Wednesday, 21 January 2026

சுகுமாரன் 50 – காரியங்களும் காரணங்களும்

 

சுகுமாரனின் இந்த ஐம்பது ஆண்டு கால இலக்கிய வாழ்க்கையை யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகிறது, அவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான காரியங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் உரிய காரணங்கள் இருந்துள்ளன. காரணம் இல்லாமல் எந்த காரியமும் நடந்தேறவில்லை. தனக்கு விருப்பமானவற்றை தனது ஆர்வத்துக்கு உரியவற்றை அவர் தேடிப் போனதைக் காட்டிலும் அந்த விருப்பங்களும் ஆர்வங்களுமே அவரை தம்மிடம் இழுத்திருக்கின்றன.

அவர் படிக்க விரும்பியது விவசாயம். அதுவும் இலக்கிய ஆர்வத்தினால் என்றாலும் அவர் வந்து சேர்ந்தது அறிவியல் துறைக்கு. பிஎஸ்ஜி கல்லூரியின் நூலகத்தில்தான் அவர் ஜெயகாந்தனை அறிகிறார். ஜெயகாந்தனின் மூலமாக புதுமைப்பித்தனிடம் சென்று சேர்கிறார். ஒருவேளை அவர் விவசாயக் கல்லூரிக்கு சென்றிருந்தால் இது நடந்திருக்குமா என்பது தெரியாது.

பிஎஸ்ஜி கல்லூரியில்தான் சீனியரான பாதசாரியை சந்திக்கிறார். இலக்கியத்தையும் சினிமாவையும் குறித்து தெருமுனைகளில் நின்று இரவு பகலாகப் பேசித் தீர்க்கிறார்கள். நடந்தும் சைக்கிளிலும் சென்று கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள், சினிமா பார்க்கிறார்கள். கோவை ஞானியை சந்திக்கிறார்கள். சுகுமாரன் மொழிபெயர்ப்பில் ஈடுபடுகிறார். கூட்டத்தில் கட்டுரை வாசிக்கிறார். கவிதைகள், கதைகள் எழுதுகிறார்.

இலக்கியம் அவரை விவசாயக் கல்லூரியிலிருந்து இழுத்து வந்து பிஎஸ்ஜி கல்லூரியில் ஒப்படைத்ததன் விளைவுகள் தான் இவை என்று எண்ணத் தோன்றுகிறது.

 

‘எழுத்தும் இலக்கியமும் சோறு போடாது’ என்ற புதுமைப்பித்தனின் அறிவுரை மனத்துள் ஆழப் பதிந்திருக்க, விற்பனை பிரதிநிதியாக வேலையில் சேர்கிறார். அவர் வேறு வேலைகளுக்குப் போயிருக்கலாம்.  ஆனால், ஊர் ஊராக சுற்றும் இந்த வேலைதான் அவருக்கு எழுத்தாளர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியை மாதந்தோறும் சந்தித்து பேசிய தருணங்கள் அவரது வாழ்வில் மிக முக்கியமானவை. ஒருவகையில் அவரது இலக்கியக் கொள்கையை செறிவாக்கியதில் சு.ராவுக்கு முக்கியமான பங்கு உள்ளது.

தன் சிறுகதையொன்றின் கதாபாத்திரத்தை சுகுமாரனின் சாயலுடன் சு.ரா உருவாக்கியதிலிருந்து புரிந்துகொள்ள முடியும், அந்த சந்தர்ப்பங்களில் இருவருக்குள்ளும் உருவான நெருக்கத்தையும் அன்னியோன்யத்தையும்.

விற்பனை பிரதிநிதி வேலைதான் உதகைக்கு செல்ல உதவியது. பிரம்மராஜன், ஆர்.சிவகுமார் போன்றவர்களை சந்திக்கவும் இலக்கியம், பத்திரிகை, இசை என்று தனது ஆர்வங்களை மேம்படுத்திக் கொள்ளவுமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. பிரம்மராஜன் நடத்திய ‘மீட்சி’ இதழின் தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் சுகுமாரனின் எழுத்துகள் இடம் பெற்றுள்ளன.

