Friday, 9 March 2018

முனிமேட்டில் ஒரு சந்திப்பு

நேர்காணல் : எம்.கோபாலகிருஷ்ணன்
நேர்கண்டவர் : கிருஷ்ணமூர்த்தி

தமிழ் இலக்கியத்திற்கு சூத்ரதாரி எனும் பெயரில் அறிமுகமானவர் எம்.கோபாலகிருஷ்ணன். அம்மன் நெசவு, மணல் கடிகை ஆகிய இரு நாவல்களை எழுதியுள்ளார். முனிமேடு, பிறிதொரு நதிக்கரை ஆகியவை அவருடைய சிறுகதைத் தொகுதிகள். குரல்களின் வேட்டை என்ற தலைப்பிலான கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.  காதலின் துயரம், சிகப்பு தகரக் கூரை ஆகியவற்றின் வழியே மொழிபெயர்ப்பிலும் தன் பங்கை ஆற்றியிருக்கிறார். தற்சமயம் கோவையில் வசித்து வருகிறார்.

முனிமேடு சிறுகதைத் தொகுப்பு 2007 அம் ஆண்டு வெளியானது. பதினான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு மனித உறவுகளின் உள்முரண்களை அதனதன் ஆழத்தில், செறிவான மொழியில் தீர்க்கமாக பேசக்கூடியவை. அவை கொடுக்கும் சலனங்கள் வாசகனை சுயபரிசீலனையில் ஆழ்த்துபவை. இந்தக் கதைகளின் வாழ்க்கைப் பிண்ணனியையும், கருத்தியல் பிண்ணனிகளையும் உரையாடலாக மாற்ற முனைந்தேன். சிறுகதைகள் சார்ந்த பொதுமையான உரையாடலாகவும் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

கே : முனிமேடு சிறுகதைத் தொகுப்பு வெளியாகி பத்தாண்டுகள் ஓடிவிட்டன. இந்த பத்தாண்டுகளில் சிறுகதை எனும் வடிவம் சார்ந்த தங்களின் நிலைப்பாடு மாற்றம் கொண்டிருக்கிறதா ?

ப : இல்லை. தொடக்கம் முதலே சிறுகதையின் வடிவம் குறித்து நான் கொண்டிருக்கும் அதே எண்ணம்தான் இப்போதும். என்னைப் பொறுத்தவரை ஒரு சிறுகதையின் உள்ளடக்கமே அதன் வடிவைத் தீர்மானிக்கிறது. முன் தீர்மானிக்கப்பட்ட வடிவமொன்றில் கதையை வார்ப்பதென்பது பரிசோதனைக்கு உகந்ததாயிருக்கலாம். அதில் கதை இருக்காது.

ஆனால் குறிப்பிட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறுகதை வடிவம் பொதுவான மாற்றங்களை அடைந்திருக்கிறது. அந்த மாற்றம் சிறுகதையின் பல்வேறு சாத்தியங்களை விரிவாக்கியே வந்துள்ளன. மற்றபடி மரபான சிறுகதை வடிவத்தின் அடிப்படையிலிருந்து விலகிவிடவில்லை.

தொடக்கம், நகர்வு, முடிவு என்ற இடத்திலிருந்து சற்றே நகர்ந்து தொடக்கம், நகர்வு, எதிர்பாராத முடிவு என்ற இடத்துக்கு வந்தது ஒரு காலகட்டம். சுருக்கமாகவும் செறிவாகவும் அமையவேண்டும் என்பதைக் கடந்து அளவில் நீண்டதாகவும் சித்தரிப்பில் விரிவானதாகவும் அமைந்தது அடுத்து ஏற்பட்ட மாற்றம். சமீபத்திய நகர்வு என்று குறிப்பிடவேண்டுமானால் கட்டுரைக்கும் கதைக்குமான வித்தியாசமில்லாத அமைப்பைச் சொல்லலாம். அந்த வடிவத்தில் வெளியாகியுள்ள நாஞ்சில்நாடனின் கதைகளை யோசித்துப் பார்க்கலாம்.

உருவங்கள் மாறினாலும் சிறுகதையின் அடிப்படை இலக்கணம், வாழ்வின் ஒரு கணத்தில் தருணத்தில் மையம் கொண்டிருப்பது என்கிற தன்மையில் மாற்றம் இல்லை என்பதே என் எண்ணம்.

கே : பதினான்கு சிறுகதைகள் எழுதிய போதிருந்த அனுபவத்தை பகிர முடியுமா ?

ப : இந்தக் கேள்விக்கான பதிலை யோசித்தபோது இந்த பதினான்கு கதைகளையும் வேறொரு கோணத்தில் அணுகமுடியும் என்று தோன்றுகிறது.

