும் என்பது குறித்து தெரியாமலிருக்கும். எழுதி முடிக்கிறவரை அதன் முடிவு இன்னதுதான் என்றும் உங்களால் சொல்ல
முடியாது.”
“எழுதத் துவங்கும்போது எந்த முன்திட்டங்களும் இல்லாமல் எழுதுவதாகச் சொல்கிறீர்களா?”
“மேலான படைப்புகள் அவ்வாறு எழுதப்பட்டவைகளே. ஒரு நல்ல கதை உங்களுக்குத் தெரியுமென்றால் அதை எழுதிவிடுங்கள். அவ்வாறான கதைகளை ஒரே மூச்சில் எழுதிவிடமுடியும். ஆனால் ஒவ்வொரு நாளும் கதைப்போக்கில் நகர்ந்தபடியே இருக்கும்போதுதான் மேலான படைப்புகள் உருவாகும். எழுத்து மிகக் கடினமான வேலைதான். னால் உற்சாகமானது. வாசகனுக்கு மேலும் உற்சாகம் தரக்கூடியது. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய இன்னொன்று. எப்போதும் வாழும் எழுத்தாளர்களுடன் போட்டியிடக்கூடாது என்பது. அவர்கள் சிறந்த எழுத்தாளர்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. இதனால் மறைந்த எழுத்தாளர்களோடுதான் போட்டியிட வேண்டும். அவர்களது சிறப்பான படைப்புகளை நீங்கள் கடந்து செல்லும்போதுதான் நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்ல முடியும். இதுவரையிலும் எழுதப்பட்ட எல்லா சிறந்த படைப்புகளையும் ஒரு மறையாவது வாசித்துவிட வேண்டும். என்னவெல்லாம் எழுதப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்வதும் முக்கியம். ஏற்கெனவோ எழுதப்பட்ட ஒன்றுபோல் உங்களிடமும் ஒரு கதை உள்ளதென்றால் முன்னதைவிட சிறப்பாக உங்களால் எழுத முடியாதபட்சத்தில் அதை விட்டுவிட வேண்டும். கலையில் திருட்டு என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்ற. ஆனால திருடப்படுவதை நீங்கள் சிறப்பாக செய்ய முடிகிறபோதுதான் அந்த அனுமதி செல்லுபடியாகும். ஏற்கெனவே உள்ளதைக் கீழ்மைப்படுத்துவதாக அது அமைந்துவிடக்கூடாது. எவருடைய பாணியையும் பின்பற்றி எஎழுதுவது கூடாது. ஒரு விஷயத்தை ஒரு எழுத்தாளன் முன்வைக்கும் அபத்தமே அவனது பாணியாக அமைந்துவிடுகிறறது. உங்களுக்கென்று ஒரு பாணி அமைந்துவிடுமென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். அப்படியில்லாமல் இன்னொருவரைப்போல நீங்கள் எழுத முயற்சிக்கிறீர்கள் என்றால் அவருடைய அபத்தத்துடன் உங்களுடையதும் சேர்ந்துகொள்ளும். இருக்கட்டும். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.”
“ஸ்டீவன்சனின் kidnapped எனக்குப் பிடித்த ஒன்ற.
தோரேவின் wolden pond ம் பிடிக்கும்.
உடனடியாக வேறு எந்தப் பெயரையும் சொல்ல முடியவில்லை.”
“War and
peace படித்ததில்லையா?”
“இல்லை.”
“அது மிகச் சிறந்த புத்தகம். கட்டாயம் நீங்கள்
படிக்கவேண்டும். சரி என்னுடைய அறைக்குச் செல்வோம்.
நீங்கள் படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியல் ஒன்றையும் நான்
தருகிறேன்.”
வீட்டின்
பின்பக்கத்தில் கார் நிறுத்தத்தின் மேல்தளத்தில் அவரது அறை இருந்தது. தரை முழுக்க
தரையோடுகள் பதிக்கப்பட்டிருந்தன. மூன்று பக்க
ஜன்னல்களுக்குக் கீழே தரை வரையிலான அலமாரிகளில் புத்தகங்கள் நிறைந்திருந்தன.