தினசரி விற்பனை அறிக்கைக்கான தாளில் அவர் அன்றாட விற்பனை இலக்குகளை எழுதியதைக் காட்டிலும் கவிதைக்கான குறிப்புகளையும் மொழிபெயர்ப்புக்கான கரட்டு வடிவங்களையும் எழுதியதுதான் அதிகம்.

ஒரு விற்பனை பிரதிநிதியாக இருந்த காரணத்தால்தான் அவரால் தென்னகமெங்கும் பயணம் செய்து எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் சந்திக்கவும் உரையாடவும் முடிந்தது.

 

கோவையில் விற்பனை பிரதிநிதியாக இருந்தவர் எதற்காக சென்னைக்கு செல்ல வேண்டும்? சொந்தமாக தொழில் தொடங்கி நஷ்டம் அடையவேண்டும். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

தொழில் நஷ்டம் ஏற்பட்டதும் விமலாதித்த மாமல்லன் ஒரு யோசனையை சொல்கிறார் “கல்கத்தாவுக்கு சென்று மலிவு விலையில் சிறுவர் சிறுமிகளுக்கான ஆயத்த ஆடைகளை வாங்கி வந்து இங்கே விற்றால் லாபம் கிடைக்கும். எனவே, நீ உடனே கல்கத்தாவுக்கு புறப்படு.” யோசனை சொன்னதோடு வங்கிக் கடனுக்கும் ஏற்பாடு செய்கிறார்.

கல்கத்தாவுக்கு போக அவரை ஒப்புக் கொள்ளச் செய்தது தொழில் ஆர்வம் மட்டுந்தானா? நிச்சயமாக இல்லை. அவரை கல்கத்தா செல்ல ஒப்புக் கொள்ள வைத்தது அவரது சினிமா ஆர்வம். கல்கத்தாவில்தானே சத்யஜித் ரே இருக்கிறார். அவரைப் பார்க்க முடியும் என்ற ஆசைதான் அந்த முடிவுக்குப் பின்னால் இருந்தது. கல்கத்தாவுக்கு சென்றார். பல தடைகளுக்குப் பிறகு சத்யஜித் ரேவை அவரது வீட்டில் சந்தித்து உரையாடுகிறார்.

ஆயத்த ஆடை விற்பனை செய்யும் தொழில் என்னவாயிற்று என்று தெரியாது. ஆனால், சத்யஜித் ரே என்ற மேதையை சந்திக்கச் செய்தது அந்தத் தொழில் முயற்சிதான். இன்று அவர் மனதில் தொழில் நஷ்டம் குறித்த வருத்தம் பெரிய அளவுக்கு இருக்காது என்றே நினைக்கிறேன். ஆனால், ரேவை சந்தித்த அந்த பொன்னான தருணத்தின் ஒவ்வொரு நொடியும் அவரது நினைவில் பொக்கிஷமாக நிலைத்திருக்கும்.

கல்கத்தாவுக்கு அவர் போனதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சத்யஜித் ரேவை மட்டும் அன்று அவர் தேடிப் போகவில்லை. அன்றைய கனவு கன்னியான, ‘சாருலதா’வின் நாயகி மாதவி முகர்ஜியைப் பார்க்கும் ஆசையும் இருந்திருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கல்கத்தாவாசிகளுக்கு மாதவி முகர்ஜியைத் தெரிந்த அளவுக்கு அவரது விலாசம் தெரிந்திருக்கவில்லை.

 

விற்பனை பிரதிநிதியாக இருந்தவர் தொழிலதிபராக ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தார். சரி, ஏன் அவர் தொழிலதிபர் ஆகாமல் நஷ்டமடைந்தார். அதற்கும் காரணம் உள்ளது.

நஷ்டம் அடைந்து அடுத்து என்ன செய்வது என்று வீட்டில் யோசித்துக் கொண்டிருந்தபோது அவருடைய மனைவி கேட்கிறார் “உனக்குத்தான் எழுதத் தெரியுமே, ஏதாவது பத்திரிக்கையில சேரலாமே.” பிறகுதான், ‘தமிழன்’ பத்திரிக்கையில் சேர விண்ணப்பிக்கிறார். சின்னக்குத்தூசி அவரைத் தேர்ந்தெடுக்கிறார். ‘தமிழன்’ இதழ் நின்ற பிறகு ‘குங்குமம்’ வார இதழில் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது.

