Thursday, 1 January 2026

டி என் ஏ பெருமாள் ( 1932 – 2017 ) - அடர்வனத்தில் தேய்ந்து மறைந்த ஒற்றையடிப் பாதை


 


காடுகள் காணாமல் போய்விட்டன. வசிப்பிடங்களை இழக்கும் வன விலங்குகள் பலவும் புகலிடம் தேடி அலைந்து மின்சார வேலிகளிலும் ரயில்களிலும் அடிபட்டுச் சாகின்றன. அடர்ந்த காடுகளும் அவற்றை அண்டியிருந்த சிறிதும் பெரிதுமான பல்வேறு உயிர்களும் பூமியின் சமன்நிலைக்கு ஆதாரமாக அமைந்திருப்பதைப் பற்றி இன்று விவாதிக்கிறோம். புவி வெப்பமயமாதல் குறித்தும் அவற்றை கட்டுக்குள் கொண்டுவருவதன் அவசியத்தைப் பற்றியும் உலகநாடுகள் மாநாடுகளைக் கூட்டி குளிர்பதன அரங்குகளுக்குள் கவலையுடன் தீர்மானங்கள் நிறைவேற்றுகின்றன. அழியும் கானுயிர்களைக் குறித்து கவலைப்படவோ அரியவகை உயிரினங்களைக் காப்பாற்றிப் பேணுகிற காருண்யத்தைப் பற்றி யோசிக்கவோ நேரமில்லாத அளவுக்கு இந்தியாவில் நமக்கு வேறு பல கவலைகளும் காரியங்களும் உள்ளன.

 

இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் கைங்கரியத்தால் இயற்கையை வெகுவாக புறந்தள்ளிவிட்டோம். மரங்களோ மனிதநடமாட்டமோ கிராமங்களோ கண்ணில்படாத விரைவுச் சாலையே நமது வாழ்வு. இன்று விசைப்பலகையை தட்டினால் உலகத்தின் எந்தவொரு சரணாலயத்தைப் பற்றியும் தகவல்களை பெறமுடியும். எப்படிப் பட்ட விலங்கைக் குறித்தும் அறிந்துகொள்ளமுடியும். ஆனால் இன்று நமக்கு கிடைக்கும் இத்தகைய தகவல்களை, படங்களை யார் திரட்டினார்கள்? எப்போது எப்படி காட்டுக்குள் சென்று இவற்றையெல்லாம் சாத்தியமாக்கினார்கள் என்பது பற்றியெல்லாம் நாம் யோசிப்பதில்லை. நமக்கு தேவையான விஷயங்கள் ஒரு விசை சொடுக்கில் பெற முடியும். அதற்கப்பால் எதையுமே நாம் சிந்திக்கவோ கவலைப்படவோ நேரமில்லை.

 

காடுகள்தோறும் அலைந்து பல்வேறு விலங்கினங்களையும் பின்தொடர்ந்து, தாங்களே உருவாக்கியெடுத்த கண்காணிப்பு முறைமைகளை கடைபிடித்து விலங்குகளின் போக்குகள், பழக்கவழக்கங்கள், வசிப்பிட நியதிகள், சமிக்ஞைகள் என்ற பல்வேறு நுட்பமான தகவல்களையும் கண்டறிந்து தொகுத்தளித்த கானியலாளர்கள் பலரையும் நாம் அறிந்துகொண்டதில்லை. இன்றைக்கு சரணாலயங்கள் முறையாக அமைக்கப்பட்டு விலங்குகளை பாதுகாப்பான தூரத்தில் இருந்துகொண்டு நாம் விரும்பும்படி புகைப்படம் எடுத்துவிட முடியும். இன்றைய புகைப்படக்கருவிகளின் அதிநவீன வசதிகள் நாம் விரும்பும் வண்ணம் விரும்பும் நுட்பத்துடன் புகைப்படங்களை எடுக்க வகைசெய்கின்றன. இவையெல்லாம் மனிதனின் கற்பனையிலேயே உருவாகியிராத ஒரு காலத்தில், பாதுகாப்பற்ற காடுகளுக்குள் பயணித்து, விலங்குகளை நெருங்கி அப்போதைக்கு கையிலிருந்த புகைப்படக்கருவிகளைக் கொண்டு புகைப்படங்களை எடுத்து இன்று ஒரு பெரும் பொக்கிஷமாக நமக்கு விட்டுப் போயிருக்கிற கானுயிர் புகைப்படக் கலைஞர்கள் பலரைப் பற்றியும் நாம் அறிந்துகொண்டதில்லை.

