மாநகரச்
செடியின் வண்டல் நினைவுகள்
(விதானத்துச்
சித்திரங்கள் - ரவிசுப்ரமணியத்தின்
கவிதைகள்)
0
0
நவீன
தமிழ்க் கவிதையைக் குறித்து
ஒருவித சலிப்பு மேலோங்கிக்
கிடந்தபோதும் கவிதையை
வாசிக்காமல் இருப்பது இயலாமல்
போன ஒன்று. குப்பைகள்
பலவற்றையும் கிளறிக் கிளறி
விலக்கிப் போகும் சமயம்
சமாதானப்படுத்திக் கொள்வதற்கு
ஏதுவாய் அபூர்வமான கவிதைகள்
அவ்வப்போது தட்டுப்படுவதும்
உண்டு. அதுவே தொடர்ந்து
கவிதைகளை வாசிக்க வைக்கிற
போதையாகவும் அமைகிறது.
ஏற்கெனவே
எழுதி எழுதித் தேய்ந்துபோன
வார்ப்பிலேயே கவிதைகளைப்
பார்க்கும்போது எரிச்சல்
மேலோங்கும். கல்யாண்ஜி
இளம் கவிஞர் ஒருவரிடம்
கேட்கிறார், அந்த
வண்டியிலேயே நீயும் ஏன்
ஏறுகிறாய்?
கவிதை
எழுதும் பலரையும் பார்த்து
இந்தக் கேள்வியை கேட்கவேண்டும்.
தனக்கு முன்னால்
எழுதப்பட்டிருக்கும்
ஆயிரக்கணக்கான வரிகளை
குறைந்தபட்சம் ஒருமுறையாவது
வாசித்துப் பார்க்கும்
உழைப்புக்குத் தயாராக
இல்லையென்றால் இந்த வேலைக்கு
எதற்கு வரவேண்டும்?
கவிஞர்கள்
தங்களைத் தயார்ப்படுத்திக்
கொள்ள தயாராக இல்லையென்றால்
கவிதையும் அப்படித்தான்
விளங்கும்.
0
தனக்கென
தனித்த ஒரு கவிதை மொழியை
உருவாக்கிக் கொண்டிருக்கும்
கவிஞர்களில் ரவி சுப்ரமணியமும்
ஒருவர். ஒப்பனை
முகங்கள் கவிதைத் தொகுப்பில்
தொடங்கி இதுவரையில் ஐந்து
தொகுப்புகள். நூற்றுக்கும்
சற்று அதிகமான கவிதைகள்.
அவரது தொகுப்புகளின்
தலைப்புகளே அவரது கவிதைகளின்
தனித்துவத்தைச் சுட்டும்
வகையில் அமைந்திருப்பவை.
0
ரவி
தொடர்ந்து தீவிரமாக கவிதைகள்
எழுதுபவர் இல்லை. கவிதைத்
தன்னை வெளிப்படுத்துவதற்காய்
காத்திருக்கும் ரகத்தைச்
சேர்ந்தவர். சரியான
சொற்களுக்காக கவிதையில் அதன்
சேர்மானத்துக்காக மிகவும்
மெனக்கெடுபவர். கூட்டத்துக்கிடையே
தனித்துத் தெரிவதில் அக்கறை
கொள்பவர். தொடர்ந்து
கட்டுரைகளை எழுதியபோதும்
கவிதையே அவரது அக்கறை சார்ந்தது.
கட்டுரைகளானாலும்
ஆவணப்படங்களானாலும் கவிதையின்றி
அவை உருப்பெருவதில்லை.
0
விதானத்துச்
சித்திரங்கள் என்ற தலைப்பை
வாசித்துவிட்டு உடனடியாக
தொகுப்புக்குள் புகமுடியவில்லை.
தலைப்பே நிறைய யோசனைகளை
கிளறிவிட்டது.
விதானத்துச்
சித்திரங்கள் சாதாரணமாய்
சுலபமாய் பார்க்க வாய்க்காதவை.
நேர்பார்வைக்குக்
கிட்டாதவை. தலையை
அண்ணாந்து பார்க்க வேண்டுபவை.
கழுத்து வலிக்க கண்களை
இமைக்காமல் கூர்ந்துப்
பார்த்தால் மட்டுமே அழகு
காட்டுபவை. இருண்ட
வானின் நட்சத்திர மண்டலத்தைப்
பார்ப்பது போன்ற தியானத்துடன்
பார்க்கும்போது மட்டுமே
இச்சித்திரங்கள் துலங்கி
வெளிப்படும். உங்களுடன்
உற்சாகத்துடன் உரையாடும்.
