Thursday 1 March 2018

க.நா.சு – கனவும் காரியங்களும்

எல்லா காலகட்டங்களிலும், உலக வரலாற்றில் எந்தவொரு கலை வடிவத்தின் தொடக்கத்திலும், தொலைநோக்குப் பார்வை கொண்ட, உடனடிப் பலன்களை எதிர்பாராது உழைத்த யாரோ ஒருவரின் அர்ப்பணிப்பே அடிப்படையாக அமைந்திருக்கும். லௌகீக அர்த்தத்தில் இத்தகையோரின் அர்ப்பணிப்பும் உழைப்பும் ‘பிழைக்கத் தெரியாதவர்களின், பித்துப் பிடித்தவர்களின் அர்த்தமற்ற‘ காரியங்களாகவே தொடர்ந்து விமர்சிக்கப் பட்டிருக்கின்றன, புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அத்தகைய பித்தர்களின் பைத்தியக்காரத்தனமான காரியங்களினால்தான் கலை வடிவங்கள் காலூன்றி நின்றிருப்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தமிழ் நவீன இலக்கியத்தின் இன்றைய நிலையிலிருந்து பின்னோக்கிச் செல்லும்போது, படைப்பிலக்கியம், விமர்சனம், பத்திரிக்கைகள் என அதன் எல்லாத் தளங்களிலும் க.நா.சு என்று அறியப்படுகிற கந்தாடை நாராயணன் சுப்பிரமணியத்தின் அழுத்தமான பங்களிப்பை நம்மால் அடையாளம் காணமுடியும்.
க.நா.சு வின் குடும்பப் பின்னணியையும், அவர் வளர்ந்த சூழ்நிலையையும் பார்க்கும்போது அவருக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இருக்கவில்லை என்றே தெரிகிறது. அவரது தந்தை நாராயணனின் கனவே தனது மகன் ஆங்கிலத்தில் புலமை பெற்று ஆங்கிலத்திலேயே எழுதிப் புகழ் பெற வேண்டும் என்பதே. அப்படியிருந்தும் க.நா.சுவின் அக்கறை ஆரம்பத்திலிருந்தே தமிழ் இலக்கியம் சார்ந்தே இருந்திருக்கிறது. சாணுப் பாட்டியின் கதை உலகம் அவருக்கு பெரும் வாய்ப்பாக இருந்தது. அப்போதைய தமிழ் பத்திரிக்கைகளும் இலக்கியப் படைப்புகளும் பெரும் மனச் சோர்வைத் தருவதாகவே இருந்திருக்கின்றன. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எழுத்தாளர் சங்கர்ராம் தனது மண்ணாசை நாவலை வலுக்கட்டாயமாகக் கொடுத்து வாசிக்கச் செய்தது ஒரு முக்கிய நிகழ்வு. பழந்தமிழ் இலக்கியங்களை நேரடியாக அல்லாது மொழிபெயர்ப்புகள் வழியாகவே வாசித்தபோது தமிழ் மொழியின் வளத்தையும் இலக்கிய ஆழங்களையும் அறிந்துகொண்டிருக்கிறார். பாரதியின் எழுத்துக்களைப் படித்த பிறகுதான் தமிழிலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை அவருக்குப் பிறந்திருக்கிறது. ஆனால் அப்போது பிரபலமாயிருந்த சுதேசமித்திரன்,விகடன் போன்ற பத்திரிக்கைகள் அவருடைய எழுத்தை ஊக்கப்படுத்தவில்லை. அந்த சமயத்தில்தான் வ.ராவின் மணிக்கொடி பத்திரிகை, க.நா.சுவின் திறனை அறிந்து அவரது எழுத்துக்களை ஏற்றுப் பிரசுரித்தது. தனது மகன் தமிழில் எழுதுவதை அறிந்த க.நா.சுவின் தந்தை பெரும் ஏமாற்றம் அடைந்தார். ஆங்கிலம் மட்டுமே உலகை ஆளும் மொழி என்று நம்பிய அவரது ஏமாற்றம் ஒருவகையில் தீர்க்க தரிசனம் மிக்கது என்பதை தமிழில் எழுதிப் பிழைக்கலாம் என்று புறப்பட்டு வந்த க.நா.சுவின் துயர வாழ்க்கை உறுதிப்படுத்துகிறது.

