Friday, 30 March 2018

ஆழ்மனதில் அசையும் சித்திரங்கள் ( படிமங்கள் குறித்த கட்டுரை )

 Image result for சித்திர எழுத்துக்கள்
ஒரு கவிதைக்குள் நாம் சொற்களின் வழியாகவே நுழைகிறோம்.பிறகு அதைப் புரிந்துகொள்ள தலைப்படுகிறோம்.அது உணர்த்தும் ஏதோவொன்றை அனுபவிக்க முற்படுகிறோம். கவிதை அதன் கட்டுமானத்தில் உள்ள சொற்களின் வழியாக நமக்குள் ஏதோவொரு அசைவை நிகழ்த்த வேண்டும். அப்போதுதான் அக்கவிதைக்கும் நமக்குமிடையேயான உறவு சாத்தியமாகும். அப்படியான உறவு கவிதைக்கும் நமக்கும் ஏற்படாதபோது வாசிப்பனுபவம் என்பதும் உருவாகமலே போய்விடும்.

சில கவிதைகளில் எல்லா சொற்களுமே நமக்குத் தெரிந்த சாதாரண வார்த்தைகளாக எளிமையானவைகளாக இருந்தபோதிலும் அக்கவிதை நமக்கு எந்தவொரு அனுபவத்தையும் தராமல் போய்விடக்கூடும். காரணம் ஒரு கவிதையில் சொற்களின் வழியாக நாம் வெறும் பொருளை/அர்த்தத்தை தேடுவதில்லை. அனுபவத்தையே தேடுகிறோம்.அக்கவிதை நமக்கு என்னவாக அனுபவமாகிறது என்பதே வாசகனின் தேவையாக தேடுதலாக உள்ளது. கவிதையிலுள்ள சொற்களில் ஏதேனுமொன்று நமக்குள் அப்படியொரு அசைவை ஏற்படுத்தும்போதே அக்கவிதை நமக்கு பிடித்தமானதாகிறது. எந்தவொரு  திறப்பையும் அசைவையும் அனுமதிக்காத சாத்தியப்படுத்தாத ஒரு கவிதையை நம்மால் ஒருபோதும் அணுகவோ வாசிக்கவோ இயலாது.

முதல்முறையாக வாசிக்கும்போது எந்த ஒரு அனுபவத்தையும் தராத அதே கவிதை பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் வாசிக்கும்போது பேரனுபவத்தை முற்றிலும் புதிய பொருளைத் தருவதாகவும் அமையும். அதே கவிதைதான். அதே சொற்கள்தான்.ஆனாலும் முன்பு படித்தபோது புரியாத அல்லது பிடிக்காதுபோன அதே கவிதை இப்போது புரிவதாகவும் பிடித்தமானதாகவும் ஆகிவிடுகிறது.ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று யோசிக்கும் போது தான் கவிதையில் உள்ள சொற்கள் வெறுமனே நேரடியான அர்த்தங்களைச் சுட்டி நிற்பதில்லை,அதையும் கடந்து கவித்துவமான அர்த்தத்தையும் அனுபவத்தையும் உணர்த்தும் தன்மை வாய்ந்தவை என்பதை நாம் உணர்கிறோம்எனவேதான் கவிதையில் உள்ள சொற்கள் வெறும் சொற்கள் மட்டுமல்ல. படிமங்களும்கூட. கண்ணால் காணும் இந்த உலகை நாம் அடையாளப்படுத்துவதும் அர்த்தப்படுத்துவதும் பொருட்களின் வழியாகத்தான்.நம் மன உணர்வுகளை, எண்ணங்களை நம்மால் சொற்களால் விளக்க முடியும்.ஆனால் அவற்றை பிறருக்கு உணர்த்தவும் விளக்கிடவும் ஸ்தூல வடிவான பொருட்களையே துணைகொள்ள வேண்டியுள்ளது.
காரணம் நாம் குழந்தைகளாக இருக்கும்போது நம் ஆழ்மனதில் இவ்வுலகம் சித்திரங்களாகவே தொகுப்படுகிறது.(முதலில் அசைவுகள், பிறகு சித்திரங்கள்.) ஒவ்வொரு சித்திரத்துக்கும் தனித்தனி சொற்களைக் கொண்டு அடையாளப்படுத்துவது பின்னரே நிகழ்கிறது.அச்சித்திரங்களை ஒன்றிணைக்கும்போதே மொழி உருவாகிறது

