Thursday, 1 March 2018

ஒரு சின்ன நல்ல காரியம் 

ரேமண்ட் கார்வர்

download (4)











வணிக வளாகத்தில் உள்ள ரொட்டிக்கடைக்கு சனிக்கிழமை பிற்பகலில் அவள் வாகனத்தில் சென்றாள், கேக்குகளின் படங்கள் பக்கங்கள்தோறும் ஒட்டப்பட்டிருந்த விற்பனை அட்டவணையை பார்வையிட்டபின், குழந்தைக்குப் பிடித்தமான சாக்லேட் கேக்கை செய்து தர கேட்டாள், அவள் தெரிவு செய்திருந்த கேக், வெண்ணிற விண்மீன்கள் தெளிக்கப்பட்ட ஏவுதளத்துடனும் விண்கலம் ஒன்றுடனும் அதன் மறு ஓரத்தில் சிவப்பு உறைபனியால் செய்யப்பட்ட ஒரு கோளுடனும் அலங்கரிக்கப் பட்டிருந்தது, ஸ்காட்டி எனும் அவனது பெயர் கோளுக்குக் கீழாக பச்சை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும், வருகிற திங்கள்கிழமையோடு குழந்தைக்கு எட்டு வயது என்று அவள் சொன்னபோது தடித்த கழுத்துடன் இருந்த அந்த ரொட்டிக்கடைக்கார முதியவர் எதுவும் சொல்லாது கேட்டுக்கொண்டார், ரொட்டிக்கடைக்காரர் வெள்ளை மேலங்கியை போல தோற்றமளித்த வெள்ளைநிற பணியுடுப்பை அணிந்திருந்தார், அவரது தோள்பட்டைக்குக் கீழாக சென்ற அங்கியின் துணிப்பட்டைகள் முதுகைச் சுற்றி சென்று மீண்டும் முன்பக்கமாய் சுற்றி வந்து அவருடைய கனத்த இடுப்பிற்குக் கீழாக கட்டுண்டிருந்தன, அவள் சொல்வதை கவனித்தவாறே அவர் தன் கைகளை மேலங்கியில் துடைத்துக் கொண்டார், புகைப்படங்களின் மீதே பார்வையை குவித்திருந்த அவர் அவள் பேசட்டும் என்று விட்டிருந்தார், நிதானமாக அவள் சொல்லட்டும் என்று விட்டுவிட்டார், வேலைக்கு அவர் அப்போதுதான் வந்திருக்கிறார், இரவு முழுக்க அங்கேயேதான் ரொட்டி தயாரித்தபடி இருக்கப் போகிறார், அவருக்கு அவசரம் எதுவுமில்லை,
ரொட்டிக்கடைக்காரரிடம் ஆனி வீஸ் என்ற தன் பெயரைச்  சொன்னவள் தனது தொலைபேசி எண்ணையும்  தந்தாள், திங்கட்கிழமை பிற்பகலில் நடக்கவுள்ள குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வெகு முன்பே, காலையிலேயே, அப்போதுதான் அடுப்பிலிருந்து எடுக்கப்பட்ட புதிய கேக் தயாராக இருக்கும், ரொட்டிக்கடைக்காரர் ஒரு சிடுமூஞ்சி. அவர்களுக்கிடையில் முகமன்கள் எதுவும் இன்றி அவசியமான தகவல்கள் மட்டுமே மிகக் குறைவான வார்த்தைகளில் பரிமாறிக்கொள்ளப்பட்டன, அவர் அவளை அசௌகரியமாக உணரச் செய்தது அவளுக்குப் பிடிக்கவில்லை, கையில் பென்சிலுடன் விற்பனை மேசையின் மீது குனிந்திருந்தபோது அவனது கரடுமுரடான உடலம்சங்களை கூர்ந்து கவனித்த அவள் ஒரு ரொட்டிக்கடைக்காரராகயிருந்ததைத் தவிர அவன் தன் வாழ்வில் வேறெதையும் எப்போதேனும் செய்திருப்பாரா என்று ஆச்சரியப்பட்டாள். அவள் ஒரு அன்னை. முப்பத்தி மூன்று வயதானவள். அவளுக்கு தந்தையாய் இருக்குமளவு வயதான ஒவ்வொருவரும், அதிலும் ரொட்டிக்கடைக்காரரின் வயதையொத்த ஒருவருக்கு, இதுபோன்று கேக்குகளும் பிறந்தநாள் கொண்டாட்டங்களுமான அற்புதமான பொழுதுகளை கடந்து வந்த குழந்தைகள் இருந்திருக்க வேண்டும், அவர்களுக்கிடையில் ஏதோ ஒரு இணக்கம் இருந்திருக்கவேண்டும் என்று அவள் நினைத்தாள், ஆனால் அவர் அவளிடத்தில் கனிவற்றவராய் இருந்தார், முரட்டுத்தனமாக அல்ல, கனிவில்லாது. அவரோடு இணக்கமாக இருக்கவேண்டும் என்ற முயற்சியை அவள் கைவிட்டாள், ரொட்டிக்கடையின் பின்கட்டை அவள் பார்த்தாள், ஒரு முனையில் அலுமினியத்தாலான கேக் தட்டுகள் வரிசையில் அடுக்கப்பட்ட திடமான நீண்ட ஒரு மர மேசையை காண முடிந்தது, மேசையை அடுத்து காலியான அடுக்குகள் நிரம்பிய ஒரு உலோக பாத்திரமும் இருந்தது, ஒரு பிரமாண்டமான சூளை அடுப்பும் இருந்தது, வானொலியில் மேற்கத்திய நாட்டுப்புற இசை ஒலிபரப்பாகியிருந்தது,
அட்டையில் விபரங்களை நிரப்பிய பிறகு ரொட்டிக்கடைக்காரர் புத்தகத்தை மூடிவைத்தார், அவளைப் பார்த்து அவர் ’திங்கட்கிழமை காலை’ என்றார், அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவள் வீட்டுக்குத் திரும்பினாள்

திங்கட்கிழமை  காலை பிறந்தநாள் கொண்டாடவிருக்கும்  சிறுவன் மற்றொரு சிறுவனுடன் பள்ளிக்கு நடந்துபோய் கொண்டிருந்தான், உருளைக்கிழங்கு வறுவல் பொட்டலம் ஒன்றை அவர்கள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பங்கிட்டபடியே நடந்தபோது பிறந்தநாள் சிறுவன் அன்று பிற்பகல் பிறந்தநாளுக்காக தனது நண்பன் என்ன பரிசு தர நினைத்திருக்கிறான் என்பதை அறிய முயற்சித்திருந்தான், சாலைகள் சந்திக்கும் அந்த முனையில், சாலையை பார்க்காமலேயே, பிறந்தநாள் சிறுவன் நடைமேடையிலிருந்து இறங்கிய அதே நொடியில் ஒரு காரால் அவன் மோதித் தள்ளப்பட்டான், தான் வந்தபக்கமாகவே தலை சாக்கடைக்குள்ளாகவும் கால்கள் சாலையின் மீதுமாக அவன் விழுந்தான், அவனது கண்கள் மூடிக்கொண்டுவிட கால்கள் மட்டும் எதன் மீதோ ஏற முயற்சிப்பது போல முன்னும் பின்னுமாக இழுபட்டன, அவனது நண்பன் உருளைக் கிழங்கு வறுவலை கீழே போட்டுவிட்டு அழத் தொடங்கினான், ஒரு நூறு அடிபோல அந்த கார் ஓடி பின்பு சாலையின் நடுவில் நின்றது, ஓட்டுநர் இருக்கையில் இருந்த அந்த ஆள் தலையைத் திருப்பி பின்னால் பார்த்தான், சிறுவன் தடுமாறியபடியே எழுந்து நிற்கிறமட்டும் அவன் காத்திருந்தான், சிறுவன் கொஞ்சம் தள்ளாடினான், அதிர்ச்சியுற்றவன் போல் தெரிந்தபோதும் சரியாகவிட்டான், ஓட்டுநர் வாகனத்தை கிளப்பிக்கொண்டு போய்விட்டான்,
பிறந்தநாள் சிறுவன் அழவில்லை, எதைப்பற்றியும் சொல்வதற்கும் அவனிடம் ஒன்றுமில்லை, கார் மோதியபோது எப்படி உணர்ந்தாய் என்று அவன் நண்பன் கேட்டபோது அவன் பதில் சொல்லவில்லை, அவன் வீட்டுக்கு திரும்பி நடக்க அவனுடைய நண்பன் பள்ளிக்குச் சென்றான், ஆனால் பிறந்தநாள் சிறுவன் வீட்டுக்கு வந்து அதைப் பற்றி தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, சோபாவில் அவனருகில் அமர்ந்து அவனது கைகளை மடியில் வைத்துக் கொண்டு ‘ஸ்காட்டி, தேனே, நிச்சயமாக உனக்கு ஒன்றுமில்லையே, குட்டி?‘ என்று சொல்லியபடியே எப்படியிருந்தாலும் மருத்துவரிடம் காண்பித்துவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே, அவன் திடீரென்ற சோபாவில் பின்பக்கமாய் சரிந்தான், கண்கள் மூடியிருக்க அவன் நினைவிழந்தான். அவனை எழுப்ப முடியாமல் போனதும் அவசரமாக தொலைபேசியை எடுத்து அவள் வேலைக்கு சென்றிருந்த தன் கணவனை அழைத்தாள், அவளை அமைதியாக இருக்கும்படி சொன்ன ஹாவார்ட் பிறகு பிள்ளைக்கு ஒரு ஆம்புலன்ஸை அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு மருத்துவமனைக்கு தானும் புறப்பட்டுச் சென்றான்,
பிறந்தநாள் கொண்டாட்டம்  ரத்து செய்யப்பட்டது, குழந்தை மருத்துவமனையில் இருந்தான், லேசான தலைக் காயமும் அதிர்ச்சியும் வாந்தியும் இருந்தது. அவனது நுரையீரலில் திரவம் கோர்த்திருந்ததால் அன்று மதியம் அதை வெளியே எடுக்க வேண்டியிருந்தது, இப்போது அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போல் தெரிந்தான், ஆனால் கோமாவில் அல்ல, பெற்றோர்களின் கண்களில் தெரிந்த அச்சத்தைப் பார்த்த டாக்டர் பிரான்சிஸ் கோமா இல்லை என உறுதிபடச் சொன்னார், அன்றிரவு பதினோரு மணிக்கு, போதுமான அளவு பல்வேறு எக்ஸ்ரேக்களுக்கும் பரிசோதனைகளுக்கும் பிறகு, எந்த நேரத்திலும் அவன் விழித்துக் கொண்டு சௌகரியமாய் ஓய்வில் இருக்கும் நிலைக்கு வந்துவிடுவான் என்ற நிலையில் ஹாவார்ட் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார், அன்று மதியத்திலிருந்து அவனும் ஏனியும் குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்தார்கள், குளித்து உடைமாற்றிக் கொண்டு வந்துவிடலாம் என அவன் வீட்டுக்குப் போனான், ‘ஒரு மணி நேரத்தில் திரும்பிவிடுவேன்‘ என அவன் சொன்னான், அவள் தலையசைத்தபடியே ‘நல்லது‘ என்றாள், ‘நா இங்க பாத்துக்கறேன்‘, அவளது நெற்றியில் அவன் முத்தமிட்டான், கைகளை தொட்டுக் கொண்டனர், படுக்கையருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து அவள் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் கண் விழித்து சரியாகிவிட அவள் காத்திருந்தாள், அதன் பிறகு அவள் ஆசுவாசம் கொள்ளலாம்,
ஹாவார்ட் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினான், ஈரமான இருண்ட தெருக்களை மிக வேகமாக கடந்தான், பிறகு அதை உணர்ந்து வேகத்தை மட்டுப்படுத்தினான், இதுவரையிலும் அவனது வாழ்க்கை சிக்கலற்று அவனது திருப்திக்கு ஏற்றபடியே இருந்தது, கல்லூரி கல்யாணம் மீண்டும் வியாபாரத்தில் மேற்படிப்புக்காக இன்னொரு வருடம் கல்லூரி ஒரு முதலீட்டு நிறுவனத்தில் சிறிய அளவிலான பங்குதாரர் என்று நன்றாகவே கழிந்துள்ளது, பிறகு தந்தையானான், அவன் சந்தோஷமாகவே இருந்தான். இதுவரையிலும் அதிர்ஷடசாலியாகவும் இருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். அவனது பெற்றோர்கள் இன்னும் இருக்கிறார்கள், அவனது சகோதர சகோதரிகள் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள், அவனது கல்லூரி நண்பர்களும் உலகில் அவரவர்களுக்கான நிலையை அடைந்துவிட்டிருக்கிறார்கள், இதுவரையிலும் எந்தவொரு தீங்கிலிருந்தும், துரதிர்ஷ்டம் வந்துற்றபோது ஒரு மனிதனை சாய்க்கவோ முடக்கிப் போடவோ முடியவல்ல சக்திகளிலிருந்தும், அவ்வாறான சக்திகள் உண்டு என்பதை அவன் அறிவான், விலக்கியே வைக்கப்பட்டிருக்கிறான், வழிநடையிலிருந்து வாகனத்தை ஒதுக்கி நிறுத்தினான், அவனது இடது கால் நடுங்கத் தொடங்கியது, வண்டியிலேயே ஒரு நிமிடம் உட்கார்ந்து இப்போதைய நிலைமையை விவேகமாக அணுக முயற்சித்தான், ஸ்காட்டி விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருக்கிறான், ஆனால் அவன் சரியாகிவிடுவான், ஹாவார்ட் கண்களை மூடிக்கொண்டான், உள்ளங்களையால் முகத்தை தேய்த்தான், காரிலிருந்து வெளியே வந்து முன் கதவருகே சென்றான், வீட்டுக்குள்ளிருந்து நாய் குரைத்துக்கொண்டிருந்தது, தொலைபேசி மணி ஒலித்துக் கொண்டிருந்தது, கதவைத் திறந்து விளக்கைப் போடுவதற்காக ஸ்விட்சைத் தடவி தடுமாறியிருக்க மணி அடித்துக் கொண்டே இருந்தது, மருத்துவமனையிலிருந்து வந்திருக்கக் கூடாது, வந்திருக்கவே கூடாது, கஷ்டகாலம் என்று சொல்லியபடியே தொலைபேசியை எடுத்து ‘‘ நான் இப்பத்தான் கதவத் தெறந்திட்டு உள்ள வர்றேன்‘‘ என்றான்,
‘செஞ்சுதரச் சொன்ன கேக்கை இன்னும் வாங்கிக்கலை‘ மறுமுனையிலிருந்து குரல் ஒலித்தது,
‘என்ன சொல்றீங்க?“ ஹாவார்ட் கேட்டான்,
‘ஒரு கேக், பதினாறு டாலர் விலையுள்ள ஒரு கேக்‘ என்றது அந்த குரல்,
தொலைபேசியின் பேசியை காதிலேயே வைத்துக் கொண்ருந்த  ஹாவார்ட் புரிந்துகொள்ள  முயற்சித்தான், ‘கேக்கைப் பத்தி எனக்கெதுவும் தெரியாது, கடவுளே, நீ என்ன சொல்றே?‘ என்றான் அவன்,
‘அதைய என் தலையில கட்டிறாதீங்க‘ என்றது குரல்,
ஹாவார்ட் தொலைபேசியை வைத்தான், சமையலறைக்குள் சென்று கொஞ்சம் விஸ்கியை ஊற்றிக் கொண்டான், மருத்துவனையை தொலைபேசியில் தொடர்பு கொண்டான், ஆனால் குழந்தையின் நிலைமை முன்பு போலவேதான் இருந்தது, அவன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான், அங்கே எந்த மாற்றமும் இல்லை, குளியல் தொட்டியில் தண்ணீர் நிறையத் தொடங்க ஹாவார்ட் முகச் சவரம் செய்துகொண்டான், தொட்டியில் இறங்கிப் படுத்துக் கொண்டு கண்களை மூடியபோது மீண்டும் தொலைபேசி ஒலித்தது, தொட்டியிலிருந்து தாவி இறங்கி ஒரு துண்டை எடுத்துச் சுற்றிக் கொண்டு அவசரமாக ஓடினான், மருத்துவமனையிலிருந்து வந்தமைக்காக ‘முட்டாள் முட்டாள்‘ என சொல்லிக் கொண்டே ஓடினான், ஆனால் தொலைபேசியை எடுத்து ‘ஹலோ‘ என கத்தியபோது மறுமுனையில் எந்த பதிலும் இல்லை, பிறகு அழைத்தவன் இணைப்பை துண்டித்துவிட்டான்,
நள்ளிரவுக்கு பிறகு  அவன் மருத்துவமனைக்கு வந்து  சேர்ந்தான், படுக்கையை அடுத்திருந்த நாற்காலியில்தான் ஆன் இன்னும் உட்கார்ந்திருந்தாள், ஹாவார்டை அவள் நிமிர்ந்து பார்த்துவிட்டு குழந்தையை திரும்பிப் பார்த்தாள், குழந்தையின் கண்கள் மூடியிருந்தன, தலை இன்னும் துணியால் சுற்றிக் கட்டப்பட்டு இருந்தது, அவன் மூச்சு சீராகவும் ஓசையின்றியும் இருந்தது, படுக்கைக்குப் பின்னாலிருந்த ஒரு சாதனத்திலிருந்து குளுக்கோஸ் பாட்டில் தொங்கியிருக்க அதிலிருந்து ஒரு குழாய் பையனின் கைக்கு நீண்டிருந்தது,

எப்படியிருக்கிறான்  என்று கேட்ட ஹாவார்ட் இதெல்லாம்  என்ன என்று குளுக்கோஸ் பாட்டிலையும் குழாயையும் பார்த்து சுட்டிக் கேட்டான்.
