Thursday 8 March 2018


தீதும் நன்றும்

காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக்கின் நாவலை முன்வைத்து
Image result for காச்சர் கோச்சர்

0
இந்திய இலக்கியத்தில் தென்னக மொழிகளின் பங்கு கணிசமானதும் முக்கியமானதுமாகும். கவிதை, சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள் என்று இலக்கியத்தின் எல்லாத் தளங்களிலும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளின் பங்களிப்பு அளப்பரியது. நாடகத்தைப் பொறுத்தவரை கன்னடமே முன்னணியில் உள்ளது. மொழிபெயர்ப்புகளின் வழியாக கன்னட இலக்கியத்துடனான நம் உறவு தொடர்ந்து வந்துள்ளது. சிக்கவீர ராஜேந்திரன், மண்ணும் மனிதரும், ஒரு குடும்பம் சிதைகிறது, பருவம், சமஸ்காரா, அழிந்த பிறகு உள்ளிட்ட முக்கியமான நாவல்களும் கிரீஷ் கர்நாட்டின் நாடகங்களும் சித்தலிங்கய்யா, அரவிந்த் மாளஹத்தி உள்ளிட்டோரின் தலித் எழுத்துக்களும் அக்கமாதேவி, பசவண்ணர் வசனங்கள் தொடங்கி நவீன கவிதைகள் வரையிலும் கன்னடத்திலிருந்து தமிழுக்குக் கிடைத்துள்ளன. டி.பி.சித்தலிங்கய்யா, ஹேமா ஆனந்ததீர்த்தன், எச்.வி.சுப்ரமணியன் ஆகியோரின் மொழிபெயர்ப்புப் பணிகளின் விளைவுகளே இவை. கடந்த இருபது ஆண்டுகளாக கன்னட மொழியில் நடப்பவற்றை நமக்குச் சொல்லும் முக்கிய காரியத்தை செவ்வனே செய்து வருபவர் பாவண்ணன்.
நவீன நாவல்களின் வரவு கன்னடத்தில் எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றி நமக்குச் சொல்லும் முக்கிய நாவல்களின் மொழிபெயர்ப்புகள் சமீப ஆண்டுகளில் வெளிவரவில்லை. சாகித்திய அகாதமியில் ஆண்டுதோறும் வெளியாகும் விருதுபெற்ற நாவல்களும் கன்னட நாவல் இலக்கியத்தின் போக்கை அறிய உதவுபவையாக அமையவில்லை. இச் சூழலில் சாகித்திய அகாதமியோ நேஷனல் புக் டிரஸ்டோ அல்லாத பதிப்பகத்தின் வெளியீடாக கன்னட நாவல் ஒன்று வந்திருப்பது கவனிக்கவேண்டிய ஒன்று. அதுவே விவேக் ஷான்பாக்கின் ‘காச்சர் கோச்சர்’ நாவலுக்கான முதல் அடையாளமாக அமைகிறது.
விவேக் ஷான்பாக் தமிழுக்குப் புதியவர் அல்ல. அவரது சிறுகதைகள் ஜெயமோகனின் தளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு ‘வேங்கைச் சவாரி’ என்ற பெயரில் தொகுப்பாகவும் வெளியாகியுள்ளது.. மூன்று நாவல்களை எழுதியிருக்கும் ஷான்பாக் ஒரு நாவலாசிரியராக இந்த நாவலின் வழியாகவே நமக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.
0
மனிதன் ஒரு சமூக விலங்கு என்று நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் இக்கூற்றே கேள்விக்குரியது. சுயநலமும், தான் தன் சுகம் என்பதுமே அவனது முதற்கொள்கைகள். அதற்குப் பின்புதான் குடும்பம், உறவுகள், நண்பர்கள், ஊர், உலகமென்று அவனது எண்ணமும் செயலும் முன்னகர்கிறது.
மனிதனுடனே தோன்றி அவனது பரிணாம வளர்ச்சியின் இன்னொரு முகமாக காலந்தோறும் வளர்ந்து வந்திருக்கும் கலையும் இலக்கியமும் மனிதனுக்குள் இருக்கும் இயல்பான மிருகத் தன்மையை தணிவித்து மாற்றுகிற முயற்சியாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் இதுவரையிலான கலையும் இலக்கியமும் தம் முயற்சியில் எந்த அளவு வெற்றிக் கண்டுள்ளன என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. கலை இலக்கியத்தின் சீரிய முயற்சிகளை சாதி, மொழி, நாடு, பொருளாதாரம் என்று பல்வேறு காரணிகளும் தொடர்ந்து முறியடித்தவண்ணமே உள்ளன.