ஒவ்வொரு சொல்லும் ஆழ்மனதில் உள்ள ஒரு சித்திரமே.ஒரு சொல்லை வாசிக்கும்போதோ அல்லது கேட்கும்போதோ நம் மனக்கண்ணில் அந்தச் சித்திரமே விரிகிறது.ஒரு சொல் ஆழ்மனதில் உள்ள ஒரு சித்திரத்தைத் தீண்டும்போதுதான் புரிதல் என்பது நிகழ்கிறது.நம் புறவுலகை நாம் உள்ளுக்குள் சித்திரங்களாகவேத் தொகுத்து வைத்திருக்கிறோம்.ஒவ்வொரு வாக்கியமும் நமக்குள் ஒரு சித்திரங்களின் அசைவையே உருவாக்குகிறது.
சீன ஜப்பானிய மொழிகளில் ஒவ்வொரு சொல்லும் ஒரு சித்திரமாகவே எழுதப்படுகிறது என்பதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். சொல்லப்போனால் படிமம் கணினியின் சுட்டி போலவே செயலாற்றுகிறது. ஒரு படிமம் சொடுக்கப்படும்போது அதன் பின்னாலிருக்கும் உலகம் திறந்துகொள்கிறது.

சலனமற்றக் குளத்தில் எறியப்படும் கல்போல என்றும் சொல்லலாம்.கல் ஆழத்திற்குச் செல்லுந்தோறும் குளத்தின் மேற்பரப்பில் அலைகள் விரிந்து கொண்டேயிருக்கும்கவிதையிலுள்ள ஒரு சொல் நம்மில் ஏற்படுத்தும் துக்கமோ சிலிர்ப்போ வியப்போ தான் அந்தக் கவிதையை நமக்குப் பிடித்தமானதாக்குகிறது. மேலும் மேலும் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது.அச்சொற்களை மந்திரம்போல் திரும்பத் திரும்ப அசைபோடச் சொல்கிறதுவாசகனுக்கு ஒரு படிமம் உணர்த்துகிற அர்த்தமோ அனுபவமோ கவிஞன் உத்தேசிப்பதாக இருக்கவேண்டிய அவசியமில்லை.வாசகனின் மொழிப் புழக்கத்துக்கும் அனுபவத்துக்குமேற்ப வேறு அர்த்தத்தையோ அனுபவத்தையோகூட சாத்தியப்படுத்தக்கூடும். ஒரு எளிமையான உதாரணத்தைப் பார்ப்போம்

விழித்திரு, பசித்திரு, தனித்திரு

இந்த அறைகூவலை அனைவரும் அறிவோம்.இதில் உள்ள மூன்று சொற்களுமே நேரடியான பொருளில் சொல்லப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.இச்சொற்கள் இவற்றின் புற அர்த்தங்களைத் தாண்டி விரிவான பொருளிலேயே ரயோகப்படுத்தப்பட்டுள்ளன.அப்படிப்பட்ட
விரிவும் ஆழமும் பொருளை உணர்த்தும்போதுதான் வெறும் சொற்கள் படிமங்களாக உருமாறுகின்றன.

பாரதியின் பிரபலமான கவிதைஅக்னிக் குஞ்சொன்று கண்டேன்”.