‘டாக்டர் பிரான்சிஸ் சொன்னபடி அவனுக்கு ஆகாரம் தேவை, அவன் தன் உடல் திடத்தைப் பேண வேண்டும், அவன் ஏன் இன்னும் எழுந்திருக்கவில்லை ஹாவார்ட்? அவனுக்கு எதுவுமில்லையே,, எனக்கு ஒன்றும் புரியவில்லை,
ஹாவார்ட் அவளது  பின்னந்தலையில் கை வைத்தான், அவளது தலைமுடியை கோதினான், ‘அவனுக்கு சரியாகிவிடும், கொஞ்ச நேரத்தில் எழுந்துகொள்வான், டாக்டர் பிரான்சிஸ்க்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்,‘
கொஞ்ச நேரத்துக்குப்  பிறகு “நீ வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தா  பரவால்ல, நா இங்க பாத்துக்கறேன், போன்ல கூப்பிட்டுட்டே இருக்கற அந்த பைத்தியகாரனை கண்டுக்காதே, தொலைபேசியை எதும் பேசாம வெச்சுரு,“ என்றான்,
“யார் கூப்பிடறா?“
“யாருன்னு தெரியலை,, தொலைபேசியில யாரையாச்சும் கூப்பிடறதத் தவிர வேற வேலையில்லாத யாரோ, நீ கௌம்பு“
அவள் தலையாட்டினாள், “இல்ல, நா நல்லாத்தான் இருக்கறேன்,“
“அப்பிடியா,, கொஞ்ச நேரம் நீ வீட்டுக்கு போயி ஓய்வெடுத்துட்டு வந்தா நா காலைலே போயிக்குவேன், எல்லா செரியாப் போகும், டாக்டர்  பிரான்சிஸ் என்ன சொன்னார்? ஸ்காட்டி செரியாயிடுவான்னுதானே சொன்னார், நாம ஒண்ணும் கவலப்பட வேண்டாம், அவன் இப்ப தூங்கறான், அவ்வளவுதான்“
ஒரு நர்ஸ் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள், படுக்கையருகில் சென்ற அவள் அவர்களைப் பார்த்துத் தலையாட்டினாள், போர்வைக்குள்ளிருந்து இடது கையை எடுத்து மணிக்கட்டில் விரல்களை அழுத்தி, கைகடிகாரத்தை பார்த்தபடியே, நாடியை பரிசோதித்தாள், சற்று நேரத்துக்குப் பிறகு கையை போர்வைக்குள் இருத்திவிட்டு படுக்கையின் கால்மாட்டுக்குப் போனாள், படுக்கையில் பொருத்தப்பட்டிருந்த அட்டையில் எதையோ எழுதினாள்,
“எப்பிடி இருக்கான்?“ ஆன் கேட்டாள், ஹாவார்டின் கை அவளுடைய தோளை அழுத்திக் கொண்டிருந்தது, அவனுடைய மன அழுத்தத்தை அவனது விரல்களின் வழியே உணர முடிந்தது,
“நல்லா இருக்கான்,“ என்றாள் நர்ஸ், பிறகு அவள் “இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் வருவார், அவர் மறுபடியும் மருத்துவமனைக்கு வந்துருக்கார், இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வருவார்,“ என்றாள்,
“இவங்க கொஞ்சம் வீட்டுக்கு போயிட்டு ஓய்வெடுத்து வரட்டுமேன்னு பேசிட்டிருந்தோம்,, டாக்டர் வந்ததுக்கப்பறமா போலாமில்ல,,“ ஹாவார்டின் அவளிடம் கேட்டான்,
“அவங்க அப்பிடி செய்யலாமே“ என்றாள் நர்ஸ், “உங்களுக்கு விருப்பமிருந்தா அப்பிடியே செய்யலாம்“, அந்த நர்ஸ் பொன்னிற கூந்தலையுடைய ஸ்காண்டிநேவிய பருத்த பெண்மணி, அவள் பேசும்போது உச்சரிப்பில் அந்த தொனியிருந்தது,
“டாக்டர் என்ன சொல்றாருன்னு பாப்போம்“ என்றாள் ஆன், “டாக்டர்கிட்ட நான் பேசணும், இவன் இப்பிடியே தூங்கிட்டே இருக்கக் கூடாதுன்னு நெனக்கறேன், அப்பிடியிருந்தா அது நல்ல அறிகுறியா படலை“, அவள் தன் கைகளை கண்களருகே கொண்டு வந்து தலையைக் குனிந்தாள், அவளது தோளில் ஹாவார்டின் பிடி இறுகியது, அவனுடைய கைகள் கழுத்துக்கு நகர்ந்தன, கழுத்து தசைகளை அவனது விரல்கள் பிசையத் தொடங்கின,
“டாக்டர் பிரான்சிஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவார்“ என்று சொல்லிவிட்டு நர்ஸ் அறையைவிட்டு வெளியேறினாள்,
ஹாவார்ட் கொஞ்ச  நேரம் தன் மகனை பார்த்தார், போர்வைக்குள் அவனுடைய சின்ன மார்புக்கூடு அமைதியாக ஏறி இறங்கியபடி இருந்தது, ஆனி அவனுடைய அலுவலகத்துக்கு அவனை தொலைபேசியில் அழைத்துப் பேசிய அந்த பயங்கர நிமிடங்களுக்குப் பிறகு முதல்முறையாக அப்போதுதான் அவன் தனது உடலில் அசலான பயம் பரவியதை உணர்ந்தான்,  தலையை ஆட்டத் தொடங்கினான், ஸ்காட்டி நன்றாகத்தான் இருக்கிறான், என்ன, வீட்டில் அவனுடைய படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பதற்கு பதிலாக இங்கே மருத்துவமனையில் தலையில் கட்டுக்களோடும் கையில் குழாயோடும் படுத்திருக்கிறான், ஆனால் இந்த நொடியில் அவனுக்கு இந்த உதவி.ஒத்தாசை தேவையானதாக உள்ளது,
டாக்டர் பிரான்சிஸ் உள்ளே வந்தார். சில மணி நேரங்களுக்கு முன்புதான் இருவரும் சந்தித்திருந்தபோதும், ஹாவார்டிடம் மீண்டும் கைகுலுக்கினார், ஆனி எழுந்துகொண்டாள், “டாக்டர்?“
“ஆனி,,“ என்றபடியே தலையாட்டியவர் “இவன் எப்பிடி இருக்கான்னு பாக்கலாம்“ என்றார் டாக்டர், படுக்கையருகில் சென்று அவனது நாடியை பரிசோதித்தார், கண்ணிமைகளை ஒன்றன்பின் ஒன்றாக நீக்கிப் பார்த்தார், ஹாவார்டும் ஆனும் டாக்டருக்கு பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர், போர்வையை அகற்றிவிட்டு டாக்டர் பையனின் இதயத்துடிப்பையும் நுரையீரலையும் ஸ்டதெஸ்கோப்பால் பரிசோதித்தார், அடிவயிற்றில் இங்கும் அங்குமாக விரல்களைக் கொண்டு அழுத்திப் பார்த்தார், பரிசோதனையை முடித்ததும் படுக்கையின் கால்மாட்டுக்குச் சென்று அட்டையில் எழுதியிருந்ததை பார்த்தார், நேரத்தை குறித்தவர் அட்டையில் எதையோ எழுதிவிட்டு ஹாவார்டையும் ஆனையும் பார்த்தார்,
“டாக்டர், எப்பிடி இருக்கான், சரியாக இவனுக்கு என்ன பிரச்சினை?“ ஹாவார்ட் கேட்டான்,
“இவன் ஏன் முழிச்சிக்கவேயில்லை?“ ஆனி கேட்டாள்,
டாக்டர் அகன்ற தோள்களோடும்  பழுப்பு நிறமுகத்தோடும் அழகாக இருந்தார், மூன்று ,,க்கொண்ட நீல நிற சூட்டும், கோடுபோட்ட கழுத்துப்பட்டையும், தந்த நிறத்தாலான மணிக்கட்டு பொத்தான்களையும் அணிந்திருந்தார், அவரது நரைத்த தலைமுடி பக்கவாட்டில் வாரப்பட்டிருக்க, அப்போதுதான் ஏதோ ஒரு இசைக் கச்சேரியிலிருந்து வந்தவர் போல இருந்தார், “அவன் நல்லாத்தான் இருக்கான்“ என்றார், “பயப்படறதுக்கு ஒண்ணும் இல்ல,  செரியாயிருவான்னு நெனக்கறேன், ஆனா அவனுக்கு ஒண்ணுமில்லை, அவன் சீக்கிரமா கண் முழிக்கணும், கொஞ்ச நேரத்துல முழிச்சுருவான், இருந்தாலும் அவன் எழுந்துட்டான்னா பரவால்லேன்னு நெனக்கறேன்“ அவர் பையனை மறுபடியும் பார்த்தார், “சில மணி நேரத்துல, இன்னும் சில பரிசோதனைகளோட முடிவுகள் வந்தப்பறம், என்னன்னு தெரிஞ்சுக்கலாம், நா சொல்றத கேளுங்க, அவன் நல்லா இருக்கான், மண்டையோட்டில ஒரு லேசான விரிசல் இருக்குங்கறதத் தவிர ஒண்ணும் பிரச்சினையில்லை,“
“அய்யோ… அப்படியா“ என்றாள் ஆன்,
“அப்பறம் நா முந்தியே சொன்னமாதிரி கொஞ்சம் ரத்தக்கட்டு இருக்கு, உங்களுக்கே தெரியும் அதிர்ச்சியில இருக்கான், இது மாதிரி அதிர்ச்சில இருக்கறவங்களுக்கு இந்த போலத் தூக்கம் இருக்கும்“
“ஆனா அவனுக்கு ஆபத்து எதுவும் இல்லையே? அவன் கோமாவுல இல்லைனு நீங்க இப்ப சொன்னீங்க, இப்படி தூங்கறத நீங்க கோமா இல்லேன்னு சொன்னா, அப்பறம் இது வேற என்ன?“ ஹாவார்ட் கேட்டான், டாக்டரைப் பார்த்தான்,
“இல்லை, இத நான் கோமான்னு சொல்ல விரும்பல“ என்று சொன்ன டாக்டர் மீண்டும் ஒரு முறை பையனைப் பார்த்தார், “அவன் ஆழ்ந்த தூக்கத்துல இருக்கான், அவ்வளவுதான், உடல் தன்னைத் தானே சரிப்படுத்திக்க எடுக்கற ஒரு நடவடிக்கைதான் இது, அவனுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை, நான் உறுதியா சொல்றேன், ஆனால் அவ கண் முழிச்சதுக்கப்பறம் பாக்கி பரிசோதனைகளும் முடிஞ்சதுக்கப்பறம்தான் எதுவும் சொல்ல முடியும்,“
“இது ஒருவிதமான கோமா தானே“
“இது கோமா இல்லைதான், ஆனாலும் அப்படி இல்லேன்னு சொல்ல முடியாது, இத நான் கோமான்னு சொல்ல விரும்பலை, இது வரைக்கும் அப்பிடி இல்லை, அவனுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கு, இது மாதிரி அதிர்ச்சியானவங்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்புகள் ரொம்ப சாதாரணமானது, உடம்புல ஏற்பட்ட காயங்களுக்கான தற்காலிகமான எதிர்வினைதான் இது, கோமாங்கறது ஆழமான நீட்டிக்கப்பட்ட, நாட்கணக்கில, ஏன் வாரக்கணக்குல கூட இருக்கக் கூடிய,  சுயநினைவற்ற மயக்க நிலை, எங்களால சொல்ல முடிஞ்ச வரைக்கும் ஸ்காட்டி அப்படியான எடத்துல இல்லை, காலையில அவனுடைய நெலமையில கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும், என்னால அத உறுதியா சொல்ல முடியும், அவன் கண் முழிச்சுட்டானா நமக்கு இன்னும் தெரிஞ்சுக்க முடியும், சீக்கிரத்துலயே எழுந்திருச்சுக்குவான், நீங்க உங்களுக்கு எப்பிடி விருப்பமோ அப்படி செய்யலாம், இங்கயே இருக்கலாம், இல்லேன்னா வீட்டுக்குப் போயிட்டு வரலாம், உங்களுக்கு வேணும்னா நீங்க எதுவும் கவலப்படாம தாராளமா போயிட்டு வரலாம், ஆனா அப்பிடி செய்யறது சுலபமில்லைன்னு எனக்கு தெரியும்,“ டாக்டர் மீண்டும் பையனை கவனத்துடன் பார்த்தார், ஆனிடம் திரும்பி “நீங்க கவலப்படாம இருங்கம்மா,, எங்களால முடிஞ்சதையெல்லாம் நாங்க செய்யறோம், இன்னும் கொஞ்ச நேரந்தான்,,“ என்றபடி தலையாட்டினார், ஹாவார்டிடம் மறுபடியும் கைகுலுக்கிவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்,
ஆன் பையனின் நெற்றியில் கை வைத்தாள், “பரவாயில்லை, இவனுக்கு காய்ச்சல் இல்லாம இருக்கு“ என்றாள். பிறகு “ஆனா உடம்பு ரொம்ப சில்லுன்னு இருக்கு, ஹாவார்ட், இவன் உடம்பு இப்பிடி இருக்கலாமா? அவன் தலையை தொட்டுப் பாருங்க,“ என்றாள்,
ஹாவார்ட் பையனின்  நெற்றிப் பொட்டைத் தொட்டான், அவனது சுவாசம் நிதானித்தது, “இந்த நிலமையில இவன் உடம்பு இப்பிடி இருக்கறதுதான் சரின்னு எனக்குத் தோணுது, அவன் அதிர்ச்சியில இருக்கிறாங்கறது ஞாபகத்துல இருக்கா? டாக்டர் அப்படித்தானே சொன்னார், இப்பத் தானே அவர் பாத்துட்டுப் போனார், ஸ்காட்டிக்கு வேற எதாவதுன்னா அவர் எதுவும் சொல்லியிருப்பாரில்ல“,