குங்குமம் ஒரு வணிக வார இதழ். சுகுமாரன் போன்ற ஒரு தீவிர இலக்கியவாதி அங்கே என்ன செய்துவிட முடியும்? என்ற கேள்விக்கு பதில் தருவதற்காகத்தான் அவருடைய தொழில் நஷ்டமடைந்து அவரை தொழிலதிபராக ஆக்காமல் விட்டது.

வணிக இதழுக்கான விற்பனைக்கு ஊறு நேராமல் தீவிர இலக்கியம் சார்ந்த சில அம்சங்களை ‘குங்குமம்’ வார இதழில் அறிமுகப்படுத்தினார் சுகுமாரன். வாசகர்களைத் தொடர்ந்து ஆர்வத்துடன் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய புதிய விஷயங்களாக அவை அமைந்தன. பிரபலமான திரைக் கலைஞர்களின் நேர்காணல்களை வெளியிட்டார். கமலஹாசன், இளையராஜா, எல்லிஸ் ஆர் டங்கன், ஸ்மிதா உள்ளிட்டோர்களின் பேட்டிகளை பெரும் வரவேற்பைப் பெற்றன.

கவிஞராக மட்டும் அறியப்பட்டிருந்த சுகுமாரனை வெற்றிகரமான வணிக இதழையும் தரமான சில அம்சங்களுடன் சுவாரஸ்யமாக வடிவமைக்க முடிகிற ஒரு பத்திரிகையாளராக வெளிப்படுத்தவே, காலமோ விதியோ, அவரைத் தொழிலதிபராக தோல்வியடையச் செய்திருக்க வேண்டும்.

 

வணிக இதழை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தவர் ஏன் அங்கிருந்து வெளியேறினார்? அதன் பின்னணியிலும் ஒரு காரணம் உண்டு.

மலையாளத்தில் சூர்யா தொலைக்காட்சி தொடங்கப்பட்ட போது அதன் செய்திப் பிரிவு பொறுப்பாளராக நியமனம் பெற்றார்.  அதற்காக திருவனந்தபுரத்துக்கு குடிபெயர முடிந்தது. அவருக்கு மிகவும் பிடித்தமான ஊர். பிடித்தமான சூழல்.

அந்த சந்தர்ப்பத்தில்தான் ‘உயிர்மை’யில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார். தமிழறிந்த கவிஞராக இருந்தவரை ஒரு பிரமாதமான கட்டுரையாளராக உறுதிப் படுத்தின உயிர்மையில் வெளியான ஆக்கங்கள். 2004ஆம் ஆண்டு வெளியான முதல் கட்டுரையை எப்போதும் நான் குறிப்பிடுவதுண்டு. ‘ஜி.நாகராஜனும் வி.மாலாவும்’ என்பது அதன் தலைப்பு. அந்தத் தொடரில் வெளியான ‘பொன்னகரம்’ என்ற கட்டுரை தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று. சுந்தர ராமசாமியுடனான நட்பைக் குறித்த ‘பின்னும் உயிர் வாழும் கானல்’, ஆர்.சண்முகசுந்தரத்தை சந்தித்தது பற்றிய ‘மாயத்தாகம்’, தற்கொலையைக் குறித்த ‘சாவதும் ஒரு கலை’ என்று அந்தப் பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம். மாதவிக்குட்டியின் சமாதியை ஒரு கபரஸ்தானில் தேடிக் கண்டடைந்த அனுபவம், ஞானபீட விருதுகளைக் குறித்த வெளிப்படையான விமர்சனம், திரைப்பட விமர்சனத் துறையில் இந்திய அளவில் கொண்டாடப்படும் மேதையான சதீஷ் பகதூர் பற்றிய கட்டுரை, மதுரை சோமு, மைக்கேல் ஜாக்சன் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள், இந்தி இசையமைப்பாளர் நௌஷத் அலி பற்றிய கட்டுரை, முன்னால் கேரள முதல்வர் ஈ.எம்.எஸ்ஸை சந்தித்த அனுபவம் ஆகிய கட்டுரைகள் முக்கியமானவை.

