Sunday 11 March 2018

யாரும் யாருடனும் இல்லை   

ஜூம்பா லஹரி               
Related image
சேங்கை மணந்துகொள்ள விரும்புவதாக அடிக்கடி யாராவது ஒருவர் தொலைபேசியில்   அழைத்துச் சொல்கிறார்கள். இந்த ஆசாமிகள் யாரென்றே பொதுவாக சேங்கிற்கு தெரியாது. சில சமயங்களில் அவர்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூடமாட்டாள். ஆனால் அவர்களுக்குத் தெரியும் இவள் அழகானவள், புத்திசாலி, முப்பது வயதானவள், வங்காளி, இன்னும்மணமாகாதவள் என்று.  எப்படியாவது அவளுக்கு கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்று தவித்துக்கொண்டிருக்கும் அவளது பெற்றோர்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவருக்குத்தெரிந்தவர்களிடமிருந்து இந்த ஆட்கள், இவர்களின் பெரும்பாலானோர் ங்காளிகள், இவளுடைய தொலைபேசி எண்ணைப் பெற்றுவிடுவார்கள். சேங்கைப் பொறுத்தவரை இந்த ஆட்கள் அனைவருமே குழப்பமான தகவல்களுடனே அவளிடம் பேசுகிறார்கள்.
அவள் இயற்பியலில் பயின்றவளென்று அறிந்திருப்பதாய் சொல்வார்கள், உண்மையில் அவள் தத்துவம் பயின்றவள்.  கொலம்பியபல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவள் என்பார்கள், அவள் பட்டம் பெற்றதோ நியூயார்க் பல்கலைக்கழகத்தில். உண்மையில் அவளை எல்லோரும் சேங்க் என்றே அறிந்திருக்கும்போது அவர்கள் அவளை சங்கீதா என்று அழைத்தார்கள். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் அவள் முனைவர் பட்டம் பெற்றவளென்று அவர்கள்அகமகிழ்ந்தார்கள். உண்மையில் ஹார்வார்டில் ஒரு செமஸ்டரில் தேர்ச்சியடையாமல் வெளியேறி சதுக்கத்தில் உள்ள ஒரு புத்தகக்கடையில் பகுதிநேர ஊழியராக வேலைசெய்து கொண்டிருக்கிறாள்.   சேங்குடன் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்கும் பாலும் ஹீதரும் அவளுடைய மாப்பிள்ளையாக விரும்பும் யாராவது ஒருவர் தொலைபேசியில் அழைக்கும்போது கூப்பிட்டுச் சொல்வார்கள். சேங்க் போலி வால்நட்டாலான சமையலறை மேடையருகில் உட்கார்ந்தபடி சிலசமயம் பச்சையாகத் தெரியும் சாம்பல் நிறக்கண்களை உருட்டியபடியே ‘ஓ, ஹாய்’  என்பாள். பயணம் செய்துகொண்டிருக்கும் பாதாள ரயில் பாதி வழியில் நின்றுபோய்விட்டதில் கவலைகொண்டவள் போல் அதே சமயம் அலட்டிக்கொள்ளாமலும் நாற்காலியில் சரிந்திருப்பாள். இந்த ஆட்களிடம் சேங்க் எப்போதுமே சிடுசிடுத்ததில்லை என்பது பாலுக்கு சற்றே ஏமாற்றம் அளிப்பதாயிருந்தது. அவர்களுக்கிடையேயான சிக்கலான தொலைதூர சொந்தங்களையும் தொடர்புகளையும் அவர்கள் சிரமத்துடன் விளக்கும்போது அவள்  கவனித்துக் கொண்டிருப்பாள். சேங்குடன் அந்த வீட்டையும் சமையலறையையும் ‘குளோப்’ பத்திரிக்கைக்கான ஆண்டு சந்தாவையும் பகிர்ந்துகொண்டபோதும் கூட பால் இன்னதென்றில்லாமல் பொறாமையடைந்தான்.
இந்த வரன்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மாதிரி தொலைவான இடங்களிலிருந்தும் இதோ பக்கத்திலிருக்கும் வாட்டர்டவுனிலிருந்தும்கூட அழைப்பதுண்டு. ஒருமுறை இவர்களில் ஒருவரை சந்திக்க சம்மதித்து அவன் வேலைசெய்யும் நகராட்சிக்கு அருகிலிருக்கும் ஐ/93 வரை காரில் அழைத்துக்கொண்டு போய் பிறகு டுன்கின் டோலருக்கும் கூட்டிக்கொண்டுபோய் அங்கே குராலர்சும் காபியும் சாப்பிடும்போது தன்னுடைய எண்ணத்தை சொன்னதாக சேங்க் ஒருமுறை பாலிடமும் ஹதரிடமும் சொல்லியிருக்கிறாள்.     சிலசமயங்களில் இவ்வாறான தொலைபேசி உரையாடல்களின்போது சேங்க் அருகிலிருக்கும் தகவல்தாளில் குறிப்பெடுத்துக்கொண்டிருப்பாள். அந்த ஆளின் பெயரை எழுதுவாள். அல்லது ‘கார்னிகி மெலான்’ என்றோ ‘பேய்கதைகள் பிடிக்கும்’ என்றோ எழுதுவாள். போகப்போக எழுத்து கிறுக்கலாகி நட்சத்திரங்களாகி  டிக்டேக்டோ விளையாட்டாக மாறிப்போய்விடும். உள்ளபடியே அவள் சில கேள்விகளையும் கேட்கத்தான் செய்தாள் ‘ஒரு பொருளாதார நிபுணராகவோ அல்லது பல் மருத்துவராகவோ அல்லது ஒரு கனிமப் பொறியாளராகவோ தன் பணியில் அவன் சந்தோஷமாக இருக்கிறானா?’ என்பது போன்று. அவர்களை அவள் தவிர்ப்பதற்கும், அந்த நபர்கள் அவளை ஒரு மாலை நேர விருந்துக்கு அழைக்கும்போதெல்லாம் அதை மறுப்பதற்கும் அவள் எப்போதும் சொல்லும் சாக்கு, ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பயில்வதால் அவள் தற்சமயம் வகுப்புகளில் கவனமாயிருக்கிறாள் என்கிற பொய்தான். சில சமயங்களில் அருகில் பால்  இருக்க நேர்ந்தால் பேசிக்கொண்டே ‘பனிரண்டு வயசுப் பையன் மாதிரி பேசறான், ஒரே அறுவை, இந்த ஆள் ஒரு முறை எங்க வீட்டு நீச்சல் குளத்தில் விழுந்துருக்கான்’ என்று தாளில் எழுதி காதில் தொலைபேசியை இருத்தியபடியே குறிப்பேட்டை பாலிடம் நகர்த்திவிடுவாள்.   தொலைபேசியை வைத்தபிறகுதான் சாங் எப்போதும் புலம்புவாள். இவனுக எப்பிடி என்னைக் கூப்பிட்டு பேசறானுங்க? என்பாள். என்ன தைரியத்துல இப்பிடி தொரத்தி தொரத்தி போன் பண்றாங்க? அவளுடைய தனிப்பட்ட சுதந்திரத்தை தொந்தரவு செய்வதாகவும் அவளுடைய பருவத்தை  கேலி செய்வதாகவும் அது இருந்தது.  பெரிய துன்பம்தான்.
அவளது புலம்பல்களை பாலும் ஹீதரும் கேட்டும் கேட்காதது   போல  இருந்துவிடுவார்கள். ஹீதர் மட்டும் எப்போதாவது கேட்பதுண்டு ‘கடவுளே, என்ன சேங் இது? இப்பிடி பொலம்பறத என்னால நம்பவே முடியலே. ஏகப்பட்ட பேர் ஒவ்வொருத்தனும் வசதியா இருக்கறவங்க, அழகானவங்களாக்கூட இருக்கலாம், உன்னப்பாக்காமயே கல்யாணம் பண்ணிக்கறேங்கறாங்க. நீ  என்னடான்னா இதுக்காக உன்ன நெனச்சு நாங்க வருத்தப்படனும்னு நெனக்கறே?’ பாஸ்டன் கல்லு¡ரி மாணவியான ஹீதர் ஐந்தாண்டுகளாக கசப்பான தனிமையில் வசிப்பவள். இந்த வரன்கள் எல்லாமே காதல்வயப்பட்டவையாய் இருப்பதாக அவள் சொன்னபோது சேங்க் மறுத்துத் தலையாட்டியபடியே சொன்னாள் ‘இது காதல் இல்லை.’ அவளைப் பொறுத்தவரையில் உண்மையில் இது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். இந்த வரன்கள் எவர்க்கும் உண்மையில் அவளைப்பற்றி பெரிய அபிப்ராயமெல்லாம் ஒன்றுமில்லை. அவளை பரதநாட்டிய வகுப்புகளிலிருந்து உருவான ஒரு கச்சிதமான போஸ்டர் பெண்ணாகவும், பொருத்தமான பெண்ணாகவும் நினைத்துக்கொண்டிருக்கும் இந்திய சமூகத்தைச்சார்ந்த, அவள் மீது அக்கறைகொண்ட ஒரு குழுவினரால் தொடர்ந்து பரப்பப்பட்டுவரும் கிசுகிசுப்பினால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு புராணிக படைப்பு என்பதில் மட்டுமே ஆர்வம்கொண்டவர்கள்.
உண்மையில் அவள் யார் என்றும், தேர்வுகளில் வாங்கிய குறைந்த மதிப்பெண்களையும் மீறி பிரமிட் கான்பிகரேசனில் கணக்கெழுதியும் புத்தகங்களை அடுக்கிவைத்தும் கிடைக்கும் சம்பாத்தியத்தைக்கொண்டு அவள் எப்படி சமாளிக்கிறாள் என்றும் தெரிந்தால் இவள் பக்கமாய் திரும்பவேமாட்டார்கள். ‘எல்லாவற்றுக்கும் மேல்’, அவள் எப்போதும் பாலிடமும் ஹீதரிடமும் நினைவூட்டுவாள், ‘எனக்கொரு காதலன் உண்டு.’   ஒரு நாள் மாலை பால் அவளை சீண்டினான், நீயொரு பெனோலோப் மாதிரி. அவன் இப்போதெல்லாம் வரும் வசந்தகாலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் ஆங்கில இலக்கியத்துக்கான வாய்மொழித் தேர்விற்காக லாட்டிமோரின் ஹோமரை திரும்பவும் வாசித்துக்கொண்டிருக்கிறான்.   மைக்ரோவோவனில் சாதத்தை சூடுபண்ணிக்கொண்டிருந்தவள் கேட்டாள், பெநோலோப்பா? மூடியை அகற்றிவிட்டு ஆவிபறக்கும் சாதத்தில், குளிர்பதனப்பெட்டியில் அவனது நிலக்கடலை வெண்ணெயருகே வைக்கப்பட்டிருக்கும் சிவந்த காரம் நிறைந்த எலுமிச்சை ஊறுகாயை ஒரு கரண்டி நிறையப் போட்டு கலப்பதை பார்த்துக்கொண்டே நின்றான் பால்.   ஒடிசியிலிருந்து.. தெரியுமில்லையா.. அவளது கேள்விக்கு பதிலாக ஒரு கேள்வியைக் கேட்டான். அவன் உயரமாக இருந்தாலும் ஒல்லியாகத் தெரியாமல் திடமான விரல்களுடனும் கெண்டைக்கால் தசையுடனும் இருந்தான். அவனது தோற்றத்தில் கவனிக்கத்தக்க அம்சம் அவன் அணியும் மிகக் கச்சிதமான வட்ட வடிவமான சட்டத்தைக்கொண்ட விலையுயர்ந்த கண்ணாடிதான். பீகான் தெருவில் உள்ள ஒரு கண்ணாடிக்கடையில் உள்ள ஒரு விற்பனை நங்கை பேசியே அவனை வாங்க வைத்தது அவை. அந்தக் கண்ணாடி அவனுக்குப் பொருத்தமாக இருந்தபோதிலும் அது அவனுக்கு பிடிக்காதுபோனது.   ஆமாம் ஒடிசிதான் , மேசையருகே உட்கார்ந்தபடியே சேங்க் சொன்னாள். பெனோலேப்…என்னால் பின்னுவதற்கு மட்டுமே முடியும்.
நெய்வதற்கு , அவள் சொன்னதை திருத்திச் சொன்னான். தனக்கு வந்த வரன்களைத் தட்டிக் கழிப்பதற்காக நெய்தபடியும் நெய்ததைப் பிரித்துப் போட்டபடியும் இருந்தவள் தான் அந்த புத்திசாலி பெனோலேப்.   ஒரு முள்கரண்டியில் சாதத்தையெடுத்து உதட்டருகில் வைத்து அது ஆறுவதற்காக ஊதினாள் சேங்க். அப்படின்னா பின்னல் போட்ட பொண்ணு யாரு… கேட்டாள். உனக்குத்  தெரிஞ்சிருக்கும் .. பாலைப் பார்த்தாள்.   அவளை அசத்திவிடும் எண்ணத்துடன் பால் சற்றே மெளனமாயிருந்தான். ஆனால் அவன் புத்தியில் எதுவும் உதிக்கவில்லை. டிக்கன்ஸின் கதாபாத்திரங்களில் யாரோ ஒருத்தி என்று அவனுக்குத் தெரியும். அவனது அறையில் அந்த புத்தகங்கள் உண்டு. இரு வர்றேன். சொன்னவன் நிம்மதியடைந்தவனாய் நின்றான்..எ டேல் ஆஃப்  டு சிட்டீஸ்..மேடம் டீபார்க்..என்றான் அவளிடம்.   *****   பாலும் ஹீதரும் பீனிக்ஸ் இதழில் தங்களது வீட்டில் உடன் வசிப்பது குறித்து தந்திருந்த விளம்பரத்தைக் குறிப்பிட்டு ஜூலை மாதம் ஒரு சனிக்கிழமை காலை 9  மணிக்கு சேங்க் தொலைபேசியில் அழைத்தபோது பால் தான் பேசினான். அந்த அழைப்பு அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பியிருந்தது. குளியலறையில் அரைகுறையாக நின்றபடி சேங்க் என்பது என்ன மாதிரியான பெயர் என்று வியந்து கொண்டிருந்தான். ஐம்பது சதவீதம் ஒரு ஜப்பானிய நங்கையையே எதிர்பார்த்திருந்தான். நேரில் அவள் வந்துவிட்டு புறப்படுகையில் காப்புத் தொகைக்கான காசோலையில் கையெழுத்திட்டு தரும்வரையில் அந்த வியப்பு தீராமலேயிருந்தது. சங்கீதா பிஸ்வாஸ் என்பதே அவளது முழுப்பெயர் என்று அதைப்பார்த்துத் தெரிந்துகொண்டான். அவளுக்கு வரும் கடிதங்களிலும், ஒவ்வொரு மாதமும் அவளுக்கு வரும் கெட்டியான தடித்த வாக் இதழின் முகவரித் தாளிலும், ஒவ்வொரு மாதமும் தானே ஏற்றுக்கொள்வதாய் ஒப்புக்கொண்ட மின்கட்டண பில்லிலும் அந்தப் பெயர்தான் இருந்தது.   அந்த வீட்டுக்கு சேங்க் வந்து, அழைப்பு மணியை அழுத்தி அது இரண்டு முறை மென்மையாக ஒலித்த சமயத்தில் ஹீதர் குளித்துக்கொண்டிருந்ததால் பால் மட்டுமே அவளைத் தனியாக வரவேற்றான். அவள் தன் தலை மயிரை அவிழ்த்து விட்டிருந்தாள். எப்போதாவதுதான் அப்படிச் செய்வாள் என்று பின்னர் பால் தெரிந்துகொண்டான்.
அவளுக்கு பின்னால் நடந்தபோது தோள்பட்டைக்குப் பின்னால் விழுந்து அது அவளது உடலை மறைத்திருந்த விதம் அவனுக்குப் பிடித்திருந்தது. மாடிப்படியின் கைப்பிடியில் கைகளை ஓடவிட்டபடி, ஏகதேசம்  எல்லோரும் சொல்வதைப்போலவே, நடுவிலிருந்த அழகான மாடிப்படிகளை ரசித்தாள். மாடிப்படி ஒவ்வொரு ஆறுபடிகளுக்கு ஒருமுறை நேர்கோணத்தில் திரும்பும்விதமாக காக்னாக்கின் மினுமினுப்புடன் பளபளக்கும் அடர்ந்த நிறமுள்ள மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது.  சமையலறையில் உள்ள அசிங்கமான பழுப்புநிற அலமாரிகள், உடைந்த தரைவில்லைகளுடன் இருக்கும் அழுக்கான குளியலறை, தரைதளத்தில் வசிக்கும் வீட்டுச்சொந்தக்காரரின் காதுகளின் பாதுகாப்புக்காக எப்போதும் வீற்றிருக்கும் ஓட் தண்டுகளினாலான தரைவிரிப்பஎன  மாடியில்  உள்ளவற்றைப்பற்றிய உண்மைக்கு மாறான வாக்குறுதியைத் தரும்  வகையில் அந்த  வீட்டில்இருந்த அசலான உருப்படியான விஷயம் அது ஒன்றுதான்.   அறைப்பரப்பை அளந்தவாறே நடந்த அவள் ‘எவ்வளவு பெரிய வீடு’ என வியந்தபடி காலியான அறைக்குள் இருந்த பாலிடம் வந்தாள். மூலையில் நீள்சதுர தடுப்புகளுடன் கண்ணாடிக் கதவிட்ட அலமாரியை திறந்து மூடினாள். முன்பு அந்த அறை உண்பதற்கான அறையாக இருந்ததாகவும், அந்த அலமாரி பீங்கான்  கோப்பைகளை  வைப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்டது என்றும் பால் சொன்னான். அறையின்  குறுக்காக ஒருகுளியலறை இருந்தது. மாடியில் இருந்த பெரிய  குளியலறையை  பாலும் ஹீதரும் பகிர்ந்துகொண்டிருந்தனர். முன்பு நீல நிறத்தில் இருந்த சுவர்களின் மீது இப்போது வெள்ளை சுண்ணாம்பு ஒரு முறை அடிக்கப்பட்டிருக்க கூரையிலிருந்து வந்த வெளிச்சத்தில் அந்த அறை பளிச்சிட்டு, தண்ணென்றிருந்ததை சுட்டிக்காட்டியபடி அவள் சொன்னாள் ‘எதோ பிரிட்ஜ்குள்ள இருக்கறமாதிரி இருக்கு’. சுவரை மெல்லத் தடவியவள் ஒட்டிக்கொண்டிருந்த உதிரியான பட்டையொன்றை ஜாக்கிரதையுடன் உரித்தாள். முன்பு இந்த அறைக்கும் சமையலறைக்கும் நடுவில் இருந்த வளைந்த முகட்டுடன் கூடிய வழி இப்போது பூசி  அடைக்கப்பட்டிருந்தபோதும் அது ஏதோ ஒரு தழும்பு போல இருப்பதை சேங்க் கண்டாள்.
அவள் அங்கிருக்கும்போதே விளம்பரத்ததைக் கண்ட வேறொரு நபர் தொலைபேசியில் விசாரித்தார். ஆனால் அதே சமயத்தில் அவள் முன் பணத்தைத் தந்துவிட்டிருந்தாள். பின்பு ஹீதரை அவள் சந்தித்தாள். பூச்சு உரிந்தபடியுள்ள ஜன்னலுடனும் அழுக்கான மென்மையான இருக்கையுடனும் மஞ்சள் நிற பாபசன் சோபாவுடனும் உள்ள முன்னறையில் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். செலவுகளை எப்படி பகிர்ந்து கொள்கின்றனரென்றும் வீட்டுச் சொந்தக்காரர்களான பிரிகாமில் மருத்துவர்களாக உள்ள இரண்டு பெண்களைப் பற்றியும் சொன்னார்கள். சமையலறையில் உள்ள ஒரே ஒரு தொலைபேசி இணைப்புதான் அந்த வீட்டில் உள்ளதென்றும் சொன்னார்கள். அவரவர் அறைக்கு கொண்டு செல்லுமளவு நீண்ட வயர் தொலைபேசி இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் சமயங்களில் வயரை அவ்வளவு து¡ரம் இழுப்பதற்கான தண்டனையாக  கடுமையான கரகரப்பை கேட்கவேண்டியிருந்தது. ‘இன்னொரு இணைப்பை ஏற்பாடு செய்யலாமென்றுதான் நினைத்தோம், ஆனால் பெரிய செலவு’ என்றாள் ஹீதர்.   ‘அதுவொன்றும் பெரிய விஷயமில்லை’ என்றாள் சேங்க்.   தொலைபேசியில் யாரிடமுமே பேசாத பால் ஒன்றும் சொல்லவில்லை.   ****   இதய வடிவிலான மஞ்சள் நிற இலைகள் துளிர்க்கும் ஒரு தொங்கு தாவரத்தைத் தவிர  வீட்டிற்குத் தேவையான பொருட்கள் எதையுமே, பாத்திரங்களோ சமையலறை சாமான்களோ வாங்கத் தேவையிருக்கவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு    நண்பனின்  உதவியுடன் அவள் வந்து சேர்ந்தாள். வந்தவன் அவளுடைய காதலன் இல்லையென்று பால் தெரிந்துகொண்டான். (அவளுடைய காதலன் ஒரு எகிப்தியன் என்றும் ஹார்வார்டில் அவன் மத்தியகால கிழக்கத்திய வரலாற்றைக் கற்பிக்கிறானென்றும் இந்த கோடைகால விடுமுறையின் போது தனது பெற்றோரைக்  காண கெய்ரோவிற்கு சென்றுள்ளானென்றும் முதன்முதலாக இங்கே வந்தபோதே அவள் சொல்லியிருந்தாள். ) வந்திருந்தநண்பனின் பெயர் சார்லஸ். குதிகாலுயர்ந்த காலணிகளையும் கண்ணைப்பறிக்கும் ஆரஞ்சு நிற சட்டையையும் அணிந்திருந்த அவன் தலைமுடியை பின்பக்கமாய் கட்டி குதிரைவால் கொண்டை போட்டிருந்தான். சரக்கு வண்டியிலிருந்து ஒரு படுக்கையையும் இரண்டு பெரிய பெட்டிகளையும் நிறைய பைகளையும் சில அட்டைப் பெட்டிகளையும் இறக்கும்போது அவன் முந்திய நாளிரவு அவன் கொண்டிருந்த டேட்டிங்கைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தான். (dating ) மேல் தளத்தில் அமர்ந்து The Canterbury Tales படிக்க முயன்றபடியிருந்த பால் சேங்கை அழைத்து உதவுவதாகச் சொன்னபோது இதுவொரு வேலையேயில்லை என்று சேங்க் மறுத்துவிட்டாள்.