ஆன் உதடுகளை கடித்தபடி  அங்கேயே சிறிது நேரம் நின்றிருந்தாள், பிறகு அவள் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டாள்,
ஹாவார்ட் அருகிலிருந்த இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தான், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர், அவளை தைரியப்படுத்தும் விதமாக வேறு ஏதாவது ஒன்றை அவன் சொல்ல விரும்பினான், ஆனால் அவனும் பயந்துதான் போயிருந்தான், அவளுடைய கையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான், அப்படி செய்தது அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாயிருந்தது, அவளது கையை எடுத்து மெல்ல பிடித்து விட்டான், அழுத்தினான், பிறகு அப்படியே பற்றியிருந்தான், பையனை கவனித்தபடியே எதுவும் பேசாது இருவரும் அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தனர், அவ்வப்போது அவளது கைகளை அவன் பிடித்துவிட்டான், கடைசியில் அவள் கையை விடுவித்துவிட்டான்,
“நான் பிரார்த்தனை பண்ணிட்டிருந்தேன்“ என்றாள் அவள்,
அவன் தலையாட்டினான்,
“நான் சுத்தமா மறந்துட்டேன்னு நெனக்கறேன், ஆனா இப்ப ஞாபகம் வந்துருச்சு, நா இப்ப செய்ய வேண்டிதெல்லாம் கண்ணை மூடிட்டு “கடவுளே ஸ்காட்டிய காப்பாத்து“ன்னு வேண்டிக்கறதுதான், அதுக்கப்பறம் எல்லாம் சரியாயிரும், வார்த்தைகள் அங்க சரியா இருந்துச்சு. நீயும்கூட வேண்டிக்கலாம்“ என்றாள் அவனிடம்,
“நான் ஏற்கனவே வேண்டிட்டேன், இன்னிக்கு மத்தியானம், நேத்திக்கு சாயங்காலம், அதாவது நீ கூப்பிட்டதுக்கப்பறம், ஆஸ்பத்திரிக்கு வரும்போது, நான் வேண்டிக்கிட்டேதான் இருந்தேன்“ என்றான்,
“அப்பிடின்னா சரி,“ என்றாள் அவள், முதல் முறையாக இந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து இருப்பதாக அவளுக்குத் தோன்றியது, தொடக்கத்திலிருந்து இப்போதைக்கு வரையிலும் ஸ்காட்டிக்கும் அவளுக்கும் மட்டுமே இவ்வாறு நடந்திருக்கிறது என்று உணர்ந்திருக்கிறாள், ஹாவார்ட் கூடவே இருந்தபோதிலும் அவனது உதவி தேவையாக இருந்தது என்றபோதிலும் அவள் ஹாவர்டை இதில் சம்பந்தபடுத்தவேயில்லை. இப்போது அவனுக்கு மனைவியாக இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டாள்,
அதே நர்ஸ் உள்ளே  வந்து பையனின் நாடித் துடிப்பை பரிசோதித்தாள், படுக்கைக்கு மேலிருந்து தொங்கிக் கொண்டிருந்த கலனிலிருந்து இறங்கும் திரவ ஓட்டத்தையும் சரிபார்த்தாள்,
அடுத்த ஒரு  மணிநேரத்துக்கு பிறகு இன்னொரு  டாக்டர் வந்தார், தன்னுடைய பெயர் பார்சன்ஸ் என்றும் கதிரியக்கத் பிரிவிலிருந்து வருவதாகவும் சொன்னார், அடர்த்தியான மீசை வைத்திருந்தார், நாடாக்களற்ற காலணயிம மேற்கத்திய சட்டையும் ஜீன்ஸீம் அணிந்திருந்தார்,
“இன்னும் சில எக்ஸ்ரே எடுப்பதற்காக இவனை கீழே கொண்டுபோகிறோம், ஸ்கேனும் எடுக்க வேண்டும்“ என்றார் அவர்,
“என்ன அது, எதுக்கு ஸ்கேன்?“ ஆனி கேட்டாள், அவள் டாக்டருக்கும் படுக்கைக்கும் இடையில் நின்றிருந்தாள், “ஏற்கனவே எல்லா எக்ஸ்ரேவும் எடுத்தாச்சுன்னு நெனச்சேன்“,
“இன்னும் சிலது எடுத்தா பரவால்லேன்னு நாங்க நெனக்கறோம், இதுல கவலப்படறதுக்கு ஒண்ணுமில்லை, எங்களுக்கு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ரேக்கள் இருந்தா தேவலை, அப்பறம் மூளையை ஸ்கேன் செய்யணும்,“ என்றார் அவர்,
“அய்யோ கடவுளே“ என்றாள் ஆன்,
“இதுமாதிரி விபத்துகளில இந்த வழிமுறைகள் எல்லாம் சாதாரணந்தான், இவன் இன்னும் ஏன் கண் முழிக்க மாட்டேங்கறாங்கறதுக்கு சரியான காரணத்தை நாங்க கண்டுபிடிக்கணும், இதெல்லாம் சாதாரணமா எப்பவும் ஆஸ்பத்திரியில செய்யறதுதான், பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை, இன்னும் கொஞ்ச நேரத்துல இவனை நாங்க கீழே கொண்டுபோறோம்“ என்றார் அந்த புதிய டாக்டர்,
கொஞ்ச நேரத்தில் இரண்டு உதவிப்பணியாளர்கள் தள்ளு  படுக்கையுடன் உள்ளே வந்தனர், கருத்த தலை முடியுடன் கருப்பாக இருந்த அவர்கள் வெள்ளை சீருடையிலிருந்தார்கள், அவர்களது பாஷையில் ஒருவருக்கொருவர் ஏதோ சொல்லியபடியே பையனுக்கு போட்டிருந்த மருந்துக் குழாயை அகற்றிவிட்ட அவனை படுக்கையிலிருந்து தள்ளுபடுக்கைக்கு மாற்றினார்கள், பிறகு அவர்கள் ஸ்டிரெச்சரை உருட்டிக் கொண்டு போனார்கள், ஹாவர்டும் ஆனும் அதே மின்தூக்கியில் உடன் சென்றார்கள், ஆன் பையனை பார்த்திருந்தாள், மின்தூக்கி இறங்கத் தொடங்கியபோது அவள் கண்களை மூடிக் கொண்டாள், ஸ்டிரெச்சரின் இரண்டு முனைகளிலும் நின்றிருந்த பணியாளர்கள் ஒன்றும் பேசவில்லை, ஒரே ஒரு முறைமட்டும் அவர்களில் ஒருவன் அவர்களது பாஷையில் ஏதோ ஒன்றை சொல்ல இன்னொருவன் பதிலுக்கு மெல்லத் தலையை மட்டும் ஆட்டினான்,
கொஞ்ச நேரத்துக்கு  பிறகு எக்ஸ்ரே பிரிவுக்கு வெளியிலிருந்த காத்திருப்பு அறையின் ஜன்னல்களை சூரியன்  ஒளியூட்டத் தொடங்கிய வேளையில் பையனை வெளியே கொண்டுவந்து  அவனது அறையில் சேர்த்தார்கள், ஹாவர்டும் ஆனும் இன்னுமொரு முறை அவனுடன் மின்தூக்கியில் உடன் வந்தார்கள், பிறகு மீண்டும் படுக்கையருகே அவரவர்கள் இருக்கையில் உட்கார்ந்து கொண்டனர்,
நாள் முழுக்கக்  காத்திருந்தார்கள், ஆனாலும் பையன் கண் விழிக்கவில்லை, எப்போதாவது யாராவது ஒருவர் அறையிலிருந்து வெளியேறி கீழே இருக்கும் சிற்றுண்டிக் கூடத்திற்கு காபி குடிக்கு செல்வார்கள், திடீரென்று பையனின் நினைவு வந்து குற்றவுணர்வு ஏற்பட்டது போல  மேசையிலிருந்து எழுந்து அவசரமாக அறைக்குத் திரும்புவார்கள், அன்று மதியம் டாக்டர் பிரான்சிஸ் மறுபடியும் வந்து பையனை பரிசோதித்தார், அவன் தேறிவருவதாகவும் எந்த நேரத்திலும் கண் விழித்துக் கொள்வான் என்றும் சொல்லிவிட்டு சென்றார், வெவ்வேறு நர்ஸ்கள் அவ்வப்போது வந்து சென்றார்கள், நுண்பரிசோதனைக் கூடத்திலிருந்து ஒரு இளம்பெண் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள், வெள்ளை நிறத்தில் தளர்வான கால்சட்டையும் மேல் சட்டையும் அணிந்திருந்த அவள் தான் கொண்டு வந்த சிறிய பரிசோதனை தட்டை படுக்கையருகே வைத்தாள், அவர்களிடம் ஒரு வார்த்தையும் சொல்லாமல் பையனின் கையிலிருந்து ரத்தத்தை எடுத்தாள், பையனின் கையில் சரியான இடத்தை கண்டறிந்து ஊசியை குத்திய வேளையில் ஹாவர்ட் கண்களை மூடிக்கொண்டான்.
“எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே புரியலை“ என்றாள் ஆன் அந்தப் பெண்ணிடம்,
“டாக்டரோட உத்தரவு, என்ன செய்ய சொல்லிருக்காங்களோ அதத் தான் நான் செய்யறேன், பரிசோதனைக்கு ரத்தம் எடுன்னாங்க, நா எடுக்கறேன், என்னாச்சு இவனுக்கு, இந்த குட்டிச் செல்லத்துக்கு,,?“ என்று கேட்டாள் அந்த இளம் பெண்,
“அவனை ஒரு கார் மோதிருச்சு,“ என்றான் ஹாவர்ட், “கார் மோதிட்டு போயிருச்சு“
அந்த இளம் பெண் தலையை  ஆட்டினாள், மீண்டும் பையனைப் பார்த்தாள், பிறகு அவள் தன் பரிசோதனைத் தட்டை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்,
“அவன் ஏன் முழிச்சுக்க மாட்டேங்கறான்?“ ஆன் கேட்டாள், “ஹாவர்ட், இவங்ககிட்ட இருந்து எதாவது பதில் வேணும் எனக்கு“
ஹாவர்ட் ஒன்றும்  சொல்லவில்லை, அவன் மீண்டும் நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்தான், முகத்தைத் துடைத்துக் கொண்டான், தன் மகனைப் பார்த்தான், பிறகு நாற்காலியில் நன்றாக சாய்ந்துகொண்டு கண்களை மூடித் தூங்கத் தொடங்கினான்,
ஆன் ஜன்னலருகே சென்று வெளியே வாகனங்கள் நிறுத்துமிடத்தை நோட்டமிட்டாள், இரவு நேரம், கார்கள் முகப்பு விளக்கைப் போட்டபடி உள்ளே வருவதும் போவதுமாக இருந்தன, ஜன்னலின் விளிம்பை அழுத்தமாக பற்றியபடி ஜன்னலருகே நின்றிருந்த அவள் மனம், இதுவரையிலும் இல்லாத ஏதோவொன்றை, கடினமான ஒன்றை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று அறிந்திருந்தது, பயத்தில் அவளது பற்கள் கிடுகிடுக்கத் தொடங்கின, வாயை இறுக மூடிக் கொண்டாள், ஆஸ்பத்திரிக்கு முன்பாக ஒரு பெரிய கார் நிற்பதையும் யாரோ ஒருவர், நீண்ட கோட் அணிந்த ஒரு பெண்மணி காருக்குள் ஏறுவதையும் பார்த்தாள், அந்த பெண் தானாக இருக்க வேண்டுமென்றும், யாரோ ஒருவர், அது யாராக இருந்தாலும் சரி, இங்கிருந்து அவளை அவளுக்காக ஸ்காட்டி காத்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு இடத்துக்கு கூட்டிச் செல்ல வேண்டுமென்றும், காரில் அவள் இறங்கும் போதே அம்மா என்று அவன் ஓடிவர அவள் அவனை அப்படியே அள்ளி எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் அவள் விரும்பினாள்,
கொஞ்ச நேரத்தில் ஹாவர்ட்  எழுந்துகொண்டான், அவன் மறுபடியும் பையனை பார்த்தான், நாற்காலியிலிருந்து எழுந்து சடவு முறித்துவிட்டு ஜன்னலருகே சென்று அவளுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டான், இருவரும் வாகனங்கள் நிறுத்துமிடத்தை வெறுமனே பார்த்து நின்றார்கள், இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை, ஆனால் இப்போது, ஆழ்ந்த கவலை இருவரையும் வெகு இயல்பாக வெளிப்படையானவர்களாய் மாற்றியிருக்க அவர்கள் இருவரும் அடுத்தவரது மனதில் இருப்பதை உணர்ந்துகொண்டிருப்பது போலத் தெரிந்தது.