‘தனிமையின் வழி’, ‘வாழிய நிலனே’, ‘இறந்த பின்னும் இருக்கும் உலகம்’ உள்ளிட்ட நூல்களில் உள்ள இந்தக் கட்டுரைகள் சுகுமாரனை ஒரு தேர்ந்த உரைநடை எழுத்தாளர் என்பதை மட்டும் உறுதிப்படுத்தவில்லை. அவருடைய அனுபவங்களும் அறிதல்களும் எத்தனை ஆழமானவை, விரிவானவை என்பதையும் சுட்டுகின்றன. இலக்கியம் அல்லாத பிற பொது விஷயங்களை அவர் எத்தனை உன்னிப்பாக கவனித்து வருகிறார் என்பதையும் புரிந்துகொள்ள உதவுகின்றன.

தேர்ந்த ஒரு உரைநடையாளராக சுகுமாரனை உருவாக்கும் பொருட்டே வணிக இதழின் ஆசிரியர் பணியிலிருந்து அவர் வெளியேறியிருக்க வேண்டும்.

 

சூர்யா தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு ஆசிரியர் என்பது கௌரவமான வேலை. பிடித்த ஊரில் பிடித்த மாதிரி வாழ்க்கை. நிம்மதியாக இருக்கவேண்டியது தானே? ஏன் அதை விட்டுவிட்டு ‘காலச்சுவடு’ இதழுக்கு பொறுப்பாசிரியராக வரவேண்டும்? என்ன அவசியம்? அதற்கும் சுவாரஸ்யமான காரணம் உள்ளது.

கவிஞராக, உரைநடையாளராக மட்டும் அறியப்பட்ட சுகுமாரன் தனது அடுத்த பெரிய அடியை எடுத்து வைத்தது இந்த சமயத்தில்தான். தன் பால்யகாலத்தை மீட்டு அதன் நினைவுகளை களமாகக் கொண்டு ‘வெல்லிங்டன்’ நாவலை எழுதுகிறார்.. அடுத்து முகலாய சாம்ராஜ்யத்தின் பெரும் ஆளுமையான ஜெஹனாராவை நாயகியாக வைத்து ‘பெருவலி’ என்ற நாவலையும் எழுதுகிறார். தமிழ் இலக்கியத்தில் நாவலாசிரியராகவும் தன் இடத்தை உறுதிசெய்கிறார். காலச்சுவடு இதழுக்கு பொறுப்பேற்ற பின் நிகழ்ந்த முதல் நன்மை இது. 

சுகுமாரனுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தி.ஜானகிராமன்.  அவரது அத்தனை எழுத்துகளையும் நெட்டுரு போட்டிருப்பவர் சுகுமாரன். தி.ஜாவின் மீதிருந்த பித்தையும் பிரேமையையும் எழுத்தாக வடிக்க காலச்சுவடு நல்வாய்ப்பாக அமைந்தது. அவரது சிறுகதைகளைத் தொகுத்தபோது அபாரமான ஒரு முன்னுரையை எழுதினார். அதன் பிறகு தி.ஜாவின் குறுநாவல்கள், வெளிவராத கதைகள், நாவல்கள் என்று ஒவ்வொன்றாக பதிப்பித்தார். ஒவ்வொரு நூலிலும் ஆழமான முன்னுரைகளை எழுதினார். பிடித்த எழுத்தாளரின் மீதான அளப்பரிய ஈடுபாட்டை வெளிப்படுத்திய அக்கட்டுரைகள் அனைத்தும் ‘மோகப் பெருமயக்கு’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இப்படி ஒரு நல்வாய்ப்பு அவருக்கு வாய்க்கக் காரணம் காலச்சுவடு இதழின் ஆசிரியர் என்பதே.

தி.ஜா அளவுக்கே பெருமயக்கம் கொண்டிருக்கும் இன்னொரு எழுத்தாளர் மார்கேஸ். ‘கேபோ’ என்று அன்புடன் குறிப்பிடுவார் சுகுமாரன். புகழ்பெற்ற ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலை தமிழில் வெளிவரச் செய்தார்.  தொடர்ந்து அவரைப் பற்றிய கட்டுரைகள் காலச்சுவடில் வெளிவருகின்றன. விரைவில் அவற்றையும் ஒரு தொகுப்பாக்கினால் இன்னொரு ‘பெருமயக்கம்’ நமக்குக் கிட்டும்.