முதலில் என்னுடைய தனிப்பட்ட என் குடும்பம் சார்ந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள். பிற்பகல் விளையும், தோஷம், மருதாணி, அக்காவின் கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஆகிய நான்கும் அவ்வகையானவை. இப்போது வாசிக்கும்போது இந்த நான்கும் ஒரு பெரிய நாவலின் வெவ்வேறு பகுதிகள் என்று சொல்லும்படியாகவே உள்ளன. இவற்றை எழுதும்போது கூறியதுகூறல் நிகழ்ந்துவிட வாய்ப்பு அதிகம் என்ற எச்சரிக்கையுடனே எழுத வேண்டியிருந்தது. மற்றபடி மிகத் தன்னிச்சையாக லகுவாக எழுத முடிந்த கதைகள்.

இரவு, முனிமேடு, நிழல்பொழுதினிலே, நிலைக்கண்ணாடி, சொற்பொருள் பின்வரும் ஆகிய ஐந்தும் மன விளையாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டவை. உள்ளபடி எனக்கு விருப்பமான களங்கள். சம்பவங்களும் கதாபாத்திரங்களும் நேரில் கண்டவை நன்கு அறிந்தவை என்றாலும் அவர்களை அவ்வாறு திசைதிருப்பிய அவர்களின் மனதை எழுதிப் பார்க்க முற்பட்டதின் விளைவே இந்தக் கதைகள்.

கஜாரிகாவும் மண்வீணையும் வரலாற்றுச் சம்பவங்களை வேறொரு கோணத்தில் பார்க்கும் விதமானவை. எல்லா கதாசிரியர்களும் முயற்சித்தது, முயற்சிப்பது. ஒரு சிறு திருகலின் வழியாக ஒட்டுமொத்தமாக வேறொரு கோணத்தை உருவாக்க முடியும். மண் வீணை எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று.

எந்த வகைப்பாட்டிலும் அடங்காமல் எஞ்சி நிற்பவை சீஸர், யாசகன், உயிர்ப்பற்று ஆகிய மூன்றும். சீஸர் கதையை மறுபடியும் எழுதவேண்டும் என்று அவ்வப்போது யோசிப்பதுண்டு. அதனுடைய மொழி இப்போது வாசிக்கும்போது தொந்தரவு செய்கிறது.

இப்போது நான் எழுதும் கதைகளில் மொழி சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை. கச்சிதமாகவும் செறிவாகவும் எழுதிவிட முடிகிறது. அதற்கான பாதைகளும் பரிசோதனைகளுமே இத்தொகுப்பிலுள்ள கதைகள். முந்தைய தொகுப்புடன் சேர்த்துப் பார்க்கும்போது கதை எழுதத் தேர்ந்திருக்கும் களங்களும் சரி, கதைமொழியும் சரி இத்தொகுப்பில் செறிவடைந்திருக்கின்றன என்பது என் எண்ணம்.


கே : தங்களுடைய கதைகளின் மையப்பொருள் குடும்பங்களுடன் ஒடுங்கிவிடுவதன் பிண்ணனியை அறிந்துகொள்ளமுடியுமா ?

ப : குடும்ப அமைப்பிலிருந்து சமூகம் இன்னும் விலகி வந்துவிடவில்லை. ஆதாமுடன் ஏவாள் படைக்கப்பட்டவுடனேயே குடும்பம் என்கிற அமைப்பு உருவாகிவிட்டது. குடும்பம் ஒரு தனி மனிதனுக்கு எத்தனை வசதிகளை சௌகரியங்களைத் தருகிறதோ அதே அளவுக்கு தடைகளையும் சிக்கல்களையும் கூடவே கொண்டு வருகிறது. அந்த சாதக பாதகங்களுடனே வாழ்க்கை அமைகிறது. தொடர்ந்து காலம்காலமாக குடும்பத்தின் ஒடுக்குமுறை அம்சங்களைக் குறித்து விமர்சித்து வந்தபோதும் அதற்குள்ளேயேதான் வாழ வேண்டியுள்ளது. சமூகம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கும் தனிமனித சிக்கல்களுக்கும் அடிப்படையில் குடும்பத்தின் ஏதோவொரு அம்சம் காரணமாக உள்ளது. என் கதைகளும் அவற்றை மையம்கொண்டிருப்பது இயல்பானதுதான்.

எல்லா கலை வடிவங்களும் அறிய முற்படுவது மனித உறவின் புதிர் வழிகளைத்தான். நானும் அதைத்தான் முயற்சிக்கிறேன்.

விதிவிலக்காக இந்தத் தொகுப்பிலேயே சீஸர், கஜாரிகா, மண்வீணை போன்ற கதைகள் உள்ளன என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன்.