0
உலகமயமாக்கலுக்குப் பிறகான சூழல், மனிதனுக்கு இதுவரையிலும் இருந்த சமூக விலங்கு என்ற அந்தஸ்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
சென்ற தலைமுறையில் எதுவெல்லாம் தவறு, குற்றம், அறத்துக்கு விரோதமானது, அநீதி என்று அடையாளம் காட்டப்பட்டதோ அத்தகைய காரியங்கள் அனைத்துமே இன்று வெகு சாதாரணமானவையாக, சமூக நடைமுறைகளாக ஒப்புக்கொள்ளப் பட்டுவிட்டன. எளிமையான உதாரணம், லஞ்சம் பெறுவதும், தருவதும். அரசு அலுவலகங்களிலும் அரசியல்வாதிகளிடத்தும் லஞ்சம் என்பது இயல்பான அடையாளமாகிப் போனது. ஊழலின் அளவைக் கொண்டு நல்லவர் அல்லவர் என ஊழல்வாதிகளை எடைபோடும் அவலம்கூட நம்மிடத்தில் எந்த அசைவையும் ஏற்படுத்துவதில்லை.
தனிமனித அளவிலும் சமூக அளவிலும் வரையுடைந்துபோன அறமும் நீதியுணர்வும் அதிகமும் பாதிப்பது மத்திய வர்க்கத்தினரையே. செல்வத்தின்பொருட்டு எதுவும் செல்லுபடியாகும் மேல்தட்டும், இல்லாமைக்கு நடுவே வேறெதற்கும் இடமில்லை என்கிற அடித்தட்டும் யாவற்றையும் சுலபமாய் எந்த மனச்சுளிப்புமின்றி கடந்து போக முடியும்போது எஞ்சி நிற்கும் கொஞ்சநஞ்ச மனக்குரலுக்கு அஞ்சி, கொள்ளவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் தவித்திருப்பது ‘மிடில்கிளாஸ்’ வர்க்கத்தினரே. இத்தனை காலமும் மனித வரலாறு நம்மிடையே கட்டமைத்திருந்த மதிப்பீடுகளை என்ன செய்வதன்ற குற்றவுணர்ச்சியுடன் தடுமாறும் அவர்களே சுலபமாய் அதற்கு பலியுமாகிறார்கள்.
பொருளாதாரம் மட்டுமே பிரதானமாய் முன்னின்று பிற அனைத்தையும் தீர்மானிக்கும் இன்றைய சூழலில், பெங்களுரூ போன்ற நகரத்தில் வசிக்க நேரும் ஒரு மத்தியவர்க்க குடும்பம் இப்படிப்பட்ட சரிவுகளுக்கு எத்தனை சுலபமாக உள்ளாகிறது என்பதை மிக எளிமையான நடையில் எளிமையான மொழியில் மிகவுமே எளிமையான விதத்தில் சொல்லும் கனமான நாவல் காச்சர் கோச்சர்.
0
குடும்பம்’ என்கிற அமைப்பின் மாறிவரும் அடிப்படைகளையும் மண உறவு சார்ந்து இதுவரையிலும் இருக்கும் மதிப்பீடுகளையும் இந்த நாவல் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
குடும்ப அமைப்பை ஒன்றிணைத்து நிறுத்துவதில் அன்பு, பாசம், கருணை என்று பிற காரணிகள் பங்களித்தபோதும் பிரதானமானதாக அமைவது பொருளாதாரமே. அவரவர் தேவைகளுக்கான பணம் தடையில்லாமல் கிடைக்கும்பட்சத்தில் வேறெதைப் பற்றியும் கேள்விகள் எழுவதில்லை. அத்தகைய பொருளாதார தாராளத்துக்கு தனது உழைப்பின் மூலம், வருமானத்தின் மூலம் வாய்ப்பளிப்பவர் என்ன செய்தாலும் அவற்றை அப்படியே ஒப்புக்கொண்டு அனுசரித்துப் போவதென்பது எழுதப்படாத விதியாகிறது. அவரவர் இருப்பை பத்திரப்படுத்திக்கொள்ளும் இம்முனைப்பு மேலும் தீவிரமடைந்து அடுத்த கட்டத்துக்கு வளர்ந்து வன்முறை மனோபாவமாக உருமாறுவதுதான் கவனிக்கவேண்டிய ஒன்று. குடும்ப அங்கத்தினர்கள் இந்த ஆட்டத்துக்கான விதிகளை தம்மளவில் ஒப்புக்கொண்டவர்கள். அல்லது உருவாக்கியவர்கள். எனவே புதிய ஒருவரை இந்த ஆட்டத்துக்குள் அனுமதிப்பதில்லை. திருமண உறவின் பெயரால் உள்ளே வர நேரும் ஒருவரையும் ஏதேனும் காரணம் காட்டி ஆட்டத்திலிருந்து வெளியேற்றவே முனைகிறார்கள்.
குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்குமான சுயநலமே அனைவரையும் ஒன்றிணைத்து இணக்கத்தில் வைத்திருக்கிறது. இதில் வேறெந்த நபரையும் காரணியையும் அனுமதிக்கக்கூடாது என்பதில் அனைவருமே கவனமாகவும் ஒற்றுமையுடனும் இருக்கிறார்கள். இதன்பொருட்டு எல்லாவிதமான சமரசங்களுக்கும் தயாராக உள்ளார்கள். நாவலில் சொல்லப்படுவதுபோல ‘கட்டாயத்தை விருப்பமாகக் காட்டிக்கொள்வது குடும்பத்தின் வலிமைகளில் ஒன்று.’
நாவலின் முக்கிய கதாபாத்திரமான திருமணம் செய்துகொள்ளாத ‘சித்தப்பா’வைத் தேடி, அவருக்குப் பிடித்த மசூர் பருப்புக் குழம்புடன் வீட்டுக்கு வரும் ஒரு பெண்ணை யார், என்ன என்ற எந்த கேள்வியுமே இல்லாமல் வீட்டுத் தலைவியும், மாலதியும் விரட்டியடிக்கிறார்கள். ‘சித்தப்பா’வுக்கு அப்படியொரு உறவு அமைவது அந்தக் குடும்பம் மொத்தத்துக்குமான பெருத்த அபாயம். அதை உடனடியாக அகற்றும் பெண்களின் நோக்கத்துக்கு அனைவருமே உடன்படுகிறார்கள், மௌனமாக. யாரும் சித்தப்பாவிடம் இவள் யார்? உங்களை எதற்குத் தேடிவந்தாள் என்று கேட்பதில்லை. அவரும் சொல்வதில்லை.
பெண்களின் இயல்பாகச் சுட்டப்படும் கருணையை, சகபெண்களின் மீதான அவர்களின் அனுசரணையை இப்படியான கதாபாத்திரங்களின் மனப்பான்மை உடைத்துப் போடுகிறது. வன்முறையும் குரூரமும் பால்பேதம் பார்ப்பதில்லை என்றே உணர்த்துகின்றன.
இப்படிப்பட்ட சுயநலத்தின்பாலான குடும்ப அமைப்பிற்கு மணஉறவு ஊறுவிளைவிக்கக் கூடும் என்கிற நிலையில், அதைத் துறக்கவும் அவர்கள் கவலைப்படுவதில்லை.
இந்த நாவலின் கதாபாத்திரமான மாலதி சிறிய ஒரு சச்சரவுக்குப் பிறகு கணவன் வீட்டிலிருந்து பிறந்த வீட்டுக்கு வந்துவிடுகிறாள். சமாதானம் செய்வதற்காக குடும்பத்தினர் அவளை அழைத்துச் செல்கிறார்கள். அந்த முயற்சி கைகூடிவிடக்கூடாது என்பதற்காக கூடுதலான மூர்க்கத்துடன் நடந்துகொள்கிறாள். பிரச்சினை பெரிதாகி திரும்பிவிடுகிறார்கள். அத்துடன் இல்லாமல் சித்தப்பாவின் அடியாட்களைக் கொண்டு கணவன் வீட்டுக்குச் சென்று அவனை அடித்து தன் நகைகளை மீட்டுக் கொண்டு வருகிறாள். இதை அவள் விவரித்து சொல்லும்போது குடும்பம் மொத்தமும் வேடிக்கையாக, அவளது சாகசமாக மெச்சி ரசிக்கிறது.
