Thursday 1 March 2018

வீழ்த்தப்பட்ட வரலாறு: தமிழ்மகனின் வெட்டுப்புலி


நாவல்களின் காலம் எனக் கொண்டாடப்படும் கடந்த பத்தாண்டுகளில் தமிழில் ஏராளமான புதிய நாவல்கள் வெளியாகியுள்ளன. புதிய நாவலாசிரியர்கள், புதிய களங்கள், புதிய கதைகள் என நாவல் வெளி திடமும் விரிவும் பெற்றுள்ளது. ஒரு எளிமையான குடும்பக் கதையை தட்டையான மொழியில் நாவல் என இன்று யாரும் எழுதிவிட முடியாது. இவ்வாறான ஒரு நிலையில் தமிழில் அரசியல் நாவல்கள் குறித்த ஒரு கேள்வி எழுகிறது. சமூக வரலாறு மானுடவியல் வரலாறு என விரிவான தளங்களில் தமிழ் நாவல்கள் புதிய தேடல்களை கேள்விகளை சாத்தியங்களை முன்வைத்திருக்கும்போது, அரசியல் களத்தை மையமாகக் கொண்ட நாவல்கள் இன்னும் முயற்சிக்கப்படவில்லையோ என்ற ஒரு கேள்வி எழுகிறது.
பி.ஏ கிருஷ்ணனின் “புலிநகக் கொன்றை“, “கலங்கிய நதி“ ஆகிய இரண்டு நாவல்களையும் அரசியல் நாவல்கள் என்று குறிப்பிட முடியும். இந்த வரிசையில் தமிழ்மகனின் “வெட்டுப்புலி“ நாவல் முக்கியமானது.
image1
“வெட்டுப்புலி“ தீப்பெட்டியில் உள்ள படத்தின் கதையை தேடும் முகமாக, தமிழகத்தின் சினிமா வரலாற்றையும் அரசியல் வரலாற்றையும் இந்த நாவல் சித்தரிக்க முனைந்துள்ளது. அல்லது ஒரு முதலியார் குடும்பத்தின் தலைமுறைகளின் வாழ்க்கை, இன்னொரு வன்னியர் குடும்பத்தின் தலைமுறைகளின் வழியாக தமிழக வரலாற்றை பின்நோக்கிப் பார்க்க முயற்சித்திருப்பதாகவும் சொல்லலாம்.
திராவிடக் கட்சிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக அரசியல், அந்த அரசியலை தொடர்ந்து ஆக்கிரமித்துவரும் சினிமா ஆகிய இரண்டுமே ஒருமித்த குணாம்சங்களைக் கொண்டிருப்பவை. வெற்றியடைபவர்கள், வெளிச்சத்துக்கு வருபவர்கள் ஒரு சில தனி நபர்கள். ஆனால் பலியாவதும் நசுக்கப்படுவதும் கணக்கிலடங்காத எண்ணிக்கையில். யார் எப்போது எப்படி வெற்றியடைகிறார்கள், யார் காணாமல் போவார்கள் என்பது யாராலும் தீர்மானிக்க முடியாத, தீர்க்க முடியாத புதிர். இரண்டிலும் காரண காரியங்களுக்கு பொருளெதுவும் கிடையாது. ஆனால் இவ்விரண்டு துறைகளும் சாத்தியப்படுத்தும் புகழும் செல்வமும் யாரையும் சபலப்படச் செய்யுமளவு அளப்பரியது. மேலும், இரண்டிலும் வெற்றி பெற்றதற்கு இதற்கான முயற்சிகளைக் குறித்து ஆயிரம் கதைகளையும், காரணங்களையும் சொல்ல முடியும். விதந்தோதுவார்கள். கேட்பதற்கென்று ஒரு கும்பல் இருக்கும். தோற்றுப்போகும் லட்சக்கணக்கானவர்களது கண்ணீரும் உழைப்பும் பொருட்படுத்துவாரில்லாது காணாமலே போகும்.
1930 கள் தொடங்கி 2009 வரையிலான பெரும் காலப்பரப்பை உள்ளடக்கியது இந்த நாவல். ஜஸ்டிஸ் கட்சியின் தொடக்கம் முதல் இன்றைய அ.தி.மு.க, ம.தி.மு.க வரையிலான திராவிடக் கட்சிகளின் பல்வேறு பரிணாமங்களை நாவல் தொட்டுச் செல்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இல்லாத ஒரு தனிப்பட்ட குணாம்சம் தமிழக அரசியலுக்கு உண்டு. சினிமா என்கிற ஊடகமே தமிழக அரசியலைத் தீர்மானிக்கிற பெரும் சக்தியாக நீண்டகாலமாக தொடர்ந்து நிலைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியை ஆந்திர அரசியலிலும் காண முடிகிறது. தேசிய அளவிலான பெரும் கட்சிகளோ, பொதுவுடமைக் கட்சிகளோ தலை தூக்க முடியாத அளவுக்கு சினிமாவின் ஆதிக்கம் வேரூன்றியுள்ளது. காலவோட்டத்தில் வெட்டுப்புலி தீப்பெட்டி கொள்ளும் மாற்றங்களைப் போலவே திராவிடக் கட்சிகளின் கொள்கைகளும் பெருமளவு விலகி பதவிக்காக, ஆட்சிக்காக என்று நலிவுற்றதை நாவல் நுட்பமாக சித்தரித்திருக்கிறது.