 

மேற்கத்திய நாடுகளைப் போலல்லாமல் இன்றைக்கும் இந்தியாவில் கானுயிர் புகைப்படக் கலை என்பது போதிய அளவு வளர்ச்சி பெறாத ஒரு துறையாகவே இருந்து வருகிறது. முக்கியமான ஒரு காரணம் கானுயிர் புகைப்படங்களின் மீதான பொதுமக்களின் ரசனை வளர்த்தெடுக்கப் படாததுதான். இன்றும்கூட அதுவொரு பொழுதுபோக்கு அம்சமாகவே பெரிதும் அணுகப்படுகிறது.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை தியோடர் பாஸ்கரனின் தொடர்ந்த முயற்சிகளின் காரணமாகவே கானுயிர்கள் சொல்லாடல்களின் குறைந்தபட்ச அறிமுகம் சாத்தியமாகியுள்ளது. தமிழகத்தின் முக்கியமான கானுயிர் வல்லுநராகவும் புகைப்படக் கலைஞராகவும் திகழ்ந்தவர் எம். கிருஷ்ணன். அவரைப் பற்றி தமிழில் வெளியாகியுள்ள கட்டுரைகளும் குறிப்புகளும் அவருடைய அசலான ஆகிருதிக்கு போதிய நியாயம் செய்யாதவை என்றே தோன்றுகிறது.

 

தமிழகத்தில் அறியப்படாத இன்னொரு கானுயிர் புகைப்படமேதை டிஎன்ஏ பெருமாள்.

 

1932ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி தஞ்சையில் பிறந்தார் டி என் பெருமாள்.பொ ற்கொல்லரான அவரது தந்தை நடேசன் ஆசாரி தொழில் நிமித்தமாக பெங்களுரிலேயே  வசித்திருந்தார்.  பிறந்ததுமே  தாயைஇழந்த பெருமாள் அறிந்ததெல்லாம்  தன் தந்தையாரை மட்டுமே.

தந்தையின் மரணம் பெருமாளை மீள முடியாத ஒரு சுழலில் தள்ளியது. தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சரிவுடன் குடும்ப பாரத்தையும் சுமக்க நேர்ந்தது. சிறுவயதிலேயே வேட்டையர்களின் சாகசங்கள்  குறித்த புத்தகங்களை பெருமாள் ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு. குடும்பச் சூழலிலிருந்து தன்னை தற்காலிகமாக  விடுவித்துக் கொள்ள பெருமாள் காடுகளை நாடலானார். வேட்டையாடுமளவுக்கு பொருளாதார சூழல் இல்லை என்றாலும் காடுகளில் அலைந்து விலங்குகளை காணும் ஆர்வம் இருந்தது.  இந்த தணியாத ஆர்வம் அவருக்கு நல்ல நண்பர்களை கொண்டு சேர்த்தது. இதன் மூலமாக துப்பாக்கி சுமந்து வேட்டையாடும் அவரது ஆசை நிறைவேறியது.

 

கானுயிர்களைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கியது 1960ம் ஆண்டு.  விலங்குகளை வேட்டையாட காட்டுக்குள் புகுந்த பெருமாளை துப்பாக்கியை கீழேப் போட்டுவிட்டு கேமராக்களை சுமக்கும் புகைப்படக் கலைஞராக மாற்றியவர் இந்திய கானுயிர் புகைப்படக் கலையின் தந்தை என்று போற்றப்படும் சி எட்வர்டஸ்.