கதவு திறந்தது, டாக்டர் பிரான்சிஸ் உள்ளே வந்தார், இந்த முறை அவர் வேறொரு சூட்டையும் கழுத்துப்பட்டையையும் அணிந்திருந்தார், அவரது நரைமுடி தலையின் இரண்டு பக்கமும் வாரப்பட்டிருந்தது, அப்போதுதான் சவரம் செய்துகொண்டவர் போல தோற்றமளித்தார், அவர் நேராக படுக்கையருகே சென்று பையனை பரிசோதித்தார், “இந்த நேரத்திற்கெல்லாம் இவன் சரியாகியிருக்க வேண்டும், இப்படி இவன் இருக்க எந்தவொரு காரணமும் இல்லை,“ என்றார், “ஆனால் அவன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டான் என்று நாங்கள் நம்புகிறோம் என்று என்னால் சொல்ல முடியும், அவன் கண் விழித்துக் கொண்டால் நமக்கு தெம்பாக இருக்கும், அவன் கண் விழிக்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை, சீக்கிரத்திலேயே அவன் எழுந்து கொள்ள வேண்டும், எழுந்து கொள்ளும்போது அவனுக்கு தலைவலி எதுவும் இருந்தால் அதை ஒரு நல்ல அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம், அதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் அவனுடைய எல்லா அறிகுறிகளும் நலமாகவே உள்ளன, எவ்வளவு இயல்பானதாக இருக்க வேண்டுமோ அந்தளவு அவை இயல்பாகத்தான் உள்ளன,“
“அப்படின்னா இது கோமாவா?“ என்று கேட்டாள் ஆன்,
டாக்டர் தன்னுடைய வளவளப்பான  கன்னத்தைத் தேய்த்துக் கொண்டார், “அவன் கண் விழித்துக் கொள்ளும் வரையில் இப்போதைக்கு அப்படி வைத்துக் கொள்ளலாம், கஷ்டம்தான், எனக்குத் தெரியும், ரொம்ப சிரமம்தான், கொஞ்சம் ஆசுவாசப்படுத்திட்டு போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வாங்க“ என்ற அவர் மேலும் சொன்னார் “உங்களுக்கு அது நல்லது, நீங்க போறது பரவாயில்லேன்னு தோணிச்சுன்னா நீங்க போயிட்டு வர்ற வரைக்கும் இங்க ஒரு நர்ஸை இருக்கச் சொல்றேன், போய் எதாவது சாப்பிட்டுட்டு வாங்க“,
“என்னால எதுவும் சாப்பிட முடியாது” என்றாள் ஆன்,
“உங்களுக்கு எப்படித் தோணுதோ அப்படி செய்யுங்க“ என்றார் டாக்டர், “இருந்தாலும் நான் உங்களுக்கு சொல்றது என்னன்னா அவனோட எல்லா அறிகுறிகளும் சரியா இருக்கு, பரிசோதனைகளில எதுவுமே எதிர்மறையா இல்லை, எதுவுமே இல்லை. அவன் கண் முழிச்சுட்டானா போதும், எல்லாம் சரியாயிடும்“
“நன்றி டாக்டர்“ என்றான் ஹாவர்ட், அவன் டாக்டருடன் மீண்டும் கைகுலுக்கினான், அவர் அவனது தோளில் தட்டிவிட்டுச் சென்றார்,
“நம்ம யாராவது ஒருத்தர் வீட்டுக்குப் போய் பாத்துட்டு வரணும்னு எனக்குத் தோணுது“ என்றான் ஹாவர்ட், “எது இல்லேன்னாலும் ஸ்லகுக்கு எதாவது சாப்பிட தரணும்,“
“யாராச்சும் பக்கத்துவீட்டுக்காரங்கள கூப்புடு, மார்கனை கூப்புடு, யாராவது ஒருத்தரை கூப்பிட்டு நாய்க்கு சாப்பாடு குடுன்னு சொன்னா அவங்க செய்வாங்க“ என்றாள் ஆன்,
“சரி“ என்றான் ஹாவர்ட், சிறிது நேரத்துக்குப் பிறகு அவன் சொன்னான், “ஏம்மா, நீ ஏன் நான் சொல்றத செய்யக் கூடாது, வீட்டுக்குப் போய் எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு வரலாமே? உனக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும், நா இங்கயே இவன் கூடவேதான் கட்டாயமா இருப்பேன், இந்த சமயத்துல நாம நம்மளையும் திடமா வெச்சுக்கணும், அவன் எழுந்ததுக்கப்பறமும் கொஞ்ச நேரம் நாம இங்க இருக்க வேண்டியிருக்கும்,“
“நீ ஏன் போகக் கூடாது, நாய்க்கும் போடு, நீயும் சாப்பிடு“ என்றாள்,
“நான்தான் ஏற்கனவே போயிட்டு வந்துட்டனே, சரியா ஒரு மணி நேரம் பதினைஞ்சு நிமிஷம் நான் போயிட்டு வந்தேன், நீயும் ஒரு மணி நேரம் வீட்டுக்கு போ, ஓய்வெடுத்துட்டு அப்பறமா வா“
அவள் அதைப்  பற்றி யோசிக்க முயன்றாள், ஆனால் அவள் மிகவும் களைத்திருந்தாள், கண்களை மூடி அதைப் பற்றி யோசிக்க முனைந்தாள், கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சொன்னாள், “கொஞ்ச நேரம் நான் வீட்டுக்கு போயிட்டு வர்றேன், நான் இங்கயே உக்காந்து ஒவ்வொரு நிமிஷமும் அவனை பாத்துட்டு இல்லாம இருந்தா ஒரு வேளை அவன் முழிச்சுக்குவானா இருக்கும், நான் இங்க இல்லாம இருந்தா அவன் எழுந்துக்குவான்னு நினைக்கறேன், நான் வீட்டுக்குப் போயி குளிச்சுட்டு உடுப்பை மாத்திக்கறேன், ஸ்லகுக்கு சாப்பாடு குடுத்தர்றேன், அப்பறமா இங்க வர்றேன்,“
“நான் இங்கயேதான் இருப்பேன்“ என்றான் அவன், “நீ வீட்டுக்கு போ, நான் இங்க பாத்துக்கறேன்“, அவனுடைய கண்கள், வெகு நேரமாக குடித்துக் கொண்டிருப்பவனைப் போல, சிவந்து சிறுத்திருந்தன, அவனுடைய உடைகள் கசங்கியிருந்தன, அவனுடைய தாடி முளைக்கத் தொடங்கியிருந்தது, அவள் அவனது முகத்தைத் தொட்டாள், பிறகு கைகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள், கொஞ்ச நேரம் அவன் தனியாக இருக்க விரும்புகிறான் என்றும் பேசவோ அவனுடைய கவலைகளை பகிர்ந்துகொள்ளவோ விரும்பவில்லை என்றும் அவள் புரிந்துகொண்டாள், அவள் தன்னுடைய பணப்பையை எடுத்து கோட்டுப் பையில் போட்டுக் கொண்டாள்,
“நான் ரொம்ப நேரம் எடுத்துக்க மாட்டேன்“ என்றாள்,
“வீட்டுக்குப் போனதும் கொஞ்ச நேரம் உக்காந்து ஓய்வெடு,“ என்றான், “எதாவது சாப்பிடு, ஒரு குளியல் போடு, குளிச்சுட்டு வந்ததும் கொஞ்ச நேரம் உக்காந்து ஓய்வெடு, ரொம்ப ஆசுவாசமா இருக்கும், நீ வேணா பாரேன், அதுக்கப்பறம் திரும்பி வா, கவலைப்படாம இருக்கப் பாக்கலாம், டாக்டர் பிரான்சிஸ் சொன்னதை நீ கேட்டேல்ல,,“
கோட்டை அணிந்து  கொண்டு ஒரு நிமிடம் நின்றாள், டாக்டர் சொன்ன வார்த்தைகளை அப்படியே நினைவில் கொண்டு வர முயன்றாள், அவர் சொன்ன வார்த்தைகளுக்குப் பின்னால் அவர் சொன்னதைத் தவிர வேறு ஏதாவது ஒன்றை குறிப்பிடும் சமிக்ஞையோ ஜாடையோ இருந்ததோ என யோசித்தாள், பையனை பரிசோதிக்க அவர் குனியும்போது அவருடைய முகபாவத்தில் எதுவும் மாற்றம் இருந்ததா எனவும் யோசிக்க முயன்றாள், அவனது கண்ணிமைகளை விரித்து பரிசோதித்த போதும் அவனது சுவாசத்தை கேட்டிருந்தபோதும் டாக்டரது உடல் மொழி இயல்பாக இருந்ததை அவள் நினைவுபடுத்திக்கொண்டாள்,
கதவருகில் சென்றவள் திரும்பிப் பார்த்தாள், தனயனைப் பார்த்தவள் அதன் பிறகு தந்தையைப் பார்த்தாள், ஹாவர்ட் தலையசைத்தான், அறையைவிட்டு வெளியேறி கதவை இழுத்துச் சாத்தினாள்,
நர்ஸ்களின் இருப்பிடத்தைக் கடந்து வராந்தாவின் மூலையை அடைந்து மின்தூக்கிக்காகக்  காத்திருந்தாள், வராந்தாவின் கடைசியில் வலது பக்கமாய் திரும்பி, நீக்ரோ குடும்பமொன்று பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த சிறிய காத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள், காக்கி நிறத்தில் சட்டையும் பேண்டும் அணிந்த நடுத்தர வயதுக்காரன் ஒருவன், பேஸ்பால் தொப்பி தலையின் பின் பக்கமாக சரியும்படியாக அணிந்திருந்தான், சாதாரண உடுப்பும் செருப்பும் அணிந்திருந்த பருத்த பெண்மணி ஒருத்தி நாற்காலியில் சரிந்திருந்தாள், ஜீன்ஸ் அணிந்த எண்ணற்ற சிறிய ஜடைகளைக் கொண்டது போல் தலைமுடியை அலங்கரித்திருந்த பருவப் பெண் புகைப்பிடித்தபடி, நாற்காலிகள் ஒன்றில் கணுக்கால்கள் பின்னியிருக்க கால்நீட்டி சரிந்திருந்தாள், ஆன் அறைக்குள் நுழைந்ததும் அந்தக் குடும்பத்தின் அனைவரது கண்களும் அவளை நோக்கித் திரும்பின, சிறிய மேசை முழுக்க பர்க்கர் பொட்டலத் தாள்களும் ரப்பர் குவளைகளுமாய் குப்பையாகக் கிடந்தன,
“பிராங்களின்?“ பருத்த பெண்மணி நிமிர்ந்தபடியே கேட்டாள், “பிராங்களின் பத்தி எதுவும் சொல்லப் போறியா?“, அவளது கண்கள் விரிந்தன, “இப்பவே எங்கிட்ட சொல்லம்மா“ என்றாள் அவள், அவள் நாற்காலியிலிருந்து எழுந்து கொள்ள முயன்றாள், ஆனால் அந்த ஆள் அவளது தோள்களை கைகளால் பற்றிக் கொண்டான்,
“பொறு, பொறு,, எவிலின்“ என்றான் அவன்,
“என்னை மன்னிச்சுக்குங்க“ ஆன் சொன்னாள், “லிப்ட் எங்கேன்னு தேடிட்டு வந்தேன், என் பையன் இங்க ஆஸ்பத்திரியில இருக்கான், லிப்ட் எங்க இருக்குன்னு தெரியலை“
“லிப்ட் அந்தப் பக்கமா கீழே இருக்கு, இடது பக்கமா திரும்பிப் போகணும்“ விரலை நீட்டிக் காட்டியபடி அந்த ஆள் சொன்னான்,
சிகரெட்டைப் புகைத்தபடியே அந்தப் பெண் ஆனைப் பார்த்தாள், அவளது கண்கள் சிறு கீறல்கள் போல் சுருங்கியிருக்க புகையை ஊதுகையில் அவளது தடித்த உதடுகள் மெதுவாக திறந்திருந்தன, அந்த நீக்ரோ பெண்மணி தலையை பின்னுக்கிழுத்துக் கொண்டு, அக்கறை இல்லாதவளாய், பார்வையை ஆனிடமிருந்து திருப்பிக் கொண்டாள்,
“என் பையனை ஒரு கார் மோதிருச்சு“ ஆன் அந்த ஆளிடம் சொன்னாள், அவள் தனக்குத்தானே விவரித்துக்கொள்ள வேண்டியது போலிருந்தது, “அவனுக்கு ரத்தக்கட்டு இருக்கு, தலையில லேசா ஒரு எலும்பு விரிசல், ஆனா அவன் சரியாயிருவான், அவன் அதிர்ச்சியில இருக்கான், ஆனா அது ஒருவிதமான கோமாவாகக் கூட இருக்கலாம், கோமாங்கறதுதான் எங்களுக்கு கொஞ்சம் கவலையா இருக்கு, நான் கொஞ்ச நேரம் வெளியில போயிட்டு வரலாம்னு போறேன், என்னோட புருஷன் பையனோட இருக்கார், நான் போனதுக்கப்பறம் அவன் முழிச்சாலும் முழிச்சுக்குவான்,“
“அடடா,, ரொம்ப மோசம்,“ என்ற அந்த ஆள் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தான், மேசைக்குக் கீழே பார்வையைத் தாழ்த்திய அவன் மீண்டும் ஆனைப் பார்த்தான், அவள் இன்னும் அங்கேயேதான் நின்றிருந்தாள், “எங்க பிராங்களினுக்கு இப்ப ஆபரேஷன் நடந்திட்டிருக்கு, யாரோ அவனை வெட்டிட்டாங்க, அவனை கொல்ல முயற்சி பண்ணிருக்காங்க, ஏதோ ஒரு கொண்டாட்டத்துக்கு போயிருந்த இடத்துல எதோ சண்டை நடந்திருக்கு, யாரைப் பத்தியும் கவலப்படாம அவன் சும்மா நின்னு வேடிக்கை பாத்துட்டுத்தான் இருந்தான்னு சொல்றாங்க, ஆனா இன்னிக்கு இருக்கற நிலைமையில அதெல்லாம் ஒண்ணும் சொல்ல முடியாது, இப்ப அவனுக்கு ஆபரேஷன் நடக்குது, நாங்கல்லாம் நம்பிக்கையோட பிரார்த்தனை பண்ணிட்டிருக்கோம், எங்களால அதான் செய்ய முடியும்“, அவன் அவளை திடமாக பார்த்தபடியே சொன்னான்,