அறையின் மூலையில் இருந்த பழமையான மேசைக்கு எதிரிலிருந்த
நாற்காலியில் உட்கார்ந்து ஹெமிங்வே எழுத ஆரம்பித்தார். எதிர்ப்புறமாய்
உட்கார்ந்துகொண்ட எனக்கு அவருடைய நேரத்தை வீணடிக்கிறோம் என்று ஒரு குற்றவுணர்ச்சி
ஏற்பட்டது. என்னுடைய அனுபவங்களைச் சொல்லி அவரை
குதூகலப்படுத்தலாம் என்று நினைத்தாலும் அவை அவ்வளவு சுவாரஸ்யமிக்கதாய் இருக்காது
என்று பேசாமல் இருந்துவிட்டேன். அவர் தரும்
எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வதற்குத் தயாராயிருந்த என்னிடம் பதிலுக்குத் தர
ஒன்றுமில்லாதிருந்தது.
“இப்போது என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. நீங்கள்
இந்த விஷயத்தில் தீவிரம் கொண்டவராகத்தான் தெரிகிறீர்கள். தீவிரம்
மிக முக்கியம். நிறைய எழுதவேண்டுமென்றால் தீவிரம்
வேண்டும். கலையின் உச்சம் புனைவில்தான் உள்ளது. திறமை என்ழுது தேவையானதுதான். ஆனால் அது
மட்டுமே போதாது. என்ன திறமை இருந்தாலும் ஒரு சிலரால் கதை
எழுதவே முடியாது. உங்களால் கதை எழுத முடியாது என்பதை
உணரத் தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”
“தெரியவில்லை.
ஓருவன் தனது திறமையைக் குறித்து எப்படி அறிந்து கொள்வது?”
“அது உங்களால்
முடியாது. சில சமயங்களில் திறமை வெளிப்படுகிறவரை எழுதிக்கொண்டே இருக்கவேண்டி வரும்.
உள்ளபடியே திறமை உள்ளதென்றால் எப்படியும் அது தானாகவே வெளிப்பட்டுவிடும். எப்படியானாலும்
தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என் யோசனை. தொடர்ந்து எழுதிக்கொண்டே
இருப்பது மிகக் கடினமான வேலைதான். என்னால் எழுதி சம்பாதிக்க முடிகிறதென்றால் அதற்குக்
காரணம் நான் ஒரு வகையான திருடன் எப்தால்தான். இலக்கியமே எனது ஆயுதம். பத்து கதை எழுத
நேர்ந்தால் அதில் ஒரேயொரு கதையை மட்டுமே வைத்துக்கொண்டு பாக்கி ஒன்பது கதைகளையும் கிழித்தெறிந்துவிடுவேன்.
பதிப்பாளர்களுக்கு என்னிடமிருந்து சிறப்பான ஒரு படைப்பு வேண்டும். அதற்காக எத்தனை பணம்
வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஒருவகையில் அவர்களுக்குள்ளாக ஒருவித
போட்டியை உருவாக்குவதன் மூலம் பத்துக் கதைகளுக்கான விலையை அந்த ஒரேயொரு கதையின் வழியாகக்
கறந்து விடுகிறேன். நான் இப்படிச் செய்வது ஒருவிதத்தில் அவர்களை எரிச்சல் கொள்ளச் செய்கிறது.
இப்போது அவர்கள் விரும்புவதெல்லாம் என்னுடைய சரிவையே. எப்போதும் நீங்கள் எழுதத் தொடங்கும்போது
சுற்றியிருக்கும் அனைவரும் உங்களுக்கு நல்ல எதிர்காலம் வாய்க்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.
ஆனால் நீங்கள் தொடர்ந்து நன்றாக எழுதிவிட்டால் உங்களைத் தொலைத்துக்கட்டவே விரும்புவார்கள்.
ஆனால் நீங்கள் தொடர்ந்து நன்றாக எழுதிவிட்டால் உங்களைத் தொலைத்துக்கட்டவே விரும்புவார்கள்.
எல்லோரையும் கடந்து எல்லோருக்கும் மேலாக இருப்பதற்கு ஒரேயொரு வழிதான் உள்ளது. அது தொடர்ந்து
சிறப்பாக எழுதிக் கொண்டேயிருப்பதுதான்.”
“கற்பனை குறித்து
உங்கள் கருத்து என்ன?” என்று நான் கேட்டேன். “புதிய விஷயங்களைக் கண்டடைய முடியாதபோது
ஒருவன் என்ன செய்வது?”
“தொடர்ந்து எழுதுவதன்
வழியாகத்தான் கண்டடையக் கற்றுக் கொள்ளவும் முடியும்.”