 

வெகுநாள் வரையில் சொந்தமாக கேமரா ஒன்றை வைத்துக்கொள்ள முடியாத பொருளாதார சூழலிலிருந்த பெருமாளின் வாழ்வில் இன்னொரு திருப்புமுனை,  கர்நாடகாவிலுள்ள சந்தூர் சமஸ்தானத்தின் இளையராஜா எம் ஒய் கோட்பொடேவுடன் ஏற்பட்ட நட்பாகும். கர்நாடகாவில் தேவராஜ் அர்ஸ் தலைமையிலான  காங்கிரஸ்             அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் எம் ஒய் கோட்பொடே.  இந்திய அளவில் குறிப்பிடத்தக்க கானுயிர் புகைப்பட நிபுணர். அவருடைய  வேண்டுகோளின்  பேரில், நட்புரீதியாக அவருடன் இணைந்து புகைப்படக் கலை சார்ந்த பணிகளில் ஈடுபட்ட  பெருமாள்  25  ஆண்டுகள்  தொடர்ந்து தன்னை அப்பணியில் அர்பணித்துக்கொண்டிருந்தார்.

 

சரணாலயங்கள் என்கிற அரசமைப்பு உருவாக்கப்படாத காலகட்டத்தில், விலங்குகள் சர்வசாதாரணமாக சுதந்திரமாக காடுகளில் சுற்றித் திரிந்த காலகட்டங்களில் இந்தியாவின் காடுகள்தோறும் திரிந்து அலைந்து புகைப்படங்கள் எடுத்தவர் பெருமாள். இந்திய கானுயிர் புகைப்படக்கலையின் கருப்பு வெள்ளை சகாப்தத்தில் டி.என். பெருமாள் ஒரு மாபெரும் புகைப்பட மேதை. புகைப்படங்களை எடுப்பதில் மட்டுமல்லாமல் அவற்றை முறையாகவும் நுட்பமாகவும் அச்சிடுவதில் பல புதிய முறைகளுக்கு வித்திட்டவர் அவர். ஆந்தைகளை படமெடுக்க அவர் மேற்கொண்ட பரிசோதனைகளும், கையாண்ட முறைமைகளும் இன்றளவும் பேசப்படுபவை. பல சர்வதேச அங்கீகாரங்களையும் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கும் டி.என். பெருமாள் தமிழகத்தில் கானுயிர் சார்ந்த ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே அறியப்பட்டிருந்தவர்.

 

உலக அளவிலும் இந்திய அளவிலும் கானுயிர் புகைப்படக்கலையின்  முன்னோடி சாதனையாளர்களில் ஒருவராய் விளங்கிய  டி என் பெருமாளின் பலம் அவரது நேர்மையும் எளிமையுமே. எடுத்துக் கொண்ட பணியை சீர்பட செய்வது, எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாமை, தான் அறிந்ததை பிறரும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதில் காட்டும் ஈடுபாடு,  தன்னை மட்டுமே பெரிதாக முன்னிறுத்திக் கொள்ளாமை என்று அவருடைய நற்குணங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகமுடியும்.

 

ஒரு உயிரினத்தை படமெடுக்கும்போது படத்தின் அளவில் அதிகபட்சம் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே அதன் உருவம் அமையவேண்டும். மிச்சமுள்ள பகுதி அதன் இருப்பிடத்தைக் காட்டவேண்டும். குறிப்பிட்ட அந்த உயிருக்கும் சூழலுக்குமான உறவை அறிய இது உதவும்” என்பது அவரது அளவுகோல். பின்னணி முழுவதும் மங்கியிருக்க ஒற்றைக் கிளையின் மேல் அமர்ந்திருக்கும் பறவையின் படம் என்பது உண்மையான ஒன்றல்ல என்பது அவர் எண்ணம். எடுக்கப்போகும் படத்தைவிட அது இலக்காக்கும் உயிரினத்தைத் தொந்தரவு செய்யாதிருப்பது மிக முக்கியமானது என்பது அவரது கொள்கை. படமெடுக்க முனையும்போது  நாம் அங்கிருப்பது அதற்கு இடைஞ்சலாக உள்ளதென்பதை அதன் உடலசைவுகளிலிருந்தே கணிக்கமுடியும்.  எனவே, இலக்குக்கும் நமக்குமிடையே கௌரவமான இடைவெளியை எப்போதும் பேணவேண்டும் என்றே வலியுறுத்துவார்.