அவர்களது உரையாடல் அவனை தொந்தரவு செய்தபோதும் வேலியினூடாக சேங்கை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான். வீட்டை காலி  செய்வதும் கூட சுலபமாயிருக்குமென்பதால் நிறைய பொருட்களை வாங்கிச் சேர்க்கவேண்டாமென சார்லஸ் அவளை கிண்டலடித்துத் தடுத்தபடியிருந்தான்.   அவள் அவனுடன் சேர்ந்து எல்லாவற்றிற்கும் சிரித்துக் கொண்டிருந்தவள் இப்போது நிறுத்திவிட்டாள். சிந்தனையில் ஆழ்ந்துவிட்டவள்போல அவள் முகபாவம் மாறிவிட்டிருந்தது. ஒரு balledup comforter யை கைகளில் வைத்தபடி அவள் வீட்டைப் பார்த்தபடியே சொன்னாள்.’எனக்குத் தெரியல சார்லஸ்.. இங்கே எத்தனை நாள் இருப்பேன்னு தெரியலை.’   ‘நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கற வரைக்கும் ஒண்ணா சேந்து இருக்க வேண்டாங்கறானா அவன்?’   அவள் தலையை ஆட்டினாள்.   ‘என்னதான் சொல்லறான்?’   ‘எதுவும் பிரச்சனையாக வேண்டாம்னு பாக்கறதா சொல்றான்’  சுமந்துகொண்டிருந்த பெட்டியை கைமாற்றியபடி சார்லஸ் சொன்னான் ‘ஆனா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறதை அவன் ஒத்துக்கறான்தான்’.   சரக்குவண்டியருகில் சென்ற அவள் சொன்னாள் ‘எங்களுக்கு குழந்தைகள் பிறக்கும்போது லெக்ஸாங்டனில் ஒரு வீடு வாங்கலாம்னெல்லாம்  சொல்றான்’.   ‘மூணு வருஷமா நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறீங்க’ சார்லஸ் சொன்னான் ‘அவன் கொஞ்சம் பழமைவாதிதான். அவங்கிட்ட உனக்குப் பிடிச்சதிலஅதுமஒண்ணு,, சரிதானே?’   ****   அவளது அறையை பூசவேண்டும் என்பதற்காக சேங்க் அடுத்த சில நாட்கள் முன்னறையிலிருந்த சோபாவிலேயே படுத்துறங்கினாள். அவளது சாமான்கள் எல்லாமே  தற்காலிகமாக ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டிருந்தன. இதைக் கண்டு பால் ஹீதர்  இருவருமே வியந்தனர். அவர்கள் இருவருமே இந்த வீட்டிற்கு வந்தபோது தங்களது அறைகளை சுத்தப்படுத்துவதற்கு மெனக்கெட்டிருக்கவில்லை. சுவர்களுக்கு அவள் ஒரு சாந்தமான பச்சை நிறத்ததைத் தேர்ந்தெடுத்தாள்.
ஓரங்களுக்கு வண்ணங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தினர் மோல் (மச்சம்) எனப் பெயரிட்டிருந்த  வெளுத்த ஊதா வண்ணத்ததை தேர்ந்தெடுத்தாள். சமையல் மேடையில் கலனை வைத்துக் கிளறியபடியே பாலிடம் அவள் சொன்னாள் ‘மச்சம் இந்த  நிறத்தில் இருக்குமென்று ஒரு நாளும் நான் கற்பனை செய்ததில்லை. இதற்கு நீ   என்ன பெயரிட்டிருப்பாய்?’ திடீரென்று அவனைக் கேட்டாள். அவனால் எதையும் யோசிக்க முடியவில்லை. மாடியில் மெல்லிய தாள்களினாலான பக்கங்களைக்கொண்ட தடித்தப் புத்தகங்கள் குவிந்த தனது பெரிய பிளைவுட் மேசையில் தனித்திருக்கும்போதுதான் ஹேம்பர்கர் சாப்பிடவென்று ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் குடும்பத்துடன் செல்லும்போது நியூபோர்ட் கிரீமெரியில் அவனது அம்மா எப்போதும் வாங்கித்தரும் ஐஸ்கிரீமின் நினைவு வந்தது. பல வருஷங்களுக்கு முன்பே இறந்து விட்டாள். அதன் பிறகு சில ஆண்டுகளிலேயே அப்பாவும். அவர்கள் தங்களது வாழ்வின் பின்னாளிலேயே, ஐம்பதுகளில் இருந்தபோதுதான், பாலை தத்தெடுத்தனர். அதனால் பலரும் அவர்களை அவனது தாத்தாபாட்டி என்றே தவறாக நினைத்தனர். அன்று மாலை சேங்க சமையலறைக்குள் நுழைந்தபோது பால் சொன்னான் ‘கருப்பு ராஸ்பரி’.   ‘என்னது?’   ‘அந்த பெயின்ட்’   முகத்தில் சிறிய சற்றே வருத்தம் தோய்ந்த ஒரு புன்னகையை அவள் கொண்டிருந்தாள். குழம்பிய குழந்தையொன்றின் தோற்றத்தைத் தரும் புன்னகை அது. ‘வேடிக்கையா இருக்கு’ என்றாள்.   ‘இந்தப் பெயரா?’   ‘இல்லை. ஆறு மணி நேரத்திற்கு முன்பு நாம் பேசிக்கொண்டிருந்ததை நினைவு வைத்துக்கொண்டு நீ பேசுவதும் நீ என்ன பேசிக்கொண்டிருந்தாய் என்று நான் நினைவுவைத்துக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்தான் கொஞ்சம் வேடிக்கையாய் இருக்கிறது.’   மறுநாள் காலை பால் தனது அறைக்கதவைத் திறந்தபோது இன்னும் உலராத சுவர்ப்பூச்சின் மணத்தை உடனடியாய் தெரிந்துகொண்டதோடு சுவரின் மேலும் கீழுமாய் உருளும் உருளையின் உராய்வோசையையும் கேட்டான். ஹீதர் புறப்பட்டுப்போனதும் சேங்க் இசை கேட்கலானாள். ஒன்றன் பின் ஒன்றாக பில்லிஹாலிடேயின் குறுந்தட்டுக்களை சுழலவிட்டாள். புழுங்கும் பழம் நாட்களின் வீச்சத்துடனிருந்தன அவை.
சேங்கின் அறையிலிருந்து சில தப்படிகள் தொலைவேயிருந்த முன்னறையில் அதன் குளிர்ச்சியான இதத்தில் பால் வேலையில் ஈடுபட்டிருந்தான்.   குளியலறைக்கு செல்லும்போது அவன் இருப்பதை கவனித்தவள் ஆச்சரியத்துடன் சொன்னாள் ‘அடக் கடவுளே! இந்த சத்தம் உனக்குக் கிறுக்கு பிடிக்க வச்சிருமே!’. அவள் ஒரு ஜ”ன்ஸ் அரைக்கால் சட்டையையும் உள்ளாடைகளுக்கு இருப்பதுபோல மெல்லிய பட்டைகளைக்கொண்ட ஒரு கருப்பு மேல் சட்டையையும் அணிந்திருந்தாள். வெறுங்காலுடனிருந்த அவள்,  பின்னங்கால்களும் தொடைகளும் சுவர்ப்பூச்சுடன் இருந்தன.   இசை கேட்டபடி அடிக்கடி படிப்பதுண்டு என்று அவன் பொய் சொன்னான். ஏனெனில் அடிக்கடி அவள் சமையலறைக்கு தன்னுடைய பிரஸ்களை கழுவுவதற்காகவோ அல்லது பெரிய டப்பாவிலிருந்து கொஞ்சம் யோகார்ட்களை எடுத்துத் தின்பதற்காகவோ போய்வருவதை அவன் பார்த்திருந்தான். இரண்டாம் நாள் தானாகவே அங்கே சென்றவன்  ஒரு கோப்பை தேநீர் தயாரித்தான். அவள் ஆச்சரியப்படும் வகையில் கொதித்தபின்  தேயிலைகளை வெளியே எடுக்கும் நேரத்தை கணக்கிட்டு தன்னுடைய கை கடிகாரத்தில் அலாரம் வைத்தான். அன்று மதியம் சேங்கின் அக்கா லண்டனிலிருந்து தொலைபேசியில் அழைத்தாள். அவளுடைய குரல் சேங்கினுடையது போலவே இருந்தது. ஒரு கணம் அது சேங்க்தான், தன் அறையிலிருந்துதான் அழைக்கிறாள்,என்று நம்பிவிட்டான். ‘இப்ப பேசமுடியாது. நான் என் ரூமை பச்சையும் கருப்புமா பெயிண்ட் பண்ணிட்டிருக்கேன்’ உற்சாகமாக தன் தமக்கையிடம் பேசியவள் அடர்பழுப்பு நிற தொலைபேசிக்கருவியை வைத்துவிட்டு போன பின்னர் அதில் கருப்பு நிறத்தில் அவளது கைரேகைகளை காணமுடிந்தது.
அவள் வீட்டில் இருக்கும்போது படிப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. தனது முனைவர் தேர்வில் அவன் எவ்வளவு முனைப்புடன் இருக்கிறான் என்பது அவளுக்குப் பிடித்திருந்தது. ஒரு ஆண்டுக்கு முன்பு அவள் ஹார்வார்டிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவளது அம்மா தனது அறையில் ஒருவாரம் வரையில் அடைந்து கிடந்தாளென்றும் அவளது அப்பா அவளிடம் பேச மறுத்துவிட்டாரென்றும் அவனிடம் சொன்னாள். படிப்பில் உள்ள போட்டித்தனத்தையும், ஒருவனை அது எவ்வளவு சாமியார்த்தனமாக்குகிறது என்பதையும் எண்ணி அவள் அதை வெறுத்தாள். அவனுடைய காதலனும் அப்படித்தான் செய்தான். நாளின் பெரும்பகுதியும் வீட்டில் இருந்தபடி தொலைபேசியை துண்டித்துவிட்டு அடுத்த தேர்வுக்காக தயாரானான். ‘உன்னால முடியும்’ பாலிடம் அவள் உறுதி கூறியவளாய் சொன்னாள் ‘நீ ஈடுபாட்டோட இருக்கே, எனக்குத் தெரியும்’. அவனுடைய தேர்வு எதுமாதிரியானது என்று அவள் கேட்டபோது மூன்று மணி நேரம் கொண்ட தேர்வின்போது மூன்று கேள்விகள்  கேட்பார்கள் என்றும் அவை ஆங்கில மற்றும் ஐரோப்பிய இலக்கியத்தின் மூன்று நூற்றாண்டுகளை உள்ளடக்கியிருக்குமென்றும் அவன் சொன்னான்.   ‘அவர்கள் உன்னை எது வேண்டுமென்றாலும் கேட்கலாமா?’ அவள் தெரிந்துகொள்ள விரும்பினாள்.   ‘நியாயமான எதையும்’   ‘அப்படியா?’   ஒரு வருடத்திற்கு முன்பே அவன் அந்த தேர்வை ஒரு முறை எழுதி தோற்றுப்போன உண்மையை அவன் அவளிடம் சொல்லவில்லை. அவனது தேர்வு குழுவினரையும் ஒரு  சில   மாணவர்களையும் தவிர வேறெவருக்கும் இது தெரியாது. அவர்களை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே பால் வீட்டிலேயே இருப்பதை விரும்புகிறான். தேர்வுக்கு சரியாக தயாரிக்காது அவன் தோல்வியடைந்துவிடவில்லை. ஆனால் அந்த மே மாதத்தின் உற்சாகமான காலை நேரத்தில், தூக்கத்தின்போது பாதத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டுவிடும் உறுதியான தசைப்பிடிப்பைப்போல புரிந்துகொள்ளமுடியாத விதத்தில் அவனது மூளை இறுகிக்கொண்டு சதிசெய்துவிட்டது. அந்த பயங்கரமான ஐந்து நிமிடங்கள் ஏராளமான கேள்விகளடங்கிய அட்டைகளை வைத்தபடி பேராசிரியர்கள் அவனையே வெறித்துக்கொண்டிருக்க, காமன்வெல்த் அவென்யூவில் ரயில்கள் வந்துபோய் கொண்டிருக்க, மூன்றாம் ரிச்சர்டில் வரும் நகைப்பூட்டும் எதிர்நாயகனைப்பற்றிய முதல் கேள்விக்கே அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் அந்த நாடகத்தை பல முறை படித்திருக்கிறான். ஒவ்வொரு காட்சியையும், மேடையில் நடிப்பது போல இல்லையென்றாலும் அவனது பெலிகன் ஷேக்ஸ்பியர் புத்தகத்தில் உள்ள அச்சடிக்கப்பட்ட பத்திகளாக, அவனால் சித்தரித்துவிட முடியும். தர்மசங்கடமாக உணர்ந்தான்.  பல மாதங்களாகவே தேர்வுக்கு முன்னர் இதுமாதிரி கெட்டகனவுகள் வந்தபடியுள்ளன. அவனது தேர்வாளர்கள் மிகப் பொறுமையாக இருந்தனர். வேறொரு கேள்விக்கு பதிலளிக்கச் சொன்னபோது மிக மோசமாக தடுமாறி உளறி அதற்கு நடுவில் சற்று நேரம் எதுவுமே பேசாமல், மேலும் தொடரமுடியாமல் திணறினான். தலை நடுவில் சொட்டையாகவும் அதைச் சுற்றி               பனி   வெண்மையில் மலர்வளையம் வைத்ததுபோலிருந்த ஒரு பேராசிரியர் போக்குவரத்துக் காவலரைப்போல கையை உயர்த்தி சொன்னார் ‘மாணவர் சரியாக               தயார் செய்யவில்லை’.  அன்றைய நிகழ்வுக்காக வாங்கிய கழுத்துப்பட்டையை               சட்டைப்பையில்திணித்தபடி வீட்டுக்கு நடந்த பால் ஒரு வாரம் வரையில் அறையை               விட்டு வெளியே வரவில்லை. மீண்டும் கல்லூரிக்குத் திரும்பியபோது அவன் பத்து  பவுண்டு வரை  இளைத்திருந்தான். அவனதுதுறைச் செயலர் அவன்  காதல்வசப்பட்டிருக்கிறானா என்று கேட்டார்.
அவர்களுடன் சேங்க் வசிக்கத் தொடங்கி ஒரு வாரமாகியிருந்த சமயம் ஒரு வரனிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் பூச்சு வேலையெல்லாம் முடிந்து அழுதுவடியும் அந்த அறை உருமாறியிருந்தது. ஜன்னல் கண்ணாடிகளின் விளிம்பிலிருந்து பரப்புத்தாள்களை சேங்க் உரித்துக்கொண்டிருந்த சமயம் ஜெனிவாவிலிருந்து அசிம் பட்டாச்சாரியா என்ற பெயரில் யாரோ அழைப்பதாக பால்  சொன்னான். சற்றும் தயங்காமல் ‘நான் இல்லையென்று சொல்’ என்றாள். தொலைபேசியை வைப்பதற்கு முன்னர் ‘பிங்கு அழைத்தேனென்று சொன்னால் போதும்’ என்று சொல்லி அவர் மிக ஜாக்கிரதையாக சொன்ன ஸ்பெல்லிங்குடன் பெயரை எழுதினான்.   மேலும் பலர் அழைத்தனர். அதிலொருவன் வெறுத்துப்போய் பாலை அவளது காதலனா என்றுகூட கேட்டுவிட்டான். முகமறியாத ஒருவனால் சொல்லப்பட்ட அந்த சாத்தியம் அவனை உலுக்கிவிட்டது. இந்த வீட்டில் அதுபோல ஒருமுறை நடந்துவிட்டது. பால் அங்கு வந்த முதலாம் வருடத்தில் உடன் வசித்த இருவர் காதல்வசப்பட்டு திருமணம் செய்துகொள்வதாய் சொல்லி வீட்டை காலி செய்துவிட்டனர். அழைத்தவரிடம் சொன்னான் ‘இல்லை..நான் அவளது வீட்டில் வசிப்பவன்’. என்னயிருந்தாலும் அந்த கேள்வி அவனை அன்றைய நாள் முழுக்க அவனை அழுத்திக்கொண்டிருந்தாலும் தொலைபேசியில் வெறுமனே பதிலளிப்பதன் வழியாக எப்படியோ தான் அத்துமீறிவிட்டதாய் உணர்ந்தான். சில நாட்களுக்குப் பின் சேங்கிடம் அதைச் சொன்னபோது அவள் சிரித்தாள். ‘நான் ஒரு ஆளுடன் வசிப்பது தெரிந்து இப்போது அவன் பயந்து போயிருப்பான்’ என்றவள் ‘அடுத்த தடவை, நீ ஆமாமென்று சொல்லிவிடு’ என்றாள்.
ஒரு வாரம் ஆகியிருக்கும். அவர்கள் மூவரும் சமையலறையில் இருந்தார்கள். ஜலதோஷத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருந்ததாலும் நாள் முழுக்க வகுப்பிலேயே இருக்கவேண்டியிருந்ததாலும் ஹீதர் ஒரு பிளாஸ்கில் echinacea தேநீரை நிரப்பிக்கொண்டிருந்தாள். சேங்க் காப்பியைப் பருகியபடி செய்தித்தாளில் ஆழ்ந்திருந்தாள். முந்தைய நாளிரவு முழுக்க அவள் குளியலறையில் அடைந்து கிடந்தாள். இப்போது அவளது தலைமயிரில் அங்கங்கே மின்னும் சிவப்பு நிறத்தைக் காணமுடிந்தது. தொலைபேசி மணியொலித்து அதை எடுக்கும்போது வேறொரு வரன்தான் என்றே பால் நினைத்தான். சேங்கின் பல வரன்களைப்போலவே  அழைத்தவனின்  உச்சரிப்பில் ஒரு அயலகத் தன்மை ஒலித்தது. இந்த குரலில் அது  அவ்வளவு மோசமாக இல்லாமல் சற்று ஒழுங்குடன் இருந்தது. ஒரே வித்தியாசம் சங்கீதாவிடம் பேசவேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக சேங்கிடம் பேசவேண்டும் என்று சொன்னதுதான். யாரென்று பால் கேட்டபோது சற்றே பொறுமையின்றி அவன் சொன்னான் ‘நான் அவளுடைய காதலன்’. அச் சொற்கள் பாலின் இதயத்தில் மருத்துவருடைய கருவியின்மந்தமான ஆனால் வலிகூடிய மெல்லிய அடிகளைப்போல விழுந்தன. சேங்க் அவனை எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருப்பதையும், ஏற்கனவே அவள் மேசையிலிருந்து தனது இருக்கையை பின்னகர்த்தியிருந்ததையும் கண்டான்.   ‘எனக்கா?’   அவன் தலையசைத்தான். சேங்க் தொலைபேசியை தனது அறைக்கு எடுத்துச் சென்றாள்.   ‘காதலன்’ பால் ஹீதரிடம் சொன்னான்.   ‘அவன் பெயர் என்ன?’   ‘சொல்லவில்லை’ பால் தோள் குலுக்கினான்.   ‘சிப்பிக்குள் இருப்பதைப் போல இனி அவள் சந்தோஷமாயிருக்கலாம்’ பிளாஸ்கின் மூடியைத் திருகியபடி ஹீதர் சற்றுக் கடுமையாகச் சொன்னாள்.   சிவந்த சப்பையான மூக்குடனும் தடித்த இடுப்புடனும் இருந்த ஹீதருக்காக பால் வருந்தினான் என்றாலும் அதையெல்லாவற்றையும்விட சேங்கின் பக்கமாய் இருக்க விரும்பியவனாய் கேட்டான் ‘நீ என்ன சொல்கிறாய்?’   ‘ஏனென்றால் அவள் காதலன் வந்துவிட்டான். இனி இந்த பயல்களையெல்லாம் ஓடுங்கடா என்று விரட்டிவிடலாம்.’
நூலகத்தில் நகலெடுக்கும் வேலையை முடித்துக்கொண்டு பால் தன் பைக்கில் திரும்பியபோது சேங்குடன் அவளது காதலன் வீட்டைப் பார்த்தபடி பாதையில் நிற்பதைக் கண்டான். ஓரமாய் அடர்பச்சை நிறத்தில் ஒரு LMW பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ஜோடி மிகுந்த நெருக்கத்துடன் நிற்க அவர்களது தலைகள் ஒன்றையொன்று நோக்கிக் குனிந்திருந்தன.   ‘நீ உடை மாற்றும்போது ஜன்னலிலிருந்து விலகி இரு’ அவன் சொல்வது பாலின் காதில் விழுந்தது. ‘திரை வழியாக என்னால் உள்ளே பார்க்க முடிகிறது. பின்பக்கமாய் ஏதும் அறை கிடைக்கவில்லையா?’ அவர்களிடமிருந்து சற்று தூரத்திலேயே பால் பைக்கிலிருந்து இறங்கி தன் முதுகுப்பையின் பட்டைகளை சரிசெய்துகொண்டான். அரைடிராயர், பர்கின்ஸ்டாக்ஸ், பழைய டிராட்மவுத் டீ சர்ட் என்று மிக மோசமாக தான் உடையணிந்திருப்பதையும் வெளுத்த அவனது கால்களெங்கும் சுருண்ட பொன்னிற மயிரடந்தகிடப்பதையும் அசெளகர்யத்துடன் அவன் உணர்ந்தான். அவளுடைய காதலன் வெளுத்த ஜீன்ஸ், வெண்ணிற சட்டை, அடர்நீல பிளேசர், பழுப்புநிற தோல் காலணிகள் என்ற மிகக் கச்சிதமாக அணிந்திருந்தான். அவனது கடைந்தெடுத்த அங்க லட்சணங்கள் யாரும் சொல்லாமலேயே போற்றத்தக்கதாய் இருந்தன. மாறாக அவனது தலை மயிர் நீண்டு  முகத்தை தாராளமாகவும் எதிர்பாராத விதத்திலும் தழுவிக் கிடந்தது. சேங்கைவிட  அவன்  பல வருடங்கள்மூத்தவனாய் இருக்கவேண்டும் என பால் தீர்மானித்தான்.