ஒரு பெண் மணமான பின்பு பிறந்த வீட்டுக்கு திரும்ப வந்து இருப்பதென்பது கௌரவக் குறைச்சலாய், இகழத்தக்க ஒன்றாக இருந்த மனநிலை மாறிப்போகிறது. அவளது வாழ்வைப் பற்றிய கவலையோ அடுத்து அவள் என்ன செய்வாள் என்ற எண்ணமோ இல்லாமல் அனைவரும் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதுமான ஒரு நிலை அசாதாரணமானது. இப்படியான ஒரு மனநிலைக்கான முதற்காரணம் அந்தக் குடும்பத்தின் வசதி வாய்ப்புகள்தான். புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டுக்குத் திரும்ப வரும் பெண்ணால் அந்தக் குடும்பத்துக்கு கூடுதலான சுமை என்றிருக்கும் பட்சத்தில் அவளை அங்கிருந்து விலக்கி இன்னொரு குடும்பத்தின் பொறுப்பாக மாற்றவே இத்தகைய மதிப்பீடுகள் பயன்பட்டிருந்தனவா என்ற கேள்வி எழுகிறது. இத்துடன் காலங்காலமாக கணவன் மனைவி உறவில் கற்பிக்கப்பட்டிருக்கும் மதிப்பீடுகளையும் பரிசீலனைக்கு உள்ளாக்குகிறது.
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை கல்மனதுடன் செய்பவர்களை நாம் ‘தீயவர்கள்’ என்று முத்திரையிட்டு விலக்கி வைத்திருக்கிறோம். ஆனால் அத்தகைய காரியங்களை எளிய ஒரு மத்திய தர குடும்பமே எவ்வித குற்றவுணர்ச்சியோ குறுகுறுப்போ இன்றி செய்யத் துணிகிறது என்பதுதான் மாறிவரும் நவீன மனப்பான்மையின் அபாயகரமான அடுத்த கட்டம்.
நாவலின் கதைசொல்லியின் மனைவி அனிதா இந்தக் குடும்பத்தின் ஆட்டவிதிகளை குறித்து கேள்வி கேட்கிறாள். சந்தேகம் எழுப்புகிறாள். அச்சமின்றி விமர்சிக்கிறாள். கடும் சண்டைக்குப் பின் பிறந்த வீட்டுக்குத் செல்லும் அவள் குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு அங்கிருந்து புறப்படுகிறாள். ஆனால் இங்கே வந்து சேர்வதில்லை. அவள் என்ன ஆனாள்? என்பதைப் பற்றி நாவல் சொல்வதில்லை. ஆனால் இதே சந்தர்ப்பத்தில் நாவலின் கதாபாத்திரங்கள் அனைத்தும் உணவுமேசையில் ஒரு சதியாலோசனைக்கான விஷயங்களை வெகு சாதாரணமாக உரையாடும் கடைசி அத்தியாயம் அவளுக்கு என்ன ஆகியிருக்கக்கூடும் என்கிற பயங்கர ஊகத்தை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த உரையாடலில் வெளிப்படும் குரூரமும் தேவையில்லாதவர்களை தங்கள் வழியிலிருந்து அப்புறப்படுத்தும் வன்முறை மனோபாவமும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. வன்முறையை கையாள்கிற மனோபாவத்துக்கு வந்துசேர்ந்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தரும் அதிர்ச்சியைவிட கூடுதலானது அதன்பொருட்டு அவர்கள் யாருக்கும் எவ்விதமான குற்றவுணர்ச்சியும் இல்லையென்பதுதான். ஒரு சிற்றெறும்பை நசுக்கிக் கொல்வதைக்கூட சகிக்காதவளை, எறும்புகள் வீட்டுக்கு வரும் எல்லா வழிகளையும் முனைப்புடன் அடைக்கும் ஒரு குடும்பம் எப்படி அப்புறப்படுத்தக்கூடும் என்பதிலுள்ள விரோதபாவம் குடும்பம் என்கிற அமைப்பின் மீதும் அன்பு, தயை, ஈகை போன்ற மதிப்பீடுகளின் மீதுமான நமது நம்பிக்கையைப் புரட்டிப் போடுகிறது. சமூகமே வன்முறைக்கூடமாக உருமாறியுள்ளது. வாழத் தகுதியற்றதாய் மாறுகிறதோ? என்ற கவலையைத் தருகிறது. வன்முறை ஒரு கூட்டு மனப்பான்மை. தனி மனித அளவில் அவன் சுயநலம் சார்ந்து உருப்பெற்றிருக்கும் இத்தகைய வன்முறை மனோபாவம் மெல்ல மெல்ல குடும்ப அளவில் உருப்பெற்று கும்பல் கலாச்சாரமாக கூட்டுக் கலாச்சாரமாக மாறிப்போயிருக்கிறதோ என்கிற சந்தேகமும் பயமும் எழுகிறது. குண்டு வெடிப்புகளைப்போலில்லாமல் இவ்வாறான ரகசிய வெடிப்புகளாகவே இவை தொடர்வதுதான் மிகுந்த கவலையளிக்கும் ஒன்று.