 


இன்றைய போட்டிச் சூழலில் நேர்மை என்பதும் அரிதான ஒன்றுதான். தன்னுடைய வாழ்நாளையே கானுயிர் புகைப்படக் கலைக்காக அர்ப்பணித்திருந்த அவர் அதன் மூலம் எந்தவொரு பெரிய வருமானத்தையும் ஈட்டியிருக்கவில்லை. எத்தகைய சூழலிலும் தான் நம்பிய உண்மையை நேர்மையை அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை.

 

டி என் ஏ பெருமாளின் நண்பரும் புரவலருமான கோர்போடேவால் எடுக்கப்பட்ட மழையில் நனையும் யானையின் கருப்பு வெள்ளைப் படம் மிகவும் பிரசித்திபெற்றது. பெருமாளும் இவரும் காட்டுக்குள் சென்றிருந்த சமயம் இவர்களது வாகனத்தின் டயர் பழுதுபட்டுள்ளது. அதை சீராக்குவதற்காக காத்திருந்த சந்தர்ப்பத்தில் அந்த யானை எதிரில் வந்துள்ளது. இருவரின் கையிலுமே கேமராக்கள். இருவருமே தொடர்ந்து படமெடுக்கிறார்கள். பெய்யும் மழையில் அசைந்து வரும் யானை. கோர்போடே எடுத்த யானையின் படம் பிரசுரம் பெற்று பாராட்டுகளையும் பல பரிசுகளையும் பெற்றது. அதேசமயத்தில் தான் எடுத்த படத்தை பெருமாள் எங்குமே பயன்படுத்தவில்லை. கோர்போடே எடுத்த படம் ஏற்கெனவே பாராட்டப் பெற்று கொண்டாடப்படும்போது அதே சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட அதே யானையின் இன்னொரு படத்தை நான் எடுத்தேன் என்று வெளியிடுவது முறையல்ல என்று விளக்கம் கொடுத்தார்.

 

கானுயிர் குறித்த புத்தகங்களை மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தவர் டி என் ஏ பெருமாள். யூமா வாசுகியின் ரத்த உறவு நாவல் அவரை மிகவும் தொந்தரவு செய்த ஒன்றாக குறிப்பிட்டிருக்கிறார். அவரிடமிருந்த பல அரிய நூல்களை நண்பர்கள் பலருக்கு அன்பளிப்பாகவே வழங்கியிருக்கிறார். காலமாவதற்கு இரண்டு நாட்கள் முன்புகூட தனது சீடரும் நண்பருமான நுண்ணுயிர் புகைப்படக் கலைஞர் ஜெயராமிடம் ஜோனாத்தன் ஸ்காட்டின் THE BIG CAT MAN புத்தகத்தைப் பற்றி வெகுநேரம் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்.

 

டி என் ஏ பெருமாளின் சாதனைகளை சர்வதேச புகைப்பட உலகம் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு அவரை அங்கீகரித்தது. The International Federation of Photographic Art என்கிற அமைப்பின் AFIAP - Associate என்ற அங்கீகாரத்தையும் அதற்கடுத்து Fellowship அங்கீகாரத்தையும் Master FIAP என்ற உயரிய அங்கீகாரத்தை பெற்றவர் டி.என்.ஏ பெருமாள்.

 

இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற Royal Photographic Societyயினுடைய Associateship 1977ல் வழங்கப்பட்டது.          அடுத்த ஆண்டிலேயே, 1978, அதே அமைப்பினுடைய Fellowship தகுதியையும் பெற்றார்.

 

கர்நாடக அரசு இவரது பணியை அங்கீகரிக்கும்முகமாக 1995ம் ஆண்டு லலித்கலா அகாதமி விருதை வழங்கி கெளரவித்தது.