ஆனால்  ஒத்த உயரத்துடனும், ஒரே மாதிரி மினுமினுக்கும் சருமத்துடனும், உதடுகளுக்கு மேலும் கீழும் தெளிக்கப்பட்டது போன்ற மச்சங்களுடனும் ஒருசில விஷயங்களில் அவன் சேங்கைப் போலவே இருந்தான். பால் அவர்களை நோக்கி நடந்தபோதும் கூட, நாயொன்றின் குரைப்பொலியில் கவனம் சிதறி திடீரென்று திரும்பும் வரையிலும், அவளது காதலன் மஞ்சளும் காவி நிறத்திலும் இருந்த வீட்டின் முன்பக்க தோற்றத்தை ஏதோ குறைகளை கண்டறியும் பார்வையுடன் பரிசோதித்துக்கொண்டிருந்தான்.   ‘உன்னுடன் இருப்பவர்கள் நாய் வைத்திருக்கிறார்களா?’ காதலன் கேட்டான். இடது பக்கமாய் ஒரு மாதிரியாக நடனமாடுவது போல தப்படி வைத்து சேங்கிற்கு பின்னால் நகர்ந்து நின்றான்.   ‘இல்லை. நீ உளறாதே..’ சேங்க் அவனை கிண்டல் செய்தபடி அவன் தலையின் பின்பக்கமாய் வருடினாள். ‘நாய்கள் கூடாது.. புகைப்பவர்கள் கூடாது..அந்த நிபந்தனைகளினால்தான் நான் வந்தேன். உனக்காக.’ குரைப்பொலி நின்றது. அதன் பின்னான ஓசையின்மை அவளது சொற்களுக்கு அழுத்தம் தருவது போலிருந்தது. அவளது கழுத்தில் ஒரு மாலையிருந்தது. கந்தக மணிகளாளலான அந்த மாலையை  அவள் விரல்கள் நெருடியவிதத்தைக் கண்டு அது பரிசளிக்கப்பட்டிருக்கவேண்டும் என பால் நினைத்தான். ‘பால் இது பாரூக். பாரூக்குக்கு நாய்கள்னா பயம்’. பாரூக்கின் கன்னத்தில் முத்தமிட்டாள்.   கையை நீட்டாமல் வெறுமனே தலையாட்டியபடி ‘ஃப்ரெடி’ என்று பாரூக் சொன்னான். அவன் சொன்னது பாலுக்காக சொன்னது போலில்லாமல் சேங்கிடம் சொன்னது போலவே இருந்தது. அவள் தலையாட்டினாள்.   ‘நிறைய தடவை நான் சொல்லியாச்சு. உன்னை ஃபிரெடின்னு கூப்பிட மாட்டேன்’   நகைப்புடன் பாரூக் அவளைப் பார்த்தான். ‘ஏன் கூடாது? உன்னை எல்லாரும் சேங்க்ன்னு கூப்பிடனும்னு நீ மட்டும் எதிர்பாக்கற?’   கவலைப்படாதவளாய் சொன்னாள் ‘அது வேற. அது என்னோட பேர்ல ஒரு பகுதி’   ‘இருக்கட்டும். எம் பேரு பால். நீங்க என்ன அதமட்டும்தான் சொல்லி கூப்பிடமுடியும்’ என்றான் பால். யாரும் சிரிக்கவில்லை.   ****   திடீரென்று அவள் வீட்டிலேயே இல்லாது போனாள். இருந்த சமயங்களிலும் தனது அறைக்குள்ளேயே கதவை சாத்தியபடி பெரும்பாலும் தொலைபேசியில் மூழ்கியவளாய் கிடந்தாள். குளிர்சாதனப் பெட்டியில் அவளது தட்டில் இருந்த பெரிய யோகார்டு டப்பாவும் முறுக்குகளும் தாபோலிகளும் தொடப்படாமல் கிடந்தன. கடைசியில்  சேங்க் அதன் மூடியைத் திறந்தபோது யோகார்டுகள் பச்சைநிற பூஞ்சை  படர்ந்து குமட்டும் வாடையைஎழுப்பின. பால் தனக்குள் சொல்லிக்கொண்டான், இரண்டுபேருமே ஒன்றாக இருக்கும்போதே தனித்திருக்க விரும்புவது சகஜம்தான்.  பக்கத்தில் உள்ள ஒரு சிறிய மளிகைக் கடையில் ஒரு நாள் அவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். ஊதாநிற வலைப்பையில் அடைத்த வெங்காயம், பாலாடைக்கட்டி ( ** ), பாலிதீன் தாளில் சுற்றப்பட்ட மாமிசம் என கூடை நிறைய மளிகை சாமான்கள் நிறைந்திருந்தன. ஆனால் அவற்றை அவள் வீட்டிற்கு கொண்டுவரவேயில்லை. மழை பெய்துகொண்டிருந்ததால் காரில் வந்திருந்த பால் உடன் வருமாறு அழைத்தான். பரவாயில்லை என்று சொல்லிவிட்டு தலையில் போட்டிருந்த ஹார்வார்டு பேஸ்பால் தொப்பியுடன் மளிகைப் பையை மார்பில் அணைத்தபடி பஸ் நிறுத்தத்திற்கு நடக்கத் தொடங்கிவிட்டாள். பாரூக் எங்கிருக்கிறான் என்று அவனுக்குத் தெரியாது. பிரிட்டில் தெருவில் கண்ணாடிகள் பொருத்திய அகன்ற கதவுகளுடனும் அழகான வடிவமைப்புடனும் கூடிய ஒரு வீட்டை அவன் கற்பனை செய்து வைத்திருந்தான்.   பாரூக் வீட்டில் இருக்கிறான் என்பது எப்போதுமே அதிர்ச்சியளிப்பதாகவே இருந்தது. எப்போதாவது வரும் அவன் வந்த சுவடின்றி வந்துவிட்டு போவது போல் தெரியும். எப்போதும் பூர்ச்ச மரத்தின் நிழலில் கச்சிதமாக நிறுத்தப்பட்டிருக்கும் bmw வை ஜன்னல் வழியாக பால் பார்க்காது போனால் அவன் அங்கிருக்கிறானா என்று சொல்வது கடினம். எப்போதும் அவன் வணக்கம் சொன்னதோ விடைபெற்றதோ கிடையாது. அந்த வீட்டில் சேங்க் மட்டும்தான் இருக்கிறாள் என்பதுபோலத்தான் அவன் நடந்துகொள்வான். அவர்கள் ஒருபோதும் முன்னறையிலோ சமையலறையிலோ உட்கார்ந்துகொண்டது கிடையாது. ஒரே ஒரு முறைதான் பால் தன் வண்டியில் ஊர் சுற்றிவிட்டு திரும்பியபோது மொட்டைமாடியில் அவர்கள் மதிய உணவு உண்பதைப் பார்த்தான். அவர்கள் இருவரும் அடுத்தடுத்து கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்திருந்தனர். பாரூக்கின் வாயை நோக்கி ஒரு போர்கை நீட்டிக்கொண்டிருந்தாள் சேங்க். இன்னொரு கை மறுகையைத் தாங்கிப் பிடித்திருந்தது. பால் வீட்டிற்குள் வரும்போது அவர்கள் அவளது அறைக்குள் புகுந்துவிட்டிருந்தனர்.   பாரூக்குடன் அவள் இல்லாதபோது அவனுக்காக எதையாவது செய்துகொண்டிருந்தாள். அவன் எழுதிய கட்டுரையில் அச்சுப்பிழை ஏதாவது உள்ளதா என மெய்ப்பு பார்ப்பாள். அவன் மருத்துவரிடம் செல்வதென்றால் அதற்கான நேரத்தை நிச்சயிப்பாள். பாரூக் அவன் வீட்டு சமையலறையை மறுபடி இடித்துக் கட்டுகிறானென்று ஒரு நாள் காலைவேளை முழுக்க விளம்பரப் பகுதியில் தரைவில்லைகளுக்கான விளம்பரங்களைத் தேடிச் செலவிட்டாள்.   செப்டம்பர் மாதம் முடியும்போது பாலுக்கு தினசரிகள் அத்துப்படியாகிவிட்டது. திங்கட்கிழமைகளில் சேங்கிற்கு புத்தகக்கடை விடுமுறை. அன்று பாரூக் மதியஉணவிற்கு வருவான். இருவரும் அவளது அறையில் உண்பார்கள். சில சமயங்களில் சாப்பிடும்போது அவர்கள் பேசிக்கொள்வதோ அல்லது பீங்கான் கிண்ணங்களில் கரண்டிகள் மோதும் ஓசையோ அல்லது சாப்பினுடைய மெல்லிய இசையோ அவன் காதில் விழும். பல வருடங்களாக அந்த வீட்டில் அவன் கேட்க நேர்ந்த மற்ற ஜோடிகளோடு ஒப்பிடும்போது, நிச்சயமாக அவர்கள் சத்தமில்லாத காதலர்கள்தான்.
அவர்களால் அவன் பாதிக்கப்படவில்லைதான் என்றாலும் அவளது அறையின் கதவு பாதி திறந்துகிடக்கும் நிலையில் பாரூக் அவனது ஜீன்ஸை அவிழ்ப்பதை காணும்போது அவனுக்கு தர்மசங்கடமாயிருக்கும். ஆகையால் இப்போதெல்லாம் திங்கட்கிழமைகளில் அவன் நூலகத்திற்குப் போய்விடுகிறான்.  அவனுக்கு இருந்து ஒரே தோழி தெரஸாதான். அதுவும் மூன்று வருடங்களாகிவிட்டன. அதிலிருந்து எவருடனும் அவன் நட்பு வைத்துக்கொண்டதில்லை.  தெரஸாவினால்தான் அவன் பாஸ்டனில் உள்ள கல்லூரியைத் தேர்ந்தெடுத்தான். செயின்ட் போடாப் தெருவில் உள்ள அவளது வீட்டில் மூன்றுமாதம் அவளுடன் வசித்தான். டீர்பீல்டில் உள்ள அவளது பெற்றோர்களின் வீட்டிற்கு நன்றிநவிலும் தினத்தையொட்டிச் சென்றபோதுதான் அந்த உறவு முற்றுப்பெற்றது. அங்கே ஒரு முறை அவர்களிருவரும் படுக்கையில் இருந்தபோது அவள் சொன்னாள் ‘என்னை மன்னித்துவிடு பால். என்னால முடியல. நீ   எனக்கு  முத்தம் கொடுத்த விதம் எனக்குப் பிடிக்கலை’. இன்னொரு முறை அந்த அறையைப் பார்க்கமுடியாதென்று சட்டென உணர்ந்து கொண்டவனாய் படுக்கையின்  ஒரு பக்கமாய் நிர்வாணமாய் உட்கார்ந்திருந்தது அவனுக்கு நினைவிருக்கிறது. அவன் மறுபேச்சு பேசவில்லை. அவமானத்தில் அவளிடம் என்றில்லாது பிற  அனைவருடனுமே ஒத்துப்போய்விடும் ஒரு விநோத திறன்கொண்டான் அவன்.   ஒரு நாள் பின்னிரவில் பால் தன் படுக்கையறையில் படித்துக்கொண்டிருந்தபோது வீட்டருகே ஒரு கார் வந்து நிற்கும் ஓசையைக் கேட்டான்.  அவனது மேசையில் இருந்த கடிகாரத்தில் மணி இரண்டு மணி இருபது நிமிடங்கள்  ஆகியிருந்தது. விளக்கை அணைத்துவிட்டு ஜன்னல் வழியாக பார்க்கலாமென எழுந்தான். அது நவம்பர் மாதம். குப்பைத் தொட்டிகளும் பைகளும் வரிசையிலிருந்த அந்த தனித்த வெறுமையான அகன்ற வீதியை முழுநிலவு ஒளியூட்டியிருந்தது. வீட்டு வாசலில் ஒரு வாடகைக் கார், என்ஜின் இன்னும் அணைக்கப்படாமல், நின்றது. சேங்க் அதிலிருந்து தனியாக வெளியே வந்தாள். ஒரு நிமிடம் போல பாதையில் நின்றாள். போர்டிகோவில் நுழையும்வரையில் ஜன்னலருகே காத்திருந்த அவன் அவள் படியேறிவருவதையும் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொள்வதையும் கவனித்தான். அன்று மதியம் பாரூக் அவளை அழைத்துச் சென்றிருந்தான். அவனுடைய காருக்குள் அவள் ஏறுவதை பால் பார்த்திருந்தான். அவர்கள் இருவரும் சண்டையிட்டிருக்கக்கூடும் என்று அவன் நினைத்தாலும் மறுநாள் பூசலின் எந்தவிதமான அடையாளத்தையும் காணமுடியவில்லை.
வீடியோ ஒன்றை வாடகைக்கு எடுப்பது குறித்து பாரூக்குடன் அவள் தொலைபேசியில் நல்லவிதமாக பேசுவதை அவன் கேட்க நேர்ந்தது. ஆனால் அன்றிரவும் ஏறக்குறைய அதே நேரத்தில் முந்திய இரவு போலவே நடந்தது. மூன்றாவது நாளிரவு அவள் சகஜமாக வீடு திரும்புவதை உறுதி செய்துகொள்வதற்காகவே, வேண்டுமென்றே அவன்   விழித்திருந்தான்.   மறுநாள் காலை, அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, பால் ஹீதர் சேங்க் மூவரும் சமையலறையில்  ஒன்றாக கேக் சாப்பிட்டார்கள். சேங்க் தனது அறையில் லு¦யி ஆம்ஸ்ட்ராங்கின் இசைத்தட்டை சுழலவிட்டிருந்தாள். பால் சமையலறையில் இரும்பு வாணலியில் பான்கேக்கை வறுத்துக்கொண்டிருந்தான்.   ‘இன்றைக்கு ராத்திரி கெவின் இங்கே தங்குவான்’ என்றாள் ஹீதர். சமீபத்தில்தான் அவனை சந்தித்திருந்தாள். MITயில் அவன் இயற்பியலாளனாக இருந்தான். ‘ஒன்றும் பிரச்சினையில்லையே’.   ‘நிச்சயமாக’ என்றான் பால். கெவினை அவனுக்குப் பிடிக்கும். இப்போதெல்லாம்  அடிக்கடி அவன் இரவு உணவுக்கு வந்துவிடுகிறான். பீர் டின்களை கொண்டுவருகிறான். பின்னர் சமைக்கவும் உதவுகிறான். அதோடு ஹீதரிடம் பேசுமளவுக்கு அவன் பாலிடமும் பேசுகிறான்.   ‘ஸாரிப்பா.. அவனைப் பாக்கவே முடியமாட்டேங்குது. ரொம்ப நல்லவனா இருப்பான் போலிருக்கு’ சேங்க் சொன்னாள்.   ‘பாக்கலாம். அடுத்த வாரத்தோட எங்களுக்கு ஒருமாச ஆண்டுநிறைவு’ என்றாள் ஹீதர்.  இந்த அடக்கமான கொண்டாட்டம்கூட பெரிய முக்கியத்துவம் கொண்டதுதான் என்பதுபோல சேங்க் புன்னகைத்தாள். ‘வாழ்த்துக்கள்’.   ஹீதர் நடக்கப்போவதை நினைத்து நம்பிக்கையுடன் இருந்தாள். ‘அடுத்தது நீங்க  ரெண்டு பேரும் வாரக் கடைசியில ஒண்ணா இருக்க முடிவு செய்யறதாத்தான் இருக்கும்னு நான் நினைக்கறேன்’.   பால் சேங்கை ஏறிட்டான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. எழுந்து உள்ளே போனவள் ஐந்து நிமிடத்திற்குப் பின் கீழ்த்தள அறையிலிருந்து கூடை நிறைய அழுக்குத் துணிகளுடன் திரும்பினாள்.   ‘நல்ல ஜாக்கிகள்’ துணிகளுக்கு மேலாக மடித்துக் கிடந்த ஜோடிகளைப் பார்த்துவிட்டு ஹீதர் சொன்னாள்.   ‘பாரூக்குடையது’ என்றாள் சேங்க்.   ‘அவன்கிட்ட வாஷிங்மெஷின் கிடையாதா?’ ஹீதர் தெரிந்துகொள்ள விரும்பினாள்.   ‘இருக்கு’ என்ற சேங்க், அவள் சொன்னதை நம்பமுடியாததுபோல ஹீதர் முகம்காட்டியதை அறியாதவளாய் சொன்னாள் ‘ஆனா அது காசு போட்டு துவைக்கிற மெஷின்’.   **ஃஃஃஃஃஃ   நன்றிநவிலும் தினத்தன்றுதான் வாதங்கள் தொடங்கின. சாம்பல் நிற பிளாஸ்டிக் வயர் தரைவிரிப்பின் குறுக்காக நீண்டு அறைவாசலையும் தாண்டி கதவுக்குப்பின் மறைய, அவளது அறையில் தொலைபேசியில் அழுதுகொண்டிருப்பதை  பால் கேட்க நேர்ந்தது. அவர்களுக்கிடையிலான சண்டைகளில் ஒன்று சேங்கிற்கு அழைப்பு வந்திருந்தஒரு விருந்து குறித்தது. அதற்கு பாரூக் செல்ல விரும்பவில்லை. இன்னொன்று பாரூக்கின் பிறந்தநாள் குறித்தது. முந்தைய நாள் முழுக்க சேங்க்  கேக் தயாரிப்பதில் முனைந்திருந்தாள்.  வீடெங்கும் ஆரஞ்சும் அல்மாண்டும் மணக்க பின்னிரவிலும் சமையலறையில் மின்அடுப்பு ஓசையிட்டிருப்பதை பால் கேட்டிருந்தான். ஆனால் மறுநாள் மதியம் அந்த கேக் குப்பைத்தொட்டியில் கிடப்பதைப் பார்த்தான்.   ஒருமுறை கல்லூரியில் இருந்து திரும்பும்போது பாரூக் வீட்டில் இருப்பதை பால் கண்டுகொண்டான். பிஎம்டபிள்யூ வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. அது கடுங்குளிர் கொண்ட செம்டம்பர் மாதத்தில் ஒரு நாள். அன்று அதிகாலை அந்தக் குளிர்பருவத்தின் முதல் பனித்திவலைகள் உதிர்ந்திருந்தன. சேங்கின் அறையைக் கடக்கும்போது அவளது உரத்தக் குரல் கேட்டது. எப்போதுமே அவளது  நண்பர்களை சந்திப்பதை அவன் ஏன் தவிர்க்கிறான்? நன்றி நவிலும் தினத்தன்று   அவனது  உறவினர் வீட்டுக்குஅவளை ஏன் அவன் அழைத்துச்செல்லவில்லை?  இராத்திரியில் அவளுடன் சேர்ந்திருக்க அவன் ஏன் விரும்புவதில்லை? குறைந்தபட்சம்  அவளை  ஏன் வீடுவரையில் கொண்டுவந்துவிட்டுச்செல்வதில்லை என்றெல்லாம்   அவள் அவன்  மீது குற்றம் சுமத்திக்கொண்டிருந்தாள். ‘காருக்கு நான்தானே பணம் தருகிறேன்.
பிறகென்ன?’ பாரூக் அமைதியாகக் கேட்டான்.   ‘எனக்குப் பிடிக்கலை பாரூக். இந்தமாதிரி நான் பார்த்ததேயில்லை.’   ‘நீ கூட இருந்தா நான் ஒழுங்காத் தூங்க முடியறதில்லைன்னு உனக்குத் தெரியும்தானே!’   ‘நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு எப்படி குடும்பம் நடத்தறது? எப்பவுமே ஆளாளுக்கு தனித்தனி வீட்டுலே இருந்தார்லாம்னு நீ நெனக்கறயா?’   ‘சேங்க் தயவுசெஞ்சு மெதுவாப் பேசு. உங்கூட தங்கிருக்கறவங்க காதுல விழப்போகுது’ பாரூக் சொன்னான்.   ‘என்கூட தங்கிருக்கறவங்களப் பத்திப் பேசறத நீ நிறுத்தறயா மொதல்ல.’ கத்தினாள் சேங்க்.   ‘உனக்குக் கிறுக்கு புடிச்சிருச்சு’ என்றான் பாரூக்.   அவள் அழத் தொடங்கினாள்.   ‘மொதல்லயே சொல்லிருக்கறேன் சேங்க்..இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி கூச்சல் போட்டு அமர்க்களம் பண்ற ஒருத்திய என்னால வாழ்க்கை முழுக்க சமாளிக்கமுடியாது’ பாரூக்கின் குரல் வேறு வழியற்றவன் போல் ஒலித்தது.   ‘போடா’ (**)   ஒரு தட்டோ கண்ணாடி தம்ளரோ எதுவோ ஒன்று சுவற்றில் மோதி உடைந்தது. பிறகு அறையில் சத்தமே இல்லை. ரொம்பவும் யோசித்துவிட்டு பால் மெதுவாகக் கதவைத் தட்டினான். யாரும் பதில் சொல்லவில்லை.   சில மணிநேரங்கள் கழித்து சேங்க் அடர்சிவப்பு நிற துவாலையைச் சுற்றியபடி அவளுடைய குளியலறையிலிருந்து வெளியே வந்தவள் மீது பால் கிட்டத்தட்ட மோதிவிட்டான். அவளது ஈரத்தலைமயிர் முடியப்படாமல் அவிழ்ந்திருக்க அவளது தலையின் ஒரு பக்கத்தில் ஒரு சிறு கூடு போல வீக்கம் தெரிந்தது. பல வாரங்களாக அவளை இப்படியொரு கோலத்தில் பார்க்கவேண்டுமென அவன் தவித்திருந்தாலும் மறைக்கப்படாத அவளுடைய கை கால்களையும் ஈரமான முகத்தையும் தோள்களையும் காண்பதற்கு அவனுக்கு இன்னும் தைரியம் போதவில்லை  என்று பட்டது.   ‘அட’ வேகமாய் ஒதுங்கியபடி சொன்னான்.   ஒரு கணம் கழித்து அப்போதுதான் அவன் இருப்பதையே உணர்ந்தவள் போல சொன்னாள் ‘பால்’. அவளை பார்ப்பதற்காகத் திரும்பினான். மணி நாலுதான் ஆகியிருந்தது. அஸ்தமிக்கத் தொடங்கியிருந்த சூரியன் முன்னறையின் ஜன்னல்களின்  வழியாக பாதையில் நின்ற அவளின் ஒரு பக்கத்தில் பொன்னிற ஒளிக் கற்றைகளை இறைத்திருந்தான்.   ‘என்னாச்சு?’ அவன் கேட்டான்.