க.நா.சு எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் மணிக்கொடி வழியாகச் சிறுகதைகளும், பின்னர் எழுத்து பத்திரிகை வழியாக புதுக் கவிதைகளும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. மணிக்கொடி எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா என்று அனைவரும் சிறுகதைகளிலேயே முனைப்பாயிருந்தனர். க.நா.சு கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமர்சனம் என அனைத்து இலக்கிய வடிவங்களையும் எழுதியிருக்கிறார் என்றாலும் அவரது கவனமும் அக்கறையும் நாவல் குறித்ததாகவே இருந்திருக்கிறது. தமிழில் நாவல் என்ற இலக்கிய வடிவத்தைக் குறித்த ஆழமான பிரக்ஞையை ஏற்படுத்தும் முனைப்புடனே ஏராளமான நாவல் மொழிபெயர்ப்புகளையும், தழுவல்களையும், சுருக்கங்களையும் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்புகள் அவருடைய அன்றைய பொருளாதாரத் தேவைகளை ஈடுசெய்ய ஓரளவு உதவின என்றாலும் அவற்றில் அவரது தெரிவுகள் தொலைநோக்குப் பார்வை உடையதாக இருந்தமைதான் முக்கியமானது.
“எனக்கு நாவல் வாசிப்பது மிகவும் பிடிக்கும். நல்ல நாவல்களுக்கான என் தேடல 40’களிலேயே தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்,“ என்று சொல்லும் அவருக்கு தமிழிலும் தரமான நாவல்கள் எழுதப்படவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. கூடவே அதேயளவு நிராசையும்.
“நாவலாசிரியர்களையோ விமர்சகர்களையோ கவனத்துக்குரியவர்களாக எண்ணாத காலம் இது. சமூகம் இது,“ என்று உணர்ந்திருக்கிறார். “குப்பைக் கூளங்களை பார்த்துத் திளைத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் போதுமான அளவுக்கு மொழிபெயர்ப்பு நூல்களைத் தேடிப் படிப்பதில்லை என்று நன்றாகத் தெரிகிறது. இதனால் வாசகர்களுக்கோ மொழிபெயர்ப்பாளர்களுக்கோ நஷ்டமோ இல்லையோ தமிழ்ப் பண்பாட்டிற்கு பெரும் நஷ்டம் விளைகிறது என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு அப்பாலும் ஒரு நிஜ உலகமும் இலக்கிய உலகமும் இருக்கிறது என்று தெரிந்துகொள்வது தமிழர்களுக்கு மிக மிக அவசியம். அரசியலில் இது கிணற்றுத் தவளைகளின் காலமாக இருக்கலாம். இலக்கியத்தில் கிணற்றுத் தவளைகளாக இருப்பது பெரு நஷ்டமாகும்.“
இந்த சமூக அக்கறைதான், தன் உழைப்புக்கு உடனடியான பலன் இருக்கிறதோ இல்லையோ தன்னால் செய்ய முடிந்தவற்றை முடிந்தளவு செய்துவிட்டுப் போய்விடவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் முழு மூச்சாக, கை நோக பக்கம் பக்கமாக எழுதச் செய்திருக்கிறது.