இந்தக் கவிதை முழுமையுமே படிமமாகி நிற்கிறது.இத்தனை காலம் கழித்தும் இதன் பொருளும் ஆழமும் சற்றும் அடர்த்தி குறையாது நிலைத்திருப்பதற்குக் காரணம் இதன் படிமத்தன்மையேஇந்திய விடுதலைக்கான அறைகூவல் என்று அந்தக் காலச்சூழலுக்கு இக்கவிதையைப் பொருத்திப் பார்க்கும்போதும் சரி,  இன்றைய நவீன காலச் சூழலின் பிண்ணனியில் பொருள் கொள்ளும்போதும் சரி இக்கவிதையின் வீச்சு சிறிதும் மட்டுப்படவில்லை

படிமமும்கூட கவிதைக்குள் இருக்குள் அக்னிக்குஞ்சுதானோ?

பிரமிளின் மிகப் பிரபலமான கவிதை படிமம் ஒரு கவிதையில் சாத்தியப்படுத்தும் எல்லையற்ற விரிவுக்கும் செறிவுக்கும் கச்சிதமான உதாரணம்.

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

பிரமிளின் இன்னொரு பிரபலமான கவிதைமண்டபம்“.  அதில் உள்ள சில வரிகள்.

நாள்மணி வினாடிகள்
திக்கற்றுச் சிதறிய
கணம் ஒன்றில் நீ குனிந்து
முகம்தேடிய வேளை
ஜலத்தின் கதவுகள்
அலையோடித் திறக்க
குளத்தின் கருக்கிருட்டில்
நகைத்த கடல் நான்

இவ்வரிகளை வாசித்துச் செல்லும்போதுநகைத்த கடல்என்ற சொற்கள் ஒருகணம் நம்மை இழுத்து நிறுத்துகின்றன. திடுக்கிடச் செய்கின்றன. மனதில் மெல்லிய அச்சம் படர்கிறது.பயங்கரத்தின் சிரிப்பை உணரும்போது மயிர்க்கூச்செறிகிறது.

கதை கேட்கப் போய்விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்
பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி.
கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியின் முழு நிலவில் அந்த நேரத்
தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?”

ஞானக்கூத்தனின்பவழமல்லிகவிதை இது. சங்கக்கவிதையின் அமைப்பையொத்த இக்கவிதை நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் தனித்துவமானவை.“மலர்ந்தோய்ந்த இரவு’,‘மெல்லக்கட்டவிழும்’, ‘கொல்லையிலேஎன்று ஒவ்வொரு சொல்லும் சொற்றொடரும்
ஆழமான யோசனைகளை சிந்தனைகளைக் கிளர்த்துகின்றன.

அலைச்சல்

இக்கரைக்கும் அக்கரைக்கும்
பரிசல் ஓட்டிப்
பரிசல் ஓட்டி
எக்கரை
என் கரை என்று
மறக்கும்
இடையோடும் நதி மெல்லச்
சிரிக்கும்

கல்யாண்ஜியின் இந்தக் கவிதையை வாசித்து முடிக்கும்போது சன்னமாய் ஒரு ஆசுவாசம் துளிர்க்கும்.நமது அன்றாடங்களின் பரபரப்பை நாமே நிதானமாக கவனிப்பதுபோல் ஒரு இடைவெளி ஏற்படும்.உறையும் அக்கணத்தில் இக்கவிதை அதன் சாதாரணத்தன்மையைத் துறந்து மேலே பறக்கத் தொடங்கியிருக்கும்.

கலாப்ரியாவின்பிற்பகல்கவிதையின் இறுதி வரிகள்.

மருத மரநிழல்கள் மீட்டாத
தண்டவாளச் சோகங்களை எனக்கேன் நிரந்தரித்தாய் சசி?”

என்ற கேள்விக்குப் பின்னால் விரியும் துயரின் சுமைக்குப் பின்னால் எத்தனை அழுத்தம் உறைந்துள்ளது. இருவரும் சேராது பிரிந்தாயிற்று. பிரிந்தாலும் விலகிவிடவில்லை. கூடவேதான் பயணம்.. ஆனால் சேர்ந்து பயணிப்பதில்லைபிரியமும் காதலும் கூடவேதான் என்றாலும் நிரந்தரமான என்றுமே சேரமுடியாத பிரிவும் நிஜம்தான். யதார்த்தம்தான். இத்தனையையும் தாண்டி பிரிவுற்ற காதலின் வலியை துயரை இவ்வரிகள் வெகு நுட்பமாக சித்தரித்துள்ளன.