ஆன் தன்னையே கவனித்தபடியிருந்த  அந்தப் பெண்ணைப் பார்த்தாள், பிறகு வயதான அந்தப் பெண்மணியைப் பார்த்தாள், அவள் தலை இப்போது கவிழ்ந்திருந்தது, கண்கள் மூடியிருந்தன, அவளது உதடுகள் மௌனமாக வார்த்தைகளை முணுமுணுத்திருப்பதை ஆன் கண்டாள், என்ன வார்த்தைகளை அவள் முணுமுணுக்கிறாள் என்பதை அறிய விரும்பினாள். அவளைப் போலவே ஒரு காத்திருத்தலில் இருக்கும் இந்த ஆட்களிடம் இன்னும் நிறைய பேசவேண்டும் போலிருந்தது அவளுக்கு, அவளும் பயந்திருக்கிறாள், அவர்களும் பயந்திருக்கிறார்கள், அவர்களுக்கு அது பொதுவான அம்சமாக உள்ளது, அந்த விபத்தைப் பற்றி மேலும் சொல்ல வேண்டுமென்றும், ஸ்காட்டியைப் பற்றியும் அந்த விபத்து அவனது பிறந்த நாளான திங்கட்கிழமையன்று நடந்தது என்றும் அவன் இன்னும் நினைவு திரும்பாமல் கிடக்கிறான் என்றும் சொல்ல விரும்பினாள் அவள், ஆனாலும் அதை எப்படித் தொடங்குவது என்று அவளுக்குத் தெரியவில்லை, வேறு எதுவுமே சொல்லாது அவள் அவர்களைப் பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தாள்,
அந்த ஆள் சுட்டிக் காட்டிய திசையில் வராந்தாவில்  நடந்து லிப்டை அவள் கண்டடைந்தாள், மூடிய கதவுகளுக்கு முன்பாக அவள் ஒரு நிமிடம், தான் செய்வது சரிதானா என்று யோசிப்பவள் போல, நின்றாள், பிறகு அவள் விரலால் பொத்தானை அழுத்தினாள்,
காரை நிறுத்திவிட்டு அதன் என்ஜினை அணைத்தாள், ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு ஸ்டியரிங்கின் மீது தலையை சாய்த்துக் கொண்டாள், குளிரத் தொடங்கிய என்ஜினின் துடிப்போசையை கவனித்தாள், பிறகு காரிலிருந்து வெளியே வந்தாள், வீட்டுக்குள்ளிருந்து நாய் குரைக்கும் சத்தத்தை அவளால் கேட்க முடிந்தது, திறந்திருந்த முன் பக்கக் கதவருகே சென்றாள், வீட்டுக்குள் சென்று விளக்குகளை எரியவிட்டாள், தேநீருக்காக கெட்டிலில் தண்ணீர் ஊற்றி வைத்தாள், நாய்க்கான உணவுப் பொட்டலத்தைத் திறந்து பின் கட்டில் ஸ்லகுக்கு போட்டாள், பசியுடனிருந்த அந்த நாய் அதை உண்டது, அவள் வீட்டில் இருக்கப் போகிறாளா என்று தெரிந்து கொள்ளும்பொருட்டு அது சமையலறைக்குள் ஓடியபடியே இருந்தது, தேநீருடன் அவள் சோபாவில் உட்கார்ந்த நேரம் தொலைபேசி மணி ஒலித்தது,
“ஹலோ,, சொல்லுங்க“ என்று பதிலளித்தாள் அவள்,
“திருமதி வெய்ஸ்“ என்றது ஒரு ஆண் குரல், அப்போது அதிகாலை ஐந்து மணி, பிண்ணனியில் ஏதோ ஒரு இயந்திரத்தின் சத்தத்தை கேட்க முடிந்தது,
“ஆமாம், என்ன விஷயம்?“ அவள் கேட்டாள், “ஆமா நான் வெய்ஸ்தான் பேசறேன், என்ன விஷயம், தயவு செஞ்சு சொல்லுங்க,“ பிண்ணனியிலிருந்த வந்த சத்தத்தை அவள் கவனித்தாள், “ஸ்காட்டியப் பத்தி எதாவதா, கடவுளே?“
“ஸ்காட்டி,,“ ஆண் குரல் கேட்டது, “ஸ்காட்டிய பத்தியா, ஆமாம், அது ஸ்காட்டி சம்பந்தப்பட்டதுதான், அந்த பிரச்னை, ஸ்காட்டிய பத்தியே மறந்திட்டீங்களா?“ என்று கேட்டான் அவன், பிறகு தொலைபேசி துண்டிக்கப்பட்டது,
அவள் மருத்துவமனைக்கு  தொலைபேசியில் தொடர்பு கொண்டு மூன்றாவது தளத்துக்கு இணைப்பைத்  தரும்படி கேட்டாள், தொலைபேசியில் பதிலளித்த நர்ஸிடம் தன் மகனைப் பற்றி தகவல் சொல்லும்படி கேட்டாள், பிறகு அவள் தன் கணவனிடம் பேச வேண்டும் என்றும் சொன்னாள், மிகவும் அவசரம் என்றும் சொன்னாள்,
தொலைபேசிச் சரடை விரல்களால் திருகியபடியே அவள் காத்திருந்தாள், கண்களை மூடிக் கொண்ட அவளுக்கு வயிற்றுக்குள் சங்கடமாக உணர்ந்தாள், ஏதாவது சாப்பிட்டாக வேண்டும், ஸ்லக் பின் கட்டிலிருந்து உள்ளே வந்து அவளது காலருகில் படுத்துக்கொண்டது, வாலாட்டியது, அது அவளது விரல்களை நக்கத் தொடங்கியதும் காதைப் பிடித்து இழுத்தாள், ஹாவர்ட் மறுமுனையிலிருந்து பேசினான்.
“யாரோ ஒரு ஆள் இப்ப கூப்பிட்டான்,“ என்று சொன்னாள், தொலைபேசிச் சரடைத் திருகினாள், “ஸ்காட்டியப் பத்தின்னு அவன் சொன்னான்“ சொல்லியபடியே அழுதாள்,
“ஸ்காட்டி நல்லா இருக்கான்,“ ஹாவர்ட் அவளிடம் சொன்னான், “அதாவது அவன் இன்னும் தூங்கிட்டுத்தான் இருக்கான், ஒரு மாற்றமும் இல்லை, நீ போனதுக்கப்பறம் நர்ஸ் ரெண்டு தடவை வந்துட்டு போனாங்க, நர்ஸ் இல்லைனா டாக்டர், அவன் நல்லாதான் இருக்கான்“,
“கூப்பிட்ட அந்த ஆள், ஸ்காட்டியப் பத்தின விஷயம்னு சொன்னான்“ என்றாள் அவள் அவனிடம்,
“நீ கொஞ்ச நேரம் ஓய்வெடும்மா, உனக்கு ஓய்வு வேணும், எங்கிட்ட பேசினா அதே ஆளாத்தான் இருக்கணும் அவன், அதை மறந்துரு, நீ ஓய்வெடுத்துட்டு இங்க வா, அதுக்கப்பறம் நாம் எதாவது சாப்பிடலாம்,“
“காலை உணவா?,, எனக்கொண்ணும் சாப்பிட வேண்டாம்“ என்றாள் அவள்,
“நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுக்க, பழரசமோ, ஏதாவது ஒண்ணு, எனக்குத் தெரியலை, ஆன் எனக்கு எதுவுமே தெரியாது, கர்த்தரே,, எனக்கு பசியுமில்லை, ஆன், இப்ப பேசறது சிரமமா இருக்கு, இங்க நான் நர்ஸீகளோட மேசைக்கு முன்னாடி நிக்கறேன், இன்னிக்கு காலையில எட்டு மணிக்கு டாக்டர் பிரான்சிஸ் வர்றார், அப்ப அவர் எதாவது நம்மகிட்ட சொல்லுவார், இன்னும் உறுதியா ஏதாவது சொல்லுவார், அப்படித்தான் ஒரு நர்ஸ் சொன்னா, அதுக்கு மேல அவளுக்கு வேற எதுவும் தெரியலை, ஆன், அப்ப நமக்கு இன்னும் வேற எதாவது கூடுதலா தெரியும்மா,, எட்டு மணிக்கு, நீ எட்டு மணிக்கு முன்னாடி வந்துரு, நான் இங்கயேதான் இருக்கேன், ஸ்காட்டி நல்லா இருக்கான், அவன் அதே மாதிரிதான் இருக்கான்,“ என்றான் அவன்,
“போன் அடிச்சப்ப நான் டீ குடிச்சிட்டிருந்தேன், ஸ்காட்டிய பத்தின விஷயம்னு அவன் சொன்னான், பேசும்போது பின்னாடி ஏதோ சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு, உனக்கு வந்த போன்ல பேசும்போதும் அதுமாதிரி எதும் சத்தம் கேட்டுதா, ஹாவர்ட்?“
“எனக்கு ஞாபகம் இல்லை“ என்றான் அவன், “அவன் அந்த காரோட ஓட்டுனரா இருக்கலாம், ஸ்காட்டிய பத்தி எப்பிடியாவது தெரிஞ்சுக்கிட்ட வேற ஏதாவது ஒரு மனநோயாளியா இருக்கலாம், நான் இப்ப இங்க அவன் கூட இருக்கேன், நீ வேற எதுவும் யோசிக்காம ஓய்வெடு, அப்பறம் குளிச்சுட்டு ஏழு மணிபோல இங்க வா, டாக்டர் இங்க வரும்போது நாம ரெண்டு பேருமா சேந்து பேசுவோம், எல்லா சரியாப்போயிடும்மா,, நான் இருக்கேன், டாக்டர்க, நர்ஸ்க எல்லாரும் இருக்காங்க, அவனோட நிலைமை சீராக இருக்குன்னு சொல்றாங்க,“
“எனக்கு செத்துப்போற மாதிரி பயம்“ என்றாள் அவள்,
தண்ணீரை திருப்பிவிட்டவள் உடைகளை களைந்துவிட்டு தொட்டிக்குள் இறங்கினாள், விரைவாக குளித்துவிட்டு துவட்டிக்கொண்டாள், தலைகுளிக்க நேரமெடுத்துக் கொள்ளவில்லை, சுத்தமான உள்ளாடைகளையும், கம்பளியாலான சட்டையையும் ஸ்வெட்டரையும் அணிந்து கொண்டாள், வரவேற்பறைக்கு சென்றாள், நாய் அவளை நிமிர்ந்து பார்த்து வாலை ஒரு முறை தரையில் அடித்தது, காரில் அவள் ஏறச் சென்றபோது வெளியில் நன்றாக வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது,
வாகனங்களை நிறுத்துமிடத்தில்  காரை ஓட்டிச் சென்றவள் வாசலுக்கு  அருகிலாக ஒரு காலியிடத்தைக்  கண்டாள், தன் மகனுக்கு ஏற்பட்ட விபத்துக்கு தானும் காரணம் என்று ஏதோ ஒரு புரியாத விதத்தில் அவள் உணர்ந்தாள், அவள் தன் எண்ணங்களை மாற்றும்விதமாக நீக்ரோ குடும்பத்தை பற்றி யோசிக்கத் தொடங்கினாள், அவனுடைய பெயர் பிராங்கிளின் என்பதையும் பர்கர் பொட்டலத்தின் காகித உறைகள் நிறைந்து கிடந்த மேசையையும் சிகரெட்டை புகைத்தபடியே அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பருவப் பெண்ணையும் அவளுக்கு நினைவிருந்தது, மருத்துவமனையின் வாசற் கதவில் நுழைந்தபடியே, மனதில் தோன்றிய அந்தப் பெண்ணின் உருவத்திடம் அவள் சொன்னாள், “குழந்தையே பெற்றுக் கொள்ளாதே, தயவுசெய்து,, வேண்டாம்“,
அப்போதுதான் வேலைக்கு வந்திருந்த இரண்டு நர்ஸீகளுடன்  லிப்டில் மூன்றாவது தளத்துக்கு சென்றாள், அன்று புதன்கிழமை காலை நேரம், ஏழு மணிக்கு சில நிமிடங்கள் இருந்தன, மூன்றாவது தளத்தில் நின்று லிப்டின் கதவுகள் திறந்துகொண்டபோது டாக்டர் மேடிசன்னுக்கு ஒரு தகவல் வந்தது, அவள் லிப்டுக்குள் நுழைந்தபோது தடைபட்ட அவர்களது உரையாடலை நர்சுகள் இருவரும் மறுபக்கமாக திரும்பிக் கொண்டு தொடரவும் அவள் லிப்டிலிருந்து வெளியே வந்தாள், வராந்தாவில் நடந்துசென்று நீக்ரோ குடும்பம் காத்திருந்த அந்த அறைக்கு சென்றாள், அவர்கள் எல்லோரும் போய்விட்டிருந்தனர், ஆனால் நாற்காலிகள் அனைத்தும் சில நிமிடங்களுக்கு முன்புதான் ஆட்கள் அவற்றிலிருந்து தாவிக் குதித்து போனதுபோல தாறுமாறாக கலைந்து கிடந்தன, மேசையின் மீது அதே கோப்பைகளும் காகிதங்களும் குவிந்துகிடந்தன, சாம்பல்கிண்ணம் சிகரெட் துண்டுகளால் நிறைந்து கிடந்தது,
நர்ஸ்களின் இருப்பிடத்தை அடைந்தாள், மேசைக்கு பின்பாக கொட்டாவி விட்டபடி தலைவாரிக் கொண்டிருந்தாள் ஒரு நர்ஸ்,
“நேத்து ராத்திரி நீக்ரோ பையன் ஒருத்தனுக்கு ஆபரேஷன் நடந்துச்சே,, பிராங்கிளின்னு பேரு, அவங்க குடும்பத்த சேந்தவங்ககூட அந்த அறையில இருந்தாங்களே, அவன் இப்ப எப்படி இருக்கான்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
மேசைக்குப் பின்னாக  உட்கார்ந்திருந்த ஒரு நர்ஸ்  அவளுக்கு முன்னால் இருந்த ஒரு அட்டையில் பார்த்தாள், தொலைபேசி மணி ஒலிக்கவும் அவள் அதை எடுத்தாள், ஆனால் அவளது கண்கள் ஆனையே பார்த்திருந்தன,
“அவன் செத்துப் போயிட்டான்“ மேசைக்கு முன்பாக இருந்த நர்ஸ் சொன்னாள், சீப்பை கையில் பிடித்தபடியே அந்த நர்ஸ் அவளைப் பார்த்தாள், “நீங்க அவங்களோட நண்பரா இல்லை உறவுக்காரங்களா, என்ன?“
