Monday 5 March 2018

மண்ணும் மனிதனும் – அறுபடும் உறவுகள்

கண்மணி குணசேகரனின் “வந்தாரங்குடி“

வந்தா
மனிதன் தனது வசதிகளுக்காக இயற்கையை உபயோகித்துக் கொள்வது என்கிற வரலாறு சிக்கிமுக்கிக் கல்லில் இருந்து தொடங்குகிறது.சிக்கிமுக்கிக் கல்லைக் கொண்டு நெருப்பை உண்டாக்கிய மனிதனே உலகின் முதல் விஞ்ஞானி. இயற்கையை மனிதன் தனது வசதிக்காக திருத்தியமைக்கும் ஆய்வுப் புலமே விஞ்ஞானம். எனவே இயற்கையும் விஞ்ஞானமும் எதிர்நிலைகளாகவே கருதப்படுகின்றன. இலக்கியம் எப்போதும் இயற்கையின் பக்கமாகவே நிற்கிறது.
விஞ்ஞானமும் தொழில் வளர்ச்சியும் தொடர்ந்து இயற்கையின் மீது நிகழ்த்தும் காரியங்கள் அனைத்துமே தவிர்க்க முடியாதவையாக, வளர்ச்சிக்கு மனிதன் தரும் விலையெனவே கருதப்பட்டு வருகிறது. மரங்களை வெட்டாமல் சாலைகளை அமைக்கவோ, விரிவுபடுத்தவோ முடியாது, விபத்துக்களை தவிர்க்க முடியாது என்றே பொதுப் பார்வை அமைகிறது. வாகனங்களையும் வசதிகளையும் குறைத்துக் கொள்ளலாமே என்ற பார்வை பின்தள்ளப்பட்டும், யார் அதைச் செய்வது என்பது போன்ற கேள்விகளோடுமே புறக்கணிக்கப்படுகிறது.
இயற்கையை பாதுகாப்பது சார்ந்தும் சுற்றுச் சூழல் சார்ந்தும் இன்று நமக்கிடையே இருக்கும் விழிப்புணர்வு என்பது பெயரளவிலான ஒன்றே தவிர, அதன் உள்ளார்ந்த அர்த்தத்துடனும் அக்கறையுடனும் நாம் எவரும் செயல்படவில்லை என்பதே யதார்த்தமான, கசப்பான உண்மை.
தண்ணீர் தட்டுப்பாடும், மின்சாரத் தட்டுப்பாடும் இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால்கள். பெருகி வரும் மக்கள் தொகையும் தேவையும், இருக்கிற இயற்கை வளங்களையும் தனிமனிதனுக்கு உரிய பங்கையும் வெகுவாக சுருக்கிவிட்டன.
oOo
நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாகிய கால கட்டத்தில், அதற்காக பலி கொள்ளப்பட்ட கிராமங்களைப் பற்றியும், வாழிடங்களிலிருந்து அகற்றப்பட்ட மனிதர்களைப் பற்றியுமான நாவலே கண்மணி குணசேகரனின் “வந்தாரங்குடி“.
நெய்வேலி அனல் மின் நிலையம் 1956ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு மத்திய அரசு நிறுவனம். நெய்வேலியில் மண்ணுக்கடியில் நிலக்கரி என்கிற கரும்பொன் சுரங்கம் உள்ளது என்பதைத் தற்செயலாகவே கண்டுபிடித்தார்கள். 1935ம் ஆண்டு நெய்வேலி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஜம்புலிங்க முதலியார் என்பவர் ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது வெளிப்பட்ட கருப்பு நிற சகதியில் நிலக்கரித் துகள்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை உறுதி செய்வதன் பொருட்டு 1941ம் ஆண்டு பின்னி நிறுவனம் 5 ஆழ் துளை கிணறுகளைத் தோண்டியது. அவற்றில் இரண்டு கிணறுகளிலிருந்து கிடைத்த சகதியில் நிலக்கரித் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்ட போதும் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தொடரப்படவில்லை. 1946ம் ஆண்டுதான் இந்திய மண் ஆராய்ச்சி நிறுவனம் நெய்வேலியில் மண்ணுக்கடியில் 500 டன்களுக்கும் மேலான நிலக்கரி இருப்பதை உறுதி செய்தது. பிறகு 1947ம் ஆண்டு சுரங்கவியல் நிபுணரான ஹெச். கே. கோஷ் என்பவர் நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கங்கள் அமைப்பதற்கான பணியைத் தொடங்கினார். 175க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி அவற்றின் மூலமாக நிலத்தடியில் 2000டன்களுக்கும் அதிகமான நிலக்கரி வயல் உள்ளது என அவர் உறுதி செய்தார். 1953ம் ஆண்டு வரைக்கும் சென்னை ராஜதானியின் கைவசமிருந்த இந்த ஆராய்ச்சி 1954ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு நெய்வேலிக்கு வருகை புரிந்தமைக்கு பிறகு 1955ம் ஆண்டு மத்திய அரசின் கைவசமாயிற்று. 1956ம் ஆண்டு பொதுத் துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இன்று ஆண்டொன்றுக்கு 29 மில்லியன் டன் நிலக்கரியை வெட்டியெடுக்கும் மூன்று பெரும் சுரங்கங்கள் நெய்வேலியில் இயங்குகின்றன. இங்குள்ள மூன்று அனல் மின் நிலையங்களின் மூலமாக 2500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தவிர சுரங்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நெய்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளின் நீர் ஆதாரமாக விளங்குகிறது.