யாரேனும் ஒரு கவிஞனின் கவிதைகளை தொடர்ந்து கவனிக்கும்போது அவரது கவிதையுலகில் சில படிமங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டிருப்பதை அறியமுடியும். அவற்றை அக்கவிஞனின் மையப் படிமங்கள் என்று குறிப்பிடலாம். அக்குறிப்பிட்ட படிமங்கள் அவரது கவிதையுலகை மேலும் புரிந்துகொள்ள உதவும்படி அமைந்துள்ளன. தன்னையறியாமல் கவிஞன் அப்படிமங்களை திரும்பத் திரும்ப தன் கவிதைகளில் பயன்படுத்தியிருப்பார். பிடித்த பாடலின் பிடித்தமான வரிகளை அடிக்கடி முணுமுணுப்பதுபோல அவரது கவிதைகளில் அவை திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கும்.

Related image

உடனடி உதாரணமாக தேவதேவனின் கவிதையுலகில் உள்ள படிமங்கள் குறித்து ஜெயமோகன் எழுதிய கட்டுரை நினைவுக்கு வரும். வீடு, மரம், குருவி ஆகிய படிமங்களின் வழியாக கவிஞரின் தரிசனம் எப்படி வெளிப்படுகிறது என்பதை விளக்கியிருப்பார். ஒட்டுமொத்த மானுட வாழ்வுமே கருணையை நோக்கிய பயணம் என்கிற தரிசனம்.

Related image

நவீன கவிஞர்களில் முக்கியமானவர் சுகுமாரன். அவரது முதல் தொகுப்பானகோடைகாலக்குறிப்புகள்தொடங்கி இன்று வரையிலான கவிதைகள் தமிழ் கவிதைக்கு முக்கியப் பங்களிப்பைத் தந்திருப்பவை.தொடர்ந்து அவரது கவிதைகளை வாசித்திருப்பவன் என்ற அடிப்படையில் நான் கவனிக்க நேர்ந்த முக்கியமான அம்சம் அவரது கவிதையில்நதிஎப்படி ஒரு படிமமாக தொடர்ந்து வந்திருக்கிறது என்பது.

அவரது முதல் தொகுப்பில் இடம்பெற்ற பிரபலமானகையில் அள்ளிய நீர்கவிதைதொட்டே நதி அவரது கவிதையுலகில் இடம்பெறத் தொடங்கியுள்ளது.

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்.
கை நீரைக் கவிழ்த்தேன்.
போகும் நதியில் எது என் நீர்.

விரிவான ஒரு தத்துவப் பார்வையுடன் இடம் பெற்றிருக்கும் இப்படிமம் நமது மரபான சிந்தனையில் உள்ள நதியைக் குறித்த கருத்தாக்கங்களுடன் அடியொற்றியுள்ளது.

சுகுமாரனின்முடிச்சுகவிதை பிரபலமான ஒரு காதல் கவிதை. “துரோகத்தின் முள்ளும்…” என்று தொடங்கும் அக்கவிதையில் நதி எனும் படிமம் காமத்தின் நிறமேற்கிறது.

இப்படுக்கை மீது
நெகிழும் பாறைக் கூட்டம் உன் உடல்
உன்னை அரித்தோடிய வெந்நீர் நதி நான்

இது மேலும் அழுத்தம் பெற்றுவென்றிலன் என்றபோதும்கவிதையில்

மழைக்கால நதியிரண்டு
ஒன்று கலப்பதுபோல்
கூடித் ததும்பும் உடல்கள்

என்று விரிவடைகிறது.