கே : குடும்ப அமைப்பிலான முரண்களிலும் தங்களது சிறுகதைகள் ஆண்மைய அதிகாரத்தையும் பெண்ணின் உடல் சார்ந்த விடுதலையையும் மைய இழைகளாக கொண்டிருக்கின்றன. இவ்விரண்டிலேயே குடும்பத்தின் உள்முரண்கள் யதார்த்தத்தில் முடங்கிவிடுகின்றனவா ?

ப : இல்லை. குடும்பத்தின் உள்முரண்கள் அதன் உறுப்பினர்களின் அகமோதல்களால் உருவாகுபவை. அகமும் புறமுமான பல்வேறு முரண்களுடனான தனிமனிதர்களை உறுப்புகளாய் கொண்டிருக்கும் குடும்ப அமைப்புக்குள்ளும் எண்ணற்ற மடங்கு மோதல்களும் முயக்கங்களும் தொடர்ந்து நிகழ்ந்தபடியேதான் இருக்கும். பொருள் சார்ந்தும் இருப்பு சார்ந்துமான ஒரு வேட்டைச் சமூகத்தின் அத்தனை போட்டிகளும் பொறாமைகளும் குடும்ப அமைப்பில் வலுவாகவும் மலினமானதாகவும்கூட உண்டு. அதன் மூலங்களை அறிந்து ஆராயப் போதுமான கருவிகள் இன்னும் வாய்க்கவில்லை நமக்கு. அத்தனை எளியதும் அல்ல.

இந்த சிக்கலான அமைப்பில் ஆண் மைய அதிகாரமும் பெண்ணின் உடல் சார்ந்த விடுதலையும் இரண்டு முக்கியமான சரடுகள். பல்வேறு உளமோதல்களுக்கும் அதன் அடிப்படையில் கிளைக்கும் புறவயமான சிக்கல்களுக்கும் இவை இரண்டுமே ஆதாரமாக அமைகின்றன. ஆண்மைய அதிகாரத்தை அதன் விளைவுகளை வெளிப்படையாக அறிய முடியும். ஆனால் பெண்ணின் உடல் சார்ந்த உளச்சிக்கல்களை அறிவது அசாத்தியமானது. அதன் வலுவான விளைவுகளை சிக்கல்களை மோதல்களை எதிர்கொள்ளும்போதுகூட அடிப்படையான காரணத்தை யாரும் கண்டறியவே முடிவதில்லை. அதற்கான தீர்வுகளை முன்வைப்பதும் யோசிப்பதுமேகூட பெரும் சவால்தான். இந்த இரண்டு சரடுகளிலும் இருக்கும் தெளிவற்ற தீவிரமும் ஆழமுமே இவ்விரண்டையும் தொடர்ந்து செல்லும் ஆர்வத்தை தந்திருக்கவேண்டும்.

கே : பெண் கதாபாத்திரங்கள் விரும்பும் உடல் ரீதியான விடுதலையில் அரணாக அமைவது வீடு என்று சித்தரிக்கப்படுகிறது. சமூகத்தில் முழு விடுதலையை உணர முடியாததால் மீண்டும் வீட்டிற்கே அவர்கள் திரும்ப விரும்புகின்றனர். இதை காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் விஷயத்தின் நவீன வடிவம் என்று மட்டும் பொருள் கொள்ளலாமா அல்லது நவீன குடும்ப அரசியலின் பிரச்சினைகள் என வரைமுறை செய்ய முடியுமா ?

ப : முதலில் குடும்பம் என்கிற அமைப்பில் எந்த நவீனமும் வந்துவிடவில்லை. ஆதாரமான அதே வடிவிலேயே இன்றளவும் அது இருந்துகொண்டிருக்கிறது. அதன் அரசியலும் மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்த அதே தன்மையுடனே உள்ளது. அதன் உள்ளீடாக வந்து சேர்ந்திருக்கும் புதிய சிக்கல்களும் பிரச்சினைகளும் புறவயமானவையே. மற்றபடி குடும்பமும் அதன் அரசியலும் அப்படியேதான் உள்ளது.