தகவல் தொழில் நுட்பத்தின் பெரும் அனுகிரகத்தால் இன்று உலகமே நம் கையில் என்ற நிலையில் எந்தவொரு மொழியின் இலக்கியப் பிரதியையும் நம்மால் எளிதில் கண்டடைந்து வாசித்துவிட முடியும். ஆனால் பத்திரிக்கைகள். நூலகங்கள் வாயிலாக மட்டுமே அயலக இலக்கியத்தை அறிந்து கொள்ள முடியும் என்ற சூழலில் க.நா.சு வாசித்து மொழிபெயர்த்த நூல்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. க.நா.சு இல்லாது தமிழில் அன்று நூட் ஹாம்சனின் (Knut Hamsun) பசியையும், ஸெல்மா லாகெலெவ்வின் (Selma Lagerlöf) மதகுருவையும், அன்புவழியையும், வில்லியம் ஸரோயனின் (William Saroyan) மனுஷ்ய நாடகத்தையும், இன்னும் பல ஆக்கங்களையும் வாசித்திருக்க முடியாது. அவருடைய பல மொழியாக்கங்களே இன்று மறுபதிப்பின்றி உள்ளன. அயலக மொழி நாவல்களை தொடர்ந்து அவதானித்த அவர் இந்திய நாவல்களில் ‘இந்தியத் தன்மை‘ என்ற ஒன்று உண்டா என்ற தேடலின்போது இந்திய மொழிகளில் வெளியான சிறந்த நாவல்களைக் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டார். “சிறந்த பத்து இந்திய நாவல்கள்“ என்ற அந்த நூலின் இறுதிப் பகுதியில் உள்ள அவரது கட்டுரை நாவல் இலக்கியம் குறித்த மிக முக்கியமான ஒன்று. நாவல் வடிவம் குறித்த அவரது உலகளாவிய ஆழமான அறிவையும் இந்திய மொழிகளில் நாவல் வடிவம் எவ்வாறு உருவாகி வந்துள்ளது என்பது பற்றிய பார்வையையும் இக் கட்டுரையில் அழுத்தமாகக் காணமுடிகிறது.
தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் 1879ம் ஆண்டு வெளிவந்தது. ஏறக்குறைய 140 ஆண்டுகள் கொண்ட தமிழ் நாவல் களம் இந்த நீண்ட காலகட்டத்தில் முக்கியமான பல நாவல்களை தந்திருக்கிறது என்றாலும் தமிழ் நாவல்களின் எழுச்சி என்பது 1990களுக்குப் பிறகே என்று சொல்ல முடியும். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழின் சிறந்த நாவல்கள் பலவும் வெளியாகியுள்ளன. நாவல் வாசிப்பு சார்ந்த ஒரு பெரும் திறப்பையும் இந்த காலகட்டம் சாத்தியமாக்கியுள்ளது. ஐரோப்பிய நாவல்களைக் குறித்த அறிமுகங்கள். சுருக்கங்கள். மொழிபெயர்ப்புகள் என்று பல்வேறு தளங்களில் தமிழில் நாவல் என்கிற இலக்கிய வடிவம் குறித்த அறிமுகத்தையும் அக்கறையையும் வலியுறுத்திய க.நா.சுவின் உழைப்பே இன்றைய தமிழ் நாவல்களின் எழுச்சிக்கு உந்துதலாகவும் அடிப்படையாகவும் அமைந்திருக்க வேண்டும்.
ஐரோப்பிய நாவலாசிரியர்களைக் குறித்து விரிவாக விவாதித்திருக்கும் க.நா.சு நாவல் உலகின் சிகரங்களாகக் கருதப்படும் டால்ஸ்டாயைக் குறித்தும், தாஸ்தாவஸ்கியைக் குறித்தும் விரிவான அளவில் எங்கும் பதிவு செய்திருக்கிறாரா என்று தெரியவில்லை.