நதியை காமம் என்று மனம் உருவகித்துக் கொண்ட கணத்தில் எத்தனையோ திறப்புகள் நிகழ்கின்றன. மூர்க்க உணர்வாக எப்போதும் காமம் பெருக்கெடுத்துக் கொண்டிருப்பின் அழிவும் கேடும்தான்.கரைகளை உடைக்கும். கண்டதையும் தழுவிக்கொள்ளும். கட்டற்றுப் போகும்.
மௌனமாக மினுமினுத்தபடி, சலசலத்தோடுகையில் யாரும் அதைக் கண்டு அஞ்சமாட்டார்கள். இறங்கிக் குளிப்பார்கள். நீந்தித் திளைப்பார்கள். கரையோரம் நாணல்கள் சிலிர்க்கும். கதிர் விளையும். பசுமை செழிக்கும். நதியைப் போன்றே காமத்துக்கும் கரைகள் இருப்பது அவசியம். அணைகட்டி ஆற்றுப்படுத்துவதும் நன்று.

இப்படிமம் மேலும் துலக்கம் பெற்று நிற்பதுநதியின் பெயர் பூர்ணாஎன்ற கவிதையில்.

நதியும் அத்வைதிதான்
போதையும் கனவும் போல.
கடவுளைப் புணர்ந்த ஆனந்தம் கொண்டாட
நானும்
மனிதனைப் புணர்ந்த பாவம் தொலைய
நீயும்
மூழ்கிக் கொண்டிருக்கிறோம் தேவி
ஒரே நதியில்.

வாழ்வின் பெரும் பயணத்தை நதியைக் கொண்டு சுட்டிக்காட்டுவது நம் மரபு. அதைக் கடந்து காமத்தை சுட்டும்போது வேறொரு பரிமாணத்தை அடைகிறதுகாமத்தைக் கடந்த மனம் சென்று சேர்வது வெறுமையிலா? பொருளின்மையின் துயரிலா? அவரது தொடக்க கால கவிதையானமலை நகரத்தில் நான்கவிதையில் ஆழத்தில்

 ஓடிக் கொண்டிருக்கும் நதி
மரணத்தை உச்சரித்து நகரும்
பாதரச நீர்க்கோடு

என்று தெரியும்போது அதற்கான விடை கிடைக்கிறது.

ஆனால் காலமும் அனுபவங்களும் பக்குவப்படுத்தும்போது பார்வையும் மாறுகிறது. எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கும்போது எது மிஞ்சுகிறது? காமத்தின் எல்லா நிறங்களையும் உதிர்ந்துபோகும்போது எஞ்சி நிற்பது எது? இப்போது கையில் அள்ளும் அந்த நதியின் நீர் எதைக் காட்டுகிறது? மனம் சலனமில்லாது கனிவுடன் சொல்கிறது.

எளிமையானது அன்பு
நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர்போல

நதிகளே மனிதகுலத்தின் நாகரிகத் தொட்டில்கள். நதிகளையொட்டிய மனித நாகரிகம் செழித்திருக்கிறது. நதிகளின் வழியேதான் வாழ்நிலங்கள் உருவாகிச் செழித்திருக்கின்றன. சுகுமாரனின் கவிதைகளில் நாம் நனையும் நதிகளும் அவ்வாறான பயணங்களையே சாத்தியப்படுத்துகின்றன.

யூமா வாசுகி அடிப்படையில் ஒரு ஓவியர். கவிஞர். சிறுகதையாசிரியர். நாவலாசிரியர். ஆனால் இன்று அவர் மொழிபெயர்ப்பாளராக மட்டுமே தொடர்ந்து பங்களித்துக் கொண்டிருக்கிறார். உனக்கும் உங்களுக்கும் 1993ல் வெளிவந்த அவரது முதல் தொகுப்பு. இரண்டாவது தொகுப்பு தோழமை இருள்’ 1997ல் வெளியானது. 2001ல் வெளிவந்தஇரவுகளின் நிழற்படம்அவரது மூன்றாவது தொகுப்பு. அதே ஆண்டில் அவரது காதல் கவிதைகளைக் கொண்டஅமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்குவெளியானது. ‘என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்’ 2008ல் வெளியானது.
Image result for யூமா வாசுகி