குடும்ப அமைப்பின் முக்கியமான அங்கம் வீடு. ஸ்தூலமான எல்லைகளை வகுத்து நிற்கும் உறுதியான ஒன்று. அரணாக நிற்கும் அதேசமயம் கட்டுப்பாடாகவும் விளங்குகிறது. வீட்டின் சட்டதிட்டங்களும் அது நிர்ப்பந்திக்கும் ஒழுக்க நெறிகளும் இயல்பான சுதந்திரத்தை மறுப்பவை. ஒடுக்குபவை. ஆனாலும் வீடு தரும் பாதுகாப்பு பலசமயங்களில் அவசியமானது. தவிர்க்கமுடியாதது. இந்த இரண்டுக்கும் நடுவில்தான் பெண்ணின் உடல்சார்ந்த விடுதலையை யோசிக்கவேண்டியுள்ளது. பெண்ணின் இயல்பான இருத்தலை குடும்பமும் சமூகமும் இன்னும் அஞ்சுகிறது. குறிப்பாக ஆண் பெரிதும் அஞ்சுகிறான். வீடு குடும்பம் சமூகம் என்று பல்வேறு அமைப்புகளின் வழியாக அந்த உக்கிரத்தை எதிர்கொள்ள முனைகிறான். இவை எல்லாவற்றையும் மீறி தன் இயல்பை எட்டிப் பிடிக்க முனையும் பெண் மீண்டும் இவற்றில் ஏதேனுமொன்றிலேயே கால்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றைத் தவிர்த்து வேறொரு இடத்தை இன்னும் அடைய முடியவில்லை. அவள் வீட்டிலிருந்தோ குடும்பத்திலிருந்தோ வெளியேறி  விலகிச் செல்லும் பாதை மறுபடியும் அவளை அதே இடத்துக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. அப்படியொரு அமைப்பை உருவாக்கியதில் ஆணின் பங்கு பெருமளவானது.  அப்படியல்லாத புதிய வழியை அனுமதிப்பது என்பது அவனது இருப்பை கேள்விக்குள்ளாக்குவது. எனவே அதற்கு சாத்தியமான வழிகளை அவனே ஒடுக்குகிறான். ஒரு பெண் ஒரு ஆணிடமிருந்து விலகிச் செல்ல முடியும். ஆனாலும் மறுபடியும்  இன்னொரு ஆணிடமே வந்து சேர்கிறாள். ஒருவனிடம் கண்டடைய முடியாத ஏதோவொரு அம்சத்தைத் தேடியே இன்னொருவனை அடைகிறாள். அவள் அடைய நினைத்த அம்சம் அவனிடம் இருந்தபோதிலும் அவனிடமிருக்கும் வேறொன்று அவளை அச்சுறுத்துகிறது. அல்லது மறுக்கிறது. இந்த சுழலிலிருந்து வெளியேற முனையும்போது அவள் மீண்டும் வீட்டுக்கும் குடும்பத்துக்குமே வந்து சேர நேர்கிறது. இது அவளது விருப்பத்தினால் நிகழ்வதல்ல. வேறு மார்க்கமின்றி ஏற்படுவது.

என் கதைகளில் இருக்கும் இத்தன்மை புராணிகமானதுதான். இதை நவீனப்படுத்த நான் முனையவில்லை. இது இப்படித்தான் இன்றுவரையிலும் உள்ளது என்பதையே என் கதைகள் சுட்டுகின்றன.

கே : வீட்டைக்கடந்து சமூகத்திற்கு நகரும் கதைப் பகுதிகள் நுகர்வு கலாச்சாரத்தின் நிழலில் விழுகின்றன. ஆணின் அதிகாரத்தையும் பெண்ணின் உடலையும் கூட நுகர்வு கலாச்சாரம் தன்வயப்படுத்திக்கொள்கிறது. அதன் மீதான விமர்சனத்தையும் புனைவின் வழி முன்வைக்கிறீர்கள் (நிழல் பொழுதினிலே சிறுகதையில்). இக்கதைகளின் வழியே நுகர்வு கலாச்சாரத்தின் உளவியலை கூற முடியுமா ?

ப : நுகர்வுக் கலாச்சாரம் சமூக மனத்தின் வெளிப்பாடே.  மனித விளைதல்களின் ஒட்டுமொத்த வடிவம்தான் நுகர்வுக் கலாச்சாரம்.  மனிதனுக்குள் இருக்கும் இச்சைகளை மேலும் வீரியமாக்கும் தன்மைகளை கொண்டுள்ள நுகர்வுக் கலாச்சாரத்தின் போக்கு எல்லாவற்றையும் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. ஆண் பெண் யாரும் இதில் விதிவிலக்கல்ல. இதன் நீட்சியே ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் பரஸ்பரம் நுகர்வுப் பொருளாக அணுகுவது. ஏற்கெனவே சிடுக்காக உள்ள மனித உறவுகளை மேலும் சிக்கலானதாகவும் மர்மமானதாகவும் மாற்றி அமைப்பதில் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு பெரும் பங்கு உண்டு. கலாச்சாரத்தின் நிழலை விலக்கிவிட்டு நிற்பது என்பது இன்னும் நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று. வாழ்நிலை அவ்வாறானதாக தோற்றம் தருகிறது. ஆனால் ஒட்டுமொத்த மனஅமைப்பு அவ்வாறான படிநிலையை ஏற்றுக்கொள்ள இன்னும் வெகுகாலம் ஆகும் என்று தோன்றுகிறது.