“எழுதத் தொடங்கும்போதே
குழப்பமடைய நேர்ந்தால் கூடவா?”
“சில சமயங்களில்.”
“இன்னொரு விஷயத்தையும்
நான் கேட்கவேண்டும் என்று நினைத்தேன். பெரும்பாலும் தனிமையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.
எல்லா நேரங்களிலும் மற்றவர்கள் என்னைச் சூழ்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. அப்படியான
ஒரு சூழல் ஒரு படைப்பாளிக்கு பாதகமானதென்று நினைக்கிறீர்களா?”
“அப்படியில்லை.
அதுமாதிரியான சந்தர்ப்பங்களைத் தொடர்ந்து மனிதர்களை சந்திக்கும்போது அவர்களை மேலும்
நுட்பமாக அணுக முடியும். சென்ற முறை ஆப்பிரிக்காவுக்குச் சென்றபோது மனிதர்கள் யாருக்கும்
முகம் காட்டக்கூடாது என்கிற அளவுக்கு மனம் சோர்ந்திருந்தேன். நீங்கள் யார் என்பதைவிட
என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் இருந்தாலும்
சரி மறைந்தாலும் சரி பெற்ற தாயைத் தவிர மற்றவர்கள் யாரும் கவலைப்படமாட்டார்கள். தனியொரு
ஆளாக நீங்கள் ஒன்றுமே கிடையாது. உங்களுக்கு எது நேர்ந்தாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.
மற்றவர்கள் உங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும்படியாக நீங்கள்தான் செயல்படவேண்டும்.”
“சென்ற வருடன்
மேற்குப் பகுதியில் சரக்குக் கப்பல்களில் சில மாதங்கள் பயணித்தேன். அதுபோன்ற பயணங்கள்
ஒரு படைப்பாளிக்கு உதவக்கூடுமா?”
“நிச்சயமாக. எனக்கும்கூட
ஆசைதான். ஆனால் மனைவி குடும்பம் என்று நான் கட்டுண்டிருக்கிறேன். உங்களையும் நீங்கள்
அறிந்துகொள்வது அவசியமென்பதால் எப்போதும் ஊர் சுற்றிக்கொண்டே இருக்கலாகாது. ஒரு இடத்தைக்
குறித்து உருப்படியாய் தெரிந்து கொள்ளுமளவு அங்கு தங்கியிருக்க வேண்டும். தற்காலிகமாய்
தங்க நேர்கிற மோசமான முகாம்களிலிருந்தும்கூட ஏதேனுமொரு நல்ல விஷயத்தைக் கிரகித்துக்
கொள்வது அவசியம். Huckleberry finn வாசித்ததுண்டா?”
“வெகுநாட்களுக்கு
முன்பு.”
“மறுபடியும் ஒருமுறை
கட்டாயம் நீங்கள் வாசிக்கவேண்டும். அமெரிக்கரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகம்
அது. காணாமல்போன நீக்ரோவை ஹக் சந்திக்கிற இடம் வரையிலும் அது நன்றாகவே இருக்கும். அமெரிக்க
இலக்கியத்தி துவக்கப்புள்ளி அதுதான். Stephen Crane ன் The Blue Hotel எப்போதாவது படித்ததுண்டா?”
“இல்லை.”
இதற்குள் அவர்
பட்டியலை தயார் செய்திருந்தார்.”
“இந்தப் பட்டியலைப்
பாருங்கள். ஒவ்வொரு எழுத்தாளனும் தனது கல்வி அறிவின் ஒரு பகுதியாக இவற்றை வாசித்திருப்பது
அவசியம் என்று நான் நினைக்கிறேன்.” என்று என்னிடம் அந்தப் பட்டியலைக் கொடுத்தார்.
Stephen Crane – The Blue Hotel and The Open Boat
Gustave Flaubert – Madame Bovary
James Joyce – Dubliners
Stendhal – The Red and the Black
Somerset Maugham – Of human bondage
Tolstoy – Anna Karenina, War and Peace
Thomas Mann – Buddenbrooks
George Morre – Hail and Farewell
Doestoevsky – Brothers Karamazoff, Oxford book of
English Verse
E E Cummings – The Enormous Room
Emile Bronte – Wuthering Heights
W H Hudson – Far Away and Long Ago
Henry James – The Americans
“இவற்றைப்
படித்திருக்கவில்லை என்றால் நீங்கள் போதிய அளவு கற்றுக் கொள்ளவில்லை என்றே பொருள்.