தி.ஜா வின் மீதும், கேபோவின் மீதும் சுகுமாரன் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தவே காலச்சுவடு பொறுப்பாசிரியராக அவர் பொறுப்பேற்றிருக்க வேண்டும். இவ்விரண்டு ஆளுமைகள் குறித்தும் அவர் எழுத வாய்த்தது அடுத்த நன்மை.

 

பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழையும் ஆங்கிலத்தையும் கற்று அறிந்தவர் அத்தோடு நிறுத்தாமல் மலையாளத்தையும் எதற்காக கற்றுக்கொள்ள வேண்டும்? பேச்சளவில் இருந்த மலையாளத்தை எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டதன் விளைவு என்ன ஆனது தெரியுமா?

ஆரம்ப காலத்தில், கல்லூரி மாணவனாக இருந்த பருவத்திலேயே, மலையாள வார இதழ் ஒன்றில் வெளிவந்த தொடர்கதை ஒன்றின் முதல் அத்தியாயத்தை வாசித்த கையோடு தமிழில் அதை மொழிபெயர்த்தார். அத்துடனாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம். வார இறுதியில் கோவை ஞானி நடத்திய கூட்டத்தில் அதை வாசித்திருக்கிறார். எல்லோரும் பாராட்டியிருக்கிறார்கள். இவரும் பெருமிதம் பொங்க வீடு திரும்பியிருக்கிறார். காலையில் வீட்டுக் கதவைத் தட்டியபோது தூக்கத்திலிருந்து விழித்து வெளியே வந்தால் போலீஸ்காரர்கள் நிற்கிறார்கள். நக்ஸலைட்டுகளையும் அவருடன் தொடர்புடையவர்களையும் காவல்துறை வலைவீசி தேடிய காலம் அது. முதல் நாள் வாசித்த தொடர் கதை அவரச நிலை பிரகடனத்தை விமர்சனம் செய்து எழுதப்பட்டிருந்தது. எழுதியவர் ஓ.வி.விஜயன். தொடரின் பெயர் ‘தர்மபுராணம்’. அதை சுகுமாரன் தான் எழுதினார், அவருக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் அதிகாரி விசாரிக்கிறார். நல்ல வேளையாக வேறு எதுவும் மோசமாக நடக்கவில்லை.

இதற்கு பிறகுதான் தீவிரமாக அவர் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கவேண்டும். இதைவிட மோசமான அனுபவம் பல வருடங்களுக்குப் பிறகு ஏற்பட்டது. சுகுமாரனுக்கு ஓ.வி.விஜயனின் ‘கசாக்கின் இதிகாசம்’ மிகவும் பிடித்த ஒன்று. திரும்பத் திரும்ப அதை வாசிப்பதுண்டு. ஒரு வார இதழுக்காக அதை மொழிபெயர்க்கலாம் என்று அவரது இளம் ஊடக நண்பர் ஆலோசனை சொல்கிறார். முறைப்படி அனுமதி வாங்கும் பணியில் இறங்குகிறார். தொலைபேசியில் அனுமதி வழங்கப்படுகிறது. அதை நம்பி சில அத்தியாயங்களை மொழிபெயர்த்து இதழுக்கு அனுப்பி வைக்கிறார். தொடர் குறித்து விளம்பரமும் வெளியாகிவிட்டது. முதல் இதழ் அச்சேறும் சமயம். முறைப்படி ஒப்பந்தம் செய்ய நேரில் செல்கிறார். அப்போதுதான் புரிகிறது ஒரு சிறிய ‘communication gap’ ஏற்பட்டுள்ளது. தொடராக வெளிவருவதில் விஜயனுக்கு சம்மதமில்லை. எனவே முடியாது என்று கறாராக சொல்லப்படுகிறது. உடனடியாக தொடர்புகொண்டு நிறுத்தச் சொல்கிறார். ஆனால், கைமீறிவிட்டது. அச்சேறிய இதழ்கள் விநியோகத்துக்குப் போய்விட்டன.