விதானத்துச் சித்திரங்களின்
முழு எழிலையும் காண விளைபவர்கள்
முதலில் செய்யவேண்டியது
மல்லாந்து படுத்துக் கொள்வதுதான்.
கூடுதல் ரசனையுள்ளவர்கள்
காற்றில் ஏதேனுமொரு இசைச்
சரத்தைச் சேர்த்துக்கொள்வர்.
அதிலும் நாகஸ்வரம்
என்றால் கூடுதல் விசேஷம்.
நம் கண்கள் பார்க்காது
போனாலும் விதானத்துச்
சித்திரங்கள் அங்கேயேதான்
இருக்கும். நாம்
பார்க்காவிட்டாலும் அவை
நம்மைப் பார்த்துக்கொண்டுதான்
இருக்கும். சொல்லப்போனால்
அனைத்தையும் கவனித்திருக்கும்
மூன்றாம் கண்கள் அவை.
தலை
நிமிரத் தெரியாத குனிந்தே
வாழப் பழகின நமக்கு விதானங்களும்
வானமும் விலகிப்போனதைப்
பற்றிய கவலையுமில்லை.
சுரணையுமில்லை.
அதனால்தான் திருவையாறு
அய்யாரப்பர் கோயில் சித்திரங்களின்
மீது வெள்ளையடித்துத்
திருப்பணியாற்றியதை வேடிக்கைப்
பார்த்து நின்றோம். கும்பகோணம்
ராமசாமி கோயில் சுற்றுச்சுவரின்
ராமாயண சித்திரக் கதையை
ஆபாசமாய் புதுப்பித்தபோதும்
கண்டுகொள்ளாமல் இருந்தோம்.
திருபுவனத்து கற்றளி
மண்டபங்களை கிரானைட் கற்களைக்
கொண்டு ரசனையில்லாது அழகூட்டியதைப்
பற்றி தெரிந்துகொள்ளாமல்
விலகினோம். இப்போது
வேறென்ன அலங்கோலங்கள்
அரங்கேறியிருக்கின்றன என்பது
தெரியவில்லை.
கோயில்களை
சிற்பங்களை ஓவியங்களை இசை
மரபை என எல்லாவற்றையும்
தொலைக்கும் காலத்துத்
தலைமுறையாய் நாம் இருப்பது
நம்மீது கவிந்திருக்கும்
கொடுஞ்சாபம்தான். நம்
காலத்தில் இவையெல்லாம்
நடப்பதைக் காணும் துரதிர்ஷ்டம்
நம் தலையில் எழுதியிருக்கிறது.
நான்கு
ஆண்டுகள் கும்பகோணத்தில்
வசித்தவனுக்கே இத்தனை வலிக்கிறது
என்றால் அங்கேயே பிறந்து
வளர்ந்த ரவியைப் போன்ற
ஒருவருக்கு இந்த இழப்புகள்
எத்தனை பெரிய துக்கத்தைத்
தரக்கூடும். அந்தத்
துக்கத்தின் ஊற்றிலிருந்துதான்
விதானத்துச் சித்திரங்கள்
பிறந்துள்ளன.
0
இந்தத்
தொகுப்பின் கவிதைகள் பல
ரகங்களைச் சேர்ந்தவை.
பல்வேறு குரல்களில்
ஒலிப்பவை. கவிதைத்
தொகுப்பின் கவிதைகளை வரிசையாய்
படிப்பது சாத்தியமில்லை.
அப்படி வாசிக்கும்போது
ரசிக்கும்படியாகவும் இருக்காது.
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மறுபடி மறுபடி வாசிக்கும்போது
மட்டுமே தொகுப்பை உள்வாங்கிக்கொள்வது
இயலும்.
இத்தொகுப்பையும்
அவ்வாறே வாசித்தேன். கூடுதலாக
இத்தொகுப்பின் சில கவிதைகளை
என் வசதிக்காக வரிசைப்படுத்தி
படிக்கும்போது எனக்கு அவை
மேலும் ஆழம்கொண்டன. அப்படி
வரிசைப்படுத்தப் பட்டவை
நான்கு கவிதைகள்.
முதலாவது
கவிதை மேலும் ஒரு.
இருபுறமும்
நதியோடிய
வண்டல்
நகர் செடியது.
(காவிரிக்கும்
குடமுருட்டிக்கும் நடுவில்
அமைந்த வண்டல் நகர் கும்பகோணம்.)