யூமாவின் கவிதைகளை கவனிக்கும்போது அலைவுறும் பசிக்கலைஞனின் வாழ்க்கை என்ற சித்திரமே மனதில் எழுகிறது. அவரது கவிதைகளில் வெகு இயல்பாக இடம்பெறும் சிகரெட்டுகளும் தேநீரும் அவருடைய கவிதையுலகின் மையப் படிமமாக திரண்டு நிற்கின்றன. ஒட்டுமொத்த மனித வாழ்வே சிகரெட் துண்டுதான் என்று யோசித்துப் பார்க்க முடியும். தீக்கங்கு கொண்டு பற்றிடும்போது வாழ்க்கைத் தொடங்குகிறது. மெல்ல மெல்ல சுடர்ந்து எரிந்து நகர்கிறது. புகையாக கரைகிறது. சாம்பலென உதிர்ந்து ஆயுள் குறைகிறது. பல சமயங்களில் எதற்கு இந்த சனியன் என்று எரிச்சல் மூண்டபோதும் அதை அத்தனை எளிதில் உதற முடிவதில்லை.
நிறைய சந்தர்ப்பங்களில் புகைப்பதற்கு என்று ஒரு காரணமும் கிடையாது. அதற்கு பொருளும் கிடையாது. வாழ்வின் பல தருணங்களும் அப்படி காரண காரியமற்று வெறுமனே கடக்கும் நாட்களாகவே பொருளாகின்றன. நுரையீரலை நிறைத்து இதம் தரும் அதன் புகை கூடவே பல அசௌகரியங்களையும் கொண்டுள்ளது. சிகரெட்டின் நிகோடின் புகை இரைப்பையையும் இட்டு நிரப்பும் அனுகூலத்தையும் கொண்டிருக்கிறது. தவிர, விரலிடுக்கில் புகையும் சிகரெட் தனித்திருப்பவனின் துணை. நகராது உறைந்திருக்கும் காலத்தைக் கடக்க உதவும் எளிய பொழுதுபோக்கு. இறுதியில் எரிந்து சாம்பலாவது இரண்டின் முடிவும்.

நடைதளர்த்தும் பசிவேகும் குடல்.
சிகரெட் புகைச் சமாதானமிட்ட
ஒரு கோப்பைத் தேநீரால்
பிரியங்காட்டும் அறிமுகங்களுக்காக

என்றுஇண்டர்வியூகவிதையில் புகையத் தொடங்குகிறது முதல் சிகரெட். பசி தணிக்கவும் தனிமையை போக்கவும் காத்திருப்பின் சலிப்பை உதறவுமென்று சிகரெட் எப்போதும் நிழல்போல உடனிருக்கிறது.

இவை ஏமாற்றத்தோடு புறப்படும் முன்பு
சிகரெட்டை அணைத்து
அருகே போகிறேன்

என்று  இன்னொரு கவிதையிலும் தினசரி நடவடிக்கையாகவே சிகரெட் இடம்பெறுகிறது.

வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் பகிர்ந்துகொள்ளும் நண்பனைப் போல சிகரெட்டும் உடன் பயணிக்கிறது. எனவேதான் நனைந்து குளிரில் நடுங்கியபடிமழையைப் பாராட்டும் உற்சாகமான மனநிலையில் சிகரெட்டும் உடன் இருக்கிறது.

நீ வா மழையே
ஏறத்தாழ நனைந்து நான்
பெட்டிக்கடையொன்றில்
ஒண்டிக்கொண்டு
குளிர் சிலிர்க்கப் புகைத்தபடி
உன்னைப் பாராட்டுகிறேன்.

உறக்கம் வராத இரவுகளில் ஒவ்வொரு மணித்துகளையும் புகையைக் கொண்டே கரைக்க முடிகிறது. இரவைக் கொளுத்தி சாம்பலாக்கி ஆஷ் டிரேயில் நிரப்பும் வித்தையைத்தான் இரவுகளும் ஆஷ்டிரேவும்கவிதை காட்டுகிறது.