 

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் 250க்கும் மேற்பட்ட விருதுகளையும் அங்கீகாரங்களையும்  பெற்றிருக்கும்             இவருடைய புகைப்படங்கள் சர்வதேச அளவில் நடைபெற்ற 1500க்கும் மேற்பட்ட கண்காட்சிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டு  அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

 

உலக அளவில் நடைபெற்ற பல்வேறு கானுயிர் புகைப்படக் கண்காட்சிகளில்  நடுவராக பணியாற்றியுள்ளார்.

 

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை Federation of International Photographers அமைப்பால் நடத்தப்படும் கானுயிர்       புகைப்படங்களுக்கான உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அணியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இடம் பெற்றிருக்கிறார். தொடர்ச்சியாக நான்கு முறையும் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது.

 

தனது நண்பர்களுக்காக கானுயிர் புகைப்படங்கள் அடங்கிய பல புத்தகங்களை பதிப்பித்து தந்தவர் டி என் ஏ பெருமாள். Photographing Wildlife in India என்ற புத்தகத்தின் ஆசிரியராக விளங்கினார். Some South Indian Butterflies, Encounters in the Forest ( An anthology of Best Wild life photographes of Karnataka ) ஆகிய புத்தகங்களின் இணை ஆசிரியர். எம்.கிருஷ்ணனின் புகைப்படங்கள் தொகுப்பான Eye of the Jungle நூலின் பதிப்பாசிரியர். இத்தனை கானுயிர் நூல்களை பதிப்பித்திருந்தபோதும் தான் எடுத்த புகைப்படங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை அவரால் இங்கே பதிப்பிக்க முடியாமல்போனது  அவலம்.  சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் “Reminiscences of a Wildlife Photographer” என்ற அவரது நூலைப் பதிப்பித்தது. இந்தியாவில் அது விற்பனைக்கு இல்லை.

 

சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் அங்கீகாரங்களைப் பெற்றிருந்த டி.என்.ஏ பெருமாள் நமது அண்டை மாநிலங்களான கேரளாவிலும் கர்நாடகத்திலும் பிரபலமான முகம். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சில நூறு பேர்களுக்கு மட்டுமே அறிமுகமானவர்.  இருந்தவரைக்கும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதில் எந்தவித முனைப்பும் காட்டாமல் எப்போதும்போல அடக்கமாகவே இருந்தார். தனது சாதனைகள் குறித்து சொல்லும்போதுகூட மெத்த பணிவுடனே குறிப்பிட்டிருக்கிறார்.

 

மரணம் நமக்கு புதிதல்ல. ஆனாலும் பெருமரங்கள் வீழும்போது அவை விட்டுச்செல்லும் வெறுமையையும் துக்கத்தையும் கடந்துபோவது சுலபமாய் இல்லை. டி என் ஏ பெருமாள் காலமாகிவிட்டார். பிரதிபலன்களைப் பற்றிய எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி தனது சுயதிருப்திகாகவே அவர் காட்டில் அலைந்தார். கானுயிர்களை படமெடுத்தார். ஆனால் இன்று அவை விலைமதிப்பற்ற ஆவணங்கள். வரும் தலைமுறைகளுக்கான கலைக் களஞ்சியங்கள். நமக்கு அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் நிறையவே இருந்தன. அவரும் இத்தனை காலமும் பொறுமையுடன் காத்திருக்கவே செய்தார். நாம்தான் எப்போதும்போல அவரைப் பொருட்படுத்த தவறிவிட்டோம்.


( காலச்சுவடு பிப்ரவரி 2017இல் வெளியான கட்டுரை )



No comments:

Post a Comment

பாவண்ணன் - இரு நிலங்கள், ஒரே மொழி

ஒரு எழுத்தாளன் தன் மொழிக்குச் செய்யவேண்டிய மூன்று காரியங்களை கச்சிதமாக நிறைவேற்றி வருபவர் பாவண்ணன் . முதலாவது காரியம் சிறுகதை , நாவல்கள் , க...