மெல்லிய
இலையும்
நறுமணப்பூவும்
துளிர்க்கும்
தளிரும்
சௌந்தர்யம்
வேரோடு
பிடுங்கி
துர்நாற்ற
நதியோடும் பெரு நகரில்
நடப்பட்டது.
அழுக்கு
நீரைக் குடித்தன வேர்கள்
அமிலக்
காற்றில் ஆடின இலைகள்
கறுத்து
சிறுத்து சுருங்கின தளிர்கள்
எல்லாம்
கொஞ்ச காலம் தான்
இலையும்
மணமும் குணமும் மாறி
தளுதளுத்து
வளர்கிறது
மேலும்
ஒரு மாநகரச் செடி.
அப்படித்தான்
நம்மில் பலரும் வண்டல்
நகரிலிருந்து பிடுங்கி எங்கோ
ஒரு நகரத்தில் சாக்கடையோரமாய்
நடப்பட்ட செடிகள். இந்தச்
செடிகளுக்கென்றொரு பின்னணி
உண்டு. மண்வாசனை
உண்டு. அவற்றை
எல்லாம் தொலைத்துவிட்டு
எங்கோ அலைந்திருந்தபோதும்
சொந்த மண்ணை அதன் நினைவுகளை
நம்மால் மறக்க முடிவதில்லை.
உண்மையில் அந்த
நினைவுகளின் உரத்தில்தான்
நகரங்களின் நெருக்கடிகளை
நாம் எதிர்கொள்கிறோம்.
0
மேலும்
ஒரு கவிதையை அடுத்து வருகிறது
நாம் ஏன் அவனை அப்படி ஆக்கினோம்
கவிதை.
சவரம்
செய்யாத முகத்தையும்
மீறித்தெரிகிறது
இசை
களை.
பேருந்தின்
முன்னால் ஏறிய ஒருவன்
கச்சேரிக்கா
மாமா என்றான்.
சுரத்தில்லா
முறுவல் கண்டு குழம்பியவன்
அப்போதுதான்
கவனிக்கிறான்
அவனருகில்
அமர்ந்திருக்கும்
எழுநூற்று
நாற்பத்து இரண்டை
முன்னூற்று
ஐந்துக்கும் ஆச்சர்யம் தன்
ஒரு
மோர்சிங் கலைஞனால்
எப்படிக்
கொலை செய்ய முடியுமென்று
ஒரு
கான்ஸ்டபிளுக்கு
அச்
செயலின் பின் இருக்கும்
நீள
அகலத்தை உணர சாத்தியமில்லை
கச்சேரியில்
போர்த்திய துண்டு
கைவிலங்கை
மூடியிருக்கிறது
விலங்கிட்டிருந்தாலும்
விடுதலையான
உணர்வில் இருக்கிறது
அவன்
முகம்
கடும்
நெரிசலில்
குழந்தையோடு
நிற்கிறாள் அவள்
குழந்தையை
வாங்க முடியாத கணத்தில்தான்
காணச்
சகிக்கவில்லை அவன் முகம்
ஆனாலும்
தாய் அறியாது
குழந்தையின்
விரல்கள் இழுத்த
துண்டின்
நூல்களில் சேகரமாயிருந்தது
அவனின்
சில இரவுகளுக்கான
நினைவுகள்.
நகரங்களும்
அதில் பிழைக்கும் வழிகளும்
சரி தவறுகளுக்கு அப்பாற்பட்டவை.
நகரங்களில் இருப்பவர்கள்
வாழ்வதில்லை, பிழைத்துக்
கிடக்கிறார்கள். பிழைத்துக்
கிடப்பதற்கான போட்டியில்
சமயங்களில் தடம் மாறியும்
போகிறார்கள்.
இந்தக்
கவிதையில் வரும் மோர்சிங்
கலைஞருக்கு பதிலாக நீங்கள்
வேறு எந்தவொரு கலைஞரையும்
பொருத்திக் கொள்ளலாம்.
அவர்
பிரான்சிஸ் கிருபாவைப் போல
ஒரு கவிஞராக இருக்கலாம்.
யூமா வாசுகியைப் போல
ஓவியராக இருக்கலாம். ஜான்
சுந்தரின் நகலிசைக் கலைஞனில்
வரும் பாடகராக இருக்கலாம்.
