Saturday 10 March 2018

முகடுகளும் சரிவுகளும் - எம். கோபாலகிருஷ்ணனின் 'முனிமேடு' சிறுகதை தொகுப்பில் காமத்தைப் பேசும் கதைகள்.

முகடுகளும் சரிவுகளும் - 
நட்பாஸ்


இம்மாதம் எம் கோபாலகிருஷ்ணனின் 'மணல் கடிகை' இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது. தொழிலமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக விழுமியங்களின்மீது தாராளமயமாக்கம் ஏற்படுத்திய தாக்கத்தை ஆவணப்படுத்தும் முக்கியமான நாவல். லைசன்ஸ் ராஜ் அமைப்பை விமரிசிக்கும் 'காகித மலர்கள்' இந்திய நிர்வாக அமைப்பின் உள்ளிருந்து எழுதப்பட்ட நாவல், இது சிறு தொழில் அமைப்புகளின் உள்ளிருந்து எழுதப்பட்டது. அதிகாரம் எங்கிருக்கிறதோ அங்கிருந்து அதன் விரிவான தாக்கத்தைப் பேசும் இந்த இரு நாவல்களும் சுதந்திர இந்தியாவின் இரு பெரும் கட்டங்களைப் பேசும் நாவல்கள். தில்லியையும் திருப்பூரையும் களமாகக் கொண்ட இவ்விரண்டும் இன்னும் பல பதிப்புகளைப் பெறும் தகுதி கொண்டவை.

எம் கோபாலகிருஷ்ணனின் 'முனிமேடு' 2007ஆம் ஆண்டின் இறுதியில் பதிப்பிக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு. மொத்தம் பதினான்கு கதைகள். 2003 முதல் 2007 வரையான நான்காண்டுகளில் பல்வேறு பத்திரிகைகளில் எழுதப்பட்ட இவை இங்கு காலவரிசையில் தொகுக்கப்படவில்லை. எப்படிப்பட்ட ஒழுங்கை உணர்த்துவதற்கான வரிசையில் கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்ற கேள்வி சுவாரசியமாக இருந்தாலும் எனக்கு அதற்கு விடை தெரியவில்லை. முதல் எட்டு கதைகளில் 'இரவு', 'முனிமேடு', 'நிழல்பொழுதினிலே', 'உயிர்ப்பற்று', 'சொற்பொருள் பின்வரும்', 'கஜாரிகா' என்ற ஏழிலும் காமம் பிரதானமாக இருக்கிறது.

தொகுப்பைப் படித்துவிட்டு என் அப்பா, "இவருடைய எல்லா கதைகளிலும் காமம்தான் இருக்கிறது," என்று சொன்னார். "கோபாலின் மணற்கடிகை நாவலில் அத்தனை மனிதர்களையும் ஆட்டிப் படைக்கும் சக்தி இந்தக் காமம்தான்," என்று தொகுப்பின் அணிந்துரையில் குறிப்பிடுகிறார் கவிஞர் தேவதேவன். "வாழ்வின் மீதான வேட்கையின் குறியீடாகவே கோபாலின் படைப்புகளில் இந்தக் காமம் வருகிறது," என்ற விளக்கமும் தருகிறார் அவர்.

எந்த ஒரு படைப்பையும் அதன் மைய திரியாக நான் நினைப்பதைக் கொண்டே அணுகுவது என் வழக்கம். சிறுகதைத் தொகுப்புகளுக்கு இது சரிப்படாதுதான் - எல்லா கதைகளுக்கும் ஒரே மையம் இருக்க முடியாது. ஆனால், எது இலக்கியம் என்பதைத் தீர்மானிக்க உதவும் மூன்று கருத்துகளை  முன்னொரு பதிவில் முன்வைத்திருந்தேன். அதில் மூன்றாவது கண்டிஷன் இது : "மூன்றாவதாக, ஒரு குறிப்பிட்ட பார்வையை, ஒரு எழுத்தாளனின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை, அவனது அனைத்து படைப்புகளின் வழியாகவும் உணர்த்தும் எழுத்து இலக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது," என்று எழுதியிருந்தேன்.