“அவங்கள நேத்து ராத்திரி நான் சந்திச்சேன், என் மகன் இங்க ஆஸ்பத்திரில இருக்கான், அவன் அதிர்ச்சில இருக்கான்னு நெனக்கறேன், என்னாச்சுன்னு எங்களுக்கு உறுதியா தெரியலை, பிராங்களின் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன், அவ்வளவுதான், நன்றி“ என்றாள் ஆன், வராந்தாவில் நடந்தாள், சுவர்களைப் போலவே நிறம் கொண்டிருந்த லிப்டின் கதவுகள் திறக்க வெள்ளை கால்சட்டையும் வெள்ளை காலணிகளையும் அணிந்திருந்த மெலிந்த வழுக்கைத் தலையுடனான ஒருவன் லிப்டிலிருந்து கனத்தவொரு வண்டியை வெளியே இழுத்தான், நேற்றிரவு அவள் இந்தக் கதவுகளை கவனிக்கவில்லை, வராந்தாவில் அந்த வண்டியை இழுத்துச் சென்ற அவன் லிப்டுக்கு அருகிலிருந்த ஒரு அறையருகே நின்று அங்கிருந்த ஒரு அட்டையில் இருந்ததை படித்தான், பிறகு அவன் குனிந்து வண்டியிலிருந்து ஒரு தட்டை உருவி எடுத்தான், கதவை மெதுவாக தட்டிவிட்டு உள்ளே போனான், வண்டியைத் தாண்டிச் செல்கையில் சூடான உணவின் உவப்பில்லாத மணத்தை அவளால் நுகர முடிந்தது, நர்ஸ்கள் எவரையும் பார்க்காமல் அவள் வேகமாக நடந்து தன் மகனின் அறைக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனாள்,
கைகளை பின்னால் கட்டிக்கொண்டு  ஹாவர்ட் ஜன்னலருகே நின்றிருந்தான், அவள் உள்ளே வரும்போது திரும்பினான்,
“எப்படி இருக்கான்“ என்று கேட்டாள், படுக்கையருகில் சென்றாள், பணப்பையை உடை அலமாரிக்கு அருகில் தரையில் போட்டாள், அவள் சென்று வர வெகு நேரமாகிவிட்டதுபோல உணர்ந்தாள், அவள் குழந்தையின் முகத்தைத் தொட்டாள், “ஹாவர்ட்?“
“டாக்டர் பிரான்சிஸ் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க வந்தார்,“ என்றான் ஹாவர்ட், அவனை கூர்ந்து பார்த்திருந்த அவளுக்கு அவனுடைய தோள்கள் சற்றே புடைத்திருப்பது போல் தோன்றியது,
“காலையில எட்டுமணிக்கு முன்னாடி வரமாட்டார்னு நான் நெனச்சேன்“ அவசரமாக சொன்னாள் அவள்,
“அவரோட இன்னொரு டாக்டரும் வந்திருந்தார், நரம்பியல் நிபுணர்,“
“நரம்பியல் நிபுணரா?“
ஹாவர்ட் தலையசைத்தான், அவனது தோள்கள் குலுங்குவதை அவளால் பார்க்க முடிந்தது, “‘ஹாவர்ட், என்ன சொன்னாங்க அவங்க, கர்த்தர் பேர்ல கேக்கறேன், என்ன சொன்னாங்க அவங்க, என்ன விஷயம்?“
“அவனை கீழே எடுத்துட்டு போயி இன்னும் பரிசோதனைகள் செய்யப் போறதா அவங்க சொன்னாங்க, அவனுக்கு அவங்க ஆபரேஷன் செய்யலாம்னு நெனக்கறாங்கம்மா,, அவனுக்கு ஆபரேஷன் செய்யப் போறாங்க, அவன் ஏன் கண்முழிக்கமாட்டேங்கான்னு அவங்களால கண்டுபிடிக்க முடியலை, அதிர்ச்சி, ரத்தக்கட்டுக்கு மேல ஏதோ ஒண்ணுன்னு மட்டும் அவங்களுக்கு இப்ப தெரியும், மண்டையோட்டுல இருக்கற விரிசலோட சம்பந்தப்பட்டது அதுன்னு அவங்க நெனக்கறாங்க, அதுனால அவங்க ஆபரேஷன் செய்யப் போறாங்க, நான் உன்னை கூப்பிடலாம்னு கூப்பிட்டு பாத்தேன், ஆனால் நீ அதுக்குள்ள வீட்டைவிட்டு கௌம்பிட்டே போல“
“கடவுளே,, ஹாவர்ட், தயவுசெஞ்சு,, “ என்றபடியே அவனை அணைத்துக் கொண்டாள்,
“பாரும்மா.“ என்றான் ஹாவர்ட், “ஸ்காட்டி,, பாரு ஆன்,,“ அவன் அவளை படுக்கைப் பக்கமாக திருப்பினான்,
பையன் கண்களைத் திறந்தான், பிறகு மூடிக்கொண்டான், மறுபடியும் அவன் இப்போது கண்களைத் திறந்தான், ஒரு நிமிடம்போல அவனுடைய கண்கள் நேராக உற்றுப் பார்த்தது, பிறகு மெல்ல தலை திருப்பி அவனது பார்வை ஹாவர்டின் மீதும் ஆனின் மீதும் நிலைத்தது, பிறகு மறுபடியும் விலகிப் போனது,
“ஸ்காட்டி“ அவனுடைய அம்மா படுக்கையருகில் சென்று அழைத்தாள்,
“ஏய் ஸ்காட், மகனே“ என்று அவனது தந்தை அழைத்தார்,
அவர்கள் இருவரும் படுக்கையில்  குனிந்திருந்தனர், ஹாவர்ட் குழந்தையின் கைகளை எடுத்து மெல்ல தட்டியபடி அழுத்தினான், ஆன் பையனின் மீது குனிந்து அவனுடைய நெற்றியில் மீண்டும் மீண்டும் முத்தமிட்டாள், அவனது முகத்தின் இரண்டு பக்கத்திலும் கைகளை வைத்துக் கொண்டாள், “ஸ்காட்டி, குட்டி, செல்லமே,, இதப் பாரு,, அப்பாவும் அம்மாவும்“ என்றாள் அவள்,
பையன் அவர்களைப்  பார்த்தான், ஆனால் அவர்களை அடையாளம் கண்டுகொண்டமைக்கான எந்த அறிகுறியும் இல்லை, பிறகு அவனுடைய வாய் திறந்தது, கண்கள் இறுக மூடிக் கொண்டன, பிறகு அவன் அலறினான், நுரையீரலில் காற்று தீரும் மட்டும் அலறினான், அதன் பிறகு அவனுடைய முகம் ஆசுவாசம் கொண்டு அமைதியடைந்தது, அவனுடைய உதடுகள் திறந்து கொள்ள, அவனது இறுதி மூச்சு தொண்டை வழியாக திணறலுடன் வெளியேறி, கெட்டித்தத பற்களினூடாக ஓசையின்றி வெளியேறியது,
டாக்டர்கள் அதை  புலப்படாத ரத்தக்கசிவு  என்றும் கோடிக்கு ஒன்றுதான்  இப்படி ஆகும் என்றும் சொன்னார்கள், முன்னமே இதை கண்டறிந்து உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தால் அவனை காப்பாற்றியிருக்க முடியும், ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான், எப்படியிருந்தாலும் அவர்கள் எதற்காக காத்திருந்தார்கள்? பரிசோதனைகளிலும் எக்ஸ்ரேக்களிலும் எதுவுமே தெரியவில்லை,
டாக்டர் பிரான்சிஸ் அதிர்ச்சியிலிருந்தார், அவர்களை மருத்துவர்களுக்கான கூடத்துக்கு நடத்திச் செல்கையில் அவர் சொன்னார், “நான் எவ்வளவு வருத்தப்படறேன்னு சொல்ல முடியலை, என்னை மன்னிக்கனும், என்னால சொல்ல முடியலை“ என்றார், அங்கே ஒரு டாக்டர் இன்னொரு நாற்காலியின் பின்னால் கால்களைக் கோர்த்துக்கொண்டு தொலைகாட்சியில் அதிகாலை நிகழ்ச்சியொன்றை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார், பிரசவ அறைக்கான பச்சை உடுப்பை அவர் அணிந்திருந்தார், பச்சை நிறத்தில் கால்சட்டையும் மேல்சட்டையும், தலை மயிரை மூடும்படியான பச்சை நிறத் தொப்பி, ஹாவர்டையும் ஆனையும் பார்த்த அவர் பிறகு டாக்டர் பிரான்சிஸையும் ஏறிட்டார், அவர் எழுந்து தொலைகாட்சியை அணைத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார், டாக்டர் பிரான்சிஸ் ஆனை சோபாவில் அமரச் செய்து அவளருகில் உட்கார்ந்துகொண்டு மெதுவான ஆறுதலளிக்கும் குரலில் பேசத் தொடங்கினார், ஒரு கணத்தில் அவர் சாய்ந்து அவளை அணைத்துக் கொண்டார், அவருடைய நெஞ்சு சீராக ஏறி இறங்குவதை அவள் தன் தோளில் உணர்ந்தாள், அவள் கண்களை மூடாது அவர் அணைத்திருக்க விட்டாள், ஹாவர்ட் கழிவறைக்குள் சென்றான், ஆனால் அவன் கதவை திறந்தே வைத்திருந்தான், பயங்கரமாக அழுது முடித்துவிட்டு தண்ணீரை திறந்து முகத்தைக் கழுவினான், பிறகு அவன் வெளியே வந்து டெலிபோன் வைத்திருந்த சிறிய மேசையின் மீது உட்கார்ந்தான், முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பவன்போல் அவன் தொலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தான், சிலரை அழைத்துத் தகவல் சொன்னான். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு டாக்டர் பிரான்சிஸ் தொலைபேசியை உபயோகித்தார்,
“இப்போது நான் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா?“ அவர்களை கேட்டார்,
ஹாவர்ட் தலையசைத்தான், அவரது சொற்களை புரிந்துகொள்ள முடியாததுபோல் ஆன் டாக்டர் பிரான்சிஸை வெறித்தாள்,
டாக்டர் அவர்களை மருத்துவமனையின்  முன்பக்க கதவுக்கு நடத்திச் சென்றார், ஜனங்கள் மருத்துவமனைக்குள் வருவதும் போவதுமாக இருந்தார்கள், அப்போது மணி காலை பதினொன்று, ஆனுக்கு தான் எவ்வளவு மெதுவாக, மிகுந்த தயக்கத்துடன் நடந்து வருகிறோம் என்று தெரிந்திருந்தது, அவர்கள் அங்கே இருக்க வேண்டும் என்று எண்ணியபோது டாக்டர் பிரான்சிஸ் அவர்களை அங்கிருந்து போகக் கட்டாயப்படுத்தினார் என்று அவளுக்குத் தோன்றியது, அந்த நேரத்தில் அவர்கள் அங்கேயே இருந்திருக்கவேண்டும், வாகனங்கள் நிறுத்துமிடத்தை வெறித்திருந்த அவள் திரும்பி மருத்துவமனையின் முகப்பை பார்த்தாள், அவள் தலையாட்டத் தொடங்கினாள், “இல்லை. முடியாது, அவனை இங்கேயே விட்டுவிட்டு போக முடியாது“ என்றாள், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் எதிர்பாராத கொடூரமான மரணங்களை எதிர்கொள்ள நேர்கையில் வசனமாக பேசும் சொற்களைப் போன்றே தானும் பேசியது அவளுக்கு நியாயமற்றதென தனக்குத் தானே சொல்லிக் கொள்வதை அவளால் கேட்க முடிந்தது, அவளுக்கு தான் பேசும் வார்த்தைகள் தன்னுடையதாகவே இருக்கவேண்டும் என்று விரும்பினாள், “முடியாது“ என்ற அவளுக்கு ஏதோ காரணத்துக்காக தோளுக்குள் தலையை புதைத்துக்கொண்ட அந்த நீக்ரோ பெண்மணியின் நினைவு வந்தது, “முடியாது“ என்றாள் அவள் மீண்டும்,
“அப்பறமா நான் பேசறேன்“ ஹாவர்டிடம் டாக்டர் சொல்லிக் கொண்டிருந்தார், “செய்ய வேண்டிய காரியங்கள் இன்னும் சில இருக்கு, எங்க திருப்திக்கு நாங்க தெளிவாக்கிக்க வேண்டியவைகளும் இருக்கு, தெளிவு படுத்த வேண்டிய சில விஷயங்கள் இருக்கு“,
“பிரேதப் பரிசோதனையா?“ ஹாவர்ட் கேட்டான்,
டாக்டர் பிரான்சிஸ் ஆமோதித்தார்,
“எனக்குப் புரியுது“ என்றான் ஹாவர்ட், பிறகு அவன் சொன்னான், “கர்த்தரே, முடியாது, எனக்கு புரியலை, என்னால முடியாது, முடியாது“,
ஹாவர்டின் தோள்களில்  டாக்டர் தன் கைகளைப்  போட்டுக்கொண்டார், “என்னை மன்னிச்சுருங்க, கடவுளே,, நான் ரொம்ப வருத்தப்படறேன்,“, ஹாவர்டின் தோள்களிலிருந்து கைகளை விலக்கி அவனை நோக்கி நீட்டினார், அவருடைய கையை பார்த்துவிட்டு ஹாவர்ட் பற்றிக் கொண்டான், ஆனின் தோளில் மீண்டும் ஒருமுறை டாக்டர் பிரான்சிஸ் கைகளைப் போட்டுக்கொண்டார், அவள் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு மேன்மையை அவர் கொண்டிருந்தது போலிருந்தது. அவரது தோளில் தலை புதைத்துக் கொண்டாள் அவள், ஆனால் கண்கள் திறந்திருந்தன, மருத்துவமனையையே பார்த்துக் கொண்டிருந்தாள், வாகன நிறுத்தத்திலிருந்து காரை வெளியே எடுத்தபோதும் அவள் மருத்துவமனையையே திரும்பிப் பார்த்திருந்தாள்,