க.நா.சு எழுதி அச்சில் வெளிவந்த நாவல்கள் 17 என்று ஒரு பட்டியல் உள்ளது. பொய்த் தேவு நாவல் மட்டுமே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. பல்வேறு மொழி நாவல்களின் போக்கையும் நோக்கையும் தொடர்ந்து கவனித்திருந்த க.நா.சு தானும் விதவிதமாக எழுதிப் பார்த்திருக்கிறார் என்று சொல்லும் வண்ணம் அவருடைய நாவல்களின் தன்மைகள் உள்ளன. சித்தர்களையும் அது சார்ந்த மீமெய் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்ட “அவதூதர்“ ( யுவனின் ‘குள்ளச் சித்தன் சரித்திரம்’ நினைவுக்கு வருகிறது), வள்ளுவரும் ஏசுவும் கதாபாத்திரங்களாக வந்து உரையாடும் “தாமஸ் வந்திருந்தார்“, மர்ம நாவலை எழுதிப் பார்க்கும் உத்தேசத்துடன் எழுதிய “அவரவர் பாடு“ என்று அவருடைய நாவல்களின் வகைமைகள் பல, எழுதி பிரசுரிக்கப்படாத நாவல்களின் பட்டியலில் நான்கு பாகங்களைக் கொண்ட ஆயிரம் பக்கங்களுக்கும் மேலான “திருவாலங்காடு“ உட்பட 15க்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் உள்ளன என்று தஞ்சை பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும். அவரது கறாரான விமர்சன அடிப்படையிலேயே சொல்லப் போனால் அவரது நாவல்கள் அவரை ஒரு சிறப்பான நாவலாசிரியராக அடையாளம் காட்டவில்லை என்றே சொல்லவேண்டும்.
ஆனால் க.நா.சுவின் வருகை இலக்கிய விமர்சனத்தின் போக்கை திசைமாற்றியது. கோட்பாட்டு அடிப்படையிலான, பல்கலைக் கழகங்கள் சார்ந்த விமர்சன மரபிலிருந்து விலகி, ரசனை அடிப்படையிலான தனித்துவமிக்க விமர்சன மரபை உருவாக்கியது க.நா.சுவின் முக்கியமான பங்களிப்பாகும். இன்றளவும் இரு வெவ்வேறு துருவங்களாக இவ்விரண்டு பெரும் மரபுகளும் இருப்பினும், பொது வாசகனுக்கு அளவுகோலாய் துணை நிற்பது ரசனை அடிப்படையிலான விமர்சன மரபுதான். சிறந்த படைப்பாளிகளையும் படைப்புகளையும் பட்டியலிடும் மரபு க.நா.சு தொடங்கி வைத்தது. அப்படியொரு காரியத்தை செய்ய யாருமே முன் வராதபோது துணிச்சலுடன் முன்வந்தார் க.நா.சு. பலவிதமான கண்டனங்களுக்கும் கேலிப் பேச்சுக்கும் இந்த பட்டியல் முறை ஆளானதென்றாலும். அந்த மதிப்பீடுகளை அனைவருமே எதிர்பார்த்திருந்தனர். இன்று பிரபல எழுத்தாளர்கள் எல்லோருமே அவரவர் மதிப்பீட்டிலான பட்டியலை முன்வைக்கின்றனர். அவரது விமர்சனக் கோட்பாடுகளை விமர்சனக் கலை(1955) நூலில் விவாதித்திருக்கிறார். பெரும் எதிர்ப்பலையைக் கிளப்பிய இந் நூலின் வருகைக்குப் பிறகு அவருடைய எதிரிகளின் எண்ணிக்கைக் கூடிவிட்டது என்று குறிப்பிடுவதுண்டு. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என்று க.நா.சுவின் ஆக்கங்கள் ஏராளமானவையாக இருந்தபோதும், விமர்சனங்களின் மூலம் அவர் சம்பாதித்துக் கொண்ட விரோதங்கள். ஒரு படைப்பாளியாக அவரை அணுகவும் எடை போடவும் பெரும் தடையாக இருந்தன என்று தோன்றுகிறது. ”இலக்கியாசிரியனின் கடமை வாசகனை எட்டுவதில்லை. அதற்கு எதிர்மாறாக, வாசகனின் கடமைதான் ஆசிரியனை எட்டிப்பிடிப்பது என்பதை வற்புறுத்த இன்று இலக்கிய விமர்சனம் உபயோகப்பட வேண்டும். இலக்கியாசிரியன் வாசகர்களையோ. ஒரு லக்ஷிய வாசகனையோ எண்ணிக் கொண்டு எழுதுவதில்லை. வாசகன்தான் தன் இலக்கியத் தாகத்தில், `நமக்கேற்ற ஆசிரியன் இவன்,’ என்று தேடிக் கொண்டு இடைவிடாமல் ஓட வேண்டும் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலக்கிய விமர்சனம் வாசகர்களுக்கு அடித்துச் சொல்ல வேண்டும்,’’ என்று விமர்சனக் கலையில் அவர் குறிப்பிட்டிருப்பது ஒரு இலக்கியப் படைப்புக்கும் வாசகனுக்கும் உள்ள உறவின் தன்மையையும், ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்யும் சாத்தியங்களையும் தெளிவு படுத்துகிறது.