கோபாலகிருஷ்ணனின் இந்தக் கதைகளில் வரும் காமம் நமக்கு கிளர்ச்சியளிப்பதில்லை - பட்டினத்தார், தாயுமானவர் என்று தொடர்ந்த ஆன்மிக மரபில் காமத்தை ஒரு வீழ்ச்சியாகப் பேசும் களைத்த குரல் இது. எதையும் எழுதிப் பார்க்கலாம் என்று இல்லாமல் தன் உணர்வுகளை நேர்மையாக வெளிப்படுத்திக் கொள்வது நவீனத்துவ இலக்கியத்தில் ஒரு போக்காக இருந்து வருகிறது. காமத்தை ஒரு களியாட்டமாகக் கருதும் இந்த காலத்தில் இப்படிப்பட்ட ஒரு குரல் இருக்கிறதென்றால் அது ஒரு பெரிய ஆச்சரியம்தான். சமகால போக்கைவிட்டு விலகி இருப்பதால் இது ஒரு தனிக்குரலாக இருக்கிறது, மரபார்ந்த ஒரு முக்கியமான பார்வையை நவீன இலக்கியத்தில் பிரதிநிதிப்படுத்துகிறது. இதை அலட்சியப்படுத்தினால் ஆம்னிபஸ் பதிவர்களை சரித்திரம் மன்னிக்காது. சமகால தமிழில் இல்லாத ஒன்றைத் தருவதாக எதுவும் முனிமேடு தொகுப்பில் இருக்கிறது என்றால் அது களியாக இல்லாத களைத்த காமம்தான். ஆகவே, அது நம் பேசுபொருளாகிறது.
https://www.nhm.in/img/100-00-0000-006-1_B.jpg


முதலில் ஒரு பொதுகுறிப்பு : கோபாலகிருஷ்ணன் இயல்பாக, அலங்காரமில்லாத குரலில் பேசும்போதுதான் அவரது கதைகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தக் 'காமக் கதைகளை' எவ்வளவு வேகமாக வாசிக்க முடிந்தாலும், மிக அமைதியான தொனியில் எழுதப்பட்ட 'மருதாணி' சிறுகதையே இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதையாக இருக்கிறது. இதுவும் 'அக்காவின் கருப்பு வெளுப்பு புகைப்படம்' என்ற கதையும் அடங்கின தொனியாலும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளை விவரிக்க வேண்டிய தேவையைத் தவிர்ப்பதாலும் நாம் நம் கண் முன் காணும் உண்மைக்கு மிக அருகே இருக்கின்றன. நம் பொது அனுபவங்களுக்கு சாத்தியப்படும் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. 'யாசகன்' என்ற சிறுகதையும் இந்த விதத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று.

இவற்றின் மறுமுனையில் உள்ள 'நிலைக் கண்ணாடி', 'கஜாரிகா', 'மண்வீணை' ஆகிய மூன்று கதைகளிலும் உள்ள உக்கிரமான மனநிலையும் கவித்துவ மொழிநடையும் இயல்பற்ற சொற்களில் ஓர் உலகை நம்முன் விரிக்கின்றன. சிறுகதைகள் பெரும்பாலும் யதார்த்தத்தின் தளத்தில் இயங்குபவை. இவற்றில் கவிமொழியை வாரியிறைப்பது இல்லாத ஒன்றைப் பார்க்கும் மனக்குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. சிறுகதைகளைவிட நீண்ட நெடுங்கதைகளுக்கு உரிய மொழி அது.

