நிர்மல் வர்மாவின்
'சிகப்புத் தகரக்
கூரை'
தமிழில் : எம். கோபாலகிருஷ்ணன்
- பி.ஏ.கிருஷ்ணன்
அக்டோபர் 2005ம் ஆண்டில் நான் பெரிதும் மதித்தவர்களில் இருவர் மறைந்தனர். ஒருவர் சுந்தரராமசாமி. மற்றவர் நிர்மல்வர்மா. இருவரும் எனது நெருங்கிய நண்பர்கள். நான் எழுதியதைப் படித்து எனக்கு அறிவுரை வழங்கியவர்கள். நான் நிர்மல் வர்மாவைக் கடைசியாகச் சந்தித்தது மே 2005ம் ஆண்டு என எண்ணுகிறென். அவருக்கு என்றுமே உடல் நலம் சரியாக இருந்ததில்லை. நான் பார்த்த போது இறங்கு முகம். ஆனாலும் இரண்டு மணி நேரம் என்னோடு பேசினார். ஹோகார்த் என்ற ஓவியரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நினைவு. சுராவையும் கடைசியில் சந்தித்த தமிழ் எழுத்தாளன் நான் தான். வயதான எழுத்தாளர்களைச் சந்திக்கவே சில வருடங்கள் பயமாக இருந்தது. இப்போது எனக்கும் வயதாகி விட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.
நிர்மல் வர்மா எனக்கு மற்றொரு வகையில் முக்கியமானவர். நான் அவரை நேர்காணல் செய்து ஆங்கிலத்தில் பதிவு செய்தது தமிழில் காலச்சுவடு இதழில் வெளியானது. அதுவே தமிழில் எழுதி வெளியான முதற்படைப்பு என்று எண்ணுகிறேன். இந்தப்புத்தகம் தமிழில் வந்ததற்கும் நானும் ஒரு காரணம் என்று சொல்லிக் கொள்ளலாம்.. காலச்சுவடு கண்ணன் நிர்மல் வர்மாவின் எந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்கலாம் என்று கேட்டபோது நான் சிவப்புத் தகரக் கூரையைப் பரிந்துரைத்தேன்.
எனது மற்றொரு நெருங்கிய நண்பரான் உபேந்திரகுமார் - இந்திக்கவிஞர் காலச்சுவடு இதழுக்கு எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"ஒரு எழுத்தாளராகவே வாழ்க்கையை வாழ்ந்து முடித்த அவர் தனது வறுமையைப் பற்றி அதிகம் பேசாதவர். அவரைச் சுற்றி ஒரு மௌனம் எப்போதும் வழ்ந்துக் கொண்டிருந்தது. அவரது கதைகள் வாழ்க்கையின் மேடு பள்ளங்களையும் ஆணுக்கும் பெண் மீது இருக்கும் மயக்கத்தையும் வாழ்வு ஒருநாள் எதிர்பாராமல் முடிந்துவிடும் பயங்கரத்தையும் பற்றிப் பேசுகின்றன. கதைகளில் பல மனித ஒழுக்கம் சார்ந்தவை. ஆனால் அவை இன்று பரவலாகக் காணப்படும் ஒழுக்கக் குழப்பங்களுக்கு பதில் சொல்கிறேன் என்று கூறுவதில்லை. மாறாக நமக்கு அவற்றைப் பற்றி ஒரு அறிதலைக் கொடுக்கின்றன. அவை நம் மீது செலுத்தும் வன்முறையைப் பற்றிப் பேசுகின்றன."
சிகப்புத் தகரக்கூரையும் வன்முறையைப் பற்றிப் பேசுகிறது. நாம் நமக்கே தெரியாமல் பிறர் மீது செலுத்தும் வன்முறையைப் பற்றி. குறிப்பாகப் பருவத்தில் வாயிலில் நின்று கொண்டு உள்ளே வரத் தயங்கிக் கொண்டிருக்கும் பெண் குழந்தைகள் மீது செலுத்தப்படும் வன்முறையைப் பற்றி. சிவப்பு என்பதே குருதியைக் குறிக்கிறது. பெண்கள் ஒவ்வொரு மாதமும் சிந்தும் குருதி.