அண்ணாவில் தொடங்கி கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என தமிழக திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் நாடகம், சினிமா வழியாக உருவெடுத்ததோடு முதலமைச்சர்களாக பதவியும் வகித்தார்கள். 1967ல் தொடங்கி இன்றளவும் தமிழகத்தில் திராவிடக் கட்சி அல்லாத ஒன்று பதவிக்கே வரமுடியாதபடியான வலுவான செல்வாக்கை மக்களிடத்தில் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர்கள் ஆட்சி நடத்தினார்களா? என்பதைவிட தொண்டர்களின், அபிமானிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப கட்சியும் தலைவர்களும் நடந்து கொண்டார்களா என்ற விசாரணையிலேயே நாவல் கவனம் செலுத்தியுள்ளது. பெரியாரின் ஆளுமை தமிழக அரசியல் தளத்திலும் சமூக பரப்பிலும் ஏற்படுத்தியுள்ள வலுவான மாற்றங்களை விரிவான அளவில் நாவல் விவாதிக்கிறது. ஆனால் அவருடைய கொள்கையிலிருந்து விலகி ஆட்சிக்கு வந்த அண்ணாவையும், பிறகு எம்.ஜி.ஆரைப் பற்றியும் ஜெயலலிதா பற்றியும் விமர்சனங்களை நாவலில் காண முடிகிறது. ஆனால் நாவல் எடுத்துக் கொண்ட காலகட்டத்தில் 5 முறை ஆட்சியிலிருந்த தி.மு.க பற்றியோ, கருணாநிதியைப் பற்றியே ஆழமான விமர்சனங்கள் ஏனோ நாவலில் இடம்பெறவில்லை. நாவலில் வரும் நடேசன் என்கிற கதாபாத்திரத்தைப் போல தமிழ்மகனும் தி.மு.க அனுதாபியோ என்ற சந்தேகம் எழுகிறது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியே தமிழக அரசியல் வரலாறு என்று சொல்லுமளவுக்கான ஆதிக்கத்தை அவை செலுத்திய நிலையில் திமுகவின் ஏறக்குறைய 20 ஆண்டுகால ஆட்சியைக் குறித்த மதிப்பீட்டை அல்லது விமர்சனத்தை அத்தனை சுலபமாக ஒதுக்கிவிட முடியாது.
திராவிடக் கட்சிகள் மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற முக்கிய காரணியாக அமைந்தது சினிமா என்கிற வலுவான ஊடகம். தொடக்கத்தில் வசனங்கள் வழியாகவும் பிறகு எம்.ஜி.ஆர் என்கிற நடிகரின் மூலமாகவும் திராவிடக் கட்சிகள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து தமிழகம் இன்றளவும் மீளவில்லை. சினிமாவின் தொடக்க கால முயற்சிகளையும் அது தொழிலாக உருப்பெற்றதைப் பற்றிய குறிப்புகளையும் நாவல் துல்லியமாக பதிவு செய்துள்ளது. காலவோட்டத்தில் அது ஏற்றுக் கொண்ட பல்வேறு மாற்றங்களையும் சித்தரித்துள்ளது.
அரசியலிலும் சினிமாவிலும் இலக்கிய அளவில் பதிவு செய்திருக்காத பல செய்திகளை சம்பவங்களை குறிப்புகளை நாவலில் காண முடிகிறது. தமிழ் நாவல்கள் இதுவரையிலும் கணக்கிலெடுத்துக் கொள்ளாத பல அரசியல் திருப்பங்களை போகிறபோக்கில் நாவல் சுட்டிச் செல்கிறது. வெட்டுப்புலி தீப்பெட்டியின் கதையை தேடி அடைவதுபோல தமிழக வரலாற்றுச் சுவடுகளையும் நாவல் தேடித் தந்துள்ளது.
சினிமாவுக்கு ஆசைப்பட்டு தொலைந்துபோன தலைமுறையின் அடையாளமாக சிவகுருவும், அரசியல் தலைவர்களது கண்மூடித்தனமான தொண்டனாக பின்தொடர்ந்து சிதிலமடையும் அடையாளமாக தியாகராசனும் நாவலில் மையம் கொண்டுள்ளனர். சினிமா எடுக்கப்போன சிவகுரு பாதை தவறி செல்வம் இழந்து, நோயுற்று பிச்சைக்காரனாய் தெருவில் கேட்பாரற்று செத்துப்போகிறான். அண்ணாவின் உண்மைத்தொண்டனாய் கொள்கைப் பிடிப்போடு வாழ முனையும் தியாகராசனின் மணவாழ்க்கை அவனை புரட்டிப் போட, அவலங்களின் அத்தனை நிறங்களையும் கண்டுணர்ந்து பின், ‘அன்னை‘யின் பக்தனாக மனந்திருந்தி மனைவியுடன் வாழத் தொடங்குகிறான்.