குறிப்பாக, கஜூராஹோவை மையமாய்க் கொண்ட கஜாரிகா என்ற சிறுகதையில் நினோதரா குளக்கரையில் இரவு வேளையில் நிலவைப் புணர்ந்த ஹேமவதியை தடாகத்தின் நகைப்பொலி ஏளனம் செய்கிறது. அந்த ஏளனச் சிரிப்பை அடக்க, இவர்கள் இருவருக்கும் பிறந்த சந்திரவர்மனைக் கொண்டு தடாகத்தைச் சுற்றி கோயில்கள் கட்டுவிக்கிறாள் அவள். அவற்றின் கோபுரங்கள் உடல்களின் கொண்டாட்டங்களைக் காட்டி நினோதராவின் கண்களை அவியச் செய்து, நினோதராவை மௌனத்தில் கட்டுண்டு உறையச் செய்கின்றன. வேறொரு காலம், வேறொருவன் படையெடுத்து வந்து கோபுரங்களை உடைத்து சிற்பங்களைச் சிதைக்கிறான். கோபுரங்களின் அழிவில் ஒலிக்கும் ஓலத்தைத் தாள மாட்டாதவனாக கோவில்களைத் தரைமட்டமாக்கும் துணிவின்றி திரும்புகிறான், 'தசை மினுக்கம் கொண்ட கல் முலைகளோடு'. "வலது கை விரல்கள் சிற்பத்தின் முகட்டில் அலைந்தபடியிருக்க அவன் மனம் மீண்டும் அந்தப் பெண்ணின் அழுகையை மீட்டுக்கொண்டது. கோபுரங்களின் நிலை ஆடியாக நிச்சயம் அவள் உறங்கியிருப்பாளா?" என்று போகிற கதை, "கொய்த முலைகளை அள்ளிக் கொண்டு நீரினுள் சரிந்தான். கர்ணவதியின் நீரோட்டம் ஆவலுடன் அவனை அள்ளிக் கொண்டது," என்று முடிகிறது. காமத்தின் முகடுகளில் அழுகையொலி, அதை அள்ளிக் கொண்டவன் சரிந்து கொண்டேயிருக்கிறான் - படிமங்களின் மொழியில் எழுதப்பட்ட இந்தக் கதையின் வெவ்வேறு முகங்களாக இந்த தொகுப்பிலிருக்கும் 'காமக் கதைகள்' அனைத்தையும் பார்க்க இடமிருக்கிறது.

தொகுப்பில் உள்ள முதல் சிறுகதை, 'இரவு'. இதன் யதார்த்தமான கதை சொல்லலில் உரிய இடங்களில் கையாளப்படும் கவிமொழி உணர்ச்சிகளை அடிக்கோடிடுகிறது, யதார்த்தமும் கவிமொழியும் ஒன்றுக்கொன்று முரணானவை என்ற செயற்கை பிளவை பொய்ப்பிக்கிறது. மேல்குந்தாவின் இரவின் கடுங்குளிரில் காமத்தை அதன் முழு வேட்கையுடன் உணர்கிறான் திருமூர்த்தி. "உடலின் ஒவ்வொரு நரம்பும் மின்னலைச் சூல் கொண்டதுபோல் நெளிந்தாடிக் கொண்டிருந்த அவளை நெருங்கி அணைத்துக் கொண்டால் போதுமென இருந்தது. குளிரின் துடிப்பும் காமத்தின் உன்மத்தமும் அவன் உடலை நடுக்கடித்தன. முகமறியா ஒரு பயமோ தயக்கமோ அவனைக் கவ்வியிருந்த அந்த ஒரு கணத்தில் மார்பில் ஒரு மின்னல் வெட்டு பளீரென்று ஒரேயொரு கணம் அறைந்து மறைந்தது. திருமலை தன்னிலை மறந்து மண்ணில் சரிந்தான். அவள் ஓடிவந்து அவனைத் தாங்குவதை உணரும் தருணத்தில் எங்கும் இருள் சூழ்ந்தது".

"உச்சபட்சமான குளிரோ அல்லது தீவிரமான மாரடைப்போ அல்லது ஏதோவொன்று அவனது உடலியக்க நரம்புகளைச் செயலிழக்கச் செய்திருந்தன," என்று எழுதுகிறார் கோபாலகிருஷ்ணன். இந்த ஏதோவொன்று காமமாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் மட்டுமல்ல, வேறு பலவற்றிலும் காமம் ஆண்களைச் சரித்துச் செயலிழக்கச் செய்கிறது. ஏறத்தாழ குபராவின் 'ஆற்றாமை'யைத் தன் உணர்வுக்களமாகக் கொண்ட இந்தக் கதையில் தன் தம்பியை முதலிரவு அனுபவிக்க விடாமல் தானாய் தருவித்துக் கொண்ட இருமலிலும் மூச்சிரைப்பிலும் அவதிக்குள்ளாக்குகிறான் திருமூர்த்தி.