ஆஷ்டிரேயின் வெற்றிடத்தை
கொஞ்சமே அடைக்கிறது சாம்பல்.

என்று நகராத இரவின் ஒவ்வொரு கண்ணியையும் சொல்லி முடிக்கும்போது கவிதை இப்படி முடிகிறது.

எல்லோரும் எழுந்து
ஆயத்தமாகும்போது
எவரும் என் வீட்டுக்கதவைத்
தட்டாதிருக்கவேண்டும்
ஆஷ்டிரே நிறைந்து
தரையிலும் கிடக்கின்ற
சிகரெட்டுத் துணுக்குகள் நடுவில்
அப்போதுதான் நான் அநேகமாய்
தூங்கத் தொடங்கியிருப்பேன்

ஒவ்வொரு வேளையும் தவறாது வந்து இம்சிக்கும் பசியை தற்காலிகமாய் துரத்த சிகரெட் துண்டுகளே துணையாகும் வித்தையை அம்மாவுக்கு சொல்லும்போது விருந்தாளிக்கான உணவாக சிகரெட்டே உருமாறுகிறது.

பசியின் ஒவ்வொரு வருகையும் முதன்முறை
வீட்டிற்கு வரும் மிக நெருங்கிய விருந்தினனைப்போல்
பூரண உபசரிப்பை எதிர்பார்க்கிறது
வெறும் சிகரெட் புகையால் மூழ்கடிக்கப்பட்ட அது
சேகரித்த குரோதம் முற்றி
பழி தீர்க்கக் குடலில் துளைகளிடும் என்றாவது.

வாழ்வில் எது உனக்கு சந்தோஷத்தைத் தரும் என்ற கேள்விக்கு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பதில் இருக்கும். அவரவரின் தேவைக்கும் மனஇயல்புக்கும் ஏற்ப

இரண்டு சிகரெட்டுகளிருந்தால்
எந்தக் கவலையுமின்றி
ஒன்றைப் புகைக்கலாம்

என்ற பதில் சொல்பவன் சிகரெட்டுடன் மட்டுமே வாழ்பவனாகத்தான் இருக்கவேண்டும்.

இரண்டாவது சிகரெட் என்பது அவனுக்கு அத்தனை சந்தோஷத்தைத் தருவது. எப்போதுமே ஒரு சிகரெட்டுக்கான வாய்ப்பைத்தான் இந்த வாழ்க்கை அவனுக்கு வழங்கியுள்ளது. இரவலாகவும் இருக்கலாம். ஒரு கோப்பை தேநீருக்குப் பிறகான மிச்சத்தில் சாத்தியமாவது அதுவொன்றுதான் என்றுமிருக்கலாம்.

வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் இப்படி எளிமையாகவே கடந்துபோக முடியும் பக்குவத்தை பசியைத் தவிர வேறு எது தந்துவிடமுடியும். பெரும் தேவைகளோ கோரிக்கைகளோ இல்லாத சந்தர்ப்பங்களில் புகார்களும் இருக்காது. எல்லோரையும் மன்னிக்கும் மகாமனம் சித்தித்துவிடும். சிகரெட் தராது நிற்கும் நண்பனையும்கூட அது மன்னித்தருளும்.

நீதியரசன் எல்லாவற்றையுமே
மன்னித்துவிடுகிறான்
சிகரெட் கொடுத்து உபசரிக்காத நண்பனையும்கூட.

என்று மனம் கனிவு கொள்கிறது. ஆனால் இப்படிப்பட்ட கனிவை சாத்தியப்படுத்தும் சிகரெட்டே ஆயுதமாகவும் மாறுகிறது.