இந்த பெரும் நிறுவனத்தின் சுரங்கங்கள் தோண்டும் பணி தொடங்கப்பட்ட போது அதைச் சுற்றியிருந்த கிராமங்களான  ஆகியவை அரசால் கையகப்படுத்தப்பட்டு அங்கிருந்த மக்கள் வேறு இடங்களுக்கு கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். விளை நிலங்களையும், வாழ்வாதரங்களையும் இழந்த மக்களுக்கு அரசு போதிய இழப்பீடுகளையோ வேலை வாய்ப்புகளையோ வழங்காதிருந்தது. இந்தப் பிண்ணனியில் வேப்பங்குறிச்சி கிராமத்தையும் கையகப்படுத்த முனையும்போது அந்த கிராமத்தின் மக்கள் ஒன்றிணைந்து, அப்போது சமூக இயக்கமாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியுன் துணையுடன், அரசுக்கு எதிராக குரல் கொடுத்து, வலுவாகப் போராடி கணிசமான இழப்பீட்டையும், வேலை வாய்ப்பையும், மாற்றுக் குடியிருப்பையும் பெறுகின்றனர். வேப்பங்குறிச்சி கிராமத்து மக்களின் ஆறு வருடப் போராட்டமும் போராட்டத்துக்குப் பிந்தைய வாழ்க்கையையும் “வந்தாரங்குடி“ நாவல் மிக விரிவாக பேசுகிறது.
நாவலைப் பற்றிய முதன்மையான குற்றச்சாட்டு, இது பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அதன் தலைவர் ராமதாசுக்கும் கொடி பிடிக்கிறது என்பது. இந்த நாவலின் களத்தையும் பிண்ணனியையும் கருத்தில் கொள்ளும்போது, அரசுக்கு எதிரான வேப்பங்குறிச்சி மக்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள் என்ற வகையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நாவல் தந்திருக்கும் இடம் என்பது நியாயமான ஒன்றே. நாவலில் கட்சியின் தலைவர் ராமதாசுவைக் குறித்து வரும் உரையாடல்கள் என்பது கடலூர் நெய்வேலி பகுதியில் உள்ள மக்கள் தங்களது இனமானத் தலைவரைக் குறித்து கொண்டிருக்கும் கருத்துக்களாகவே உள்ளன. ராமதாசு நேரடியாக நாவலில் தோன்றும் மூன்று இடங்களில்கூட அந்த சூழ்நிலைக்கேற்ற பங்களிப்பைத் தருபவராக மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். நாவலின் நோக்கம் பா ம கவிற்கு கொடிபிடிப்பதல்ல, “வந்தாரங்குடி“களாக்கப்படும் விவசாயிகளின், கிராமத்து மக்களின் நிர்கதியான நிலையையும், சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் யதார்த்தத்தையும் சித்தரிப்பதே.
என்றால், இது அரசியல் நாவலா? இந்த கேள்விக்கு ஆம் என்றும் சொல்ல்லாம். தொழில் வளர்ச்சி என்ற பெயரில், SEZக்களை உருவாக்கும் நோக்கில், பழங்குடிகளையும், விவசாயிகளையும் இடம் பெயரச் செய்யும் அரசின் பொருளாதார முதலாளித்துவ நோக்கிற்க்கு எதிரான மக்களின், இயக்கங்களின் போராட்டத்தை அரசியல் போராட்டம் என்று சொன்னால், அத்தகையதொரு போராட்டத்தை முன்வைக்கும் இந்த நாவலை நாம் அரசியம் நாவல் என்று சொல்ல தயங்க வேண்டியதில்லை.