அதிகாலை நேரத்தில் முனிமேடு வழியாக நடைபயிற்சி செல்லும் கதைசொல்லி, தன் குடிசையின்முன் கோலமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கண்களால் கவரப்பட்டு அவளை மீண்டும் மீண்டும் காணத் தவிக்கிறான். அவள் யாரென்று அவன் மிகத் தாமதமாகவே புரிந்து கொள்கிறான் - "உறையாத சிரிப்பின் வசீகரம் இப்போது ஆசையை முடக்கி அச்சம் விதைத்தது. பச்சை நைட்டியும் உயிர் துளைக்கும் பார்வையும் அவளைக் காணும்போதெல்லாம் காற்றில் நான் உணரும் வினோத வாசனையும் இப்போது எனக்கு வேறு அர்த்தங்களைத் தந்து அச்சுறுத்தின". பெண்மையின் அழகும் அதன் ஆற்றலும் மோக உருக்கொண்டு தன் உயிர் குடித்துவிடும் என்ற ஆண்மையின் அச்சமே சில மோகினி கதைகளில் வெளிப்படுகிறது என்று நண்பர் வெ. சுரேஷ் பேச்சுவாக்கில் ஓரு முறை சொன்னார். இந்தக் கதைகளிலுள்ள காமம் கவிஞர் தேவதேவன் சொல்வதுபோல் வாழ்வின் மீதான வேட்கையின் குறியீடாக எனக்குத் தெரியவில்லை. வேட்கையால் ஏற்பட்ட தன்னிழப்பையும் அதன் விளைவான செயலிழப்பையும் தாளாதவர்களின் துயரமே காம உரு கொள்கிறது.

பகைவர்களுக்கிடையிலான நீதி அவர்களிருவரின் நியாயங்களுக்கும் இடையில் உள்ள ஒரு மத்திய புள்ளியில் இருப்பதாக ஒரு கணக்கு. 'நடுக்கண்ட நியாயம்' என்று சொல்வதுண்டு, நீதி தேவதையின் கைகளில் உள்ள தராசு பாரபட்சமற்ற, இருவருக்கும் நியாயமான நீதியை வழங்குவதைக் குறிக்கிறது. ஆனால் காதலர்களின் நீதியின் தன்மை இப்படிப்பட்டதல்ல. யாருடைய தேவை மிக உக்கிரமாக உணரப்படுகிறதோ, அவர்களின் பக்கமே காதலின் நீதி இருக்க முடியும். பகையும் நட்பும் ஊடாடும் இந்த சமனற்ற உறவின் ஏறி இறங்கும் கோல்களில் காதலர்கள் இன்பத்தை மட்டுமல்ல, நீதியையும் பரிமாறிக் கொள்கிறார்கள். இந்தப் பறிமாற்றம் முடிவுக்கு வந்து, நீதியின் கோல்கள் ஒரு பக்கமாய் சாய்ந்து நிற்பதை ஏற்றுக் கொள்ள முடியாதபோது, காதலர்களின் நீதி பகைவர்களின் நீதியை நோக்கி நகர்கிறது. வேட்கையால் ஏற்படும் தன்னிழப்பு, அதன் விளைவான செயலிழப்பு என்று தொடரும் காமம் சரிவின் காரணியாக மட்டுமில்லாமல் குறியீடாகவும் கோபாலகிருஷ்ணனின் இந்தக் கதைகளில் இருக்கிறது.

'நிழல் பொழுதினிலே' கதையில் ஜோதிக்கும் அழகேசனுக்குமான காதலின் கோல் ஜோதியின் பக்கம் சாய்ந்துவிடுகிறது, அதை அழகனும் ஏற்றுக் கொள்கிறான். ஆனால், கணவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு மாலத்தீவுக்குச் செல்லப் புறப்படும் ஜோதிக்கும் சசிக்கும் இடையிலான காதலின் கோல்களின் ஊசலாட்டத்தை சசி அங்கீகரிப்பதில்லை. "அழகா அழகா" என்று தன்னிலை மறந்த காமத்தில் அவனது காதில் கிசுகிசுக்கும் ஜோதியிடம் அவனுக்கு பெரும் விலகல் ஏற்பட்டு விடுகிறது. சசி தன் வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளும் விதம், நான் முன் சொன்ன வேட்கையால் ஏற்படும் தன்னிழப்பையும் செயலிழப்பையும் அப்பட்டமாக நம் கண் முன் நிறுத்துகிறது. மிகக் குரூரமான இந்தக் கதையில் காமம் ஒரு பெரும் சரிவு என்பது தெளிவாகவே உணர்த்தப்படுகிறது.