காகிதச் சிற்றுருளையில்
கெட்டித்த நேயத்திற்கு
காரணமாய் வருபவை
தீ தந்து போகின்றன. ஓய்வற்று
நீளக்கோடுஅடர்ந்த சுழிகள்
வடிவறற பிசிறு இப்படி
கொலையுண்டு மறைகின்றன
புகையே மௌனத்
திரை விரித்து நிற்க புன்சிரித்து
உடைத்துக்கொண்டு
உள்ளே நுழைபவர்களே
உங்களுக்கு அய்யோ.
என் சிகரெட்டினுள்
அடைபட்டுத் தீர்ந்துவிட
விதிக்கப்பட்டிருக்கிறீர்கள்
மரணச் சுவை பழகும்
மயான இதயம் எனக்கு
வெறி மிஞ்சக் கிறுகிறுக்கும் தலை
தரையெங்கும் கரி முனைகளுடன்
சடலங்கள்இடங்கள்/செயல்கள் நூறு
இப்போது மடிந்து கொண்டிருப்பது
கழிந்த தினத்தில் சிறைவைத்த
ஒரு ஆக்டோபஸ் வார்த்தை
வாகாய் காலை மடித்தமர்ந்து
புகைப்பதற்கு
மூலைச்சுவர் காத்திருக்கிறது
இது என் ஆயுதம்
எதிப்பது எதுவானாலும்
வெல்பவன் நானே

இப்படி பசியோடும் வலியோடும் இரவோடும் தனிமையோடும் துணையிருக்கும் வலுவான இந்தப் படிமம் தன் உச்சத்தை அடைவதுஅந்திஎன்கிற சிறு கவிதையில்.

வழி நெடுக மழை
நனைந்தும் நனையாமலும்
கடந்தது பாதி தூரம்இனி
ஒண்டுவதற்கு எதுவுமில்லாத
வெற்று வீதி
அணையாது காத்து வந்த
சிகரெட்டின் கடைசிப்புகையுடன்
மடியின் கனம் அகல
வழிப்பயமற்ற மழைப்பயணம்

இந்தக் கவிதை மொத்தமும் பொருளமைதியுடன் வெகு துல்லியமாய் இயல்பாய் எளிமையாய் அமைந்திருக்கிறது. இத்தனை நாளும் பொத்திவைத்து அடைகாத்து வந்தவனுடன் உடனிருப்பது சிகரெட்டின் கடைசிப் புகை என்பதை வாசிக்கும்போது இந்தக் கவிதையின் வீச்சு அபாரமாய் அமைந்திருக்கிறது.

யூமாவின் பிற்கால கவிதைகளில் சிகரெட்டுகள் காணாமல் போயிருக்கின்றன. அதனிடத்தில் குழந்தைகளும் ஒரு சித்திரக்காரனும் இடம்பெற்றிருக்கிறார்கள். பல கவிதைகளை உதாரணமாகச் சொல்லலாம். ‘ஒரு மனிதன் முயலாக’ ‘மாலைநேர வீடு’, ‘சாத்தானும் சிறுமியும்’ இன்னும் தலைப்பில்லாத பல கவிதைகளிலும் குழந்தைகளின் வெவ்வேறு சித்திரங்கள் உலவுகின்றன.

உத்தரவாதமில்லாத வாழ்க்கை பல காயங்களையும் தழும்புகளையும் தந்திருந்தபோதும் யாவரிடமும் கருணையை கோரி நிற்கும் எங்கும் அன்பையே விரும்பும் மனதின் வேட்கையாக இந்த உலகம் எளிமையுடனும் ஒளியுடனும் விரிந்திருக்கவேண்டும் என்பதே கவிஞனின் விருப்பமாக அமைந்துள்ளது.


ஒவ்வொரு கவிஞனின் கவிதை உலகிலும் மையப் படிமங்களை கண்டுகொள்ள முடியும். கவிதையை ரசிக்க அது அவசியமா என்று கேட்கலாம். கவிதையை நாம் ரசிப்பதே அப்படியான படிமங்களின் வழியாகவே, நமக்குத் தெரிந்தும் தெரியாமலும்.

(கபாடபுரம் இதழ் 1ல் வெளியானது. )

No comments:

Post a Comment

யுவன் - விஷ்ணுபுரம் விருது

  1 இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர் மாதம். அலுவலகப் பயிற்சி நிமித்தமாக புனே சென்றிருந்தேன். அன்று காலை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்ற...