அவ்வளவுதான். மலையாள வட்டாரத்தில் சுகுமாரனின் பெயர் தேவையில்லாத வகையில் பிரபலமாகிறது. வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார் விஜயன். இதழ் நிர்வாகம் சமாதானம் செய்ய அனுப்புகிறது. வீட்டுக்குள் அனுமதி மறுக்கப்படுகிறது. எதுவும் செய்வதற்கில்லை. வந்தது வரட்டும் என்று ஓய்ந்த நிலையில் தெரிய வருகிறது, விஜயன் அந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டார் என்று.

இவ்வாறான அனுபவங்களுக்குப் பின்னும் மொழிபெயர்ப்பதை அவர் நிறுத்தவில்லை. அந்த துணிச்சலின் விளைவாகத்தான் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’, ‘அஸீஸ் பே சம்பவம்’, ‘பட்டு’, ‘காளி நாடகம்’, ‘பெண் வழிகள்’ போன்ற அபாரமான நூல்கள் அவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு நமக்குக் கிடைத்துள்ளன.

     

ஒரு காலத்தில் கர்நாடக இசையைக் கற்றுக் கொள்ளும் ஆசையுடன் கோவையில் ஒரு ஆசிரியையிடம் பாடம் கேட்கத் தொடங்குகிறார். பாடகியின் கணவரின் தலையீட்டால் வகுப்பு நின்றுவிடுகிறது. ஆனால், கர்நாடக இசையின் மீதான பித்து விடவில்லை. தனக்குப் பிடித்த பாடகர் எம்.டி.ராமநாதனின் கச்சேரியைக் கேட்க வழியில்லாமல் அரங்கத்துக்கு வெளியில் உலாவியபடியே, கதவு திறக்கப்படும் இடைவெளியில் கசியும் குரலை மட்டும் கேட்க வேண்டியிருந்தது. பின்னாளில் சென்னையில் அவரது வீட்டிலேயே சந்திக்கவும் முடிந்தது. இசையின் மீதான அவரது தனியாத ஆர்வம்தான், புகழ்பெற்ற பாடகர் மதுரை சோமுவை சுகுமாரனுக்காக என்று ஒரு விடுதி அறையில் மூன்று நிமிடங்கள் தனியாகப் பாடச் செய்தது. இசையின் மீதான இத்தகைய ஆர்வமும் ஈடுபாடும்தான் சுகுமாரனின் கேள்விகளுக்கு இளையராஜாவை பதில் அளிக்க வைத்தது. இன்று சஞ்சய் சுப்ரமணியத்துடன் ஆழமாக உரையாடச் செய்கிறது.

0

விரும்பிய வகையில் வாழ்வை அமைத்துக்கொள்ள எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. வாழ்க்கை அனுமதிப்பவற்றை எடுத்துக்கொண்டு நம் விருப்பங்களை சமரசம் செய்துகொள்கிறோம். ஆனால், சுகுமாரன் தன் விருப்பப்படி வாழ்வை அமைத்துக் கொள்வதில் உறுதியாக இருந்துள்ளார். அது திட்டமிட்டதா என்பது தெரியாது. ஆனால், வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும் அலைச்சல்களுக்குள்ளும் தான் விரும்பியவற்றை அனுமதிக்காத வாழ்வை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

கிடைக்கும் வாய்ப்புகளை தன் ஆர்வத்துக்குரிய துறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் கூடுதலாய் அறிந்துகொள்ளவும் தன்னை மேம்படுத்திக்கொள்ளவுமே பயன்படுத்திக் கொண்டார்.

கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, மொழியாக்கம், பத்திரிகைத் துறை என இத்தனை அவதாரங்களிலும் தனித்தன்மையுடன் சோபிக்க முடிந்திருக்கிறது, எதையும் போகிற போக்கில் இருக்கட்டுமே என்று எழுதியதில்லை. எல்லாவற்றிலும் தரம், தனித்தன்மை, போலச் செய்யாமை, நூதனம் என்ற கட்டுப்பாடுகளையும் கறார் தன்மையையும் பேணியுள்ளார்.

எல்லாவற்றிலும் தனக்கென்று ஒரு அழுத்தமான முத்திரையை அவரால் பதிக்க முடிந்திருப்பதே பெரும் சாதனை

இவரளவுக்கு தொடர்ந்து எழுதியவர்கள், எழுதுபவர்கள் இருக்கின்றனர். ஆனால், இத்தனை இயல்களில் எழுதியவர் என்று யாரையும் சொல்ல முடியவில்லை.