தன் வாழ்நாள் முழுக்க அவர் எழுதியதில் பல பக்கங்கள் அச்சேறாமலேயே காணாமல் போயிருக்கின்றன என்பது நமது கசப்பான உண்மை. பல கட்டுரைகள். நடத்திய பத்திரிக்கைகள் என பலவும் தொகுக்கப்படாமல் போய்விட்டன. அவருடைய உலகச் சிந்தனை வளம் என்ற நூல் மூன்று பாகங்கள் கொண்டது, இன்று பதிப்பில் உள்ளதா என்றே தெரியவில்லை. அவர் திட்டமிட்டிருந்த இந்தியச் சிந்தனை வளம் என்ற தொகுதியின் கைப்பிரதி உள்ளதா என்றும் தெரியாது. தகப்பனார் சேர்த்து வைத்த சொத்துக்களையெல்லாம் விற்று பத்திரிக்கைகள் நடத்தியிருக்கிறார். சந்திரோதயம், சூறாவளி, இலக்கிய வட்டம் ( சந்தாதாரர்களுக்கு நாவல் பெட்டி என்ற பெயரில் புதிய நாவல் ஒன்றை பரிசளிக்கும் ஒரு புதிய முயற்சி) லிபி என்ற ஆங்கிலப் பத்திரிக்கை ஆகிய பத்திரிக்கைகளை பொருள் இழப்பைப் பற்றிக் கவலைப்படாது நடத்தியிருக்கிறார். த ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், த மெயில் போன்ற நாளேடுகளிலும், மிரர், கவிதா, இண்டியா போன்ற மாத இதழ்களிலும் my poetry, Poetry Karnataka ஏடுகளிலும், டெபோனெர், காரவான், இல்லஸ்டிரேட்டட் வீக்லி, இண்டியன் லிட்ரேச்சர் போன்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும் அவர் தொடர்ந்து எழுதியிருக்கிறார். இவையெல்லாம் அவரது பங்களிப்புகள் குறித்து நமக்கு இன்று கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நம்மால் அறிந்துகொள்ள முடிவது. இப்படி பதிவுகள் இல்லாமல் போன காரியங்கள் இன்னும் எத்தனை இருக்கும்? இன்று அனைத்திற்கும் புகலிடமாக(?) விளங்கும் விக்கிபிடியாவில் க.நா.சு பற்றி தேடும்போது நமக்குக் கிடைக்கும் பக்கத்தின் அளவும் தகவல்களும். வாழ்நாள் முழுக்க தமிழுக்காகவும் இலக்கியத்துக்காகவும் போராடி உழைத்த ஒருவருக்கு நாம் செய்யும் மரியாதையை அம்பலப்படுத்துவதாக உள்ளது.