வீட்டில் அவள் கோட் பாக்கெட்டில் கைகளை நுழைத்தபடி சோபாவில் அமர்ந்திருந்தாள், குழந்தையின் அறைக் கதவை ஹாவர்ட் மூடி வைத்திருந்தான், காபிமெஷினை இயங்கச் செய்துவிட்டு காலி அட்டைப் பெட்டி ஒன்றை எடுத்தான், முன்னறையில் அங்குமிங்குமாக இறைந்து கிடந்த, குழந்தையின் சின்னச் சின்ன பொருட்களை பொறுக்க நினைத்திருந்தான், ஆனால் அதற்கு பதிலாக அவன் சோபாவில் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான், பெட்டியை இன்னொரு பக்கமாக தள்ளி வைத்தான், முழங்காலுக்கு நடுவில் கைகளை இருத்திக் கொண்டு குனிந்து அழத் தொடங்கினான், அவனது தலையை இழுத்து மடியில் போட்டுக் கொண்ட அவள் அவனது தோள்களை தட்டிக் கொடுத்தாள், “அவன் போயிட்டான்,“ என்றாள் அவள், தோளைத் தட்டியபடியே இருந்தாள், அவனது விசும்பல்களுக்கு நடுவே சமையலறையில் காபிமெஷின் விசிலடிப்பதை கேட்க முடிந்தது, “இங்க பாரு, ஹாவர்ட், அவன் போயிட்டான், போயே போயிட்டான், இப்ப நாம அதுக்கு நம்மை பழக்கப்படுத்திக்கணும், தனியா இருக்கப் பழகிக்கணும்“ என்றாள் மிக மிருதுவாக,
கொஞ்ச நேரத்தில் ஹாவர்ட்  எழுந்து பெட்டியுடன் அறையில்  அங்குமிங்குமாக இலக்கின்றி அலைந்தான், பெட்டிக்குள் அவன் எதையும் போடவில்லை, ஆனால் சிலவற்றை சோபாவின் ஒரு முனையில் தரையில் ஒன்று சேர்த்தான், அவள் தொடர்ந்து கோட் பாக்கெட்டில் கைகளை போட்டபடி உட்கார்ந்திருந்தாள், ஹாவர்ட் பெட்டியை கீழே போட்டுவிட்டு காபியை முன்னறைக்குக் கொண்டுவந்தான், பின்னர் ஆன் தன்னுடைய உறவினர்களை தொலைபேசியில் அழைத்தாள், ஒவ்வொரு அழைப்பின் போதும் அழைக்கப்பட்டவர் பதிலளிக்கத் தொடங்கியதும் ஆன் சில வார்த்தைகளை சொல்லிவிட்டு ஒரு நிமிடம் அழுவாள், பிறகு அளவான குரலில் நடந்ததை விவரிப்பாள், ஏற்பாடுகளைக் குறித்து சொல்லுவாள், ஹாவர்ட் பெட்டியை எடுத்துக் கொண்டு கார் நிறுத்துமிடத்துக்குச் சென்றான், அங்கே அவன் குழந்தையின் மிதிவண்டியைக் கண்டான், பெட்டியை கீழே போட்டுவிட்டு மிதிவண்டிக்கு அருகில் நடைபாதையில் உட்கார்ந்து கொண்டான், வசமில்லாத வகையில் அவன் சைக்கிளை எடுத்துக் கொள்ள அது அவனது மார்பில் சாய்ந்திருந்தது, மிதிவண்டியின் ரப்பர் மிதிப்பான் அவன் நெஞ்சில் அழுந்த அவன் அதைப் பிடித்துக் கொண்டான், சக்கரத்தை சுற்றினான்,
ஆன் தன்னுடைய சகோதரியிடம்  பேசிவிட்டு தொலைபேசியை வைத்தாள், தொலைபேசி மறுபடி ஒலித்தபோது அவள் இன்னொரு எண்ணைத் தேடிக்கொண்டிருந்தாள், முதல்முறை ஒலித்தபோதே அவள் அதை எடுத்துவிட்டாள்,
“ஹலோ“ என்று அவள் சொன்னாள், பிண்ணனியில், பாடலை முணுமுணுப்பது போன்ற ஒரு ஓசையை அவள் கேட்டாள், “ஹலோ“ என்றாள், “கடவுளே,, யார் நீ, உனக்கு என்ன வேணும்?“
“உங்க ஸ்காட்டி, உங்களுக்காக அவனை நான் தயார் செஞ்சு வச்சிருக்கேன், நீங்க அவனை மறந்துட்டீங்களா?“ என்று அந்த ஆண் குரல் கேட்டது,
“கேடுகெட்டவனே,, இப்பிடி செய்ய எப்பிடி மனசு வந்தது,, வேசி மகனே,,“ அவள் ஒலிவாங்கியில் கத்தினாள்,
“ஸ்காட்டி,, ஸ்காட்டியப் பத்தி நீங்க மறந்துட்டீங்களா?“ என்றது அந்த ஆணின் குரல், பிறகு அவன் தொலைபேசி இணைப்பை துண்டித்துக் கொண்டான்,
சத்தம்போடுவதைக் கேட்ட  ஹாவர்ட் உள்ளே வந்தபோது அவள் மேசையின் மீது தலையைக் கவிழ்த்தபடி அழுதுகொண்டிருப்பதைக் கண்டான், தொலைபேசியை எடுத்து அதன் ஓசையை கவனித்தான்,
வெகு நேரத்துக்கு  பிறகு, நள்ளிரவுக்கு சற்று முன்பு, பல விஷயங்களை அவர்கள் செய்து முடித்த பின்பு தொலைபேசி மீண்டும் ஒலித்தது,
“நீ பேசு“ என்றாள் அவள், “ஹாவர்ட், இது அவன்தான், எனக்குத் தெரியும்,“ சமையலறை மேசையில் எதிரில் காபியை வைத்தபடி அவர்கள் அமர்ந்திருந்தார்கள், அவனது கோப்பைக்கு அருகே ஹாவர்ட் ஒரு சிறிய தம்ளரில் விஸ்கியை வைத்திருந்தான், தொலைபேசியின் மூன்றாவது மணியொலிப்பில் அவன் பதிலளித்தான்,
“ஹலோ“ என்றான், “யார் நீங்க? ஹலோ,, ஹலோ“, இணைப்பு துண்டிக்கப்பட்டது, “அவன் வெச்சுட்டான், யாரோ,,“ ஹாவர்ட் சொன்னான்,
“இது அவன்தான்,“ என்றாள், “அந்த பாவிய நான் கொல்லணும், அவனை சுட்டுப் பொசுக்கி அவன் உதைபட்டு விழுகறதை நான் பாக்கணும்“,
“என்ன ஆன்,,“
“உன்னால எதும் கேக்க முடிஞ்சுதா, பிண்ணனியில,, ஒரு மெஷினோட சத்தம், எதுவோ முணுமுணுக்கற மாதிரி,,“
“உண்மையில ஒண்ணுமில்ல, அதுமாதிரி எதும் இல்லையே, கேக்கறதுக்கு அவ்வளவு நேரம் கிடைக்கலை, ஏதாவது ரேடியோ இசையா இருக்கணும்னு நான் நினைக்கறேன், ஆமாம், ரேடியோ பாடிட்டு இருந்துது, அவ்வளவுதான் நான் சொல்ல முடியம், கடவுளின் பெயரால என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியலை“ என்றான் அவன்,
அவள் தலையை ஆட்டினாள், “அவன் மட்டும் என் கையில கிடைச்சான்னா,, “ என்றபோதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது, அது யார் என்று அவளுக்குத் தெரியும், ஸ்காட்டி, கேக், தொலைபேசி எண், மேசையருகிலிருந்து நாற்காலியை பின்னுக்கிழுத்துக் கொண்டு அவள் எழுந்தாள், “ஹாவர்ட், கடைத் தெருவுக்கு என்னை கூட்டிட்டு போ“ என்றாள்,
“என்ன செய்யற நீ?“
“கடைத் தெருவுக்கு போகணும், இப்பிடி கூப்பிடறது யார்னு எனக்கு தெரியும், அது அந்த ரொட்டிக் கடைக்காரன்தான், தேவடியாபய, ஹாவர்ட் நான் அவன்கிட்ட ஸ்காட்டியின் பிறந்த நாளுக்கு கேக் செஞ்சு தரச் சொல்லிருந்தேன், அவன்தான் கூப்பிடறான், அவன்கிட்டதான் நம்ம நம்பர் இருக்கு, கூப்பிட்டுட்டே இருக்கறான், அந்த கேக்கை வெச்சு நம்மள நச்சரிக்கிறான், அந்த ரொட்டிக்கடைக்காரன்தான்,“
வணிகவளாகத்துக்கு  காரை ஓட்டிச் சென்றான், வானம் தெளிந்திருக்க நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கியிருந்தன, குளிராக இருந்தது, காரில் சூடாக்கும் இயந்திரத்தை முடுக்கி இருந்தார்கள், ரொட்டிக்கடைக்கு முன்பாக காரை நிறுத்தினார்கள், எல்லாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன, ஆனால் சினிமா தியேட்டருக்கு முன்பாக இருந்த வாகன நிறுத்தத்தில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன, ரொட்டிக்கடை ஜன்னல்கள் இருட்டாக இருந்தன, ஆனால் அதன் வழியாக உள்ளே பார்த்தபோது பின்கட்டில் விளக்கெரிவதையும் பணி உடுப்பு அணிந்த ஒரு பருத்த மனிதன் வெண்ணிறமான சீரான வெளிச்சத்தில் இங்கும் அங்குமாக நடப்பதையும் பார்க்க முடிந்தது, கண்ணாடி வழியாக பார்த்தபோது பண்டங்களை பார்வைக்கு வைக்கும் பேழைகளையும் நாற்காலிகளுடன் சிறிய மேசைகளையும் பார்க்க முடிந்தது, அவள் கதவைத் திறக்க முயன்றாள், ஜன்னல் கண்ணாடியைத் தட்டினாள், ஆனால் ரொட்டிக்கடைக்காரன் எந்த பதிலையும் தரவில்லை, அவன் அவர்கள் பக்கமாகவே திரும்பவில்லை,
ரொட்டிக்கடையின் பின்பக்கத்துக்கு காரை ஓட்டிச்  சென்று நிறுத்தினார்கள், காரிலிருந்து வெளியே வந்தார்கள், உள்ளே நடப்பதை பார்க்க முடியாத அளவுக்கு உயரத்தில் ஒரு ஜன்னல் விளக்கொளியுடன் இருந்தது, பின்பக்கக் கதவருகே ஒரு பெயர் பலகை இருந்தது, த பாண்டிரி பேக்கரி, ஸ்பெஷல் ஆர்டர்ஸ், உள்ளே ரேடியோ பாடும் சன்னமான ஓசையை அவளால் கேட்க முடிந்தது, ஏதோவொன்று கிரீச்சிடும் சத்தம், கனப்படுப்பின் கதவு இழுபடும் சத்தமா? அவள் கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தாள், பிறகு இன்னும் சத்தமாகத் தட்டினாள், ரேடியோ அணைக்கப்பட்டு இப்போது ஏதோ ஒன்றும் உரசும் சத்தம் கேட்டது, மேசையறையை இழுத்து மூடும் ஓசை,
யாரோ கதவின் தாழ்ப்பாளை நீக்கி திறந்தார்கள், வெளிச்சத்தில் அந்த ரொட்டிக்கடைக்காரன் நின்று அவர்களை பார்த்தான், “இன்னிக்கு வேலை முடிஞ்சுருச்சு, இந்த நேரத்துல உங்களுக்கு என்ன வேணும், நடுராத்திரி ஆயிடுச்சில்ல, நீங்க என்ன குடிச்சிருக்கீங்களா என்ன“ என்று கேட்டான்,
திறந்திருந்த கதவின் வழியாக விழுந்த வெளிச்சத்தில்  வந்து நின்றாள் அவள், அவளை அடையாளம் தெரிந்துகொண்ட அவன் கனத்த இமைகளை இமைத்தபடியே “நீங்களா?-“ என்றான்,
“நான்தான், ஸ்காட்டியோட அம்மா, இது ஸ்காட்டியோட அப்பா, நாங்க உள்ள வரலாமா?“
“நான் இப்ப வேலையா இருக்கேன், எனக்கு நிறைய வேலை இருக்கு“
அவள் உள்ளே போகும் வழியில் நுழைந்திருந்தாள், ஹாவர்ட் அவளுக்கு பின்னாலேயே வந்தான், ரொட்டிக்கடைக்காரன் பின்னகர்ந்தான், “ரொட்டிக்கடை மாதிரி வாசனை வருதில்லை, ஹாவர்ட்“
“உங்களுக்கு என்ன வேணும்“ ரொட்டிக்கடைக்காரன் கேட்டான், “உங்களுக்கு உங்க கேக் வேணுமா, அப்படித்தான் இருக்கணும், உங்களோட கேக்கை எடுத்துட்டு போகணும்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க, நீங்க ஒரு கேக் செய்யச் சொல்லிருந்தீங்க இல்லை,?“
“ரொட்டிக்கடைக்காரரா நீங்க ரொம்ப புத்திசாலிதான்,“ என்றாள் அவள், “ஹாவர்ட், இந்த ஆள்தான் போன்ல கூப்பிட்டுட்டே இருந்தவன்“ அவள் தன் முஷ்டியை மடக்கிக் கொண்டாள், கடும் சினத்துடன் அவள் அவனை முறைத்தாள், அவளுக்குள்ளாக ஆழத்தில் கொதித்திருந்த சினம் தன்னைவிட அவளை பெரியவளாகவும் அந்த ஆட்கள் இருவரையும்விட பெரியவளாகவும் உணரச் செய்தது,
“ஒரு நிமிஷம் பொறுங்க“ என்றான் ரொட்டிக்கடைக்கான், “மூணுநாளுக்கு முந்தி செஞ்ச அந்த கேக்கை நீங்க எடுத்துக்கறீங்களா? அப்படியா? உங்களோட நான் வாதம் செய்ய விரும்பலம்மா, வெளுத்துப்போய் அங்க கெடக்குது பாருங்க, சொன்ன விலையில பாதி விலைக்கு அதை நான் குடுக்கறேன், உங்களுக்கு வேணுமா? வேணும்னா எடுத்துக்குங்க, அது எனக்கும் பிரயோசனமில்லை, வேற யாருக்கும் உதவாது, அதைச் செய்யறதுக்கு எனக்கு நேரமும் காசும் செலவாச்சு, உங்களுக்கு அது வேணும்னாலும் சரி, வேணாம்னாலும் சரி, நான் இப்ப என் வேலையைப் பாக்கணும்,“ அவன் அவர்களைப் பார்த்துவிட்டு தன்னுடைய நாக்கை பற்களுக்கு பின்னால் மடக்கிக் கொண்டான்,