கே : இத்தொகுப்பின் கதாபாத்திரங்கள் பிறிதொருவர் மீதான முன்தீர்மானங்களுடன் வாழ்கின்றனர். வீட்டிற்குள் உருவாகும் தீர்மானங்கள் சமூகவெளியில் அர்த்தமிழக்கின்றன. அங்கு உருவாகும் குழப்பத்திலிருந்து தான் கதைகளின்(வாழ்க்கையின்) உளவியல் சிக்கல்கள் ஆரம்பம் கொள்கிறதா ?

ப : வாழ்க்கை பெரும் சதுரங்க மேடை. எல்லா செயல்களுக்கும் பின்னணியில் அறிந்தும் அறியாததுமான ஓராயிரம் திட்டங்கள். நொடிக்கொரு முறை புரளும் மனதின் தீர்மானங்களும் அறிதல்களும் நிச்சயமற்றவை. எதன்பொருட்டும் மறுகணத்தில் மாறுதலுக்குள்ளாபவை. இத்தனை ஆண்டுகால புழக்கத்தில் மனிதமனம் இந்த விளையாட்டின் நுட்பங்களை ஓரளவு அறிந்திருக்கிறது. காட்டில் உலவும் மிருகத்தின் அடிப்படை குணம் அல்லவா அது. ஆயினும் மனம் அறியாத பல புதிர்வழிகள் ஒவ்வொரு திசையிலும் கிளைத்தவண்ணமே உள்ளன. அவற்றை எதிர்கொள்ளும் திட்டங்களுக்கும் தயாரிப்புகளுக்கும் மேலாக அவற்றைக் குறித்த அச்சமே மனிதனை மேலும் சூட்சுமம் மிக்கவனாக தந்திரசாலியாக உருவாக்குகிறது. எனவே இன்னொருவன் பற்றிய புரிதல்கள் குறிப்பிட்ட கணத்துக்கும் இடத்துக்கும் மட்டுமே பொருந்தும். இன்னொரு இடத்தில் இன்னொரு கணத்தில் அவை நிறமிழப்பதும் அப்படியொரு நிகழ்வை எதிர்கொள்வதற்கும் தயாராகவே இருக்கிறான். வாழ்க்கையின் சிக்கல்களுக்கும் கூடவே அதன் சுவாரஸ்யத்துக்கும் இந்த நிரந்தரமின்மையே காரணம்.

கே : தங்களுடைய கதைகளில் ஆண்களின் உலகம் எவ்வளவு தூரம் அதிகாரத்தின் பக்கம் சாய்கிறதோ அதே அளவு வன்முறையின் பக்கமும் நிலைகொள்கிறது. ‘இரவு’ சிறுகதையில் இயலாமையின் வழி வன்முறை உருவாகிறது. ‘சீசர்’ கதை வன்முறையால் நசுக்கப்படும் மனிதர்களைப் பேசுகிறது. ஒன்று உளவியல் சிக்கல் எனில், மற்றொன்று சமூகம் அங்கீகரிக்கும் வன்முறை. ஆக வன்முறை என்பதை பொதுவில் எப்படி அர்த்தப்படுத்துகிறீர்கள் ?

ப : வன்முறை உடல்சார்ந்ததும் உளம்சார்ந்ததுமே. உடல்சார்ந்த வன்முறையைவிட ஆபத்தானதும் ஆழமானதும் உளம்சார்ந்த வன்முறை. உடல்சார்ந்த வன்முறை தற்காலிகமானது. குறிப்பிட்ட தருணத்தில் வெடித்து மறுகணமே வடிந்து போவது. உள்ளத்தில் உருக்கொள்ளும் வன்முறை தீப்பொறிபோல உள்ளுக்குள்ளே கனன்று நிற்பது. அதன் விளைவுகள் உக்கிரமானவை.

அதிகாரமும் இருப்பும் கேள்விக்குள்ளாகும்போது இயல்பாகவே மனம் சீற்றம் கொள்கிறது. இயலாமையுடன் சேரும்போது அது மேலும் உக்கிரமாகிறது. வக்கிரமே அதன் விளைவு. இரவு கதையில் வெளிப்படும் வன்முறை வக்கிரத்தின் வடிவம்.

சீஸர் கதையில் கட்டவிழும் வன்முறை என்பிலதனை வெயில் காயும் தன்மைகொண்டது. வல்லவன் வாழ்வான் எனும் இயற்கை விதிப்படி நிகழ்த்தப்படுவது.

இரண்டுமே மனிதமனத்தின் விளைவுகள். ஆயினும் பின்னதைவிட முன்னதே மிக ஆபத்தானது. எதிர்கொள்வது கடினம்.