மார்பின் குறுக்காக கைகளைக் கோர்த்து தோள்களை மறைத்தபடி நின்றாள் அவள். நெற்றியில் ஒரு இடத்தில், பற்பசையை தடவி விட்டதுபோல, எதையோ பூசியிருந்தாள். ‘சீக்கிரமா வந்துட்டேன். மன்னிச்சுக்க’   ‘பரவாயில்லை’   ‘அப்படியில்லை..நீ பரீட்சைக்குப் படிக்கணுமில்லே?’   அவளது கண்கள் மின்னின. முகத்தில் விநோதமான உறைந்த குறுநகை. உதடுகள் சற்றே பிளந்து நின்றன. அவள் அழத் தொடங்கும் தருணத்தில் அவன் மீண்டும் புன்னகைத்தான். ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை’.  தொலைபேசி ஒலிக்கும்போதெல்லாம் அவள் ஓடியோடி எடுத்தாலும் ஒருவாரம் வரையும் பாரூக் அழைக்கவேயில்லை. தினமும் ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துவிட்டாள். லண்டனிலிருந்த தனது சகோதரியுடன் நிறைய பேசினாள். சமையலறைக்குப் போகும்போது அவன் காதில் விழுந்தது ‘இதெல்லாம் சாதாரணம்னு உனக்குத் தோணினா சொல்லு. ஒரு தடவை நாங்க ரெண்டு பேரும் கார்ல போயிட்டிருந்தோம். உங்கிட்ட மோசமான வாடையடிக்குது கண்ணேன்னான். கிச்சத்தை சுத்தம் பண்ணுன்னான். இதெல்லாம் குறை சொல்றது கிடையாது, காதலர்களுக்குள்ள இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் ஒருத்தருக்கொருத்தர்  பகிர்ந்துக்கணும்னு சொல்லிட்டே வந்தான்.’ ஒரு நாள் சார்லஸ் சேங்கை வெளியே அழைத்துப்போனான். ராத்திரி திரும்பிவரும்போது கிட்டெரி கடைப்பைகளுடன் திரும்பிவந்தாள். இன்னொரு நாள்   பால், ஹீதர், கெவினுடன் கூலிட்ஜில் சினிமா பார்க்க வரும்படி அழைத்ததை ஏற்றுக்கொண்டு உடன் வந்தாள். ஆனால் தியேட்டருக்கு போய் சேர்ந்தவுடன் தலை வலிக்கிறதென்று சொல்லி வீட்டுக்கு வந்துவிட்டாள். தியேட்டருக்குள் போய் இருக்கையில் அமர்ந்தவுடன் ஹீதர் சொன்னாள் ‘அவங்க பிரிஞ்சுட்டாங்க’.   ஆனால் அதற்கு மறுவாரம் சேங்க வேலைக்குப் போன சமயம் பாரூக்கின் அழைப்பு வந்தது. பாரூக் தான் யாரென்று சொல்ல வேண்டுமென்று கவலைப்படவில்லை. இருந்தாலும் பால் புத்தகக்கடையை அழைத்து அவளுக்கு விஷயத்தை தெரியப்படுத்தினான்.   அவர்களது உறவு சீர்பட்டுவிட்டது. ஆனால் பாரூக் வீட்டுக்குள் வருவதேயில்லை என்பதை பால் கவனித்தான். அழைப்பு மணியைக் கூட அழுத்தமாட்டான். காரை ஓரமாக  நிறுத்தி என்ஜினை அணைக்காமலேயே மூன்று முறை  ஒலியெழுப்பித் தான் காத்திருப்பதை அவளுக்கு தெரியப்படுத்துவான்.  அவ்வளவுதான். பிறகு அவள் காணாமல்போய் விடுவாள்.   குளிர்கால விடுமுறையின்போது அவள் லண்டனுக்குப் போய்விட்டாள். சமீபத்தில் அவளது சகோதரிக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்திருந்தது. குழந்தைக்கு அவள் வாங்கிய பொருட்களை பாலிடம் சேங்க் காட்டினாள். படங்கள் போட்ட உடைகள், பஞ்சடைத்த ஆக்டோபஸ், பிரெஞ்சு கடலோடியின் குட்டி சட்டை, இருட்டில் ஒளிரும் கோள்களும் நட்சத்திரங்களையும் கொண்ட ஒரு மொபைல். ‘இனி என்னை சேங்க் மாஸான்னு கூப்பிடுவான்’ அவனிடம் உற்சாகத்துடன் சொன்னவள் மாஸி என்றால் பெங்காலியில் சித்தி என்று அர்த்தம் என்றாள். அந்த சொல் அவளது உதடுகளில் விநோதமாக ஒலித்தது. அவள் எப்போதாவதுதான் பெங்காலியில் பேசுவாள். அவளது சகோதரியிடமோ, அவளுக்கு வந்த வரன்களிடமோ ஒருபோதும்  அவள் பெங்காலியில் பேசியதில்லை. மிச்சிகனிலிருக்கும் அவளது பெற்றோர்களிடம் வார இறுதியில் பேசும்போது மட்டும் அங்கங்கே ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவாள்.  ‘பயணம் இனிதாக வாழ்த்துக்கள் என்பதை எப்படிச் சொல்லணும்?’ பால் கேட்டான்.   தனக்கு சரியாகத் தெரியவில்லை என்று சொன்னாள்.   அவள் அங்கில்லாமல் பாலுக்கு சுலபமாக படிக்க முடிந்தது. மனம் விசாலமாகவும் தெளிவுடனும் இருந்தது. பரீட்சைக்கு இன்னும் ஆறுமாதங்கள்தான்  இருந்தன. நாளும் நேரமும் குறிக்கப்பட்டுவிட்டது. மே மாதம் முதல் செவ்வாய்கிழமை பத்து மணிக்கு. அவனது மேசை காலண்டரில் பெருக்கல் குறியிட்டு வைத்திருந்தான். கோடை காலந்தொட்டே கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள், நாடகங்கள் என்று தான் படிக்க வேண்டியவற்றையெல்லாம் மறுபடி படித்து அவற்றின் குறிப்புகளை தனது கணிணியில் சேகரித்தபடியிருந்தான்.
குறிப்புகளை அச்சிட்டு, ஓரங்களில் மூன்று துளைகளிட்டு வரிசையாக கோப்புகளில் சேகரித்தான். குறிப்புகளிலிருந்து முக்கியமான சிறுகுறிப்புகளை,  அடையாள அட்டைகளில் எழுதி தூங்கப்போவதற்கு முன்பு ஒருமுறை அவற்றை படித்துப்பார்த்தான். அவற்றை காலணிப் பெட்டியில் அவன் சேகரித்து வைத்தான். எப்போதும்போல கிறிஸ்துமஸிற்கு வரும்படி பபலோவிலிருக்கும் அத்தையின் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. பரீட்சையை சாக்காக வைத்து வரமுடியாது என்று சொல்லி பரிசுப்பொருட்களை தபாலில் அனுப்பிவிட்டான். ஹீதரும் வெளியூர் போய்விட்டாள். அவள் கெவினுடன் வெர்மாண்டில் பனிச்சறுக்கிற்கு போய்விட்டாள்.   புத்தாண்டைக் கொண்டாடும்விதமாக வீடெங்கும் தான் வியாபித்துக்கொள்ளும் விதமாக ஒரு புதிய வழக்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கினான். காலையில் சமையலறை மேடையில் கவிதைகளை மறுவாசிப்பு செய்தான். மதிய உணவிற்குப் பிறகு முன்னறையில் விமர்சனம். தூங்கும் முன் ஒரு ஷேக்ஸ்பியர் நாடகம். அவன் தனது பொருட்களை, கோப்புகளை, காலணிப் பெட்டிகளை, புத்தகங்களை சமையலறை மேடையின் மீதும் மாடிப்படிகளின் மேலும் முன்னறையில் உள்ள சிற்றுண்டி மேசையின் மீதும் விட்டுச் செல்லலானான். பனிமூட்டமான ஒரு மாலை நேரத்தில் அரிஸ்டாட்டிலின் கவிதையியல் குறித்த தனது குறிப்புகளைப் படித்தபடி சாய்வு நாற்காலியில் கிடந்தபோது அழைப்புமணி ஒலித்தது. வந்தவன் ஒரு கூரியர்காரன். ஜே குழுமத்திலிருந்து சேங்கிற்காக வந்த ஒரு பெட்டியை எடுத்து வந்திருந்தான். பால் கையெழுத்திட்டுத் தந்துவிட்டு அதை மாடிக்கு எடுத்துச் சென்றான். அவளது அறைக் கதவின் மீது அதை சாற்றிவைத்ததும் கதவு சற்றே திறந்தது. கதவை இழுத்துச் சாத்திவிட்டு கைப்பிடியில் இன்னும் கை வைத்தபடி ஒரு கணம் அங்கேயே நின்றான். அவள் லண்டனில்தான் இருக்கிறாள் என்ற போதும் அறையில் நுழையும் முன் கதவைத் தட்டினான். படுக்கை சுத்தமாக விரிக்கப் பட்டிருக்க மேலே சிவப்பு நிறத்தில் பத்திக் வேலைப்பாடுகள் கொண்ட விரிப்பு போடப்பட்டிருந்தது. பச்சை நிறச் சுவரில், ஆண்கள் திண்டில் சாய்ந்து ஹூக்கா புகைத்தபடியிருக்க இடுப்பைக் காட்டியபடி பெண்கள் வட்டமாக நடனமாடும் அரண்மனைக் காட்சிகள் கொண்ட இரண்டு இந்திய ஓவியங்களைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அவளது அறையைக் கடந்து போகும்போதெல்லாம அவன்மனதில் எழுந்த எந்தவொரு ஒழுங்கீனமும் அங்கே  இருக்கவில்லை. வெளியில் தான், ஜன்னலினூடாக, சூறாவளியின் அமைதியான               குழப்பம் தெரிந்தது. ஒழுங்கற்ற வளையங்களாக பனிவிழுந்துகொண்டிருந்தாலும் போர்டிகோவின் பழுப்பு நிற கைப்பிடியில், அவை என்னவோ மிகக் கச்சிதமாக வர்ணம்               தீட்டியது போல தெரிந்தது. ஜன்னலின் ஒற்றை சட்டத்தில் தளர்வாக இருந்த ஒரு  வெண்ணிற திரைச்சீலை, சேங்க் அவ்வப்போது தன் கழுத்தில் கட்டிக்கொண்டிருக்கும் மஞ்சள் நிறப் பட்டுத் துணியாலான கழுத்துத்துண்டினால் முடிச்சிடப்பட்டதில், மெலிதான மணல்கடிகையைப் போல உருமாறியிருந்தது.
கழுத்துத்துண்டை அவிழ்த்து திரைச்சீலை ஜன்னல் கண்ணாடியை மூடும்படி செய்தான் பால். கழுத்துத்துண்டை முகம் தொடாமலே அதன் பரப்பில் ஒட்டிக்கொண்டிருந்த வாசனையை நுகர்ந்தான். ஓட்மீல் கம்பளத்தின் மேல் கால்களை பரப்பியபடி படுக்கையில் உட்கார்ந்தான். காலணிகளையும் காலுறையையும் கழற்றினான். படுக்கையருகிலிருந்த வைன் பெட்டியின் மேல் குமிழிகள் பூத்தத் தண்ணிருடன் ஒரு கண்ணாடித் தம்ளரும் சிறிய வேஸலின் டப்பாவும் இருந்தன. அவன் தனது பெல்டைத் தளர்த்தினான். ஆனால் சட்டென்று அந்த அறையிலிருந்து அவன் காணாமல் ஆனது போல அவனது உடலிலிருந்தும் அந்த இச்சை காணாமல் போனது. தனது பெல்டை மறுபடி இறுக்கிக் கொண்டவன் மெதுவாக படுக்கைவிரிப்பை தூக்கினான். கம்பளியினாலான அந்த விரிப்பு நீலமும் வெள்ளையுமான நிறத்தில், பூக்களுடன் இருந்தது.   தொலைபேசி மணியோசை காதில் விழுந்தபோது அவன் தூங்கிப்போயிருந்தான். சேங்கின் அறையிலிருந்து வெறுங்காலுடன் தடுமாறி ஓடி சமையலறைக்குள் புகுந்து குளிர்ந்த தரைவிரிப்பில் நின்றான்.   ‘ஹலோ’   மறு முனையில் யாரும் பதிலளிக்கவில்லை. தொலைபேசியை வைத்துவிடப் போகும்போது ஒரு நாய் குரைக்கும் ஓசை கேட்டது.   ‘ஹலோ’ மீண்டும் கேட்டான். அது சேங்காக இருக்கலாம் என்று தோன்றியது. லண்டனிலிருந்து தெளிவற்ற ஒரு அழைப்பா? ‘சேங்க், நீ தானா?’   அழைத்தவர் வைத்து விட்டார்.   அன்றிரவு உணவுக்குப் பிறகு மறுபடியும் தொலைபேசி ஒலித்தது. அதை அவன் எடுத்தபோது முன்பு கேட்ட அதே நாயின் குரைப்பொலி கேட்டது.   ‘பால்தஸார், பேசாம இரு’ பால் ஹலோ என்றவுடன் ஒரு பெண் அவசரமாக சொன்னாள். அவளது குரல் தயங்கியது. சேங்க் இருக்கிறாளா என அறிய விரும்பினாள்.   ‘அவள் இங்கில்லை. என்ன விஷயம் என்ற சொல்ல முடியுமா?’   டயர் ஃபிரைன் என்று தன் பெயரைச் சொல்லி ஒரு தொலைபேசி எண்ணையும் தந்தாள்.  குறிப்பேட்டில், அன்று காலையில் கிளிவ்லேண்டிலிருந்து அழைத்த ஒரு  வரனான  பால் மஜூம்தாரின் பெயருக்குக் கீழே பால் அவள் பெயரை எழுதிவைத்தான்.   மறுநாளும் டயர் மீண்டும் அழைத்தாள். அவள் இல்லையென்று மறுபடியும் சொன்ன பால் அவள் அந்த வார கடைசி வரையில் வரமாட்டாள் என்பதையும் சேர்த்துச் சொன்னான்.   ‘எங்கே போயிருக்கிறாள்?’ டயர் கேட்டாள்.   ‘வெளிநாடு சென்றிருக்கிறாள்’   ‘கெய்ரோவிற்கா?’   இப்படி அவள் கேட்டது அவனுக்கு வியப்பாக இருந்தது. ‘இல்லை. லண்டனுக்கு’   ‘லண்டனுக்கா?’ அவள் திருப்பிக் கேட்டாள். அவளது குரலில் அப்பாடா என்பதுபோலிருந்தது. ‘லண்டனா? நல்லது. நன்றி’.   நான்காம் முறை அழைத்தபோது இரவு வெகு நேரமாகியிருந்தது. பால் தூங்கிப்போயிருந்தான். கீழ்த்தளத்திற்கு இருட்டிலேயே தொலைபேசியைத் தேடிச் சென்றான்.   ‘நான்தான் டயர்’ என்னவோ அவள்தான் தொலைபேசியை ஓடிவந்து எடுத்தவள்போல மூச்சுவாங்கியது அவள் குரல்.   மின் விளக்கின் விசையை அழுத்திய அவன் கண்ணாடிக்கு பின்னிருந்த தன் கண்களை கசக்கியபடி சொன்னான் ‘நான்தான் சொன்னனே, சேங்க் இன்னும் வரலைன்னு’   ‘எனக்கு சேங்க் கிட்ட ஒண்ணும் பேசவேண்டாம்’ சொற்களை மென்று துப்பினாள்.
சேங்கின் பெயரை தேவைக்கதிகமான வெறுப்புடன் உச்சரிப்பதுபோலிருந்தது.   டிரம்பட் ஒன்று மென்மையாக இசைப்பதை பால் கேட்டான். ‘அவகிட்ட பேசவேண்டாமா?’   ‘இல்லை. உண்மையில் நான் ஒரு கேள்வி கேட்கணும்’ என்றாள் அவள்.   ‘கேள்வியா?’   ‘ஆமாம்’ சற்றே இடைவெளி. கண்ணாடித் தம்ளரில் பனிக்கட்டி துண்டொன்று விழும் ஓசை. கிறக்கத்துடன் அவள் குரல் ஒலித்தது. ‘உன்னோட பேர் என்ன?’   அவன் தன் கண்ணாடியைக் கழற்றினான். அறை முழுவதும் மங்கலாகியது. அவனிடம் ஒரு பெண் கடைசியாக எப்போது அப்படிக் கேட்டாள் என்று அவனுக்கு ஞாபகமில்லை.   ‘பால்’ என்றான்.   ‘பால்’ திருப்பிச் சொன்னவள் ‘இன்னொரு கேள்வி கேட்கலாமா? பால்’.   ‘என்ன?’   ‘சேங்க்கைப் பத்தி’   அவன் சுதாரித்துக்கொண்டான். மறுபடியும் அவள் அந்தப் பெயரை கனிவின்றி சொன்னாள். ‘சேங்கைப் பத்தி என்ன?’   டயர் சற்று பொறுத்து கேட்டாள். ‘அவள் உன்னுடன் வசிப்பவள், சரியா?’   ‘சரிதான்’.   ‘அப்ப அவங்க ரெண்டு பேரும் சொந்தக்காரங்கன்னு உனக்குத்  தெரியும்தானே?’   ‘யார்?’   ‘சேங்கும் பாரூக்கும்’   அனைத்தையும் தீர்க்கமாக பார்க்கும் பொருட்டு கண்ணாடியை மறுபடியும் போட்டுக்கொண்டான். அவளது ஆர்வத்தால் அவன் நிலைகுலைந்துவிடவில்லை. அது அவளுக்கு தேவையில்லாதது என்று அவளிடம் சொல்ல நினைத்தான். ஆனால் அவ்வாறு அவன் சொல்வதற்கு முன்பே டயர் மெல்ல அழத்தொடங்கிவிட்டாள்.   கனப்பின் மேலிருந்த கடிகாரத்தில் மணி பார்த்தான். அதிகாலை மூன்றாகவிருந்தது. அது அவன் தப்புதான். அந்த நேரத்தில் அவன் தொலைபேசியை எடுத்திருக்கக்கூடாது. அவளிடம் அவன் தன் பெயரை சொல்லியிருக்கக் கூடாதென்று நினைத்தான்.   அவளை கேட்டு சலித்தவனாய் சிறிது நேரம் கழித்து பால் கேட்டான் ‘டயர் இன்னுமா பேசிட்டிருக்கே’.   அவள் அழுவதை நிறுத்திவிட்டாள். அவளது மூச்சு திணறி அவன் காதுகளைத் துளைத்தது.   ‘நீ யார்னே எனக்குத் தெரியாது. நீ என்னை ஏன் கூப்பிடறேன்னு எனக்குப் புரியலை’ என்றான் பால்.   ‘நான் அவனை காதலிக்கிறேன்’   தொலைபேசியை அவன் வைத்துவிட்டான். இதயம் படபடத்தது. உடனடியாக குளிக்கவேண்டும் போலிருந்தது. அந்த குறிப்பேட்டிலிருந்து அவளது பெயரை அழித்துவிடவேண்டுமென விரும்பினான். தொலைபேசியை அவன் உற்றுப் பார்த்தான். சேங்கின் கருப்பு நிற கைரேகைகளின் மிச்சத்தை இப்போதும் சில இடங்களில் பார்க்க முடிந்தது. குளிர்கால விடுமுறை தொடங்கிய பின் முதன்முறையாக வீட்டின் தனிமையை அவன் உணர்ந்தான். இது பொய்யான அழைப்பாக இருக்க வேண்டும். அவள் சொல்வது வேறு யாராவது சேங்காக இருக்கவேண்டும். சந்தேகத்தை கிளப்பி பாரூக்கிடமிருந்து அவளை பிரிப்பதற்காக,ஒரு வேளை அவளது இந்திய வரன்களில் ஒருவனின் சதியாகவும் இருக்கலாம். லண்டனுக்கு போவதற்கு முன்னால், பாலுக்கு தெரிந்தவரையில், சண்டைகள் தணிந்து சேங்கிற்கும் பாரூக்கிற்கும் இடையிலான உறவு அப்படியேதானிருந்தது. முன்னறையில் ஒரு பழுப்பு நிற தோள்பையையும் ஆண்கள் வண்டியோட்டும்போது அணியும் கையுறைகள் ஒரு ஜதையையும் தாளில் சுற்றி அவள் தயார் செய்து கொண்டிருந்தாள். அவள் புறப்படுவதற்கு முந்தைய இரவு பிபாவில் அவர்கள் இருவருக்கும் இரவு உணவிற்காக முன் பதிவு செய்திருந்தாள். பாரூக்தான் அவளை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றான்.