இவை வெவ்வேறு வகையான எழுத்துக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. சில புத்தகங்கள்
உங்களை அலுப்பூட்டலாம். சில ஆதர்சம் தரலாம். மீதியுள்ள புத்தகங்கள் நிச்சயம் உங்களுக்குப்
பிடித்தமானவையாக இருக்கும். இதுபோல எழுத முயற்சிப்பதே பயனற்றது என்று மனம் தளரவைக்கும்
அளவு சிறப்பாக எழுதப்பட்டவை அவை. The Blue Hotel என்னிடம் உள்ளது என்று நினைக்கிறேன்.
A Farewell to Arms படித்திருக்கிறீர்களா?”
“இல்லை.”
“நான் அதை எழுதி
முடித்தபோது மிகச் சிறப்பாக உணர்ந்தேன். இன்னும்கூட அதில் எழுதியிருக்கவேண்டிய விஷயங்கள்
உள்ளன என்பதையும் நான் உணரவே செய்கிறேன்.” என்று சொல்லியபடியே ஹெமிங்வே தன் புத்தக
அலமாரியை நோக்கி நடந்தார். இரண்டு புத்தகங்களை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார்.
ஒன்று ஸ்டீபன் கிரேனின் சிறுகதைத் தொகுப்பு. மற்றது A Farwell to Arms. அவர் தொடர்ந்து
சொன்னார் “படித்து முடித்தவுடன் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். என்னிடம் வேறு பிரதி
இல்லை.”
“நாளைக்கேக் கொடுத்துவிடுகிறேன்.”
“இனி என்ன செய்வதாய்
உத்தேசம்?”
“ஒரு படகைப் பிடித்து
க்யூபாவுக்குப் போகவே விரும்புகிறேன். ஆனால் அது சாத்தியமில்லை என்பதாகச் சொல்கிறார்கள்.
அப்படியானால் நான் வடக்கு நோக்கித்தான் போயாக வேண்டும்.”
“உங்களுக்கு ஸ்பானிஷ்
பேசத் தெரியுமா?”
“அப்படியானால்
க்யூபாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதும் சாத்தியமில்லை. இதற்கு முன்னால் கடல் பயணம்
போனதுண்டா?”
“இல்லை.”
“கஷ்டந்தான். ஏற்கெனவே
அனுபவம் உள்ளவர்கள் மாத்திரமே அவர்களுக்குத் தேவை. வரும் கோடையில் நான் க்யூபாவுக்குப்
போகிறேன். ஆனால் அந்தச் சிறிய படகில் போதுமான டம் இல்லாததால் பயணிகள் அனைவரும் அவரவர்களுக்கான
வேலையைச் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களில் யாரேனும் ஒருவர் சிறு தவறிழைத்துவிட்டாலும்கூட
அதனால் படகே மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. எனவே என்னால் அனுபவம் இல்லாத ஒருவரை உடன்
அழைத்துச் செல்வது சாத்தியமில்லை.”
நான் தலையசைத்தேன்.
“உங்களுக்குக்
கடல் அனுபவம் இருந்திருந்தால் விஷயமே வேறு.”
“எல்லோரும் அதைத்தான்
சொல்கிறார்கள். மேற்குக் கரையில் எல்லா துறைமுகங்களிலும் இதைதான் பிரச்சினை. எனக்கு
அனுபவம் வேண்டும்தான். ஆனால் புதியவன் ஒருவன் அதை எப்படி அடைவது என்பதுதான் எனக்குத்
தெரியவில்லை.”
“சிரமந்தான்.”
ஹெமிங்வே எழுந்து
நிற்கவே அவர் என்னை புறப்படச் சொல்கிறார் என்பதாக நான் உணர்ந்தேன்.
“நல்லது. எழுதுவதைப்
பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கு உபயோகமாயிருக்கும். நாளைக்கே இந்தப் புத்தகங்களைத்
திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். என்னோடு பேசிக் கொண்டிருந்தது உங்களுக்கு அலுப்பூட்டவே
செய்திருக்கும். இப்போது நான் புறப்படுவதுதான் நல்லது.”
“அப்படியொன்றும்
இல்லை. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. எழுத்து விஷயமாக உங்களுக்கு ஏதேனும் கேட்க
இருந்தால் நாளை மாலையில் வரலாம். உங்கள் எழுத்துக்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.”
“நன்றி.”
“
No comments:
Post a Comment