கே : வன்முறை சார்ந்த விஷயத்தில் எப்படி active/passive தன்மைகள் தென்படுகிறதோ அதே போல நசுக்கப்படுபவர்களிடமும் தெரிகிறது. ‘சீசர்’ கதையில் நாயால் தாக்குண்டு கீழ்விழும் கடலைக்காரியால் தன்பக்க நியாயத்தை எடுத்துச் சொல்ல இயலவில்லை. அதே நேரம் மண்வீணை சிறுகதையில் அதிகாரத்தை ஓவியன் தன் ஓவியத்தால் வெல்கிறான். ஓவியனுக்கு கிடைக்கும் வெளி கடலைக்காரிக்கு இல்லாமல் போவது உங்களின் சார்பு நிலை சார்ந்தது என அர்த்தப்படுத்திக்கொள்ளலாமா ?

ப : வன்முறையை எதிர்கொள்வதென்பதும் அதன் வகைப்பாட்டைச் சார்ந்ததே.

கடலைக்காரிக்கு நியாயத்தை எடுத்துச் சொல்லும் வாய்ப்பே கிடையாது. அங்கே அனைவரின் முன்நின்று அச்சுறுத்துவது அதிகாரம். அந்த அதிகாரத்துக்கு முன்பு அனைவருமே வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும். எளியோரை வலியோர் வீழ்த்தும் வன்முறை. இங்கே கடலைக்காரியால் மண்ணை அள்ளி வீசி சபிப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது.

ஆனால் கலைஞன் அதிகாரத்தை எதிர்கொள்ளும் முறை வேறு. வரலாற்றில் அதற்கான உதாரணங்கள் நிறைய உண்டு. கலையின் வீரியத்தைக் கொண்டு எதையும் அவனால் எதிர்கொள்ள முடியும். வரலாற்றிலும் காலத்திலும் கலையின் வழியாக தன் விமர்சனத்தை, எதிர்ப்பை அவன் அழுத்தமாகப் பதிவு செய்கிறான்.

இது என் சார்பு நிலை என்று சொன்னால் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது தன்னிச்சையானது அல்ல. வரலாற்றின் தொடர்ச்சியே.

கே : வன்முறை பற்றிய கதைகளில் ஒரு dual எப்படி நிலவுகிறதோ அதே போன்று கலைக்கும் யதார்த்த வாழ்க்கைக்குமான உறவும் தங்களுடைய கதைகளில் சிக்கலாகத் தெரிகிறது. ‘யாசகன்’ கதையில் வாழ்க்கைக்கு கைகொடுக்காத கலை ‘மண்வீணை’-இலும் ‘கஜாரிகா’விலும் பேருதவி புரிகிறது. கலை-இலக்கியத்திற்கும் மனித வாழ்க்கைக்குமான உறவை எப்படி அவதானிக்க விரும்புகிறீர்கள் ?

ப : கலைக்கும் யதார்த்த வாழ்க்கைக்குமான உறவு எல்லா இடத்திலும் எல்லா சூழலிலும் ஒன்று போல அமைவதில்லை. யாசகன் கதையில் சித்தரித்திருப்பது தமிழ்ச் சூழலில் ஒரு கலைஞன் எதிர்கொள்வது. அதிலும் அது அவன் மேல் திணிக்கப்பட்ட ஒன்று அல்ல. அவனாக அமைத்துக்கொள்வது. உள்ளபடி அவன் விரும்புவது. கலைஞனுக்கும் லௌகீகவாதிக்கும் இடையிலான போராட்டத்தில் கலைஞனே எழுந்து நிற்கிறான்.

கஜாரிகாவிலும் மண்வீணையிலும் சித்தரிக்கப்பட்டிருப்பது அந்தந்த சமூகச் சூழல் சார்ந்தது. அதிகாரத்தை கலையின் வழியாக எதிர்கொள்ளும் மேலான நிலை. கலையே அங்கு பிரதானம். அதன் வலுவே அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் விமர்சிக்கும் உத்வேகத்தை அளிக்கிறது.

கலையும் இலக்கியமும் பிற எந்த அறிவுத் துறையையும்போல கூடுதலான ஒரு கருவி மட்டுமே. வாசகர்களிடமும் கலை ஆர்வலர்களிடமும் பல்வேறுவிதமான சலனங்களை ஏற்படுத்த முடியும். மேம்படுத்தவும் முடியும். ஆனால் அந்தக் கலைஞனின் லௌகீக வாழ்வில் ஏதேனும் பங்களிக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே சற்று தயக்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.

கலை கலைஞன் வழியாக தன்னை நிகழ்த்திக் கொள்கிறது என்று ஒரு கூற்று உண்டு. அது உண்மைதான் என்றே சொல்லத் தோன்றுகிறது.