மறுநாள் காலை தொலைபேசி மணியொலிதான் பாலை எழுப்பியது. மணியொலிப்பதைக் கேட்டபடி அவனது ஜன்னலுக்கு வெளியே சாம்பல் நிற கிளைகள் அசைவதை பார்த்துக்கொண்டே படுக்கையில் கிடந்தான். அவன் பனிரெண்டு எண்ணும் வரையில் மணியொலித்தது. அரைமணி நேரம் கழித்து மறுபடி ஒலித்தது. மீண்டும் அவன் அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. மூன்றாவது முறை ஒலித்தபோது அவன் சமையலறையில் இருந்தான். அது நின்றவுடன் தொலைபேசியை அதன் இணைப்பிலிருந்து  துண்டித்தான்.   இரவு உணவிற்குப் பிறகு இணைப்பை மறுபடி பொருத்தினான். மறுபடி அழைப்பெதுவும் வரவில்லை. என்றாலும் அவன் மனம் தொடர்ந்து அலைந்தது. அவள் மீண்டும் முயற்சிப்பாள் என்று ஏதோவொன்று சொன்னது. சேங்க் எப்போது திரும்பி வருவாளென்று அவளிடம் சொல்லிவிட்டான். அவ்வாறு சொன்னது தவறு என்று பட்டது. ஒருவேளை டயர் பாரூக்கைக் காதலிப்பதைக் குறித்து நேராக சேங்கிடம் பேசுவதற்காக காத்திருக்கலாம். அவனிடம் சொன்னதுபோலவே சேங்கிடமும் டயர் பாரூக்கை காதலிப்பது குறித்து சொல்லக்கூடும். தூங்கப்போவதற்கு முன்பு பஃபலோவில் அவனது அத்தை வீட்டிலிருந்து பரிசாக வந்திருந்த தீவாரிலிருந்து ஒரு பெக் ஊற்றிக் கொண்டான். பிறகு அவனிடம் டயர் தந்திருந்த எண்ணை சுழற்றினான். உடனடியாக உற்சாகமான குரலுடன் அவள் பேசினாள்.   ‘டயர், நான் பால்’  ‘பால்’ அவள் மெதுவாகச் சொன்னாள்.   ‘நேத்து ராத்திரி நீ எங்கிட்ட பேசினே, நான் சேங்கோட வசிப்பவன்’.   ‘ஆமாமா., பால்,.நீ போனை வச்சுட்டியே, பால்’ இப்போதும் அவள் குடித்திருப்பதுபோல்தான் இருந்தது. ஆனால் உற்சாகமாக இருந்தாள்.  ‘நான் சொல்றத கவனி. அப்படி செஞ்சதுக்கு என்னை மன்னிச்சுடு. நீ நல்லா இருக்கியான்னு தெரிஞ்சுக்கலாம்னுதான் நான் போன் பண்ணினேன்’.   டயர் வெட்கப்பட்டாள். ‘சந்தோஷம் பால்’   சிறிது நேரம் கழித்து அவன் சொன்னான் ‘அப்பறம்… நீ என்னை மறுபடி கூப்பிட வேண்டாம்னு சொல்றதுக்காகவும்தான்’.   ‘ஏன்?’ அவளது குரலில் பதற்றம் தெரிந்தது.   ‘ஏன்னா நீ யார்னே எனக்குத் தெரியாது’ என்றான்.   ‘என்னைப் பத்தி உனக்குத் தெரியனுமா, பால். என்னை எல்லாருக்குமே பிடிக்கும்’ என்றாள்.   ‘நான் இப்ப போகணும்’ அவளை சீண்டிவிடக்கூடாது என்ற நம்பிக்கையுடன் உறுதியாகச் சொன்னான். ‘வேணா நீ வேற யார்கிட்டயாவது பேசலாமே? யாராவது ஒரு  நண்பர்கிட்ட.’   ‘ஃபிரெட்டி என்னோட நண்பன்தான்’   பாரூக்கை, அவனது செல்லப்பெயர் சொல்லி அழைத்தது, முந்தைய இரவைப் போலவே அவனை நிலைகுலையச் செய்தது. ஹார்வார்டில் டயர்  பாரூக்கின் மாணவியென்றும்  வயதில் மூத்த ஆணிடம் கவர்ச்சிகொண்ட இளம்பெண் அவள் என்றும்  நேற்றிரவு  அவன்  எண்ணியிருந்தான். தப்பான எண்ணத்துடன் அவள் வகுப்பறையின்  கடைசி பெஞ்சில்உட்கார்ந்திருப்பது போலவும் அவனுடைய அலுவலகத்தில்  சந்திப்பதுபோலவும் அவன் கற்பனை செய்திருந்தான். இப்போது ஒரு சாதாரண ஆனால்  விஷமத்தனமான கேள்வி பாலின் மனதில் எழுந்தது.   ‘உனக்கு எப்படி பாரூக்கை தெரியும்.’ ஏதோ ஒரு விருந்தில் உட்கார்ந்துகொண்டு பேசுவதுபோல அவன் மிக சாதாரணமாகக் கேட்டான்.   அவள் பதில் சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவளிடம் கோபித்துக்கொண்டு பதில் சொல்லாமல் அவன் இணைப்பைத் துண்டித்ததுபோல அவளும் செய்யக்கூடும் என்றே எண்ணினான். ஆனால் இருவருமே வெகு இயல்பாக  பேசத் தொடங்கிவிட்டார்கள். டயர்தான் நிறையப் பேசினாள். சொந்த ஊர் வான்கூவர் என்றும் தனது பதின்பருவத்தில் அவள் வீட்டு அலங்காரம் குறித்த படிப்பில் சேர்வதற்காக பாஸ்டனுக்குக் குடிபெயர்ந்ததாகவும் பாலிடம் சொன்னாள்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் செளத் எண்டில் ஒரு சிற்றுண்டிக் கடையிலிருந்து வெளியே வந்த போதுதான் பாரூக்கை அவள் சந்தித்தாள். அந்த கட்டிடத்தின் பாதி வழி வரை அவளைப் பின்தொடர்ந்து வந்த அவன் அவளது தோளைத் தட்டி நிறுத்தி கட்டுப்படுத்தமுடியாத ஆவலுடன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். ‘நீ கற்பனையே செய்யமுடியாது. அத நெனச்சா எப்பிடியிருக்கும்னு நீ கற்பனையே செய்யமுடியாது’ அந்த கணத்தை நினைவுகூர்ந்தவளாய் டயர் சொன்னாள். என்னதான் சொன்னாலும் அவன் நல்லபடியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறான். அவர்களது முதல் சந்திப்பிற்கு அவர்கள் வால்டன் பாண்டுக்குச் சென்றிருக்கிறார்கள். அதன் பின் அவளது வீட்டுக்குப் பின்னாலிருக்கும் தோட்டத்தில் சோளமும் தக்காளியும் மீனும் பொறித்துத் தின்றபடி பொழுதைக் கழித்திருக்கிறார்கள். ஐந்து ஏக்கர்களில் பரந்து கிடக்கும் அவளது பழைய பண்ணை வீடு அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவனது வீட்டு சமையலறையை புனரமைப்பதற்கான வரைபடத்தைப் போட்டுத்தரும்படி அவளிடம் அவன் கேட்டான். மே தினத்தன்று அவர்கள் இருவரும் சேர்ந்து சுனாபி மலையில் ஏறியிருக்கிறார்கள். அவன் எந்த அளவு நம்புவான் என்று நிச்சயமில்லாமல் பாலிடம் அவள் வேறு பல விஷயங்களையும் சொன்னாள். ஒரு  வேளை அவர்கள் இருவருமே உண்மையாய் இருந்து பாரூக் டயர்  இருவரிடையேயும் காதல் முழுமையாக மலர்ந்திருக்கலாம் அல்லது  தனிமையிலிருந்து போதையில் ஆழ்ந்திருப்பவர்கள் சிலசமயம் தாங்களாகவே சிலவற்றை கற்பித்துக்கொள்வது போல டயர்தான் இதெல்லாவற்றையும் கற்பித்துக்கொண்டிருக்கலாம். ஒரு கட்டத்தில் முன்னறையில் உலாவியபடியே அவன் சேங்கின் அறைக் கதவைத் திறந்து திரைச்சீலை முன்னிருந்ததுபோலவே கட்டப்பட்டுள்ளது என்பதை உறுதி  செய்துகொண்டான்.   ‘நீ எப்படி?’ சட்டென்று டயர் கேட்டாள்.   ‘நான் எப்படியா?’   ‘அதான், இங்கே நான்பாட்டுக்கு சொல்லிட்டே போறேன். உங்கிட்ட இருந்து பதிலே இல்லை. பால் நீ எப்படி? சந்தோஷமா இருக்கியா?’   ஒரு மணிநேரத்தை இவளுக்காக அவன் தியாகம் செய்திருக்கிறான். வெகு நேரமாய் போனை காதில் வைத்து அழுத்திக்கொண்டிருந்ததில் அவனது காது மடல்கள் வலித்தன. ‘இது என்னை பத்தியில்லை’ சேங்கின் அறைக் கதவை சாத்தியபடியே அவன் எச்சிலை விழுங்கிக்கொண்டான். ‘இது சேங்கப்பத்தி’.   ‘அவங்க ரெண்டுபேரும் சொந்தக்காரங்கதானே?’ டயர் சொன்னாள்.
அவள் சொன்னது அவன் காதில் விழவில்லை. ‘அப்படித்தானே?’   அசைக்கமுடியாத உறுதியுடன் கூடிய நிர்பந்தத்துடன் அவள் அவனிடம் கேட்டாள். அவள் சொன்னதனைத்தும் உண்மையென்று அவன் அறிவான். அவனுடைய  தேர்வின்போது அவன் உணர்ந்துகொண்டதைப் போல, தெரஸாவின் சொற்கள்  உணர்த்தியதைப்போல.   ஏதோவொன்று தவறாக நடக்கப் போகிறது என்று அவன் அறிந்துகொண்டான்.   சேங்கும் பாரூக்கும் உறவினர்கள் அல்ல’ என்றான் அவன். அவன் சொல்லும் தகவல் அவளை உருக்குலைத்துவிடும் என்று தெரிந்தே, ஒருவித விநோதமான உள்ளார்ந்த ஆற்றலுடன் அவன் பேசினான்.   அவள் மெளனமாயிருந்தாள்.   ‘அவர்கள் இருவரும் காதலர்கள்’ என்றான். ‘தீவிரமாய் காதலிப்பவர்கள்’   ‘அப்படியா?’ அவளது குரல் சவாலிடுவது போலிருந்தது. ‘எவ்வளவு தீவிரம்?’   ஒரு நிமிடம் யோசித்தான். ‘வாரத்துக்கு நான்கைந்து நாட்களாவது இராத்திரியில் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.’   ‘சந்திக்கிறார்களா?’ பாலுக்கு திருப்தியளிக்கும் வகையில் அந்த செய்தியால் அவள் புண்பட்டிருப்பது தெரிந்தது.   ‘ஆமாம்’ என்றவன் மேலும் சொன்னான். ‘மூன்று வருடங்களுக்கும் மேலாக இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள்’.   ‘மூன்று வருடங்களாகவா?’. அவள் மறுபடியும் அழத்தொடங்கிவிடுவாளோ என்று பால் எண்ணுமளவுக்கு அவளது சொற்கள் தழுதழுத்தன. ஆனால் மறுபடி அவள் பேசும்போது அவளது குரல் தெளிவாக ஒலித்தது. ‘இருக்கலாம். ஆனால் நாங்க ரெண்டு பேருமே  தீவிரமானஜோடிதான். நேற்று அவன் கெய்ரோவிலிருந்து திரும்பியபோது நான்தான் அவனை விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு வந்தேன்.  இன்னிக்கு இராத்திரி நான் அவனை பாத்துட்டுதான் வர்றேன். இங்கெ என் வீட்டுல ராத்திரி சாப்பிட வந்தான் அவன். மாடிப்படியில வெச்சு என்னோட அவன் சந்தோஷமாயிருந்தான், பால். ஒரு மணிநேரங்கூட ஆகலை இன்னும். என்னோட தொடையில அவனோட ஈரம் இன்னும் இருக்கு பாரு’.   வீட்டுக்கு நிறையப் பரிசுப்பொருட்களுடன் சேங்க் லண்டனிலிருந்து திரும்பினாள். சிவப்புத்தாளில் சுற்றிய கிட்கேட்டுகளும் ஹார்டஸ்லிருந்து தேயிலையும், மர்மலாடும், சாக்லேட் தடவிய பிஸ்கட்டுகளும் கொண்டுவந்தாள். சேங்கின் அக்கா குழந்தை தன் சிறிய சிரித்த முகத்தை சேங்கின் முகத்தோடு வைத்து அழுத்திக்கொண்டிருக்கும் புகைப்படம் குளிர்சாதனப்பெட்டியின் மீது இடம் பிடித்தது. பாரூக் அவளை வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுப்போனதை பால் தன் அறையிலிருந்து பார்த்தான். கடைசியில் பால் அந்த அழகான மாடிப்படிகளின் வழியாக கீழ்த்தளத்துக்குப் போனான். சேங்க் இல்லாமல் வேறொருத்தியின் மீது பாரூக் நிர்வாணமாய் படுத்திருப்பது போன்ற அந்த காட்சி அவனுக்குள் அவசரமாய் மின்னலிடாமல் இப்போதெல்லாம் அவனால் படிகளில் இறங்க முடிவதில்லை. சமையலறைக்குச் சென்று அலமாரியைத் திறந்து  தீவாரை எடுத்தான்.
மதுவை அவன் ஊற்றுவதைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தில் புருவங்கள் உயர ‘அட, இங்க எல்லாம தலகீழா மாறிப்போச்சு’ என்று புன்னகையுடன் சேங்க் சொன்னாள்.   ‘என்ன சொல்ற நீ?’   ‘நீ குடிக்கறயே. எனக்குத் தெரிஞ்சிருந்தா இந்த கிட்கேட்டுக்கு பதிலா டியூட்டி ஃப்ரீ கடையிலிருந்து கொஞ்சம் சரக்கு வாங்கிட்டு வந்திருப்பேன்.’   அவனுக்காக அவள் பரிசு வாங்கி வருவதைப் பற்றிய நினைப்பு அவனை சோர்வடையச் செய்தது. அவர்கள் இருவரும் நட்புடன்தான் இருக்கிறார்கள் ஆனால் நண்பர்கள் அல்ல. ஒரு கோப்பை ஸ்காட்சை அவன் அவளிடம் தர அவள்  வாங்கிக்கொண்டாள். இருவரும் மேசையில் உட்கார்ந்தார்கள். அவளுடைய  கோப்பையில் தன்னுடைய  கோப்பையைமோதினான்.   அவளுக்காக பால் வாங்கி வைத்திருந்த தபால்களை அவள் அடுக்கத் தொடங்கினாள். அவளுடைய தலை முடி கொஞ்சம் அளவு குறைந்திருந்தது. காட்டமான  ஏதோவொரு தைல மணத்துடன் இருந்தாள் அவள்.   ‘எனக்கு டயர்ன்னு யாரையும் தெரியாது’ குறிப்பேட்டில் அவளுக்காக எழுதிவைத்திருந்த குறிப்புகளைப் படித்தபடியே சொன்னாள். ‘எதுக்குன்னு அவள் சொன்னாளா?’   அவன் தன் கோப்பையை காலி செய்திருந்தான். மது ஏற்கனவே அவனை வசப்படுத்தியிருந்தது. அவன் தலையாட்டினான்.   ‘நான் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியலை’   ‘எதப் பத்தி?’   ‘நான் இப்ப அவளை மறுபடி கூப்பிடணுமா?’   அவன் எழுந்து இரண்டாவது கோப்பைக்காக ஐஸ் துண்டங்களை எடுப்பதற்காக குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தான். மறுபடி அவன் திரும்பி வந்தபோது அவள் அந்தப் பெயரை பென்சிலால் அடிப்பதைக் கண்டான். ‘அத விடு. அவள் எதாவது போன்ல வியாபாரம் பேசறவளாவோ வேற எதாவதா இருக்கலாம்’.   சேங்கைத் தவிர்ப்பது சுலபம். எப்போதுமே பாலுக்கு அவ்வளவாய் விருப்பமிருக்காத சிமெண்ட் தரையும் இரும்பு அலமாரிகளும் எவருடையது என்றில்லாத தத்துவக் கிறுக்கல்களைக் கொண்ட சுவர்களுமாயிருக்கும் பல்கலைக் கழக நூலகத்தில்தான் பொழுதைக் கழிக்கத் தொடங்கினான்.
ஈரமும்  சோம்பலுமான வசந்தகாலத்திற்கு குளிர்பருவம் வழிவிட பாலின் படுக்கறை ஜன்னலில் காற்றுடன் கூடிய மழைச் சாரல்கள் மோதின. தொலைபேசி ஒலித்தபோதெல்லாம் அவன் பதிலளிக்கவில்லை. சேங்க் திரும்பிய பிறகான ஆரம்ப நாட்களில் சேங்கிடம் பேச வேண்டுமென்று டயர்தான் அழைக்கிறாள் என்றே ஒவ்வொரு முறையும் அவன் நம்பியிருந்தான். ஆனால் டயர் கூப்பிடவேயில்லை. அவள் அவனிடம் சொன்ன விஷயங்களெல்லாம் அவனது நினைவிலிருந்து மெல்ல தேய்ந்திடத் தொடங்க அவன் அவளது குரலுக்காகக் காத்திருந்தான். ஆனால் எல்லா நாடகங்களுக்கும் கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் நடுவில் அவளுடனான உரையாடல்களும் திடமாக அவனது மூளையில் இடம்பிடித்துக் கொண்டுவிட்டன. நீர்மட்டத்துக்கு மேலாக தலைகளை இருத்திக்கொண்டு இருவர் வால்டன் குளத்தில் நீந்துவதை அவன் கண்டான். ஆனால் நாளாக நாளாக இரவுகளில் பாரூக்குடன் உண்பதற்காக சேங்க் சென்றுவிடத் தொடங்கினாள். சமையலறை மேசையில் இருந்தபடி கோடையில்  கெய்ரோ செல்வதற்காக அவனது கடனட்டை எண்ணை ஒரு தாளில் எழுதி  வைத்துக்கொண்டு டிக்கெட்டுகளைமுன்பதிவு செய்துகொண்டிருக்கிறாள் அவள். இரண்டு மாதங்களாகிய பிறகும் டயர் அழைக்கவேயில்லை. அவள் அழைக்கக்கூடும்  என்று அஞ்சுவதையும் பால் விட்டுவிட்டான்.   வசந்தகாலத்தின்போது பால் ஒரு வாரகாலம் படிப்பை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கத் தீர்மானித்தான். ‘எல்லாத்தையும் போட்டுத் திணிக்காதே. முதல் தடவை அதுமாதிரிதான் ஆகியிருக்கனும். கரிபியன் தீவுக்குப் போயிட்டு வா’ என்று அவனது ஆலோசகர் யோசனை சொன்னார். ஆனால் பால் அப்படிச் செய்யாமல் வீட்டிலேயே இருந்தான். ஆனால் தான் விடுமுறையில் இருப்பதாய் தனக்குத்தானே அறிவித்துக்கொண்டான். பிரேட்டில் தியேட்டரில் நிறைய சினிமாக்கள் பார்த்தான். கெசலட் செய்வதில் இரண்டு நாட்களை செலவிட்டான். புத்தகம் எதையும் கொண்டுசெல்லக்கூடாதென்ற கட்டுப்பாட்டுடன் ஒரு நாள் வெல் பிளீட்டுக்கு போனான். கன்கார்டுக்கு வண்டியிலேயே போய் எமர்சனின் வீட்டைப் பார்த்துவிட்டு வருவதென்று தீர்மானித்தான். சனிக்கிழமைக் காலையில்தான் வண்டியில் இருந்த சங்கிலியைப் பழுதுபார்க்கவேண்டுமென்றுத் தெரிந்தது. வண்டியை நடைபாதைக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு மேலே பார்த்தபோது போனின் வயர் அதிகபட்ச தூரம்வரையில் நீண்டு கிடக்க சேங்க் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.   ‘இப்ப ஒரு அதிசயம் நடந்தது’ என்றாள்.   ‘என்ன?’   ‘டயர்ங்கற அந்தப் பொம்பளைதான் பேசினா. நான் ஊருக்குப் போயிருந்தப்ப நீ கூட எழுதி வச்சிருந்தியே’   பழுதுபார்க்கும் கருவிகளடங்கிய பெட்டியில் எதையோ தேடுவது போல பால் குனிந்துகொண்டான். ‘பாரூக்கிட்ட பேசனும்ன.’
சேங்க் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருந்தாள். ‘அவனோட நண்பியாம். எதோ ஊருக்கு வெளியிலிருந்து அவனைப் பாக்கறதுக்குன்னு வராளாம்’.   டயர் அதுமட்டும்தான் சொல்லியிருக்கிறாள் என்று அறிந்துகொண்ட நிம்மதியுடன் அவன் சொன்னான் ‘ஓ அதுக்குதான் அவ கூப்பிட்டிருப்பா போல’   ‘அவன் எந்த டயரப்பத்தியும் ஒருதடவை கூட பேசினதில்லையே’   ‘அப்படியா?’   மடியில் தொலைபேசியை வைத்துக்கொண்டு சேங்க் சாய்வுநாற்காலியில் உடம்பை சாய்த்துக்கொண்டு உட்கார்ந்தாள். நிமிர்ந்து உட்கார்ந்தவள் பேசுகருவியை எடுக்காமலேயே விரல்போன போக்கில் எண்களை அமுக்கினாள். ‘பாரூக்குக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. அவனை எனக்கு தெரிஞ்ச நாளிலேருந்து அவன் ஒரு நண்பனைக்கூட எனக்கு அறிமுகம் செஞ்சு வெச்சது கெடையாது. உண்மையிலே நான்தான் அவனோட ஒரே நண்பி’ என்றாள். பாலை அவள் வேண்டுமென்றே பார்த்தாள். பாலிற்கும் நண்பர்கள் யாரும் கிடையாது, இருவருமே ஒரே மாதிரிதான்  என்று குத்திக்காட்டுகிறாளோ என ஒரு கணம் பயந்தான். ‘அதெல்லாம் சரி, ஆனா அவளுக்கு என்னோட நம்பர் எப்படிக் கெடைச்சுது?’ எனக் கேட்டாள்.   பாரூக்கின் முகவரிப் புத்தகத்தில் தான் அதைப் பார்த்ததாக டயர் பாலிடம் ஒப்புக்கொண்டிருந்தாள். ‘எஸ்’ க்கான பக்கத்தில் சேங்கின் பெயரை அவன் எழுதிவைத்திருந்தது அவளுக்கு சுலபமாகிவிட்டது. அவளை தன் உறவுக்காரப் பெண் என்று சொன்னவிதம் டயரை சந்தேகப்பட வைத்தது. எழுந்து நின்ற பால் தலையை ஆட்டிக்கொண்டே வண்டியின் பிரேக்கை அழுத்தினான். ‘தெரியலை. பாரூக்கிட்டயே கேக்கலாம்னு நெனக்கறேன்.’   ‘அதான் சரி. பாரூக் கிட்டயே கேக்கலாம்’ என்றவள் எழுந்து வீட்டுக்குள் போனாள்.   கன்கார்டிலிருந்து அன்று மாலை பால் வீட்டுக்குத் திரும்பியபோது சமையலறை மேசையருகே சேங்க் உட்கார்ந்திருந்தாள். குளிர்பதனப் பெட்டியருகே சென்று மீதமிருந்த கசலெட்டை எடுத்தபோது அவள் அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை.   ‘பாரூக் வீட்டிலேயே இல்லை. இன்னிக்கு முழுக்க அவன் வீட்டிலேயே இல்லை’ என்றாள். காலையில் பால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது போலச் சொன்னாள்.   வாணலியின் மூடியை எடுத்துவிட்டு கசலெட்டின் மீது கொஞ்சம் தண்ணிரைத் தெளித்தான். ‘நீ கொஞ்சம் எடுத்துக்கறயா?’   ‘வேண்டாம்’ முகம் சுளித்தாள்.
கசலெட்டை ஓவனில் வைத்துவிட்டு ஸ்காட்சை ஊற்றினான். தோள்களிலும் தொடைகளிலும் இதமான வலி இருந்தது. சாப்பிடுவதற்கு முன்பு குளிக்க விரும்பினான்.   சமையலறையிலிருந்து வெளியே போக இருந்தவனை நிறுத்தி அவள் கேட்டாள் ‘அந்த டயர்ங்கறவ என்னிக்குக் கூப்பிட்டா, சரியா சொல்லு’.   கால்களை ஊன்றியபடி அவளை நோக்கித் திரும்பினான். ‘எனக்கு நினைவில்லை. நீ ஊருக்குப் போயிருந்தபோதுதான்’.   ‘அவ உங்கிட்ட எதாச்சும் சொன்னாளா?’   ‘அப்படின்னா?’   ‘அவ உங்கிட்ட என்ன சொன்னான்னு சரியா சொல்லு’.   ‘ஒண்ணும் சொல்லலை. நான் அவகிட்ட பேசவேயில்லை’ என்றான். மனம் படபடத்தது. ஏற்கனவே அவனுக்கு வேர்த்திருந்தது நல்லதாய் போயிற்று. ‘நீ வந்தா கூப்பிடுன்னு மட்டுந்தான் சொன்னாள்’   ‘என்னால அவளைக் கூப்பிட முடியாதே. அவ நம்பரைக் கூட சொல்லலை. அவ ஒரு கிறுக்குன்னு நெனக்கறேன். அவ ஒரு கிறுக்குன்னு உனக்கெதாச்சும் தோணுதா?’   டயரின் கண்ணிர் அவனுக்கு நினைவிருந்தது. முன்பின் அறிந்திராத பாலிடம் அவள் ‘நான் அவனைக் காதலிக்கிறேன்’ என்று சொன்னாள். குழப்பமாக முகத்தை வைத்துக்கொண்டு அவன் சேங்கைப் பார்த்துச் சொன்னான். ‘நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்குப் புரியலை’   பொறுமையிழந்தவளாய் அவள் பெருமூச்சுவிட்டாள். ‘அதக் கொஞ்சம் எடுத்துத் தரியா?’ குறிப்பேட்டைக் காட்டிக் கேட்டாள்.   குறிப்பேட்டின் ஒவ்வொருப் பக்கத்தையும் திருப்பி அதன் ஒவ்வொரு வரியிலும் விரல் வைத்து அவள் தேடத் தொடங்கியதை பால் கவனித்தான்.   ஒரு கணத்துக்குப் பின் அவன் கேட்டான் ‘என்ன தேடறே நீ?’   ‘அவளோட நம்பர்’   ‘எதுக்கு?’   ‘அவளை நான் திருப்பிக் கூப்பிடனும்’   ‘எதுக்கு?’   ‘ஏன்னா எனக்கு வேணும், பால். போதுமா?’ அவனைப் பார்த்துக் கத்தினாள்.   குளிப்பதற்காக அவன் மேல் தளத்துக்குப் போனான். சூடான தண்ணிர் அவனை நனைத்த போதும் பின்பு துவட்டிக்கொண்டபோதும் ஆவியில் ஈரம்கொண்ட  தலைமுடியை வாரிக்கொண்டபோதும் தனக்குத் தேவையில்லாதது இது என்று  தனக்குத் தானே அவன்சொல்லிக்கொண்டான்.