காமம், தன்னிழப்பால் நிகழ்த்தப்படும் ஆட்கொள்ளல், அது இருபுறமும் தைக்கும் கத்தி. அன்பு மேலிட்டு ஆட்கொள்ளல் காமத்தின் இனிய முகம் என்றால், அன்பிறந்த நிலையிலும் தன்னிழப்பை மீட்டு மீள இயலாமை அதன் கோர முகம். 'உயிர் பற்று' கதையில் தன் மனைவியைச் சந்தேகிக்கும் கணவனின் காரணங்கள் சொல்லப்படுவதில்லை. ஆனால் அவன் தன் சந்தேகத்தை வெளிப்படுத்திய கணம் இருவரின் உறவும் முறிந்துவிடுகிறது. அவள் தன் அலட்சியத்தால் அவனை எதிர்கொள்கிறாள். தன் மனைவி தன்னைப் பொருட்படுத்த வேண்டும் என்பது அவனது எண்ணமாய் இருக்கலாம், ஆனால் அவனது தற்கொலை முயற்சிகளும்கூட அவளுக்கு ஒரு பொருட்டாயில்லை. "கையிலிருந்து பிடி நழுவித் தரையில் உருண்ட சின்னவன் அருகிலிருந்த பள்ளமொன்றில் அலறிக் கொண்டே விழுந்தான். சருகுகளைக் கலைத்து அவன் சரிந்து விழுந்தது ஏதோ கனவு போல இருந்தது" - "நா இருக்கறன் பாரு" என்று தம்பியை மார்பில் புதைத்துக் கொண்டு ஆறுதல் சொல்லும் பெரியவனின் கண்களில் அவனது மனைவியின் அலட்சியம் வெளிப்படுகிறது என்றால், பிடி நழவி சரியும் சின்னவனின் இடத்தில் பெருங்குரலெடுத்து அழும் கணவன் இருக்கிறான்.

"சொற்பொருள் பின்வரும்" சிறுகதையில் தாயின் பொருந்தா காமமும் அது குறித்த ஏச்சுகளும் ஒரு மாணவனைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிடுகின்றன. இங்கு காமம் அதில் தொடர்புடையவர்களுக்கு நேரடி சரிவாக இல்லை என்றாலும், அதை உலகம் பார்க்கும் விதம் ஒரு சிறுவனின் வாழ்க்கையைக் குலைத்து விடுகிறது. 'நிலைக் கண்ணாடி' கதையிலும் பொருந்தா காமம்தான். தன் உடலுக்குள் சுருங்கிப் பதுங்கிக் கொள்பவன் மாதவன், அவனது மனைவி விஸ்வம் என்பவனுடன் பழகுகிறாள், விலகிவிட விரும்புகிறாள், ஆனால் மாதவன் தனக்கு இடம் தருவதாகத் தெரிவதில்லை. சினிமாவுக்குப் போய்விட்டு விஸ்வத்துடன் வீடு திரும்பும் வழியில் ஒரு சந்தின் விளக்குக் கம்பத்தின்கீழ் ஒருவன் சுய மைதுனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். வீடு திரும்பியதும் அவனை நினைத்துப் பார்க்கிறாள் அவள். "அவனது கையசைவுகள் நினைவில் மோதியதும் உடல் அதிர்ந்தது. இருவரையும் பார்த்தவுடன் விலகி விடத்தான் நினைத்திருப்பான். ஆனாலும் அந்த குறிப்பிட்ட கணத்தில் தன் காரியத்தைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிருந்திருக்க வேண்டும்".

வாழ்வின் மீதுள்ள வேட்கையின் குறியீடாக இவர்களின் காமத்தைப் பார்ப்பது மிகக் கடினம். அதைவிட, காய்ந்து போன நீரோட்டத்தின் தடங்களை, எழுச்சிகள் அடங்கிய ஒரு மலைமுகட்டின் சரிவுகளை நினைவூட்டுவதாகவே இங்கு காமம் இருக்கிறது.

முனிமேடு
சிறுகதைத் தொகுப்பு
தமிழினி, ரூ.75

(ஆம்னிபஸ்.. 25 ஜனவரி 2013 ல் எழுதப்பட்டது)

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...