திரைப்படக் கனவுகளுடன்
ஊர் உறவுகளை மறந்து பசி மறத்து
எல்லாவற்றையும் சகித்தபடி
அலையும் ஆயிரமாயிரம் உதவி
இயக்குநர்களாக இருக்கலாம்.
அவர்கள்
ஒவ்வொருவரையும் நம் முன்
நிறுத்தி இக்கவிதை நம்
எல்லோரையும் உரக்கக் கேட்கிறது.
நாம்
ஏன் அவனை அப்படி ஆக்கினோம்.
0
மூன்றாவதாக
இவ்வரிசையில் நான் வைத்திருக்கும்
கவிதை தாட்சாயணிக்குத் தட்சன்
சொல்வது.
புலன்களுக்கு
அகப்படாத ஸ்தூலமான பிறவிகளான
கலைஞர்களை கவிஞர்களை
படைப்பாளிகளுக்கு அவர்களது
வீட்டில் இருக்கும் மரியாதையை
நெருக்கடியை அவலமான நிலையை
உரத்துச் சொல்லும் இக்கவிதை
இங்கே இருக்கும் நம் அனைவருக்கும்
பொருந்தும்.
அவன்
நல்ல தந்தை இல்லையென்றும்
நல்ல
கணவன் இல்லையென்றும்
வந்தவர்களிடம்
சொல்லாதே
என
தன் மகளிடம் வேண்டிக்கொள்ளும்
தந்தையின் அவலத்தை கலைஞர்களால்
படைப்பாளிகளால் புரிந்துகொள்ள
முடியும்.
சமூகத்தை
நேசிப்பவன்
கலைகளைக்
கொண்டாடுபவன் என
அவர்கள்
நினைவிலிருக்கும் சித்திரத்தைக்
கலைத்து
சம்பாதிக்கத்
தெரியாதவன்
பூர்வ
சொத்தைத் தவறவிட்டவன்
கோபக்காரன்
என்றெல்லாம் சொல்லிப் புலம்பாதே.
இக்
கவிதையின் சிறப்பு தகப்பன்
தன் மகளிடம் சொல்வதாக
அமைந்ததுதான். இதுவே
மனைவியிடம் அல்லது மகனிடம்
சொல்வது போல அமைந்திருந்தால்
அதில் இத்தனை அழுத்தம்
இருந்திருக்காது. தந்தைக்கும்
மகளுக்குமான உறவு பிறவற்றை
விட தனித்துவமானது. அதுவே
இக்கவிதையை மேலும் ஆழப்படுத்துகிறது.
0
இந்த
வரிசையில் நான்காவதாய்
இறுதியாய் நான் சேர்த்திருக்கும்
கவிதை மகாராஜா.
இடிபாடுகளுக்கிடையில்
சிதைந்து
கிடக்கிறது
மேன்மைமிகு
மகாராஜாவின் கோட்டை
என்று
தொடங்கும் இக்கவிதை பிழைக்கத்
தெரியாதவனின் கடைசிக் காலத்தை
வலியுடன் சொல்வதாக அமைந்திருக்கிறது.
பிழைக்கத் தெரியாதவனுக்கு
வேறெதுவும் தெரியாது.
அவனுக்குத் தெரிந்தது
கவிதை. அதை மட்டுந்தான்
தொடர்ந்து அவனால் செய்யமுடியும்.
இன்னும்
பழைய நினைப்புகள்
புறா
வழியே சேதி அனுப்ப
சதா
ஏதோ
எழுதிக்
கொண்டேயிருக்கிறார்.
அசோகமித்திரன்
காலமாவதற்கு முன்பு அவரது
இறுதிக் கால எழுத்தைப் பற்றி
விமர்சனங்கள் எழுந்தன.
எதுக்கு இன்னும் அதையே
எழுதிட்டு இருக்கணும்?
என்றும் பி.சுசீலா
நடுங்கிட்டே வந்து மேடையில
பாடறது மாதிரிதான் அவர்
எழுதறதும் இருக்கு என்று
சொல்லப்பட்டது.
மூத்த
எழுத்தாளர்கள் பலரும் எழுதுவதை
நிறுத்துவதில்லை. ஜெயகாந்தன்
மட்டுந்தான் இனி நான் எழுத
மாட்டேன் என்று பேனாவை
மூடிவைத்தார். அவர்களால்
நிறுத்த முடியாது. அவர்கள்
எழுத்தில் முந்தைய அளவுக்கு
ஆழமோ அழகோ இல்லாமல் போகலாம்.
ஆனால் அவர்கள் இத்தனை
காலம் எழுதி அளித்த கொடையை
மறந்துவிட முடியாது.