நிர்மல் வர்மாவிற்கு தனது குழந்தைப் பருவத்தைச் சிம்லாவில் கழித்தவர். சிவப்புத் தகரக் கூரையின் கதைத்தளம் சிம்லாவில் நிகழ்கிறது. ஆனால் அது அவர் வாழ்ந்த சிம்லா அல்ல. சுதந்திரத்திற்கு பிந்தைய சிம்லா. அமைதி அழியாத சிம்லா. மரங்களும் செடிகளும், பறவைகளும் நாங்களும் இருக்கிறோம் என்று விடாமல் அறிவித்துக் கொண்டிருந்த சிம்லா. நிர்மல் வர்மா தில்லியின் கரோல்பாக் பகுதியில் ஆஸ்பஸ்டாஸ் கூரையின் கீழ் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை வாழ்ந்தவர். சுட்டெரிக்கும் தில்லி வெய்யிலில் சிம்லாவின் இதமான குளிரையும், விட்டு விட்டுப் பெய்யும் பனிமழையையும் நினைவில் நிறுத்திக் கொண்டு இந்தக் கதையை எழுதியிருக்க வேண்டும். சிம்லாவில் இல்லாமல் போய்விட்டோமே என்று கதை எழுதியவர் வருந்துவதை அவரது சொற்கள் பேசுகின்றன.
கதை காயா என்ற பெண்ணைப் பற்றியது. அவள் வீட்டை விட்டு விடுதிக்குச் செல்வதில் தொடங்குகிறது. கதை முன்னும் பின்னும் நகர்ந்து கடைசியில் அவள் பூப்பெய்தும் தருணத்தில் முடிகிறது. காயாவுடன் சேர்த்து கதையில் ஏழு பெண்கள் வருகிறார்கள். முதலாவது காயாவின் அம்மா வயிற்றில் குழந்தையைச் சுமந்து கொண்டு படுக்கையை விட்டு இறங்கத் தயங்கும் நிலையில் இருக்கிறார். இரண்டாவது அவளது அத்தை மகள் வயதானவர் ஒருவரை மணக்க வற்புறுத்தப்பட்டு, எதிர்க்க நினைத்தும் எதிர்க்க முடியாத நிலையில் இருக்கிறார். மூன்றாவது அவளது அத்தை. சிறிது தைரியமானவர். அவரைக் கண்டால் ரிக் ஷாகாரர்கள் கூட ஓட்டம் எடுக்கின்றனர். ஆனால் அவரும் மற்றவரைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை. நான்காவது காயாவின் அன்னைக்குப் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி. ஐந்தாவது அவளது சித்தப்பாவின் ஆசைநாயகியான புல்லாக்குக்காரி. இந்தியப் பெண்கள். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாயம். அந்தக் கட்டாயம் அவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை நாவல் தேர்ந்த சில னரிகை வீச்சுக்களில் சித்தரிக்கிறது. இவர்களுக்கு நேர்முரணாக திருமதி ஜோஷுவா என்ற ஆங்கிலப் பெண்மணி. கணவனோடு நாடு திரும்பாமல் சிம்லாவிலேயே தங்கியிருக்கும் பெண். தனது வாழ்வை எவ்வாறு வாழ வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கொண்டவர் அவர் ஒருவரே. ஆனால் அவரது வாழ்வும் இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் இரண்டுங்கெட்டானாக இருப்பதை அவரது வீட்டு வாசலில் சரியாகச் சுவரோடு அசையாமல் இருக்க ஆணி அறையப்படாமல் ஊசலாடும் தபால்பெட்டி நமக்கு உணர்த்துகிறது. காயா இவர்கள் இடையே வாழ்கிறாள். கதையும் அவள் மூலம் நமக்குச் சொல்லப் படுகிறது. தந்தைக்குத் தில்லியில் வேலை. தாயின் மகப்பேற்றின் போது அருகில் இருக்க முடியாத நிலைமை. குழந்தை இறந்து பிறப்பதை காயா பார்க்கிறாள். கால்களுக்கு இடையே இருந்து வரும் மாமிசப் பிண்டம் அவள் மனதில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. கதையில் வரும் எந்த ஆணும் வாழ்வின் சமன்பாட்டை அடைந்தவர்களாகத் தெரியவில்லை. எல்லோரையும் சொந்தப் பிசாசுகள் துரத்திக் கொண்டிருக்கின்றன.