ஒரு விவசாய நிலம் என்பது தனித்த ஒரு சமூகம். மண்ணும், மரம் செடி கொடிகளும், அவற்றைச் சார்ந்த பறவை, விலங்கு, பூச்சி இனங்களும் அவற்றுடனான மனித உறவும் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு பன்முகச் சமூகம்.
இயற்கையாளர்கள் சொல்வதுண்டு, ஒரு மரத்தை வெட்டும்போது சூழலியல் சார்ந்த ஒரு பெரும் சமூகத்தையே நாம் வெட்டிச் சாய்க்கிறோம் என்று. அதுபோன்றதுதான் கிராமத்தின் விவசாய நிலத்தை மாற்றுப் பணிகளுக்காக உழவிலிருந்து விலக்குவது என்பதும்.
நெல்லோ கம்போ சோளமோ கரும்போ விளையும் நிலம் மட்டுமல்ல ஒரு வயல் என்பது. உணவையும் வருவாயை மட்டும் தருவதில்லை அது, அங்கிருக்கும் மரங்கள் பல்குச்சி முதல் பல்வேறு காரியங்களுக்கு உதவுகின்றன.
விளைந்த மரங்களே வீடு கட்டுவதற்கும் சாளைகள் அமைப்பதற்கும் உதவுகின்றன, கால்நடைகளும் கோழிகளுக்குமான மேய்ச்சலும் அங்கேதான். மருத்துவத்துக்கான பல்வேறு மூலிகைகளும் வேர்களும் கிடைப்பது அந்த வயல்வெளிகளில்தான்.
முக்கியமாக நமது காவல் தெய்வங்கள் அனைத்துமே வயல்வெளிகள் சார்ந்து நிற்பவைதான். நாஞ்சில்நாட்டில் என்றால் சுடலைமாடனும், பேச்சியம்மையும் நமது கொங்கு மண்ணில் என்றால் கருப்பராயன். கண்மணியின் பகுதியில் அது அய்யனாரும் ,, அதனுடனான மனிதனின் விவசாயியின் உறவு என்பது ஆழமானது. உணர்வுபூர்வமானது.
இப்படிப்பட்ட நிலத்திலிருந்து விவசாயியை பிரிப்பது என்பது எத்தனை துயரம் வாய்ந்தது? என்பதை நிலம் சார்ந்த ஒரு மனிதனுக்கே புரியும்.
ஒரு வாடகை வீட்டிலிருந்து இன்னொரு வாடகை வீட்டுக்கு மாற நேரும்போதே நமது மனதில் இனம் புரியாத ஒரு மிரட்சியும் அச்சமும் திரண்டு நிற்பதை யோசித்துப் பாருங்கள். நமக்கு சொந்தமில்லாத ஒரு வீட்டை விட்டு போக நேரும்போது அப்படிப்பட்ட அச்சமும் வேதனையும் தோன்றுகிறது என்றால் சொந்த மண்ணையும் அது சார்ந்த மரம் செடி கொடிகளையும் விட்டுச் செல்வது என்பது சாதாரணமான துயரம் கிடையாது.
அரசின் அதிகாரத்துக்கு எதிராக சாமானியர்கள் என்ன செய்துவிட முடியும்? சாம பேத தான தண்டம் என அனைத்து முறைகளையும் கையாண்டு எளியோரை அது வென்றுவிடும். வேப்பங்குறிச்சி மக்களையும் அது விரட்டிவிடுகிறது. ஆனால் அதற்கு முன்னால் அவர்கள் தங்கள் போராட்டங்களின் மூலமாக அதற்கான இழப்பீட்டையும், வேலை வாய்ப்பையும் பெற்று விடுகின்றனர். மாற்றுக் குடியிருப்பு ஒதுக்கப்படுகிறது. அங்கே குடியமரும் அவர்கள் இப்போது விவசாயிகள் இல்லை. அந்த மாபெரும் நிறுவனத்தின் “எம்பளாயிஸ்“. ஒரு கிராமிய வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறி நகர்மயமாதலுக்கு உள்ளாகிறார்கள். கோவணத்தை மட்டுமே கட்டிக்கொண்டு ஊரில் வண்டியிழுத்துக் கொண்டும், விவசாய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இடுப்பில் வேட்டி ஏறிக் கொள்கிறது. வீடு வீடாக சென்று சவரம் செய்து கொண்டிருந்த ரத்னவேலு  ஊரில் உருவாகும் சலூனில் கூலித் தொழிலாளியாகி விடுகிறார். சுமை வண்டி ஓட்டிய கரி படையாச்சி, வெள்ளரிப் பிஞ்சுகளை பேருந்துகள் நிற்கும்போது ஓடியோடி விற்கிறார். வேப்பங்குறிச்சி என்ற விவசாய கிராம்மும் அதன் மனிதர்களும் சுரங்கத்தில் புதையுண்டு போக, புது வேப்பங்குறிச்சி நகரத்தில் அந்த மனிதர்கள் சூழ்நிலைக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு வாழ்க்கையை முன்னகர்த்துவதை இயல்பாகக் காணமுடிகிறது.