“இன்னும் கேக் வேணும்“ என்றாள் அவள், அவளுக்குள் எகிறிக் கொண்டிருந்த அந்த ஒன்றை அவள் கட்டுப்படுத்திக் கொண்டாள் என்று அவளுக்கு தெரிந்தது, அவள் அமைதியாயிருந்தாள்,
“என்னோட பொழப்புக்காக நான் இங்க ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் வேலை செய்யறேன் அம்மா,“ என்றான் ரொட்டிக்கடைக்காரன், பணிஉடுப்பில் தன் கைகளைத் துடைத்துக் கொண்டான், “செலவை சமாளிக்கறதுக்காக நான் இங்க ராத்திரி பகலா வேலை செய்யறேன்,“ ஆனின் முகத்தை பார்வையை ஓடவிட்டவன் சற்றே பின்னகர்ந்து “ஒண்ணும் பிரச்சினையில்லை இப்ப“ என்றான், மேசையருகில் சென்று வலது கையால் உருட்டுக்கட்டையை எடுத்து அவனது மற்றொரு உள்ளங்கையில் தட்டலானான், “உங்களுக்கு கேக் வேணுமா? இல்லையா? நான் வேலை செய்யணும், ரொட்டிக்கடைக்காரங்க ராத்திரிலதான் வேலை செய்ய முடியும்,“ அவன் மறுபடியும் சொன்னான், அவனது கண்கள் மட்டமாக, சிறுத்திருந்தன, கன்னத்தின் கொழுத்த சதையில் அவை காணாமல் போயிருக்க வேண்டும் என்று அவள் எண்ணினாள், அவனது கழுத்து கொழுப்புடர்ந்திருந்தது,
“ரொட்டிக்கடைக்காரர்கள் ராத்திரில வேலை செய்வாங்கன்னு எனக்குத் தெரியும், ராத்திரிலதான் அவங்க போன் செய்வாங்கன்னும் தெரியும், தேவிடியாமவனே,,“
ரொட்டிக்கடைக்காரன்  உருட்டுக்கட்டையை உள்ளங்கையில் தொடர்ந்து தட்டிக் கொண்டேயிருந்தான, ஹாவர்டை பார்த்த அவன் சொன்னான் “ஜாக்கிரதை,, பாத்து“
“என் மகன் செத்துப் போயிட்டான்,“ உணர்ச்சியற்ற சீரான குரலுடன் அவள் சொன்னாள், “திங்கட்கிழமை காலையில ஒரு கார் மோதிருச்சு, அவன் செத்துப் போற வரைக்கும் நாங்க அவன் பக்கத்துலேயே உக்காந்திருந்தோம், ஆனா அது உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நாங்க எதிர்பாக்க முடியாதுதான், ரொட்டிக்கடைக்காங்க எல்லாத்தையும் தெரிஞ்சுக்க முடியுமா? ஆனா அவன் செத்துட்டான், அவன் செத்துட்டான்டா, பாஸ்டர்ட்“, அவளுக்குள்ளிருந்து எத்தனைக்கெத்தனை ஆவேசத்துடன் வெளிப்பட்ட கோபம் திசைமாறி குமட்டலெடுப்பது போன்ற உணர்வுக்கு இடம் கொடுத்தது, மாவு இறைக்கப்பட்டிருந்த மரத்தாலான மேசையின் மீது சரிந்த அவள் முகத்தை கைகளால் மூடியபடி அழத்தொடங்கினாள், அவளுடைய தோள்கள் முன்னும் பின்னுமாக குலுங்கின, “இது கொஞ்சகூட நியாயமில்லை,,” என்றாள்,
ஹாவர்ட் அவளுடைய இடுப்பின்  பின்பகுதியில் கை வைத்தபடி ரொட்டிக்கடைக்காரனைப் பார்த்தான், “உன்ன நெனச்சா அருவருப்பா இருக்கு“ என்றான்,
ரொட்டிக்கடைக்கான் உருட்டுக்கட்டையை மேசையின் மீது போட்டான், ஏப்ரனை கழற்றி மேசையின் மீது எறிந்தான், அவர்களை பார்த்த அவன் பிறகு மெல்ல தலையாட்டினான், தாட்களையும் ரசீதுகளையும், கூட்டல் இயந்திரத்தையும், தொலைபேசி புத்தகத்தையும் தாங்கியிருந்த மேசையின் கீழிருந்து ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டான், “தயவு செஞ்சு உக்காருங்க“ என்றான், “உங்களுக்கும் ஒரு நாற்காலி தரேன்“ என்றான் ஹாவர்டிம், “இப்ப உக்காருங்க தயவு செஞ்சு“, கடையின் முன்பகுதிக்கு சென்ற ரொட்டிக்கடைக்காரன் இரண்டு சிறிய இரும்பு நாற்காலிகளைக் கொண்டு வந்தான், “உக்காருங்க“
ஆன் கண்களைத் துடைத்துக் கொண்டு ரொட்டிக்கடைக்காரனை பார்த்தாள் “உன்னை நான் கொல்லணும்னு  நெனச்சேன், நீ சாவணும்னு நெனச்சேன் நான்“ என்றாள்,
அவர்களுக்காக ரொட்டிக்கடைக்காரன் மேசையின் ஒரு பகுதியை ஒதுக்கினான், கூட்டல் இயந்திரத்தை காகித அடுக்குகளோடும் ரசீதுகளோடும் ஒருபக்கமாக நகர்த்தி வைத்தான், தொலைபேசி புத்தகத்தை தரையில் போட அது சத்தத்துடன் விழுந்தது, ஹாவர்டும் ஆனும் நாற்காலிகளை மேசைக்கு அருகில் நகர்த்திக் கொண்டு உட்கார்ந்தார்கள், ரொட்டிக்கடைக்காரனும் உட்கார்ந்தான்,
“எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு“ முழங்கைகளை மேசையின் மேல் வைத்துக்கொண்டே ரொட்டிக்கடைக்காரன் சொன்னான், “நா எத்தனை வருத்தப்படறேன்னு அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும், நான் சொல்றதை கேளுங்க, நான் ஒரு சாதாரண ரொட்டிக்கடைக்காரன், நான் வேற பெரிய ஆளுன்னு சொல்லிக்கலை, ஒரு சமயத்துல ரொம்ப வருஷங்களுக்கு முன்னால நான் முழுக்க வேற ஒரு மனுஷனா இருந்தேன், எனக்கு மறந்துருச்சு, எனக்கு சரியா தெரியலை, ஆனா எப்பவோ இருந்திருந்தாலும்கூட இப்ப அப்பிடியெல்லாம் இல்லை, நான் ஒரு சாதாரண ரொட்டிக்கடைக்காரன், அப்பிடி சொல்றதால நான் செஞ்சதுக்கு எனக்கு மன்னிப்பு கிடைக்காதுங்கறது எனக்குத் தெரியும், ஆனா நான் ரொம்ப வருத்தப்படறேன், உங்க மகனுக்காக நான் வருத்தப்படறேன், இதுல என் பங்குக்கு நான் செஞ்சதுக்கும் வேதனைப்படறேன்,“ என்றான் ரொட்டிக்கடைக்காரன், அவன் மேசையின் மீது தன் கைகளை நீட்டி உள்ளங்கைகள் தெரியும்படியாக புரட்டினான், “எனக்குக் குழந்தைகள் கிடையாது அதுனால நீங்க எப்படி கஷ்டப்படுறீங்கன்னு என்னால கற்பனைதான் செய்ய முடியும், இப்ப உங்ககிட்ட என்னால மன்னிப்பு மட்டும்தான் கேக்க முடியும், உங்களால முடியும்னா என்னை மன்னிச்சுக்குங்க“ என்றான், “நான் கெட்டவன் கிடையாது, எனக்கு அப்படி தோணலை, நீங்க போன்ல சொன்ன மாதிரி நான் மோசமானவன் இல்லை, அப்படிப்பட்ட சமயத்துல நான் எப்படி நடந்துக்கணும்னு எனக்கு தெரியலைங்கறதை நீங்க புரிஞ்சுக்கணும், தயவுசெஞ்சு“ என்றான் அவன், “உங்க மனசுல என்னை மன்னிக்க தோணுதான்னு நான் உங்களை கேக்க விரும்பறேன்“
ரொட்டிக்கடைக்குள் புழுக்கமாக இருந்தது, ஹாவர்ட் மேசையிலிருந்து எழுந்து தனது கோட்டை கழற்றினான், ஆனும் கோட்டை கழற்ற உதவினான், ரொட்டிக்கடைக்காரன் இருவரையும் ஒரு நிமிடம் பார்த்தான், தலையசைத்துவிட்டு மேசையிலிருந்து எழுந்தான், அவன் கனப்படுப்பருகே சென்று சில விசைகளை அணைத்தான், கோப்பைகளை எடுத்து ஒரு மின் அடுப்பிலிருந்து காபியை ஊற்றினான், மேசையின் மேல் பாலாடை கட்டியையும் ஒரு கோப்பையில் சர்க்கரையும் வைத்தான்,
“நீங்க ஏதாச்சும் சாப்பிடணும்“ என்றான், “சூடான சில ரோல்களை நீங்க சாப்பிடுவீங்கன்னு நெனக்கறேன். சாப்பிட்டுட்டு தெம்பா இருக்கணும், இது மாதிரி நேரங்களிலே சாப்பிடறதுங்கறது சின்ன, நல்ல காரியம்“ என்றான்,
கனப்படுப்பிலிருந்து அப்போதுதான் வெளியிலெடுக்கப்பட்ட  சூடான இலவங்கப்பட்டை ரோல்களை  பரிமாறினான், பூசப்பட்டிருந்த கிரீம் இன்னும் இளகியே இருந்தது.  மேசையில் வெண்ணையையும் அதை தடவுவதற்கான கத்தியையும் வைத்தான், பினனர் அவன் அவர்களோடு உட்கார்ந்துகொண்டான், அவன் காத்திருந்தான், தட்டிலிருந்து ஆளுக்கொரு ரோல்களை அவர்கள் எடுத்து சாப்பிடும்வரை அவன் காத்திருந்தான், “ஏதாவது சாப்பிடறதுங்கறது நல்லது“ என்றான் அவர்களை கவனித்தபடியே, “இன்னும் இருக்கு, நீங்க சாப்பிடுங்க, வேணுங்கறதை சாப்பிடுங்க, உலகத்துல கிடைக்கற எல்லா ரோல்களுமே இங்க இருக்கு“
அவர்கள் ரோல்களை தின்றுவிட்டு காபியை அருந்தினார்கள், ஆனுக்கு திடீரென்று பசியெடுத்திருந்தது, ரோல்களும் சூடாகவும் ருசியாகவும் இருந்தன, அவள் மூன்று ரோல்களை தின்றது ரொட்டிக்கடைக்காரனுக்கு திருப்தியாக இருந்தது, பிறகு அவன் பேசத் தொடங்கினான், அவர்கள் கவனமாக கேட்டார்கள், அவர்களுக்கு களைப்பாகவும் மனவேதனையுடனும் இருந்தபோதும் ரொட்டிகடைக்காரன் சொன்னதை கவனித்திருந்தார்கள், தனிமையைக் குறித்தும் அவனுக்கு அவனது நடுத்தர வயதில் தோன்றும் சந்தேகங்களையும் போதாமைகளையும் குறித்து சொன்னபோது அவர்கள் ஆமோதித்தார்கள், காலம் முழுக்க குழந்தையில்லாதிருப்பது என்பது எப்படிப்பட்டது என்று அவன் சொன்னான், கனப்படுப்புகளை முடிவில்லாது நிறைத்து பின் முடிவில்லாது காலி செய்வது என்று திரும்பத் திரும்ப செய்வதென்பது எப்படிப்பட்டது என்றும் சொன்னான், விசேஷங்களுக்கான பதார்த்தங்கள் குறித்தும் அவன் சமைத்த கொண்டாட்டங்களைக் குறித்தும் சொன்னான், கேக்கில் மாட்டிக்கொண்ட குட்டியான தம்பதிகளைக் குறித்து சொன்னான், நூற்றுக்கணக்கில் இல்லை இப்போது ஆயிரக்கணக்கில் பிறந்தநாட்கள், அத்தனை மெழுகுவர்த்திகளும் எரிவதை கற்பனை செய்து பாருங்கள், தேவையான ஒரு வியாபாரம் அவனிடம் உள்ளது, அவன் ஒரு ரொட்டிக்கடைக்காரன், அவன் ஒரு பூக்கடைக்காரனாக இல்லாதிருந்ததை எண்ணி அவன் மகிழ்ந்தான், ஜனங்களுக்கு சாப்பிடத் தருவது திருப்தியானது, எந்த நேரத்திலும் பூக்களைவிட இது மேலான வாசனைதான்,
“இத முகர்ந்து பாருங்க“ கறுத்த ஒரு ரொட்டியைப் பிளந்தபடி ரொட்டிக்கடைக்காரன் சொன்னான்,
“இது கனத்த ரொட்டி, ஆனா சத்தானது“, அவர்கள் அதை முகர்ந்துபார்த்தனர், அதை அவர்கள் சுவைத்துப் பார்க்குமாறு செய்தான், வெல்லப்பாகு மற்றும் தானியங்களின் சுவையைக் கொண்டிருந்தது, அவர்கள் அவன் சொன்னதை கவனித்திருந்தார்கள், அவர்களால் முடிந்ததை சாப்பிட்டார்கள், கறுத்த ரொட்டியை விழுங்கினார்கள், பிரகாசமான விளக்கொளியில் அது பகல்  போலிருந்தது, விடிந்தபோதும்கூட, ஜன்னல்களில் பிரகாசமான வெளிச்சம் விழுந்தபோதும்கூட அவர்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள், அங்கிருந்து போவதைப் பற்றிய எண்ணமேயில்லாமல்,

No comments:

Post a Comment

யுவன் - விஷ்ணுபுரம் விருது

  1 இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர் மாதம். அலுவலகப் பயிற்சி நிமித்தமாக புனே சென்றிருந்தேன். அன்று காலை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்ற...