கே : கலை வழியான எதிர்ப்பு சாமான்யனிடம் எவ்வித பிரதிபலிப்பையும் ஏற்படுத்துவதில்லை. கடலைக்காரிகளாகவே இருக்கின்றனர். வேறு வழியில் கூறுவதானால் திணிக்கப்படும் அதிகாரம் மக்களை கடலைக்காரிகளாக மாற்றிவிடுகிறது. இந்த இடைவெளியை எப்படி அணுகுகிறீர்கள் ?”

ப : கலை வழியான எதிர்ப்பு என்பது சாமான்யர்களிடத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அந்த எதிர்ப்பு வெளிப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திற்கும் பொதுவெளிக்குமான தொடர்பு என்பது நேரடியானதாக இருக்காது. அதுபோலவே அதன் பாதிப்பும். இலக்கியமும் கலையும் தனிமனித அளவில் வாசிக்கப்படுபவை, ரசிக்கப்படுபவை, விமர்சிக்கப்படுபவை. வாசகனிடத்திலும் ரசிகனிடத்திலும் அக்கலைப்படைப்பு ஏற்படுத்தும் பாதிப்பு என்பது நுட்பமானது. அகவயமானது. அப்படியொரு பாதிப்புக்கு அவன் உள்ளானதேகூட பல சமயங்களில் அவனே அறியமுடியாததும்கூட. வெளிப்படுத்தவும் இயலாதது. இப்படி தனிமனித அளவில் உருவாகும் சிற்றலை போன்ற இந்த பாதிப்பு அல்லது தாக்கம் காலவோட்டத்தில் மெல்ல மெல்ல ஒன்றிணைந்து ஒட்டுமொத்த சமூக மனத்தையும் அசைக்கிறது. இந்த அசைவே முக்கியமானது. கூட்டு மனத்தில் ஏற்படுத்தும் இந்த சிறு தாக்கமே பெரும் மாற்றங்களுக்கான தொடக்கமாக அமைகிறது. வரலாற்றின் ஒவ்வொரு நகர்வுக்கும் அடிப்படையில் இவ்வாறான சிறு அசைவுகளே தூண்டுதலாக அமைந்திருப்பதை கண்டுணர முடியும்.

எனவே கடலைக்காரிகளிடம் ஏற்படும் சிறு எதிர்ப்புக் குரலோ அல்லது அதிகாரத்துக்கு எதிரான உக்கிரமான மௌனமோ யாருடைய தூண்டுதலும் இன்றி அவ்வாறான பல்வேறு குரல்களுடன் அல்லது மௌனங்களுடன் ஒன்றிணைகிறது. அப்படியான நிகழ்வு அந்த சந்தர்ப்பத்தோடு முடிந்துவிடலாம். அது குறிப்பிட்ட கால அளவிலானது. ஆனால் அவ்வாறான பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு வெளிகளில் உருவாகும் குரல்களும் மௌனங்களும் நுட்பமாக ஒன்றிணைந்தபடியே உள்ளன. பூமிக்கடியில் நிகழும் நதிகளின் ஓட்டம்போல. எரிமலைகளினுள்ளே கொந்தளித்துக் கிடக்கும் நெருப்பூற்றுபோல.

சமூகத்தின் கூட்டுமனத்தை அசைத்துப் பார்க்கும் இலக்கியத்துக்கும் தனிமனிதர்களுக்கும் தொடர்பு இல்லாதது போலத் தெரிவது ஒரு தோற்றமே. உண்மையில் அவ்வாறில்லை.

கே : நாவல், கவிதை, கட்டுரை என்று பல வடிவங்களில் இயங்கியிருக்கிறீர்கள். அதற்கும் சிறுகதைக்குமான அனுபவ ரீதியான வேறுபாட்டை பகிர முடியுமா ?

ப : நாவல் நெடுவழிப்பாதை. அவ்வப்போது பாதையை விட்டு விலகி எங்கோ அலைந்து திரிந்து வேறெங்கேனும் வந்து இணைந்துகொள்ளலாம். அதற்கான சுதந்திரமும் அனுமதியும் உண்டு. கடுமையான உத்வேகமும் சோர்விலிருந்து மீளும் உரமும் தொடர்ந்து உழைக்கும் ஆற்றலும் வேண்டும்.

சிறுகதை கம்பிமேல் நடக்கும் ஒற்றைப் பாதை. தூரம் குறைவுதான். ஆனால் நிதானமும் இலக்கிலிருந்து விலகாத துல்லியமும் மிக முக்கியம்.

நாவல் எழுதுவது என்பது உச்சமும் வீழ்ச்சியுமான உயர்வு தாழ்வுகளைக் கொண்டது. பலசமயம் பலத்த சோர்வு பீடித்திருக்கும். சமயங்களில் எழுத்தாற்றலின் ஜூரவேகம் நம்மை ஆட்கொண்டு முன்பு உத்தேசிக்காத உயரங்களில் நம்மை கொண்டு நிறுத்திவிடும். சிறுகதை ஒரே மூச்சில் உத்வேகப் பெருக்குடன் எழுதி முடிக்கப்பட்டால் வெகு கச்சிதமாக அமைவதை கண்டிருக்கிறேன். பகுதிகளாய் பிரித்து எழுதும்போது அதன் ஒருமை குலையும் அபாயம் உண்டு.