இந்த
நான்கு கவிதைகளை இப்படிக்
கோர்த்து வாசிக்கும்போது
இந்த விதானத்துச் சித்திரங்களில்
இன்னும் கூடுதலான வண்ணங்களைக்
காண முடிந்தது.
0
நகர
நெருக்கடியின்பொருட்டு
இழந்துபோன இசைமயமான இளமை
நினைவுகள் பலவும் கவிதைகளாக
அமைந்துள்ளன. கவிஞருக்கு
இசைப் பயிற்சி உண்டு என்பதற்காக
அது தொடர்பான கலைச்சொற்களையெல்லாம்
கவிதையாக்கிவிட்டாரோ என்றொரு
குரல் எழக்கூடும். சொல்
வித்தை கவிதைகளில் பலிக்காது
என்பது கவிஞருக்குத் தெரியும்.
அவர் கவிதையில்
பயன்படுத்தியிருக்கும்
சொற்கள் ஒவ்வொன்றும் கவிதைக்குள்
பொருந்துவதற்கான தகுதியுடனே
உள்ளன.
ஆள்
அரவமற்ற கோயில்கள், வவ்வால்கள்
பறந்தலையும் மண்டபங்கள்,
ஏகாந்த காலத்தில்
தனித்தொலிக்கும் நாகஸ்வர
இசை, கற்கிளிகள்,
யாழிகள் என கோயில்
நகரத்தின் சித்திரங்கள்
அனைத்தும் கவிதையின் களங்களாகி
இழப்பின் வலிகளை மேலும்
கூர்மையாக்கியுள்ளன.
தொகுப்பில்
வேறு ரகமான கவிதைகள் பலவும்
உள்ளன. பத்தாண்டுகளுக்கான
கவிதைகள் தொகுக்கப்படும்போது
தவிர்க்கமுடியாதது இது.
ரவியின் பிற தொகுப்புகளில்
உள்ளது போன்ற எளிய அழுத்தமான
காதல் கவிதைகள் இத்தொகுப்பிலும்
உள்ளன. கிரஹசுழற்சி,
நீ செய்த மழை, நடை
சார்த்திய பின்னும் போன்ற
கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.
முதல் தகவல் அறிக்கை,
ஆதியில் வால் பிற்பாடு
வாள், மாண்புமிகு
போன்ற சமகால அரசியல் நடப்புகளை
எள்ளலுடன் விமர்சிக்கும்
கவிதைகள் சிலவும் தொகுப்புக்கு
கனம் சேர்த்துள்ளன.
முகநூலில்
நெடுநாளாய் நிலைத்தகவல்
போடாத திரு.கிருஷ்ணனுக்கு
ஒரு பிராது என்ற நீண்ட தலைப்பில்
உள்ள கவிதை இத்தொகுப்பின்
சிறப்பம்சம். பலரது
காலத்தைத் தின்று வீணாக்கும்
விநோத விளையாட்டின் மீதான
எள்ளலான விமர்சனத்தை வெகு
கச்சிதமாக முன் வைத்திருக்கும்
இக்கவிதை அதன் சமகாலத் தன்மையின்
காரணமாக தனித்துவம் பெற்றுள்ளது.
0
கமகம்
- என்ற தலைப்பில்
உள்ள ஒரு சிறு கவிதை ஒட்டுமொத்தத்
தொகுப்பைப் பற்றிய வெகு
சுருக்கமான குறிப்பாக
அமைந்திருக்கிறது.
நினைவின்
கமகங்களை இசைத்தபடி
தொலைவில்
இழைகிறதொரு
வயலின்
விதானத்துச்
சித்திரங்கள் நினைவின்
கமகங்களை இழைக்கும் தொலை
தூரத்து வயலின்.
0
ரவி
சுப்ரமணியத்தின் தொகுப்புகளின்
தனித்துவம் அவை ஓவியங்களுடன்
அமைவது. இத் தொகுப்பின்
ஓவியங்கள் தஞ்சையின் கூத்து
மரபினைச் சார்ந்தவை. மிகவும்
சிரத்தையுடன் ஓவியர் பாலாஜி
ஸ்ரீனிவாசனால் வரையப் பெற்றவை.
கவிதையில் ஒலிக்கும்
இசைக் குறிப்புகளை ஓவியங்களின்
அசைவில் கேட்க முடிவது
இத்தொகுப்பின் கூடுதலான
சிறப்பு.
0
No comments:
Post a Comment