சினிமாவின் வெற்றிக்குப் பின்னால் ஆயிரமாயிரம் சிவகுருக்களின் மரணமும் வீழ்ச்சியும் வெகு சாதாரணமானவை. அதேபோல, தியாகராசன் போன்ற தனிமனிதனின் வீழ்ச்சியும் நசிவும் ஒரு பெரும் அரசியல் கட்சியின் பயணத்தில் பொருட்டே இல்லாத ஒன்று. வரலாறு என்பது எப்போதும் வென்றவர்களின் கதைகளையே முன்னிறுத்துகிறது. ஆனால் இலக்கியத்தின் கண் எப்போதும் சிவகுருவையும், தியாகராசனையுமே பின்தொடர்ந்திருக்கும்.
இவ்விரண்டு மையங்களையும் இணைக்கும் சரடாக அமைந்திருக்கும் வெட்டுப்புலி தீப்பெட்டியின் கதை வழியே நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் இடம்பெற்றிருக்கும் லட்சுமண ரெட்டி நாவல் உத்தேசித்திருக்கும் எல்லா சமூக மாற்றங்களுக்கும் காலத்தின் சாட்சியாக நிற்கிறார். ஜாதி ஒழிப்பு, பிராமண எதிர்ப்பு, பெண் கல்வி, ஊழலுக்கெதிரான குரல், இயற்கையை பாதுகாக்கவேண்டும் என்ற கரிசனம் என எல்லா தரப்புகளுக்கும் லட்சும ரெட்டியார் கதாபாத்திரமே முன்னிற்கிறது.
image2ஒரு நேர்மையான, மேலான இலக்கியப் படைப்பின் பணி என்பது காலங்காலமாக முன்வைக்கப்படுகிற வரலாற்றின் உள் அடுக்குகளில் மறைந்து கிடக்கும் உண்மைகளைக் குறித்த தேடல்தான். இதுவரையில் அறியப்படாத உண்மைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே அதன் இலக்காக இருக்கும். ‘வெட்டுப்புலி‘ கதையின் வேர்களை நோக்கி மிக வலுவாக நகரும் ஒரு சரடு உண்மைக்கு மிக அருகில் சென்றுள்ளது என்பதை முன்னுரையில் வாசக சுதந்திரத்திற்கு விடப்பட்டுள்ள பகுதியிலிருந்து நம்மால் உத்தேசிக்க முடிகிறது. ஆனால் அரசியல் வரலாற்றுச் சித்தரிப்பில் அது முழுமையாக இல்லை. உதாரணமாக தமிழ் ஈழம் குறித்த விவகாரங்களில் எம்.ஜி.ஆரின் தரப்பை உரத்துச் சொல்லும் நாவல், திமுகவின் நிலைப்பாட்டைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. ஈழப்போரின் இறுதி கட்டத்தில், ஆட்சியில் இருந்த கருணாநிதியின் போக்கை எந்தவிதமான விசாரணைக்கும் நாவல் உட்படுத்தவில்லை. இன்னொரு உதாரணமாக, முந்தைய திமுக ஆட்சிகாலத்தில் சினிமா தொழிலை முற்றுமுழுதாக தனது குடும்ப ஆதிக்கத்துள் கொண்டுவந்த திமுக தலைமை குறித்தும் நாவல் கண்டுகொள்வதில்லை.
தமிழக அரசியல் களமெனும் புலியை திராவிடக் கட்சிகள் சினிமா எனும் வெட்டரிவாள் கொண்டு வீழ்த்திய வரலாறுதான் வெட்டுப்புலி என்றும் உருவகமாகக் கருத இந்த நாவலில் சாத்தியங்கள் ஏராளமாக உள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றை, அதில் சினிமாவின் ஆதிக்கத்தை மையப்படுத்திய ஒரு விரிவான, தகவல் செறிவமைந்த படைப்பு என்ற அளவில் வெட்டுப்புலி பொருட்படுத்தத்தக்க ஒன்று. ஆனால் ஒரு நாவல் என்ற அளவில், அதனுடைய சாத்தியங்களையும், பேணியிருக்க வேண்டிய சமநிலைத்தன்மைகளையும் கருத்தில் கொள்ளும்போது இன்னும் ஆழம் பெற்றிருக்க வேண்டிய ஒன்று என்றே கருதத் தோன்றுகிறது.
( 25,11,2012 அன்று கோவை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ்மகனின் படைப்புலகம் பற்றிய கூட்டத்தின் போது வாசிக்கப்பட்ட விமர்சன உரையின் எழுத்து வடிவம் ) (சொல்வனம் இதழ் 79 | 25-12-2012)

No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...