நாவலுடன் ஒப்பிடும்போது சிறுகதை எழுதுவது சவாலான ஒன்று

கே : இத்தொகுப்பின் சில கதைகளின் களம் பெரிதாக இருக்கின்றன. நாவலாக்குவதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன. உதாரணம் எனில் “சொற்பொருள் பின்வரும்” சிறுகதையை எடுத்துக்கொள்ளலாம். ஒரு கருப்பொருளை எதன் அடிப்படையில் குறிப்பிட்ட இலக்கிய வடிவத்திற்குள் கொண்டு வருகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள முடியுமா ?

ப : சிறுகதையைப் பொறுத்தவரை ஏதேனுமொரு சிறு பொறி மட்டும் போதும். அதிலிருந்து கிளைத்தெழுந்து நகர முடியும். அந்த ஒற்றைப் பொறியைச் சுற்றிய உலகை கச்சிதமாக மொழியின் துணைகொண்டு சித்தரிக்க முடிந்தால் போதும். பெரும்பாலும் சிறுகதைக்கான கரு என்பது ஒரு தொடக்கப்புள்ளியாக மட்டுமே அமையும். எழுதத் தொடங்கியபின் அதுவாகவே விரிவு கொள்ளும்.

நாவலைப் பொறுத்தவரையிலும் முன் உத்தேசிக்காத பகுதிகளும் கதாபாத்திரங்களும் மோதல்களும் தாமாகவே வந்து அமைந்துவிடும். அது நமது அனுமதியைக் கோரி நிற்காது.

சிறுகதை குறிப்பிட்ட ஒரு மையத்தை நோக்கிய நகர்தலாக குவியும்போது, நாவல் மையத்திலிருந்து திசைதோறும் விலகி அலையும் போக்கைக் கொண்டது.

சிறுகதையாக்கிய பிறகு இதை ஏன் நாவலாக்கியிருக்கக்கூடாது என்ற கேள்வி பல முறை எழுந்துள்ளது. இரவு, யாருமற்றவன் போன்ற கதைகளில் அதற்கான சாத்தியங்கள் உள்ளன. பொதுவாக நாவலை விரிவான அளவில் திட்டமிடுபவன் நான். அதன் பல்வேறு பகுதிகளுக்குள் பொருந்தும் சம்பவங்கள் தாமாகவே எழுதும்போக்கில் நிகழ்ந்துவிடுகின்றன. எனவே கதையாக்கிவிட்டோமே என்று குழம்புவதில்லை. திட்டமிட்டு கச்சிதமாக ஒரு சிறுகதையை உருவாக்கிவிட முடியும். ஆனால் நாவல் எழுதி முடிக்கப்படும் வரையிலுமேகூட முற்றுப்பெறாது வளர்ந்தபடியேதான் உள்ளது.

கே : சிறுகதைகளின் சமகாலப்போக்கும் அதில் உங்களுக்கு இருக்கக்கூடிய சவாலையும் கொஞ்சம் விளக்க இயலுமா ?

ப : ஏற்கெனவே இதைப் பற்றி சொல்லியதுதான். சிறுகதையின் சமகாலப் போக்கு என்பது இதுவரையிலுமான சிறுகதை வரலாற்றின் தொடர்ச்சியே. சொல்கிற மொழியும் சித்தரிப்பும் கச்சிதமும் வெவ்வேறு வகையில் அமையக்கூடும். ஆனாலும் சிறுகதையின் ஆதார வடிவத்தில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. இதில் என்னுடைய சவால் என்பது சிறுகதையின் மையம் அமையக் கேட்கிற வடிவத்தில் அந்தக் கதையைக் கச்சிதமாகச் சொல்லி முடிப்பது மட்டுமே.

முன்பே எழுதிய கதையை வேறுமாதிரியும் சொல்லலாம், நாவலாகவோ இன்னொரு சிறுகதையாகவோ கூட. ஆனால் முன்பே இதை எழுதியிருக்கிறாரே என்ற எண்ணம் வாசகனுக்கு எழாத வண்ணம் எழுதுவதே புனைவாசிரியனின் முன் நிற்கும் பெரும் சவால்.

No comments:

Post a Comment

யுவன் - விஷ்ணுபுரம் விருது

  1 இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர் மாதம். அலுவலகப் பயிற்சி நிமித்தமாக புனே சென்றிருந்தேன். அன்று காலை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்ற...