இலக்கியம், இசை, சினிமா என்று தனக்கு விருப்பமான துறையில் தனித்த முத்திரையுடன் இருக்கவேண்டும் என்பதை அவர் சாதித்திருக்கிறார். இது எல்லோருக்கும் வாய்த்துவிடாத வாய்ப்பு. இதன் பின்னால் உள்ள சிரமங்களையும் நெருக்கடிகளையும் அறிவோம். அங்கீகாரம், பரிசுகள், விருதுகள், பாராட்டுகள் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மனம் சோராமல், சலிப்படையாமல், எதற்கு இந்த வீண் வேலை என்று எரிச்சலுறாமல் இங்கே இருப்பதற்கே பெரிய துணிச்சலும் பொறுமையும் வேண்டும்.  சுகுமாரனிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களில் ஒன்று.

ரகுநாதனின் புதுமைப்பித்தனின் சரித்திரமும், ஆர்.சண்முக சுந்தரத்தை நேரில் சந்தித்தபோது தந்த அறிவுரையும், எழுத்தை நம்பிப் பிழைக்கக் கூடாது என்று முடிவு செய்ய வைத்தாலும் வாழ்க்கை அவரை அப்படி விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு நெருக்கடியான காலகட்டத்திலும் எழுத்துதான் அவருக்கு கைகொடுத்தது. இன்றும் எழுத்தை நம்பிதான் வாழ்கிறார். காரணம், எழுத்துக்கு அத்தனை உண்மையாக இருந்திருக்கிறார். அதற்காக அத்தனை உழைத்திருக்கிறார். அதன் பலனைத்தான் இன்று அவர் காண்கிறார். இது தற்செயலோ அதிர்ஷ்டமோ யோகமோ இல்லை. அத்தனையும் அவர் அர்ப்பணிப்பின் உழைப்பின் பலன்களே.

எந்த இடத்திலும் தேங்கிப் போகவில்லை. சாதித்துவிட்டோம் என்று தலைகனத்து மிதக்கவில்லை. தொடர்ந்து வாசிக்கிறார். தன் எழுத்தை சுயபரிசோதனை செய்து கொள்கிறார். மொழியை, எழுத்தை கூராக வைத்துக் கொள்கிறார். புதிதாக எழுதும்போது ஏற்படும் அதே பதற்றம் இப்போதும் அவரிடம் உள்ளது. அந்த பதற்றம்தான் அவரது எழுத்தில் உள்ள அழுத்தத்துக்கு கச்சிதத்துக்கு ஆதார பலம், அடிப்படை காரணம்.

சுகுமாரனின் இந்த ஐம்பதாண்டு கால இலக்கியப் பணி என்பது ஒப்பற்ற சாதனை என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆனால், இந்தப் பணி அவருக்கு பெரிய அளவுக்கு விருதுகளையோ பாராட்டுக்களையோ பெற்றுத் தந்துவிடவில்லை. தகுதிக்கும் விருதுகளுக்கும் எப்போதும் பாரதூரமான இடைவெளிகள் இருப்பதை அறியாதவரல்ல சுகுமாரன். ஆனால், அர்ப்பணிப்புமிக்க அந்தப் பணியால் பலனடைந்தவர்கள் நாம்தான். வாசகர்கள்தான். எங்களுடைய மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் எப்போதும் சுகுமாரனுடன் இருக்கும். இந்த விழாவும்கூட அப்படியொரு நன்றிபாரட்டுதல்தான்.

சுகுமாரனின் இலக்கியப் பணி தொடரட்டும்.

0

( சென்னையில் நடந்த சுகுமாரன் 50 விழாவில் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம் ) 

No comments:

Post a Comment

இலட்சியவாதத்தின் எஞ்சும் நிழல்கள் - நிழல்கள் மாறும் நொடி • விவேக் ஷான்பாக்

    0 ‘காச்சர் கோச்சர்’ நாவல் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று. அதன் மூலமாக விவேக் ஷான்பாக்கும் தமிழில் பிரபலமடைந்துள்ளார...