க.நா.சு குறித்த legendary கதைகள் நிறைய புழக்கத்தில் உண்டு. “க.நா.சு வாழ்நாளில் தீர்மானித்துக் கொண்ட ஒரு முக்கியமான சட்டம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 பக்கங்களையாவது தமிழில் சுயமாக எழுதுவது. 15 பக்கங்களேனும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பது. 10 பக்கங்களேனும் குறைந்தது ஆங்கிலத்திலேயே புதியதாகப் படைப்பது.“ இதை 70 வயதுக்குப் பிறகும்கூட அவர் விடாது பின்பற்றினார் என்றே அவருடன் பழகிய பல எழுத்தாள நண்பர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல ருசியான உணவுப் பதார்த்தங்களை அதற்கென்ற விசேஷமான கடைகளுக்கு தேடிச் சென்று சாப்பிடுவார் என்றும் பல கதைகள் உண்டு. தனது 70வயதிலும்கூட சென்னை பத்திரிக்கை அலுவலகங்களுக்கு எழுதிய கைப்பிரதிகளோடு அவர் நடந்து சென்றிருக்கிறார். சென்னையில் உள்ள நூலகங்களில் அவர் கால்படாத நூலகங்களே கிடையாது என்று சொல்ல வேண்டும். தஞ்சை பிரகாஷ் தரும் க.நா.சுவின் சித்திரம் சுவாரஸ்யமானது. ‘சரியாக வாராத முள்ளம்பன்றித் தலைமுடி. அறிவின் விசாலத்தை எடுத்துக்காட்டும் மேடுபள்ளங்களற்ற விரிந்த நெற்றி. படித்துப் படித்து கண்ணாடி மாற்றி மாற்றி. பார்வை கூர்மை மங்கிப்போய். சுழிக் கண்ணாடி அணிந்து அணிந்த வரிவரியாகக் காணப்படும் கண்கள். சரியாக வேட்டி கட்டத் தெரியாது. எங்காவது சென்னைத் தெருக்களில். ஏதாவது ஒரு பதிப்பகத்தை நோக்கியோ நடந்தே அயராத கால்கள். வேர்த்துக் காதோரம் வழியும் வேர்வையுடன் கற்பனை ரதத்தில் நடந்துகொண்டேயிருக்கும். உச்சிவேளையில் எங்காவது ஒரு மரநிழலில். மௌண்ட் ரோட்டில் ஏதாவது ஒரு வேப்ப மர நிழலில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலும் நடக்கும் க.நா.சு.‘
இப்படிப்பட்ட கதைகளின் வழியாக க.நா.சுவை இன்று பார்க்கும்போது பெரும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எழுத்து ஒன்றைத் தவிர அவர் எதிலுமே, தன் மனைவி மகள் உட்பட கவனமாகவோ அக்கறையுடனோ இருந்ததில்லை. கையில் காசில்லாது சென்னையில் அலைந்த நாட்களாகட்டும் வாழ்வின் இறுதி ஆண்டுகளில் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் வருகை தரு பேராசிரியராக இருந்தபோதும் சரி, அவருக்கு வாழ்வின் லௌகீக தளங்கள் குறித்த எதிர்பார்ப்புகளோ கவலைகளோ இருக்கவில்லை. எழுதுவதெல்லாம் பிரசுரமாவது குறித்தும் அவருக்கு எந்தவிதமான அக்கறையும் இருந்திருக்கவில்லை. தனது பணி எழுதிப் போட்டுவிடுவதுதான் என்றே இருந்திருக்கிறார். இந்த மனோநிலை அசாதாரணமான ஒன்று. தான் ஜென்மம் எடுத்தது எழுதுவதற்காக மட்டுமே என்ற அவருடைய அகத்தெளிவை உணராது அவரது புறத் தோற்றத்தை. தோல்வியுற்ற வாழ்வை மட்டுமே கொண்டு அவரை எடைபோட்டிருப்பது நமது பேதமைதான்.
அவருடைய படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன. உலக இலக்கியம் தொடங்கி இந்திய இலக்கியம் வரையிலான அவரது பதிவுகள் ஏராளமாக உள்ளன. ஆனாலும் அவருடைய நூல்கள் பலவும் இன்று அச்சில் இல்லாமலே உள்ளன. இதழ் தொகுப்புகள், மொத்தத் தொகுப்புகள் என்று பதிப்புலகம் பல ஆக்கப்பூர்வமான காரியங்களை மேற்கொண்டுள்ளது. க.நா.சுவின் படைப்புகளும் விமர்சனங்களும் கட்டுரைகளும் அவ்வாறு தொகுக்கப்படுமாயின், தமிழ் இலக்கியத்துக்காக அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பைக் குறித்து இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள பெரிதும் உதவியாக அமையும். நூற்றாண்டு கண்ட அவரது வாழ்வையும் உழைப்பையும் அர்த்தப்படுத்துவதாக இருக்கும்.

(சொல்வனம்  இதழ் 74 | 16-08-2012| )

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...