0
குறைந்த அளவிலான பக்கங்கள், விரல்விட்டு எண்ணத் தகுந்த கதாபாத்திரங்கள், மிக எளிமையான கட்டமைப்பு, நேரடியான சொல்முறை என நாவல் தோற்றத்திலும் அமைப்பிலும் ஒன்றுமில்லாதது என்ற எண்ணத்தைத் தருகிறது. மிகச் சாதாரணமான தொடக்கம், கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்தி நகரும் இயல்பான அத்தியாயங்கள் என்று விரியும் நாவலை வாசித்துச் செல்லும்போது வாசகன் எந்தவிதமான தனிப்பட்ட ஈர்ப்பையோ ஈடுபாட்டையோ அடைவதில்லை. அடுத்தது என்ன என்று பரபரக்க வைக்கும் த்ரில்லர் கதையும் அல்ல. அபாரமான நிலக் காட்சிகளோ, ஆழமான மனவோட்டங்களோ கிடையாது. நாவலின் கடைசி அத்தியாயத்தை வாசித்து முடிக்கும் வரையிலுமே இந்த நாவல் என்ன சொல்ல வருகிறது என்கிற கேள்வி வாசகனுக்குள் பெருகி நிறைந்தபடியேதான் இருக்கும். ஒருவேளை இந்தச் சலிப்புடனே கடைசி அத்தியாயத்தை அவன் கவனமின்றி படிப்பானேயாயின் இதை எதற்குப் பதிப்பித்தார்கள் என்று எரிச்சலுடனே நாவலை விசிறி எறிய வாய்ப்பிருக்கிறது.
ஆனால் கடைசி அத்தியாயத்தை கவனமாக வாசிக்கும் ஒருவனுக்கு இந்த நாவல் தரும் அனுபவம் வெகு அலாதியானது. அந்த அனுபவத்திலிருந்து நாவலை பின்னோக்கி அவன் மறுபடியும் யோசிக்கும்போது அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெகு சாதாரணமாக சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று கூடி முயங்கி முன்பு அறிந்திராத அர்த்தங்களை உணர்த்துகின்றன. மிகச் சாதாரணமான முதல் அத்தியாயத்தின் முக்கியத்துவமற்றது போல் தோன்றிய வரிகளும் கதாபாத்திரங்களும் காத்திரத்துடன் உருமாறி நாவலின் கனத்தைக் கூட்டுகின்றன.
நாவலில் வெகு சாதாரணமாக இடம்பெறும் சின்னச் சின்ன விஷயங்களும்கூட அர்த்தச்செறிவுமிக்க படிமங்களாக உருப்பெறும் சாத்தியங்களுடன் அமைந்துள்ளன. உதாரணமாக முதல் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள நூற்றாண்டுகள் பழமையான காபி ஹவுஸை இந்த நாவல் அடிக்கோடிடும் குடும்ப அமைப்பைச் சுட்டுவதாகக் கொள்ளமுடியும். வீட்டின் எல்லாத் திசைகளிலிருந்தும் உள்ளே வரும் எறும்புகள், அவற்றை அப்புறப்படுத்த இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் என ஒவ்வொன்றுமே நாவலின் ஆழத்துக்கு வலு சேர்க்கின்றன.
கே.நல்லதம்பியின் இயல்பான நேர்த்தியான மொழிபெயர்ப்பு நாவலின் வாசிப்பு சுவாரஸ்யத்தைக் கூட்டுவதாக இருப்பினும் செம்மைப் படுத்தியிருக்க வேண்டிய இடங்களும் இல்லாமல் இல்லை.
ஆர்.கேசவ ரெட்டியின் தெலுங்கு நாவலான ‘அவன் காட்டை வென்றான்’ கனத்த அனுபவத்தைத் தர குறைந்த பக்கங்களே போதும் என்பதற்கு உதாரணமாக இருந்தது. அந்த வரிசையில் வந்திருக்கும் ‘காச்சர் கோச்சர்’ நாவல் எழுத்திலும் வாசிப்பிலும் புதிய சாத்தியங்களை முன்வைத்துள்ளது.
0
(காலச்சுவடு மார்ச் 2018 இதழில் வெளியான மதிப்புரை)





No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...