மறுபடியும் அவன் கீழே வந்தபோது அவள் மண்டியிட்டுக்கொண்டு குப்பைத் தொட்டியை கவிழ்த்துத் தேடிக்கொண்டிருந்தாள். பழைய செய்தித்தாள்களும் பத்திரிக்கைகளும் அவளைச் சுற்றி குவிந்து கிடந்தன.   ‘சனியன்’   ‘இப்ப என்ன தேடறே?’   ‘அந்த நம்பரைத்தான். எதுக்கோ அந்தப் பேப்பரை நான் கிழிச்சுப் போட்டது எனக்கு ஞாபகம் இருக்கு. அதத் தூக்கிப் போட்டுட்டேன்னு நெனக்கறேன்’. செய்தித்தாள்களையும் பத்திரிக்கைகளையும் மறுபடியும் குப்பைத்தொட்டியில் போட்டாள். ‘சனியன்’ மறுபடியும் திட்டினாள். எழுந்து நின்று அந்தத் தொட்டியை உதைத்தாள். ‘அவளோட பேரோட கடைசிப் பகுதி கூட எனக்கு நினைவில்லாத  போச்சு. உனக்கு ஞாபகமிருக்கா?’   தனக்குத் தெரிந்த அந்த விஷயத்தை தனக்குள்ளாக பொத்திவைத்துக் கொள்வதுபோல மூச்சை உள்ளிழுத்தான். ஆனால் அதே சமயம் அவளிடம் நேர்மையாக நடந்துகொள்ள வாய்த்த அந்த சந்தர்ப்பத்தை எண்ணி சமாதானமடைந்தவனாய் தலையை ஆட்டிக்கொண்டான். அவனுமே டயருடைய பெயரின் கடைசிப் பகுதியை மறந்துவிட்டான். அந்தப் பெயர் ஒரு ஓரசைச்சொல் என்பதைத் தவிர அது அவனது மூளையிலிருந்து மறைந்துபோய் விட்டது.   ‘பால். நீ நல்லாதானே இருக்கே. நான் உன்கிட்ட அப்ப கொஞ்சம் கடுமையாப் பேசிருந்தா, மன்னிச்சுடு’ என்றாள் சேங்க்.   சமையலறையின் குறுக்காக நடந்து ஓவனைத் திறந்தான். ‘ பரவால்லே விடு.
அதெல்லாம் ஒண்ணுமில்லை’.   பாலின் காதில் விழுமளவிற்கு ஓசையுடன் அவளது வயிறு உறுமியது. ‘கடவுளே. இன்னிக்கெல்லாம் ஒண்ணுமே நான் சாப்பிடலையே. இந்த கசலெட்டாச்சையாச்சும் கொஞ்சம் சாப்பிடறேன். நான் கொஞ்சம் சாலட் பண்ணட்டுமா?’ ஹீதர் இல்லாமல் அவர்கள் இருவர் மட்டும் சேர்ந்து சாப்பிடுவது இதுதான் முதல் முறை. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்துக்காக அவன் ஏங்கியதுண்டு. சேங்க் வீட்டில் இருக்கும்போது அவன் அசெளகரியமாய் வாயைக் கட்டிப்போட்டதுபோல உணர்வான். இப்போது பயந்துபோயிருந்தான்.   ‘அவ கொஞ்சம் கிறுக்குதான்னு நெனக்கறேன்’ தண்ணிர் குழாயருகே தலையைக் குனிந்து காய்கறிகளைக் கழுவிக் கொண்டிருந்தவளின் பின்னந்தலையைப் பார்த்தபடி அவன் மெதுவாக சொன்னான். அவள் திரும்பினாள்.   ‘எப்படிச் சொல்றே? அவ கிறுக்குன்னு உனக்கு எப்படித தெரியும்?’   பயங்கரமான அந்த ஒரு விநாடியில் சத்தமாக சிரித்துவிடப் போகிறோமோ என்று கவலைப்படுமளவு அவன் பதட்டமடைந்திருந்தான். சேங்க் அவனையே உற்றுப் பார்த்திருந்தாள். குழாயில் தண்ணிர் இன்னும் கொட்டிக்கொண்டிருந்தது. திரும்பி அதை அவள் நிறுத்தினாள். இப்போது அறை முழுக்க மெளனமாயிருந்தது.   ‘அவ அழுதுட்டிருந்தா.’   ‘அழுதுட்டிருந்தாளா?’   ‘ஆமாம்’.   ‘எப்படி அழுதுட்டிருந்தா?’   ‘சும்மா அழுதுட்டிருந்தா. எதையோ நெனச்சு வருத்தப்பட்டமாதிரி.’   எதையோ சொல்ல வருவது போல சேங்க் வாயைத் திறந்தாள்.
ஒரு கணம் அது அப்படியே திறந்திருந்தது. ‘இப்ப இத நான் கொஞ்சம் சரியா கேட்டுக்கறேன். இந்த டயர்ங்கற பொம்பளை போன்ல கூப்பிட்டு எங்கிட்ட பேசணும்னு கேட்டா?’   ‘ஆமாம்’ பால் தலையாட்டினான்.   ‘நான் இல்லைன்னு நீ சொன்னே’.   ‘ஆமாம்’.   ‘அப்பறம் அவ நான் வந்தா அவளைத் திருப்பிக் கூப்பிடச் சொன்னா’.   ‘ஆமாம்’   ‘அப்பறம் அவ அழ ஆரம்பிச்சுட்டாளா?’   ‘ஆமாம்’   ‘அப்பறம் என்ன நடந்தது?’   ‘அவ்வளவுதான். அப்பறம் அவ போனை வெச்சுட்டா’   ஒரு கணம் அந்தத் தகவல்களால் திருப்தியடைந்தவள்போல சேங்க் மெல்ல தலையசைத்தாள்.அப்படியானநினைப்பை உதறுபவள்போல வேகமாக தலையாட்டினாள். ‘இதை ஏன் நீ எங்கிட்ட சொல்லலை?’   அவளிடம் கசலெட் சாப்பிடச் சொன்னதற்காக அவன் வருந்தினான். அன்றைய தினம் தொலைபேசியை எடுத்துப் பேசியதற்காக வருந்தினான். அவனது அறையில், அவனது வீட்டில், அவனது வாழ்க்கையில் சேங்கைத் தவிர வேறொரு பெண் வராது போனதற்காக வருந்தினான். ‘நான் சொன்னேன்’ இருவருக்குமிடையிலாக ஒரு கோட்டை மனதிற்குள் வரைந்துகொண்டவனாய் அவன் அமைதியாகச் சொன்னான். ‘அவ                  கூப்பிட்டான்னு நான் உங்கிட்ட சொன்னேன்.’   ‘ஆனா நீ எங்கிட்ட இந்த விஷயத்தை சொல்லலை’.   ‘அப்படியில்லை’.   நம்பமாட்டாதவளாய் அவள் முறைத்தாள். ‘இதை நான் தெரிஞ்சுக்கனும்னு உனக்குத் தோணலை?’   வேறெங்கோ பார்த்தபடி அவன் உதட்டைக் கடித்தான்.   ‘தோணலை. அப்படித்தானே?’ இப்போது அவனைப் பார்த்து அவள் கத்தினாள்.   அவன் பதில்  எதுவும் சொல்லாமல் இருக்கவும் முஷ்டியை இறுக்கிக் கொண்டு அவனை நோக்கி வந்தாள். அடிவாங்க தயாரானவன்போல அவன் தன் முகத்தை ஒருபக்கமாய் திருப்பிக் கொண்டான்.ஆனால் அவள் அடிக்கவில்லை. பதிலாக தன்னையே  கட்டுப்படுத்திக்கொள்பவள்போல அவள் தன் தலையைப் பற்றிக் கொண்டாள்.
‘கடவுளே..பால் உனக்குஎன்ன வந்து  தொலச்சுது..’அவள் சொல்வதையே கேட்க  முடியாதது போல அவள் குரல் கீச்சிட்டது.  இப்போது அவள் அவனைத் தவிர்க்கத் தொடங்கினாள். சில நாள் இரவுகளில் அவள் வீட்டிலேயே தங்கவில்லை. ஒரு பையுடன் அவள் சார்லஸின் வண்டியில் ஏறிப் போவதைப் பால் கண்டான். இதே சமயத்தில் ஹீதர் ஏறக்குறைய கெவினுடன் வசிக்கத்  தொடங்கிவிட்டதால் அந்த வீட்டில் மறுபடியும் பால் மட்டும் தனித்திருக்க நேர்ந்தது. சேங்கை அவன் மறுபடியும் பார்க்க ஒரு வாரமாகிவிட்டது. தனியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு தனது அறைக் கதவைத் திறந்து போட்டிருந்தான் அவன். அவள் அவனது அறைக்கு வந்தாள். இது வரையில் அவன் பார்த்திராத ஒரு அழகான உடையிலிருந்தாள் அவள். குட்டையான கையுடன் இடுப்பில் இறுக்கிய ஒரு வெள்ளை நிற பருத்தி ஆடை. அதன் கழுத்து வெட்டு சதுரமாக இருந்ததில் அவளது கழுத்தெலும்புகள் தெரிந்தன. ‘என்ன’ என்றாள்.   ‘என்ன?’ அவளில்லாமல் போனதில் அவன் சற்றும் வருந்தவில்லை.   ‘இதப் பாரு. இதெல்லாமே ஒரு பெரிய குழப்பமா போச்சுங்கறத உங்கிட்ட சொல்லத்தான் வந்தேன். டயர் பாரூக்கோட பழைய நண்பி. கல்லூரியிலிருந்தே.’   ‘இத எங்கிட்ட நீ விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை’ என்றான் பால்.   ‘அவ கனடாவில, வான்கூவர்ல இருக்கறா’ அவள் தொடர்ந்து சொன்னாள்.   ‘அப்படியா’   ‘ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை பேசிக்குவாங்களாம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்த சமயத்துல, அவன் வேற ஒரு வீட்டுல இருந்த போது என்னோட பெயரை அவன் அவகிட்ட சொல்லிருக்கான். அவ அதை ஞாபகம் வெச்சுருக்கா. அவளுக்கு இப்ப கல்யாணம்ங்கறதால அவனுக்கு பத்திரிக்கை அனுப்பனும், அவன்கிட்ட பேசனும்னு முயற்சி பண்ணிருக்கா. பாரூக்கோட புது வீட்டு முகவரியோ போன் நம்பரோ அவளுக்கு தெரியாததால, அவனோட நம்பர் டைரக்டரியில போடாததால, இங்க முயற்சி செஞ்சிருக்கா.’   தனது அபத்தமான விளக்கங்களில் மிகுந்த உற்சாகம் கொண்ட அவள் விநோதமாகத் தெரிந்தாள். அவளது கன்னங்கள் சிவந்திருந்தன.
‘ஒரே ஒரு விஷயம் பால்’.   அவன் நிமிர்ந்து பார்த்தான். ‘என்னது?’   ‘நீ சொன்னதைப் பத்தி கேக்கறதுக்காக பாரூக் அவகிட்ட பேசினான்’.   ‘நான் என்ன சொன்னேன்?’   ‘அவ அழுதான்னு சொன்னதப்பத்தி’ தனது தோள்களைக் குலுக்கிக் கொண்டாள். ‘நீ சொன்னதப் பத்தி அவளுக்கு எதுவுமே தெரியாதுன்னு அவன் சொன்னான்’. அவளது குரல் இறுக்கத்துடன் ஒலித்தது. வார்த்தைகள் வேகமாய் ஒன்றையடுத்து ஒன்றாக ஓடின.   ‘நான் கதைகட்டினேன்னு நீ சொல்றயா?’   அவள் மெளனமாக இருந்தாள்.   அவளுக்காகத் தான் அவள் அழுததைப் பற்றிச் சொன்னான். அன்றிரவு சமையலறையில் அவள் காய்கறிகளை நறுக்கி சாலட் செய்து கொண்டிருந்தபோது   அவளை அவன்  கவனித்திருந்தான். அவளைச் சுற்றிலும் சுவர்கள் நொறுங்கி விழுவது               போலஉணர்ந்தான்.அவளை எப்படியாவது சமாதானப்படுத்தவேண்டுமென்று விரும்பினான். ஆனால் இப்போது அவளை அவள் நின்றுகொண்டிருந்த நிலைப் படியிலிருந்து அப்படியேத் தள்ளிவிட வேண்டும் போலிருந்தது அவனுக்கு.   ‘அப்படியொரு கதைய கட்டிவிடவேண்டிய அவசியம் என்ன எனக்கு?’ தலையின் ஒரு பக்கத்தில் நரம்பு ஒன்று துடிப்பதை அவன் உணர்ந்தான்.   அவனுடன் வாதிடுவதற்கு பதிலாக கதவுச் சட்டத்தில் தலையை சாய்த்துக்கொண்டு அவனை பரிதாபத்துடன் பார்த்தாள். ‘எனக்குத் தெரியலை பால்’. அவனை அவனது அறைக்குள் இப்போதுதான் அவள் முதன்முதலாகப் பார்க்கிறாள் என்பது அவனுக்கு உறைத்தது.
ஒரு கணம் அவள் உட்காருவதற்கு இடம் தேடுவது போல  இருந்தது. தலை நிமிர்த்தினாள்.   ‘அப்படியெல்லாம் செஞ்சா நான் அவனை விட்டுட்டு வந்திருவேன்னு நீ நிஜமாவே நம்பறயா?’   ‘அதெல்லாம் உன்னை ஒண்ணுமே பண்ணாதுன்னுதான் நான் நெனக்கறேன்’ என்றான் பால். இப்போது அவன் பற்களை கடித்துக்கொண்டிருந்தான். அவளது குற்றச்சாட்டுகளால் அவனது உடல் கனத்தது. மரத்திருந்தது. ‘நான் அப்படியெல்லாம் கதை கட்டலை’.   ‘பால், நீ என்னை விரும்பறேங்கறது வேற, எம்மேல ஆசப்பட்டேங்கறதும் வேற.’ அவள் தொடர்ந்து சொன்னாள் ‘ஆனா இப்படியொரு பொய்ய சொல்றதுங்கறது?’ அவள் நிறுத்தினாள். அவளது முகம் இப்போது என்னவோ போல, புன்னகையல்லாத ஒரு விதத்தில், கோணியது. ‘உண்மையிலயே ரொம்ப பரிதாபமா இருக்கு’. அறையை விட்டு  வெளியேறினாள்.   மறுபடியும் அவர்கள் எதிரெதிரே வர நேர்ந்தபோதும் அவனிடம் சத்தம்போட்டு பேசியதற்காக அவள் வருத்தம் தெரிவிக்கவில்லை. கோபம் கொண்டவள்போல தெரியவில்லை. பட்டுக்கொள்ளாதவளாய் இருந்தாள். மைக்ரோ ஓவனின் மீது அவள் விட்டுப் போயிருந்த ஒரு போனிக்ஸ் இதழில் நிலம் வீடு குறித்த விளம்பரங்கள் வெளியாகும் பக்கம் மடிக்கப்பட்டு அதிலிருந்த சில விளம்பரங்கள் வட்டமிடப்பட்டிருப்பதை அவன் கவனித்தான். பாரூக்கின் வீட்டிலிருந்து அவள் வந்துபோய் கொண்டிருந்தாள். பாலை அவள் பார்க்க நேரும்போதெல்லாம் ஒரு கணம்  ஏறிட்டுவிட்டு சன்னமாய் செயற்கையான புன்னகைப்பாள்.
பிறகு அவன் காணாமல்போய்விட்டது போல வேறெங்கோ பார்ப்பாள்.   மறுமுறை சேங்க் புத்தகக் கடைக்குப் புறப்பட்டு போகும் வரையில் தனது அறையிலேயே முடங்கிக் கிடந்தான் பால். அவள் போனதுமே நேராக சமையலறைக்குச் சென்று குப்பைத் தொட்டியை கவிழ்த்துப் போட்டான். குளிர்காலம் முழுக்கவே அது காலி செய்யப்பட்டிருக்கவில்லை. டயரின் தொலைபேசி எண் எழுதப்பட்ட தாளுக்காக அவன் ஒவ்வொரு செய்தித்தாளையும், பத்திரிக்கையையும் பிரித்துத்  தேடினான். சேங்கினால் தான் அதைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவன் நினைத்தான். ஆனால் அவனாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. டெலிபோன் டைரக்டரியை எடுத்து வைத்து, தான் எவ்வளவு கிறுக்குத்தனமாய் நடந்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி கவலைப்படாமல், இங்கும் அங்குமாய் புரட்டி டயர் என்ற பெயர் தட்டுப்படுகிறதா என்று பார்த்தான். பிறகு அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவளுடைய பெயரின் கடைசிப் பகுதி. சில மாதங்களுக்கு முன்பு அன்றிரவு தொலைபேசியில் தன்னை அவள் அறிமுகப்படுத்திக்கொண்ட குரலின் ஒலியுடன் அப்பெயர் எந்தவித சிரமமுமின்றி அவனது நினைவில் மீண்டது. ‘எஃப்’ பக்கத்தைத் திருப்பினான். ¦.ஃபிரைன் என்ற  ஒரு பெயர், பெல்மாண்ட் முகவரியுடன் இருப்பதைக் கண்டான்.  தாளில் ஒரு அழுத்தமான கோடு விழும்படி அந்த பெயருக்குக் கீழே சுட்டுவிரல் நகத்தால் கீறினான்.   மறுநாள் அவன் அழைத்தான். அவளது பதிலளிக்கும் கருவியில் தன்னை அழைக்கும்படி ஒரு செய்தியை பதித்தான். அப்படி செய்த பின்பு தலைசுற்றுவதுபோல இருந்தது அவனுக்கு. ஒரு வகையில் டயர் அவனை அழைக்கப்போவதில்லை, அவளும் அவனிடமிருந்து விலகிப் போகிறாள் என்று அறிந்துகொண்டதின் பயமே அப்படியிருந்தது. அவ்வாறான ஒரு அச்சம் அவனை மீண்டும் மீண்டும் அழைக்கச் செய்து செய்திகளைத் தொடர்ந்து பதிக்கச் செய்தது. ‘டயர். நான்தான் பால். தயவுசெய்து என்னிடம் பேசு.’ என்று ஒவ்வொரு முறையும் அவன் சொன்னான்.   பிறரு ஒரு நாள் அவளே போனை எடுத்தாள்.   ‘நான் உன்கிட்ட பேசணும்’ என்றான்.   அவனுடைய குரலை அவள் கண்டுகொண்டாள். ‘தெரியும். பால் நான் சொல்றதக் கேளு’   அவளது பேச்சினூடாகக் குறுக்கிட்டான். ‘நீ செய்யறது சரியில்லை.’ என்றான்.   நூலக வாசலில் இருந்த ஒரு பொதுத்தொலைபேசிக் கூண்டில் அவன், நுழைவாயில் காவலனிடம் மாணவர்கள் தங்களது அடையாள அட்டைகளை அவசரமாய் காட்டியபடி போவதைப் பார்த்தபடி இருந்தான். மேலும் சில்லறைகளுக்காக தனது பாக்கெட்டைத் துழாவினான். ‘நீ பேசும்போது நான் பொறுமையா கேட்டேன். நான் உங்கிட்ட பேசியிருக்க வேண்டிய அவசியமே இல்லை.’   ‘தெரியும். என்னை மன்னிச்சுடு. நான் செஞ்சது தப்புதான்’ இப்போது அவள் எந்தவிதத்திலும் போதையிலிருப்பவள் போலவோ தடுமாறுபவள்போலவோ வருத்தப்பட்டவள்போலவோ தெரியவில்லை. வெகு சாதாரணமாய், பணிவுடன் ஆனால் அவசரத்திலிருந்தாள்.   ‘நீ என்னிடம் சொன்ன பிற விஷயங்களையெல்லாம்கூட நான் அவளிடம் சொல்லவில்லை’. அவன் பேசி முடிப்பதற்காக ஒரு மாணவன் வெளியே காத்திருப்பதை அவன் கவனித்தான்.