விவசாயத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முடியாத பலவீனத்துடன் இருக்கும் ராசேக்கியம், ஊரை விட்டுச் சென்று “வந்தாரங்குடி“யாக முதலில் உறவினர் ஒருவரின் ஊரிலும் பிறகு மணக்கொல்லையிலும் விவசாயியாகவே இருக்க முனைகிறார். புதிய நிலங்களில் எதிர்கொள்ளும் சவால்களை விவசாயத்தின் மீது கொண்டிருக்கும் பற்றுதல் காரணமாக வெற்றிகரமாக எதிர்கொள்கிறார். அதுவே அவருக்கு வினையாகவும் மாறுகிறது. எந்த ஒரு ஊரும் அதன் மக்களும் “வந்தாரங்குடி“களின் வெற்றிகளை ஏற்றங்களைப் பொறுப்பதில்லை. ராசேக்கியமும் அந்த தீய்மைகளை எதிர்கொள்கிறார்.
இருப்பதைக் கொண்டு, சூழலுக்கேற்ப தங்களை தகவமைத்துக்கொண்டு புதையுண்ட மண்ணருகிலேயே காலத்தைக் கழிக்கும் மற்றவர்களின் இருப்புக்கு முன்னால், ஒரு “வந்தாரங்குடி“யாக ராசேக்கியம் எதிர்கொள்கிற சவால்களும், போராட்டங்களும், தீய்மைகளும் அதன் வழியான அவரது வாழ்வும் என்ன அர்த்த்த்தை தருகின்றன? எது சரி? எது நியாயம்?
ஒரு கிராமத்தை இழந்த பின்னும் மனிதர்கள் பிழைக்கிறார்கள்தான். என்ன கெட்டுப் போய்விட்டது என்ற கேள்வி எழலாம்.
விளை நிலங்கள் காணாமல் போகும்போது, விவசாய முறை காணாமல் போகிறது. மண்ணிற்கும், மழை அளவுக்கேற்பவும் பயிர் செய்யும் நுட்பம் காணாமல் போகிறது. மண்ணுடனும் மனிதர்களுடனுமான இயல்பான உறவு அறுபட்டுப் போகிறது. பறவைகளை, பூச்சியினங்களை விரட்டி விடுகிறோம். தாவரங்களையும் பூக்களையும் மூலிகைகளையும் விட்டு விலகி வந்துவிடுகிறோம். அனுபவத்தின் அடிப்படையில் நிலத்தை அணுகும் விவசாய விஞ்ஞானத்தை இழந்து விடுகிறோம்.
நாவலின் இன்னொரு சரடாக ஈழத் தமிழர்களின் போராட்டமும் நீண்டு வருகிறது. இதே காலகட்டத்தில் ஈழத்தில் அமைந்தது என்பதுதான் காரணம் என்றாலும், நாவலின் உட்சரடாக அது உணர்த்தும் யதார்த்தம் அல்லது கசப்பான உண்மை விடையற்ற பல கேள்விகளை எழுப்புகிறது. சொந்த மண்ணை விட்டுச் சென்று இன்று உலகமெங்கும் அகதிகளாய், நிலமற்றவர்களாய், வீடற்றவர்களாய், சொந்தங்களற்றவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் அனைவருமே “வந்தாரங்குடி“கள்தான். தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் வாழ்நிலையை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். நம் சொந்த சகோதரர்களுக்கு நாம் என்ன விதமான வாழ்க்கையை தந்திருக்கிறோம். தமிழகத்திலேயே இப்படியொரு நிலை என்றால் உலகெங்கும் அவர்கள் எந்தவிதமான துயரங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகியிருப்பார்கள்? உலகெங்கும் உள்ள வந்தாரங்குடிகளின் நிலையையும், ஈழத்தில் முகாம்களில் இன்னும் துயரங்களை அனுபவித்து நிற்கும் எஞ்சிய மக்க்ளின் நிலையையும் இந்த நாவலின் இருவேறு மனிதர்களோடு நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும்.