நிர்மல் வர்மா இந்தக் குழப்பங்களை ஒரு குழந்தையின் பார்வையில் கூற முயன்று பெருமளவு வெற்றி அடைந்திருக்கிறார். ஆனால் பல இடங்களில் குழந்தையின் குரலில் அவரே பேசுகிறார். நாவலில் குறை என்றால் அது இந்த இடங்கள் தான்.
நிர்மல் தனது நேர்காணலில் சொல்கிறார் 'மனிதன் விநோதமானவன். அவன் தனியாக இருக்கும் போது பிறரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். அவன் பிறருடன் இருக்கும் போது தன்னைச் சுருக்கிக் கொள்கிறான்'. இந்த நாவல் முழுவதும் இந்த நினைவுகளும் சுருக்க்கிக் கொள்ளும் முயற்சிகளும் மாறி மாறி வருகின்றன. திறந்த மனதோடு கூடிய வரையில் இயங்குபவர் திருமதி.ஜோஷுவா ஒருவர் தாம். அவரும் கதைச்சட்டத்தின் விளிம்பில் இருந்து தான் இயங்குகிறார்.
எனக்கு இந்தி ஓரளவு படிக்கத் தெரியும். மொழிபெயர்த்த நண்பர் கோபாலகிருஷ்ணனுக்கு இந்தி நிச்சயம் என்னை விட அதிகம் தெரியும். எனவே அவரது மொழிபெயர்ப்பு அசலை ஒட்டியிருக்கிறதா என்பது பற்றிச் சொல்லும் தகுதி எனக்குக் கிடையாது. ஆனால் நிர்மல் வர்மாவின் இந்தியில் ஒரு மயக்கம் தரும் தன்மை இருக்கும். அதே தன்மை இந்த மொழிபெயர்ப்பில் இருக்கிறது. உதாரணம் ஒன்று தருகிறேன்:
"மூலையில் நின்றபடி அவள் அவற்றை உற்றுப் பார்த்தாள். லாமாவின் காலணிகள் கிடக்கும் மூலை இப்போது காலியாக இருந்தது. முழுக்க காலியாகவும் இல்லை. இப்போது அங்கே புழுதியின் கனத்த படலம் படிந்திருந்தது. யாராவது எந்த இடத்திலிருந்தோ அல்லது ஏதாவது ஒரு அறையிலிருந்தோ போய் விட்ட பின்பு அந்த இடம் காலியாகி விடுவதில்லை என்பது அவளுக்கு எப்போதுமே ஒரு புரியாத விஷயமாகவே உள்ளது. காற்றிலும் புழுதியிலும் அசைகிற ஒரு விதமான சிலந்தி வலை அங்கே படிந்து விடுகிறது. அது கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் எப்போதாவது தெரியாமல் அது அவளை சூழ்ந்து விடுகிறது. காயா அதில் சிக்கிக் கொள்ளும் போது லாமாவும் அங்கே ஏதோ ஒரு இடத்தில் இருக்கக் கூடும் என்று அவளுக்குத் தோன்றும். அவள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் வேறு யாரும் அவளை பார்க்க முடியாது."
மொழிபெயர்ப்புக்கென்றே ஒரு தனிமொழியை தமிழ் அமைத்துக் கொண்டிருக்கிறது என்று இங்கு சொல்லியாக வேண்டியிருக்கிறது. வாசகனை அன்னியப்படுத்துவதில் அது பெரும் சாதனை படைத்திருக்கிறது. ஆனால் நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது. தமிழ்மொழியை நேர்த்தியாக கையாளத் தெரிந்த படைப்பாளிகள் மொழிபெயர்ப்புச் செய்ய முற்பட்டிருப்பது நமது மொழியை வலுவாக்குவதோடு அதன் வாசகர்களுக்கு பல சாளரங்களைத் திறந்து விட வகைசெய்யும். கோபாலகிருஷ்ணன் தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர். அவரது திறமை தடையற்றுப்பாயும் இந்த மொழிபெயர்ப்பில் பளிச்சிடுகிறது.
நிர்மல் வர்மாவின் நேர்காணல் தமிழில் வந்த போது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த மொழிபெயர்ப்பைப் பார்த்திருந்தால் அவர் மனம் நிறைந்து ததும்பி இருக்கும்.
சிவப்புத் தகரக்கூரை - நிர்மல் வர்மா;
தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன்.
விலை.ரூ.225.00 காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை,
நாகர்கோவில்.
கபாடபுரம் இதழ் 3
No comments:
Post a Comment