பால் தனது குரலைத் தணித்தான். சற்றே பதட்டமடைந்ததை உணர்ந்தான். ‘அந்தக் கதையெல்லாம் ஞாபகமிருக்கா?’   ‘தயவுசெஞ்சு இதப் பாரு. நான்தான் மன்னிப்புக் கேட்டுட்டேனில்ல. ஒரு நிமிஷம் பொறு’ அழைப்பு மணியொலிப்பது பாலுக்குக் கேட்டது. ஒரு நிமிடத்துக்குப் பிறகு அவள் மறுபடியும் பேசினாள். ‘இப்ப நான் போகணும். மறுபடியும் நானே பேசறேன்’.   ‘எப்ப?’ அவனை தவிர்ப்பதற்காக அவள் நடிக்கிறாள், பொய் சொல்கிறாள் என்று பயந்தவனாய் வலியுறுத்தினான். ஜனவரி மாதத்தில் டயர் பேசிக் கொண்டிருந்தபோது இணைப்பைத் துண்டிக்க விரும்பினான் பால், அவளோ பேசுவதைக் கொஞ்சம் கேட்கவேண்டும் என்று கெஞ்சியிருந்தாள்.   ‘அப்பறம்..இன்னிக்கு ராத்திரி’ என்றாள்.   ‘எப்பன்னு எனக்குத் தெரியனும்’.   பத்து மணிக்கு அழைப்பதாய் அவள் சொன்னாள்.   தொலைபேசி இணைப்பை துண்டித்த உடனேயே, ரிசீவர் இன்னும் கையில் இருக்கும்போதே, அந்தத் திட்டம் அவனுக்குத் தோன்றியது. நூலகத்திலிருந்த வெளியேறிய அவன் நேராக பக்கத்திலிருந்த ஒரு ரேடியோ சேக்  கடைக்குச் சென்றான். ‘எனக்கு ஒரு போன் வேணும்’ என்று விற்பனையாளனிடம் சொன்னான்.   ‘இரண்டு ஜேக்குகளுடன் ஒரு அடாப்டரும் வேணும்’. அன்றைக்கு சேங்குக்கு புத்தகக்கடையில் இரவுப் பணி. எப்போதும்போல ஒன்பது மணிக்கு வீடு திரும்பினாள். அவளுடைய தபால்களை எடுக்க சமையலறைக்கு வந்தபோது அவள் பாலிடம் ஒன்றும் பேசவில்லை.   ‘நான் டயர்கிட்ட பேசினேன்’ என்றான் பால்.   ‘இப்படி என் விஷயத்துல தலையிடறதை நீ ஏன் நிறுத்தக்கூடாது?’ ஏதோவொரு விளம்பரத் தாளை பார்த்தபடியே அவள் சாதாரணமாகக் கேட்டாள்.   ‘அவ பத்து மணிக்கு எங்கிட்ட பேசப் போறா’ என்றான் பால். ‘உனக்கு வேணும்னா அவளுக்குத் தெரியாம அவ பேசறதை நீ கேட்கலாம். நான் இன்னொரு   போனை வாங்கி  நம்ம போன்ல போட்டு வெச்சிருக்கேன்.’   இரண்டாவது தொலைபேசியை கவனித்தவள் கையிலிருந்த விளம்பரத் தாளை கீழே போட்டாள். ‘ஜீசஸ். உன்னை என்னால நம்பவே முடியலை பால்’ என்று கத்தினாள்.   அவள் தனது அறைக்குப் போய்விட்டாள்.
பத்து மணிக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது அவள் வெளியே வந்து பாலின் பக்கத்தில் உட்கார்ந்தாள். மேசையின் மீது தொலைபேசிகளை வசதியாக இருத்தியிருந்தான். சரியாக பத்து மணி  ஒரு நிமிடத்திற்கு இரண்டு தொலைபேசிகளும் ஒலித்தன. பால் ஒன்றை எடுத்தான்.   ‘ஹலோ’.   ‘நான்தான்’ என்றாள் டயர்.   அவன் தலையாட்டியபடி மெதுவாக, ஜாக்கிரதையாக சேங்கிற்கு ஜாடை காட்டினான். இன்னொரு தொலைபேசியை சேங்க் எடுத்து தன் மீது படாமல் காதருகே வைத்தாள். பேசுகருவியின் கீழ்ப்பக்கம் வாயருகே இல்லாமல் அவளது தோளை நோக்கி இருக்கும்படியாக வெகு இயல்பின்மையுடன் அவள் அதைப் பற்றியிருந்தாள்.   ‘நான் ஏற்கனவே சொன்னமாதிரி, பால், நான் உன்னைக் கூப்பிட்டதுக்கு என்னை மன்னிச்சுடு. நான் உங்கிட்ட பேசிருக்கவே கூடாது’ என்றாள் டயர்.   அவள் ஆசுவாசத்துடன், பேச விரும்பியவளாய், அவசரமேதுமின்றி இருப்பதுபோலத் தெரிந்தது. பாலுக்கும் கொஞ்சம் ஆசுவாசமாயிருந்தது. ‘ஆனா நீ பேசினே’.   ‘ஆமாம்’.   ‘பாரூக்கைப் பத்தி சொல்லி அழுதே’.   ‘ஆமாம்’.   ‘அப்பறம் என்னை நீ பொய்யனாக்கினே’.   அவள் மெளனமாயிருந்தாள்.   ‘எல்லாத்தையும் நீ இல்லேன்னு சொல்லிட்டே’.   ‘அது ஃப்ரெட்டியோட திட்டம்தான்’.   ‘நீயும் அதுக்குத் துணை போயிருக்கே’ என்றான் பால். அவன் சேங்கைப் பார்த்தபடியிருந்தான். அவள் தன் மேற் பற்களால் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டிருந்ததைப் பார்க்க ஒரு விதத்தில் வேதனையாயிருந்தது.   ‘நான் என்ன செய்ய முடியும் பால்?’ டயர் கேட்டாள். ‘நான் உன்கிட்ட பேசினது தெரிஞ்சதும் அவன் ரொம்ப கோபமாயிட்டான். என்னைப் பாக்கவே மாட்டேன்னுட்டான். போனை கழட்டி வெச்சுட்டான். நேரா போனாலும் பாக்கவே மாட்டடேன்னுட்டான்’.   சேங்க் உள்ளங்கையை மேசையின் விளிம்பில் வைத்து, அதைத் தள்ள வேண்டும்போல அழுத்தினாள்.
ஆனால் அவ்வாறு அவள் செய்தது, தரைவிரிப்பை தேய்த்தபடி, அவளை  அவளது இருக்கையில் பின்னகர்த்துவதாய் முடிந்தது. பால் உதட்டின் மீது விரல் வைத்தான். ஆனால் டயரைப் பொறுத்தவரை அந்த சத்தத்தை அவன்தான் ஏற்படுத்தினான் என்று உணர்ந்தான். அவள் பேசிக்கொண்டிருந்தாள்.   ‘இதப் பாரு பால். இதுக்கு நடுவுலே நீ மாட்டிக்கிட்டது எனக்கு வருத்தம்தான். நான் உன்கிட்ட பேசினதுமே தப்புதான். அப்பதான் ஃப்ரெட்டி சேங்கை தன் உறவுக்காரப் பொண்ணுன்னு சொல்லிட்டேயிருந்தான். அவளை எனக்கு அறிமுகம் செஞ்சு வைன்னு கேட்டப்ப அவன் மறுத்துட்டான். மொதல்லே நான் அதைப் பெருசா நெனக்கலை. அவனோட வாழ்க்கையில நான் ஒருத்தி மட்டும்  இல்லேங்கறது  எனக்குப் புரிய ஆரம்பிச்சுது. ஆனா அப்ப நான் அவனை காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்’. அவனை நம்ப விரும்பினாள் என்பதை அவள் விளக்கினாள். அவளுக்கு வயது முப்பத்தைந்து. ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்தும் பெற்றவள்.  இதற்கெல்லாம் அவளுக்கு நேரமிருக்கவில்லை.   ‘ஆனால் நான் அதை முறிச்சுக்கிட்டேன்’ உணர்ச்சிவசப்படாமல் அவள் சொன்னாள்.  ‘உனக்குத் தெரியுமா, ஒரு கட்டத்துல அவன் நான் இல்லாம வாழவே முடியாதுன்னெல்லாம் நான் உண்மையிலேயே நம்பினேன். பொம்பளைங்ககிட்ட அவன் அப்படித்தான் செய்வான். அவங்களை நம்பியேதான் அவன் இருப்பான். ஒரு நூறு வேலைகளை அவங்ககிட்ட செய்யச் சொல்வான் அவன். அவங்கில்லாம அவனோட வாழ்க்கையிலே எதுவுமே நடக்காதுங்கற மாதிரி நம்ப வைப்பான். இன்னிக்கு மதியம் நீ கூப்பிட்டப்ப அவன்தான் வந்திருந்தான் இங்கே. இன்னும் அவனுக்கு என்னை பாக்கனும்ங்கறான். இன்னும் என்னை ஒரு பக்கமா வெச்சுக்கனும்னு அவனுக்கு. அவனுக்கு நண்பர்கள்னு யாருமே கிடையாது தெரியுமா? காதலிகள் மட்டுந்தான். மத்தவங்களுக்கெல்லாம் எப்படி குடும்பம், நண்பர்கள்னு வேணுமோ அது மாதிரி அவனுக்கு அவங்க வேணும்னு நான் நெனக்கறேன்.’ பல ஆண்டுகளுக்கு முன்பான ஒரு காதலைப்பற்றி சொல்லிக்கொண்டிருப்பதைப்போல               நியாயமாகவும் தெளிவாகவும் இப்போது அவளது குரல் ஒலித்தது. சேங்கின் கண்கள் மூடியிருந்தன. மெல்ல தன் தலையை இப்படியும் அப்படியுமாய் ஆட்டிக்கொண்டிருந்தாள். நாய் குலைத்துக்கொண்டிருந்தது.   ‘அது என்னோட நாய்தான்’ டயர் சொன்னாள். ‘ஃப்ரெட்டிய எப்பவுமே அதுக்குப் பிடிக்காது. அது ஒரு ஃபுட்பால் சைஸ்லதான் இருக்கும். ஆனா ஒவ்வொரு தடவையும் ஃப்ரெட்டி வரும்போது மாடிப்படியில இருக்கற கதவை நான் சாத்தறமாதிரி பண்ணிடும்’.   சேங்க் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்தாள். சத்தமில்லாமல் அவள் பேசுகருவியை மேசையின் மீது வைத்தாள். பிறகு மீண்டும் அதை எடுத்துக்கொண்டாள்.   ‘நான் போகணும்’ என்றான் பால்.   ‘நானுந்தான்’ டயர் ஒப்புக்கொண்டாள். ‘இப்ப நீ அவகிட்ட சொல்லணும்னு எனக்குப் படுது’.   அவனது தந்திரம் டயருக்குத் தெரிந்துவிட்டது என்றும், சேங்கும் இதை கவனித்துக்கொண்டிருக்கிறாள் என்று அவளுக்குத் தெரிந்துவிட்டதோ என்றும் பயந்து அவன் திடுக்கிட்டான். ‘அவகிட்ட என்ன சொல்லணும்?’   ‘என்னைப் பத்தியும் பாரூக் பத்தியும் அவகிட்ட சொல்லு. அவளுக்கு அது தெரியணும். நீ அவளுக்கு ஒரு நல்ல நண்பன்னு தெரியுது’.   டயர் தொலைபேசியை வைத்துவிட்டாள். அதன் பிறகு நீண்ட நேரம் பாலும் சேங்கும், அங்கிருந்த ஓசையின்மையை கேட்டபடி உட்கார்ந்திருந்தார்கள். தன்னைப் பற்றி அவன் சேங்கிடம் தெளிவுபடுத்திக் கொண்டபின்பும் அவனுக்கு சமாதானமாயில்லை.  தன்னை நிரூபித்துக்கொண்ட நிறைவுமில்லை. கடைசியில் சேங்க் தன்னுடைய தொலைபேசியை வைத்துவிட்டு மெல்ல எழுந்தாள். ஆனால் வேறெந்த அசைவுமில்லை. அனைத்திலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டவளாய் தெரிந்தாள். இன்னும் யாருமறியாது அவள் இருக்கவேண்டும் என்பதுபோல, மெல்லிய  ஓசையோ அல்லது அசைவோ கூட அவளது இருப்பைக் காட்டிக்கொடுத்துவிடக் கூடும்  என்பது  போல,தன்னையே கட்டுப்படுத்திக்கொண்டிருந்தாள்.   ‘என்னை மன்னிச்சுடு’ கடைசியில் பால் சொன்னான்.   அவள் தலையை ஆட்டிவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். சற்று நேரத்துக்குப் பிறகு அவன் அவளை பின்தொடர்ந்தான். அறைக்கு வெளியே நின்றான். ‘சேங்க். உனக்கு எதுவும் வேண்டுமா?’   அவளது பதிலை எதிர்பார்த்து அவன் அங்கேயே நின்றான். அறையில் அவள் நடமாடும் ஓசையை அவன் கேட்டான். கதவு திறந்தபோது அவள் உடை மாற்றியிருப்பதை   அவன் கண்டான். நீண்ட, இறுக்கிப் பற்றும் கைகளுடன் கூடிய கருப்பு மேலங்கி. ஊதா  நிற மழைக் கோட்டை கையில் மடித்துப் போட்டிருந்தாள். தோளில் அவளது கைப்பைத் தொங்கியிருந்தது. ‘நான் கொஞ்சம் வெளிய போகணும்’.   காரில் போகும்போது அவள் அவனுக்கு வழி சொன்னாள். என்ன செய்யவேண்டும், எங்கே திரும்பவேண்டும் என்பதை கடைசி நிமிடத்தில்தான் சொன்னாள். ஆல்ஸ்டன்  வழியாக அவர்கள் ஸ்ட்ரோ டிரைவுக்குப் போனார்கள். ‘அங்கதான்’ சுட்டிக்காட்டியபடி அவள் சொன்னாள். ஆற்றின் கேம்பிரிட்ஜ் பக்கத்துக் கரையில் அந்த அசிங்கமான உயரமான சற்றும் கவர்ச்சியின்றி  ஆனாலும் தனியாக அந்தக் கட்டிடம் நின்றது. காரை விட்டு வெளியேறிய அவள் நடக்கத் தொடங்கினாள்.   பால் அவளைப் பின் தொடர்ந்தான். ‘என்ன பண்றே நீ?’   அவள் வேகமாய் நடந்தாள். ‘எனக்கு அவன்கிட்ட பேசணும்’. உணர்ச்சியற்ற குரலில் அவள் சொன்னாள்.   ‘எனக்குத் தெரியாது, சேங்க்’.   நடைபாதையில் அவளது காலணிகள் சத்தமெழுப்ப அவள் இன்னும் வேகமாக நடந்தாள்.   கட்டிடத்தின் முன்னறை முழுக்க பழுப்பு நிற சோபாக்களும் தொட்டிச் செடிகளுமாய் இருந்தது. மேசையிலிருந்த ஆப்பிரிக்க காவலாளி ஒருவன் சேங்கை அடையாளம் தெரிந்துகொண்டு அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான். அவன் ரேடியோவில் பிரெஞ்சு செய்தி அறிக்கையைக் கேட்டுக்கொண்டிருந்தான்.   ‘மாலை வணக்கம்’   ‘ஹலோ, ரேமண்ட்’   ‘ரொம்ப குளிரடிக்குது, மிஸ். மழை வரும்னு நெனக்கறேன்’.   ‘வரலாம்’.   எலிவேட்டர் வந்து சேரும் வரையிலும் அதன் பொத்தானின் மீது விரலை வைத்து அழுத்திக்கொண்டேயிருந்தவள் எதிரிலிருந்த கண்ணாடியில் தன்னுடைய தலை முடியைத் திருத்திக்கொண்டாள். பத்தாவது மாடியில் அவர்கள் இறங்கினர். அந்த வராண்டாவின் கடைசிக்கு நடந்தனர். கதவுகள் பழுப்பு நிறத்தில் வார்னிஷ் பூச்சுடன் இருந்தன. கதவுப் பரப்பில் ஒரு சிறிய பித்தளை படத்தின் சட்டம்போலத் தொங்கிக்கொண்டிருந்த கதவொலிப்பானைத் தட்டினாள். உள்ளே தொலைக்காட்சியின் ஓசை கேட்டது. பின்பு மெளனம்.   ‘நான்தான்’ என்றாள் அவள்.   மறுபடியும் தட்டினாள். ஐந்து முறை தொடர்ந்து தட்டினாள். கதவில் தனது உச்சந்தலையை அழுத்திக்கொண்டாள். ‘அவ சொன்னதை நான் கேட்டேன் பாரூக். டயர் பேசினதை நான் கேட்டேன். பாலை அவள் கூப்பிட்டு பேசினாள். நான் அதைக் கேட்டேன்.’ சேங்கின் குரல் நடுங்கியது.   ‘தயவு செஞ்சு கதவைத் திற’ தாழ்ப்பாளை திறக்க முயன்றாள் அவள். தாழ்ப்பாள் உறுதியான இரும்பாலானது. அசைய மறுத்தது.   காலடியோசை. சங்கிலியை அகற்றும் ஓசை. பாரூக் கதவைத் திறந்தான். ஒரு நாள் தாடி அவன் முகத்தில். புள்ளியிட்ட ஒரு மீனவ ஸ்வெட்டர், கார்டராய் பேண்ட், வெறுங்காலில் கருப்பு காலணிகள். பார்ப்பதற்கு அவன் ஒரு பெண்பித்தன் போல் தெரிந்தான். ‘உன்னை நான் இங்க வரச் சொல்லலை’ பாலைப் பார்த்தவுடன் அவன் கடுப்புடன் சொன்னான்.   எல்லாவற்றையுமே அறிந்திருந்தபோதிலும் அந்த வார்த்தைகளைக் கேட்டு பால் திடுக்கிட்டுப் போனான். அவனால் எதிர்த்து எதையுமே பேச முயெவில்லை.   ‘தயவு செஞ்சு போயிடு’ பாரூக் சொன்னான். ‘தயவு செஞ்சு, போயிடு. எங்களோட அந்தரங்கத்துக்குக் கொஞ்சம் மரியாதை கொடு’.   ‘அவதான் என்னை வரச் சொன்னாள்’ என்றான் பால்.   கைகளை உறுதியாக முன்னால நீட்டிக் கொண்டு பாரூக் முன்னகர்ந்தான். ஒரு பெரிய மரச்சாமானைத் தள்ளுவது போல பாலைத் தள்ளினான். ஓரடி பின்னால் நகர்ந்த பால் பின்பு எதிர்த்தான். பாரூக்கின் மணிக்கட்டுகளைப் பற்றினான். வராண்டாவில் இருவரும் விழுந்தனர். பாலின் கண்ணாடி தரைவிரிப்பின் மீது பறந்தது. பாரூக்கை தரையில் வீழ்த்தி அவனுடைய தோள்களில் தனது விரல்களை ஊன்றுவது பாலுக்கு கஷ்டமாயிருக்கவில்லை. பால் தன் விரல்களை அவனது ஸ்வெட்டரின் கம்பளிப்பரப்பினூடாக உறுதியாகப் பற்றி இறுக்கிக்கொண்டான். தசையிறுக்கம் தளர்வதையும் பாரூக்கிடமிருந்து இப்போது எதிர்ப்பில்லை என்பதையும் உணர்ந்தான். ஒரு கணம் பால் அவன் மீது ஒரு காதலியைப் போல ஆக்கிரமித்தபடி அமர்ந்திருந்தான். நிமிர்ந்து அவன் சேங்கைத் தேடினான். அவள் இல்லை. தனக்கடியிலிருந்தவனை அவன் திரும்பிப் பார்த்தான். தான் சற்றும் அறியாத, தான் முற்றிலுமாய் வெறுக்கும் ஒருவன். ‘அவளுக்கு வேணுங்கறதெல்லாம் நீ எல்லாத்தையும் ஒத்துக்கணும். அவ்வளவுதான்’ என்றான் பால். ‘அவகிட்ட நீ அப்படி செஞ்சுதான் ஆகணும்னு நான் நெனக்கறேன்’.   பாரூக் பாலின் முகத்தில் துப்பினான். குளிர்ச்சியான எச்சில் பாலை சற்றே பின்னகர வைத்தது. பாரூக் அவனை உதறிவிட்டு தனது வீட்டுக்குள் போய் கதவை அறைந்து சாத்தினான். வராண்டாவில் இருந்த மற்ற வீட்டுக் கதவுகள் திறக்கத் தொடங்கின. பாரூக் கதவுச் சங்கிலியைப் பொருத்தும் ஓசை பாலுக்குக் கேட்டது.   தனது கண்ணாடியைத் தேடியெடுத்த அவன் எழுந்து நின்று வார்னிஷ் பூசப்பட்ட கதவில் காதை அழுத்திக்கொண்டான். அழுகையோசையையும் பொருட்கள் வரிசையாக கீழே  விழும் ஓசையையும் அவன் கேட்டான். ஒரு கட்டத்தில் பாரூக் சொன்னதை கேட்க முடிந்தது. ‘தயவு செஞ்சு நிறுத்து. நீ நெனக்கற அளவுக்கு மோசமில்லை’. பிறகு சேங்க் சொல்வதும் கேட்டது. எத்தனை தடவை? எத்தனை தடவை நீ செஞ்சே? இதோ இந்த படுக்கையில நீ பண்ணினயா?’   ஒரு நிமிடத்துக்குப் பிறகு எலிவேட்டர் கதவு திறந்தது. பாரூக்கின் வீட்டை நோக்கி ஒருவன் வந்தான். வெளுத்த தலை முடியுடன் ஒல்லியாக இருந்த                 அவனது  கையில் ஒரு பெரிய சாவிக் கொத்து இருந்தது. ‘நான் இந்த கட்டிடத்தோட மேற்பார்வையாளன். நீ யாரு?’ பாலிடம் அவன் கேட்டான்.   ‘உள்ளே இருக்கற பொண்ணு கூட தங்கிருக்கறவன் நான்’ பாரூக் வீட்டுக் கதவைச் சுட்டிக்காட்டியபடி சொன்னான் பால்.   ‘அவளுடைய கணவனா?’   ‘இல்லை’   அண்டைவீட்டுக்காரர்கள் புகார் கொடுத்ததாகச் சொல்லி மேற்பார்வையாளன் கதவைத் தட்டினான். கதவு திறக்கும் வரையிலும் தொடர்ந்து அவன் விரல்களை மடக்கி தட்டிக் கொண்டேயிருந்தான்.   உள்ளே சக்திவாய்ந்த விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட வராந்தா இருந்தது. ஜன்னல்களில்லாத வெண்ணிற சமையலறையும் அலமாரியில் சமையல் புத்தகங்களும் பாலின் கண்ணில் பட்டன. சேங்கின் அறையிலிருப்பது போலவே பச்சை நிறம் பூசப்பட்ட ஒரு உண்ணும் அறை வலதுபக்கத்தில் இருந்தது. மேற்பார்வையாளனைத் தொடர்ந்து பாலும் முன்னறைக்குச் சென்றான். பழுப்பு நிறத்தில் ஒரு சோபாவும் தேநீர் மேசையும் பால்கனிக்கு செல்வதற்கான கண்ணாடியாலான ஒரு தள்ளு கதவும் இருந்தன. நிறங்கள் நிறைவதும் வழிவதுமாய் சிட்கோ நியான் விளக்கு தொலைவில் தெரிந்தது. சுவர் ஒன்றையொட்டி இருந்த ஒரு புத்தக அலமாரி  தரையில் சரிந்து கிடக்க புத்தகங்கள் குவிந்து கிடந்தன. ஓரத்திலிருந்த மேசையொன்றில் இருந்த தொலைபேசியின் பேசுகருவி வயருடன் தொங்கியபடி தொடர்ந்து மெல்லிய ஓசையெழுப்பிக் கொண்டிருந்தது. இவையெல்லாம் இருந்தும் யாரோ அந்த வீட்டைவிட்டு வெளியேறுவதற்கான ஆயத்தத்தில் இருப்பது போல ஒரு வெறுமை இருந்தது.   