இன்னொரு விதத்தில் யோசிக்கும்போது, இந்த நாவலில் சொல்வதுபோல, உலகத்தில் உள்ள நாம் அனைவருமே கூட “வந்தாரங்குடி“கள்தான். உலகளாவிய அளவில், தாராளமயமாக்கல் என்ற பெயரில் “பூர்வகுடிகள்“ என்ற அடையாளத்தை துடைத்தெறிந்துவிட்டு எல்லோரையும் “வந்தாரங்குடி“களாக்கும் முயற்சியே நடந்து வருகிறது. இன்றைய தகவல் தொழில் நுட்பம் பெருமளவில் இதற்கு காரணியாக இருந்து வருகிறது.
நமது தேசிய நெடுஞ்சாலைகளே இதற்கு எளிமையான உதாரணம். கோவையிலிருந்து சென்னைக்கு செல்லும்போது நீங்கள் கோவையிலிருந்து புறப்படுவதும் சென்னையை அடைவதும்தான் தெரியும். வழியில் இருந்த ஊர்கள் அனைத்துமே புறக்கணிக்கப்பட்டு, நம் பாதையிலிருந்தும் பார்வையிலிருந்தும் விலக்கப்பட்டு விடுகின்றன. மதுரையிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும்போது சாத்தூர் காராசேவையும், கோவில்பட்டி கடலைமிட்டாயையும், திருநெல்வேலி அல்வாவையும் சேர்த்துதான் நாம் கடந்து போகிறோம். ஆனால் இப்போது இவை அனைத்துமே இந்த நெடுஞ்சாலையிலிருந்து விலக்கப்பட்டு விடுகின்றன. ஊர்களை, ஊர்கள் சார்ந்த தனிப்பட்ட அடையாளங்களை, மனிதர்களை, உறவுகளை நாம் இழந்து வருகிறோம்.
தொழில் மயமாக்கலும், தாராளமயமாக்கலும் தொடர்ந்து நிலங்களின், பண்பாட்டின், மனிதர்களின் தனிப்பட்ட அடையாளங்களை அழித்து பொதுவான அடையாளமொன்றை நிறுவும் முனைப்புடனே நம் முன் விரிகின்றன. பெயரில் இருந்த தனித்துவங்களை இழந்து வெகு காலமாயிற்று. இப்போது நாம் நமது மொழி, உணவு முறை, மருத்துவ முறை, உடைகள், கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் என்று ஒவ்வொரு அம்சத்திலும் உள்ள தனிப்பட்ட அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறோம்.
வந்தாரங்குடி போன்ற நாவல்களும் கண்மணி குணசேகரன் போன்ற படைப்பாளிகளுமே நாம் இழந்து வரும் நமது தனிப்பட்ட அடையாளங்களைக் குறித்த கேள்விகளை நமக்குள் எழுப்பி வருகின்றன.
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்துள் புதையுண்டு போன வேப்பங்குறிச்சி போன்ற கிராமங்களும் அதன் மனிதர்களும் போலவே, உலகளாவிய தாராளமயமாக்கலில் தொழில் மயமாக்கலில் நமது தனித்துவமான அடையாளங்கள் மழுங்கடிக்கப்பட்டு மொன்னையான ஒரு பொது அடையாளத்துக்குள் நாம் அடைபட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்தக் கவலைகளை, மாற்று வழியற்ற நிர்பந்தங்களைக் குறித்த ஆழமான எண்ணங்களை கண்மணியின் இந்த நாவல் ஏற்படுத்துகிறது. அந்த எண்ணம் ஒவ்வொரு வாசகனின் உள்ளத்திலும் ஏற்படும் என்றால் அதுவே இந்த நாவலின் உத்தேசமாக இருக்கும்.
(சொல்வனம் இதழ் 108 | 01-07-2014| )


No comments:

Post a Comment

‘எழுது, அதுவே எழுத்தின் ரகசியம்’

மனித வாழ்வு எண்ணற்ற புதிர்களைக் கொண்டது. பல்வேறு அறிவுத்துறைகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழிற்புரட்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் துண...