ஓரியண்டல் தரைவிரிப்பின் மீது மண்டியிட்டிருந்த சேங்க் கண்ணாடி பூச் சாடியின் உடைந்த பாகங்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தாள். நடுங்கியிருந்தாள். அவளது தலை முடி அவிழ்ந்து பாதி முகத்தை மறைத்தபடி தரையை நோக்கி கவிந்திருந்தது. எல்லாப் பக்கமும் தண்ணிர் கொட்டிக் கிடக்க சிதைந்த பூச் சாடியிலிருந்த ஐரிஷ் பூக்களும் டைகர் லில்லிப் பூக்களும் டஃபோடில் பூக்களும் இறைந்து கிடந்தன. உடைந்த கண்ணாடித் துண்டுகளை அவள் கவனமாக சேகரித்து தேநீர் மேசையின் மீது வைத்தாள். அவளுடைய தலைமுடியிலும் முகத்திலும் கழுத்திலும் அவளுடைய கருப்பு நிற மேற்சட்டையின்  வட்டக் கழுத்துப் பகுதி வெளிக்காட்டிய தோல் பிரதேசத்திலும், ஏதோ ஒரு வாசனைப் பூச்சை பூசிக்கொண்டதுபோல, பூவிதழ்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அவளுடைய கழுத்துக்கு மேலாக புத்தம் புதிய வெட்டுக் காயம் தெரிந்தது.   அங்கிருந்த ஆண்கள் அவளைப் பார்த்தபடி யாருமே எதுவுமே சொல்லாமல் நின்றிருந்தார்கள். கருப்பு காலணிகள் போட்டிருந்த போலிஸ்காரன் துப்பாக்கியுடன் வந்து சேர்ந்தான். அவனிடமிருந்த ரேடியோவின் ஓசை அறையை நிறைத்திருந்தது. அறையிலிருந்த மெளனத்தை அது இடம் மாற்றியது. கட்டிடத்திலிருந்த யாரோ ஒருவர் காவல் நிலையத்தில் புகார் தந்ததாய் அவர் சொன்னார். பாரூக் அவளை அடித்தானா என இன்னும் தரையில் உட்கார்ந்திருந்த சேங்கிடம் அவன் கேட்டான். சேங்க் தலையாட்டினாள்.   ‘நீ இங்க இருக்கறவளா?’ அவன் கேட்டான்.   ‘நான் சுவரைப் பூசிட்டிருந்தேன்’ நடந்தவற்றை விளக்குவது போல சேங்க் சொன்னாள். பில்லி ஹாலிடே இசையைக் கேட்டபடியே வெறுங்காலுடன் அவள் தன் அறையை பூசிக் கொண்டிருந்ததை பால் நினைத்துக்கொண்டான்.   போலிஸ்காரன் கீழே குனிந்து விரிப்பின் மீது கிடந்த கண்ணாடித் துண்டுகளையும் பூங்கொத்தையும் பரிசோதித்து விட்டு அவளது வெட்டுக் காயத்தைப் பார்த்துவிட்டு அவன் கேட்டான் ‘என்ன நடந்தது?’   ‘நாந்தான் செஞ்சுட்டேன்’ என்றாள் அவள். அவளுடைய கன்னத்தில் கண்ணிர் அவசரமாய் உருண்டது. அவளுடைய குரல் அவமானத்தில் கமறியது ‘இது எனக்கு நானே செஞ்சுட்டது’.   அதற்குப் பிறகு ஆட்கள் யாரும் யாருக்கும் பதிலளிக்காமல் வெவ்வேறு திசையில் நகர்ந்தபடியிருக்க எல்லாமே சம்பிரதாயப்படி நடந்தேறியது. போலிஸ்காரன் படிவமொன்றை நிரப்பினான். ஒரு கையைப் பற்றி சேங்கை குளியலறைக்கு அழைத்துச் சென்றான். ஏதோ அபராதம் குறித்து பாரூக்கிடம் சொல்லிவிட்டு மேற்பார்வையாளன் போய்விட்டான். சமையலறையிலிருந்து பாரூக் கொஞ்சம் பேப்பர் ரோலையும் ஒரு குப்பைப் பையையும் கொண்டு வந்தான். தரைவிரிப்பில் மண்டியிட்டபடி சேங்க் செய்து வைத்திருந்த அலங்கோலத்தை சுத்தமாக்கத் தொடங்கினான். அப்போதுதான் முதன் முதலாகப் பார்ப்பதுபோல போலிஸ்காரன் பாலை பார்வையால் அளந்தான். அவனுக்கும் இதில் சம்பந்தமுண்டா என விசாரித்தான்.   ‘நான் அவளோட வீட்டில கூட இருக்கறவன். அவள இங்க கூட்டிட்டு வந்தேன்’ என்று பதிலளித்தான்.   மறுநாள் காலை கார் கதவை மூடும் சத்தம் கேட்டு பால் விழித்துக்கொண்டான். ஜன்னலருகே சென்று பார்த்தபோது ஓட்டுநர் காரின் பின் பக்கமாய் உள்ளங்கையை வைத்து அழுத்துவதைக் கண்டான். தனது அக்காவைப் பார்ப்பதற்காக                 லண்டனுக்கு  செல்வதாக ஒரு குறிப்பை சமையலறை மேசையின் மீது விட்டுவிட்டு   சேங்க் போயிருந்தாள். ‘பால், நேற்று செய்த உதவிக்கு நன்றி’ என்றிருந்தது அதில்.  கூடவே அவள் பங்கு வாடகைக்கான காசோலை ஒன்றும் இருந்தது.   சில நாட்கள் வரை எதுவும் நடக்கவில்லை. அவளது தபால்களை அவன் வாங்கி வைத்தான்.  புத்தகக் கடையிலிருந்து அழைத்து சேங்க் எங்கேயென்று விசாரித்தார்கள். அவளுக்கு குளிர் காய்ச்சல் என்று பால் சொல்லிவைத்தான். இரண்டு வாரங்களுக்குப் பிறகு புத்தகக் கடையிலிருந்து மறுபடியும் அழைத்தார்கள். இந்த முறை அவளை திட்டுவதற்காகத்தான் அழைத்திருந்தார்கள். மூன்றாவது வாரத்திலிருந்து சேங்கிடம் பேச வேண்டுமென்று சொல்லி பாரூக் அழைக்கத் தொடங்கினான். தன்னை யாரென்று அவன் சொல்லிக் கொள்ளவில்லை. ‘சேங்க் இல்லை’ என்று ஒவ்வொரு முறையும் தொடர்ந்து பால் பதில் சொன்னபோதும் அவன் வேறெதையும் வலியுறுத்திக் கேட்கவில்லை. நன்றியென்றும் மறுபடியும் அழைக்கிறேன் என்றும் பாலிடம் முன்பு எப்போதும் இல்லாத பணிவு காட்டினான் அவன். பால்இந்த அழைப்புகளை விரும்பி அனுபவித்தான். சேங்க் எங்கிருக்கிறாள் என்று அவனுக்குத் தெரிந்ததை பாரூக்கிடமிருந்து மறைப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால் மறு முறை அவன் அழைத்தபோது, தேர்விற்கு  படிப்பதற்காக அந்த வாரம் வீட்டுக்கு வந்திருந்த ஹீதர்தான் பதிலளிக்க நேர்ந்தது. ‘சேங்க் நாட்டை விட்டே போய்விட்டாள்’ என்று அவள் சொன்னது பாரூக்கின் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.   அந்த மாத இறுதியில் வாடகை செலுத்தவேண்டி வந்தது. வாடகை தருமளவிற்கு பாலிடமும் ஹீதரிடமும் போதுமான பணம் இருக்கவில்லை. சேங்கின் பெற்றோர்களிடம் தொடர்பு கொள்வதற்கு பதிலாக ஒரு பழைய தொலைபேசி கட்டணப் பட்டியலில் இருந்து லண்டனில் உள்ள அவளது அக்காவின் வீட்டு எண்ணைக் கண்டுபிடித்தான். அவளைப் போலவே குரலுடைய ஒரு பெண்தான் பதிலளித்தாள்.   “சேங்க்தானா பேசறது?”   தொலைபேசி கைமாறி ஒரு ஆண் இப்போது பேசினார். “யாரது?”   “அமெரிக்காவில, புருக்ளின்ல அவளோட வீட்டுல கூட இருக்கற பால் பேசறேன். சேங்க் கிட்ட நான் பேசணும்”   நீண்ட நேர மெளனம். சில நிமிடங்கள் கழிந்தன. போனை வைத்துவிட்டு மறுபடியும் பேசலாமா என்று அவன் நினைத்தான். ஆனால் அதற்குள் அந்த ஆள் போனில் பேசினான். தாமதத்திற்கு அவன் வருத்தம் தெரிவிக்கவில்லை. “அவளால இப்ப பேசமுடியாது. நீங்க கூப்பிட்டதுக்கு அவ பதில் சொல்வான்னு நெனக்கறேன்”   சேங்கின் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக அந்த வார இறுதியில் சார்லஸ் வந்தான். குப்பைப் பையில் அவளது உடுப்புகளை அள்ளிப் போட்டான். படுக்கை விரிப்பை அகற்றிவிட்டு அதை கீழே கொண்டு செல்ல பாலிடம் உதவி செய்யச் சொன்னான். சமையலறை மேசையின் மீது செய்தித்தாளைப் போட்டு இந்திய ஓவியங்களை சுற்றியெடுத்துக் கொண்டான். சேங்கிடம் அவன் தொலைபேசியில்  பேசியதாகவும்அந்த கோடை காலம் முழுவதும் அவள் லண்டனில் தன்               அக்காவுடன்தான் இருப்பதாகசொன்னதாகவும் அவன் பாலிடம் சொன்னான். “அவளை விட்டுருன்னு நான் சொல்லிட்டே இருந்தேன் தெரியுமா?  நான் அவனைப் பாத்ததேயில்லைன்னு சொன்னா நம்புவயா  நீ?”   அவளுடைய அறையில் அவள் பூசியிருந்த பச்சை மற்றும் கருஞ்சிவப்பு நிற வண்ணங்களையும் பாத்திரங்களை உலரவைக்கும் மாடத்திற்கு மேலாக அவள் வைத்திருந்த ஒரு தொங்கு தாவரத்தையும் தவிர எல்லாவற்றையும் வண்டியில் அடுக்கி சரிபார்த்துவிட்டு சார்லஸ் சொன்னான்.”அவ்வளவுதான்னு நெனக்கறேன்”   சரக்கு வண்டி சென்று மறைந்தது. ஆனால் தெருவில் வரிசையாக நின்ற வீடுகளை பார்த்தபடி கொஞ்ச நேரம் பால் அங்கேயே நின்றான். சார்லஸ் அவளுடைய நண்பனாக இருந்தபோதும் அவள் அவனிடம் சொல்லவில்லை. டயரைப் பற்றி பாலுக்கு சில   மாதங்களாகவே தெரியும் என்று அவள் சார்லஸிடம் சொல்லவில்லை. அன்றிரவு பாரூக்கின் வீட்டில் குளியலறையில் முகம் கழுவிக்கொண்ட பின்பு சேங்க் தரையில் தவழ்ந்தபடி பாரூக்கின் உடை அலமாரிக்குள் போய் கட்டுப்படுத்தமுடியாமல் அழுதாள். ஒரு சமயத்தில் தன்னையே அவள் செருப்பால் அடித்துக்கொண்டாள். அலமாரியிலிருந்து வெளியே வர மறுத்தவளை போலிஸ்காரன்தான் தோள்பட்டையைப் பிடித்துத் தூக்கி வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாய் வெளியே இழுத்துவந்து அவளை வீட்டுக்கு அழைத்துப் போகும்படி பாலிடம் சொன்னான். சின்ன சின்ன பூவிதழ்களும் இலைகளும் அப்போதும் அவள் தலைமுடியில் ஒட்டியிருந்தன. எலிவேட்டரிலும் வீட்டுக்கு வரும் வழி முழுவதும் அவள் பாலின் கைகளைப் பற்றிக்கொண்டிருந்தாள். காரில் அவள் முழங்கால்களுக்கு நடுவில் தலையை வைத்துக்கொண்டு அவன் கார் கியரை மாற்றும்போது கூட பிடியைத் தளர்த்தாது அவன் கையைப் பற்றியபடியே தொடர்ந்து அழுதுகொண்டு வந்தாள். அவளுடைய சீட் பெல்டை அவன்தான் போட்டுவிட்டான். அவளுடைய உடல் வளைந்து கொடுக்காது மூர்க்கத்துடன் இருந்தது. நிமிர்ந்து  பார்க்காமலேயேஅவர்களுடைய தெருவிற்கு வந்ததை அவள் தெரிந்து கொண்டது போலிருந்தது. அப்போது அவள் அழுகையை நிறுத்திவிட்டாள். அவள் மூக்கு ஒழுகிக்கொண்டிருந்தது. புறங்கையால் அதை அவள் துடைத்தாள். லேசான மழை பெய்யத் தொடங்கியது. சில நொடிகளிலேயே ஜன்னல் கண்ணாடிகளிலும் காரின் முன்பக்கக் கண்ணாடியிலும், அவள் தன் மீது தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களைப் போல, கீறல்கள் விழுந்தன. சிறிய சாய்கோடுகளில் மழைத் துளிகள் வரிசை கோர்த்தன.   பால் பரீட்சையில் தேறிய தினம் அவனுடைய இரண்டு பேராசிரியர்க்ள அவனை ஃபோர் சீசன்ஸ் பாருக்கு குடிப்பதற்காக அழைத்துச் சென்றனர். அன்று பிற்பகலில் அவன் நிறைய குடித்திருந்தான். வழக்கத்துக்கு மாறான இளவெப்பமான அந்த நாளில் அவன் சில்லென்ற மார்டினிஸைக் குடித்தான். அவற்றை அவன் வெறும் வயிற்றில் வெகு அவசரமாய் குடித்தான். முந்தைய இரவு கொஞ்சநேரம்தான் அவன் தூங்கியிருந்தான். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி கஷ்டமான அந்த மூன்று மணி நேரத்தையும் அனுபவித்து மிக நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருந்தான். அவனுடைய முந்தைய கசப்பான அனுபவத்தைக் குறிப்பிட்ட அவனது  தேர்வுக் குழுவினர் “அப்படியொன்று நடக்கவே இல்லையென்று வைத்துக்கொள்வோம்”என்றனர். கடைசியாக கை குலுக்கி விட்டு, வெகு நேரம் அவன்  முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு அவர்கள் அவனை விட்டுச் சென்ற பின்பு அவன் ஆண்கள்  கழிவறைக்குச்சென்று முகத்தைக் கழுவிக்கொண்டான். தாடையில் வெண்ணிற துவாலையை வைத்து அழுத்திக்கொண்ட அவன் முகம் கழுவும் சிறு தொட்டிக்குப் பக்கத்தில் ஒரு தோல் உறையில் வைத்திருந்தவாசனை திரவியத்தை பீய்ச்சிக் கொண்டான். வராந்தாவுக்கு திரும்பினான். அங்கிருந்த வரவேற்பு மேசை, ஏராளமான பூக்களுடன் இருந்த பூங்கொத்துக்கள், நேர்த்தியான உடையணிந்த விருந்தினர்கள், ஆடம்பரமான பெட்டிகள் அடுக்கிய பித்தளை வண்டிகள் என எல்லாமே ராட்டினத்ததைப் போல அவனைச் சுற்றி சுழன்றன. பின்பு அவனுடைய பார்வைக்குக் குறுக்காக ஒன்றன் பின் ஒன்றாக மிதந்தன. ஒரு கணம் வாணவேடிக்கையைப் போல தோன்றியும் மறைந்துமிருந்த இந்தத் தோற்றங்களை, முடிந்துபோய்விடக்கூடாது என்ற எண்ணத்துடன், அவன் கவனித்தபடியிருந்தான். வரவேற்பு மேசைக்குச் சென்று பெரிய வெண்ணிற படுக்கையும் மெளனமும் நிரம்பிய ஒரு அறையைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டிய அளவு உடனடியாக பணம் வேண்டுமென்று நினைத்தான்.  வெளியே வந்து ஒரு மூலையில் திரும்பி தெருவொன்றைக் கடந்தான். காமன்வெல்த் அவென்யூவை நோக்கி நடந்தான். பல்கலைக் கழகத்துப் பக்கமாயிருப்பது போலில்லாமல் அது இந்தப் பக்கம் வேறுமாதிரியிருந்தது. இரண்டு பக்கங்களிலும் மரங்கள் அடர்ந்து, அற்புதமான வீடுகள் சூழ்ந்திருக்க, அவற்றின் கட்டிட நேர்த்தியை உட்கார்ந்து ரசிக்கும்படியாக பெஞ்சுகள் போடப்பட்டு இங்கே அது மிக அழகானதாயிருந்தது. குறுக்குத் தெருக்கள் பெர்கிலி, கிளேரெண்டன், டார்ட்மெளத் என்று ஆங்கில அகர வரிசைப்படி நீண்டன.   அவ்வப்போது தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஒரு வாடகைக் காரை எதிர்பார்த்தபடி, இன்னும் போதையுடன் அவன் மெல்ல நடந்தான். எக்ஸ்டர் தெருவில் பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒரு ஜோடியை அவன் கண்டான். அது பாரூக்கும் ஒல்லியான களைத்துப் போனத் தோற்றத்துடனான ஒரு பெண்ணும்தான். அவளுடைய தூக்கலான மூக்கு அவளது முகத்துக்கு சற்றுப் பெரியதாகவே இருந்தது. குச்சிக் கால்களை குறுக்காகப் போட்டிருந்தாள். அவளது அடர் நீல நிறக் கண்களுக்கு மேலாக இமைகள் மஸ்காராப் பூச்சுடனிருந்தன. மணல் துகளொன்று கண்ணில் விழுந்து உறுத்துவது போல அவள் அடிக்கடி கண்களை சிமிட்டியபடி இருந்தாள்.   அவர்களுக்கு எதிரில் ஒரு காலி பெஞ்ச் இருந்தது. பால் அங்கே சென்று உட்கார்ந்தான். கழுத்துப் பட்டையைத் தளர்த்திக்கொண்டு நேராக பாரூக்கைப் பார்த்தான். இவனுக்காக டயர் முன்பின் அறியாத ஒருவனை அழைத்து தன்னையே முட்டாளாக்கிக் கொண்டாள். இவனுக்காக சேங்க் தனது எல்லா வரன்களையும் ஒதுக்கிவிட்டு வீட்டிலிருந்து ஓடினாள். ஏனென்றால் வரன்களுக்கு அவளைத் தெரியாது. அவர்களுக்கு அந்த வாய்ப்பிருந்திருக்கவில்லை. ” அதெல்லாம் காதல் இல்லை ” என்று அவள் எப்போதும் சொல்லுவாள். இப்போதும் கூட அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிப்படையான எண்ணத்துடன் அவர்கள் அழைப்பதுண்டு. “அவளோட லண்டன் நம்பர் தெரியுமா?” என்றுகூட யாரோ கேட்டார்கள். ஆனால் பால் அதை தூக்கிப் போட்டுவிட்டான். அவனது தலை இப்படியும் அப்படியுமாய் ஆடிக்கொண்டிருக்க அவன் பாரூக்கை மிகக் கவனமாக அளந்தான். பால் இவன் மீது ஏறி உட்கார்ந்திருக்கிறான். தனக்கடியில் அவன் அந்த கால்களையும் மார்பையும் உணர்ந்தான். அவனுடைய சருமத்தின், தலை முடியின், மூச்சுக் காற்றின் மணத்தை நுகர்ந்தான். சேங்கிடமும் டயரிடமும் அவன் பகிர்ந்துகொண்ட விஷயம் அது. இருவருமே அது அவர்களுக்கு  மட்டுமானது  என்று நம்பியிருந்த விஷயம். பாரூக்கும் அந்தப் பெண்ணும்               ஒருவரையொருவர்   பார்த்துக்கொண்டனர். பார்த்துக்கொள்ளட்டும் என்று நினைத்த  பால் புன்னகைத்தான். இந்தப் புதிய பெண்ணை பக்கத்தில் வைத்துக்கொண்டு பாரூக்கால் என்ன செய்தும் அவனைத் தடுக்க முடியாது. மாலை நேரத்து சூரியன் அவன் உடலையும் முகத்தையும் சூடேற்ற அனுமதித்தவனாய் அவன் பெஞ்சின்  மரக்  கட்டையில் அவனது தலை படுமாறு குனிந்து கொண்டான். கால் நீட்டிப் படுத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. கண்களை மூடிக்கொண்டான்.   அவனது தோள் பகுதியை யாரோ தொட்டது போல் உணர்ந்தான். பாரூக்தான் அவன் எதிரில் நின்றிருந்தான்.   “நான் உன்மீது வழக்கு தொடுக்காமல் இருந்ததை எண்ணி நீ சந்தோஷப்படனும்” என்றான் பாரூக். அவன் மிக கொஞ்சமாய் அதே சமயம் சற்றும் வெறுப்பின்றி ஏதோ சாதாரணமாய் பேசுவது போலவே பேசினான்.   பால் கண்ணாடியைத் தள்ளிவிட்டு கண்களை கசக்கிக் கொண்டான். “என்ன?”   “நீ என்னோட தோளை உடைச்சிட்டே. எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்கணும் நான். அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம்.” பாரூக்குக்குப் பின்னால் சில அடி தூரம் விலகி நின்ற அந்தப் பெண் என்னவோ சொன்னாள். பாலினால் அதைக் கேட்க முடியவில்லை.   “அவன் தெரிஞ்சுக்கணும்” அவனது குரல் வெறுப்புடன் வலுக்க பாரூக் அவளிடம் சொன்னான். பிறகு அவன் தோளைக் குலுக்கினான். இருவரும் சேர்ந்து நடந்து போனார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து நடந்து போன விதம் விநோதமாயிருந்தது. ஒன்றாகவே நடந்தபோதும் இருவருக்கிடையேயும் இடைவெளி இருந்தது. அந்தப் பெண்ணின் கையிலிருந்த நீண்ட கயிற்றின் நுனியில் ஒரு சிறிய மஞ்சள் நிற நாய் இருந்ததையும் தன்போக்கில் அது அவளை இழுத்துக் கொண்டு போவதையும் பால் அப்போதுதான் கவனித்தான்
     
( ‘யாரும் யாருடனும் இல்லை’ என்பது உமா மகேஸ்வரியின் நாவல் தலைப்பு/ இக் கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்க முடியாது என்பதால் அதையே இக் கதைக்குத் தலைப்பாக்கியிருக்கிறேன் )



No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...